பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு

[நம்மாழ்வார்]

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு ஊட்டி குருகுலத்தில் நித்ய சைதன்ய யதியைச் சந்திக்க தமிழ்க்கவிஞர்களை அழைத்துச்சென்றிருந்தேன். தமிழ் அவருக்கு கேட்டால் புரியும். இருந்தாலும் கவிதைகளை முன்னரே மொழியாக்கம் செய்து நித்யாவுக்கு அளித்திருந்தேன். கவிதைகள் வாசிக்கப்பட்டபோது தன் கருத்துக்களையும் சொல்லிக்கொண்டே வந்தார். தமிழ்க்கவிதைகள் அவருக்கு நிறைவளித்தன. ஆனால் பேச்சின் இறுதியில் அவர் ஒன்று சொன்னார்.

“இமையமலையில் இருந்து கற்கள் உருண்டு கங்கையின் வழியாக நெடுந்தொலைவு வரும். அவை உருண்டு உருண்டு மென்மையும் ஒளியும் கொண்டு பெரிய முத்துக்கள் போல ஆகிவிட்டிருக்கும். அவற்றையே சாளக்கிராமம் என்கிறார்கள். இந்து மரபின்படி அவை பூசைப்பொருட்கள். சிற்பிகள் ஆகமமுறைப்படிச் செதுக்கிய கருவறைச் சிலைகளுக்கு நிகரானவை. அவற்றைச் செதுக்கியவர் மகத்தான சிற்பி. என்றுமிருக்கும் கங்கையால் உருவாக்கப்பட்டவை அவை. காலத்தின் வடிவான நதிப்பெருக்கால். அந்தக் கல் வந்தடைந்த தொலைவுதான் அதைச் சிற்பமாக ஆக்குகிறது”

“நான் கம்பராமாயணச் செய்யுட்களை வாசிக்கக் கேட்டிருக்கிறேன். நம்மாழ்வார் பாசுரங்களும் திருவாசகமும் கேட்டிருக்கிறேன். தமிழ்ச்சொற்கள் சாளக்கிராமங்கள் போன்றவை என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. மொழியழகுக்காகவே நான் அவற்றை வெறுமே கேட்பதுண்டு. அந்த மொழியழகு இந்தக் கவிதைகளில் இல்லையே அது ஏன்?” என்று நித்யா கேட்டார்.

கவிஞர்கள் வெவ்வேறு மறுமொழிகளைச் சொன்னார்கள். நவீனக் கவிதை செய்யுளின் ஓசைநயத்தைக் கைவிட்டு பேச்சுமொழியை நெருங்க முயல்கிறது. நவீனக்கவிதை வாசக இடைவெளியை நிறைக்கும்பொருட்டு முழுமையான சொற்றொடர்களுக்குப் பதிலாக உடைந்த சிறுசொற்றொடர்களை கையாள்கிறது. நவீனக் கவிதை மரபை எதிர்நிலையில் வைத்துப் பார்க்கிறது, ஆகவே சீண்டும்தன்மை கொண்டிருக்கிறது. ஒத்திசைவுக்குப் பதில் முரண்பாட்டையே தன் வழியென எண்ணுகிறது. அப்படி பல விளக்கங்கள். எல்லாமே சரிதான்.

ஆனால் எனக்குப் பட்ட இன்னொன்று உண்டு. அது இன்று மேலும் வலுவாகியிருக்கிறது. தமிழ் மொழியின் ஒலியெழில் உச்சத்தை அடைந்த கவிதைமரபை நம் கவிஞர்களில் மிகச்சிலரே அறிந்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தமிழ்க்கவிதையின் நீண்ட மரபுடன் அறிமுகமற்றவர்கள். அவர்கள் அறிந்த செய்திமொழியிலிருந்து நேரடியாகக் கவிதைக்கு வருகிறார்கள். மரபை அறிந்திருப்பவர்கள்கூட கவிதை எழுதவருகையிலேயே அறிந்திருந்தவர்கள் அல்ல, கவிஞர்களாகி ஓர் அகவையைக் கடந்தபின்னர்தான் தமிழை அறியத் தொடங்குகிறார்கள். அதன்பின்னரே அவர்களின் மொழியில் மாறுதல்கள் உருவாகின்றன. சொற்கள் கங்கையில் உருளத் தொடங்குகின்றன.

தமிழ்மொழியின் ஓசையழகு நாம் இன்று அறியும் வடிவில் உருவாகத் தொடங்குவது சிலப்பதிகாரத்திலும் பரிபாடலிலும்தான். அவை சங்கம் மருவிய காலகட்டத்தைச் சேர்ந்தவை. சங்கப்பாடல்கள் நம் மொழியின் நாமறியாத பிறிதொரு காலகட்டத்தைச் சேர்ந்தவை. இன்றும் உளம் மயக்கும் உச்சங்களில் ஒன்று சிலம்பின் கானல்வரிப் பாடல். அதன்பின்னர் சீவகசிந்தாமணியினூடாக ஒரு மெல்லிய நீட்சி. தமிழ் இயலும் இசையும் ஒன்றேயானதுபோல் சொல்லெழில் கொண்டது. கம்பராமாயணம் ஓர் உச்சம். பக்தி இயக்கத்தின் கவிதைகள் அந்த உச்சத்திலேயே நிலைகொண்டவை. மலையுச்சியில் ஒரு மாநகர் அமையும் அளவுக்கு பரந்தநிலம் இருப்பதுபோல.

முதன்மையாக பக்தி இயக்கத்தின் இலக்கியங்களை இன்றைய இலக்கியவாசகன் வாசிக்கவேண்டியது தமிழ்மொழியின் எழிலை முழுதுணர்வதற்காகவே. சொல்லின் ஒலியழகை, சொல்லிணைவுகளின் அழகை, அணியழகை, கருத்தைச் சொல் சென்று சந்திக்கும் கூர்மையின் அழகை இப்பாடல்கள் காட்டுமளவுக்கு நானறிந்தவரை உலக இலக்கியத்திலேயே அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. கம்பனையும் நம்மாழ்வாரையும் பெரியாழ்வாரையும் ஆண்டாளையும் காரைக்காலம்மையையும் மாணிக்கவாசகரையும் அறியாத ஒருவர் தமிழின் அழகுருவை அறியாதவர் என்றே சொல்லிவிடலாம். கம்பனை தமிழறிந்தோன் கடக்கவியலாது. உட்புகுந்தால் வாழ்ந்து முழுமையடையச் செய்யும் மாயப்பெருவெளி அது.

