தேர்த்திருவிழா மெல்லமெல்ல விசைகொண்டபடியே இருந்தது. கோயிலில் இருந்து தேருக்கு மலர்மாலைகளையும் பூசனைத் தாலங்களையும் கலங்களையும் கொண்டுவந்துகொண்டிருந்தனர். இந்தியாவெங்கும் சப்பரம் கொண்டுவரும் அதே முறைதான். ஒருசாரார் உந்த மறுசாரார் தடுக்க அலைகளின் மேல் என பல்லக்குகள் அலைபாய்ந்தன. படகுகள் போல சுழன்று தத்தளித்தன. கூச்சல்களும் வாத்திய ஒலிகளுமாக அங்கே ஒரு பாவனைப் போர்க்களமே நிகழ்ந்துகொண்டிருந்தது.
ஒவ்வொன்றையாக தேருக்குள் கொண்டு சென்று வைத்தார்கள். தேருக்குள் புகுவதே ஒரு போராட்டம். அங்கே ஏற்கனவே பெருங்கூட்டம். அவர்களை ஊடுருவித்தான் செல்லவேண்டும். அங்கிருந்த அத்தனை பாண்டாக்களும், தேருக்கான ஏவலர்களும் செறிந்து நின்றனர். அவர்கள் கூச்சலிட தூக்கிவந்தவர்கள் மறுகூச்சலிட எங்கு நோக்கினாலும் முகங்களின் உடல்களின் கொந்தளிப்பு
ஒடிசி நடனமங்கையர் முகப்பில் ஆடிக்கொண்டு வந்தனர். அவர்கள் அங்கே பணியாற்றுபவர்களாகத் தெரியவில்லை. நல்ல அலங்காரம் செய்துகொண்டிருந்தனர். விசாரித்தபோது, அவர்கள் நடனம் பயில்பவர்கள் என்று தெரிந்தது. புரி தேரோட்டத்தில் ஆடுவதென்பது ஒடிய நடனம் பயில்வதற்கான நோன்புகளில் ஒன்று. முற்காலத்தில் தாசிகள் ஆடியிருக்கிறார்கள். ஒரு சில வெள்ளைக்காரப் பெண்களும் ஆடிவருவதைக் கண்டேன்.
புரி தேரோட்டம் வல்லபருக்கும் சைதன்யருக்கும் மிகப்பிடித்த விழாவாக இருந்திருக்கிறது. ஜயதேவர் இந்த ஆலயத்தில் பணியாற்றியதாகக் கதைகள் சொல்கின்றன. ஆகவே ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மிக உகந்த திருவிழா இது. அவர்களின் அமைப்பைச் சேர்ந்தவர்களை ஏராளமாகக் காணமுடிந்தது.
சுபத்ரையும் பின்னர் பலராமரும் வாழ்த்தொலிகளும் வாத்தியங்களும் முழக்கமிட கொண்டுவந்து தேரில் வைக்கப்பட்டனர். அப்போது உச்சிப்பொழுது ஆகிவிட்டிருந்தது. எங்கள் மேடைக்கு அருகிருந்த மேடையில் நவீன் பட்நாயக்கும் ஒரிசாவின் ஆளுநர் கணேஷ்லாலும் வந்து அமர்ந்தார்கள். முதலில் சுபத்ரை, பின்னர் பலராமர், இறுதியாக ஜெகன்னாதர் தேரில் கோயில்கொண்டனர்.
இங்கே உத்ஸவர் என்னும் கருத்து இல்லை. மூலச்சிலையையே கொண்டு வருகிறார்கள். மரத்தான ஆறடி உயரமான உருண்டைச் சிலை. அத்தனை தொலைவிலும் அதன் விழித்த கண்கள் தெளிவாகத் தெரிந்தன. சிலைகளை கோயிலுக்குள் அமைத்ததும் நவீன் பட்நாயக்கும் கவர்னரும் எழுந்து சென்றனர்.
