அவதூறுகள் ஏன்?

அன்புள்ள ஜெ,

நான் உங்கள் இணையதளத்துக்கு அடிக்கடி வந்தாலும் படித்த முதல் கதை ’வணங்கான்’ தான். அதுவும் என் நண்பர் கட்டாயப்படுத்திச் சொன்னதனால்தான் படித்தேன். என் வாழ்க்கையில் நான் படித்த மிகச்சிறந்த கதை அதுதான். அப்படியே என்னுடைய அப்பாவின் சொந்தக்கதை அது. என் அப்பா சின்னவயசில் கீரை சுமந்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்று விற்று கொஞ்சம் கொஞ்சமாக படித்து ஆசிரியர் ஆனவர். எங்கள் சமூகத்தின் நூறு வருடக்கால எழுச்சியை செறிவான கதையாக எழுதியது போல இருந்தது. அதிலும் யானைமேல் கருத்தான் மேலே எழும்பும் காட்சியை நான் கண்ணீருடன்தான் வாசித்தேன். என் மனைவியும் வாசித்தாள்.

நான் சிறுபத்திரிக்கைகளை வாசிப்பவன். ரொம்பநாட்களாகவே உங்களை தெரியும். நீங்கள் இந்துத்துவ, உயர்சாதி வெறி கொண்டவர் என்றுதான் நான் வாசித்திருக்கிறேன். சமீபத்திலே கூட யமுனா ராஜேந்திரன் என்பவர் உங்களைப்பற்றி இப்படி எழுதியிருக்கிறார். உயிர்மை பத்திரிக்கையிலே. ஆகவேதான் நான் உங்கள் கதைகளை வாசிக்கவில்லை. இந்தக்கதையை வாசித்தபோது ஆச்சரியம் ஏற்பட்டது. எங்கள் சாதியில் பிறந்த ஒருவர்கூட இந்த அளவுக்கு மன எழுச்சியுடன் எழுதிவிட முடியுமா? என்று தெரியவில்லை. கதையை எழுதிவிடலாம். அதிலே உள்ள அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பை உண்மையிலேயே உணராமல் எழுத முடியாது என்று எண்ணுகிறேன்

நான் உங்களைப்பற்றி நினைத்தது தப்பு என்று நினைக்கிறேன். ஆனால் ஏன் உங்களைப்பற்றி இப்படிச் சொல்கிறார்கள்?

செல்வராஜ்

*

அன்புள்ள செல்வராஜ்

கீழே உள்ள இணைப்பை படியுங்கள். என் சென்ற மூன்று கதைகளைப்பற்றி ஒருவர் எழுதியது http://naatkurippugal.wordpress.com/2011/02/11/criticismonjeyamohnshortstories/
ஒரே சொல்லில் mean என்றுதான் இந்த மனதைப்பற்றிச் சொல்லமுடியும். எந்த மானுட உணர்ச்சிகளையும் உச்சங்களையும் உணர முடியாத, சதிகளை தவிர வேறெதையுமே சிந்திக்க முடியாத, ஒருவகையில் பரிதாபத்திற்குரிய மனம். இத்தகைய மனங்கள் எந்த ஒரு கருத்தியல் சூழலிலும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால் தமிழில் இந்தக்குரல்கள் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கின்றன. எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், யமுனா ராஜேந்திரன் எல்லாமே இந்தவகையானவர்கள்.

யமுனா ராஜேந்திரன் என்னைப்பற்றிச் சொன்னதை விடுங்கள். அவர் மற்ற எந்த எழுத்தாளர்களைப்பற்றி சாதகமாக ஏதாவது சொல்லியிருக்கிறார்? எஸ்.ராமகிருஷ்ணனைப்பற்றி அவர் எழுதியதை வாசித்திருக்கிறீர்களா? அ.மார்க்ஸ் எந்த ஒரு நல்ல எழுத்தாளரைப்பற்றியாவது நல்லவிதமாக ஏதாவது சொல்லி கேட்டிருக்கிறீர்களா?

