தம்மம் தோன்றிய வழி…
அன்புள்ள ஜெ ,
தத்துவத்தில சிறிது ஆர்வம் இருக்கும் எவரும் , பெளத்தத்தின் எதோ ஒரு வடிவ பிரதியை படிக்காமல் இருந்திருக்க முடியாது . அதிலும் ஓஷோ போன்ற ஆசிரியர்கள் எவ்வகையிலேனும் புத்தரை பல்வேறு இடங்களில் உபயோகித்த வண்ணம் இருப்பதை காணலாம். உங்களுக்கு “”மாலை நடையும் பழம்பொறி” யும் போல ஓஷோவுக்கு புத்தர் ஒரு இனிய நடை பயண தோழன்.அவ்வகையில் ஓஷோவின் ”தம்மபதம்”எனும் , புத்தரின் ஞானத்தை தனது கேள்வி பதில்கள் மூலம் கையாண்டிருப்பார்.
உதாரணமாக ”’குருவே விவேகம் என்பது என்ன’ என்கிற கேள்விக்கு , ‘உன் ஜீவிதத்தின் சுவையே விவேகம்” என்று பூடகமாக சொல்லி அதை விவரித்து செல்வார், அதிலிருக்கும் சவாலே அந்த பூடகத்தன்மை தான்.
அடுத்ததாக, மிக முக்கியமாக கருதப்பட வேண்டியவர் ‘ராகுல் சாங்கிருத்யாயன் ‘ அவரின் ”பெளத்த தத்துவ இயல்”’ எனும் நூல் , தத்துவம் ,காலக்கணக்குகள், புத்தரின் சமகால ஞானிகள் , நாடுகள் , கொள்கையியல் , என அனைத்து தரவுகளுடனும் பேசும் ஒரு நூல் , ஒருவகையில் இது ஒரு பெளத்த மாணவருக்கான நூல் எனலாம் , அந்த அளவுக்கு உள்ளடக்கம் கொண்ட நூல் . ராகுலும் கூட இருநூறு பக்க புத்தகத்தில் 2 பக்கங்கள் புத்தரின் சரித்திரத்தை சொல்லிவிட்டு , தத்துவத்துக்குள் நுழைந்து விடுகிறார்.
அதன் பின், கெளதம நீலாம்பரன் எழுதி ”முத்தாரம்”’ இதழில் தொடராக வந்து, பின்பு பெரிய புத்தகமாகவும் வெளிவந்த “புத்தர் பிரான்” எனும் சற்றே பெரிய நூல் , புத்தரின் வாழ்க்கை வரலாறு , போதனைகள் , மணிமேகலை , முதல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய ”ஆசிய ஜோதி ”’ வரையிலான பல்வேறு படைப்புகளில், தமிழ் இலக்கியத்தில் புத்தரின் இடம், என்று மிக நீண்ட ஒரு தொகுப்பு நூல்.
அடுத்ததாக, முக்கியாமான நூலான அம்பேதகரின் ”’புத்தரும் அவரது தம்மமும் ” { இன்னும் படித்து முடிக்கவில்லை என்பதால் பின்னர் எழுதுகிறேன் }இந்நிலையில் தான், எஸ் .ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் விலாஸ் சாரங்க் பற்றி எழுதி இருந்ததை பார்த்தேன் , முக்கியமான ஒரு படைப்பாளி தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு கூட இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார் ,
சமீபத்தில் எழுத்தாளர் காளிபிரசாத் அவர்கள் ‘The Dhamma Man” என்கிற அவரது நூலை ”தம்மம் தந்தவன்”’ என்கிற பெயரில் மொழிபெயர்த்து இருந்தார் , மிகசுவாரஸ்யமான ஒரு குறு நாவலுக்கே உண்டான நடையுடன் அமைந்த, ஒரு புத்தகம் , எந்த இடத்திலும் ஒரு தொய்வோ, சலிப்போ , இல்லாத ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பு காளி பிரசாத் தமிழின் மிகத்தீவிர வாசகர் என்பதாலும் இது சாத்தியப்பட்டிருக்கலாம் . இந்த நாவல் {என்றே சொல்லவேண்டும்}எந்தவித நாடகீய தருணத்திற்கும் , மெய் சிலிர்ப்பு அனுபவத்திற்கும் இடம் கொடாமல் , புத்தரின் பிறப்பு , அலைக்கழிப்பு , அனுபவம் , மகா நிர்வாணம் , உடலியல் ரீதியான மரணம் என ஒரு அழகிய ஓடை போல ஒழுகி செல்கிறது ,
நாவலாசிரியர் ‘சுதத்தா’ என்கிற பெயரில் புத்தர் பிறப்பதற்கு முன்பே அரண்மனை பணியாளாக அங்கே இருக்கிறார் , அவருடன் சேர்ந்து நாமும் புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரை கூடவே பயணிக்கிறோம் .
