வணக்கம் ஜெயமோகன்
சரஸ்வதி விஜயபாஸ்கரன் குறித்தான நினைவாஞ்சலிக்கு நன்றி.
ஆனால், இரு தவறுகள் இடம்பெற்றுள்ளன.
முதலாவது சரஸ்வதி நின்றது. இந்த செயலைச் செய்தவர்கள் ஜீவாவும் தி க சிவசங்கரனும்.
தி.க.சி அக்காலத்தில் தாமரை பொறுப்பில் கிடையாது. பின்னாளில்தான் தாமரை பொறுப்பாசிரியராகிறார். அவர் சரஸ்வதி நின்றுபோக காரணமாக இருந்ததுமில்லை. ஜீவா மட்டுமே காரணம்.
இதை விஜயபாஸ்கரனே தன்னுடைய “ யோசிக்கும் வேளையில்” ( இத்தலைப்பு முன்னாளில் வல்லிக்கண்ணன் சமரம் இதழில் பயன்படுத்தியது) என்கிற யுகமாயினி கட்டுரையில் ( மே 2010 – பக்கம் 16) சரஸ்வதி நிறுத்தப்பட்டு தாமரை துவங்குவதற்கானச் சூழலைக் குறித்து விளக்கமாக எழுதியிருப்பதோடு “ சரஸ்வதி களஞ்சியம்” தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரையிலும்,” திரும்பிப்பார்க்கிறேன்” என்கிற நூலிலும் ஓரளவு விரிவாகவே இந்த விவகாரத்தை விளக்கியிருக்கிறேன் “ என்று சொல்கிறார். இவ்விவகாரம் குறித்து அறிந்த மல்லிகை டொமினிக் ஜீவா மே மாத மல்லிகை இதழிலும் இவ்விவகாரம் குறித்து பதிவு செய்திருக்கிறார். அத்துடன் விஜயபாஸ்கரன் வார்த்தைகளில் அதே கட்டுரையில், “ தாமரை பொறுப்பேற்று ஒன்றிரண்டு ஆண்டுகள் தி.க. சி., பணிபுரிந்த நாட்கள்தான் தாமரையின் பொற்காலம் “ என்கிறப் பதிவையும் காணலாம்.
அதுமட்டுமின்றி, கடந்த ஓரிரு வருடங்களாக விஜயபாஸ்கரன் அவர்களுடன் நெருங்கி பழகியிருந்தவனாதாலாலும், அவருடைய சமரன் இதழில் வல்லிக்கண்ணன் எழுதியிருந்த “ ஆட்சிப் பொறு[ப்பில் எலிகள்” என்கிற புத்தகம் வெளியிடக் காரணமாகவும் இருந்தேன், சில செய்திகளை அவரே சொல்லக்கூறி கேட்டுமிருக்கிறேன் என்பதனாலும் . நடந்தவைகளுக்குச் சாட்சியாக விஜயபாஸ்கரனின் சகோதரர் மோகனகிருஷ்ணன் என்னுடன் இருக்கிறார் என்பதினாலும் உறுதியாகச் சொல்லமுடியும். சரஸ்வதி நின்று போனதற்கு ஜீவா-வும் வேறு சிலரும் காரணமேயன்றி தி. க.சி அல்ல .
இரண்டாவது “ சரஸ்வதிகாலம்” நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன் விஜயபாஸ்கரன் அல்ல.
இதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரக்காரணம் எத்தனையோ நபர்களை வாசகர்களாகக் கொண்ட உங்கள் வலைப்பதிவில் வரலாற்றுப் பிழை இடம் பெறக்கூடாது என்பது மட்டுமே யன்றி வேறு காரனம் ஏதுமில்லை
அன்புடன்
சித்தன்
யுகமாயினி
yugamayini.blogspot.com
அன்புள்ள சித்தன்
நன்றி
தவறுகளைத் திருத்துகிறேன்
தாமரை இதழ் மூலம் சரஸ்வதி நின்று போக தி க சி யும் ஒரு காரணம் என்பதைச் சுந்தர ராமசாமி சொன்னதாக நினைவு. அதை இன்று விளக்கமாக நினைவுகூர முடியவில்லை.
சரஸ்வதிக்காலம் வல்லிக்கணன் நூல்தான். இப்போதுதான் எடுத்து மீண்டும் பார்த்தேன். நான் அவரது நினைவுகளையும் அந்நூலையும் குழப்பிக்கொன்டிருக்கிறேன் போலும்
நன்றி
ஜெ