‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24

ஆர்ஷியின் அமைதி முதல் நாள் சகுனியை கொந்தளிக்கச் செய்தது. அன்று இரவு முழுக்க அவளிடம் அவர் மன்றாடினார். தன்னால் கெஞ்சமுடியும் என்றும் குழையமுடியும் என்றும் அன்று அறிந்தார். “நான் பிழை செய்திருக்கலாம். ஆனால் அது உன் மீதான பெருங்காதலால் என்று உணர்க! நான் விழைவதை அடையும் இடத்தில் இருப்பவன். இளவரசிகளை மணக்கும் வாய்ப்புள்ளவன். எந்தப் பெண்ணாலும் கவரப்படவில்லை. உன்னில் பித்தானேன் என்றால் அது இறைவிருப்பம் என்றே சொல்வேன். நீ ஒரு பெண். உன்மேல் கொண்ட இப்பெருவிழைவை மட்டுமாவது உன்னால் புரிந்துகொள்ள முடியும். இது உரிமைகொள்ளல் அல்ல. முற்றளித்தல், அடிபணிதல்.”

சொல்லச்சொல்ல அவருக்கு சொற்கள் பெருகின. அவள்மேல் தான் கொண்ட பித்தை, அவளுக்கு தன்னை முற்றளிப்பதை சொல்லிச்சொல்லி உளம் உருகி ஒரு தருணத்தில் விழிநீர் உகுக்கத் தொடங்கினார். அவளிடம் தான் கோரத் தொடங்கியது காதலை, கோரிக் கொண்டிருப்பது இரக்கத்தை என உணர்ந்ததும் திகைத்து சொல்லிழந்தார். மறுகணம் சீற்றம்கொண்டு அவளை ஓங்கி அறைந்தார். “என்ன நினைக்கிறாய் என்னை? உன்னை இக்கணமே வெட்டிப்போழ்ந்து வீசமுடியும் என்னால். உன் குடியையே பெயரும் எஞ்சாமல் ஆக்கமுடியும். உன்னை என் காலடியில் விழுந்து கதறச்செய்ய முடியும்” என்று கூவினார். மூச்சிரைக்க ஓய்ந்தபோது அது இன்னும் பெரிய முரண்பாடு எனத் தெரிந்தது. அன்பை பெறும்பொருட்டு சினத்தை பெருக்குகிறேன்.

அவளை நோக்கிக்கொண்டு நின்றார். அவர் பேசப்பேச அவள் வென்றுகொண்டே செல்வதுபோல் தெரிந்தது. அவள் பேசாமலிருந்தது அச்சத்தாலோ துயரத்தாலோ சீற்றத்தாலோ எழுந்த இயல்பான எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் அதுவே அவரை எதிர்ப்பதற்கான படைக்கலம் என கண்டுகொண்டுவிட்டாள். “நீ என்னை வெல்ல நினைக்கலாம். அதற்கு நீ ஏதும் செய்யவேண்டியதில்லை. நீ என்னை முற்றாக வென்ற பின்னரே இங்கே வந்திருக்கிறாய்” என்றார். மேலும் ஏதோ சொல்ல எண்ணி தவித்து பின்னர் அவளை அவ்வண்ணமே விட்டுவிட்டு வெளியேறினார். தன் அறைக்குச் சென்று மூக்கு வழிய மதுவருந்தினார். பின்னர் சூதுப்பலகையை விரித்து விடியும்வரை அமர்ந்திருந்தார்.

மீண்டும் மீண்டும் அந்த உச்சமும் வீழ்ச்சியும் நிகழ்ந்துகொண்டிருந்தது. அவள் மேலும் மேலும் இறுகிப்போய் பளிங்குச்சிலை என ஆனாள். மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர் கணிகரிடம் நிகழ்ந்ததை சொன்னார். அவர் வெடித்துச் சிரித்து “இன்னமும் நீங்கள் அவளுக்கு கணவன் என்றாகவில்லை அல்லவா?” என்றார். “ஆம்” என்று சகுனி சொன்னார். “அதுதான் அத்தனைக்கும் ஊற்று. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இந்த மோதல் அனைத்து உயிர்களிடமும் உள்ளதே. உங்களிடமிருப்பது செல்வம், அரசு, வீரம் என மானுடர் விழைவன அனைத்தும். களத்தில் அவள் நிகரான ஒன்றை வைத்தாகவேண்டும் அல்லவா? அவள் ஆணவத்தை வைக்கிறாள்… அதன் எடை இப்போது ஒரு படி விஞ்சியிருக்கிறது என்றே பொருள்.”

