எழுத்தாளனும் சாமானியனும்

பிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை

கலை வாழ்வுக்காக – ஸ்ரீபதி பத்மநாபாவின் குடும்பத்திற்காக…

அன்புள்ள ஜெ

இசை எழுதிய கட்டுரையை வாசித்தேன். அதிலுள்ள நுட்பமான உள்ளக்குமுறலை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இங்கே எந்த எழுத்தாளருக்கும் பணமோ புகழோ சமூக அடையாளமோ கிடையாது. சொல்லப்போனால் சராசரி மனிதர்களுக்கு இருப்பதைவிட அவர்களுக்கான இடம் ஒரு படி குறைவுதான். ஆனால் இச்சமூகத்தில் பெரும்பகுதியினர் அவர்களை வெறுக்கிறார்கள். தேவை ஏற்படும்போதெல்லாம் ஏளனம் செய்கிறார்கள். எந்த ஒருவிஷயத்திற்கும் வசைபாடுகிறார்கள்.

இணையத்தில் எழுத்தாளர்கள் மீதான வசைகள் நிறைந்து கிடக்கின்றன. காரணம் கேட்டால் அவர்களின் ‘பிரபலம்’ தான் என்கிறார்கள். ஆனால் இங்கே எந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியும் இப்படி வெறுக்கப்படுவதில்லை, வசைபாடப்படுவதுமில்லை. இந்த மனநிலை ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு சின்னப்பிரச்சினை என்றால் உடனே ‘எழுத்தாளன் என்றால் என்ன கொம்பா?”என்று கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

நீங்கள் தாக்கப்பட்டபோது அப்படிக் கேட்ட பலரைக் கண்டேன். சரி, அதில் அரசியல் காழ்ப்புகளும் பொறாமைகளும் பெரிய இடம் வகிக்கின்றன என்று நினைத்தேன். உங்கள் வெற்றிதான் காரணம் என்று நினைத்தேன். ஆனால் ஸ்ரீபதி பத்மநாபாவுக்காக நிதி அனுப்புவதைப் பற்றிப் பேசியபோது பல நண்பர்கள் “நாட்டில் பல்லாயிரம் ஏழைகள் இருக்கிறார்கள். இவர் எழுத்தாளர் என்பதனால் என்ன தனிச்சிறப்பு?” என்றார்கள்.

இங்கே ஓர் கனடிய பல்கலையில் ஒரே ஒரு பேராசிரியர் அமர்ந்து ஆய்வுசெய்ய ஒன்பதுகோடி சேகரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு தமிழ்ச்சங்கம் பலகோடி நிதி செலவில் மாநாடு நடத்துகிறது. குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுச்சென்ற எழுத்தாளனுக்காக நிதி திரட்ட இன்னொரு எழுத்தாளர்தான் வரவேண்டியிருக்கிறது. பணம்கொடுப்பவர்களும் எழுத்தாளர்கள்தான். உச்சகட்ட வசூல் ஐந்துலட்சம் தாண்டவில்லை.

“எழுத்தாளன் என்றால் என்ன கொம்பா?” என்று கேட்பவர்கள் எந்த வகையான ஜனநாயக உணர்வுடனும் அதைக் கேட்கவில்லை. இலக்கியம், சிந்தனை,கலை ஆகியவற்றின் மீதான பாமரத்தனமான காழ்ப்பினாலும் அச்சத்தாலும்தான் அதைக் கேட்கின்றனர் என்று தெரிந்தது. உண்மையிலேயே பெரிய வருத்தமாக இருந்தது

எம்.பிரபு

 

அன்புள்ள பிரபு

சமீபத்திய நிகழ்வுகளில் நிறைய ஆர்வமூட்டும் மடிப்புகள். அதிலொன்று இந்நிகழ்வு. நண்பர் ஒருவர் விரிவாக இதை எழுதியிருந்தார்.

ஓர் எழுத்தாளர் நான் தாக்கப்பட்டதை நக்கலும் கேலியும் செய்து கொண்டாடி மகிழ்ந்த எல்லா சமூக ஊடகப் பதிவுகளுக்கும் ஹாஹா போட்டிருந்தார்.  ஒரு நண்பர்கூடுகையில் அவர் சொன்னார். “எழுத்தாளன் சாமானியனா இருக்கணும் தோழர். தன்னை எழுத்தாளனா அவன் காட்டிக்கக் கூடாது. எங்கியும் சாமானியனுக்கு இல்லாத சலுகைகளைக் கோரக்கூடாது. அப்டி காட்டிக்கிட்டா அது கேவலம்”

நண்பர் கேட்டார் “ஏழாண்டுகளுக்கு முன் உங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக ஜெயமோகனுக்கு கடிதம் எழுதி உதவிபெற்றீர்களே, அப்போது உங்களை எழுத்தாளர் என்று அறிமுகம் செய்தீர்களா, இல்லை சாமானியர் என்று சொல்லிக்கொண்டீர்களா?” எழுத்தாளர் கொந்தளித்துவிட்டார். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார். “நானும் அந்த உதவியில் இருந்தேன், நீங்கள் உண்மையாகவே கேட்கிறீர்களா இல்லை குடிப்பழக்கம் உண்டா என்று அவர்தான் என்னிடம் கேட்டுச் சொல்லச்சொன்னார்”

எழுத்தாளர் வசைபாடிவிட்டு சென்றார். மறுநாள் எழுத்தாளரின் நண்பர் போனில் அழைத்து ஜெயமோகன் இப்படி இன்னொருவரிடம் சொன்னதனால் எழுத்தாளர் கடுமையாகப் புண்பட்டுவிட்டதாகச் சொன்னார் “சரி புண்பட்டுவிட்டார் என்றால் அந்தப்பணத்தை ஜெயமோகனுக்கே திருப்பி அனுப்பி விடச்சொல்லுங்கள்” என்றார் நண்பர்.

