வணங்கான் கடிதங்கள்

தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் இதுவரை படித்த சிறுகதைகளிலே என்னை மிகவும் கவர்ந்த கதை உங்களுடைய வணங்கான்.

என்ன ஒரு நடை , என்ன ஒரு நேர்த்தி , படித்து முடித்தவுடன் என்னை நான் ஆணைகருத்தானாக உணர்ந்தேன்.

மிக்க மகிழ்ச்சியுடன் , வாழ்த்துக்களுடன்.

சதீஷ் ஜெயபாலன்

*

அன்புள்ள ஜெ,

தன் நிழலிலிருக்கும் உயிருக்கு தன்னால் ஏதும் தீங்கு நேரக்கூடாதென்ற – தன்னை வளர்ப்பவனைவிட மேம்பட்ட – நுண்ணுணர்வோடிருக்கும் யானையில் தொடங்கி ஜமீன் காட்டுப்பூனையை மூலையில் பதுங்கி அஞ்சவைத்த ஆனைக்கறுத்தான் வரை எத்தனை யானைகள் உள்ளும் புறமும் !!

“அவர் சென்றுகொண்டே இருந்தார். மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள்”

கொஞ்ச வார்த்தைகளில் அந்த விஸ்வரூப காட்சியை இப்படியாக படம் பிடித்தது அற்புதம்.

நன்றி ஜெயமோகனானை. :)

அன்புடன்
பொன்.முத்துக்குமார்.

*

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. ‘வணங்கான்’ சிறுகதை படித்தேன். ஒரு சிறிய திரை படம் பார்த்த
உணர்வு வந்திருக்கிறது. நேற்று இரவு படித்தேன். இன்று காலைவரையிலும் படித்தது,
திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கிறது. கதையின் பாதிக்குமேல் நானே
என்னை கருப்பன் நாடராக நினைக்க தொடங்கிவிட்டேன். ஜமீன் அச்சுறுத்தல்களால் அலுவலகத்திலேயே
நாடார் தங்கி இருக்கும்போது, எனக்கு ஏற்பட்ட எண்ணம், நேசமணி அவர்களுக்கு இவர் ஏன்
தகவல் அனுபப்கூடாது என்பதுதான். கதை அந்த கட்டத்தை எட்டியதும் நானே இக்கட்டில்
இருந்து விடுபட்டதாக உணர்தேன். யானைமேல் அமர்தவாறு நாடார் ஜமீனின் வீட்டு கூரையை
எட்டி உதைக்கும்போது நான் நெஞ்சை நிமிர்திக்கொண்டேன்.

ஒரு மூன்றாம் உலகத்தில் இருக்கும் நான், அந்த நாட்களில் நமது ஊர்கள் எப்படி இருந்திருக்கும் என்று
உணர முடிகிறது. இங்கு இருக்கும் (நைஜீரியா) உள்ளூர் கடை நிலை ஊழியர்கள் தங்கள்
முதலாளிகளை ‘மாஸ்டர்’ என்றுதான் விளிக்கிறார்கள். எனக்கு அளிக்கபட்டிருக்கும் வாகன செலுத்துனர்களும்
என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள். இது பெரும்பாலும் படிப்பறிவற்ற அல்லது படிப்பறிவு குறைதவர்களே
செய்வது. அலுவலக வேலைகளில் இருக்கும் உள்ளூர்வாசிகள் பெயருக்கு முன்னால் ‘மிஸ்டர்’ என்று சொல்கிறார்கள்.
அவர்களும் அப்படி விளிக்கபடுவதில் மகிழ்கிறார்கள்.

ஏன் சிற்றிவுக்கு என்ன தோன்றுகிறதென்றால், பரவலான வறுமை காரணமாக பொது கல்வி இல்லாமல் இருந்திருகிறது.
கல்வியின்மை காரணமாக அறியாமை. அதனால் கற்பிக்கபட்டவைகளை அப்படியே ஏற்பது. அதனால் தொடரும் அடிமைதனம்.
பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்த நாடுகளில் இது பொதுவான அம்சம் போலிரிகிறது. அவர்கள் உள்ளூரில்
இருக்கும் சமுக அமைப்பை மற்ற முயற்சிப்பதில்லை என்றே தோன்றுகிறது.

இந்த சிந்தனையை நான் வணங்கான் கதையில் இருந்துதான் பெற்றேன். பண்ணை அடிமைகளாக இருக்கும் மக்கள்
வயிறு மட்டுமே உள்ள விலங்குகள் போல வாழ விதிக்க படுகிறார்கள். அவர்களால் அதிலிருந்து விடுபட முடியாததற்கு
காரணம் அங்கே நிலவும் வறட்சி, அதனால் வறுமை. வறுமையால் பசி. பசிக்கு உணவிட்டவன் ஏமான்.