[மாணிக்கவாசகர்]

பக்திக் காலகட்டம் – ஒரு வரைபடம்

பக்தி காலகட்டம் என்பது இந்தியப் பண்பாட்டு வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்களல் பொதுவாக வகுத்தளிக்கப்பட்ட ஒன்று. அவர்களுக்கிடையே சிறு வேறுபாடுகள் இருப்பினும் பொதுவான சித்திரம் ஒன்றை இலக்கிய அணுகுமுறைக்காக தொகுத்துக்கொள்ளலாம் .இந்திய அளவில் பக்திக் காலகட்டத்தை இந்தியாவின் விரிந்த வரலாற்றுப் புலத்தில் இவ்வண்ணம் அமைக்கலாம்

இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் கிமு மூன்றாம்நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டம் தொல்வரலாற்றுக் காலகட்டம். தொன்மையான புராணங்களாலும் இதிகாசங்களாலும் காட்டப்படுவது இது. இன்றைய இந்தியப்பண்பாட்டின் பெரும்பாலான நம்பிக்கைகளும் மரபுகளும் படிமங்களும் உருவாகி வந்த காலம். அதற்குப்பின் கி.மு மூன்றுமுதல் கிபி நான்காம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் சமண –பௌத்த மதங்கள் தோன்றி இந்தியாவின் பண்பாட்டை மாற்றியமைத்து ஆட்சிசெய்தன. இதுவே இந்திய வரலாற்றுக்காலத்தின் தொடக்கம்.

கிபி நான்காம் நூற்றாண்டில் குப்தர்களின் ஆட்சியில் பௌத்த-சமண மதங்களுக்கு எதிராக  இந்துமதம் எழுச்சி கொள்ளத் தொடங்கியது. இதை இந்துமறுமலர்ச்சிக்காலம் என்கிறார்கள். இந்துமதம் நாம் இன்று காணும் வடிவில் உருவாகத் தொடங்கியது. ஆலயங்கள் இந்துமதத்தின் அடையாளங்களாக மாறின. ஆலயங்களை மையமாக்கி மொத்தச் சமூகமே கட்டப்பட்டது. வெவ்வேறு சமூகங்கள் இந்துமத வழிபாட்டால் ஒருங்கிணைக்கப்பட்டன. வெவ்வேறு வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் இந்துமதத்திற்குள் இணைத்துக்கொள்ளப்பட்டன. அதன்பொருட்டு புராணங்கள் உருவாக்கப்பட்டன. பெரும் திருவிழாக்கள் வடிவம்கொண்டு வந்தன. சைவம் வைணவம் சாக்தம் சௌரம் ஆகிய மதங்கள் வளர்ச்சிபெற்றன. அவை ஒன்றுடன் ஒன்று உரையாடி, ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒற்றைப்பெருமதமாக ஆவதற்கான தன்மையும் தோற்றம்கொண்டன

கிபி பத்தாம்நூற்றாண்டில் இந்துப் பெருமதங்களின் கட்டமைப்பில் சிதைவுகள் உருவாயின. கிபி 1004ல் கஜினி முகம்மது தொடங்கி இந்தியா மீதான துருக்கிய சுல்தான்களின் படையெடுப்பு தொடங்கியது. ஏற்கனவே வலுவிழந்திருந்த இந்திய அரசுகளின் அடித்தளம் சிதைந்தது. இந்து மதத்திற்கான அரசஆதரவு இல்லாமலானபோது ஆலயங்கள் போன்ற அடிப்படைக்கட்டுமானங்கள் சிதைந்தன. அந்த சிதைவை ஈடுகட்டும்பொருட்டு ஏற்கனவே இருந்த சில பண்பாட்டுக்கூறுகள் வலுவடைந்து பேரியக்கமாக ஆயின. அதையே பக்தி காலகட்டம் என்கிறார்கள். அது பதினாறாம்நூற்றாண்டு வரை நீடித்தது.

பக்தி இயக்கம் ஒருவகையான மக்களியக்கம். அதன் பண்பாட்டுத் தனித்தன்மைகளை இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம். .

அ .அது ஏற்கனவே இருந்த மதப்பேரமைப்புகளைச் சாராது தனித்துச் செயல்பட்டது. சிலசமயங்களில்      அதற்கு எதிராகவும் செயல்பட்டது.

ஆஅது மைய அமைப்பு கொண்டதாக இருக்கவில்லை. மெய்ஞானிகளையும் பெரும்பக்தர்களையும் சார்ந்து இயங்கியது. அதன் போக்குகள் ஒன்றுடனொன்று உரையாடியும் முரண்பட்டும் தன்னியல்பாக வளர்ந்தன

இ.அது பெரும்பாலும் சமூகத்தின் மூன்றாம்நிலையில் இருந்த சூத்திர வர்ணத்தைச் சேர்ந்த மக்களைச் சார்ந்தது. அவர்கள் ஏற்கனவே சமண- பௌத்த மதங்களைச் சார்ந்தவர்களாகவும் வெவ்வேறு குலதெய்வ, நாட்டார்தெய்வ வழிபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆகவே அந்த மதநம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் அது தன்னகத்தே இழுத்துக்கொண்டது. அவற்றை மறுஆக்கம் செய்தது. இந்தியா முழுக்க இருந்த சூத்திரர்களின் வழிபாடுகள் அனைத்தையும் ஒன்றாக்கி இணைத்து இன்றைய இந்துமதத்தை கட்டமைத்தது. சூத்திர மக்களின் அதிகாரத்தின் கருத்தியல் அடித்தளத்தை உருவாக்கியது

ஈ. அது அடிப்படையில் கலைகளையும் இலக்கியத்தையும் சார்ந்ததாக இருந்தது. குறிப்பாக இசை அதன் ஊடகம். அதன் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் கவிஞர்கள், பாடகர்கள். நாடகம் போன்ற நிகழ்த்துகலைகளை அது பயன்படுத்திக்கொண்டது. ஆகவேதான் அது மக்களியக்கமாக ஆகியது

பக்தி இயக்கம் தமிழகத்தில் தோன்றியது என்பதே வரலாற்றாசிரியர்களின் கூற்று. ஆகவே தமிழகத்தில் பக்தி இயக்கத்தை மேலும் இருநூறாண்டுகள் பின்னோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். தமிழகத்தில் பக்தி இயக்கத்தின் பிறப்பு கிபி ஏழாம் நூற்றாண்டில் பேயாழ்வார் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் ஆகிய மூவரின் காலகட்டத்தில் என்று பொதுவாக வகுக்கப்படுகிறது. கிபி ஒன்பதாம்நூற்றாண்டின் இறுதியில் பிறந்த நம்மாழ்வாரின் காலத்தில் பக்தி இயக்கம் முழுமையாக உருவம் கொண்டது..மாணிக்கவாசகரின் காலமும் அதுவே

