கதிரவனின் தேர்-9

ஒரியக்கலையின் ஒட்டுமொத்தத்தையே பார்த்துவிட்டோம் என்னும் உணர்வை கொனார்க்கில் அடைவோம். அதன்பின் லிங்கராஜ் ஆலயம் நாம் பார்த்தது ஒரு பட்டையை மட்டுமே எனக் காட்டும். அந்த விழிகளுக்கு முக்தேஸ்வர் ஆலயம் இன்னொரு உலகைத் திறக்கும்.

பொதுவாகப் பார்த்துச்செல்லும் ஒருவர் இந்த ஆலயங்கள் அனைத்தும் ஒன்றுபோலவே இருப்பதாக நினைக்கலாம். முக்தேஸ்வர் ஆலயம் லிங்கராஜ் ஆலயத்தின் கன்று என்றும் சொல்லலாம். சற்று கூர்ந்து நோக்கி கலையழகை அறிபவர் அவற்றின் தனித்தன்மையைக் கண்டடைவார்

செவ்வியல் கலையின் மாயமே அதுதான். ஒன்றே என்றும் வேறுவேறு என்றும் அது தன்னைக் காட்டிக்கொண்டே இருக்கிறது. சிறுசிறு விரிவாக்கத்தினூடாக அது ஒரு நுட்பமான முழுமையைச் சென்றடைகிறது. சிறியதில் நிகழ்த்திப் பார்க்கிறது. பேருருவாக விரிக்கிறது

கல்லில் எழுந்த இச்செவ்வியல் அழகை செவ்வியல் இசையில் இன்னொரு வகையில் காணலாம். செவ்விலக்கியத்திலும் காணலாம். நான் இக்கோபுரங்களை ஒரு செண்டையின் தாளமாகக் காண்பதுண்டு. அடுக்கடுக்காக எழும் தாளக்கட்டுகள். ஒன்றே மீளமீள நிகழ்வதுபோலவும் ஒவ்வொன்றும் ஒரு துளியளவே மாறுபட்டிருப்பதுபோலவும் தோன்றும். உச்சியில் ’கலாசம்’ என்னும் முத்தாய்ப்பு.

 

லிங்கராஜ் ஆலயம் ஒரு காவியம். கம்பராமாயணம் போல பிரம்மாண்டத்தின் பேரழகு. எனில் முக்தேஸ்வர் ஆலயம் சிலப்பதிகாரம். சிறிய கூரிய அழகு. இனிய பாடல் போல. எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொள்ளலாம் போல அத்தனை அழகிய கோயில் இது

சென்றமுறை வந்தபோது இந்த ஆலய வளாகம் நீருக்குள் பாதிமூழ்கி இருந்தது. இது தரைத்தளத்திலிருந்து நான்கடி ஆழத்தில் இருக்கிறது. இதை மாலையின் செவ்வொளியில் நோக்கினால் பொன்னென்றிருக்கும். மழையின் ஈரத்தில் வாழைப்பூ வண்ணம் கொண்டிருந்தது.

புவனேஸ்வரில் நகர்மையத்திலேயே இருக்கும் முக்தேஸ்வர் ஆலயம் ‘ஒரிசாவின் அணிநகை’ என அழைக்கப்படுகிறது. வெவ்வேறு கலை ஆய்வாளர்கள் இந்த ஆலயம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். லிங்கராஜ் ஆலய வளாகம் போலவே இவையும் ஆலயங்களின் தொகை. இந்த வளாகத்திற்குள்ளேயே நான்கு  கலைக்கோயில்கள் உள்ளன

கிபி பத்தாம் நூற்றண்டில் கட்டப்பட்டது முக்தேஸ்வர். சோமவன்ஷி அரசர்களின் காலம் புவனேஸ்வரின் பொற்காலம் எனப்படுகிறது. அப்போது கட்டப்பட்டது இந்த ஆலயம். இத்தகைய ஆலயங்கள் ஒரு கலைமரபு வெவ்வேறு வகையில் தொடர்ந்து தன்னை விரிவாக்கம் செய்துகொண்டே செல்கையில் ஒரு வகை உச்ச வெளிப்பாடாக எழுபவை. ஒரிசாவின் பலநூறு நாகர பாணி கோயில்கள் இந்த ஆலயத்தை வந்தடைவதற்கான பயிற்சிகள் என்று தோன்றுகிறது.

