கதிரவனின் தேர்-8

 

ஆறாம் தேதி மாலையில் சென்னைக்குக் கிளம்புவதாகத் திட்டம். ஆகவே அன்று பகலில் புவனேஸ்வரில் எஞ்சும் முதன்மையான ஆலயங்களைப் பார்த்துவிடலாம் என்று எண்ணினோம். புவனேஸ்வர் ஓர் ஆலயநகரம். இங்குள்ள அனைத்து ஆலயங்களையும் பார்க்க ஒருமாதமாவது தேவை. தவிர்க்கமுடியாத ஆலயங்கள் என சில உள்ளன. நல்லூழாக அவை அனைத்துமே அருகருகே உள்ளன.

புவனேஸ்வரில் முக்கியமான கலைமையம் லிங்கராஜ் ஆலயம்.பிரம்மாண்டமானது புரி கோயிலை விடவும் சிற்பச் கொண்டது. இந்த ஆலயத்திலிருந்துதான் இவ்வூருக்கே இப்பெயர் வந்தது. புவனேஸ்வரின் மிகப்பெரிய ஆலயம் இது, மிகபழைய ஆலயமும் இதுதான். லிங்கராஜ் என்றால் லிங்கங்களின் அரசன். இங்குள்ள சிவலிங்கம் கீர்த்திவாசன் என்றும் பின்னர் ஹரிஹர லிங்கம் என்றும் வழிபடப்படுகிறது. விஷ்ணுவும் சிவனும் இங்கே லிங்கத்தில் குடிகொள்கிறார்கள்.

யூகலிப்டஸ் மலர்க்கூம்பு]

நாகரா கோபுரக்கூம்பு

பின்னர் இந்த இறைவன் திருபுவனேஸ்வரர் என அழைக்கப்பட்டார். இறைவி பெயர் புவனேஸ்வரி. அதிலிருந்தே இவ்வூர் புவனேஸ்வராலயம் என்று பெயர் பெற்றது. விந்தைதான், இங்கிருப்பவர் புவனேஸ்வரர் புரியில் இருப்பவர் ஜகன்னாதர். புடவியை ஆள்பவர்கள், புடவியின் தலைவர்கள்.

இன்றிருக்கும் லிங்கராஜ் ஆலயம் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோமவன்ஷி [சோம வம்சத்தவர்] என்னும் அரசகுடியினரான யயாதி என்னும் மன்னரால் கட்டப்பட்டது. இவர் 1025 முதல் 1040 வரை ஒரிசாவை ஆட்சி செய்தவர். ஆனால் ஆறாம் நூற்றாண்டு முதலே இங்கே இந்த ஆலயம் சிறிய அளவில் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.

ஆய்வாளர்கள் கிபி 615 முதல் 657 வரை ஆண்ட லாலத் இந்து கேஸரி என்னும் மன்னரால் இந்த ஆலயம் முதலில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். புரியின் ஜகன்னாதர் ஆலயத்தைக் கட்டிய கங்க மன்னர்கள் [கர்நாடகத்தை ஆண்ட கங்கர்கள் அல்ல] லிங்கராஜ் ஆலயத்திற்குள் உள்ள வைணவ ஆலயங்களைக் கட்டினர். அப்போதுதான் இந்த இறைவன் ஹரிஹரன் ஆனார். ஆலயத்தின் இன்றைய தோற்றம் கங்கர்களால் நிறைவுறச்செய்யப்பட்டது.

முன்பு இந்த ஆலயம் ஏகாம்ர க்ஷேத்ரம் என அழைக்கப்பட்டது. அம்ரம் என்றால் மாமரம். ஒற்றை மாமரம்.இந்த ஆலயத்தின் ஆலயமரம் அது. கிபி 1172ல் இரண்டாம் ராஜராஜன் இந்த ஆலயத்திற்கு பொற்கொடை செய்ததை ஒரு கல்வெட்டு சொல்கிறது.

லிங்கராஜ் ஆலயத்தின் கோபுரம் 180 அடி உயரமானது. இது தேவ்லா என்னும் பாணியில் அமைந்தது. ஒரிசாவுக்குரிய ஆலயக்கட்டுமான பாணி இது. தேவ்லா என்றால் வங்கத்திலும் ஒடிய மொழியிலும் ஆலயம் என்று பெயர். கிழக்குநிலம் முழுக்க இந்தப் பாணி பரவியது.

தேவ்லா பாணி என்பது கருவறைக்குமேலேயே கோபுரமும் அதற்கு முன்பாக இரண்டு அடுக்குகளாக மண்டபங்களும் கொண்டது. போகமண்டபம் நிருத்ய மண்டபம் என இந்த மண்டபங்கள் அழைக்கப்படுகின்றன. பொதுவாக மிக உயரமான அடித்தளத்தின் மேல் இந்த மண்டபங்கள் அமைந்திருக்கும். இந்த கலிங்கப்பாணி தஞ்சைப் பெரியகோயிலின் கட்டுமானத்தில் பெருமளவு செல்வாக்கு செலுத்தியிருப்பதைக் காணலாம்.