“எந்நிலையிலாயினும் காமத்தில் பெண் கீழிறங்குகிறாள். அவள் உடல் ஆளப்படுகிறது. முற்றாக மாற்றப்படுகிறது. ஆகவேதான் காமம் அவள் ஆணவத்தை சீண்டுகிறது. அவள் ஆழம் சீற்றம்கொள்கிறது. ஆண் அடிபணிவதுவரை, துளியும் எஞ்சாமலாவது வரை வணங்கமாட்டேன் என அவளை நிமிரச்செய்கிறது. அதை ஆணும் அறிவான். ஆகவேதான் அடிபணிகிறான், எஞ்சாமல் அவள்முன் வைக்கிறான். அவளை முழுமையாக வெல்வதற்கான தொடக்கம் என அவன் அறிந்திருக்கிறான். முதல் தோல்வி அவனுக்கும் முழுத் தோல்வி தனக்கும் என அவளும் அறிந்திருக்கிறாள். ஆகவே அவனும் அவளும் இக்களத்தில் நின்று நிகராடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கணிகர் சொன்னார்.

“அவள் தருக்குகிறாள். அவளுடைய தருக்கை எதுவரை ஒப்புவது என்று அறியாமல் அவன் தடுமாறுகிறான். அவன் அலைபாயும்தோறும் அவள் நிலைகொள்கிறாள். உள்ளங்கள் கூர்முனைகொண்டு போரிட்டுக்கொள்கின்றன. வெல்லாது அடங்கமாட்டேன் என்கின்றன. உடல் இணையவே விழைகிறது. உடல் இணையும்தோறும் உள்ளத்தை அது மழுங்கச் செய்கிறது” என்றார் கணிகர். “அவள் உடலை வெல்க! அவள் உடலில் உங்கள் உடல் திகழத் தொடங்கட்டும். அவள் அதை முதலில் வெறுக்கலாம். இல்லையென்றே எண்ணத் தலைப்படலாம். ஆனால் அவள் அகம் அறியும் அவ்வுடல் உங்களுடையது என்று. இரவும்பகலும் துயிலிலும் விழிப்பிலும் உடல் அவளிடம் அதை சொல்லிக்கொண்டிருக்கும். ஆம், அது ஒன்றே வழி. நெடுங்காலமாக மூதாதையர் கையாண்ட வழி. இன்னும் எஞ்சும் வழி. ஏனென்றால் மானுடரும் எளிய விலங்குகளே என ஐயமறக் காட்டும் ஒரு செயலே காமம்.”

அதையே சகுனி எண்ணிக்கொண்டிருந்தார். முதலில் அது அவரை கசப்படையச் செய்தது. அவர் பிறிதொருவனாகும் பொருட்டே அவளை அணுகினார். அவள்முன் பிறனாக நின்றார். அக்களியாட்டை விழைந்தே அவள்முன் வளைந்தார். அதை இழந்து அவளை அடைவதைப்போல் பொருளற்றது பிறிதில்லை. எண்ணி எண்ணி சிறுமைகொண்டு அதை உள்ளத்திலிருந்தே ஒழிந்தார். ஆனால் ஒருநாள் அவளிடம் இரந்து, பின் இரங்கி விழிநீர் கசிந்து, பின் சினந்து, சீற்றம்கொண்டு கூவி, மீண்டும் தணிந்து, நற்சொல் உரைத்து, தன் தனிமையில் அமைந்து புலம்பி மீண்டும் அவளை நோக்கி அங்கே அந்த ஆழ்ந்த அமைதியே எஞ்சியிருப்பதைக் கண்டபோது எழுந்த கண்ணிலாத வெறியில் அவளைத் தாக்கி இழுத்து மஞ்சத்தில் தள்ளி அவளை புணர்ந்தார்.