ராஜேந்திரனினின் அந்த உளறலை வாசித்துப்பார்க்கும் கௌரவத்தைக்கூட அவருக்கு நான் அளிக்கப்போவதில்லை. இவற்றுக்கு அப்பால் நான் எப்போதோ சென்றுவிட்டேன்.

ஆனால் அ.மார்க்ஸ் கடந்த பெப்ரவரி நான்காம்தேதி மதுரையில் நாஞ்சில்நாடனுக்கு அளிக்கப்பட்ட பாராட்டுவிழாவில் அவரை ஒரு சாதிவெறியர் என முத்திரைகுத்தி இழிவுசெய்து பேசியதுதான் என் நெஞ்சை அறுக்கிறது. நாஞ்சில்நாடன் அந்த இழிவுபடுத்தலால் எத்தனை தூரம் புண்பட்டு துயருற்றார் என்று பார்த்ததுதான் காரணம்.

இதே அ.மார்க்ஸ் இருபது வருடம் முன்பு கி.ராஜநாராயணனின் அறுபதாமாண்டு நிறைவு விழாவில் அவரை இழிவுபடுத்திப் பேசினார். அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனும், மௌனியும் சாதிவெறியர்கள் என இவரே எழுதியிருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என இவர்களால் வசைபாடப்பட்டவர்கள் அனைவருமே தமிழின் இலக்கியச் சாதனையாளர்கள்.

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நான் இலக்கியவாதிகளைச் சந்தித்து வருகிறேன். அவர்களில் பலரை நேரில் நன்றாக அறிவேன். அடிப்படையில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் ஆதாரமான அறவுணர்வு ஒன்றில் இருந்துதான் இலக்கிய ஆக்கமே எழமுடியும். அதிலிருந்து எழும் சீற்றமோ கருணையோ சிரிப்போ கசப்போதான் இலக்கியமாக ஆகிறது. அந்த அறவுணர்ச்சி இல்லாவிட்டால் ஒரு நல்ல கதைகூட எழுதமுடியாது.

அந்த அறவுணர்ச்சி எப்போதுமே மானுடம் சார்ந்தது. சாதிமத இனமொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டது. குறைந்தது, அந்தக்கதையை படைக்கும் தருணத்திலாவது அந்த எழுத்தாளன் மானுடன் மட்டுமாக நிற்கிறான். நான் படைப்பதனால் என்பெயர் இறைவன் என அவன் நினைப்பதற்குக் காரணம் அதுவே.

அந்த உச்சத்தையே நீங்கள் அவனுடைய கதை வழியாகச் சென்றடைகிறீர்கள், உங்களுக்கு உங்கள் அடையாளங்களை துறந்து மேலெழும் ஆற்றல் இருந்தால். அந்தக்கணத்தில் உங்கள் கூடுகளில் இருந்து வெளிவருகிறீர்கள், மானுடமளாவிய ஒரு பார்வையை அடைகிறீர்கள். . ஆகவேதான் அதை நல்ல இலக்கியம் என்று சொல்கிறீர்கள்.

வன்மத்தில் இருந்தும் வெறுப்பில் இருந்தும் காழ்ப்பில் இருந்தும் ஒரு கலைப்படைப்பு உருவாவதில்லை என்று நினைவுகொள்ளுங்கள். கலைப்படைப்பு ஒரு சதிவேலை அல்ல. அது ஒரு மனம் கொள்ளும் உச்சநிலையின் மொழி வடிவம்.