பிரிட்டனைச்சேர்ந்த இந்தியவியல்-சிற்பவியல் ஆய்வாளர் பெர்ஸி பிரவுன் Percy Brown (1872–1955] இந்த ஆலயம் கிபி 950ல் கட்டப்பட்டது என வகுக்கிறார். சோமவன்ஷி குலத்தின் அரசர் யயாதி இதைக் கட்டியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது

இந்த ஆலயம் சிவந்த கல்லில் கட்டப்பட்ட ஒரு சிறிய நகை. ஒவ்வொரு அணுவிலும் அழகும் நுட்பமும் கூடியது. இதன் முதன்மையான அழகு என்பது முகப்பிலிருக்கும் தோரணவாயில்தான். சிறியது, ஒரு பொற்சிலம்பை நிறுத்தி வைத்ததுபோலிருக்கிறது. சாஞ்சியின் தோரணவாயிலை நினைவுறுத்துகிறது. குறிப்பாக அதன் விளிம்புகளில் புன்னகைக்கும் யட்சிகள்.

சிற்பங்கள் சில மிகச்சிறியவை. சிறிய வட்டத்திற்குள் அந்த வெளியை முழுதுற நிரப்பும் நெளிவும் குழைவும் கொண்டவை. கங்கை யமுனை நதிகள். அகத்தியர் போன்ற முனிவர்கள்.அழகிய சிறிய நடராஜர். இங்கே நிலம்தொடும் முத்திரையுடன் அமர்ந்த லகுலீசரின் சிற்பமும் உள்ளது

புன்னகைக்கும் நாகினிகள் இந்த ஆலயத்தின் எல்லா திசைகளிலும் உள்ளனர். அவர்களின் கீழுடல்கள் சுழன்று சுழன்று மரங்களையோ சிவலிங்கம் போன்ற அமைப்புக்களையோ கவ்வியிருக்கின்றன. திசைத்தேவர்கள் ஆலயச்சுவர்மூலைகளில் அமைந்திருக்கிறார்கள்

[பெர்ஸி பிரவுன் – பிரிட்டிஷ் கலை ஆய்வாளர்]

ஆலயத்திற்குப் பின்னால் ஒரு குளம். அதில் நீலநீர் தளும்பிக்கொண்டிருந்தது. ஆலயத்தின் வடிவம் அதில் அலைகொண்டது. ஓர் ஆலயத்தை நீரில் பார்ப்பதென்பது அரிய காட்சி. உண்மையில் அதன் வடிவமே கல்லில் எழும் நெளிவுதான். அந்த நெளிவு மேலும் நெளிவு கொள்கிறது

முக்தேஸ்வர் ஆலயத்தின் அருகே மேலும் சிறு ஆலயங்கள் உள்ளன. ஒருசில படிகள் மேலேறிச்சென்றால் இன்னொரு ஆலயம். அதில் சிற்பங்கள் குறைவு. நாகர பாணி கோபுரம். வெவ்வேறு கோணத்தில் நின்றும் அமர்ந்தும் அந்த கோபுரத்தை நோக்கிக் கொண்டிருந்தேன். கோபுரங்கள் வானிலிருக்கும் அமைதியுடன் இணைந்துகொண்டவை.

சற்று அப்பால் நடந்துசென்றால் ராஜாராணி ஆலயம். உண்மையில் அது ராஜாரண்யம் என்னும் இடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் கட்டப்பட்டது. ஆகவே அந்தப்பெயர். அக்காடு இன்றைய ஜார்கண்ட் பகுதியில் உள்ளது. கற்கள் மகாநதி வழியாகக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 10 ஆம் நூற்றாண்டில் சோமவன்ஷி அரசர்களின் காலகட்டத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

