கதிரவனின் தேர்-7

நான் முதன்முறையாக கொனார்க்குக்கு வந்தபோது  ஒரிசாவில் சூரியக்கோவிலைத் தவிர பார்ப்பதற்கு வேறு இடங்கள் உள்ளன என்று தெரிந்திருக்கவில்லை. அங்கு வந்துவிட்டு அங்கிருந்து கயா சென்றேன். பின்னர் காசி. அன்றே யுனெஸ்கோ நிறுவனம் சூரியர் கோவிலை மறுகட்டமைக்கும் பணியை தொடங்கிவிட்டிருந்தது. மொத்தக் கோயிலுமே கம்பிச் சட்டங்களால் தாங்கி நிறுத்தப்பட்டிருந்தது. கருவறைகளுக்குள் கற்கள் கொட்டப்பட்டு உள்ளே நுழைவதற்கான மாவட்ட ஆட்சித்தலைவரின் தடையாணை எழுதி ஒட்டப்ப்ட்டிருந்தது. வரலாற்றுக்குள் நுழைவதற்கான தடை என அதை அன்று நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தேன்

 

அதன் பின் பலமுறை வந்திருக்கிறேன். இம்முறை அருண்மொழியுடனும் சைதன்யாவுடனும் சென்றபோது அங்கு அது அதே வடிவிலிருக்குமா என்ற எண்ணமே ஏற்பட்டது. முழுமையாக சீரமைக்கப்பட்டு, முற்றிலும் புதிதாக அங்கு ஒரு ஆலயம் இருக்கும் என்ற எண்ணம் எழுந்தபோது அது அவ்வாறு இருக்காது என்ற உறுதிப்பாடும் உடன் எழுந்த்து . சிதைந்த ஆலயங்கள் ஏன் கவர்கின்றன? சிதைவை நம் கற்பனை நிரப்பிக்கொள்ளும் அனுபவத்தால்தான். முழுமையான புதிய ஆலயத்தில் காலம் இல்லை. ஆகவே கனவு இல்லை. சிதைந்த சிற்பங்கள் அவற்றின் சிற்பி எண்ணியதற்கும் மேலான குறியீட்டுத்தன்மை ஒன்றை சூடிக்கொண்டிருக்கின்றன

எண்ணியது போலவே பல்லாயிரம் இரும்புச்சட்டங்களால் தாங்கப்பட்டு சூரியர் கோயில் அங்கிருந்தது. சிறுவயதில் ’கிராஃப்’ நோட்டு பக்கத்தில் நாங்கள் வரையும் படங்களைப்போல. இது குறைதீர பல ஆண்டுகளாகும் .என் வாழ்நாளில் முற்றிலும் பணி முடிந்த கொனார்க் கோயிலை நான் பார்க்க போவதில்லை .மிக மெல்லத்தான் அந்த பணி நடக்கிறது .ஒவ்வொரு பகுதிக்கும் உரிய சிற்பங்கள் கூடுமானவரை அப்பகுதியிலிருந்தே கண்டெடுக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. உடைந்து சிதைந்து கிடக்குமென்றால் அதே கல்லில் அவ்வடிவிலேயே கலைஞர்களைக் கொண்டு முழுமையாக்கி வரையப்பட்டு செதுக்கப்ப்ட்டு பொருத்தப்படுகின்றன. பொறியியலும் கலையும் சந்திக்கும் மிகப்பெரிய பணி இது

 

வழக்கம் போல நிதிப் பற்றாக்குறை, மேற்பார்வைக்குறைவு, அரசு அதிகாரிகளின் அக்கறையின்மை என நீண்டு நீண்டு செல்கிறது இப்பணி. நான் முதல் முறையாக தாராசுரம் ஆலயத்தை பார்க்க வரும்போது அது இவ்வாறுதான் கற்கள் சிதைந்து கிடந்த்து. யுனெஸ்கோவால் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. இன்று கிட்ட்த்தட்ட முழுமையாகவே உருவாகி வந்திருக்கிறது. காலம் சீரழித்ததை மனிதர்கள் சீரமைக்கிறார்கள். அல்லது காலமே மனிதர்களின் கைகளினூடாக தன்னை சீர்மைத்துக்கொள்கிறது.