இந்த நாவல் முழுவதும் அன்றாட நிகழ்வுகளில் புழங்கி , அங்கே தம்மத்தை நாட்டுவதிலேயே புத்தர் {அல்லது நாவலாசிரியர்} ஆர்வம் கொண்டிருக்கிறார், உதாரணமாக , பல்வேறு நகர்களில் அலைந்து திரியும், புத்தர் சந்திப்பதும் உரையாடுவதும் , மறுப்பதும் , சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிய துறவியருடனும், யோகியருடனும் , வேத விற்பன்னர் களுடனும். அவர்களை நம்பும் சாமானியருடனும் தான் . பொதுவாக நாம் பார்த்த புத்தர் வேத சபைகளிலும் , அரசசபைகளிலும் தான் தன் மெய்மையயை போதிக்கிறார் இங்கே , நாய், காராம்பசு , என அன்றாடங்களுடன் உரையாடுகிறார்
புத்தரின் மகன் ராகுலனின் கதையை சொல்லி அதை இன்றைய காந்தியின் வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் , ”ராஜகிருஹத்திலிருந்து கபிலவஸ்துவிற்கு சென்ற புத்தரின் நீண்ட பயணத்தை , மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையுடன் ஒப்பிட்டு ஒரு சித்திரத்தை எழுப்பிக்கொள்ளலாம் , காந்தியை புத்தருடன் ஒப்பிட்டுக்கொள்ள பல விஷயங்கள் பொருந்தி வருகின்றன , இருவருமே அஹிம்சையை கடைபிடித்தனர் , தனிப்படட வாழ்விலும் இணையான தருணங்கள் இருக்கவே செய்கின்றன. புத்தர் யசோதரையை நடத்திய விதமும் , காந்திஜி கஸ்துரிபாயை நடத்திய விதமும் ஒரு உதாரணம் . இவ்விரு நிகழ்வுகளிலும், மனைவிகள் மானுடர்களாகவும் , கணவர்கள் அதி மானுடர்களாகவும் இருக்கின்றனர் . புத்தர் ராகுலனை நடத்திய விதமும் , காந்தி தன் மைந்தர்களை நடத்தியவிதமும் ஒப்பு நோக்க ஒன்றே . ஆழ்ந்த வேர்களும் பரந்து விரிந்த கிளைகளும் கொண்ட ஆலமரம் காண்பதற்கு பிரமாண்டமானதாக இருந்தாலும் ,அதனடியில் வேறு மரங்கள் துளிர்ப்பதில்லை. சிறந்த மனிதர்களும் அவ்வண்ணமே தன் கொள்கைகளுக்கு முன்னர் மற்ற உயிர்களை துச்சமாக நினைக்கும் கொடுங்கோன்மையாளராகவே இருக்கின்றனர்”- என்கிறார்
நாவலின் பல்வேறு இடங்களில் ஒரு இலக்கியத்தரமான மொழிபெயர்ப்பு மிக அழகாக நிகழ்ந்துள்ளது , உதாரணமாக , மாரனுக்கும் புத்தருக்குமான சம்பாஷணை , உபநிஷத்துக்களின் பாடல்கள், ஸ்ருஷ்டி கீதம், பிம்பிசாரனின் கதை, புத்தரின் இறுதி நாட்கள், என பல இடங்கள்.
காளிபிரசாத், விலாஸ் சாரங்கின் “An Interview with M Chakko” என்கிற கதையை மொழி பெயர்த்தாலும் சிறப்பாகவே செய்வார் என்று படுகிறது :):):)
எல்லாவகையிலும் ‘தம்மம்’ என்பதை புரிந்துகொள்ள மிகசிறந்த படைப்பு. வாழ்த்துக்கள்.
அன்புடன்
செளந்தர்.G