கேள்வி பதில் – 70

மனதளவில் எதற்கானதாவதான தேடல், எந்த சக்தியையாவது மனதளவில் தன்னைவிட உயர்ந்ததாக நினைத்து நடுங்குவது, எதற்குமுன்னாலாவது தம்மை ஒன்றுமேயில்லாததுபோல் உணருவது, போன்றவைதான் இறைமையை உணருவது என்றால் உலகில் நாத்திகன் என்ற பிரிவே இல்லை; அவர்கள் சில குறியீடுகளை மட்டுமே கடவுள்களாகக் கொள்ள மறுக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
மனதளவில் உள்ள தேடல், தன்னைச் சிறிதாக்கும் இயற்கையை, வெளியை, காலத்தைக் கண்டு மனம் விரிவது அல்லது அஞ்சுவது ஆகியவை அனைத்து மனிதர்களுக்கும் உரியவைதான். நாத்திகம் ஆத்திகம் என்பது அதல்ல.

ஆத்திகம் என்ற சொல் ஆஸ்திகம் என்ற சம்ஸ்கிருத மூலம் கொண்டது. அஸ்தி என்றால் இருத்தல் என்று பொருள். உண்டு என்று நம்புகிறவன் ஆத்திகன். நாத்திகன் என்ற சொல்லின் மூலம் நாஸ்திகம் என்ற சம்ஸ்கிருதச்சொல். அது ‘ந அஸ்தி’ இருப்பு இல்லை என்ற சொல்லின் விரிவு. இருப்பை மறுப்பவன் நாத்திகன்.

எதன் இருப்பை? பிரபஞ்ச சாரத்தின் இருப்பை. பிரபஞ்சத்தை தீர்மானிக்கக் கூடிய சாராம்சமான ஏதோ ஒன்று உள்ளது என்று நம்பக்கூடிய அனைவருமே ஆத்திகர்கள்தான். அதை ஒரு தண்டிக்கும் சக்தியாக [யகோவா] தந்தைவடிவமாக [பரமபிதா] எண்ணலாம், முறையே யூத கிறித்தவ மதங்களைப்போல. மூலப்படைப்பாளியாக என்ணலாம் இஸ்லாம் போல.

எவ்வகையிலும் அறியவோ சொல்லவோ முடியாத ஒரு முழுமுதன்மையாக [பிரம்மம்] எண்ணலாம் ரிக்வேதம் போல. காணும் ஒவ்வொன்றிலும் உறையும் ஆற்றலாக வரையறுக்கலாம் [ஈசோவாஸ்யம் இதம் சர்வம்] ஈசாவாஸ்ய உபநிடதம் போல. நம்முள் பிரக்ஞையாகவும் அதுவே நிரம்பியுள்ளமையால் நாமே அது [தத்வமஸ] என எண்ணலாம் சாந்தோக்ய உபநிடதம் போல.

ஒவ்வொரு பிரபஞ்ச அசைவிலும் வெளிப்படும் விதிகளின் ஒட்டுமொத்தமான முழுவிதி [மகாதர்மம்] எனலாம் பௌத்தம்போல. அந்த விதியை நாம் முழுக்க அறியவே முடியாதென்பதனால் பிரக்ஞையால் உணரப்படும் முடிவின்மையாக [மகாசூன்யம்] மட்டுமே சொல்லலாம் சூனியவாத பௌத்தம் போல. பிரபஞ்சவிதிகளை அறிவது நம்முள் உள்ள விதிகளினால்தான் என்பதனால், நாம் அறியச்சத்தியமான ஒரே விதி நம் உள்ளே உள்ள விதி என்பதனால், அதை நேற்றும் இன்றும் நாளையும் உள்ள ஒட்டுமொத்த மனம் என்றும் அம்மனத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்ச மனம் [ஆலயவிஞ்ஞானம்] என்றும் சொல்லலாம், அறிவகவாத [விஞ்ஞானவாத] பௌத்தம் போல.

பிரபஞ்சம் நமது அறிதலின் எல்லைகளினால் குறைபட்ட அதன் மறுதோற்றம் என்பதனால், நம் சுயம் சார்ந்த குறைபட்ட பார்வையைத் தவிர்த்து, முழுமையான தூயப் பார்வையை அடையும்போது தெரியும் பிரபஞ்சமே அதுதான் எனலாம், அத்வைதம்போல. நம்மைச் சுற்றி உள்ள ஒவ்வொன்றிலிருந்தும் நம்மை பிரித்தறியாமல் ஒன்றாக இருக்கும் நிலையில் நாம் அறியவேண்டியதேயில்லை நாமே அதுவாகலாம் எனலாம், ஜென் பௌத்தம் போல. ஆத்திகத்துக்குப் படிகள் பல; முகங்கள் பற்பல. சாரம் அல்லது ஆன்மா மீதான நம்பிக்கை காரணமாக இவர்களை ஆன்மிகவாதிகள் என்கிறார்கள். ஆன்மிகவாதிகளில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கலாம், பௌத்தர்கள், அத்வைதிகள்போல. மேலைமரபில் இவர்களை கருத்துமுதல்வாதிகள் [idealism] என்கிறார்கள், காரணம் அங்குள்ள ஆன்மீகவாதிகள் பொருளுக்கு முதல் அடிப்படையாக உள்ளது அதன் அடிப்படையான கருத்தே [idea] என்று நம்புகிறவர்கள்.