பக்தி இயக்கத்தின் அத்தனை தனியியல்புகளும் தமிழகத்திலேயே உருவம்கொண்டன. அதன் அழகியல்கூறுகளை மேலும் பின்னடைந்து சென்று பரிபாடலிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். தமிழகத்தின் பக்தி இயக்கம் தொடர்ச்சியாக விரிவடைந்து பல காலட்டங்களை அடைந்தது.. பொதுவாக ஆழ்வார்கள் நாயன்மார்களின் பாடல்களை மட்டுமே பக்தி இலக்கியமாகக் கொள்வது அறிஞர் வழக்கம் என்றாலும்  தமிழ் இலக்கியமறிந்தவர்கள் நம் பக்தி இலக்கியத்தை மூன்று பெரும்பகுதிகளாகப் பிரிக்கலாம் என்பதைக் காண்பார்கள். 1. பாடல்கள் 2. புராணங்கள் 2. சிற்றிலக்கியங்கள்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியவை அன்றைய இசைப்பாடல்களே. கதையோட்டமோ ஒற்றைநூலுக்கான கட்டமைப்போ அற்றவை அவை. பதிகங்கள் போல எண்ணிக்கையின் அடிப்படையிலோ தாண்டகம் போல செய்யுள்வகையின் அடிப்படையிலோ அவை ஒன்றாகத் தொகுக்கப்படுகின்றன. இவை இறைவனை வாழ்த்தியும் வேண்டியும் பாடப்படுபவை. இசைப்பாடல்கள் என்பதனால் மொழியழகு முழுமையாக வெளிப்படுபவை. பக்தி இயக்கத்தின் கவித்துவ உச்சங்கள் வெளிப்படுவது இவற்றிலேயே.

பக்தி இயக்கம் அரச ஆதரவைப் பெற்றதும் இந்துமத எழுச்சி உருவாகியது. ஆலயங்கள் பெருகின. ஆலயங்களை மையமாக்கி குலங்களும் குடிகளும் தொகுக்கப்பட்டன. அதன் விளைவாகவும் அதன் தேவையாகவும் உருவானவையே நம் புராண இலக்கியங்கள். புராணங்களின் நோக்கமே வெவ்வேறு வழிபாட்டுமுறைகளை ஒன்றாகத் தொகுப்பதே. தமிழில் புராணங்களின் உருவாக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு வரை நீடித்ததை நாம் உ.வே.சாமிநாதய்யரின் வரலாற்றிலிருந்து அறிகிறோம். அவருடைய ஆசிரியர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் தலபுராணங்களை இயற்றுவதையே தொழிலாகக்க் கொண்டிருந்தார்.

இப்புராணங்களில் பெரும்புகழ்பெற்றவை பெரியபுராணமும் கந்தபுராணமும்தான். திருவிளையாடற்புராணம் கவித்துவத்தால் மேலோங்குவது. இவை அனைத்துக்கும் அடிப்படையாக அமைவது கம்பராமாயணத்தில் வரும் இரணியன்வதைப் படலம்தான். அதற்கும் கம்பராமாயணத்தின் மையக்கட்டமைப்புக்கும் தொடர்பில்லை. உண்மையில் அது ஒரு சிறு தனி புராணகாவியம். கம்பராமாயணத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக வந்த குறிப்பிடத்தக்க புராணம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாந்த கச்சியப்ப முனிவர் எழுதிய தணிகைபுராணம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்கூட இரணியவதைப் படலமே தமிழின் தலைசிறந்த புராண இலக்கியம்

பக்தி இயக்கத்தின் இறுதிக்கட்ட அழகியல் நீட்சி என சொல்லத்தக்க படைப்புகள் பிறகு வந்த சிற்றிலக்கியங்கள். பக்தி இலக்கிய முன்னோடிகளே அந்தாதி போன்ற சிற்றிலக்கிய வடிவங்களைக் கையாண்டவர்கள்தான். பின்னாளில் சிற்றிலக்கியங்களுக்கு வடிவ இலக்கணம் தெளிவுற வகுக்கப்பட்டது.  குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், அருணகிரி நாதரின் திருப்புகழ், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து ஆகியவை அவற்றின் உச்சம் எனலாம். பக்தி இலக்கியத்தின் மையக் காலகட்டத்திற்ப் பின் தமிழின் ஓசையழகும் சொல்லழகும் வெளிப்பட்ட படைப்புக்கள் இவை. தனிப்பட்டமுறையில் நான் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழை தமிழின் மரபிலக்கியத்தின் இறுதியாக நிகழ்ந்த பெருவெற்றி என நினைக்கிறேன்.

[காரைக்கால் அம்மையார்]

தேவை புதிய வாசிப்புமுறை…

பக்தி இலக்கியங்களை பக்தியின்பொருட்டு இன்றும் பெருவாரியாக வாசிக்கிறார்கள். சொல்லப்போனால் தமிழகத்தில் எவ்வகையிலேனும் மிகுதியாக வாசிக்கப்படும் இலக்கியம் என்பது பக்தி இலக்கியமே – வணிகக் கேளிக்கை இலக்கியங்கள் கூட இரண்டாமிடமே. தமிழகத்தில் கம்பராமாயணத்தை பேசுவதற்கென்றே கம்பன் கழகங்கள் உள்ளன. கந்தர்புராணக் கழகங்களும் சேக்கிழார்கழகங்களும் உள்ளன. திருவாசகம் மற்றும் திருமுறைகளை முற்றோதும் இயக்கங்கள் உள்ளன. ஆழ்வார்பாடல்களை வைணவர்கள் ஓதிக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை புத்தகக் கண்காட்சிகளிலும் மிகுதியாக விற்பவை பக்தி இலக்கியங்களே

ஆனால் ஒரு நவீன இலக்கிய வாசகன் இவற்றை ஏன் வாசிக்கவேண்டும்? நவீன இலக்கியத்தின் அடிப்படைகளிளில் முதன்மையான இரண்டு, தர்க்கநோக்கும் விமர்சன அணுகுமுறையும். நவீன இலக்கியம் என நாம் இன்றும் சொல்லும் இந்த இயக்கமே பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் உருவாகிவந்த சுதந்திரசிந்தனைகளின் வழியாக பரிணாமம் கொண்டு வந்தது. தனிமனித நோக்கு, ஆய்வுநோக்கு, புறவயநோக்கு ஆகிய மூன்றும் அதன் அடிப்படைகள். அந்த நோக்குகளால் கிறித்தவ மதம் விமர்சனம் செய்யப்பட்டு மறுஆக்கம் செய்யப்பட்டதன் நீட்சியாகவே நவீன இலக்கியம் தன் அழகியலையும் மொழியையும் கண்டுகொண்டது. அது தர்க்கத்தை எந்த அளவுக்கு மீறிச்சென்றாலும்கூட தனக்கான தர்க்கம் கொண்டதுதான்.