ராஜாராணி ஆலயத்தின் சிற்பங்கள் அளவில்பெரியவை. பெரியவடிவில் லகுலீஸர் அமர்ந்திருக்கிறார். யானையை வெல்லும் சிம்மங்கள். சிவன் மடியில் அமர்ந்த உமை. யானையூரும் இந்திரன். சிலைகளில் சிலவே முழுமையுடன் இருக்கின்றன

ஒரிய உணவகம் ஒன்றில் மதிய உணவுக்குச் சென்றோம். ஒரியபாணி உணவை உண்ணலாமென நினைத்தேன். சோறு, பொரித்த மீன் போட்டுச்செய்த கறி, பீன்ஸ் பொரியல். சற்று மாறுபட்டச் சுவைகொண்ட தமிழக உணவு என்று தோன்றியது.

மதியத்திற்குப்பின் புவனேஸ்வரின் அருங்காட்சியகம் சென்றோம். நகர் நடுவிலிருக்கும் இந்த அருங்காட்சியகம் ஒரிசாவின் மிக முக்கியமான கலைமையங்களுள் ஒன்று. ஒரிசாவில் இருக்கும் நண்பர்கள் கூட இதைப் பார்த்திருக்கவில்லை என்றார்கள்.

ஒரு நகரின் அருங்காட்சியகம் அதிலிருந்து திரண்டு வந்த ஒரு துளி. அதைக்கொண்டு அந்நகரை அந்நகர் அமைந்த நாட்டை முழுமையாகவே நினைவில் தொகுத்துக்கொள்ளமுடியும் நான் ஒருபோதும் அருங்காட்சியகங்களைத் தவறவிடுவதில்லை. சென்னை அருங்காட்சியகத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரிசாவின் பண்பாடு மூன்று அடுக்குகளாலானது என வகுக்கலாம். ஒன்று அதன் தொன்மையான கலிங்க மரபு. காரவேலரில் தொடங்கி சோமவன்ஷிகளில் உச்சம் கொள்வது. செந்நிற படிவப் பாறைகளால் ஆன சிற்பங்கள், அதைவிடத் தொன்மையான மணற்கல் சிற்பங்கள், மேலும் பழைய பௌத்த சமணக் கருங்கல் சிற்பங்கள் அதன் அடையாளங்கள்.

பிறிதொன்று பழங்குடிப் பண்பாடு. ஒரிசாவின் மக்கள் தொகையில் பழங்குடியினர் மிகுதி. அவ்ர்களின் கலை இரண்டு தளங்களாலானது. கிட்டத்தட்ட செவ்வியல்கலை அளவுக்கே வளர்ச்சி பெற்ற உலோகக் கைவினைப் பொருட்களும் சிற்பங்களும் ஒரியப் பழங்குடி கலையில் முக்கியமானவை. இந்திய பழங்குடிக் கலைகளில் ஒரிய பழங்குடி கலையே உச்சமானது என்கிறார்கள்.உலோகங்களில் கலைப்பொருட்களை செய்யும் பழக்கம் பொதுவாக வேறு பழங்குடிகளுக்கு இல்லை

ஒரியப் பழங்குடிகளின் தூக்கு விளக்குகள், கொத்துவிளக்குகள் மலர்க்குலைகள் போன்றவை. கச்சிதமாக எடைநிகர் செய்யப்பட்டு வடிவ முழுமையை அடைந்தவை. நோக்க நோக்க அவற்றின் ஒத்திசைவும் நுட்பங்களும் வியக்க செய்கின்றன/விலங்குகளும் மலர்க்கொடிகளும் பின்னிப்பிணைந்து உருவான இஅவை உலங்கெங்கும் விரும்பப்படுகின்றன

ஒரிய பழங்குடிக் கலையின் இன்னொரு பகுதி மரத்தாலும் மண்ணாலுமான சற்றே பண்படாத தன்மை கொண்ட கலைப்பொருட்கள். இவற்றில் அவர்களின் அன்றாட புழக்கப்பொருட்களும் உண்டு – மீன்பிடிக்கூடைகள், பனையோலை பெட்டிகள் போல.