நண்பர் எழுதிய கடிதத்திற்கு நான் பதில் எழுதினேன். இந்த உளநிலை மிக இயல்பானது. எவ்வகையிலும் அதிர்ச்சி அளிப்பதும் அல்ல. அந்த எழுத்தாளர் தன்னை சாமானியன் என நினைக்கவில்லை. அப்படி எவரேனும் சொன்னால் கொதிப்பார். ஆனால் சாமானியனாக தன்னை உணர்வதாகச் சொல்வார். அப்படிச் சொல்கிறார் என்பதை மற்றவர்கள் அடையாளம் கண்டு பாராட்டவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். அதோடு ஊரோடு ஒத்துப்போகும் உணர்வுகள். அது உளஆற்றல் அற்றவர்கள், தனித்தன்மை அற்றவர்கள் வழக்கமாகச் செய்வது. இதெல்லாம் சேர்ந்துதான் இலக்கியவாதி என்னும் ஆளுமை.என் அளவுகோல் இலக்கியம் மட்டுமே.

*

எழுத்தாளர்கள் சமூகத்தால் சிறப்புக் கவனம் கொள்ளத்தக்கவர்களா? அவர்களுக்காக சமூகம் சலுகை காட்டவேண்டுமா? அவர்கள் சாமானியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா?

எனக்கு இச்சமூகம் எந்த கௌரவத்தையும் அளிக்கவேண்டியதில்லை. என்னைப் பேணவேண்டியதில்லை. பொதுச்சமூகத்திடம் சலுகைகள் எதையும் நான் கோரவுமில்லை. ஆனால் கண்டிப்பாக எழுத்தாளர்கள் சமூகத்தால் சிறப்புக் கவனம் கொள்ளத்தக்கவர்கள்தான். அவர்களுக்காக சமூகம் சலுகை காட்டத்தான் வேண்டும். அவர்கள் சாமானியர்களிடமிருந்து வேறுபட்டவர்களேதான்.

ஆனால் அது பண்பாட்டு அக்கறைகொண்ட ஒரு சமூகத்திடம்,  மெய்யான அறிவுச்சூழல் கொண்ட சமூகத்திடம், இலக்கியத்தையும் கலையையும் அறிந்தவர்களால் வழிநடத்தப்படும் சமூகத்திடம் எதிர்பார்க்கப்படவேண்டிய ஒன்று. அந்நிலை நோக்கி நாம் செல்ல இன்னும் பல ஆண்டுக்காலம் ஆகும்.

ஏன் எழுத்தாளர்கள் தனியானவர்கள் ? ஏன் ஆதரிக்கப்படவேண்டியவர்கள்? இதை இலக்கிய வாசகர்கள், அறிவியக்கத்தை சற்றேனும் அறிந்தவர்களிடமே பேசமுடியும். ஆகவே இது அவர்களுக்காக மட்டும்.

அறிவியக்கச் செயல்பாடு எப்போதுமே உலகியலில் முதன்மையான பலவற்றை விட்டுக்கொடுத்தால் மட்டுமே இயற்றப்படக்கூடிய ஒன்று. ஒரு நல்ல நூலை எழுதுபவன் அவ்வுழைப்பில் நூறில் ஒருபகுதியைக் கொண்டு நூறுமடங்கு உலகியல் லாபங்களை அடைய முடியும். ஆனால் அவன் மெய்யான அறிவியக்கவாதி என்றால் அவனால் அதைச் செய்யமுடியாது. எவராலும் கண்டுகொள்ளப்படாவிட்டாலும் அவன் அந்த அறிவியக்கச் செயல்பாட்டையே தொடர்ந்து செய்வான். அதனால் அழிந்தாலும் அதுவன்றி வேறொன்றை நாடமாட்டான்.

மிக இளமையிலேயே இந்த இயல்பு அறிவியக்கச் செயல்பாட்டாளனிடம் கூடிவிடுவதை நாம் காண்கிறோம். பிறரைப்போல் அவன் உலகியலாளனாக இருப்பதில்லை. அதற்கான கல்வியை அவனால் பெற முடிவதில்லை. வேலைதேடிக்கொள்வதற்கான பயிற்சியை அடைய அவனுக்கு உளம்கூடுவதில்லை. வணிகம் செய்ய முடிவதில்லை. அறிவியக்கம் ஒன்றைத்தவிர எதுவுமே பொருட்டாகத் தெரிவதில்லை. அவ்வாறு முழுதாக தன்னை அளிக்காவிட்டால் அறிவியக்கவாதியாக அவன் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளவும் முடியாது.