ஆகவே நவீன இலக்கியத்தின் இயல்பு எப்போதும் மரபையும் அமைப்பையும் விமர்சனம் செய்வதாகவே உள்ளது. நவீன இலக்கிய வாசகன் மரபார்ந்த முறையில் பக்தி இலக்கியத்தை அணுகும்பார்வையை தானும் கொண்டிருக்க முடியாது. நம் சூழலில் பக்தி இலக்கியம் பேசப்படும் வழக்கமான அரங்குகளில் ஓர் நவீன இலக்கிய வாசகன் பத்துநிமிடம் அமர முடியாது. வெவ்வேறு காலங்களில் மரபான பக்தி இலக்கிய அறிஞர்களை நவீன இலக்கிய வாசகர்களுடன் உரையாடவைக்க முயன்றிருக்கிறேன். அவர்களின் வெளிப்பாடுகள் நவீன இலக்கியவாசகனுக்கு கடுமையான ஒவ்வாமையையே உருவாக்கின.

அந்த ஒவ்வாமையை நான் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அதன் காரணங்களில் முதன்மையானது மரபார்ந்த பக்தி இலக்கிய அறிஞர்களிடம் இருக்கும் ஒருவகையான செயற்கைநெகிழ்ச்சியும் செயற்கைப் பரவசமும். அவர்கள் அதை ஒரு வகை நடிப்பாகவே பழகியிருக்கிறார்கள். அதுவே நவீன இலக்கியவாசகனை அகற்றிவிடுகிறது. அவர்களின் அணுகுமுறை இரண்டாவது தடை. அவர்கள் பெரும்பாலும் ’நயம்பாராட்டல்’ என்னும் வகைமைக்குள் நின்றுவிடுகிறார்கள். அடுத்தகட்டத்தினர் தகவல்களைத் தொகுத்து அளிக்கிறார்கள். அவையிரண்டுமே நவீன வாசகனுக்கு உகக்காதவைதான்.

அதற்கும் அப்பால் நவீன வாசகனைச் சலிப்புறச்செய்வது மரபான வாசகர்கள் பழைய இலக்கியங்களில் இருந்து வழக்கமான விழுமியங்களையும் அறநெறிகளையும் கண்டடைவதும் அதையே அவ்வாசிப்பின் பெறுபொருளாகச் சொல்வதையும்தான். அன்றே நம் முன்னோர் சொல்லிவிட்டார்கள், வாழ்க்கைக்கான அத்தனைநெறிகளும் இதிலே உள்ளன, இதை வாசித்தவர்கள் வாழ்க்கையில் ஒளியடைவார்கள் என்பதுபோன்ற வரிகளை மரபான இலக்கிய அரங்குகளில் மீளமீளக் கேட்கிறோம். நவீன வாசகன் நெறிகளை அறிவதில் ஆர்வம்கொண்டவன் அல்ல, அவற்றை வாழ்க்கையைக்கொண்டு ஆராயமுற்படுபவன்.

நவீன இலக்கிய வாசிப்பு என்பது இலக்கியப்படைப்பில் இருந்து வாசகனின் கற்பனையை விரித்தெடுத்து பெருகிச் செல்வது. அறிதல்களை ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு ஊடுபிரதித்தன்மையை அடைவது. நேரடியாக தானறிந்த வாழ்க்கையுடன் ஊடாடாவிட்டால் இலக்கியத்தை நவீன வாசகன் விரும்புவதில்லை. தானறிந்த வாழ்க்கையை எப்படி மேலும் விளக்குகிறது என்பதைக்கொண்டே அவன் இலக்கியத்தை மதிப்பிடுகிறான். ஆகவே அவனுக்கு மரபார்ந்த பக்தி இலக்கியங்களை ரசிக்கும் பழைய வாசிப்புமுறை பொருள்படுவதில்லை.

செவ்வியல்கலைகள் அனைத்திற்கும் உரிய பொதுத்தன்மை என்பது நுண்மையாக்கல் [Improvisation] ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டை திரும்பத்திரும்ப நிகழ்த்துவது. அதன்வழியாக மேலும் மேலும் நுணுக்கமாக்கிக் கொண்டே செல்வது. ஆகவே புதிய அணிகளை விட மரபார்ந்த பழைய அணிகளுக்கே செவ்வியலில் மதிப்பு மிகுதி. ஒரு வாழ்க்கைத் தருணத்தைக்கூட அது மிகையாக்கி அணியாக மாற்றிக்கொள்ளும். உதாரணமாக கைவளை கழல்தல்.தலைவன் பிரிகிறான், தலைவி உடல்மெலிவதனால் கைவளைகள் கழல்கின்றன. இந்தத் தருணத்தை ஓர் அணியாக ஆக்கி எப்படியெல்லாம் தமிழிலக்கியம் வளர்த்துக்கொண்டு செல்கிறது என்று பார்க்கலாம்

’என் கை கோடு ஈர் இலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசில்’ [என் கையிலணிந்திருந்த சங்கு கீறி செய்த வளைகளை கழன்றுவிழச்செய்த பெருமைகொண்ட தலைவன்] என்று ஆதிமந்தியின் கவிதை சொல்கிறது. தலைவன் பிரிவேன் என்று சொன்னதுமே கைவளை கழல்வதையும் சங்கப்பாடல் சொல்கிறது. கம்பராமாயணத்தில் ராமனைக் கனவில்கண்ட சீதை உடல்பெருக்க கைவளைகள் இறுகி கைகளை கிள்ளின என்றும் அது கனவே என எண்ணி அவள் விழித்துக்கொண்டபோது உடல் சிறுக்க கைவளைகள் நழுவி நகைப்பொலி எழுப்பின என்றும் கம்பன் வர்ணிக்கிறான்.

இந்த நுண்மையாக்கல் என்னும் கூறிலிருந்து விடுபட்டது நவீன இலக்கியம். அதில் புதுமைக்கே இடம், நுண்மையாக்கலுக்கு இல்லை.ஆகவே நவீன வாசகன் சற்றேனும் செவ்வியல் உளநிலைகளை அடைந்தாலொழிய பழைய இலக்கியங்களை சென்றடைய முடியாது. ஆனால் கவிதை இந்த நுண்மையாக்கல் என்னும் இயல்பிலிருந்து வெளியே செல்லவே முடியாது. கவிதையின் பேருபொருட்கள் மிகச்சிலதான். ஆகவே நவீனக் கவிதையும்கூட மீண்டும் மீண்டும் ஒன்றையே வெவ்வேறு கோணத்தில் நுண்மையாக ஆக்கிக்கொண்டே செல்கிறது. உதாரணமாக நவீன கவிதை வீடு என்னும் படிமத்தை எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறது என்று பார்த்தால்போதும்.