அவள் உடல் கைக்குச் சிக்கியதுமே உணர்ந்தார், அவள் தன்னை அவருக்கு அளிக்கவேயில்லை என. பாவை என மஞ்சத்தில் கிடந்த அவளை நோக்கியபடி அமர்ந்திருந்தபின் எழுந்து சென்று தன் அறைக்குள் அமர்ந்து மதுக்குடுவையை எடுத்தார். “ஆம், அவள் தோல்வியுறும் இடம் அது. அவர்கள் எப்போதும் தன்னை இறுக்கிக் கொள்வார்கள். உடலில் இருந்து பிரித்துக்கொண்டு உள்ளே ஒடுங்கிக்கொள்வார்கள். ஆனால் ஆத்மா மீளமீள அறியும் ஒன்றுண்டு, உடலே அதன் வடிவம். உடலினூடாகவே அது இப்புவியை அறியமுடியும். உடலல்ல தான் என்றும் உடலின்றி தானில்லை என்றும் உணரும் இருநிலையே ஆத்மாவின் அழியா அலைக்கழிப்பு. உடலில் நிகழ்ந்தது ஆத்மாவில் நிலைகொள்ளும். ஐயமே தேவையில்லை, இப்புவியில் இன்றுவரை வாழ்ந்த அத்தனை பெண்களும் சென்றமையும் இடம் அதுவே.”

அப்போதே அது அவ்வாறல்ல என்று சகுனி உணர்ந்தார். அவ்வாறுதான் அனைத்துப் பெண்டிரும். ஆனால் ஆர்ஷி அவ்வாறானவள் அல்ல. அவள் தன் உடலை அவருக்கு மறுக்கவில்லை. ஒரு துளி எதிர்ப்பையும் ஒரு தசைகூட அவருக்குக் காட்டவில்லை. ஆனால் அவள் அதில் இல்லை என்பதையும் அவர் அறிந்தார். அவர் அணுகியதுமே அவள் விழிகளில் எழுந்த வெறிப்பைக் கண்டதும் அவருள் ஒன்று அனல்பட்டதுபோல் சுருங்கிக்கொள்ளும். மறுகணமே அரவெனச் சீறி எழும். அவளை அவர் விலங்கெனப் புணர்ந்தார், அவள் உடலை துன்புறுத்தினார். பின் உளமுருகி அழுதார். ஈராண்டுகளுக்குப் பின்னரும்கூட அவளிடம் அவர் இரங்கி தாழ்சொல் உரைத்தார். அவள் மிகமிக அப்பாலிருந்தாள்.

அவள் கருவுற்றபோது கணிகர் “இதுவே அவள் எல்லை” என்றார். “தெய்வங்கள் இதுவரைக்கும்தான் அவளை ஓடவிடும். அவளுக்குள் வளரும் கரு உங்கள் உயிர்த்துளி. ஆனால் அது அவள் உடலும்கூட. பெண்மேல் ஆண்கொள்ளும் அறுதியான வெற்றி அது. காந்தாரரே, அக்குழவி உங்கள் முகமும் உடலும் கொண்டதாயின் அவள் பணிந்தேயாகவேண்டும். தெய்வங்களை அவள் ஏய்க்க இயலாது.” சகுனி “அவள் இயல்பானவள் அல்ல. அவளிடமிருப்பது அவள் அன்னையின் அசுரக்குருதி. அசுரர்களிடமிருக்கும் ஆழ்ந்த அமைதியை காட்டுவிலங்குகளிடம் மட்டுமே காணமுடியும். நாம் அவர்களை அணுகலாம், அகத்தே கடக்கவே இயலாது” என்றார். “அவர்கள் தங்கள் மொழியையே சொல்லின்மைமேல் கட்டிவைத்திருக்கிறார்கள். சொல்கரக்கும் பெரிய விழிகள் அவர்களுக்கு.” ஆனால் கணிகர் “அவளுக்குள் கரு வளர்கையில் அவள் மாறுவதை காண்பீர்” என்றார்.

கருவுற்று வயிறு வளர்வதை அவள் அறிந்தாளா என்பதே ஐயமாக இருந்தது. தன்னை நோக்குகையில் மட்டுமல்ல அரண்மனையில் பிறரிடமும் அந்த வெற்றுவிழியையும் சொல்லின்மையையுமே அவள் அளிக்கிறாள் என்பதை அவர் கண்டார். மைந்தன் பிறந்தபோது செவிலியர் அவரிடம் வந்து சொன்னார்கள். பதறும் காலடிகளுடன் அவர் ஈற்றறை முகப்புக்குச் சென்றார். வயற்றாட்டி கொண்டுவந்து காட்டிய குழவி செந்நிறக் கனிபோலிருந்தது. வெள்ளிமணிக் கண்கள். “உங்கள் சிற்றுரு, காந்தாரரே” என்றாள் வயற்றாட்டி. சகுனி உளம்விம்மி விழிநீர் மல்கினார். “இப்புவியில் மைந்தர் வடிவிலேயே மானுடர் அழிவின்மை கொள்கிறார்கள்” என்றாள் முதிய மருத்துவச்சி. சகுனி தொண்டையை அடைத்த மூச்சை ஆற்றிக்கொண்டு “எவ்வண்ணம் இருக்கிறாள்?” என்றார். “நலமாக… நீங்கள் விழைந்தால் நோக்கலாம்” என்றாள்.