இந்தக்காலம் மிக விந்தையானது. இருபதாம் நூற்றாண்டு முதல் நாம் எதிர்காலத்தையும்  இறந்த காலத்தையும் சேர்ந்தே கட்டிக்கொண்டிருக்கிறோம் . சில நூறு கிலோமீட்டர்களுக்கப்பால் ஹிராகுட் அணையையும் ரூர்கேலா எனும் இரும்பு நகரையும் கட்டும்போது மறுபக்கம் சூரிய கோவிலையும் உருவாக்குகிறோம்.

 

சூரியர் கோவிலுக்கு நாங்கள் செல்லும்போது இளமழை பெய்துகொண்டிருந்தது மழை இருக்குமென்று முன்னரே தெரியுமென்றாலும் மழையில் சூரியர் கோவிலை பார்ப்பதே ஒர் அனுபவமாக இருக்குமென்று நினைத்தேன். செல்லும் வழியில் இருபுறமும் வயல்களிலும் வெற்றுநிலங்களிலும்  நீர் தேங்கி பளபளத்துக்கிடந்தது. ஓடைகள் சீறிக்கொண்டிருந்தன. அப்போதுதான் ஒரு எண்ணம் வந்தது, நான் மழையிலன்றி ஒரிசாவைப் பார்த்ததே கிடையாது. கோடை காலத்தில் வங்காளத்தில் வெயிலும் அதைவிட மிகுதியாக நீர்வெக்கையும் நிறைந்திருக்கும் என்பார்கள். ஒரிசாவும் அவ்வாறே இருக்க வாய்ப்பு. சிலிக்காவின் நீராவி ஒரிய கடற்கரைப்பகுதியை நிறைத்திருக்கையில் ஒருமுறை வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்

சூரியர் ஆலயத்திற்கு முன் வண்டி நின்றது. கடைகள் பெரும்பாலும் நீலவண்ண தார்ப்பாய்களால் பூட்டி கட்டப்பட்டிருந்தன. பயணிகள் மிக்க்குறைவு. ஆளுக்கொரு சிறிய குடை வாங்கிக்கொண்டோம். பலவண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிச் சிறகுபோன்ற வரைவு கொண்ட மிகச்சிறிய குடைகள். ஆனால் ஆலயத்திற்குள் சென்ற சற்று நேரத்திலேயே சாரல் நின்றுவிட்டிருந்தது .ஈரக்காற்று மட்டும் சுழன்றடித்தது. அவ்வப்போது குடையை விரிக்கவேண்டியிருந்தது. எழுகையில் மட்டும் சிறகு விரிக்கும் பட்டாம்பூச்சிகளைப்போல

 

கொனார்க் சூரியர் கோயிலில் பார்க்கும் விந்தை ஒன்றுண்டு, தொலைவில் அதை பார்க்கும்போது அது மிகச்சிறியதென்று தோன்றுவது, அணுகும்தோறும் பெருகிப் பெருகி எழுவது. இந்த அனுபவம் தாஜ்மகால் பார்க்கும்போது ஏற்பட்டிருக்கலாம். தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில் இந்த அனுபவத்தை எழுப்புவது. படங்கள் வழியாகவும்  தொலைவில் பேருந்தில் செல்லும்போது பார்ப்பதன் வழியாகவும் தஞ்சை பெரிய கோவில் முகப்புக் கோபுரத்தை மிகச்சிறிய கட்டமைப்பு என்று எண்ணுவோம். அருகணையும் போதுதான் தமிழத்தில் உள்ள சராசரியான பெரிய கோபுரங்கள் அளவுக்கே அதன் முகப்புக்கோபுரம் இருப்பது நமக்குத்தெரியும் .உள்ளே சென்று பெரிய கோவிலின் கருவறை கோபுரத்தை அணுகும்போது மீண்டும் முகப்பு கோபுரம் சிறிதாகி அப்பால் தெரியும்.

