மூங்கில்,செர்ரிபிளாஸம்,ஜப்பான்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் ஜப்பான் பயண அனுபவங்களை சற்றே தாமதமாக வாசிக்கிறேன். ஜப்பானைக்குறித்த அனைத்தையும் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.   செர்ரி மலர்களுக்கான ஹனமி கொண்டாட்டத்தையும்  ,  ஹிரோஷிமாவின் குண்டுவீச்சில் அழிந்து பின்னர் மீண்டும் துளிர்த்து இன்று வரை இருப்பதாக  சொல்லப்படும் ஜிங்கோ மரத்தையும், Giant timber bamboo  எனப்படும்  மோஸோ மூங்கில்களையும் குறித்து நீங்கள் எழுதப்போவதை வாசிக்க ஆவலாக இருந்தேன்

நீங்கள் அங்கே போகையில் மிகச்சரியாக செர்ரிமரஙகள் பூத்து முடிந்ததால் உங்களால் அவற்றை பார்க்க இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஜிங்கோ மரம் குண்டுவீச்சின் பிறகும் துளிர்ந்து வளர்ந்ததால் நகரை புனரமைக்கையிலேயே சுமார்  16000 ஜிங்கோ மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு இன்று ஜப்பான் பூங்காக்களிலும் நெடுஞ்சாலைகளிலும்  அவற்றின் விதைகளினின்றும் வளர்ந்த ஜிங்கோக்கள் செறிந்து நிற்கின்றன. அழகிய சிறு கைவிசிறி போன்ற அதன்  இலைகள் பொன்மஞ்சளும் ஆரஞ்சுமாக பழுத்து உதிர்கையில் கொள்ளை அழகாக இருக்கும். டோக்கியோவில் நவம்பர் –டிசமப்ரில் ஜிங்கோதிருவிழா நடக்கும். ஜிங்கோ மரங்கள் எங்கேனும்  பிண்ணனியில் இருக்கின்றதா என்று  நீங்கள் எடுத்து வெளியிட்ட புகைப்படங்களை பெரிது பண்ணிப் பண்ணிப்பார்த்தேன். எதிலும் இல்லை

மோஸோ .மூங்கில் காடுகளின் புகைப்படங்கள் நிறைய இருந்தது உங்கள் பதிவில். மகிழ்ச்சியாக இருந்தது. இவை Phyllostachys edulis,  என்னும்  தாவர அறிவியல் பெயர் கொண்டவை. Timber bamboo என்றும்  அழைக்கப்படும் மோஸோ மூங்கிலும் ஜிங்கோவும் ஜப்பானை பிறப்பிடமாக் கொண்டவை அல்ல சீனாவை சேர்ந்தவை

இம்மூங்கில் குருத்துக்கள் மண்ணிலிருந்து வெளிவருகையில் , பிரவுன் நிற சாக்ஸ் போலான உறையினால் மூடப்பட்டிருக்கும், நீங்கள் வெளியிட்டிருந்த புகைப்படங்களிலும் இவை இருக்கின்றது. ’மண்ணிலிருந்து வெளிவரும் யானைத்தந்தங்களைப்போல்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள் இக்குருத்துக்களை ஜப்பானியர்கள் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். இதன் அறிவியல் பெயரின் பின் பகுதியில் இருக்கும் edulils என்பது ’உண்ணப்படுவது’ என்னும் பொருளில் வந்தது.

மஞ்சளும் பச்சையுமாக நிறைய மோஸோ மூங்கில்களின்பின்ணனியில் உங்கள் இருவரின் புகைப்படங்கள் மிக்க மகிழ்வளித்தன.

எப்போதும் போல பல சொற்றொடர்கள்  அத்தனை அழகு.பழைய புதிய ஜப்பான்களை பற்றிச்சொல்கையில் // அது நன்றாகப் பேணப்பட்டுவரும் ஒர் இறந்தகாலம். ஒரு வெறும் கனவு. // என்கிறீர்கள்

நாய்களுக்கான சிலைகளை பற்றிய குறிப்பில் // நாம் நம் தேவைக்காக அவற்றை கொன்றோம் என்பதை நமக்கே சொல்லிக்கொள்வதற்காகவாவது இவை இருக்கட்டும்.// இதை வாசிக்கையில் மனம் கனத்தது

//சாகசங்களற்ற, கனவுகளற்ற நுகர்வின் இன்பம் மட்டுமே எஞ்சியிருக்கும் உலகே நமக்கு எஞ்சியிருக்கிறது//. என்னும் வரிகள் பெரும் சோர்வையும் துயரையும் அளித்தது

அதைப்போலவே ஸ்வெட்டரும் ஸ்கார்ஃபும் அணிவிக்கபப்ட்டிருந்த ஜிஸோ சிலைகள் மனதைபிசைந்தது. மறக்கவே முடியாத புகைப்படங்களில் இதுவும் ஒன்று

பச்சைத்தேநீர் குடித்தலில் நீங்கள் அருந்தியது thick tea.  Thin tea யும் உண்டு ஜப்பானியர்களின் தேயிலை வளர்ப்பும், இந்த  uji matcha  எனப்படும் பச்சைதேநீரின் பொருட்டு பிரத்யேகமாக தேயிலைச்செடிகள்  நிழலில் குறிப்பிட்ட காலம் வரை வளர்க்கப்படுவதும், அவை மிக தனித்துவமான வகையில் பின்னர் தயாரிக்கப்படுவதும், தேநீர் அருந்தும் சடங்குகளும் அதிலும் வெண்முரசில் வருவது போன்ற ஒடுக்கு நெறிகளும் செலுத்து நெறிகளும் உள்ளதுமாய் வெகு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.. மாணவர்களுக்கு தேயிலைச்செடியைக்குறித்து நடத்துகையில்  ஆர்வமூட்டும் பொருட்டு இவற்றைக்குறித்தும் சொல்லுவேன் பிறிதொரு முறை விரிவாக உங்களுக்கு எழுதுகிறேன்

.அரண்மனை என்றாலே ஆடம்பரம் விஸ்தீரணம் என்னும் உளசித்திரமே  இருந்தது சிறு பசுங்குன்றின் மீது அமந்திருக்கும்   சிறிய கச்சிதமான  ஜப்பானிய அரண்மனைகள் அழகு.

அபுதாபியில் இருக்கையில்  அப்போதைய  மன்னர்  எகிப்திலிருந்து புதிதாக மணம் செய்துகொண்டு வந்த 16 வயதேயான  இளம் ஷேக்கியாவின் அரண்மனை  அபுதாபி துபாய் நெடுஞ்சாலையில் ஈச்ச மரஙகள் சூழ நான்கு புறமும் பல கிலோமீட்டர்கள் அளவிலான மதில்சுவற்றுடன் பிரம்மாண்டமாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.

பல அளவுகளிலான  புத்தர் சிலைகளையும் இலங்கையில் இருக்கையில் பார்த்தற்கு பிறகு உங்களின் பதிவில்தான் பார்க்கிறேன். அதுவும் முழங்கையை முட்டுக்கொடுத்து ஒற்றைக்காலை மடித்து கன்னத்தில் கையைத்தாங்கி இருக்கும் குட்டி புத்தரை மடியில் எடுத்து வைத்துக்கொள்ளலாம் போலிருந்தது.

சுமி மூங்கில் கீற்றோவியங்களும் அதனுள்ளேயே பொறிக்கபட்டிருக்கும் கவிதையும் அற்புதமாக இருந்தது. உலக வரைபடத்தில் ஜப்பானே தூரிகையில் வரைந்த சிறு தீற்றல் போலத்தானே இருக்கும்

பழமையும் மரபும் கலந்த ஜப்பானிய தோட்டங்களை பற்றிய பதிவு மற்ற எல்லாவற்றையும்விட பிடித்திருந்தது. சில தோட்டங்களில் ஓடையில் நீருக்கு பதில் வெண்ணிற மென் மணலை பயன்படுத்தியிருப்பார்கள் என்றும் வாசித்திருக்கிறேன்