அவர் உள்ளே சென்று அவளை கண்டார். மஞ்சத்தில் உடல்வெளுத்து விழிமூடிப் படுத்திருந்தாள். முகம் மெழுகாலானது போலிருந்தது. இரு வாடிய மலரிதழ்கள் என விழிகள். அவர் அருகணைந்து அவள் கைகளை தொட்டபோது விழித்துக்கொண்டு அவரை நோக்கினாள். “நலமுற ஈன்றுவிட்டாய்” என்றார். அவள் விழிகள் ஒன்றும் சொல்லவில்லை. “இக்கணத்திலாவது ஒரு சொல் என்னிடம் பேசு… ஒருமுறையேனும் என்னை ஏற்றுக்கொள்” என்று அவர் சொன்னார். அந்த விழிகள் தெய்வங்களுக்குரிய இரக்கமின்மை கொண்டிருந்தன. “நான் இழைத்த தீங்கு என்ன? எளிய ஆண்கள் எப்போதும் இழைக்கும் பிழை அது. அரசர்கள் இயல்பாகச் செய்வது. அது நானே முன்னெடுத்ததும் அல்ல” என்று சகுனி சொன்னார். “உன்னிடம் நான் இரப்பது அது ஒன்றே… இப்புவியில் எவரிடமும் நான் இவ்வண்ணம் இழிந்தமைந்ததில்லை.”

அவள் கண்களை மூடிக்கொண்டாள். எவ்வுணர்ச்சியும் அதில் வெளிப்படவில்லை. அவர் அந்த முகத்தில் ஒரு தசையேனும் அசையக்கூடும் என எதிர்பார்த்து நோக்கி நின்றார். அப்போது ஒரு வசைச்சொல்லோ வெறுப்புச்சாயலோகூட போதும் என்று தோன்றியது. பின்னர் நீள்மூச்சுடன் மைந்தன் காலை ஒருமுறை தொட்டுவிட்டு திரும்பி நடந்தபோது அறைக்குள் நின்றிருந்த முதிய சேடியை பார்த்தார். அவள் அவரையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் மீண்டும் ஒருமுறை அவளை நோக்கிவிட்டு காலடிவைத்தபோதுதான் அவள் யார் என தெரிந்தது. “நீதானா?” என்றார். “ஆம், காந்தாரரே” என்று அவள் சொன்னாள். அவர் வெளியே சென்றபோது அவளும் உடன்வந்தாள்.

“வென்றுவிட்டாய், நீ எண்ணியது நிகழ்ந்தது” என்றார் சகுனி. “அதை எண்ணி பெருமிதம் கொள்ளும் அகவையை நெடுநாட்களுக்கு முன்னரே கடந்துவிட்டேன். இப்புவியிலுள்ள அனைவருக்காகவும் துயருறுகிறேன். அனைவரிடமும் கனிகிறேன்” என்று அவள் சொன்னாள். அவள் விழிகளை நோக்கியபோது அவர் உள்ளம் நெகிழ்ந்து விழிகள் நீர்கொண்டன. “உன் பெயர்கூட நினைவில் இல்லை. ஆனால் உன்னை நான் நினைக்காத நாளில்லை” என்றார். அவள்  “என் பெயரை நான் சொல்லவே இல்லை” என்றாள். “நான் நினைத்ததை நீ அறிவாயா? அன்னையிடம் சிறுமைந்தன் என உன்னை நோக்கி வந்துகொண்டே இருந்தேன்” என்றார். “ஆம், அறிவேன்” என்று அவள் சொன்னாள். “அனைவருமே அவ்வண்ணம் என்னிடம் வருகிறார்கள்.”