சூரியர் கோவிலின் முகப்பு மண்டபம் மிக அழகியது. கரிய மணற்கல்லால் ஆன சிற்பங்கள் செறிந்த தூண்கள். சிற்பங்களில் பெரும்பாலானவை நெடுங்காலம் வீசிய காற்றில் மழுங்கி உருவழிந்து நிற்கின்றன. எனக்கு பெரிய பழுப்பு வண்ண பட்டுத்திரைச்சீலைக்கு அப்பால் அச்சிற்பங்கள் முட்டிப் புடைப்புகாட்டி நின்றிருப்பதாகவும், நடமிடுவதாகவும் தோன்றியது. புடைப்புகளினூடாகவே அவற்றின் அசைவுகளின் வண்ணத்தை உய்த்துணர முடிந்தது.

 

களியாட்டுச் சிற்பங்கள் நிறைந்த மண்டபம் இது. கலையின் காமத்தின் களியாட்டு. அல்லது இரண்டும் ஒன்றுதானா? மழுங்கிய சிற்பங்களை நோக்கி நோக்கி வருகையில் ஒரு கல்மடிப்பில் அன்று செதுக்கியது போல் ஒரு புத்தம் புதுச் சிற்பம் நிற்பதை கண்டேன். ஏதோ ஒரு கோணத்தில் அங்கு காற்று மழையும் படாமலாகியிருந்திருக்கும். அதை செதுக்கிய சிற்பிக்கும் அங்கிருக்கும் பல்லாயிரம் சிற்பங்களில் காலத்தை கடந்து நிற்கும் சிற்பம் அது என்று தெரிந்திருக்காது .தெரிந்திருந்தால் அதை அரிதாக ஆக்கியிருக்கக்கூடும் .அதில் தன் முத்திரையை பதித்திருக்க கூடும்.ஒருகாலகட்டத்தில் வாழும் மனிதர்களில் எவர் காலத்தை கடந்து செல்வார்கள் என்று அப்போது தெரியுமா என்ன?

எப்போதுமே கலைஞர்கள் எழுத்தாளர்கள் காலத்தை கடந்து செல்கிறார்கள். பெருவீரர்களும் தலைவர்களும் பெயர் மட்டுமாக சென்றடைகிறார்கள். ஆனால் அதற்கு இணையாகவே மிகஎளிய மனிதர்களும் வரலாற்றில் சென்று நின்றமைகிறார்கள். தமிழக வரலாற்றில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு போன்ற செய்திகள் அவர்களை அழிவற்றவர்களாக்கின. ஒப்பு நோக்க எந்த அரிய தன்மையும் இல்லாத சிலைகள் காற்றாலும் வெளியாலும் தொடப்படாமல் எஞ்சியிருந்தன.

 

கொனார்க் ஒரு மாபெரும் தேர். கற்சக்கரங்களின்மேல் அமைந்திருக்கிறது ஆலயம். நாமறியாத ஏதோ காலத்தின் மேல் ஊறி சென்றுகொண்டிருக்கிறது. அதன் சக்கரங்கள் ஒவ்வொன்றும் பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கின்றன. அவற்றுக்குரிய மூர்த்திகள் அவற்றில் செதுக்கப்பட்டுள்ளன. சூரியநிழல் அவற்றில் நாள்பொழுதை உருவாக்கிச் செய்கிறது. சக்கரங்களின் ஆரங்களில் வட்டங்களில்கூட சிற்பங்கள். சிற்பங்களே பின்னிப்பின்னிப் படர்ந்த இப்பெரும்பரப்பு ஒருவகையில் இந்தியாதான். இங்கே நிலம் முழுக்க மக்கள் உடலாலேயே வெளிநிறைத்து நிறைந்திருக்கிறார்கள்.