சிவப்பு மணற்பாறையாலும் Laterite எனப்படும் செங்கப்பிக் கல்லாலும் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. சிவப்புக்கல் இது மரத்தாலனதோ என்னும் விழிமயக்கை உருவாக்குகிறது. மணற்கல் சிற்பங்களுக்கு அற்புதமாக நெகிழ்ந்துகொடுக்கிறது. ஆகவே கிட்டத்தட்ட ஹொய்ச்சாளர்களின் கரியமாக்கல்லுக்கு நிகராகவே நுட்பமான செதுக்குகளுடன் இச்சிற்பங்கள் அமைந்துள்ளன. கையளவே உள்ள நடனமங்கை சிலையின் காதணியில் கொடிவளைவுகளும் மலர்களும் உள்ளன

ஜேம்ஸ் ஃபெர்கூசன்

பிரிட்டிஷ் இந்தியச் சிற்பவியலாளரான ஜேம்ஸ் ஃபெர்கூசன் [ James Fergusson] ஒடிய கட்டிடக்கலை குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். அவர் லிங்கராஜ் ஆலயம்தான் நாகரபாணி கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணம் என்கிறார். கஜுராகோவின் காந்தரிய மகாதேவர் ஆலயம் இன்னும் அலங்காரமானது என்றாலும் அதன் கலைப்பாணி இதைப்போல கலப்பற்றது அல்ல என அவர் குறிப்பிடுகிறார்.

நாகரபாணி கோபுரம் நோக்க நோக்க உளம்கவர்வது. அதற்கு இருப்பது கட்டிடத்தின் அமைப்பு அல்ல. கல்லில் எழுந்த மலர். அது ஓர் உயிர், தானாக வளர்ந்து உருவானது என்ற உளமயக்கிலிருந்து விடுபடவே முடியாது. மலர்களில்தான் இத்தகைய நுட்மபான பொறியியல் அமைப்பு காணப்படும். மக்காச்சோளக் கொண்டை போல நூற்றுக்கணக்கான சிறு அலகுகளை ஒன்றுடன் ஒன்று அடுக்கி வளைவுகளாக கொண்டு சென்று மேலே கவிழ்ந்த தாமரையில் முடிக்கும் வடிவம்இது. இன்னும் பொருத்தமாக யூகலிப்டஸ் பூவுக்கு உவமை சொல்லலாம்.

இந்த சிறிய அலகுகள் சிகரங்கள் எனப்படுகின்றன. நகைகள் இவ்வாறு தனித்தனியான சிறிய கொக்கிகளாகச் செய்யப்பட்டு அடுக்கி இணைக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். எல்லா கொக்கிகளும் ஒன்றுபோலவே இருக்கும். ஆனால் அடுக்கி முடிக்கையில் வளைவும் குழைவும் உருவாகி வந்திருக்கும். ஒவ்வொன்றுக்கும் நடுவே இருக்கும் வேறுபாடு அத்தனை நுட்பமானது

எங்களுடன் வந்த வழிகாட்டி கோயில் பூசாரி ஒருவரை எங்களுக்கு ஏற்பாடு செய்து தந்தார். அவர் உள்ளே அழைத்து சென்று லிங்கராஜ் ஆலயத்தின் முக்கியத்துவத்தை எங்களுக்கு உரைத்தார். உடைந்த ஆங்கிலம் என்றாலும் அவரால் எல்லாவற்றையும் சொல்லிவிட முடிந்தது. ஆனால் புகைப்படங்கள் எடுப்பது அனுமதிக்கப்படவில்லை.

புரியைப்போலவே இங்கும் ஒவ்வொரு நாளும் படையலுக்கு புதிய மண் கலங்களே பயன்படுத்தப்படுகின்றன. நூற்றெட்டு கலங்களில் உணவும் இனிப்பும் சமைத்து இறைவனுக்கு படைக்கப்பட்ட பின்னர் முற்றாகவே வெளியே வந்திருக்கும் பக்தர்களுக்கும் இரவலர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

ஆலயத்திற்குள் பெரிய வட்டவடிவ பள்ளத்திற்குள் சிவலிங்கம் அமைந்துள்ளது. முகமண்டபத்தில் பாண்டாக்கள் அமர்ந்திருந்தார்கள். அங்குள்ள வழக்கம் ஒவ்வொரு பக்தரையாக பண்டா அழைத்துசென்று மூலவரை தரிசிக்க வைத்து வெளியே இட்டுவந்து காணிக்கை பெற்றுக்கொள்வது. எங்களை அழைத்து சென்ற பாண்டா காணிக்கை எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. நிறைவடைந்தீர்களா நிறைவடைந்தீர்களா என மும்முறை கேட்டார். நாங்கள் அளித்த நன்கொடையை மட்டும் பெற்றுக்கொண்டதற்கு சான்று தந்தார்.

