அன்புள்ள சார்,
ஒரு பள்ளி ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிக்கொண்டிருந்தவர், திருவள்ளுவர் ஏன் 1330 குறள்கள் எழுதினார் என்று ஒரு விளக்கம் அளித்தார். 1330 என்கிற எண்ணை ஒன்றுடன் ஒன்று கூட்டினால் 7 வருகிறது. திருக்குறளைப் படித்தவனுக்கு ஏழு பிறவிக்கும் கவலையில்லை என்று அதற்குப் பொருள் என விளக்கினார். அப்பொழுது நான் வாயை அனுமார் போல வைத்துக்கொண்டு ஒரு பதிவைத் தேடினேன். அது இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய இந்தப்பதிவு.
சிறில் அண்ணன் இபா அவர்களின் நண்பர். அவரிடம் சில நேரங்களில் இபா வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கோரியிருக்கிறேன். சிறில் அண்ணனின் இலக்கியப்பணி மிகவும் அந்தரங்கமானது என்பதால் அதைப் பிறர் அறிய முடியாது. சமயங்களில் அவருமே கூட. ஆகவே சந்திப்பு நிகழவே இல்லை. சென்றவருடம் ஒருமுறை அவரை சுசீலாம்மா பாராட்டு விழா சமயத்தில் சந்தித்தோம். அப்பொழுதே மெலட்டூர் பாகவதமேளா,சுசீலாம்மாவை டெல்லியில் ஒருமுறை சந்தித்தது என அனைத்தையும் வருடக் கணக்குடன் கூறினார். அதற்குப் பின் சிறிலண்ணன் விக்கிரமாதித்தானாக காடாறு மாதம் சென்றுவிடுவதால் சந்திப்பு ஏதும் சாத்தியப்படவில்லை. நேற்று இபா அவர்களுக்கு தொண்ணூறாவது பிறந்தநாள் என்பதால் அவரைச் சந்திக்க அனுமதி வாங்கி, இன்று மாலை சென்றோம்.
சண்முகம் அண்ணனை அவருக்கு நினைவிருக்கிறது. சத்தமாக பேசினால், நிறுத்தி மெல்ல பேசுங்கள் அப்பொழுதே நன்றாக கேட்கும் என்று கூறினார். கிருஷ்ணா கிருஷ்ணா மற்றும் அவரது வலைப்பூ பதிவுகள் பற்றி சிறிது நேரம் பேசினோம். நாங்கள் சொன்ன நேரத்திற்கும் தாமதமாகச் சென்றோம். அவர் இரவு ஏழு மணிக்கு உணவுண்டு உறங்கச் சென்று விடுகிறார் என்பதால் சொற்ப நேரமே உரையாட இயன்றது. ஆன்திவே என்று செய்தி அனுப்பிய நண்பர்களையும் அப்படியே திருப்பி அனுப்பவேண்டியதாயிற்று. இதைக் கேட்டதும் ஒருநாள் பகலில் வாங்களேன் என்றார். சனி ஞாயிறு வரலாமா என்று கேட்டோம். எனக்கு எல்லா நாளும் ஒன்றுதான். உங்களுக்குத்தான் கிழமைல்லாம் என்று சொல்லி சிரித்தவர், அடுத்த சனிக்கிழமை வரச் சொல்லிக் கூறினார். நாங்களும் ஆசி பெற்றுக் கிளம்பினோம்
நம் நண்பர்கள் அவரைக் காண வர விரும்பினால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். ஒரு நுட்பமான எழுத்தாளரைச் சந்திக்க அழைப்பதால் ஒரு பொறுப்புத்துறப்பாக, வருவதற்கு முன் அவர் இருவருடங்கள் முன் எழுதிய இந்தப் பதிவைப் படித்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்,
R.காளிப்ரஸாத்
***