“சொல், இதற்கிணையான பிழை என நான் இயற்றியதுதான் என்ன?” என்றார் சகுனி. “ஆணவம் கொண்டேனா? ஆணவமில்லாத ஆண்மகன் உண்டா?” அவள் புன்னகைத்தபோது முதுமையில் பேரழகு எழமுடியும் என்பதை அவர் கண்டார். “ஆணவம் அல்ல” என்று அவள் சொன்னாள். “துலாவின் மறுபக்கம் இன்னொரு எடை இருந்தாகவேண்டும் என எண்ணுகையில்தான் நாம் புடவியை புரிந்துகொள்ளாதவர்களாக ஆகிறோம்.” சகுனி “வேறென்ன? நான் செய்யவேண்டியதுதான் என்ன?” என்றார். “இது இவ்வண்ணம் நிகழ்ந்தது என்றன்றி வேறெவ்வகையிலும் எண்ண வேண்டியதில்லை” என்று அவள் சொன்னாள். “இதன் துயரமும் ஒரு கொடையே என எண்ணுக! வேறெவ்வகை எண்ணத்திற்கும் எப்பொருளும் இல்லை.”

ஆர்ஷி அம்மைந்தனுக்கு முலையூட்டினாள். அவனை நெஞ்சோடணைத்து துயின்றாள். தோளிலும் மடியிலும் அமர்த்தி விளையாடினாள். அவனுக்கு மட்டுமே கேட்கும்படி சொல்லாடினாள். ஆனால் அவரிடம் அவ்வண்ணமே இருந்தாள். “அவள் மடியில் வளர்வது நீங்கள். அவளுக்குள்ளும் நீங்கள் வளர்வீர்கள்” என்றார் கணிகர். முதல்முறையாக சகுனி சீற்றத்துடன் எழுந்துகொண்டு “வாயை மூடு, அறிவிலி” என்றார். கணிகரின் வாய் திறந்தபடி நிற்க விழிகளில் திகைப்பு தெரிந்தது. “பெண்ணைப்பற்றி நீ அறிந்தது ஒன்றுமில்லை” என்றபின் சகுனி வெளியேறினார். அதன்பின் கணிகர் அவரிடம் அவளைப்பற்றி ஒருசொல்லும் பேசவில்லை.

அவள் மேலும் ஈராண்டு அரண்மனையில் இருந்தாள். முதல் மைந்தனுக்கு உலூகன் என பெயரிட்டபோது அணிகள் பூண்டு அவையமர்ந்தாள். அவனுக்கு முதல் அன்னம் ஊட்டப்பட்டபோது முகம் மலர்ந்து ஆலயத்தில் இருந்தாள். அவரைப் போலவே உலூகன் மெல்லிய சிறிய உடலும் செந்நிற முடியும் சிறிய குருதிக்கோடுபோல உதடுகளும் பளிங்குமணிக் கண்களும் கொண்டிருந்தான். அவன் எழுந்து நடந்தபோது அந்த நிலைகொள்ளா நடையிலேயே தன் நடையின் சாயல் இருப்பதாக சகுனி எண்ணினார். அவன் தனித்தமர்ந்து நெஞ்சில் எச்சில் வழிய நெடுநேரம் பாவைகளுடன் விளையாடினான். அவன் சூதாடுகிறான் என சேடியர் நகைத்தனர். அவள் அவனை நோக்கியபடி அமர்ந்திருப்பதை ஒருமுறை அவர் கண்டார். அவ்விழிகளில் இருந்தது அன்னையின் அன்பு என்பதை உணர்ந்தார். அவரைக் கண்டு விழிதூக்கியபோது அவள் விழிகள் எப்போதும் என ஒழிந்துகிடந்தன.

ஆர்ஷி மீண்டும் கருவுற்றாள். அக்கரு அவளில் தோன்றியபோதே அவள் இயல்புகளில் மாறுதல்கள் தெரியலாயின. அவள் உடல் கருமை கொண்டது. விழிகளுக்குக் கீழ் நிழல் பரவியது. உதடுகள் நீலம் பூத்தன. உடலின் எடை மிகுந்திருப்பதுபோல் தோன்றியது. நடை மாறுபட்டது. கைகளை வீசி கால்களை தூக்கி வைத்து வயிற்றை அசைத்தபடி அவள் நடக்கையில் பெண்ணுருவில் ஆண் எனத் தோன்றினாள். அவர் அப்போது அவளிடமிருந்து விலகிவிட்டிருந்தார். அஸ்தினபுரியின் நிகழ்வுகளும் படையெடுப்புகளும் அவரை முற்றாகவே அடித்துச்செல்ல அவ்வண்ணம் ஒருத்தி இருப்பதையே மறந்துவிட்டவர் போலிருந்தார். ஒருமுறை அவளை நேரில் கண்டபோது முதற்கணம் அடையாளம் கண்டுகொள்ளவே அவரால் இயலவில்லை.