லிங்கராஜ் ஆலயத்தை ஒருமணி நேரம் சுற்றிபார்த்தோம். ஒவ்வொரு நாளும் அதன் உச்சியில் கொடி ஏற்றப்படுகிறது உள்ளிருந்து உச்சிக்கு செல்வதற்கு வழியேதுமில்லை. இக்கோபுரத்தின் சிகரங்களுக்கு நடுவே இருக்கும் ஓடை போன்ற மடிப்புக்குள் கால் வைத்து தொற்றி அத்தனை தூரம் செங்குத்தாக ஏறிவிடுகிறார்கள். அவ்வாறு ஒரு பூசகர் ஏறுவதன் ஒரு காட்சிச் சித்திரத்தை வழிகாட்டி அவருடைய செல்பேசியில் எங்களுக்கு காட்டினார். வயிறு கூசச்செய்வதாக இருந்தது அது.

ஆனால் அவர்களுக்கு அது பழகிவிட்டது அவர்கள் அந்த ஆலயத்திற்குள்ளேயே பிறந்து வளர்ந்து முதுமை எய்தி மடிபவர்கள் அங்குள்ள சிற்றுயிர்களைப்போல, குரங்குகளைப்போல. ஒருவகையில் அதுவும் ஒரு பொருளுள்ள வாழ்க்கை என்று தோன்றியது. ஒரு மனிதனுக்கு வாழ்வதற்கு ஓரிடத்திற்கு மேல் தேவையில்லை ஓரிடத்தில் முழுமையாக வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை போதுமானதும் அல்ல.

லிங்கராஜ் ஆலயத்தை ஒர் ஆலய வளாகம் என்று தான் சொல்லவேண்டும். ஆலயத்திற்குள் ஏராளமான சிறிய ஆலயங்கள் இருந்தன. மிக அழகிய சிற்ப அமைப்புகள் கொண்ட ஆலயங்கள் இங்குள்ளன. ஒருகணத்தில் செந்நிறச் சிதல்புற்றுகள் நடுவே சூழ்ந்து நடக்கும் உணர்வு உருவாகியது. அல்லது செந்நிற பெருமலர்கள்

ஒருகாலத்தில் ஒரிசா நாகர்களின் நிலமாக இருந்திருக்க கூடும் இங்கு ஆலயங்கள் அனைத்திலுமே வெவ்வேறு வகையில் நின்றும் பிணைந்தும் சுழன்றும் உருக்கொண்டிருக்கும் நாகங்களை பார்த்தோம் நாக உடல்களின் பின்னல்களில் அமைந்திருப்பதில் கணிதமும் கலையும் ஊடுபாவுமாக அமைந்த விந்தை

இது கர்ணனின் நிலம் அவன் நாகபாசன். இந்தியாவெங்கும் கையில் பாம்புடன்தான் அவன் தோற்றமளிக்கிறான் இது எவ்வகையில் நாகர்களின் நிலம், எவ்வாறு இது கலிங்கமாயிற்று, எவ்வாறு பின்னர் ஒரிசாவாயிற்று என்பது தொன்மத்தையும் வரலாற்றையும் உள்ளுணர்வுடன் புரிந்துகொண்டு மெய்நாடி செல்லும் பெருநோக்கு கொண்ட ஆய்வாளர் ஒருவரால் எழுதப்பட வேண்டியது

[கர்ணன் சிலை, சிவைகுண்டம், தமிழ்நாடு]

 

லிங்கராஜ் ஆலய வளாகத்தை ஒருகணத்தில் ஒரு பெரும் நீர்நிலை போல் உணர்ந்தேன். எங்களூர் நீர்நிலைகள் அனைத்திலும் கரையில் நிற்கும் தென்னை மரங்களின் நிழல்கள் விழுந்து பல்லாயிரம் பேருருவ நாகங்கள் நெளிந்துகொண்டிருக்கும். இங்கு நாகங்கள் நெளிந்து நெளிந்து உருவாக்கிய பரப்பு உறைந்து கல்லென்றாகி ஆலயமென்றாகி நின்றது

ஆலயத்தின் சிகரங்களும் நீர் நெளிவுகளே. கோபுரத்தின் மேல் இருக்கும் அந்த கல்மலர் அந்நீரின் மேல் மலர்ந்தெழுந்தது. கலையின் மாயம் சென்று தொட்டால் புகையென்றும் நிழலென்றும் தழலென்றும் கூட கல் உருமாறும்.

 

 

முந்தைய கட்டுரையானை டாக்டர் மீண்டும்…
அடுத்த கட்டுரைகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது