ஜப்பான் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

 

வணக்கம். ஐந்தாவது, ஆறாவது கட்டுரை வாசிக்கும் போதே, நீங்கள் இன்றைய ஜப்பானின் உறவுச்சிக்கல்களை ஏதோ ஒரு கட்டுரையில் தொடூவீர்கள் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. பதினைந்தாவது கட்டுரையில் அது வந்தது. கட்டுரைத் தொடரின் கனத்த பகுதி.

 

குறிப்பாக உழைப்பு பற்றிய பகுதி. உழைப்பு பற்றிய பொதுவான நோக்கினை உடைத்தெறிவது. மசானபு புஃகோகோ ஒற்றை வைக்கோல் புரட்சியில் வேளாண்மை செய்வது பற்றி இவ்வாறு சொல்லியிருப்பார். மனிதன் குறைவான நேரமே உழைக்க வேண்டும், ஆறு மாத காலம் உழைப்பு, ஆறுமாத காலம் ஓய்வு (இசை, எழுத்து, பயணம் இதற்கானது). அவருடைய கோட்பாடே ஆகக்குறைவான இடையீட்டில்  வேளாண்மை செய்து உணவீட்டுவது.

 

நீங்கள் உழைப்பு பற்றிக் கூறியிருப்பதை இதையொட்டி யோசிக்கிறேன். நான் பணிபுரியும் கச்சா எண்ணெய் மற்றும் அது சார்ந்த ஒப்பந்த நிறுவனங்களில் ஜப்பானிய, கொரிய நிறுவனங்களும் உண்டு. அங்கே பணி செய்வதென்றால் இரவு பகல் கிடையாது என்று நண்பர்கள் சொல்வார்கள். ஒரு நாளின் பெரும்பகுதியை அலுவலகத்தில் செலவிடும் இந்தியர்களுக்கே கொரியாவும், ஜப்பானும் கிலியைத் தருவது.

 

சென்ற நூற்றாண்டில் ஜப்பானில் வாழ்ந்த ஒரு கீழைத்தேய ஞானி வாழ்வின் நோக்காகப் பகிர்ந்திருப்பதற்கும், இன்றைய ஜப்பானின் (இந்தியர்களாகிய நாமும் தான்) நேரெதிரான செல்திசையும் ஒரு முரண்நகை.

 

நன்றி,

வள்ளியப்பன்

அன்புள்ள ஜெ

 

சமீபத்தில் நீங்கள் எழுதியவற்றில் ஜப்பானியப் பயணக்கட்டுரை மிகச்சிறப்பானது. ஒருவாரக்காலமே ஜப்பானில் இருந்திருக்கிறீர்கள். ஆனால் சரியாகத் திட்டமிட்டு ஜப்பானின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை பார்த்துவிட்டீர்கள். ஜப்பானின் பண்பாடு, கலை, வரலாறு, இன்றைய வாழ்க்கைச்சூழல் என எல்லாவற்றையுமே தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். வெறுமே செய்திகளாக இல்லாமல் உங்கள் கவனிப்புகளையும் நீங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தியிருக்கும் விஷயங்களையும் மிக முக்கியமான கொடை என நினைக்கிறேன். உதாரணம் கன்பூஷியஸ் மதத்திற்கும் ஜென் மதத்திற்கும் இடையேயான உறவு பற்றிய ஆழமான கருத்து. போதிசத்வர்கள் எப்படி ஷிண்டோ மதத்தை பௌத்தம் உள்ளிழுக்க உதவின என்ற கருத்து ஆகியவை. நான் ஏழாண்டுக்காலம் ஜப்பானில் இருந்தவன். எனக்கே ஒட்டுமொத்தமான ஒரு சித்திரம் கிடைத்த்து. நன்றி

 

எஸ்.லக்ஷ்மிநாராயணன்

அன்புள்ள ஜெ

 

ஜப்பானியப் பயணக்கட்டுரை சிறப்பானது. அதில் நீங்கள் ஜப்பானிய ஆளுமைகளைத் தொகுத்து அளித்திருந்தீர்கள். ஆன்மிகம் முதல் ஓவியம் வரை. அதில் ஹாருகி முரகாமி இல்லை. ஏன் இல்லை என்பது கடைசி அத்தியாயத்தில் புரிந்தது.

 

ஜப்பானிய பெருங்கலைஞர்கள் ஏன் அணுகுண்டு நிகழ்வு பற்றி படம் எடுக்கவோ பெரிய படைப்புகளை உருவாக்கவோ இல்லை என்பது ஓரு முக்கியமான கேள்வி. அது எனக்கும் தோன்றவே இல்லை. நான் ஜப்பானிய சினிமாக்களை பத்தாண்டுகளாக தொடர்ந்து பார்த்து வருபவன்

 

விடுபடல் என்றால் மாங்கா காமிக்ஸ் பற்றிய விரிவான சித்திரம் இல்லை என்பதுதான்

 

கலைச்செல்வன் ராமசாமி

ஜப்பான் ஒரு கீற்றோவியயம் 16

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -14

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -13

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -8

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -5

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

Save

Share

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை – 28
அடுத்த கட்டுரைவிஷ்ணுப்பிரியா -கடிதங்கள்