இந்த கதை நமது சமுக வரலாறு பற்றிய உங்களுடைய கருத்துக்களை எல்லாம் சாறு பிழிந்து, சிறிது
கற்பனை இனிப்பிட்டு அளிக்கபட்டிருக்கிறது. இந்த கடிதம் நீண்டு கொண்டே போகிறது. உங்கள் நேரத்தை
வீணாக்க விரும்பவில்லை.

அன்புடன்
குரு
லாகோஸ், நைஜீரியா.

அன்புள்ள குருமூர்த்தி

நலமா?
நானும்

ஆம், நாம் நம்மையறியாமலேயே ஒரு யுகத்தை 9அதன் அனைத்து துயரங்களுடனும் வலிகளுடனும்0 தாண்டிவந்திருக்கிறோம். சொல்லப்போனால் அதற்கு ஐரோப்பா கொடுத்த , ஆப்ரிக்கா கொடுக்கும் விலையை நாம் கொடுக்கவில்லை. அந்த வெற்றியின் மதிப்பு நமக்கு தெரியாமல் போவதும் இதனாலேயே

ஜெ

ஜெ..

“சாரு சொன்னாருண்ணாக்க வந்து சமீன் தலைய வெட்டி கீழ வச்சிருவோம்ல? ஏது”

சிவபுராணப்பாட்டில், மாசற்ற சோதி பாடலின் இறுதியில், உடையானே என்று முடியும் வார்த்தையோடு ஒரு குழல் ஒசை திடீர்னு வரும். (இளையராஜவோட இசையில்) அது அந்த வார்த்தைக்கே அழகு சேர்க்கும். அதே போல், அந்த “ஏது” சேர்க்கும் அழகுதான் என்ன?

என் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவம் (not to claim that I have done it). – பெங்களூரில் தேசிய பால் நிறுவனத்தின் எண்ணெய் ப்ராஜக்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கடலெண்ணெய் வாங்கும் வேலை. லாபம் சம்பாதிக்க, வியாபாரிகள் அதில் விளக்கெண்ணெய் கலன்ந்து விடுவார்கள். ஒரு நாள், ஒயிட்ஃபீல்டில் இருந்த எனது தொழிற்சாலயில் இருந்து ஃபோன் வந்தது. தரக் கட்டுப்பாடு அலுவலர் ஷெட்டி அழைத்தார்.

“சார், ஒரு எண்ணெய் டேங்கர்ல விளக்கெண்ணெய் கலந்திருக்காங்க..”

“ரெஜக்ட் பண்ண வேண்டியதுதானே ஷெட்டரே”

“இல்ல ஸார்.. டிரைவர் தகராறு பண்றான்.. கே.ஜி.எஃப் எம்.எல்.ஏவோட வண்டி.. ரிஜக்ட் பண்ணே. வேல போயிடும்னு மெரட்டறான்.. “

“ அவங்கிட்ட ஃபோனக் குடுங்க”

‘அலோ”

“ட்ரைவர், 10 நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள வண்டிய கேட்டுக்கு வெளியே எடுத்துட்டுப் போயிடுங்க, இல்லீன்ன்னா, ஒயிட்ஃபீல்ட் போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் பண்ண வேண்டி வரும்.. இது கவர்மெண்ட் கம்பெனி பாருங்க” ந்ன்னுல் சொல்லி, போனக் கட் பண்ணிட்டேன்.

கொஞ்ச நேரங்கழிச்சு, ஷெட்டி போன் செய்தார்.. கெக்கெக்க்னு சிரிச்சுகிட்டே, “என்ன ஸார் சொன்னீங்க? வண்டிய எடுத்துட்டு ஓடிட்டான்?” ந்னு கேட்டார்.

“கொறைக்கற நாய் கடிக்காது ஷெட்டரே” ந்னேன்..

அரசாங்கம் என்னும் வார்த்தையின் சக்தியை உணர்ந்த நாள் அது.

என்ன நூத்துக்கு 99 அரசு அதிகாரிகள் முதுகெலும்பில்லாத ப்ராணிகளாக இருப்பதுதான் சோகம். அவர்கள் தம் நாற்காலிகளில் கால் மேல் கால் போட்டுட்டுட்டு ஒரு முறை முறைத்தால் போதும், பாதி விஷயங்கள் சரியாயிடும்

அன்புடன்

பாலா

முந்தைய கட்டுரைநான்காவது கொலை -கடிதம்
அடுத்த கட்டுரைவணங்கான் மற்றும் கதைகள் -கடிதம்