இலக்கியவாதிகளுக்கு அவர்களின் சுய அனுபவம் சார்ந்து வேறுபட்ட பார்வைக்கோணங்கள் இருக்கலாம். அவர்கள் வாழும் வரலாற்றுச்சூழல் சார்ந்து அவர்களின் அணுகுமுறைகள் மாறலாம். கிளர்ச்சிக்கு அறைகூவும் படைப்பாளிகள் உண்டு. அமைதியான சமரசத்தை முன்வைப்பவர்கள் உண்டு. மானுட மேன்மைகளைச் சொல்பவர்கள் உண்டு. மானுடக்கீழ்மைகளைச் சொல்பவர்கள் உண்டு. புறவாழ்க்கையை கூர்ந்து கவனிப்பவர்கள் உண்டு. அகத்துக்குள் மட்டும் செல்பவர்கள் உண்டு

எழுத்தாளர்களில் தவறான அரசியல் முடிவை எடுத்தவர்கள் உண்டு. தவறான மனிதர்களை நம்பியவர்கள் உண்டு. காலகட்டத்துக்கு ஒவ்வாதவற்றைச் சொன்னவர்கள் உண்டு. குழம்பியவர்கள் தத்தளித்தவர்கள் கடைசிவரை தெளிவடையாதவர்கள் உண்டு.

சிலர் சில கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளலாம். சிலர் ஐயம் கொள்ளலாம். சில அரசியலியக்கங்களை சிலர் ஆதரிக்கலாம், சிலர் விலகி நிற்கலாம். மானுட விடுதலைக்கு வழி என ஒவ்வொருவரும் ஒரு வழியை முன்வைக்கலாம்

ஆனால் அவர்கள் கலைஞர்கள் என்றால், கலைப்படைப்பை உருவாக்கியவர்கள் என்றால் அறவுணர்ச்சியால் ஆனவர்களாகவே இருப்பார்கள். தங்கள் சுயநலத்தாலோ தங்கள் அடையாளங்களாலோ அல்ல, தங்களுக்குள் உள்ள மனிதனை முன்வைத்தே சிந்திப்பார்கள். ஆகவே மனிதாபிமானி அல்லாத எழுத்தாளன் இல்லை. சமத்துவம் நோக்கி மனம் விரியாத, எளியவர்கள் மேலெழக்கண்டு கூத்தாடாத, அநீதி கண்டு பொங்காத எழுத்தாளன் இல்லை.

அப்படியானால் ஏன் இந்த வசைகள் இவர்கள் மேல்? நம் சூழலில் ஒருவர்கூட காழ்ப்பை கொட்டும் அ.மார்க்ஸை அல்லது எஸ்.வி.ராஜதுரையை விமர்சிப்பதில்லை. ஆனால் அத்தனை இலக்கியச் சாதனையாளர்களும் ஒவ்வொருநாளும் வசைகேட்டு கூசிக்குறுகி புண்பட்டு வாழவேண்டியிருக்கிறது இங்கே.

இந்த வசைபாடும் ஆசாமிகள்தான் ருஷ்யாவில் எழுத்தாளர்களை வதைமுகாம்களில் அடைத்தார்கள். சீனாவிலும் கம்போடியாவிலும் கொன்று குவித்தார்கள். வரலாறு முழுக்க எழுத்தாளன் மேல் செலுத்தப்பட்டுள்ள வன்முறைக்கு அளவே இல்லை. அதிகாரவெறி கொண்ட, காழ்ப்பை அதற்கான ஆயுதமாகக் கொண்ட அரசியல்மனிதர்களே என்றும் இலக்கிவாதிக்கு எதிரிகள்.

நம் இலக்கிய இதழ்கள் ஒரு கதைக்கு ஐந்து பக்கம் ஒதுக்கத் தயங்குவார்கள். ஓர் இலக்கியவாதியை வசைபாடி சிறுமைப்படுத்த இருபது பக்கம் தாராளமாக கொடுப்பார்கள். ஏனென்றால் அதை ரசித்து வாசிக்க ஒரு பெரும் கும்பல் உண்டு என அவர்களுக்கு தெரியும்.

இந்த வசைகளை எழுதும் இவர்கள் யார்? வாழ்நாளில் ஒரு நல்ல கதையை படித்து உணர்ந்தமைக்கான தடையங்கள் இவர்களின் எழுத்தில் உண்டா? சொந்த வாழ்க்கையில் இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஓர் இலக்கியவாதி அவனுடைய கலைக்காக செய்யும் தியாகம் பற்றி இவர்கள் ஏதேனும் அறிவார்களா?