மூன்றாவதாக ஒரிசாவின் பொதுப் பண்பாட்டு அடுக்கு. அதை சென்ற முந்நுறாண்டுகளில் உருவாகிவந்த பொதுக்கலை என்று சொல்லலாம். அதில் வங்கக்கலை, நாட்டார்க்கலை, ஐரோப்பியக் கலையின் செல்வாக்கு மிகுதி. வடக்கு ஆந்திரத்திலும் தெற்கு ஒரிஸாவிலுமாக பரவியிருக்கும் கலம்காரி ஓவியநெசவுக்கலை ஓர் உதாரணம்.

படசித்ரா எனப்படும் திரைஓவியக்கலை ஒரிஸாவின் கலை அடையாளம் என கருதப்படுகிறது. [படம் என்றால் துணி, திரை.] கைவினைக்கும் கலைக்கும் நடுவே உள்ளவை இவை – நம்மூர் தஞ்சை ஓவியங்கள் போல. திரையில் வண்ணங்களால் வரையப்படுகின்றன. பெரும்பாலும் துர்க்கையின் வடிவங்கள். துர்க்காபூஜை காலங்களில் இவற்றை பெரும்பணம் கொடுத்து வாங்குகிறார்கள். படச்சித்திரங்களை பூசைத்தெய்வமாக வைப்பதும் உண்டு.

ஒரியா பழங்குடிகளின் இல்லச்சுவர்களில் அவர்கள் வரையும் ஓவியங்கள் இருநூறாண்டுகளுக்கு முன்னரே கலை ஆர்வலர்களைக் கவர்ந்தவை. வங்காள நவீன ஓவியர்கள் இந்திய மரபு சார்ந்த ஓவியங்களின் இரு முன்னுதாரணங்களாகக் கொண்டனர். ஒன்று அஜந்தாவின் செவ்வியல் கலை. இன்னொன்று ஒரியப் பழங்குடிகளின் சுவர் வரைகலை.

 

[சொராய் பழங்குடி சுவரோவியக்கலையின் பாணியில் நவீன ஓவியம்]

எளிதாக பின்னிச்செல்லும் கோடுகளால் அமைந்த மானுடர்களின் விலங்குகளின் உருவங்கள் கொண்டது இது. விலங்குருவங்கள் ஒயிலாக்கம் செய்யப்பட்டவை. இவை அவற்றின் வடிவங்களை விட அசைவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டவை. அதற்கேற்ப உருவம் அணிந்தவை.

சந்தால் மற்றும் சொராய் பழங்குடிகளின் ஓவியங்களின் மரபு இன்று தேர்ச்சிபெற்ற ஓவியர்களாலும் ஒரு தனித்த கலைப்பாணியாக முன்னெடுக்கப்படுகிறது. இவை இந்தியாவின் ஓவியக்கலைக்கு பொதுவாகவே பெரும்பங்களிப்பாற்றியவை.

படசித்ரம்

இம்மூன்று பாணி ஒரிய கலைகளும் தனித்தனியாக சேமிக்கப்பட்ட ஒரு கலைமையம் இந்த அருங்காட்சியகம். இதிலுள்ள தொல்வைப்பகம் மிக அரிய சிற்பங்களைக் கொண்டது. அது வெவ்வேறு காலகட்டங்களாக பிரிந்து வளர்கிறது. முதற்காலகட்டத்தில் புத்தர், தீர்த்தங்காரர் வடிவங்கள். பெரும்பாலும் மணற்கல்லில் செதுக்கப்பட்டவை

அதன்பின்னர் சூரியனின் வெவ்வேறு வகையான தோற்றங்களை காண்கிறோம். சூரியனின் வடிவிலிருந்துதான் நின்றபெருமாளின் வடிவம் எழுந்ததோ என்ற ஐயம் எழும் அளவுக்கு ஒற்றுமைகள் தென்படுகின்றன. இருகைகளிலும் தாமரைகளுடன் நின்றிருக்கும் சூரியன். புரவியில் அமர்ந்திருக்கும் சூரியன். சூரியச்சிலைகள் சில கன்னங்கரிய சலவைக் கல்லில் அமைந்தவை. இருள்சூரியன்.

