எழுத்தாளன்,சாமானியன் -கடிதங்கள்

எழுத்தாளனும் சாமானியனும்

அன்புள்ள ஜெ,

 

 

எழுத்தாளனும் சாமானியனும் ஒரு கூர்மையான கட்டுரை. நீங்கள் தாக்கப்பட்ட நிகழ்வின்போது எழுந்த எதிர்வினைகளை வன்மம், வஞ்சம் என்றெல்லாம் பலர் சொன்னார்கள். அதெல்லாம் மேலோட்டமானவை. அடிப்படையான பிரச்சினை இங்கே எழுத்தாளர்கள் மேல் எந்த மதிப்பும் இல்லை என்பதுதான். ஏனென்றால் எழுத்தை வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவு. வாசித்தாலும் எதையாவது புரிந்துகொள்பவர்கள் அதிலும் குறைவு. மற்றவர்களுக்கு செவிவழியாகத் தெரிந்த பெயர் அவ்வளவுதான். இன்னும் சில முகநூல் கூட்டத்தவருக்கு அவர்களைப்போல எழுத்தாளனும் இன்னொரு பக்கம் எழுதுகிறான்.  எழுத்தாளனை ஒரு கருத்து தெரிவிப்பவன் என்ற அளவிலேயே அவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

 

ஒரு பண்பாட்டுச்சூழலையும் மொழியையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிக்கொள்பவன்தான் எழுதமுடியும். அவன் ஆராய்ச்சியாளன் கிடையாது. அவன் சிந்தனையாளனும் இல்லை. அவனுக்கு அந்தப் பண்பாட்டிலும் மொழியிலும் ஒரு தன்மயத்துவம் இருக்கிறது. அதுவாகவே ஆகிவிடுகிறான். அதற்குள் இருந்துகொண்டு எழுதுகிறான். ஆகவே பண்பாடு தானாகவே தன்னைப்பற்றிப் பேசுவதுதான் நல்ல படைப்பு என்பது. நல்ல படைப்புக்களின் பார்வைக்கோணம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அவை ஒன்றை ஒன்று தொடுத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பைத்தான் உருவாக்குகின்றன. இதைச் சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். முற்றிலும் எதிர்மறையான அரசியல்பார்வை கொண்டவர்களான ஜி.நாகராஜன், அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒன்று இன்னொன்றை எப்படி நிரப்புகின்றன, எப்படி ஒரு பண்பாட்டுச் சித்திரத்தை அளிக்கின்றன என்று அவர் சொல்கிறார்.

 

ஆகவே ஓர் எழுத்தாளனின் தரப்பை நாம் எதிர்க்கலாம். அவன் நூலை விமர்சிக்கலாம். அதுவும் அந்த இலக்கியச் செயல்பாட்டின் ஒருபகுதியே. ஆனால் அதேசமயம் அவன் அந்தப்பண்பாட்டின் கொடையாளன் என்ற மதிப்பையும் விட்டுக்கொடுக்கவேண்டியதில்லை. அது ஒரு அரிச்சுவடிதான். டி.எஸ்.இலியட் காலம் முதலே சொல்லப்பட்டுவருவது. நம்மூரில் அதைச் சொல்லிச்சொல்லி நிறுவ வேண்டியிருக்கிறது.

 

இங்கே நாலாந்தரத் தெரு அரசியல்வாதிகளே மிகுதி. அவர்களுக்கு அரசியலே ஒரு போலியான மிகைநடிப்புதான். கொதித்துக்கொண்டே இருப்பதுதான். அரசியலே அவர்களுக்கு தெருவம்புதான் என்றபோது இலக்கிய அடிப்படை விழுமியங்களெல்லாம் எங்கே புரியப்போகிறது? ஆகவேதான் எழுத்தாளனும் சாமானியன்தான், அவனுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது? லட்சம்பேர் பட்டினி கிடக்கிறார்கள், எழுத்தாளனும் சாகட்டுமே என்றெல்லாம் பேசுபவர்களை நாம் இங்கே பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம் சமூகத்தின் அறிவுநிலை, பண்பாட்டுநிலை அவ்வளவுதான். உங்களைத் தாக்கிய கடைக்காரனுக்கும் உங்களை கேலிசெய்த முகநூல்கும்பலுக்கும் பண்பாட்டுநிலைபாடும் தரமும் ஒரே அளவுதான். ஆகவே அவர்கள் அவருடன்தான் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்

