அறம் சோற்றுக்கணக்கு -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு ..,
அறம் சிறுகதையின் உணர்வெழுச்சியில் இருந்து விடு படுவதற்குள் சோற்றுகணக்கு
இன்னும் ரெண்டு சிறு கதைகள் வந்து விட்டன, பீரிட்டு கிளம்புகிறதோ எழுத்து என்று மலைப்பை தரும்படியாக ;;
இதில் சோற்றுகணக்கு சிறுகதையை வாசித்தேன்.., பெரும்பாலான பேச்சிலர் நண்பர்கள் ஒரு முறையேனும் சாப்பாடு சம்பந்தமான ஏதாவது ஒரு மறக்க முடியாத நினைவுலகை கொண்டிருப்பார்கள் எனக்கும் உண்டு அது ;;, ஒரு உண்மையான மனிதனின் ஒரு உண்மையான டைரியை படிப்பது போன்றதொரு உணர்வு , முபாரக் ஓட்டல் குறித்து வைத்து கொள்கிறேன். இயல்பான குணத்துடன் கதையில் வரும் கெத்தேல் சாகிப் மூலியமாக மட்டுமே இன்னும் சில வருடங்கள் கழித்தாலும் இந்த கதையை பற்றி தூண்டலாக நினைக்கமுடியும் அந்த மாதிரியான ஒரு உன்னதமே ஆளுமை கெத்தேல் சாகிப்.;; அது என் அம்மாவின் சோறு என்பதனால்தான் கொடுக்கவில்லை.;; நான் அவர் மடியில் பிறந்து அவரிடம் முலையுண்டவன் என்று – அவரை பற்றி ரொம்ப ரொம்ப சுருக்கமாக சொன்னது மாதிரியான வரிகள் ;; நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? .., மிக தூய தொரு வரிகள்

யோசிக்கையில் நடைமுறையில் மனிதர்களை பார்க்கும் போது கெத்தேல் சாகிப் மாதிரியான மனிதர்கள் கற்பனையின் மூலமாகவே உணரும் துரதிர்ஷ்ட, மிக உத்திரவாதமான ஒரு ஆன்ம இழப்பை இந்தியா என் தலைமுறையில் இருந்து பெற்று கொண்டு விட்டதோ என்ற ஏக்கம் மட்டுமே எஞ்சுகிறது;;

ரொம்ப நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு


Regards
dineshnallasivam

ஜெ.,
முதல் கடிதத்தில் விடுபட்டது இது.
//நான் எழுதின முதல்செய்யுளும் அதுதான். கடைசிச் செய்யுளும் அதுதான்//

ஆனால், மீண்டும் வாழ்த்தி “மெட்டிஒளி சிதற…” என்று எழுதுகிறாரே? முதுமையின் காரணமாக மறதியாக அப்படிச் சொல்கிறார் என்று கொள்ளலாமா?

தவறு இருப்பின் மன்னிக்கவும்.

“அற”த்தினால் அடைந்த உணர்ச்சிப் பெருக்கு “சோற்றுக்கணக்கு”, “மத்துறு தயிர்” இரண்டிலும் அடையவில்லை. அறம், மத்துறு தயிர், சோற்றுக்கணக்கு – இதுதான் என் விருப்ப வரிசை.

மத்துறு தயிர் – ஒரு வேளை நான் மிக நல்ல ஆசிரியர்களை நெருக்கமாக உணரவில்லையோ என்னவோ. இப்போதெல்லாம் ph.d supervisors பலர் மாணவர்களை (மனதோடு) நெருங்கவிடுவதில்லை- அமெரிக்க பாதிப்பு. மிக நல்ல ஆசிரியத் தகுதி மிகுந்தவர்கள்தான், ஆனால் நேற்று பார்த்த படம் பற்றியோ, இலக்கியம் பற்றியோ மூச்! நெருங்கினால் ஏய்த்துவிடுவார்கள் என்ற பயமோ என்னவோ :)

சோற்றுக்கணக்கு – உணார்ச்சிகரமான “சோற்றுத் தருணங்கள்” என் வாழ்க்கையில் அமைந்திருந்தால் கதையோடு மேலும் ஒன்றியிருப்பேன். சிறுவயது முதலே விடுதியில் தங்கிப் படித்ததால் ருசி எனக்கு ஒரு பெரிய ஈர்ப்பாக இருந்ததில்லை. அதுவும் காரணமாக இருக்கலாம்.

சோற்றுக்கணக்கு ,மத்துறு தயிர் – இரண்டையும் மறுவாசிப்புக்கு குறித்துக்கொள்கிறேன். (அறம் மனப்பாடமாகவே தெரியும்!)

நன்றி

வெங்கட்

என்னைப்பொறுத்தவரை ஒரு கதை என் வழியாக நிகழ்கிறது- அதை நான் கட்டமைப்பதில்லை. ஆகவே ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்கிறதென்றால் அதற்கு அந்த கதாபாத்திரமே காரண,.ம். அதற்கு ஏதவது காரணம் இருக்கும் என்றே எடுத்துக்கொள்வேன் )))

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார் ..,
தங்களின் அறம் சிறுகதையை வாசித்தேன். என்ன சொல்றது குட்டையில பாறங்கல்ல போட்டது மாதிரி கனத்து விட்டது மனசு ;; படிகின்றவனை சில கணங்களில் தீவிர உணர்வெழுச்சியை ஏற்படுத்தி ஒண்ணுமே தெரியாது போகிறது படைப்பின் சமநிலை, “காசுகுடுத்து ஊம்பச்சொல்லியிருந்தாலும் அப்டியே உக்காந்திருப்பேன், அந்தமாதிரி நெலைமை” திடுகென்று ஒரு ஐயோ!! ” மானம் காத்த கிருஷ்ணபரமாத்மா கோட்டு ரூபத்திலே வந்தார்னு வைங்கோ… – சொல்றவரு சாதாரணமான தான் சொல்றாரு எனக்கு தான் கேட்க மாட்டேன் என்கிறது நூறு புக்கையுமே நானே எழுதறேன்னு சொன்னேன்..’ ஒரு பெரிய ஏமாத்து நடக்கபோவுது என்று இந்த வெள்ளந்தியான வீம்பு அப்பவே சொல்லிவிடுகிறது அத முடிக்கிறதுக்கு அவர் பட்ட கஷ்டத்தை சொல்லிட்டு போறது நீங்கள் நினைப்பது மாதிரி வருமே அத்தனை துயரம் நிறைந்த புன்னகையை சமீபத்தில் நான் கண்டதில்லை -அது எப்பேற்பட்டதாக இருக்கும் என்னால் கற்பனை பண்ண முடியவில்லை சார் ’என் பொண்ணு வாழ்க்கைய கெடுக்காதீங்க மொதலாளீ’ன்னு சொல்லி மேஜைக்கு அடியிலே குனிஞ்சு செட்டி காலைப்புடிச்சுகிட்டேன் அங்கேயே நின்னேன். இருட்டினதும் மறுபடியும் முதலாளி காலிலே விழுந்து அழுதேன். போடா போடான்னு புடிச்சு வெளியே தள்ளிட்டாங்க’ – நெசம்மாகவே கண்ணு கலங்கிடிச்சு ஜெயமோகன் சார், – நிகழ்வுகள் மேலும் மேலும் இன்னும் விரியமாக விரிவடைந்து கொண்டே போகின்றது வெண்பாவை கோபத்தில் எழுதி வீட்டிலே ஒட்டி விட்டு இல்லானே சரஸ்வதி தேவிடியாள் என்று சொல்லு விட்டு வருவது , சேலைபாவாடையோட தோலும் சதையும் வெந்து தாரோட சேர்ந்து ஒட்டியிருந்துச்சுன்னு சொன்னாங்க’ எல்லாமே உச்ச அனுபவமாகவே;; சரஸ்வதிகடாட்சம்னா என்ன? மனசிலே தீயிருந்தா அவ வந்து ஒக்காந்தாகணும். அதான் அவளோட விதி… மத்ததெல்லாம் சும்மா…- என்ன ஒரு வார்த்த அசால்டா சொல்லிட்டு போறாரு.ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது — ச்சே எப்படி முடியுது எந்த கதை , அனுபவத்த நேருக்கு நேரா காட்டிவிட்டு போகிற எவ்வளவு எளிமையான நடை ரொம்ப அருமை சார்,

சங்க சித்திரங்களில் உங்களை பத்தி குறிப்பு எழுதி இருப்பீர்கள் government ஆபிசில் நடந்த ஓன்று அதுவும் முடிக்கும் போது நினைவுக்கு வந்தது , அந்த பெரியவர் உங்கள் பத்தி சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது “இவருக்கு எல்லாம் கதவு தான திருக்கும் இல்லைனா ஓடச்சிருவாறு மனுஷன்” —


Regards
dineshnallasivam

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு
சோற்றுக் கணக்குப் படித்தேன். ரொம்ப, ரொம்ப, புடிச்சு இருந்துச்சி. அருமையான கதை.
ஒரு தடவ கதைப் பத்தி கருத்து சொல்ல ஆரம்மிச்சா, பிறகு கருத்து சொல்றதுக்காகவே கதைப் படிக்க தோணிடுமோன்னு ஒரு நினப்பு எப்பவும் உண்டு.
ரொம்ப நாள் கழிச்சு நல்ல கதைப் படிச்சிருக்கேன்.
நன்றி.
S.Sulochana

அன்புள்ள ஜெயமோகன் ,
தங்களின் ‘சோற்றுக்கணக்கு’ கதையை இன்றுதான் படித்தேன். நெகிழ்ந்தேன். தெய்வங்களைத் தேடி கோவில் கோவிலாய் அலைய வேண்டியதில்லை . கண்ணெதிரே தெய்வங்கள், வாழும் தெய்வங்கள் உலவுகின்றன. அவற்றைப் பார்க்கும் , பார்த்து அனுபவிக்கத்தெரிந்த மனம்தான் வேண்டும். மனித இயல்பின் இரண்டு எல்லைகளை மிக அழகாகத் தொட்டுக்காட்டியுள்ளீர்கள் . இறுதி வரி கதையின் உன்னதம்
‘வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’

அன்புடன்
சங்கரநாராயணன்

ஐயா
வணக்கம்.

தங்களுடைய சோற்றுக் கணக்கு, அறம் மற்றும் மத்துறு தயிர் கதைகளை படித்தேன். படிதேன் என்பதை விட மூழ்கினேன் என்பது சரி. அண்மையிலே தான் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். முதலில் சுஜாதா, பிறகு நீங்கள். உங்கள் வலைப்பதிவுகளுக்கு twitter இல் ஒரு நண்பர் மூலமாக அறிமுகமானேன்.

உங்கள் எழுத்து நடை என்னை அசைய விடாமல் உட்கார செய்கின்றது. படித்த பின் மனதில் ஒரு சொல்ல தெரியாத பாரமும், கதை பாத்திரமாகவே ஆகின ஒரு உணர்ச்சியும் ஏற்படுகிறது. கதையின் தாக்கத்திலிருந்து வெளிவர குறைந்தது ஒரு நாலாவது தேவைப்படுகிறது.

உங்கள் எழுது நீண்ட நாள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சீ. இராம்பிரசாத்

முந்தைய கட்டுரைவெ.நாராயணன் -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவணங்கான், ஒரு கடிதம்