நடந்தே தீரணும் வழி…

பயணியின் கண்களும் கனவும்

வணக்கம் ஜெ

இது நான் எழுதும் 3வது கடிதம். முந்தைய கடிதங்கள் உங்கள் தளத்தில் பிரசுரமாகியுள்ளன.

ஜப்பான் பயணம்,சூரியனின் தேர் பிறகு  மீண்டும் பயணிக்கும் ஜெ. இதையெல்லாம் படிக்கும்போது முன்பு பரதேசியாக  பயணித்த எல்லா இடங்களுக்கும் இப்போது மறுவிசிட் அடிக்கிறீங்க என்று தோன்றியது

இப்போது பிரபல எழுத்தாளர் மற்றும் ஒரு நண்பர்கள் குழாமோடு பயணிக்கிறீர்கள் என்பதே வித்தியாசம். எங்களுக்கு கட்டுரை போனஸ்

உங்கள் இன்ஸிபிரேஷனில் போனவருடம் இப்படித்தான் பயணித்தேன். தீவிர மன அலைக்கழிப்பு. தாறுமாறான எண்ணங்களின் போக்குவரத்து.

ஒரு முதுகுப்பையில் துணிமணியுடன் கிளம்பிவிட்டேன். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மைசூர் வரை சுற்றினேன். பகலெல்லாம் கோவில்கள் மற்றும் அந்த ஊரில் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம். சினிமா தியேட்டரில் செகண்ட் ஷோவும் உண்டு. இலக்கே இல்லாத நடந்து நடந்து நடந்து முடிந்தவரை உணவு உண்டு இரவானதும் பெரிய பஸ் ஸ்டாண்டுகளில் தஞ்சமடைந்து பின்னர் கூட்டம் குறைவான பஸ் ரூட்டு கண்டுபிடித்து அதில் 5மணிநேரம் பயணிப்பேன்.  இதற்கு தமிழ்நாட்டு பேருந்துகள் வசதியானவை. 3சீட்டரில் முதலில் அமர்ந்து பிறகு படுத்துக்கொண்டுவிடலாம். இரவு 12மணிவரை காத்திருந்து பயணித்தால் ஐந்துமணிநேர பயணத்திற்கு பிறகு அது மறுநாள் கணக்கு. கேரளாவில் ஒரு தடவை முயற்சி செய்து ஓடியே வந்துவிட்டேன். அங்கே பேருந்துகளும் மோசம் சாலைகளும் மோசம். கேரளஇரவுப் பேருந்துபயணம் படு மோசம்.

இப்படி 3 அல்லது 4 நாள் பயணித்து பறகு ஒரு நல்ல விடுதியில் (800 ரூவாய்க்கு தமிழ்நாட்டில் மற்றும் கர்நாடகாவில் கிடைக்கிறது. சுத்தமாக இருக்கும். அதிகபட்சம் 1000 ரூவாய் செலவு செய்வேன் சுத்தத்திற்காக) 24மணிநேரத்தில் 2முறை குளித்து, துணி துவைத்து, உணவு ஆர்டர் செய்து உண்டு, ஒருநிமிடம் கூட வீணாக்காமல் தூங்கி பிறகு மறுபடி 3-4 நாட்கள் பயணித்தேன். இந்த பயணம் ஆசுவாசப்படுத்தியது உண்மைதான். கிட்டத்தட்ட 45நாட்கள் இப்படி வாழ்ந்தேன்.

இதற்கு நீங்களும் ஒரு காரணம். இது மாதிரி தனிபயணம் நல்லதா என்றால் வேறு வழியில்லை சில பேருக்கு இது தேவைப்படுகிறது.

கொடுத்தே தீரணும் கடன், நடந்தே தீரணும் வழி, வாழ்ந்தே தீரணும் வாழ்வு எனும் விதிப்படியான மன அமைப்புடையவர்களுக்கானது .

அதனாலே இதை ஒருவருடத்திற்கு பிறகு எழுத தோன்றியது.

நன்றி!

மாயன்

முந்தைய கட்டுரைதகவலறியும் உரிமைச்சட்டத்தின் கதை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகற்காலத்து மழை