தேர்வு, மீண்டும் கடிதங்கள்

என் நண்பர் உங்கள் வலைத்தளத்தின் பழைய பதிவுகளிலிருந்து “தேர்வு” பகுதியை எடுத்து அனுப்பியிருந்தார்.

அனுபவம் எல்லாருக்கும் தான் வாயக்கிறது. பலர் அது அனுபவம் என்ற பிரக்ஞை அற்றே கடந்து போய்விடுகின்றனர்.

எழுத்தாளன் நுண் உணர்வுகளுடன் அந்த அனுபவங்களை அணுகி ஒரு படைப்பாக்கி அதை மற்றவருக்குத் தரும் போது, பிரக்ஞை அற்று கடந்து பழைய அனுபவங்கள் அடி மனதில் இருந்து மேல் எழுந்து வருகின்றது.

சுந்தர வடிவேலன்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே…!

‘தேர்வு’ என்கிற தங்களின் அனுபவ எழுத்தினை இன்று வாசித்தேன். சில கணங்கள்
என்னை உலுக்கி எடுத்தது. ஒவ்வொரு பிள்ளையையும் அதனுடைய விருப்பு-
வெறுப்புக்களுக்கு அமைய வளர விடவேண்டும் என்பதை அச்சொட்டாக சொன்னது
‘தேர்வு’. என்னுடைய தந்தையார் என்னை நான் விரும்பியதை படிக்க
அனுமதித்தார். உலக நடப்புக்களில் ஆர்வமுள்ள எனக்கு ஊடகத்துறையில் கற்று
தொழில் புரிய வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் மகனின் விருப்பத்துக்கு அமைய
அவனை அனுமதித்ததை பார்த்து மகிழ்சியளிக்கிறது. இந்தக் கதையைப் படிக்கின்ற
பலருக்கு இது நல்ல விடயத்தினை அதாவது பிள்ளை வளர்ப்பின் சில தத்துவங்களை
சொல்லும் என்று நம்புகின்றேன்.

இப்போதெல்லாம் நான் அதிகம் வாசித்தாலும் அவ்வளவு இயல்பான- மனதில்
பதிகின்ற எழுத்துக்களை காண முடிவதில்லை. ஆனாலும், ‘தேர்வு’ என்னை சில
கணங்கள் உலுக்கி எடுத்தது என்பது உண்மை.

நன்றி.

புருஷோத்தமன் தங்கமயில்.

இன்று காலை ஒரு கல்லூரி நிகழ்ச்சி

ஒரு ஆசிரியர் இன்று’ஊடகங்கள் குழந்தைகளைக் கெடுக்கின்றன , என்ன செய்யலாம்’என்றார்

குழந்தைகளை மூடி போட்டு வைத்து அவர்களை மண்ணாந்தைகளாக ஆக்குவதைவிட கெட்டுப்போக வைப்பது மேல்’என்றேன்

அதேதான். அவர்களுக்கு ஒரு மலரும் முறை இருக்கிறது. எந்த மலரையும் விரியவைக்க நம் விரல்களால் முடியாது

ஜெ

முந்தைய கட்டுரைஅறம் வரிசை கதைகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்