கலிங்கம் சாக்தத்தின் நாடு . சாக்தமும் சௌரமும் ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்ந்தவை. சாக்தத்தின் தொல்வடிவமென்பது ஏழுகன்னியர் வழிபாடு. ஏழு கன்னியர் என்பதே கூட அன்றிருந்த பலநூறு அன்னை வழிபாடுகளிலிருந்து உருவாகி வந்ததுதான்.

டிடி கோசாம்பி மகிஷாசுரமர்த்தனி பற்றிய அவருடைய கட்டுரையில் காளிதாசனின் நாடகத்தில் முச்சந்தியின் அன்னையருக்கு ஊன்சோறு படைத்தல் பற்றிய ஒருவரி வரி வருவதை சுட்டிக்காட்டி அதைத் தொடர்ந்து சென்று அன்றிருந்த அன்னையர் வழிபாட்டின் விரிவை விளக்குவார்.

கிபி நான்காம் நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான அன்னை தெய்வங்கள் வழிபடப்பட்டன. குமாரக்கடவுள் போருக்குச் செல்கையில் அன்னையர் படைக்கலங்களுடன் திரண்டு சென்றனர் என்கிறது காளிதாசனின் குமாரசம்பவம். பல அன்னையர் இன்று வட்டாரதெய்வங்களாக, சிறுதெய்வங்களாக நீடிக்கின்றனர்

ஏழு அன்னையர் சாக்தத்திற்கும் சௌர மதத்திற்கும் பொதுவானவர்கள். சௌஷாத் யோகினி கோயில் என்று அழைக்கப்படும் அறுபத்து நான்கு அன்னையரின் ஆலயங்கள் ஒரிசாவில் இருந்து மத்தியப்பிரதேசம் வரைக்கும், அதாவது ப்ழைய கலிங்கம் முதல் விதர்ப்பம் வரைக்கும், காணப்படுகின்றன. நாங்கள் சில ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறோம்.

இந்த ஆலயங்களில் மையமாக சூரியன் அமர்ந்திருக்க சுற்றி அறுபத்து நான்கு கருவறைகளில் பெண் தெய்வங்கள் உள்ளன. சில இடங்களில் அவர்கள் நதிகளாகவும். சில இடங்களில் வெவ்வேறு ராசிகளாகவும். சில இடங்களில் இன்னமும் கூட அடையாளம் காணப்படாத தேவியராகவும் உள்ளனர்.

ஏழன்னையர் வழிபாடு இந்தியா முழுக்கவே இருந்திருக்கிற்து குமரி மாவட்டத்தில் பல ஆலயங்களில் ஏழன்னையர் புடைப்புச்சிற்பங்களாக உள்ளனர். நான் வாழ்ந்த பத்மநாபபுரத்தில் பாண்டிக்குளம் என்றழைக்கபப்டும் குளத்தில் அடிப்பாறைக்குள் ஏழன்னையரின் புடைப்புச் சிற்பம் உள்ளது.

[ராஜாராணி ஆலயம்]

 

ஆனால் ஒரியாவின் இந்த அருங்காட்சியகத்தில் பெரிய அளவிலான ஏழன்னையர் சிலைகளைப்பார்த்தோம். நான்குதலைகொண்ட பிராமி, சூலமும் மானும் மழுவும் கொண்ட மகேஸ்வரி, சங்குசக்கரம் கொண்ட வைஷ்ணவி ஆகியோர் மூன்று முதல்தெய்வங்களின் பெண்வடிவங்கள். மின்படை கொண்டவள் இந்திராணி. வேல் கொண்டவள் முருகனின் பெண்வடிவமான கௌமாரி.

சுடலைகாக்கும் பேயுருக்கொண்ட சாமுண்டியும் வயலில் விளை பெருக்கும் பன்றிமுக அன்னையான வராகியும் இந்து மைய வழிபாட்டுக்குள் வந்துசேர்ந்தவர்கள். சாமுண்டி, வராகி ஆகியோரின் அழகிய சிற்பங்கள் பத்மநாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளன.