அவளை நோக்கிய மருத்துவர் “அசுரக் கருவின் இலக்கணம் கொண்டிருக்கிறார்கள் அரசி” என்றார்கள். “அவர் குலத்தில் அசுரக்குருதி உண்டு. அது அவர்களில் திரண்டிருக்கிறது.” சகுனி “அவள் விழைந்திருக்கலாம்…” என்று மட்டும் சொன்னார். அவர் படையெடுப்பு ஒன்றிலிருந்து திரும்பி வந்தபோது மைந்தன் பிறந்து எட்டுநாட்களான செய்தியை அவரிடம் சொன்னார்கள். அவர் ஈற்றறைக்குச் சென்று மைந்தனை பார்த்தார். குழவி கரிய வண்ணத்தில், பெரிய தலை முழுக்க அடர்ந்த மயிருடன் வாயில் நான்கு பற்களுடன், விழித்த கருங்கண்களுடன் இருந்தது. இருமடங்கு பெரிய உடல்கொண்டிருந்தது. பிறந்த குழவிக்கு அத்தனை பெரிய புருவங்கள் இருக்கும் என அவர் அப்போதுதான் கண்டார். திகைப்புடன் பின்னடைந்தார். அவள் அவரை நிமிர்ந்து நோக்கி புன்னகைத்தாள்.

சகுனி அரைக்கணம்கூட அப்புன்னகையை நோக்கவில்லை. வெளியே விரைந்து மூச்சிரைக்க நின்றார். “என்ன இளவரசே?” என்று வினவியபடி அருகணைந்த மருத்துவச்சிகளை தவிர்த்து விரைந்து ஓடி தன் அறையை அடைந்தார். “மது கொண்டுவருக… பீதர் மது!” என ஆணையிட்டார். இரவும் பகலும் என மூன்று நாட்கள் குடித்துக்கொண்டே இருந்தார். உளம்மயங்கி விழுந்து துயின்று எழுந்து மீண்டும் குடித்தார். மூன்றாம் நாள் செவிலி வந்து மைந்தனை எடுத்துக்கொண்டு ஆர்ஷி அரண்மனையிலிருந்து அகன்றுவிட்டாள் என்று சொன்னதும் நிறைவைத்தான் அடைந்தார். ஓரிரு நாட்களில் முற்றாகவே அவளிடமிருந்து விடுபட்டார். அவருக்காக நாற்களம் கருக்களுடன் காத்திருந்தது.

உலூகனை காந்தார நாட்டுக்கு அனுப்பினார்கள். அதன் பின்னர் சுபலர் காந்தாரத்திலிருந்து சபரியையும் சுதமையையும் அவருக்கு மனைவியராக அனுப்பி வைத்தார். அவர்களிடம் அவர் மேலும் மைந்தரைப் பெற்றார். விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும் விந்தனும் உத்பவனும் பிறந்தனர். அவர்களும் காந்தார நாட்டுக்கே கொண்டுசெல்லப்பட்டனர். அஸ்தினபுரியில் அரசப்பொறுப்பு மிகுந்தபோது அவர் தன் அரசியரையும் காந்தாரத்திற்கே அனுப்பிவைத்தார். பிறகெப்போதும் அவர்களை அவர் எண்ணியதில்லை. காட்டுக்கு மீண்ட ஆர்ஷியை உளவறிந்து வரலாமா என ஒற்றர்கள் கோரியபோது தேவையில்லை என மறுத்தார். அச்செய்தியை தன்னிடம் எவரும் சொல்லவும் ஆகாது என ஆணையிட்டார்.

போர்எழுகை அறிவிக்கப்பட்டபோது காந்தாரத்திலிருந்து மைந்தர்கள் அஸ்தினபுரிக்கு வந்தனர். அவர் துரியோதனனிடம் மாடத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது ஏவலன் வந்து காந்தார இளவரசர்கள் வந்திருப்பதை அறிவித்தான். அவர் அவர்களை மேலே வர ஆணையிட்டார். ஏவலன் அறிவித்த பின் உள்ளே வந்து நின்றவனைக் கண்டு ஒருகணம் அவர் திகைத்தார். அவர் உருவமே இளமைகொண்டு நின்றதைப்போல் இருந்தான் உலூகன். துரியோதனன் வெடித்து நகைத்தபடி எழுந்து “மாதுலரின் தனியுருவம்! அதே தோற்றம்!” என்று சொல்லி உலூகனை அள்ளி தோளுடன் சேர்த்து அணைத்து முதுகில் அறைந்தான். துச்சாதனனிடம் “மாதுலரையே ஒருமையில் அழைத்து வசைபாடுவதற்கான வாய்ப்பு, இளையோனே” என்றான்.