பிற இளைஞர்கள் முயன்று கற்று உலகவாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் வயதில் அறிவியக்கவாதி தன் முழுவிசையையும் தன்னைக் கவர்ந்தவற்றைக் கற்கவே செலவிடுவான். வெவ்வேறு அலைகளால் அடித்துச் செல்லப்படுவான். ஊர்சுற்றுவான், அரசியல் இயக்கங்களில் ஈடுபடுவான், சேவைசெய்ய கிளம்புவான், காதல்களில் விழுந்து தடுமாறுவான்.   எங்கெங்கோ சென்று எதையெதையோ கற்று மெல்லமெல்ல தன்னை கண்டடைவான்

இந்தத் தியாகத்தைச் செய்பவர்களால் மட்டுமே அறிவியக்கம் வாழ்கிறது. அறிவியக்கவாதி மதிக்கப்படவேண்டும், ஆதரிக்கப்படவேண்டும் என்று கோரப்படுவது இந்தத் தியாகத்தின்பொருட்டு மட்டுமே. அவன் மதிக்கப்படவில்லை, ஆதரிக்கப்படவில்லை என்றால் இந்தத் தியாகம் சிறுமைப்படுத்தப்படுகிறது

ஒரு சமூகம் அறிவியக்கம் கொண்டிருப்பதற்காக அளிக்கப்படும் களப்பலிகள் இவர்கள். நேற்றைய போர்ச்சமூகத்தில் ஏன் வீரன் கொண்டாடப்பட்டான்? ஏன் வீரவழிபாடு இருந்தது? ஏனென்றால் அங்கே போற்றப்படுவது வீரன் அல்ல, வீரம் என்னும் விழுமியம். வீரர்கள் கொண்டாடப்பட்டால் மட்டுமே வீரம் விளையும். அடுத்த தலைமுறை வீரத்தை தலைக்கொள்ளும். வீரன் மதிக்கப்படாவிட்டால் வீரர்கள் உருவாக மாட்டார்கள்

இன்றைய சமூகம் அறிவார்ந்தது. அறிவே செல்வமும் அதிகாரமும் ஆகிறது.  ஆகவே அறிவு வழிபடப்படவேண்டும். அறிவுவழிபாடு கொண்ட சமூகங்களே வாழும், வெல்லும். அறிவியக்கவாதி மதிக்கப்படவில்லை என்றால், சமூகத்தின் முன்னுதாரணமாக அவன் இல்லை என்றால் அச்சமூகம் அறிவுத்தகுதியை மெல்லமெல்ல இழக்கும்.

தொழிலில், வணிகத்தில், அறிவியலில், அரசியலில் எல்லாம் அறிவு அதற்கான பொருளியல் ஆதரவைப் பெற்றுவிடுகிறது. நம் சமூகத்தில் பொருளியல் சமூக ஏற்பையும் பெற்றுத்தருகிறது. பண்பாடு, இலக்கியம், கலை சார்ந்த அறிவியக்கத்தில் பொருளீட்ட இயல்வதில்லை. ஆகவே இயல்பான சமூக ஏற்பு இருக்க இயலாது. அந்த அறிவியக்கச் செயல்பாட்டின் இடத்தை கொஞ்சமேனும் அறிந்தவர்களால்தான் அந்த ஏற்பு உருவாக்கப்பட்டாகவேண்டும்.

இதில் இலக்கியம் மிகமிக இக்கட்டான நிலையில் இருக்கிறது. பண்பாட்டு அறிவியக்கவாதி சில நிறுவனங்களைச் சார்ந்து செயல்பட முடியும். அவனுடைய செயல்பாட்டால் நன்மை அடையும் இயக்கங்களின் ஆதரவைப் பெறமுடியும். மரபுசார்ந்த பண்பாட்டை முன்வைக்கும் அறிவியக்கவாதி மரபுவாதிகளால் ஆதரவுபெற முடியும். இங்கே கட்சிசார்ந்த பண்பாடு அறிவியக்கவாதிகளும் மதம்சார்ந்த அறிவியக்கவாதிகளும் பலசமயம் பொருளும் சமூக ஏற்பும் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள்.

கலையில்கூட சில பாதுகாப்புகள் உள்ளன. மரபுக்கலைகளை பாதுகாக்க ஏராளமான அமைப்புகள் உள்ளன. அவை அக்கலைஞர்களையும் பேணுகின்றன. கலைக்கு கேளிக்கை என்னும் முகமும் உண்டு. ஆகவே அது தொழிலாக, வரும்படியாக, சமூக ஏற்பாக ஆகக்கூடும். கலையில் சமூகம் ஏற்காத புதுமைநாடிச் செல்லும் சிலர் மட்டுமே புறக்கணிப்பை அடைகிறார்கள்

இலக்கியம் ஒரே சமயம் பண்பாடுசார்ந்த அறிவியக்கமாகமும் கலையாகவும் நிலைகொள்கிறது. பண்பாடு சார்ந்த அதன் செயல்பாடு எப்போதுமே விமர்சனத்தன்மை கொண்டது. ஆகவே பெரும்பாலும் அனைத்து அமைப்புகளுக்கும் எதிராகவே அது இருக்கிறது. அமைப்புசார்ந்து இயங்கும்போதுகூட அவ்வமைப்புகளால் முழுமையாக ஏற்கப்படாமல் நிலைகொள்கிறது. அது தூய கலை அல்ல. அதன் விமர்சனத்தன்மையால் அது எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

விளைவாக இலக்கியவாதி இங்கே எந்தவகையான பொருளியல் ஆதரவும் அற்றவனாக இருக்கிறான். விளைவாக சமூக ஏற்பு அற்றவனாக இருக்கிறான். கூடவே அவன் வைக்கும் விமர்சனங்களால் எதிர்ப்பையும் வெறுப்பையும் பெற்றுக்கொள்கிறான். இதற்குமேல்தான் அவன் சாமானியன்தான், அவனுக்கு எந்த கௌரவமும் தேவையில்லை என்னும் குரல் எழுகிறது. அது அவனுடைய செயல்பாட்டின்மேல் காறி உமிழ்வது மட்டுமே.