இவ்வாறு பிரபஞ்சத்துக்குச் சாரமாக, பிரபஞ்சத்தில் உள்ளுறைந்தோ அல்லது கடந்தோ இருக்கும் எந்த வல்லமையும் இல்லை என்பவர்கள் எல்லாருமே நாத்திகர்கள். பிரபஞ்சத்தின் விதிகள் இப்பிரபஞ்சத்துக்குள்ளேயே அதன் கூறுகளின் இணைவு மற்றும் பிரிவு மூலம் உருவாகின்றவை என நம்புகிறவர்கள். பருப்பொருட்களின் கூட்டும் இணைவுமே மனிதனின் பிரஞ்ஞை உட்பட எல்லா இயற்கைக் கூறுகளுக்கும் காரணம் என நம்பிய சார்வாகர்கள் புராதன இந்திய நாத்திகர்கள். நாத்திகத்தின் தொடக்கம் அங்குதான். இரு பொருட்கள் கலந்தால் நுண்வடிவமான நறுமணம் வருவதுபோல ஐந்து பருப்பொருட்கள் கலந்தால் உயிர்வருகிறது என்றார்கள். மூல இயற்கை என்ற ஆதிப்பொருளின் உள்ளே செயல்ஆற்றல், நிலைப்பு ஆற்றல், சமன் ஆற்றல் என்ற மூன்று இயல்புகளும் [சத்வகுணம், தமோ குணம், ரஜோகுணம்] மோதுவதன் மூலம் பிரபஞ்ச இயக்கம் நிகழ ஆரம்பித்து ஒன்றிலிருந்து ஒன்றாகத்தொடர்கிறது என்று வாதிடுபவர்கள் சாங்கியர்கள். இவ்வாறு பல தரப்புகள்.

பொருளை முதன்மைப்படுத்தியமையால் இவர்கள் பொருள்வாதிகள் அல்லது பௌதிகவாதிகள் என்றும் சொல்லப்பட்டார்கள். இவ்வுலக இன்பமே முக்கியம் என்று வாதிட்டமையால் உலகாயதர் [லோகாயதம்] என்று சொல்லப்பட்டனர். மேலைமரபில் பொருள்முதல்வாதிகள் [materialism] என்று சொல்லப்பட்டனர். காரணம் மேலைநாட்டு நாத்திகர்கள் பொருளே [Mater] அனைத்துக்கும் முதல் அடிப்படை என்று நம்புகிறார்கள்.

பிரபஞ்சத்துக்கு நோக்கம் ஒன்று உண்டு என்று சொல்லும் ஆத்திகர்கள் அந்நோக்கத்தை அதன் சாராம்சத்தில் தேடவேண்டும் என்று சொல்வார்கள். நாத்திகர்கள் அதற்குத் தற்செயல் என்ற காரணத்தை மட்டுமே சொல்ல முடியும். பெருவெடிப்பு ஏன் உருவாயிற்று? முதல் உயிர்த்துளி எப்படி உருவாயிற்று? தற்செயல் என்றே நாத்திகவாதம் பதில் சொல்ல முடியும். அறிவியலாளர்களில் ஐன்ஸ்டீன் போல ஆத்திகர்களும் உண்டு ரூதர்ஃபோர்டு போல நாத்திகர்களும் உண்டு. பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணம் தற்செயல் என்ற பதில் சர்வசாதாரணமானதும் அழுத்தமற்றதுமாகும் என்று நம்பிய பெர்ட்ரண்ட் ரஸ்சல் போன்ற நாத்திக தத்துவமேதைகள் அறியமுடியாது என்ற பதிலை முன்வைத்தார்கள். இவர்கள் அறியமுடியாமைவாதிகள் [Agnosticism] எனப்பட்டனர். ஆனால் இந்துஞானமரபிலும் பௌத்த மரபிலும் கன்பூஷிய மரபிலும் அறியமுடியாமை என்பது ஆத்திகவாதத்தின் பகுதியாகக் கருதப்படுகிறது.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 69
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 71