துச்சாதனன் சிரிக்க கௌரவர் உடன் இணைந்துகொண்டார்கள். விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும் விந்தனும் உத்பவனும் உள்ளே வந்தனர். “மாதுலர் ஆடியில் பெருகிவிட்டாரா என்ன?” என்றான் துரியோதனன். “ஆடியில் பெருகுவதற்கான உரிமை நமக்கு மட்டும் உள்ளதல்ல” என்றான் சுபாகு. மைந்தர்களை கௌரவர்கள் அள்ளித் தழுவிக்கொண்டனர். துர்மதனும் துச்சலனும் சேர்ந்து விந்தனை தூக்கி வீச துச்சகனும் துர்மர்ஷணனும் சேர்ந்து பிடித்துக்கொண்டார்கள். “மது! யவன மது!” என்று துர்முகன் கூச்சலிட்டான். “அவர்கள் இளையோர்” என்று சுபாகு சொன்னான். “ஆம், ஆகவேதான் யவன மது… முதிர்ந்தவர்களுக்கெல்லாம் பீதர் மது” என்றான் துர்முகன். “இன்று இவர்பொருட்டு நாம் உண்போம். இவர்களுடன் உண்போம்! நம் மாதுலர் விழுந்து உடைந்து எட்டு துண்டுகளாகிவிட்டார்.” கௌரவர்கள் ஓசையெழுப்பி நகைத்தனர்.

சகுனி திகைத்துப்போயிருந்தார். அக்கணம் மகிழ்வுக்குரியதாகக்கூட தோன்றவில்லை. ஒருவகையான பதைப்பே உள்ளத்தை நிறைத்திருந்தது. தீயது எதையோ எதிர்நோக்குபவர்போல. உலூகன் அவரை குனிந்து வணங்கினான். சகுனி அவன் தலையை வெறுமனே தொட்டார். மைந்தர்கள் ஒவ்வொருவராக வணங்க ஒன்றே மீளமீள நிகழ்வதுபோலத் தோன்றியது. அவர் உள்ளம் தவித்துக்கொண்டே இருந்தது. “மகிழலாம், மாதுலரே. நீங்களொன்றும் காம ஒறுப்பு கொண்ட முனிவர் அல்ல. அவர்களை ஈன்றது பழியும் அல்ல” என்றான் துரியோதனன். அவர் உதடுகள் நெளிய பொய்ப்புன்னகை கோட்டினார். அன்று உணவுக்களியாட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை. “இன்று எனக்கு பணிகள் இருக்கின்றன. மைந்தருடன் நீங்கள் களியாடுங்கள்” என்றபடி தன் அரண்மனைக்கு திரும்பினார். கணிகரை சந்திக்கலாம் என எண்ணியே வந்தார். ஆனால் அவரை சந்திக்கத் தோன்றவில்லை.

தன் தனியறைக்குச் சென்று அடைத்துக்கொண்ட பின்னரே ஆறுதலை உணர்ந்தார். என்ன நிகழ்கிறது என தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். ஏன் அஞ்சுகிறேன்? மிகக் கொடியது ஒன்று உடனெழுந்து வந்துகொண்டிருப்பதுபோல். ஒன்றுமில்லை. வெறும் அச்சம். நான் உள்ளூர அச்சம்கொண்டவனே. அதை பிற எவரைவிடவும் நான் அறிவேன். ஒன்றுமில்லை. அன்று அவர் மஞ்சத்தில் படுத்துக்கொண்டு அறையின் இருளை நோக்கிக்கொண்டிருந்தார். கணிகரின் நினைவெழுந்தது. உடனே உள்ளம் உலுக்கிக்கொண்டது. அவர்களை அரண்மனைக்கு வரவழைக்கலாகாது என முடிவெடுத்தார். அவர்களை கணிகர் பார்க்கலாகாது. அவர்கள் கணிகரை அறியவேகூடாது.