ஒர் இலக்கியவதி மாணவனாக இருக்கையிலேயே ஒருவகையான தனிமையை அடைகிறான். தன் தேடலை அந்தரங்கமாக மேற்கொள்கிறான். தேடலின் நிலையின்மையும் கொந்தளிப்பும் கொண்டிருக்கிறான். பிற இளைஞர்களைப்போல கல்வியையும் வேலையையும் வென்றெடுப்பதில் நாட்டமற்றவனாக, கனவுஜீவியாக இருக்கிறான்.

அப்போது அவன் எதையுமே உருவாக்கியிருப்பதில்லை என்பதனால் அவனுடைய பிரச்சினை என்ன என்றே எவருக்கும் புரிவதில்லை. குடும்பம் அவனை நல்வழிப்படுத்த முயன்று பின்னர்  அவன் மேல் வன்முறையைச் செலுத்துகிறது. அறுதியாகஅவனை புறக்கணிக்கிறது. சுற்றம் அவனை கேலிசெய்து பின்னர் ஒதுக்கிவிடுகிறது. இங்கே அவனுக்கு ஆதரவளிக்க எந்த அமைப்பும் இல்லை. பின்னர் அவன் தன்னை எழுத்தாளனாகக் கண்டடைந்து படைப்புக்களை அளிக்கத் தொடங்கும்போது இயல்பாகவே அவன் ஒரு தோல்வியுற்ற மனிதனாகவே இருக்கிறான். பிழைக்கத்தெரியாதவனாக கருதப்படுகிறான்.

இந்த அல்லல்கள் நடுவே சிறிய வேலைகளில் தொற்றிக்கொள்பவர்கள் தப்பிப்பார்கள். அங்கும்கூட அவர்கள் மேலிருந்தும் சுற்றிலுமிருந்தும் தொடர்ந்து இடிவாங்குபவர்களாக, பொருந்தாதவர்களாகவே இருப்பார்கள். வணிகம் போன்றவற்றில் சிக்கியவர்கள் சீரழிவார்கள். வணிகமுகவர்களாக ஆகி நாள்தோறும் சிறுமைப்படும் இலக்கியவாதிகளை நான் கண்டிருக்கிறேன்

ஆகவேதான் என்னைக் காணவரும் ஒவ்வொரு இளைஞரிடமும் உலகியல் கனவுகள் வேண்டாம், ஆனால் ஒரு குறைந்தபட்ச உலகியல் உறுதியையாவது உருவாக்கிக்கொள்ளுங்கள் என்கிறேன். இந்தச்சமூகம் உங்களை கைவிட்டுவிடும் என்கிறேன். சிலநாட்களுக்கு முன் ஒரு கவிஞரிடம் கிட்டத்தட்ட மன்றாடினேன். அவர் முகம் நான் சொல்வதை ஏற்கவில்லை என்பதை காட்டியது. முப்பதாண்டுகளுக்கு முன் வேலையை விட்டுவிடப்போகிறேன் என்றபோது என்னிடம் அசோகமித்திரன் அப்படித்தான் மன்றாடினார். நான் வேலையை விடவில்லை. ஏனென்றால் என் வேலை சவாலே இல்லாததாக இருந்தது

இலக்கியவாதியின் தெரிவுகளே வேறு. அவன் வாழும் உலகம் அவனால் கனவிலிருந்து உருவாக்கப்பட்டது. அது மட்டுமே அவனுக்கு ஆர்வமூட்டுகிறது. பிற எல்லாமே சலிப்பூட்டுகின்றன. என் நினைவறிந்த நாள் முதல் நான் எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருக்காத பொழுதெல்லாம் பயணத்தில் இருக்கிறேன். அன்றாடத்தின் அலுப்பூட்டும் சுழற்சியில் பெரும்பாலும் சிக்கியதே இல்லை. அரசுவேலையில் இருந்த காலத்தில் ஒர் ஆண்டில் சரசரியாக மூன்றுமாதம் சம்பளமில்லா விடுப்பு எடுப்பேன். அதாவது கிட்டத்தட்ட ஐந்து மாதம் விடுப்பிலேயே இருப்பேன்.

என் மனைவியும் வேலைபார்த்தமையால், என் புறச்செலவுகள் மிகமிகக் குறைவு என்பதனால் நான் தாக்குப்பிடிக்க முடிந்தது. அனைத்திற்கும் மேலாக மலையாள மனோரமா இதழ் என் பொருளியல் இக்கட்டுகள் அனைத்திலும் உடனிருந்தமையால்  நான் அல்லல் உறவில்லை. இந்த ‘ஆடம்பரம்’ நான் மலையாளி, மலையாளத்தில் எழுதுகிறேன் என்பதனால் மட்டுமே அமைந்தது.என் தமையன் வாழ்க்கையின் அனைத்துச் சிக்கல்களுக்கும் தந்தைபோல் துணை இருந்தது என் நல்லூழ். இது மிக அரிதாகவே தமிழ் எழுத்தாளனுக்கு அமைகிறது .அந்த பலத்தில் நின்றபடித்தான் தமிழ்ச்சமூகத்திடம் நீங்கள் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை, நான் உங்களுக்கு தரவந்தவன் என்று சொல்கிறேன்.

