வெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்

 

நாள்தோறும் வெண்முரசு படித்துக் கொண்டே வரும்போது வியாசரையும் வில்லிபுத்தூராழ்வாரையும் முழுக்கப்படிக்க ஒரு வாய்ப்பு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவர்களைத் தொட்டுப் பல ஆண்டு காலங்கள் கடந்து விட்டன.

 

கடலூர் துறைமுகம் பகுதியில் மாலுமியார்ப் பேட்டையில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அது சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட பழைமையான  ஆலயமாகும். அங்கு தீமிதித் திருவிழா தொடர்ந்து 177 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.திருவிழாவின்போது பாரதம் படிப்பது நடக்கும். இப்பொழுதுதான் சொற்பொழிவு முறை வந்தது. அக்காலத்தில் பாரதம் மற்றும் இராமாயணங்களையும் ஒருவர் படிக்க மற்றவர்கள் குழுமியிருந்து கேட்பதுதான் வழக்கம். இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள விராச்சிலையில் என் மருமகன் இராமநவமியை முன்னிட்டுப் பத்து நாள்கள் இராமயாணம் படிக்கிறார்.

 

அதற்கெனத் தனியாகப் புத்தகம் பூசை அறையில் வைத்திருப்பார்கள் அதிலிருந்துதான் படிக்க வேண்டும். எத்தனை நாள்கள் எனக் கணக்கிட்டு அதற்கேற்பப் பகுதிகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

 

மாலுமியார்ப் பேட்டைக் கோயிலில் இந்த ஆண்டு வழக்கமாகப் பேசுபவர் உடல்நிலையைக் காரணம் காட்டி வர இயலாதெனச் சொல்லிவிட்டார். கோயில் பொறுப்பாளர்கள் உடனே திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோயிலின் நிருவாக எழுத்தர் ஆழ்வாரைத் தொடர்புகொண்டு யாரையேனும் ஏற்பாடு செய்து தரும்படிக் கேட்டனர். அவர் உடனே என்னைத்தான் கேட்டார்.ஏனெனில் நான் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த வரதராஜப் பெருமாள் கோயிலில் இராமநவமியின்போது பதினோரு நாள்கள் இராமாயணத் தொடர் சொற்பொழிவும், மார்கழியில் முப்பது நாள்களும் திருப்பாவை தொடர் சொற்பொழிவும் நிகழ்த்தி வருபவன்.

 

அலைபேசியிலேயே ஒப்புக்கொண்டு விட்ட நான் திருவிழா தொடங்குவதற்கு முதல் நாளே அக்கோயிலுக்குக் காலையில் பத்து மணிக்குச் சென்றேன். கோயில் மிகப்பழைமையானது. சிறிய கோயில்தான். ராஜ கோபுரம் கிடையாது. அம்மன் சன்னதி கூட சிறியதுதான். சிறிய அம்மன். பக்கத்தில் சற்றுப் பெரிய மூர்த்திகள் உடைய பார்த்த சாரதிப் பெருமாள் சன்னதி உள்ளது. கோயிலின் பின்னால் குளம் இருந்து இப்போது குட்டையாகி விட்டது.

 

கோயிலில் யாருமே இல்லை. அங்கிருந்த சிறுவர்களிடம் கேட்டதற்குக் காத்தவராயனை எடுத்துக் கொண்டு வரப் போயிருப்பதாகச் சொன்னார்கள். இடத்தை விசாரித்து அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வயல்களின் நடுவில் உள்ள மரத்தடிக்குச் சென்றேன். அங்கே மூன்று கல்கள் நட்டுப் பூசை செய்துகொண்டிருந்தனர். சுமார் மூன்றடி உயரமுள்ள காத்தவராயன் சிலை மாலையிடப்பட்டுப் பூசை முடிக்கப்பட்டு புறப்படத் தயாராக இருந்தது.

 

முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட குமார் என்பவரும், கோயில் அறங்காவலர் எனப்படும் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் வரவேற்றுக் கோயிலின் உற்சவ அழைப்பைக் கொடுத்தனர். என்றனர். கூடவே “ஆறு மணின்னு போட்டிருக்கோம், நீங்க ஏழு மணிக்கு வந்திடுங்க” என்றனர்.