ஆகவே இன்றைய வாசகன் செவ்விலக்கியங்களை வாசிக்கையில் மரபார்ந்த வாசிப்பிலிருந்து விலகி தனக்கேயான வாசிப்பை அளித்தாகவேண்டியிருக்கிறது. அவன் ஒரு நவீன இலக்கியத்தை வாசிப்பதைப்போலவே அவற்றை வாசிக்கலாம். சர்க்கரைப்பொங்கலைப் பற்றி பேசுவதுபோலவே இலக்கியத்தைப்பற்றியும் பேசும் பேச்சுக்களை தவிர்த்துவிடலாம். மரபிலக்கியப் படைப்புகளில் இருந்து மேலும் மேலும் திறந்துகொண்டே செல்லும் வாசிப்பை அவன் அடையமுடியும். அவற்றை வாழ்க்கையிலிருந்து எழுந்தவையாகவும் வாழ்க்கையை விளக்குவனவாகவும் வாசிக்க முடியும். உலக இலக்கியப்பரப்பின் பெரும்படைப்புகளுடனும் நவீன இலக்கியப்படைப்புகளுடனும் ஒப்பிட்டு அவற்றை அவன் விரிவாக்கிக்கொள்ள முடியும்.

அத்தகைய வாசிப்பில் பழைய படைப்புகள் புதிய எழிலுடன் துலங்கி வரும். இன்றைய தமிழ் நவீன இலக்கியச்சூழலில் இல்லாதது இத்தகைய வாசிப்பு. அது உருவாகி வராதவரை நம் இலக்கியம் மரபின் தொடர்ச்சியை இழந்து அந்தரத்தில் தொங்கி நின்றிருக்கும். வெளியே இருந்து வரும் காற்றுகளால் திசையில்லாது அடித்துச்செல்லப்பட்டுக்கொண்டே இருக்கும்.

[அருணகிரிநாதர்]

பக்தியை வாசித்தல் – தத்துவம்

ஒரு நவீனவாசிப்பை பக்தி இலக்கியங்களுக்கு அளித்தாலும்கூட அவற்றிலுள்ள பக்தி என்னும் உளநிலை இன்றைய வாசகனுக்கு அயலானதாகவே இருக்கும். பக்தியுடன் அவற்றை வாசிப்பவர்கள், பக்தியை மட்டுமே பெற்றுக்கொள்பவர்கள் அவ்வாறே வாசிக்கலாம். நான் பேசிக்கொண்டிருப்பது நவீன வாசகர்களைப் பற்றி.பக்தியை அவன் இன்றைய கோணத்தில் புரிந்துகொண்டாகவேண்டும். அதுவே பக்தி இலக்கியங்களை அணுகுவதற்கான சரியான வழியாக ஆகும்.

இன்றைய சராசரி வாசகன் இங்குள்ள பொதுவான அறிவுத்தளத்தில் புழங்கும் மலிவான நாத்திகவாதத்தை இளமையில் கற்றுக்கொண்டவன். அது புறவுலகின் சிலகூறுகளைப் புரிந்துகொள்ளவும் லௌகீகவாழ்க்கையை நடத்தவும் உதவக்கூடியதே. ஆனால் இலக்கியத்தின் நுண்தளங்களை அடைய மிகப்பெரிய தடையாக ஆவது அது. இலக்கியம் கற்பனையினூடாகவும், நுண்ணுணர்வினூடாகவும் வாசிக்கப்படவேண்டியது. பகுத்தறிவு எனப்படும் உலகியல்தர்க்கம் அதற்கு நேர் எதிரானது. தமிழ்ச்சூழலில் பக்தி இலக்கியம் படிக்கப்படாமலாவதற்கு முதன்மைக் காரணம் நம் அறிவுச்சூழலில் மூளைத்தொற்றுயிரி என நிறைந்திருக்கும் எளிய நாத்திகவாதம்தான். நாத்திகவாதம் சாமானியர்களுக்கு தேவையானது என்றும் இலக்கியவாசகன் கடந்துசெல்லவேண்டியது என்றும் சொல்வேன்

எளிய நாத்திகவாதம் பக்தியை ‘மூடநம்பிக்கை’ என வகுக்கிறது. பக்தி என்பதைப் பற்றிய அதன் புரிதல் மூன்று நிலைகளிலானது.

அ, இறப்பு, வாழ்க்கையின் நிலையின்மை ஆகியவற்றைக் கண்டு அஞ்சி ஒரு செயற்கையான காவலனை, தலைவனை உருவகம் செய்துகொண்டு அடைக்கலம் ஆவது.

ஆ உலகியல் நலன்களை அளிக்கக்கூடிய ஆற்றல் ஒன்றை கற்பனைசெய்து அதனிடம் இறைஞ்சுவது

இ.இயற்கைவல்லமைகளை தந்தை, அன்னை, அரசன் என உருவகித்துக்கொள்வது.

இது மிக மேலோட்டமான தளத்தில் மட்டுமே சரியானது. எல்லா மதங்களுக்கும் பொதுவானதும் அல்ல.இந்துமதப்பிரிவுகளைப் பொறுத்தவரை பக்தி என்பது ஒற்றைப்படையான நம்பிக்கை அல்ல. அதற்கு மிகநுட்பமான விரிவான தத்துவப் பின்னணி உண்டு. வேதாந்தமும் சைவசித்தாந்தமும் பக்திமரபின் தத்துவ அடிப்படைகள். அவை எளிமையான நாத்திகவாதத்தால் எதிர்கொள்ளத்தக்கவை அல்ல

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் 
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள் 
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் 
உளன் இரு தகைமையொடு ஒழிவு இல பரந்தே

[இருக்கிறான் என்று சொன்னால் இருக்கின்றன அவன் உருவமாகிய இந்த உருவங்கள் அனைத்தும். இல்லாதவன் என்று சொல்லப்போனால் அவனுடைய இல்லாமையே இந்த உருவம் இல்லாதவை அனைத்தும். உள்ளவன் என்றும் இல்லாதவன் என்றும் சொல்லப்படும் இந்த இயல்புகளை தனக்கு தனியியல்புகள் கொண்டிருக்கையில் கொண்டிருப்பவன் அவன். பரந்து விரிகையில் இவ்விருமைகளும் அற்றவன்]

என நம்மாழ்வார் திருவாய்மொழியில் பாடியிருப்பதை மேலைமரபில் இணைத்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இமானுவேல் காண்ட், ஷோப்பனோவர் வழியாகவே இயலும். ’உண்மையுமாய் இன்மையுமாய்’ [மாணிக்கவாசகர், திருவாசகம்] இறைவனை உருவகிக்கும் கொள்கையை எதிர்கொள்ள ஓரிறைவாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட நாத்திகவாதம் உதவாது.