நடனக்காட்சிகள், அவைக்காட்சிகள், போர்க்காட்சிகள், தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள். சூரியனின் பலநூறு தோற்றங்களென அச்சிற்பங்களை சொல்லமுடியும். யானைகள், சிம்மங்கள், எருதுகள், பன்றிகள், மனிதர்கள். சூரியன் போகத்தின் வடிவம். விந்தின் வீரியம். ஆகவே கஜுராகோவுக்கு நிகராகவே இங்கு காமச்சிலைகள் உள்ளன. மானுடக் களியாட்டு நிலைகள், மானுட விழைவு கொள்ளும் உச்சங்கள். உடலை மிஞ்சிச்செல்லும் காமம் என்று அவற்றை பார்க்கும்போது தோன்றியது. விசைமிக்க காற்று கடந்துசெல்கையில் காட்டுப்புதர்கள் அடையும் துடிப்பும் நெளிவும். அந்தச் சிலைகளில் உறைந்தமைந்த அசைவுகள் அனைத்தும் அவ்வுடல்களை அல்ல அவற்றை அவ்வாறு ஆக்கிய விசையின் காட்சிவடிவுகள் மட்டுமே

 

அங்குள்ள காமநிலைகளில் பெரும்பாலானவை வெறும் கற்பனைகள். எந்த உச்சக்கட்ட பாலியல் திரைப்படங்களிலும்கூட அக்காட்சிகளை காண முடியாது. அப்படி பாலுறவு கொள்ளும்போது பாலுறவே வதையாக ஆகிவிடும். பெண்ணை தலைகீழாக நிறுத்தி புணர்வதில் என்ன இன்பம் இருந்துவிட முடியும்? குருதி முழுக்க தலைக்குச் செல்லும் என்றால் பாலுறுப்புகளில் எஞ்சுவது என்ன? ஒருவேளை  விசித்திரமான விலங்காக அவள் மாறிவிடுவதை உணரமுடியுமா என்ன?

ஆனால் மனிதனுக்கு காமத்திற்கு உடல் போதவில்லை. உடலாக வெளிப்படும் காமம் எல்லைக்குட்பட்டது . உடலின் எல்லை. அதற்கப்பால் அதற்கப்பால் என்று செல்லும் மானுடக்கற்பனை உடலை சிதைத்து காமத்தை கண்டடைகிறது. அங்குள்ள சிலைகளில் காமநிலைகளில் இருப்பவர்கள் கந்தர்வர்களும் தேவர்களும்தான் என்றொரு கூற்று முன்பு இருந்தது. தேவதாசிகளும் வணிகர்களும் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மனிதன் ஆழத்தில் வாழும் அழியாத உருவங்கள் அவை என்றெனக்கு தோன்றியது.

 

கொனார்க்கின் இச்சிலைகளை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். இங்குள்ள அரிய சிலைகள் அனைத்தையும் பலமுறை விழிகளால் தொட்டெடுத்திருக்கிறேன். மேலே கோட்டங்களில் அமர்ந்திருக்கும் கருங்கல்லால் ஆன மெழுகுமினுப்புடன் கூடிய சூரியர் சிலைகள். அவற்றின் புரவிகள். கற்குளம்புகள் எழுந்து காற்றில் விசைகொண்ட கூர்மை. கல்லிலிருந்து அம்பென எழுந்து விண்ணில் தாவிவிடும் என தோன்றும் அசைவின்மை. உச்சகட்ட விசை அசைவின்மையாக மாறும் தருணம்