 

வீட்டிற்கு வந்து அழைப்பைப் பார்த்த எனக்கு மிகவும் வியப்பாய் இருந்தது. அதில் பத்து நாள்களுக்குப்  பாரதம் பேச வேண்டிய தலைப்புகள் இருந்தன. பாரதக் கதை-ஆதிபருவம், யயாதி-சந்தனு திருமணம், பீஷ்மர் வரலாறு, அம்பா அம்பாலிகை திருமணம்,கர்ணன் பிறப்பு, பாண்டவர் கௌரவர் பிறப்பு, கண்ணன் பிறப்பு, பாஞ்சாலி பிறப்பு, அரக்கு மாளிகை. பகாசூரன் என இருந்தன.பகாசூரன் வதைக்குப் பின் தினம் தோறும் மீதி பாரதக் கதை கூத்து நடத்தப்பட்டு நிறைவேறுமாம். இந்த நடைமுறை கடந்த 177ஆண்டுகளாக நடந்து வருகிறது; எதையும் மாற்றக் கூடாதெனக் கூறி விட்டனர்.

 

முதல் நாள் இரவு ஏழு மணிக்குச் சென்று விட்டேன். கோயிலில் குமார் மற்றும் கிருஷ்ண மூர்த்தி இருந்தனர். ஏழரை மணிக்குத்தான் உற்சவதாரர் வரப் பின் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பிறகு சுண்டல், புளியோதரை, கேசரி எனப் பிரசாதம் வழங்க எட்டரை ஆகிவிட்டது. கோயிலுக்கு வெளியே  சாலை ஓரத்தில் இருந்த பந்தலில் ஒரு பெஞ்ச் மற்றும் ஒரு நாற்காலி போட்டு ஒலிவாங்கி வைத்தனர். எதிரே பத்து நாற்காலிகள் இருந்தன.

 

கோயில் பூசாரி வெளியே வந்து கோபுரத்துக்குக் கற்பூர தீபம் காட்டித் தொடங்கலாம் எனச் சொன்னார், எதிரே இருந்த நாற்காலிகளில் நான்கு பேர் இருந்தனர். 8.45.க்குத் தொடங்கி 9.45-க்கு முடித்தேன். சொற்பொழிவு முடிந்ததும் பூசாரி வந்து கோயிலுக்குக் கற்பூரம் காட்டினார். சொற்பொழிவாளருக்கு வெற்றிலை வாழைப்பழங்களுடன் தட்சணை தரப்பட்டது. இது நாள்தோறும் நடந்தது. வீட்டுக்குக் கிளம்பும்போது “யாரும் வந்து உட்கார்ந்து கேட்க மாட்டாங்க ஐயா, ஊர் முழுதும் ஒலிபெருக்கிக் கட்டி இருக்கிறோம். எல்லாரும் வீட்டு வாசலிலேயே இருந்து கேட்பார்கள்” எனக் குமார் கூறினார். இரு சக்கர வாகனத்தில் வீடு வந்து சேரும்போது மணி பத்தரைக்கு மேலாகி விட்டது.

 

”கண்ணன் பிறப்பு” பேச வேண்டிய நாளில் கண்ணபெருமானின் உற்சவ விக்ரகத்தைப் பேசும் இடத்திற்கு அருகில் வைத்துத் தொடங்குமுன் கற்பூர ஆரத்திக் காட்டினர். அத்துடன் சொற்பொழிவில் கண்ணன் பிறக்கும் இடம் வந்தவுடன் சற்று நேரம் சொற்பொழிவை நிறுத்தி வைத்து, அப்பொழுது கண்ணன் பிறந்ததைக் கொண்டாட அனைவருக்கும் இனிப்புகளும் பானகமும் வழங்கி வேட்டுகள் போடப்பட்டன. பின் சொற்பொழிவு தொடர்ந்தது.     இதேபோலப் பாஞ்சாலி பிறப்பன்றும் அம்மன் விக்ரகத்தைக் கொண்டு வந்து வைத்தனர். பாஞ்சாலி பிறக்கும் இடம் வந்தவுடன் சொற்பொழிவை நிறுத்தி விக்ரகத்தைச் சுற்றிக் பெரிய பெரியக் கட்டிக் கற்பூரங்கள் வைத்து எரியவிட்டனர். பாஞ்சாலி நெருப்பிலிருந்து தோன்றுவதாக ஐதீகமாம்.