சரி, இவர்கள் என்ன சிந்தனை செய்திருக்கிறார்கள்? ஏதேதோ கொள்கைகளைச் சொல்கிறார்களே அதற்காக எதையாவது இழந்திருக்கிறார்களா? வாசகனுக்கு எதையாவது கற்பிக்கக்கூடிய, அவனுடைய அறவுணர்ச்சியை, உரிமையுணர்ச்சியை உள்ளிருந்து கனலச்செய்யக்கூடிய ஒரே ஒரு பத்தியையாவது எழுத இவர்களால் முடியுமா?

அதற்கான பதில் ஏற்கனவே சொன்னதுதான். காழ்ப்பும் வன்மமும் ஒருபோதும் கலையையும் சிந்தனையையும் உருவாக்காது.

இந்த இணையதளத்திலேயே தமிழின் எத்தனை முக்கியமான ஆராய்ச்சியாளர்களை நான் அறிமுகம் செய்திருக்கிறேன் என்று பாருங்கள். பல்லாண்டுக்கால கடும் உழைப்பின் விளைவான சாதனைகள் அவை. அந்த அறிஞர்களுக்கு இல்லாத முக்கியத்துவம் இந்த வசைபாடிகளுக்கு எப்படி நம்மால் அளிக்கப்படுகிறது?

பிரச்சினை நம்முடையது. ஒன்று இந்த வசையில் நாமும் பங்கு கொள்கிறோம். எந்த எழுத்தாளர்களை யார் வசைபாடினாலும் சேர்ந்துகொள்ள நம்மில் ஒரு பெரும் கும்பல் தயாராக காத்திருக்கிறது

நான் என் மீதான வசைகளுக்கு கோட்பாட்டு, அரசியல் காரணங்கள் இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் சில வருடங்கள் முன்னால் எஸ்.ராமகிருஷ்ணனை வசைபாட ஒரு உகந்த தருணம் வந்தபோது இதே கும்பல் அவரையும் யுவன் சந்திரசேகரையும் என்னைவசைபாடுவதைவிட பலமடங்கு கீழிறங்கி வசைபாடியதை கண்டேன். அந்த தருணத்தை அவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை அவதானித்தேன்.

இவர்களுக்கு எழுத்தாளனின் ஆளுமையே அச்சத்தையும் கசப்பையும் கொடுக்கிறது. அவனுடைய சுதந்திரம், அவனுடைய கலை , அவனுடைய நிமிர்வு, அவன் தன் வாசகர்களிடம் உருவாக்கும் செல்வாக்கு இவர்களை வயிறெரியச் செய்கிறது. ஸ்டாலினிஸ்டுகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் போல்பாட்டிஸ்டுகளுக்கும் வந்த அதே எரிச்சல் அது.

இவர்களின் ஆளுமையே காழ்ப்பினால் ஆனது. அ.மார்க்ஸ் பற்றி எண்ணும்போது நிறைய நாட்கள் பரிதாபத்தால் மனம் உருகியிருக்கிறேன். வெறுப்பும் காழ்ப்பும் அன்றி எந்த விதமான நேர்நிலை உணர்வும் இல்லாத ஒரு மனம் வாழ்நாளில் சோறு குடி போகம் தவிர உண்மையான இன்பம் என எதையாவ்து அறிந்திருக்குமா?