எந்த இலக்கியமென்றாலும் அது ஊன்றி நின்றிருக்கும் தத்துவப் புலத்தை பயிலாமல் அதை முழுதறிய இயலாது. நவீன இலக்கியத்திற்கும் அதுவே பொருந்தும். உதாரணமாக, ஜெர்மானிய தத்துவமரபுகளில் சற்றேனும் அறிமுகமில்லாமல் ருஷ்யப் பெருநாவல்களை முழுமையாக வாசிக்க இயலாது.தத்துவ தளத்தில் இந்தியாவின் பக்தி இயக்கம் என்பது பல முகங்கள் கொண்டது. ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் ஒன்றையொன்று நிரப்பியும் விரியும் மிகவிரிவான தரிசனங்கள் கொண்டது. அத்தரிசனங்களுடன் விவாதிக்க விழையும் நவீன வாசகன் அவற்றை முறையாகக் கற்றே ஆகவேண்டும்.

அதற்கு முதலில் ஆரம்பநிலை நாத்திகத்தின் மறுப்புநோக்கை விலக்கி பக்தி இலக்கியங்களை தத்துவநிலைபாடுகளாக காணப்பழகவேண்டும். பக்தி இலக்கியங்கள் வெறும் நம்பிக்கைவெளிப்பாடுகள், எளிய நெகிழ்ச்சிகள் என்னும் பிழைப்புரிதலைக் கடக்கவேண்டும். கிரேக்க- ரோம இலக்கியங்களும் அடிப்படையில் மத இலக்கியங்கள்தான். ஐரோப்பிய நவீன வாசிப்பு அவற்றை தத்துவநிலைகளாக வாசிக்கத் தொடங்கியபின்னரே அவற்றை முழுதுணர்ந்தது. அத்தகைய ஒரு வாசிப்பு இங்கே இனிமேல்தான் உருவாகி வரவேண்டும்

உதாரணமாக தமிழ்ப் பக்தி இலக்கியத்தில் இருமை [binary] யை உருவாக்குவதும் அதை மறுப்பதும் மாறிமாறி ஒரு விளையாட்டுப்போலவே இயற்றப்படுகின்றன. அந்த உருவாக்கி மறுக்கும் ஆடலினூடாக அறியப்படமுடியாத ஒன்றை அறிந்துகொள்வதாக ஆக்கிக்கொள்ளும் ஓரு சொல்லாடல் உருவாகி வருகிறது. பக்தி இலக்கியம் இறைவனை உருவினனாகவும் உருவற்றவனாகவும் ஒருங்கே காட்டுவதும், அறியப்படுபவனாகவும் அறியவொண்ணாதவனாக எண்ணுவதும் இவ்வுலகமாகவும் இவ்வுலகமனைத்தையும் கடந்தவனாகவும் உருவகிக்கிறது. உள்ளத்துள் அடங்குபவனாகவும் எல்லையற்ற பிரபஞ்சமாகவும் எண்ணுகிறது. இந்த இரட்டை – இரட்டைமறுப்பு நோக்கை ஒரு தத்துவநிலைபாடாக எடுத்துக்கொண்டு அணுகும் நவீன வாசகன் பக்தி இலக்கியம் மீதான புதிய வாசிப்பொன்றை, இன்றைய அறிவுத்தளம் சார்ந்த நோக்கு ஒன்றை தொடங்கிவைக்கிறான்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

[உருவமாகவும் அருவமாகவும் உள்ளதாகவும் இல்லாததாகவும்  மறைந்திருப்பதாகவும் மலர்வதாகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதில் உயிராகவும், விசையாகவும் அதன் விதியாக குருவாக வந்து அருள்க குகனே]

என்னும் கந்தரனுபூதியின் பாடல் மரபான வாசகனுக்கு வெறும் துதி. எளிய நாத்திகவாசகனுக்கும் அவ்வாறே தோன்றும். ஆனால் நவீன வாசகனுக்கு அது முரண்பாடுகளை இணைத்து இணைத்து ஆடும் தத்துவவிளையாட்டு. அதனூடாக அன்றாடத்தில் அறியமுடியாத ஒன்றை அறிவுறுத்தும் ஒரு வெளிப்பாடு. இறை என இங்கே சொல்லப்படுவது உருவும் அருவும் இருப்பதும் இல்லாததுமாம் ஆன ஒன்று. மருள் ஆகவும் அதன் மலர்வாகவும் , மணியாகவும் அதன் ஒளியாகவும் இருப்பது. கருவாகவும் அதில் உயிராகவும் திகழ்வது. விசையாகவும் அவ்விசையை நிலைநிறுத்தும் நெறியாகவும் ஆவது.

அத்தகைய பல தத்துவநிலைபாடுகளை பக்தி இலக்கியங்களில் ஒரு நவீன வாசகன் கண்டடையக்கூடும். பக்தி இலக்கியங்கள் இறைவனையும் ஊழையும் எவ்வண்ணம் இணைக்கின்றன, முழுதுறப் பணிதலையும் அறிந்து நிறைதலையும் எவ்வண்ணம் முன்வைக்கின்றன என்று பார்க்கும் நவீன வாசகனுக்கு அவன் எதிர்கொள்ளவும் விரித்துக்கொள்ளவும் பற்பல வாய்ப்புகள் உள்ளன.  அத்தகைய புதிய வாசிப்பினூடாகவே இன்று நாம் பக்தி இலக்கியத்தை அணுகமுடியும்

[ஆண்டாள்]

பக்தியை வாசித்தல் – உணர்ச்சிகள்

இன்றைய வாசகனுக்கு பக்தியின் உணர்வெழுச்சி அயலானது. இயல்பாக அது அவனை பக்திக் கவிதைகளில் இருந்து விலக்குகிறது. ஒரு நவீன இலக்கியவாசகன் பக்தியின் உணர்வெழுச்சியை நவீன இலக்கியத்திலுள்ள கற்பனாவாதத்துடன் [Romanticism] இணைத்துப் புரிந்துகொள்ள முடியும். கற்பனாவாதம் இலக்கியத்தில் எந்நிலையிலும் தவிர்க்கமுடியாத ஒன்று. உலக இலக்கியத்தின் மிகப்பெரும்பகுதி கற்பனாவாத அழகியல்கொண்டதுதான். அதற்கு இணைவைத்துப்பார்த்தால் யதார்த்தவாதம் [Realism] என்பது உண்மையில் முந்நூறாண்டுகளே வரலாறு கொண்டது.