 

அரக்கு மாளிகை பேச வேண்டிய நாளில் பேசும் இடத்திற்கு அருகில் கீற்றுகளால் மூன்றடி உயரத்திற்கு ஒரு வீடு போல அமைத்திருந்தனர். அரக்கு மாளிகை தீப்பற்றியது என்று நான் பேசியவுடன் அவ்வீட்டைக் கொளுத்தி விட்டனர்.பகாசூரன் பற்றிப் பேசப் பக்கத்தில் ஐம்பது அடி தொலைவில் உள்ள காளிகோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கோயிலுக்கு எதிரில் உள்ள திடலில்தான் தீமிதியும் கூத்தும் நடக்குமாம். மாலை ஐந்து மணிக்கே தொடங்கவேண்டும் என முன்கூட்டியே சொல்லி விட்டனர். நான் மூன்று மணிக்கே போய் விட்டேன். காளிகோயில் அண்மைக்காலத்தில் கட்டியப் புதிய கோயில். அங்கு வந்து சந்தித்தநான்கைந்து இளைஞர்கள் தினமும் சொற்பொழிவைக் கேட்பதாகவும், எளிமையாய் நன்றாகப் புரியும் வண்ணம் இருப்பதாகவும்கூறியது எனக்கு மனநிறைவாக இருந்தது. கோயிலின் உள்ளே பகாசூரன் வேடமிட்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார். மற்றொருவர் பருமனாகப் பீமன் வேடமிட்டுக்கொண்டிருந்தார். இருவரும் மறுநாள் தொடங்கவிருக்கும் கூத்தாட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

பகாசூரன் வேடத்துடன் அவரை ஒரு வண்டியிலேற்றிக் காலையிலேயே ஊர் முழுதும் காட்டி விட்டனர். கோயிலுக்கு வெளியே ஒரு பெரிய சூரன் சிலை சுதைஉருவத்தில் செய்யப்பட்டு வண்டியில் இருந்தது.  பீமன் வேடமிட்டவர் திரௌபதி அம்மன் கோயிலுக்குச் சென்றபின் சொற்பொழிவு தொடங்கியது. நூறு பேர் கூடி இருந்தனர். பகாசுரனைக் காணப் பீமன் வண்டியிலே கிளம்பி விட்டான் என்றதும் திரௌபதி அம்மன் கோயிலில் வேட்டு போடப்பட்டது. பீமன் ஒரு வண்டியில் ஏறிக் கிளம்பி விட்டான். அவ்வண்டியில் பெரிய பெரிய அண்டாக்களில் சோறு இருந்தது. காளி கோயிலின் உள்ளேயும் பெரிய பெரிய அண்டாக்களில் சோறு நிறைய இருந்தது.

 

சூரன் சிலை இருந்த வண்டியிலேறி பகாசூரன் வேடமிட்டவர் கிளம்ப பீமன் வண்டியும் அருகில் வந்து நிறுத்தப்பட்டது.இப்பொழுது இரு வண்டிகளுக்கிடையே நான் நிறுத்தப்பட்டேன். கூட்டம் சுமார் ஐநூறு பேர் இருக்கும். இரு வண்டிகளிலும் இருந்த இளைஞர் கூட்டம் பகாசூரனாகவும் பீமனாகவும் கருதிக்கொண்டு ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டிருந்தனர். என் கையில் கம்பியில்லா ஒலிவாங்கி தரப்பட்டு சொற்பொழிவாற்றச் சொன்னார்கள்.

 

பீமனும் பகாசூரனும் நெருங்க நெருங்க நான் நேர்முக வருணனை சொல்லிக்கொண்டிருப்பது போல இருந்தது. இருவரும் வண்டிகளிலிருந்து இறங்கிச் சாலையில் கூத்தில் வருவது போல சுற்றிச் சுற்றிச் சண்டையிட்டார்கள். பகாசூரன் மாண்டான் என்று நான் சொன்னவுடன் வண்டியிலிருந்த பகாசூரன் சுதைச்சிலையிலிருந்து தலையை எடுத்துவந்து விட்டனர். திருச்செந்தூரில் சூர சம்காரம் பார்ப்பது போல இருந்தது.

 

அதன் பிறகு பத்துப்பேர் வண்டிகளில் ஏறிக் கொண்டுவந்த சோற்றை எல்லாருக்கும் நிறையவே வழங்கினார்கள். மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து பாத்திரங்கள் எடுத்து வந்திருந்தனர். காளி கோயிலின் உள்ளே இருந்த சோறும் விநியோகம் செய்யப்பட்டது.நாளை முதல் இரவு அம்மன் வீதி உலா நடைபெறும் என்று அறிவித்தனர்.