இங்கு யானையை காலடியில் போட்டு மிதித்து எழுந்து நின்றிருக்கும் சிங்க சிலைகள் புகழ்பெற்றவை. கலிங்கம் சிங்கத்தை அரச அடையாளமாகக் கொண்டது. இங்கிருந்துதான் சிங்களத்திற்கும் ,சிங்கப்பூருக்கும், கம்போடியா வரைக்கும் கூட சிங்க அடையாளம் சென்றிருக்கிறது. ஒரு காலத்தில் கலிங்கத்தில் சிங்கங்கள் நிறைந்திருக்கலாம். சிங்கம் வாழும் அரைப்பாலைவன நிலம் இங்கில்லையென்றாலும் கூட அவை இங்கு தகவமைந்திருக்கலாம். யானை ராஷ்டிரகூடர்களையும் சாதகர்ணிகளையும் குறிக்கிறது அவர்கள் மேல் கலிங்கம் கொண்ட வெற்றி சின்னம் இச்சிலைகள் என்பார்கள்.

 

இங்குள்ள சிலைகளில் யானைகளின் உடல்நிலைகளும் அசைவுநிலைகளும் செதுக்கப்பட்டிருக்கும் விந்தை நோக்கி நோக்கி தீராதது. சின்னஞ்சிறு சதுரத்துக்குள் பதுங்கிய யானை, திரும்பிப்பார்க்கும் யானை, கொம்புகளை நிலத்தில் குத்தி உடல் குறுக்கிய யானை, துதிக்கையால் முன்காலைதொட்டு பின்காலை முன்னிழுத்து வட்டமாக ஆகிவிட்ட யானை. ஒன்றுடன் ஒன்று படிந்த யானை வடிவங்கள். யானை உடல் போல மொத்தையான உருண்ட வடிவம் வேறுஇல்லை. ஆனால் அதில் முடிவற்ற நெளிவுகளை வளைவுகளை கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒப்பு நோக்க யானையைவிட விசையும் நெளிவும் கொண்டது சிம்மம் .ஆனால் எங்கும்  சிம்மச்சிலைகள் ஓங்கி அறைகூவி நின்றிருக்கும் தோற்றத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன

சிங்க முகம் மனித முகத்திற்கு நெருக்கமானது. ஆனால் உணர்வுகள் வெளிப்படும் சிங்கச்சிலை மிக அரிதானது.சிங்கம் இந்தியாவின் சிற்பங்களில் ஒர் அணிமுகமாக மாற்றப்படுகிறது. சிங்கத்திற்கு நெருக்கமான சிங்கமுகம் இந்திய சிற்பக்கலையில் அனேகமாக இல்லையென்றே சொல்லலாம். நரசிம்மர் சிலைகளில் அது ஒருவகையான முகமூடி போலவே தோன்றுகிறது. அகன்ற வாயும் தொங்கிதிறந்த தாடையும் உருண்ட கண்களும் கொண்டு டிராகனிலிருந்து உருவானது போல தோன்றுகிறது சீனாவிலும் ஜப்பானிலும் கூட சிங்கச்சிலைகள் சிங்கங்களாக இல்லை.

 

சிங்கத்தை சிங்கம் போலவே செதுக்கும் கலை ஐரோப்பாவில் தான் காணக்கிடைக்கிறது .ரோமானியச் சிங்கங்கள், பிற்கால ஜெர்மானியச் சிங்கங்கள்தான் மிகமிக தன்னுரு தோற்றம் கொண்டவை .முடிகளில் காற்று அகைவதைக்கூட கற்சிற்பத்தில் பார்க்க முடியும். சிங்கம் மீது ஐரோப்பாவுக்கு பெரும் மோகம் இருந்திருக்கிறது. கீழை நாடுகளிலிருந்து சிங்கங்கள் தொடர்ச்சியாக கிரேக்கத்திற்கும் ரோமாபுரிக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. அத்தகைய அயலான ஒரு உயிரினத்தைத்தான் அத்தனை கூர்ந்து கவனிப்பார்கள் போலும்.