 

எம். பாஸ்கர்

 

அன்புள்ள ஜெ

 

முகநூலில் எழுத்தாளர்களைப் பற்றி இழிவாகப் பேசும் கூட்டம் பெருகி வருகிறது. ஏதேனும் ஒரு அரசியல் அல்லது கருத்தை எடுத்துக்கொண்டு அதற்காகக் கடுமையான கோபம் கொண்டது மாதிரி நடிப்பார்கள். கூடவே எழுத்தாளனை வசைபாடுவார்கள். எழுத்தாளன் தன் வீட்டிலும் தெருவிலும் எங்கும் எந்த மதிப்பையும் பெறுவதில்லை. அவனை சீர்திருத்தவே எல்லாரும் முயல்கிறார்கள். இங்கே புத்தகம் வாசிப்பதே ஒருவகையான கசப்பை மற்றவர்கள்மேல் உருவாக்குகிறது. ஒரு பஸ்ஸில் புத்தகம் படித்துக்கொண்டு போனாலே பயணிகள் கோபித்துக்கொள்வதைக் காணலாம். மேஜையில் ஒரு புத்தகம் இருந்தால் சொந்தக்காரர்கள் சீண்டப்படுகிறார்கள்.

இவ்வாறு நம் சூழலில் எங்குபார்த்தாலும் இருக்கும் அறிவுமீதான ஒவ்வாமை, இலக்கியம் மீதான கசப்புதான் முகநூலிலும் வெளிப்படுகிறது. முகநூல் என்பது நம் சமூகத்தின் ஒரு பகுதிதானே? புக்கு படிச்சா பைத்தியம் பிடிக்கும், படிக்கிறபன் உருப்படாம போவான், அவனால குடும்பத்துக்கு லாபம் இல்லை – இந்தமாதிரியான கருத்துக்கள்தான் இங்கேயும் வெளிப்படுகின்றன. ஆனால் இங்கே முகநூலில் கொஞ்சம் எழுத ஆரம்பித்ததும் பாவலாக்களைக் கற்றுக்கொள்கிறார்கள். கொஞ்சம் முற்போக்கு, கொஞ்சம் தமிழ்த்தேசியம் ரெண்டையும் கலந்தால்போதும் யாரை வேண்டுமென்றாலும் வசைபாடலாம். அல்லது இந்துத்துவ நிலைபாடு எடுத்தால்போதும். அடிப்படையில் இருப்பது இலக்கியம் என்றால் என்ன அறிவியக்கம் என்றால் என்ன என்றே தெரியாத மூடத்தனம் மட்டும்தான்.

இவர்கள்தான் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள். பெரிய மனிதாபிமானி போல எழுத்தாளனும் சாதாரணமானவன்தான் என்றும் செருப்பு தைப்பதும் எழுதுவதும் ஒன்றுதான் என்றெல்லாம் பசப்புகிறார்கள். ஃபேஸ்புக்கில்  முற்போக்குக் கூச்சல்போட்டு எல்லா எழுத்தாளர்களையும் நக்கலடிக்கும் ஒருவர் என் நண்ப. ‘செருப்புதைப்பதும் எழுதுவதும் சமம்தான்’ என்று சொன்னார். அவர் எஞ்சீனியர். நான் எஞ்சீனியரிங்கும் செருப்பு தைப்பதும் சமமா? அப்படி என்றால் அதை சாயங்காலம் பார்ட்டியில் சொல்லமுடியுமா என்று கேட்டேன். சட்டையைப் பிடித்து அடிக்காத குறை.

இந்த போலிகளின் குரல்கள் கூட்டமாக ஒலிப்பதனால்தான் ஒரு சக்திபோல தெரிகின்றன. Never Underestimate The Power Of Stupid People In Large Groups  என்று ஒரு பழமொழி உண்டு. என்ன பிரச்சினை என்றால் முட்டாள்களால் மிக எளிதாக மற்ற முட்டாள்களுடன் ஒன்றாகச் சேரமுடியும். உற்சாகமாக ஈகோ இல்லாமல் ஒருவரை ஒருவர் ஆதரிக்க முடியும். அவர்களுக்கு அறிவுச்செயல்பாட்டாளர்களைத்தான் பயம்.

ஜி.நாகேந்திரா

 

முந்தைய கட்டுரைதம்மமும் தமிழும்
அடுத்த கட்டுரைகற்காலத்து மழை-3