ஆனால் தமிழ் இலக்கியவாதிகளின் நிலை வேறு. இலக்கியவாதியின் உலகியல்மாறுபாடு காரணமாக, உள்ளொதுங்கிய இயல்பு காரணமாக அவன் உறவுகளில் சிக்கல்கொண்டவனாக இருக்க வாய்ப்பு மிகுதி. உற்றவர்களிடம் நல்லுறவை பேணும் இலக்கியவாதிகூட சாதிசனம் சூழ இருக்க வாய்ப்பே இல்லை

சாதி, குடும்பம், கட்சி , சங்கங்கள் என எந்த அமைப்புக்கும் அவன் முழுமையாக கட்டுப்பட்டவனாக இருப்பதில்லை. அவனுடைய அகத்தனிமை அதற்கு ஒத்துழைக்காது. அவனால் அதைச்செய்ய முடியாது, செய்தால் எழுத முடியாது

இத்தனைக்கும் அப்பால் அவனுடைய அகக்கொந்தளிப்புகள் பல. எழுத்தாளன் என்பவன் இயல்பிலேயே சில நுட்பமான நரம்புச்சிக்கல்கள் கொண்டவன்தான். இயல்பான உலகியல்வாதி அல்ல அவன். ஒரு படைப்பூக்கம் கொண்ட கோணலே அவனை இலக்கியவாதி ஆக்குகிறது. அது உருவாக்கும் உளச்சிக்கல்கள் ஏராளம். அதோடு எழுதுவதே கூட அதன் ஆசிரியனை உணர்வுபூர்வமாக உள்ளே இழுத்து கொந்தளிப்பு கொண்டவனாக ஆக்குகிறது

எழுத்தாளர்கள் பலர் அந்த உணர்வலைகளில் இருந்து தப்புவதற்கான மாற்றுவழிகளைக் கண்டடைந்திருப்பார்கள். நான் ஓயாத பயணத்தை கண்டடைந்தேன். ஊழ்கத்தைக் கண்டடைந்தேன். சிலர் குடியைச் சென்றடையக்கூடும். சிலர் சில மாத்திரைகளைக்கூட. போதையால் இலக்கியத்தையே கைவிட நேர்வதும் உண்டு. அது தவிர்க்கப்படவேண்டியது என்பது என் எண்ணம். ஆனால் இலக்கியவாதியால் எளிதாக தவிர்க்கமுடியாது என்றும் நான் அறிவேன்.

ஆகவே எந்த சாமானியனுக்கும் இருக்கும் பாதுகாப்பும் ஆதரவும் கூட அற்றவனாகவே இங்கே எழுத்தாளன் இருக்கிறான். சமூகநிலையில் மிகக் கடைநிலையில் இருப்பவரை விட தனித்துவிடப்பட்டவனாகவே அவன் திகழ்கிறான் .அவனுக்காகப் பேச அமைப்புகள் இல்லை. அவனுக்கு தனக்காக செயல்படவும் தெரிவதில்லை. ஆகவே அவனுக்காக அறிவார்ந்த சமூகத்தின் ஆதரவு இருக்கவேண்டும்.

நம் சமூகம் அறிவுஎதிர்ப்புத் தன்மை கொண்டது. எனினும்கூட இப்பெரிய கட்டமைப்பில் ஒரு துளியினும் துளியேனும் இலக்கியவாதியை ஆதரிக்கலாம். ஓரிரு குரல்களேனும் அவனுக்காக எழலாம். அவனை சமூகவிரோதி என வசைபாடுபவர் நடுவே துணிந்து பேசும் நாக்கு ஓரிருவருக்கேனும் எழலாம்.

இவ்வளவு பிரச்சினைகளுடன் ஒருவன் இலக்கியவாதியாக இருக்கவேண்டுமா என்றால் இலக்கியம் தேவை என்றால் வேறுவழி இல்லை என்றே பொருள். சராசரிகளிடமிருந்து இலக்கியம் எழமுடியாது.

இலக்கியம் என்றால் நல்லுபதேசமோ நற்கருத்துக்களோ அல்ல. இலக்கியம் என்றால்  அரசியல்கருத்துக்கள் அல்ல. சமூகசீர்திருத்தம் அல்ல. இலக்கியம் என்றால் ஒரு சமூகம் தன்னைப்பற்றி தன்னிடமே ஆழமாக உரையாடிக்கொள்ளுதல். அதன் வழியாக தன்னைக் கண்டடைதல். நற்கருத்துக்கள், அரசியல் கருத்துக்கள், சமூகமாற்றம் எல்லாமே அந்த நுட்பமான உரையாடல் வழியாக பிற அறிவியக்கவாதிகள் உருவாக்கிக் கொள்பவை. இலக்கியம் இல்லாத சமூகத்தில் அறமும் அரசியலும் சமூகமாற்றமும் உறைந்துவிடும்

இலக்கியவாதி ஒரு சமூகத்தில் இருந்து மாதிரிக்காக எடுத்து ஹிப்னாடிஸத்திற்காக மேடையில் படுக்கவைக்கப்பட்டிருப்பவன். ஒரு கிராமத்தில் தெய்வம் வந்திறங்கும் ஒரே மானுடனான பூசாரி. அவன் ஒரே சமயம் ஒரு சராசரியும் தேர்ந்தெடுக்கப்பட்டவனும் ஆக இருக்கிறான்

ஒரு சமூகத்தின் மிகமிக நுட்பமான, மிக மென்மையான பகுதியிலேயே அந்த சமூகத்தின் பிரச்சினைகள் முழுதாக உணரப்படும். அந்த நொய்மையான பகுதிதான் இலக்கியவாதி எனப்படுபவன். நம் அண்ணாக்கில் தொங்கும் டான்ஸில்ஸ் போல. உடலுக்குள் நுழையும் பாக்டீரியா முதலில் அதைத்தான் தாக்குகிறது. ஆகவே எப்போதும் டான்ஸில்ஸ் நோயுற்றிருக்கிறது. ஆனால் அதனூடாக அது உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது

இலக்கிய எழுத்தாளன்  இலக்கியத்தின்பொருட்டு இழப்பவை மிகுதி. அடைபவை மிகக்குறைவு. ஆகவேதான் அவன் பேணப்படவேண்டும் என்கிறேன். அவர்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள், அது அவர்களின் இயல்பு. உங்கள் ஆதரவால் அவர்கள் உருவாவதில்லை. ஆனால் அவர்கள் அழிந்துபடக்க்கூடாது. அவர்கள் இடருறக்கூடாது. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என அவர்களிடம் சமூகத்தின் மிகமிகச்சிறிய பகுதியேனும் சொல்லவேண்டும்.

அதற்கு நிபந்தனை வைப்பதுபோல் கீழ்மை வேறில்லை. இலக்கியவாதி  உங்கள் நோக்கில் ‘நல்லவனாக’ இருக்கவேண்டும் என்கிறீர்கள் என்றால், உங்கள் அரசியல்கருத்தை அவனும் ஆதரிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உங்களைப்போல உலகியலாளனாக அவன் ஏன் இருக்கக்கூடாது என்கிறீர்கள் என்றால் நீங்கள் இலக்கியத்தையே நிராகரிக்கிறீர்கள்

நான் தாக்கப்பட்டபோது எழுதப்பட்டவற்றில் மட்டுமல்ல எனக்கு வந்த கடிதங்களிலேயே அறிவுரைகளும் வழிகாட்டல்களும்தான் மிகுதி. எனக்கு அது வியப்பளிக்கவில்லை. தமிழ்ச்சமூகம் எப்போதுமே எழுத்தாலர்களை ‘திருத்தி வழிநடத்துவதற்கு’த்தான் முயல்கிறது. குறிப்பாக அவனை படிக்காதவர்கள் அவனை ‘மனிதனாக்க’ முயன்றபடியே இருக்கிறார்கள். இந்த உச்சகட்ட வன்முறையை அனுபவித்தே இங்கே எழுதிக்கொண்டிருக்கமுடியும்.

இலக்கியவாதியை ஆதரிப்பது என்பது அவனுடைய ஆளுமையின் அனைத்து முகங்களுடனும் ஏற்றுக்கொள்வதுதான். அவனுடைய அனைத்துக் கருத்துமுரண்பாடுகளுடனும் ஏற்பதுதான். அவ்வாறு ஏற்பதற்குப் பெயர்தான் பண்பாட்டுநிலை. என் கருத்தை ஏற்கும் எழுத்தாளனையே ஏற்பேன், மற்றவர்களை வசைபாடுவேன் என்பதைவிட என் சாதிக்காரனையே ஏற்பேன் என்று சொல்பவன் நேர்மையானவன்.

இது  உலகமெங்கும் உள்ள பண்பட்ட சமூகங்கள் அனைத்திலும் உள்ள நடைமுறை. நம்மிடமும் அது இருந்தது. சங்ககாலம் முதல் ஓர் ஐம்பதாண்டுக்கு முன்னர் வரைக்கும் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றில் புலவனும் சாமானியனே என்று சொல்லும் கீழ்மைக்கு இடமிருந்ததா என்ன? அதை ஜனநாயகம் எனப் புரிந்துகொள்ளும் அறிவின்மை இருந்ததா என்ன?

’சான்றாண்மை;  என பத்து பாடல் எழுதியவன் நம் பண்பாட்டின் தலைஞானி.  “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” என அவன் சொன்ன சொல் இன்றும் நம் முன் உள்ளது. நன்று நாம் இழிந்துவிட்டோம். என்றேனும் மீண்டும் அந்த மூதாதையைச் சென்றடைவோம்

*

ஸ்ரீபதியின் வாழ்க்கையையே டுத்துக்கொள்வோம். ஓரளவு வசதியான பின்னணி கொண்டவர். ஆனால் படிப்பை முடிக்கவில்லை. கல்லூரிக் காலத்திலேயே இலக்கியப்ப்பித்து. தமிழ் மலையாள இலக்கியங்களை வாசித்து அலைந்தார். கல்லூரியில் படிக்கையில் தேர்வெழுதும் கட்டணத்துடன் திருவில்வாமலை சென்று வி.கே.என் ஐ சந்தித்ததாக ஒருமுறை சொன்னார். நான் சந்திக்கும்போது படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஒரு நவீன அச்சு வடிவமைப்பகம் நடத்த முற்பட்டிருந்தார். ஆனால் அந்த அச்சகத்திலிருந்து ஒரு நவீனச் சிற்றிதழ் கொண்டுவரவேண்டும் என்று கனவுகண்டார். உயர்தர அச்சில் ஓவியத்திற்கும் இடமுள்ள ஓர் இதழ்.

அப்படி ஓர் இதழுக்கான பொருளியல் அடிப்படையை தமிழகம் அளிக்காது, ஆயிரம் பிரதிகள்கூட அச்சிட முடியாது என்று நான் சொன்னேன். சிற்றிதழில் முதலீடு செய்யும் பணம் இழப்பு என தெரிந்தே செய்யவேண்டும் என்றேன். நானும் நண்பர்களுடன் இணைந்து சொல்புதிது என்னும் சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் அவருடைய ஊக்கத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. அபாரமான அச்சுடன் ஆரண்யம் வெளிவந்தது. ஆரண்யம் பதிப்பகம் ஆக மாறியது. மொத்தப்பணமும் இழப்பு. கூடவே அச்சுத்தொழில் நலிவு.

பாலக்காட்டு மலையாள சோதிட மாந்த்ரீகப் பின்னணியில் ஒரு நாவல் எழுதுவதாக அடுத்தமுறை பார்த்தபோது சொன்னார். அதற்காக களர்கோடு மனை உள்ளிட்ட நம்பூதிரி இல்லங்களுக்குச் சென்றார் [பிறப்பால் ஸ்ரீபதி நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்தவர்] அது சார்ந்த என்னென்னவோ படித்தார். நாவலை எழுதவேயில்லை. நடுவே கவிதைகள் எழுதினார். ’இருத்தலின் துயர் இல்லாத கவிதைகளை எழுதவேண்டும்’ என எனக்கு ஒரு கடிதம் எழுதியதை நினைவுகூர்கிறேன். ஒருவகையில் இன்று இசை போன்றவர்கள் எழுதும் கவிதைகளின் முன்வடிவங்கள் அவை. ஆனால் அவற்றை முழுவீச்சில் எழுத அவரால் இயலவில்லை.  அதன்பின் மலையாளத்திலிருந்து வி.கே.என், பட்டத்துவிளை கருணாகரன் ஆகியோரை மொழியாக்கம் செய்யவேண்டும் என முயன்றார். விகேஎன் எழுதிய பையன்கதைகளை மொழியாக்கம் செய்தார்.

இக்காலகட்டத்தில் பொருளியல்வீழ்ச்சி, நம்பிக்கைக்குலைவு, குடிப்பழக்கம். பின்னர் மீண்டு வந்து எழுச்சியுடன் எழுதத் தொடங்கினார். உடல்நிலைக் கோளாறுகள் மீதுற மறைந்தார். குடும்பம் ஆதரிப்பாரின்றி நின்றுகொண்டிருக்கிறது.. அவர்கள் துயருற்றவர்கள். ஸ்ரீபதி அவர்களுக்கு உரியவற்றைச்ச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் இருந்தமையால்தான் ஸ்ரீபதியால் சற்றேனும் மீளமுடிந்தது.

ஸ்ரீபதி இலக்கியத்தில் வெற்றிபெறவில்லை. அவர் எண்ணியதை எழுதவில்லை. ஆனால் எல்லா கலைஞர்களும் இவ்வாறுதான் இருப்பார்கள். பெருங்கனவுகள், அலைபாய்தல், உலகியல்வீழ்ச்சி, சோர்வு, அதிலிருந்து போதைபோன்ற பழக்கங்கள். சிலர் அந்த அலைகளைக் கடந்து சிலவற்றை எழுதுகிறார்கள். சிலரால் முடிவதில்லை. இலக்கியம் தேவை என்றால் இந்த அலைகளை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அவனுடைய அலைகளை புரிந்துகொண்டு அவனை ஏற்றுக்கொள்ளவும், அவனுக்கு துணைநிற்கவும் எழும் சமூகமே பண்பாட்டுச்செயல்பாட்டைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. அவனுக்கு ’நல்லறிவை’ கூறும் இலக்கியமறியா வீணர்களையே நாம் இங்கே மிகுதியாகக் காண்கிறோம்.

*

இரண்டு அனுபவங்கள் 2009 ல் நான் ஆஸ்திரேலியா சென்றேன். விமானநிலையத்தில் என் பெட்டியை திறந்து நோக்கிய அதிகாரி “இவை என்ன?” என்றார். “என் நூல்கள்” என்றேன். “என்ன நூல்கள்?” என்றார். நான் என் நூல்களை அவருக்குச் சொன்னேன். ஆஸ்திரேலியா பல்லுயிர்ப்பெருக்கத்தை மிகமிகப்பேணும் ஒரு நாடு. ஒரு விதைகூட உள்ளே நுழைய விடமாட்டார்கள். என்னிடம் “ எழுத்தாளரே, இதில் விதைகள் இல்லை அல்லவா?” என்றார். “இல்லை” என்றேன். “ஆஸ்திரேலியாவுக்கு வருக” என்று சொல்லி பெட்டியை மூடிவிட்டார்.

அவ்வாண்டே அமெரிக்கா சென்றிருந்தேன். சிகாகோ அருங்காட்சியகத்திற்கு நண்பர் சிறில் அலெக்ஸுடன் சென்றேன். சுவாமி விவேகானந்தர் பேருரை ஆற்றிய கூடத்தைப் பார்க்க விழைந்தேன். ஆனால் அது பழுதுபார்ப்பதற்காகப் பூட்டப்பட்டிருந்தது. நான் எழுத்தாளன் என சிறில் அங்கே சொன்னார். அருங்காட்சியகத் தலைவரான பெண்மணி  நேரில் வந்து பூட்டின் அரக்கு முத்திரையை உடைத்து அதைத் திறந்து எனக்குக் காட்டிய பின் மீண்டும் பூட்டி முத்திரை வைத்தார்.

அறிவுச்செயல்பாட்டை வழிபடும் நாடுகளின் இயல்புகள் அவை. இந்தியாவில் ஒரே ஓர் இடத்தில்கூட நான் எழுத்தாளன் என்பதற்காக குறைந்தபட்ச மதிப்பைப் பெற்றதில்லை. எழுத்தாளன் என்பதனால் என்னிடம் பணமிருக்காது என ஊகித்துக்கொண்டு அதட்டிப்பேசுபவர்களை, சிறுமைசெய்ய முற்படுபவர்களை மட்டுமே கண்டிருக்கிறேன். நாம் வந்தடைந்திருக்கும் இடம் இது.

நம் சமூகத்தில் நிறைந்திருக்கும் பொதுவான அறிவெதிர்ப்பின் கீழ்மையை, பாமரத்தன்மையின் வன்முறையையே நீங்கள் சமூகஊடகங்களில் காண்கிறீர்கள். அதற்கு விதவிதமான கொள்கைப்பூச்சுக்கள் தர்க்கநியாயங்கள் சொல்லப்படுகின்றன, அவ்வளவுதான்.

அவர்களிடம் நான் சொல்லவிழைவது ஒன்றே. உங்கள் சாதிவெறியால் மதக்காழ்ப்பால், கட்சிவெறுப்புகளால் பொதுவான அறிவெதிர்ப்பால்  இலக்கியவாதியை இழிவுசெய்யும்போது இலக்கியம் என்னும் இயக்கத்தை இழிவுசெய்கிறீர்கள். அறிவைச் சிறுமைசெய்கிறீர்கள். அடுத்த தலைமுறைக்கு முன் உங்கள் கீழ்மையை முன்வைக்கிறீர்கள். அவர்களாவது ஒரு நாகரீக சமூகமாக ஆகும் வாய்ப்பை அழிக்கிறீர்கள்

*

1989 ல் என் இருபத்தேழாவது வயதில் ஓரிரு கதைகளை எழுதி இலக்கியவாதியாக அறிமுகமான ஆண்டில் நான் சக இலக்கியவாதிக்காக நிதி திரட்டத் தொடங்கினேன். இதயநோய் வந்து அறுவைசிகிழ்ச்சை செய்துகொண்டிருந்த தருமபுரி நஞ்சுண்டன் என்பவருக்காக. டி.எஸ்.எலியட்டை தமிழாக்கம் செய்தவர் அவர். இப்போது முப்பதாண்டுகள் ஆகின்றன. இதுவரை எல்லா ஆண்டும் நிதி திரட்டியிருக்கிறேன். இந்த ஆண்டும்கூட..எல்லா ஆண்டும் என் வருமானத்தில் ஒருபகுதியை எழுத்தாளர்களுக்காகச் செலவிட்டிருக்கிறேன்.

எழுத்தாளர்களுக்காக அலுவலக விஷயங்களில் தலையிட்டிருக்கிறேன். காவல்நிலையம் சென்றிருக்கிறேன். வேலைகளுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன். கூச்சமே இல்லாமல் எனக்குத்தெரிந்த அத்தனை பேரிடமும் எழுத்தாளர்களுக்காக உதவிகோருவது என் வழக்கம். அந்த எழுத்தாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் என் கருத்தியல் எதிரிகள்.

ஏனென்றால், இங்கே ஓர் எழுத்தாளன் பொதுச்சமூகத்தில் இருந்து சிறுமையை அன்றி எதையும் எதிர்பார்க்க முடியாது. எழுத்தாளன் எப்படி ‘நல்ல குடிமகனாக” வாழவேண்டும் என ஆலோசனை சொல்வார்கள். கைகால் இருக்கிறதே, போய் வேலைசெய் என்பார்கள். எழுத்தாளன் சிறுமை அடையாமல் உதவிகோரக்கூடிய இடம் என்பது இன்னொரு எழுத்தாளன் மட்டுமே.

ஏனென்றால் நானும் அவனைப்போன்றவனே. அவனை ஆட்டுவிக்கும் அந்தப் போதை, அந்தக் கிறுக்கு என்னில் இன்னும் பலமடங்கு உள்ளது. அவன் என் குருதிச்சுற்றம்போல. உதவி செய்கையில் நான் ஒவ்வொரு முறையும் அதை பணிந்து அளிக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன். பொது இடத்தில்  விக்ரமாதித்தன் அண்ணாச்சிக்கு பணம் அளித்தால் அக்கணமே அவர் காலைத் தொட்டு வணங்கிவிடுவேன். அவருடைய தோற்றத்தைக் கொண்டு அவரை பிறர் மதிப்பிட்டுவிடலாகாது என்றே நினைப்பேன்.

எண்ணிப்பாருங்கள், ஸ்ரீபதிக்காக நீங்கள் சொல்வதுபோல ஃபெட்னாவிடம் போய் நிதி கோரமுடியுமா என்ன? பல்கலைகளில் உதவி கோரமுடியுமா என்ன? மொத்தத் தமிழகத்திலிருந்தும் ஐந்துலட்சம் தேறவில்லை என்றீர்கள். இங்கே இலக்கியவாதி சற்றேனும் மதிக்கப்படும் சிறிய வட்டத்தில் இருந்து அவ்வளவுதான் இயல்வது. சொல்லப்போனால் இளங்கோ கிருஷ்ணனால் நிதி திரட்டப்பட்டது ஸ்ரீபதிக்குக் கௌரவம். இன்னொரு கவிஞனின் உளம்கனிந்த வாழ்த்து அல்லவா அது?

ஜெ

 

ஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு

ஸ்ரீபதி பத்மநாபா – கடிதம்

ஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு

முந்தைய கட்டுரைஎழுதுபொருளும் எழுத்தும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23