 

கொனார்க் சிம்மம்
இந்தியச்சிம்மம்
நரசிம்மம்
சீனச்சிம்மம்
ரோமானியச் சிம்மம்

ஆனால் ஐரோப்பியர்கள் சிங்கத்தை ஒர் எதிரியாகவே பார்க்கிறார்கள் என்றும் தோன்றும். பெரும்பாலான திரைப்படங்களில் சிங்கங்கள் கொடூரமான பிறவிகளாக, ‘மான்ஸ்டர்’களகவே காட்டப்படுகின்றன. இந்தியா சிங்கத்தின்மேல் ஏற்றியிருக்கும் வழிபாட்டுணர்வு, தெய்வச்சாயல் அங்கில்லை. நமக்கு சிங்கம் நரசிம்மமாக யாளியாக உருமாறிவிட்டிருகிறது.

 

மிக சமீபத்தில் கனடாவைச் சேர்ந்த டோரன் கார்ட்டர் மற்றும் கரோலின் கார்ட்டர் இருவரும் ஒரு கொல்லப்பட்ட சிம்மத்தின் மீது அமர்ந்து முத்தமிட்டுக் முத்தமிட்டுக்கொள்ளும் சித்திரம் மிகப்பெரிய அலை ஒன்றை உருவாக்கியது. அவர்கள் கலஹாரியில் ஒரு சிம்மத்தைச் சுட்டுக்கொன்றார்கள். அதைக்குறித்த எதிர்ப்பு உலகளாவ எழுந்தபோதுகூட அவர்களோ அந்த வேட்டைநிறுவனமோ அதன்பொருட்டு வருந்தவில்லை.

 

பல ஆப்ரிக்க நாடுகளில் டிரோஃபி ஹண்டிங் என்ற பேரில் விளையாட்டுவேட்டையை சுற்றுலாக்கவர்ச்சியாக நிகழ்த்தும் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று Legelela Safaris, அவர்கள் ஆப்ரிக்க அரசுகளுக்குப் பணம் கொடுத்து காடுகளில் விலங்குகளைக் கொல்லும் உரிமையை பெறுகிறார்கள். விலங்குகள் காட்டின் ஓர் எல்லைக்குள் கிட்டத்தட்ட சிறைப்படுத்தப்பட்டபின் சுற்றுலாப்பயணிகளால் துரத்தப்பட்டு நவீன துப்பாக்கிகளால் கொல்லப்படுகின்றன. இந்த அசட்டுப் பயணிகள் தங்களை வேட்டையர்களாகக் கற்பனைசெய்துகொள்ள முடிகிறது. பொதுவாகவே பண்பாட்டுக் கல்வி அற்றவர்களான அமெரிக்க- கனடிய வெள்ளையர்களுக்கு உரிய ஆட்டம் இது.

 

சிங்கத்தின் முன் முத்தம் – இந்தியா டுடே செய்தி

 

கொனார்கை முழுக்க சுற்றி வர மூன்று மணி நேரம் ஆகியது. ஒவ்வொரு நிலையாக நின்று பார்த்தோம். கல்லில் இருந்து அக்களியாட்டு உள்ளத்திற்குக் குடியேறுகிறது. நூற்றுக்கணக்கான இசைக்கலங்கள். அந்த இசைக்கலங்களெல்லாம் இன்றிருக்கின்றனவா என்பது ஆராய்ச்சிக்குரியது .பூரி திருவிழாவில் வேறெங்குமிலாத பல இசைக்கலங்களை பார்த்தோம். உலோக ஒலியெழுப்பும் வட்டங்கள். நீள்கொம்புகள். இசைவிற்கள். அவற்றை கொனார்க்கிலும் பார்க்க முடிந்தது.  கொனார்க்கில் நின்றிருக்கும் கல் தேர் தான் பூரியில் அசைகிறது.

 

இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்- 2008

 

 

 

[2008ல் செய்த இந்தியப்பயணத்தின் 22 ஆவது நாளில்]

[ஒரிசா பயணம் 2019, ஜூலையில்]

 

ஆவணப்படங்கள்

 

 

 

 

முந்தைய கட்டுரைபயணியின் கண்களும் கனவும்
அடுத்த கட்டுரைவாசிப்பு மாரத்தான்