மறுநாளே அவர் தன் மைந்தர்கள் அஸ்தினபுரியின் மறுபக்கச் சோலையில் இளைய கௌரவர்களுடன் தங்கவேண்டும் என்று ஆணையிட்டார். அதன்பின் அவர் அவர்களை பார்க்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என உசாவவும் இல்லை. அவர்கள் கௌரவ மைந்தர்களுடன் இணைந்து போர்பயில்கிறார்கள், விளையாடுகிறார்கள் என்று செய்தி வந்தது. அவருடைய உள்ளத்தை மீண்டும் அரசியல் முழுமையாக ஆட்கொண்டது. எப்போதேனும் அவர்களைப் பற்றி துரியோதனனோ துச்சாதனனோ பேசுகையில் அவர் அச்சொற்களை கேட்காதவர்போல் இருந்தார். ஒருசொல்லும் பேசப்படவில்லை என்றாலும் கணிகர் அவர் உள்ளத்தை அறிந்தார். அவர் மைந்தரைப் பற்றி எதுவுமே உசாவவில்லை.

பின்னர் ஒருநாள் அவனை அவர் அப்பால் நோக்கினார். அவனும் இளையோரும் புரவிகளில் சென்றுகொண்டிருந்தனர். அவனை நோக்கும்போதெல்லாம் ஏன் தன் உள்ளம் அதிர்வடைகிறது என அவர் வியந்தார். பொழுதில்லை என்னும் எண்ணம் உடனே உருவாகியது. பிறிதொருமுறை இவனை இவ்வண்ணம் நான் பார்க்கவியலாமல் ஆகக்கூடும். இன்று பேசாமல் விட்டவை என்றுமே சொல்கொள்ளாமலாகக்கூடும். ஏவலனை அனுப்பி அவனை வரவழைத்தார். “நீயும் இளையோரும் இனி என்னுடன் இருங்கள்” என்றார். அவன் மறுமொழியாக தலைவணங்கினான். அன்றே ஏவலரிடம் கணிகர் அரண்மனைக்கு வரவேண்டியதில்லை என்றும் தேவையென்றால் அமைச்சுநிலையில் அவரை தானே சந்திப்பதாகவும் ஆணையிட்டார்.

அதன்பின் மைந்தர்கள் அவருடைய அரண்மனையிலேயே இருந்தனர். அவர் அவர்களுடன் பொழுது செலவிட விழைந்தார். உரையாட எண்ணினார். ஆனால் அதற்கான சூழலே அமையவில்லை. ஆயினும் அரண்மனையில் அவ்வப்போது அவர்கள் கண்களில் ஊடாடுவதே அவருக்கு நிறைவளிப்பதாக இருந்தது. இரவில் துயில்கையில் ஒவ்வொருமுறையும் அவர்களின் நினைவெழுந்தது. அருகே அவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வது உள்ளத்தை மென்மையாக்கியது. அவர்களை எண்ணிக்கொண்டிருக்கையில் தன் முகம் புன்னகைப்பதை அவர் உதடுகளின் விரிவிலிருந்து உணர்வார்.

உலூகனின் அமைதியை உணர்ந்தபின் ஒருநாள் அவர் அவனிடம் “நீ உன் அன்னையை நினைவுறுகிறாயா?” என்றார். அவன் இல்லை என தலையசைத்தான். “நினைவிலெங்கும் அவள் முகம் இல்லையா?” என்றார். அவன் இல்லை என்று மீண்டும் தலையசைத்தான். “அறிவிலி, நீ நாவெடுத்தே எனக்கு மறுமொழி உரைக்கலாம்!” என்று சகுனி கூவினார். அவன் உறைந்த விழிகளுடன் நின்றான். அவர் மெல்ல தணிந்து “உன் அன்னையின் சொல்லின்மை உன்னில் கூடியிருக்கிறது…” என்றார். அவன் விழிகளில் மாற்றம் ஏதும் இருக்கவில்லை. “உன் உடல் என்னுடையது. அதற்குள் தன்னை நிரப்பி என்னிடம் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறாள் அவள்” என்றார் சகுனி. அவனுடைய வெற்றுவிழிகளை சிலகணங்கள் நோக்கிவிட்டு “செல்க!” என்றார். அவன் தலைவணங்கி வெளியே சென்றான்.

அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய அதே உடல். அதே அசைவுகள். ஆனால் அவன் அவர் அல்ல. ஒருகணம் அவன்மேல் எழுந்த வெறுப்பைக் கண்டு அவருடைய அகம் அஞ்சியது. உடனே அவன்மேல் பேரன்பு எழுந்து மூடிக்கொண்டது. அவனை அருகே அழைத்து நெஞ்சோடு தழுவிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. அவன் சென்று மறைந்தபின் அவன் காலடி பட்ட தரை என தன் நெஞ்சை உணர்ந்தார்.

முந்தைய கட்டுரைபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி
அடுத்த கட்டுரைஓஷோ – கடிதங்கள்