 

மறுநாள் திரௌபதி திருமணம். மதியம் பதினோரு மணிக்கு வரச்சொன்னார்கள். வில்வளைத்தல் பேசவேண்டும் என்றார்கள்.நான் பத்தரைக்குப் போய் விட்டேன். மெல்லிய வளையக்கூடிய பத்தடி உயரம் கொண்ட மூங்கில் கழியின் நுனியில் கயிற்றின் ஒரு நுனி கட்டப்பட்டிருந்தது. கழி முழுதும் துணி சுற்றப்பட்டு மஞ்சள் பூசப்பட்டிருந்தது. திரௌபதி அம்மன் கோயிலிருந்து மேளம் முழங்கக் குமார்     அக்கழியைத் தூக்கிக்கொண்டு வந்தார்.

 

அக்கழியைக் காளி கோயிலுக்கு எதிரே மண்ணில் நட்டனர். காளி கோயில் எதிரே திரௌபதிக்கு நடந்த மணத்தன்னேற்பு பற்றியும், எல்லா வீர்ர்களும் வந்து வில்லை வளைக்க முயன்று தோற்றதையும், கடைசியில் அருச்சுனன் வந்து வில்லை வளைத்து வெற்றி பெற்றதையும் கூறி முடிக்கும்போது குமார் அந்தக் கழியில் கட்டப்பட்டிருந்த கயிற்றைக் கீழ் நோக்கி இழுக்க வில் என்று கருதப்பட்ட அக்கழி வளைந்தது. அக்கயிற்றைக் கழியின் அடிப்பகுதியில் கட்ட அது வில் போலவே காட்சி அளித்தது. அதற்குப் பூசாரிக் கற்பூர ஆரத்தி காட்டினார்.  பின் அனைவரும் திரௌபதி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்.

பாஞ்சாலி திருமணம் காண அதிகமான பெண்கள் கூட்டம் வந்திருந்தது. பூசாரியே திருமணத்தை முன்னின்று நடத்தினார்.மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு விக்ரகங்களையும் தூக்கிக்கொண்டு தீ வலம் வந்தனர். பிறகு பூசாரி மங்கல நாணை அனைவருக்கும் காட்டி அணிவித்தார். வந்திருந்த அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. நானும் விருந்துண்டு மதியம் இரண்டு மணிக்கு இல்லம் சேர்ந்தேன்.

 

திருமணம் முடிந்த ஐந்தாம் நாள் விடியல் காலை மூன்று மணிக்கு வந்து அருச்சுனன் தவம் பற்றிப் பேசச்சொன்னார்கள்.விடியல் எழுந்து குளித்துவிட்டுப் போய்ச்சேர்ந்தேன். ஒரு நீண்ட கழியின் நுனியில் அருச்சுனன் சிலை கட்டப்பட்டிருந்தது.  திரௌபதி அம்மன் கோயிலிலிருந்து அதை எடுத்துக்கொண்டு வந்து காளிகோயில் முன் நட்டார்கள். நடந்து கொண்டிருந்த கூத்து சற்று நேரம் நிறுத்தப்பட்டது.

 

பாசுபத அஸ்திரம் பெறவேண்டி அருச்சுனன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்ததையும், அங்கு ஒரு பன்றி வர, அதன் மீது சிவன் வேடன் போல வந்து அம்பெய்ததும், அருச்சுனனும் அப்பன்றியின் மீது அம்பெய்ததும், இருவரும் சண்டையிட்டதும், இறுதியில் சிவன் அருள் செய்து அஸ்திரம் தந்ததையும் பேசினேன். பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு ஒரு பன்றி குறுக்கே ஓடிவந்தது அனைவருக்கும் திருப்தியாய் இருந்தது. அஸ்திரம் தரப்பட்டது என்று பேசியவுடன் நடப்பட்ட கழியைச் சுற்றிச் சிறிதளவு வைக்கோலை இட்டுக் கொளுத்தினர். அருச்சுனன் நெருப்பின் நடுவில் நின்றுகொண்டு தவம் செய்வதாக்க் கருத வேண்டுமாம்.

 

அன்று மாலை ஐந்து மணிக்கே சொற்பொழிவு தொடக்கம். தலைப்பு அரவான் பலி. இந்த அரவான் பலியும் சகாதேவனிடம் நாள் குறிப்பதும் வியாசரில் இல்லை. வில்லிபுத்தாராழ்வாரே எழுதியிருப்பதாகும். இன்று தீமிதியும் நடக்க இருப்பதால் நிறைய கூட்டம் வந்திருந்தது. ஆறு மணிக்குக் காளிகோயிலை விட்டுக் கிளம்பினோம். சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திடல்இல்லாததால் சாலை ஓரத்தில் மண்ணால் தரையில் அரவான் உருவம் ஆறடிக்குச் செய்யப்பட்டிருந்தது. தலை மட்டும் முன்புசூரனுக்குப் பயன்படுத்தியதையே வைத்திருந்தனர்.