புவனேஸ்வர் அருங்காட்சியகத்தின் ஏழன்னையர் சிலைகள் முதன்மையான கலைப்படைப்புகள். குறிப்பாக சாமுண்டியும் வராகியும் திகைக்க வைக்கும் அளவுக்கு கலைநுட்பமும் உக்கிரமும் கொண்ட சிற்பங்கள். சாமுண்டியின் உடலில் தசை உருகிப்போய் எலும்புகளும் நரம்புகளும் மட்டுமே பின்னி அமைந்திருக்கும் கட்டமைப்பை கல்லில் கொண்டு வந்தவன் கொடுங்கனவை கலையென உருவாக்க தெரிந்த கலைஞன். அழகும் அழகின்மையும் தெய்வம் தன்மை கொண்டவை என்பதை அறிந்தமையால் மெய்ஞானி

இங்குள்ள ஆலயங்களில் விஷ்ணுசிலைகள் பின்னாளில் சூரியனின் பிறிது வடிவங்கள் போல் உருவாகி வந்துள்ளன. சூரியநாராயணர் சிலைகளே பல உள்ளன. மிக அழகிய உமா மகேஸ்வர சிற்பங்கள். உமை சிவன் தொடை மேல் அமர்ந்து மிகுந்த உரிமையுடன் தோளில் கைவைத்திருக்கிறார். இருவரும் பொதுப்பிரிவு ரயில் பெட்டியில் நெரிசலில் ஒண்டி அமர்ந்திருப்பது போவும் தோன்றியது.

 

இச்சிற்பங்கள் பலவும் தமிழகத்தில் சிற்பக்கலை தோன்றி வரும் காலத்தை சேர்ந்தவை என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இங்கு சிற்ப செதுக்குகலை முழுமை அடைந்ததற்கு பின்னர், குறைந்தது நூறு ஆண்டுக்ளுக்கு பின்னரே, தமிழகத்தில் அதன் வீச்சு வெளிப்படலாயிற்று

[அக்னி]

 

பழங்குடி கலைப்பகுதிகளில் உலோக விளக்குகள், அணியானைகள், ஊர்வலத் தோற்றங்கள் என பார்த்துக்கொண்டு வந்தோம். பிரம்பிலும் மூங்கிலிலும் செய்யப்பட்ட கலைப்பொருட்கள். பழங்குடிகள் அன்றாடப்பொருட்களை கலையாக்கக் கற்றவர்கள்

வெவ்வேறு அரசர்களாலும் ஜமீந்தார்களாலும் சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் இங்குள்ளன. பிற்காலத்தில் வடிக்கப்பட்ட வெண்கலச் சிலைகள் பல அழகானவை. ஆனால் அவற்றில் முற்றிலும் ஒவ்வாததாக தோன்றியது தந்தத்தில் செதுக்கப்பட்ட சிலைகள்தான். அவை நுட்பமும் அழகும் கொண்டவையாயினும்கூட எவ்வகையிலோ அது அத்தந்தங்களுக்குரிய யானைகளுக்கு செய்யும் தீங்கென்று தோன்றியது பத்து நிமிடத்திற்குள் அந்த தந்தச்சிலை பகுதியிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

தேங்காய்

அன்று மாலை நண்பர் சங்கரன் குட்டி அவர்களின் இல்லத்திற்கு சென்று விருந்துண்டோம்/ அங்கிருந்தே ரயிலேறி இரவில் துயின்றபடி ஒரிசாவிலிருந்து கிளம்பினோம் .

ஒவ்வொரு பயணத்திற்கு பின்னரும் அதன் நினைவுகள் ஒன்றுகூடி கலந்து ஒரு கனவுப்படலமாக ஆவதுண்டு அன்றும் நல்ல களைப்பில் முழுமையாகவே தூங்கிவிட்டு காலை எழுந்து மழையில் நனைந்த நிலப்பகுதி இருபுறமும் ஒழுகிச்சென்று கொண்டிருக்க புலர்காலையை பார்த்துக்கொண்டிருந்த போது கோனார்க்கின் பெருந்தேர் உருளத்தொடங்கியது.

 

[நிறைவு]

முந்தைய கட்டுரைவிஷ்ணுப்பிரியா -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22