இந்தக் காழ்ப்பைக் கொட்டுவதற்கு இவர்கள் தேர்வுசெய்துகொள்ளும் ஒரு வழிமுறையே கோட்பாடு. சமகாலத்தில் எது முற்போக்கு என கருதப்படுகிறதோ அதைப் பற்றிக்கொள்கிறார்கள். அந்த தரப்பில் தர்க்கபூர்வமான ஒருமையோ முழுமையோ தேடுவதுகூட இல்லை. நான் முற்போக்கு என்று சொல்லிக்கொண்டால் பிற அனைவரையும் பிற்போக்கு என்று வசை பாடும் உரிமை கிடைத்துவிடுகிறது. தன் சொந்த வாழ்க்கையின் கீழ்மைகள், சாதிவெறி, மதவெறி அனைத்தையும் ஒளித்துக்கொள்ள முடிகிறது

நான் அ.மார்க்ஸை ஒரு காலகட்டத்தில் கூர்ந்து கவனித்தவன். இந்த வகை ஆட்களுக்கு அவர் எனக்கு ஒரு உதாரணம். அப்பட்டமான சாதி, மத வெறிக்கு அப்பால் போகாத குறுகிப்போன ஆளுமை. ஆனால் அவர் நம்முடைய சூழலில் முற்போக்காளராக அறியப்படுகிறார். ஏனென்றால் அவர் பிறரை தாக்குகிறார். அந்த தாக்குதல் மூலம் தன்னை பாதுகாத்துக்கொள்கிறார். அவரது புனிதபணியை இன்று யமுனா ராஜேந்திரன் செய்கிறார். இன்னும் கிளம்பி வருவார்கள். ஏனென்றால் இது மனக்கீழ்மைகளுக்குரிய பாதை, ஆகவே மிக எளியது.

இவர்களின் பலங்கள் இரண்டு. சீரிய இலக்கியங்களை படிப்பதற்கான அடிப்படை மனநிலையே இல்லாமல் எதிர்மறை விஷயங்களில் மட்டுமே திளைக்கும் வாசகர்கள். அவர்களுக்கு வம்புகளும் வசைகளும் மட்டுமே தேவை. இந்த ஆசாமிகள் அதை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுள் படைப்பூக்கம் இல்லாமல் தன் இயலாமையை தானே உணர்ந்துகூசும் சில்லறை எழுத்தாளர்கள் பெரும்பங்கு.

இரண்டு, எதையுமே வாசிக்காமல் மேலோட்டமாக புரட்டிப்பார்த்து கருத்துக்களை மட்டும் உருவாக்கிக்கொண்டு அரட்டை அடிக்கும் வாசகர்கள். இவர்களில் ஏதேனும் ஒரு கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு விட்டதாக நினைத்துக்கொண்டு மேலே படிக்க வேண்டியதில்லை என்று எண்ணுபவர்களே அதிகம். நாஞ்சில்நாடன் சாதிவெறியர் என ஒருவர் மேடையில் சொல்லும்போது அந்த வாசகன் அவரது கதைகளை எடுத்து வாசிப்பதில்லை. ’யாம் உண்பேம்’ போன்ற ஒரு கதையை எழுத முடிந்த பெரும் கலைஞனின் அளவிட முடியாத கருணையை அவன் உணர்வதில்லை

இந்த இருவகை கும்பல்களை நம்பியே இவர்கள் எழுதுகிறார்கள். எழுத்தாளர்களை எழுத வைத்து விற்றாலும் காசு, அவர்களை வசைபாடி விற்றாலும் காசு என்று நினைக்கும் ஆசாமிகளால் இவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள்

இந்த இரு கும்பல்களில் ஒருவராக நீங்கள் இருக்கவேண்டுமா கூடாதா என முடிவுசெய்யவேண்டியவர் நீங்கள்தான். இந்த வசைகளை அவதூறுகளை வெல்ல ஒரே வழிதான், கொஞ்சம் திறந்த மனத்துடன் எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ந்து படியுங்கள். எவருமே படிக்க போவதில்லை என்ற எண்ணமே இவர்களை இப்படி எழுதச்செய்கிறது. வாசிப்பே இவர்களை எதிர்கொள்ளும் வழி

ஜெ

முந்தைய கட்டுரைவணங்கான், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைநான்காவது கொலை -கடிதம்