 

சகாதேவனிடம் வந்து நாள் குறித்ததையும், கண்ணன் அமாவாசையையே மாற்றியதையும் பேசி அரவான் பலி வரும்போதுகாளிவேடம் இட்ட ஒருவர் நான்கு பேர் பிடித்துக் கொள்ள ஓடி வந்தார். அவரை அடக்க முடியவில்லை. அவர் அரவான் அருகில்வந்ததும் உயிருடன் ஒரு சேவலைத் தர அவர் அதன் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடித்தார். பின் காளி கோயிலுக்குப் போய்விட்டார். அத்துடன் அரவான் பலி முடிந்தது. அடுத்துப் படுகளம்.

 

அருகிலேயே சாலையின் நடுவில் மரத்தாலான ஒரு பெஞ்ச் போடப்பட்டு அதன் மீது அதைச் சுற்றியும் மஞ்சள் நீர்தெளிக்கப்பட்டு இருந்தது. இங்கும் பேச்சு தொடர்ந்தது. துரியோதன் சமந்தக பஞ்சகக் குளத்தில் மூழ்கி இருப்பதையும், பீமன் வந்துஅரைகூவல் விட்டு அழைத்து இருவரையும் அண்டையிடுவதையும் பேசிக்கொண்டிருந்தே. அப்போது முன்னால் காளி வர பின்னால்கோயில் பூசாரி மஞ்சள் வேட்டித் துண்டுடன் ஒரு பெரிய மூங்கில் கழியுடன் வந்தார். அவரையே துரியோதனனாகக் கருதிஅப்பெஞ்சின் மீது படுக்கவைத்து மஞ்சள் துணியினால் முழுக்க மூடினார்கள். அந்தக் கழிதான் கதை போலிருக்கிறது. பீமனால்துரியோதனன் துடை பிளக்கப்பட்டு வீழ்ந்தான் எனச் சொன்னவுடன் பூசாரி துள்ளினார். நான்கைந்து பேராலேயே அடக்கமுடியவில்லை. அவரை ஒரு வாறாகப் பிடித்துக் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அடுத்து முன்கூட்டியே கொண்டு வந்துவைத்திருந்த அம்மன் விக்ரகத்தின் தலையின் பின்பக்கம் தொங்கிக்கொண்டிருந்த கூந்தலை முடித்து வைத்தனர். இக்கூந்தல்முடிவது என்பது வியாசரிடமோ வில்லியிடமோ காணப்படவில்லை.

 

பிறகு காளி கோயில் எதிரே இருக்கும் திடலில் தீமிதித்தல் நடந்தது. சொல்லி மாளாத கூட்டம். சாலை முழுக்க திருவிழாவிற்கேஉரிய பல்வகைக் கடைகள்; காவலர்கள் பெரும் அளவில் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.மறுநாள் பட்டாபிஷேகம். மாலை ஆறு மணிக்குத் தொடங்கி அஸ்வத்தாமன் பாண்டவர் பாசறைக்குள் புகுந்து வதம்செய்வதையும், போர் முடிந்து பாண்டவர்கள். துரியோதனன் திருதாஷ்டிரன் மற்றும் காந்தாரி, பீஷ்மர் ஆகியோரைச் சென்றுசந்திப்பதையும் சொல்லி தருமர் முடி சூடுவதையும் பேசினேன். உடனே தயாராக இருந்த கிரீடத்தைக் கோயில் பொறுப்பாளர்கள்விக்ரகத்தின் தலையில் சூட்டினர். பிரசாத விநியோகத்திற்குப் பிறகு குமார் என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அவர்இல்லத்தில் இருப்பவர்கள் என்னிடம் வாழ்த்து பெற்றனர். அத்துடன் ஊரின் முக்கிய தெருக்கள் வழியே அழைத்துச்சென்றுஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருப்பதையும் காட்டினார்.இன்னும் இரண்டு நாள்கள் விடையாற்றி மற்றும் உதிரவாய் துடைத்தல் என்னும் உற்சவங்கள் நடைபெறுமாம்.

 

நவீன உலகில் நிறைய மாற்றங்கள் வந்திருப்பினும், இன்னமும் சில மாறாத மரபுகள் இருப்பதுதான் தமிழ் மண்ணின்அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வளவ. துரையன்

 

முந்தைய கட்டுரைஓஷோ – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேல்நிலைக் குரல்