களைகளும் கூட பேணப்படுகின்றன என்று சொல்லியிருந்தீர்கள் அமெரிக்காவிலும் officcal weeds என்றே சிலவற்றை அறிவித்திருப்பார்கள். களைச்செடி என்பதும் ’ a right plant in a wrong place தான். பெரும்பாலான அல்லது அனைத்து களைச்செடிகளுமே மருத்துவப்பயன்பாடுகள் உள்ளவைதான் இந்தியாவில் அப்படியான காப்புக்கள் இவற்றிற்கு ஏதும் இல்லை. தாவரங்களைப்பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் ஏரளமான களைசெடிகள் அழிந்தே போய்விட்டன.

நான் மாணவியாக இருந்தபோது பார்த்த, குறிப்பெடுத்துக்கொண்ட களைச்செடிகளில் பாதிக்கு மேல் இப்போது அந்த இடங்களில் இல்லவே இல்லை. நாம் இழந்துகொண்டிருக்கும் பல வளங்களில்  களைச்செடிகளும்  இருக்கிறது.

ஜப்பானிய இல்லங்களின் முற்றத்தோட்டங்களைக்குறித்தும் நிறைய வாசித்திருக்கிறேன்.//தோட்டத்தை பேணுபவர் தோட்டத்தில் நிகழ்த்துவது தன் அகத்தை. அகம் பூக்கிறது, தளிர்விடுகிறது, ஒளிகொள்கிறது.//

இதுவே ஒரு அழகிய ஜப்பானிய கவிதை போலிருந்தது

நான் புத்தகங்களிலும் இணைய வழியிலும் மகன்களின் cross country cultures  பாடங்களின் வாயிலாகவும் மட்டுமே கண்டிருந்த ஜப்பானை இன்னும் நெருக்கமாக பார்த்தேன் உங்களின் பயண அனுபவக்கட்டுரை வாசிப்பில்.

. இருபுறங்களிலும் பைன்மரங்கள் நின்றிருக்கும் மிகச்சுத்தமான  தெரு,.  குழந்தையின்  உள்ளங்கைகளைப்போல சிவப்பும் பச்சையுமான  வசீகர இலைகளுடன் மேப்பிள் மரங்கள்  சாய்ந்திருக்கும் வழிபாட்டுத்தலங்களின் மதிற்சுவர்கள், வளைந்த மிகப்பழைய பைன்  சாய்ந்திருக்கும் நுழைவு வாயில், மாபெரும் புத்தர் சிலைகள் கணினித்திரையிலிருந்தே எடுத்து சாப்பிடுவிடலாம்போல உந்துதல் அளிக்கும் ஜப்பானிய உணவுகள் பச்சைப்பசேல் டோபியரி குன்றுகள் என பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் இன்னும் அணுக்கமாக ஜப்பானை பார்க்கமுடிந்தது

காகித அன்னங்களோ , கன்னத்தில் கையை ஊன்றிய புத்தரோ,   அன்பு மிளிரும் கண்களால் என்னை பார்த்தபடியிருக்கும் ஒரு நாயோ இன்றிரவு  என் கனவில் வருமாயிருக்கும்

அன்புடன்

லோகமாதேவி.

அன்புள்ள லோகமாதேவி

 

மூங்கில்குருத்து சாப்பிட்டேன். சூப்பில் போட்டிருப்பார்கள். நறுக் நறுக் என சுவையானது. இங்கே தாமரைத்தண்டை குழம்பு பொரியல் வைப்பார்கள். அதைப்போன்ற சுவை கொண்டது

 

நான் செல்லும்போது அங்கே வசந்தவிழா முடிந்துவிட்டது. ஆகவே ஜப்பானின் அந்த முகத்தை பார்க்கமுடியவில்லை

 

ஜெ

 

ஜப்பான் ஒரு கீற்றோவியயம் 16

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -14

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -13

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -8

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -5

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

 

முந்தைய கட்டுரைவெண்முரசு -இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைகற்காலத்து மழை -1