யதார்த்தவாதம் வாழ்க்கையிலுள்ள ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் நிறுத்துகிறது. ஆகவே ஒட்டுமொத்தத்தையே அது கட்டமைக்கிறது. அதன் இயல்பு சமநிலை. ஆனால் கற்பனாவாதம் வாழ்க்கையிலுள்ள சிலவற்றை மட்டுமே பொருட்படுத்துகிறது. உறவு, பிரிவு, இறப்பு, தனிமை,வெறுமை, களிப்பு, நிறைவு என. அவை நுண்மையானவை என்பதனாலேயே அவற்றை குவியாடியால் பெருக்கிக் காட்டியாகவேண்டும். அதற்குரிய அழகியல் என அது மிகையாக்கலைக் கண்டடைந்துள்ளது. ஒரு முதல்முத்தம் தன்னளவில் மிக எளிய நிகழ்வு. ஆனால் கற்பனாவாதத்தின் கை வந்து தொட்டால் அது வாழ்க்கைக்கே அழகும் அர்த்தமும் அளிப்பது.

பக்தி உணர்வு என்பது ஒருவகையான கற்பனாவாதம் என்று நவீன வாசகன் கொள்வான் என்றால் அதிலுள்ள மிகை அனைத்தும் நுண்மைகளை காட்டுவதற்குரியவை என்று புரிந்துகொள்வான். அப்புரிதல் பக்தி இயக்கக் கவிதைகளை அவன் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வாழ்க்கைச் சித்திரங்களை நோக்கித் திறப்பதை அவன் காண்பான்.

அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றுந்தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட்கு என்னுரைப்பேன்?
எவ்வுருவோ நின்னுருவம் ஏது⁠?

[அன்றும் திருவுருவத்தைக் காணாமல்தான் அடிமைப்பட்டேன். இன்றும் அந்த திருவுருவத்தை நான் காணவில்லை. என்றும்தான். உன் பிரானின் உருவம் எது என்று கேட்பவர்க்ளிடம் என்னதான் சொல்வேன்? என் தலைவனே, உண்மையில் உன்னுடைய உருவம்தான் என்ன?]

என்னும் காரைக்கால் அம்மையார் பாடல் [அற்புதத் திருவந்தாதி] பெருங்காதலே பக்தியென உருக்கொண்டநிலையின் வெளிப்பாடு. தன் காதலனின் உருவம் காணாமலேயே ஆட்பட்டேன் என்கிறாள். அவனை அடைந்தபின்னரும் அவன் உருவத்தைக் காணவில்லை. அவன் உருவம்தான் எது என்பவர்களுக்கு என்னதான் சொல்வேன் என ஏங்குகிறாள். உன் உருவம்தான் எது என எண்ணி வியக்கிறாள்.

இங்கு காதலனாக சிவபெருமான் என்னும் இறையுரு அமைந்துள்ளது. அது இல்லையென்றாலும் இது மகத்தான காதற்பாடல். எந்தக் காதலி காதலனின் தோற்றத்தைப் பார்த்திருக்கிறாள்? அவளுடைய காதலைத்தான் பார்க்கிறாள். அதுவே அவன் உருவம் பார்ப்பதை மறைக்கும் திரை. அவள் என்றுமே அதைக் கடந்து அவனைக் காணப்போவதில்லை. ஆனால் என்ன? அவள் காண்பதும் அவனைத்தானே? அவளுக்குரியவன் என்றுதானே அவன் அவள்முன் தோன்றமுடியும்?

கவிதை காலம்கடக்கும் உணர்வுகளையே பேசுகிறது எனில் அதற்கு அது எழுந்த காலமும் சூழலும் ஒரு பொருட்டே அல்ல. இப்பாடலில் வெளிப்படும் பித்து என்றுமுள காதலின் களிப்புதான். அது ஒரு தொடக்கம். அந்தக் காதலன் அவனுடைய முழுமையை எய்துகையில் அவன் எரிகைக்கொண்டு ஆடி நின்றிருக்கும் அரன். இன்றைய வாசிப்பு பக்திக்கவிதைகளின் உணர்வெழுச்சியை பக்தி என்னும் ஒற்றைச் சொல்லில் இருந்து விடுவித்து வாழ்வின் நுண்தருணங்களின் உச்சம் எனக் கொள்ளுமென்றால் அவை ஒவ்வொன்றும் புதியவை என மலர்ந்தெழும்.

மரபை வாசித்தல் – தொன்மங்கள் 

தமிழ் நவீன இலக்கியத்தின் மிகப்பெரிய குறைபாடு என்பது அது மரபிலிருந்து தொன்மங்களையும் [myth] ஆழ்படிமங்களையும் [archetypes] எடுத்துக்கொள்வதில்லை என்பது. இன்றைய படைப்பாளிகள் மரபிலிருந்து துண்டுபட்டிருப்பதே இதற்குக் காரணம். நம் கல்விமுறை. நம்மைச் சூழ்ந்துள்ள எளிய அரசியல்சரிநிலைகள். தொன்மங்களும் ஆழ்படிமங்களும் மண்ணுக்குள் உறையும் வேர்கள். அவற்றிலிருந்தே படிமங்கள் பிறக்கின்றன. மரபான தொன்மங்களுடனும் ஆழ்படிமங்களுடனும் உள்ள இந்த விடுபடல் காரணமாக தமிழிலக்கியவாதி பெரும்பாலும் ஐரோப்பாவிலிருந்து கடன்வாங்கிய தொன்மங்களைப் பயன்படுத்துகிறான்.

உதாரணமாக, நம் நவீனக் கவிதைகளில் சாத்தான் X கடவுள் என்னும் இருமை எப்படியெல்லாம் பயின்று வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டலாம். மேலைக் கவிதைகளில் இருந்து வெறுமொரு படிமமாக சாத்தான் என்பது கடன்வாங்கப்பட்டுள்ளது. அச்சொல் எழும் பண்பாட்டுப் பின்புலம், அது உருவாக்கும் அர்த்தவிரிவு இங்குள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. உதாரணமாக இங்கே சாத்தான் என எழுதிய எவருக்குமே சாத்தான் பேரழகனாகவும் பெருஞ்சொல்வலனாகவும் அம்மரபில் காட்டப்பட்டிருக்கிறான் என்பது தெரியாது. அந்த மரபில் அவன் கிறிஸ்துவின் மூத்தவன் என்பது தெரியாது. அவ்வாறான ஒரு வளர்ச்சி அப்படிமம் சார்ந்து அவர்களில் நிகழவில்லை.

அத்தகைய ஒரு வளர்ச்சி என்பது ஒருபடிமம் அதன் முழுமையான பண்பாட்டுப்புலத்துடன், ஆழுள்ளத்தின் அடுக்குகளிலிருந்து எழுந்து வரும்போதே இயல்வது. இங்குள்ள தொன்மங்களிலிருந்தும் ஆழ்படிமங்களிலிருந்தும்தான் அது உருவாகி எழமுடியும். பக்தி இலக்கியங்கள், குறிப்பாக புராணங்கள், அத்தகைய ஆழ்ந்த தொடர்பை மரபுடன் அளிக்கக்கூடியவை. புராணங்களைப் பயிலும் ஒருவர் மிக எளிதாக நம் ஆலயச்சிற்பங்களை நுணுக்கமாக உணரமுடியும். தெருக்கூத்து, பரதநாட்டியம் என விரியும் நம் மரபுக்கலைகளை ஆழமாக உணரமுடியும். அவருடைய கனவுகளில் அத்தொன்மங்களும் ஆழ்படிமங்களும் செறிவடையும். அங்கிருந்து அவை புதிய படிமங்களாக எழுந்து வரும்.

அவ்வாறுதான் ஐரோப்பா பதினாறாம் நூற்றாண்டில் கிரேக்க, ரோம மரபிலிருந்து தன் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் கண்டடைந்தது. நார்ஸ் மரபிலிருந்தும் கெல்டிக் மரபிலிருந்தும் மேலும் மேலும் கண்டடைந்தபடி இருக்கிறது. நம் மரபுக்குள் நுழைவதற்கான பெருவாயில் நம் பக்தி இலக்கியங்களும் அவற்றின் பருவடிவமான நமது பேராலயங்களும். அவற்றை அணுகுவதற்கான நவீன வாசிப்புமுறை ஒன்று இங்கே உருவாகிவரவேண்டும். அத்தகைய வாசிப்பு நம் புராணங்களை முற்றிலும் புதியவகையில் திறப்பதைக் கண்டுகொள்ளலாம்.

உதாரணமாக, கந்தபுராணம் கம்பராமாயணத்தை அடியொற்றி எழுதப்பட்ட புராண காவியம். ஒரு நவீன வாசகன் அதை மரபார்ந்த தொன்மங்களின் ஆழ்படிமங்களின் பெருங்களஞ்சியமாக வாசிக்க முடியும். ஓர் உதாரணம். சூரபதுமன். சூரன், பதுமன் என்னும் இரு அசுரர்களின் இணைப்பு அவன். சூர் எனில் வீரம். மின்னல் என்றும் பொருளுண்டு. பதுமம் என்றால் தாமரை. இந்தியத் தொன்ம –ஆழ்படிம மரபில் மின்னலும் தாமரையும் இரண்டு அடையாளங்களாக ஒன்றுடன் ஒன்று பிணைந்தே வந்துகொண்டிருக்கின்றன. ஆற்றல் மற்றும் அழகு இரண்டுக்கும் அடையாளமாக இருக்கலாம். மின்னல் நீரில் விழுந்து தாமரை ஆகிறது என்றுகூட ஒரு தொன்மம் உண்டு.

இந்திரன் ஒருகையில் மின்னலையும் இன்னொன்றில் தாமரையையும் ஏந்தியவன். பின்னர் போதிசத்வர்கள் போதிசத்வ வஜ்ரபாணி [மின்னலை படைக்கலமாக்கியவர்] போதிசத்வ பத்மபாணி [தாமரையை ஏந்தியவர்] என இரண்டு வடிவங்களாயினர். மின்படைகொண்ட போதிசத்வர் தீ வடிவமான புலியை, சிம்மத்தை ஊர்தியாகக் கொண்டவர். தாமரை ஏந்திய போதிசத்வர் யானை ஊர்பவர். சிம்மம் அனல். யானை நீர். சூரபதுமனின் தம்பியரில் ஒருவன் சிங்கம்போல் முகம்கொண்ட சிங்கமுகன். இன்னொருவன் யானைத்தலை கொண்ட கயமுகன்.

இந்த ஒத்திசைவு மேலும் மேலும் திறப்புகளை அளிப்பது. மின்னல் தாமரை என்னும் இரண்டும் எப்படி அசுரனாக ஆயின? ஏனென்றால் அவன் மாயைக்கு காசியபரில் பிறந்தவன். மாயையே வடிவானவன். அவனுடைய ஒருபாதி முருகனின் மயிலாகவும் இன்னொரு பாதி சேவலாகவும் மாறி முருகனின் தோற்றமாகவே ஆகி பக்தர்களால் வழிபடப்படுகிறது. இன்னும் எட்டிப்போய் கற்பனைசெய்வதாக இருந்தால் சேவல் அனல் என்றும் மயில் நீலநிற நீர் என்றும் எண்ணிக்கொள்ளலாம்.

தொன்மங்களை ‘தெரிந்துகொள்வது’ மட்டும் அல்ல அவற்றை கற்பனை வழியாகப் பெருக்கிக்கொள்வதும் ஆழுள்ளத்திற்குக் கொண்டுசெல்வதும் கனவில் நிலைநிறுத்துவதும்தான் நவீன வாசிப்பு. அத்தகைய ஒரு வாசிப்பு நம் நோக்கில் பெரும் மாற்றத்தை உருவாக்கக் கூடும். கற்பனைக்கான கருவிகள் பெருகும். கருவிகள் கூர்கொள்ளும்தோறும் கண்டடைவனவும் பெருகும்.

மதத்திலிருந்து எழுந்து…

பக்தி இலக்கியம் இன்று இந்துமதத்தின் இலக்கியச் செல்வமாகவே நிலைகொள்கிறது. அது என்றும் அவ்வாறே நிலைகொள்ளும். அதை வாசிக்கவும் பொருள்கொள்ளவும் மரபார்ந்த மதநோக்கு ஒரு வழிமுறையை கண்டடைந்துள்ளது. பக்திநோக்கில் அணுகுவோருக்கு அதுவே உகந்த வழி. ஆனால் நவீன இலக்கியம் அதை கற்பனையால், நுண்ணுணர்வால் வாசிக்கும் ஒரு புதியவாசிப்பை உருவாக்கிக் கொள்ளலாம். உலகமெங்கும் நிகழ்ந்த அந்த பரிணாமம் இங்கே நிகழவில்லை என்பதே நம் தேக்கத்திற்கான பலகாரணங்களில் ஒன்று. எதிர்காலத்தில் அத்தகைய கூருணர்வும் கொண்ட வாசிப்புகள் உருவாகி வரக்கூடும்

[தடம் ஆகஸ்ட் 2019]

முந்தைய கட்டுரைதீர்வுகள் – போகன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39