அதன்பின்னரே புரி சங்கராச்சாரியார் அவருடைய பரிவாரங்களுடன் பல்லக்கில் வந்தார். அவர் ஜகன்னாதரை வணங்கிவிட்டுச் சென்றபின்னர் ஜெகன்னாதர் கோயிலின் பரம்பரை அறங்காலவர்களான கஜபதி மகாராஜா திப்யசிங்கதேவ் பல்லக்கில் கொண்டுவரப்பட்டார். வெண்ணிற பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகையில் கவரிமான் பீலி சூடி அவர் வந்திறங்கியபோது மக்கள் வாழ்த்துக்குரல் எழுப்பி நகரை அதிரச்செய்தனர்
மரியாதைகள் நிமித்தமே அவர்கள் தனித்தனியாக வந்தார்கள் என தோன்றியது. மூன்று அதிகார மையங்கள். முதல்வர், அரசர், மடாதிபதி. அவர்கள் நடுவே இன்னமும் முறைமைகள் தெளிவாக வகுக்கப்படவில்லை. மக்களிடையே நவீன் பட்நாயக்குக்கும் புரி சங்காராச்சாரியருக்கும் இல்லாத வரவேற்பு முழக்கம் அரசருக்கு இருந்தது. அவர் தேரிலேறி பொன்னால் கைப்பிடி இட்ட வெண்சாமரத்தால் தேரை கூட்டிப்பெருக்கி ஜகன்னாதரை வணங்கியபின் கீழிறங்கி பல்லக்கில் சுற்றிவந்து திரும்பிச் சென்றார்
அதன்பின் நவீன் பட்நாயக்கும் கவர்னரும் திரும்பி வந்தார்கள். அவர்கள் சென்று தேரை வடம்தொட்டு இழுத்து வணங்கி மீண்டனர். தேரை தரையுடன் இணைத்த பாதை பிரித்து அகற்றப்பட்டது. தேர்முகப்பில் பெரிய சட்டங்கள் பொருத்தப்பட்டு அதில் மரத்தாலான புரவிகள் கட்டப்பட்டன. தேர்ப்பாகர்களாக சிலர் ஏறிநின்றனர்
தேர் இழுக்கப்பட்டபோது எழுந்த முழக்கம் அடிவயிற்றை கலங்கச்செய்தது. வெறும் ஓசையே பெருங்கூட்டத்தை உணர்த்தியது. நாங்கள் இருந்த இல்லத்தின் மறுபக்கம்தான் தேர்வீதி. அங்கே தலைகள் வெள்ளம்போல் நிறைந்திருந்தன. வெள்ளம்போலவே அலைகொண்டன, சுழித்தன, கரைமுட்டித் ததும்பின
பலராமரின் தேர் முதலில் சென்றது. பின்னர் சுபத்ரையின் தேர். இறுதியாக ஜெகன்னாதரின் தேர். முதல்தேர் சென்று அரைமணிநேரம் கழித்தே அடுத்த தேர். ஒரு தேரை இழுக்கும் கூட்டம் அப்பால் சென்றபின் கயிற்றால் கட்டப்பட்ட தடுப்புகளை அகற்றி அடுத்த தேருக்கான கூட்டத்தை உள்ளே விட்டனர். புரி தேர் இழுப்பது வேண்டுதல் என்பதனால் மக்கள் முட்டி மோதிக் கூச்சலிட்டார்கள்.
இந்தத்தேர்வலத்தின்போது பூரி ஜகன்னாதரை தொடுவதென்பது மிகப்பெரிய நல்லூழ் என கருதப்படுகிறது. குற்ப்பாக வங்காளிகள் லட்சக்கணக்கில் கொடுக்க சித்தமாக இருக்கிறார்கள். ஆகவே பாண்டாக்கள் இந்த விழாவின்போது பெரும்பணம் ஈட்டுகிறார்கள். அவர்களின் முட்டிமோதல் இதன்பொருட்டே.
தேர்கள் இழுக்கப்பட்டு அகன்றதும் நாங்கள் கிளம்பினோம். நான் மட்டும் வந்திருந்தால் அந்தப்பெருங்கூட்டத்தில் கொஞ்சம் அலைகொண்டிருப்பேன். அருண்மொழியையும் சைதன்யாவையும் கொண்டுசெல்லமுடியாது. தேர் ஓடும் ஓசை நகரமெங்கும் நிறைந்திருக்க தெருக்களினூடாக எங்கள் விடுதிக்குத் திரும்பினோம்
மாலையிலேயே புவனேஸ்வருக்கு மீண்டோம். பகல்முழுக்க மழைக்காறும் குளிர்காற்றும் இளமழைத்தூறலும் இருந்தது. மேலும் மேலும் கருமைகொண்டு வந்தது. நகரின் திறந்த வெளிகள் முழுக்க லாரிகள் கார்கள் பேருந்துகள் என வண்டிகள் நிறைந்திருந்தன. கூடாரங்களைக் கட்டி மக்கள் படுத்துக்கிடந்தனர். இலவச உணவுகள் பல இடங்களில் வழங்கப்பட்டன. அவற்றை உண்டனர்.
எளிய மக்கள். ஒரிசாவில் இன்னமும் வலுவான நடுத்தரவர்க்கம் உருவாகவில்லை. இன்னமும் திருவிழாக்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன. பலவகையான பழங்குடிமக்கள் தேர்த்திருவிழாவுக்காக மலையிறங்கி வந்திருந்தனர். வெள்ளியாலும் இரும்பாலும் அணிகள் சூடியவர்கள். மூக்கில் பெரிய வளையம் அணிந்தவர்கள். முகத்தில் பச்சை குத்தியவர்கள்.
ஜெகன்னாதர் திருவிழா ஒரு முனைகொள்ளல். பல்வேறு பழங்குடிகளின் வெளியான இந்நிலம் தன்னை ஒற்றைச்சமூகமாகத் தொகுத்துக்கொண்டு ஒற்றை அரசாக ஆகி ஆற்றல்பெற்று சிறப்புற்றதன் சான்று. இந்தியா முழுக்க அரசுகள் பெரிய திருவிழாக்களாலேயே அமைக்கப்பட்டன என்பது ஓர் உண்மை. திருவிழாக்கள்தான் குலங்களாக குடிகளாகச் சிதறுண்டு கிடக்கும் மக்களை ஒட்டுமொத்தச் சமூகமாகத் தொகுக்கின்றன. கண்கூடாகப் பார்க்கக்கூடிய சமூகம் ஆக ,நாடு ஆக ஆக்குகின்றன.
இன்றைய பெருந்திருவிழாக்கள் முழுக்க கிபி நான்காம் நூற்றாண்டில் குப்தர் காலகட்டத்தில் உருவானவை என ஒரு கூற்று உண்டு. ஆனால் திருவிழாவுக்குரிய சடங்குகள், குறியீடுகள் அனைத்தும் அதற்கும் நெடுங்காலம் முன்னரே திரண்டுவந்திருக்கவேண்டும். அரச ஆதரவுடன் திருவிழாக்கள் அமைவது வேண்டுமென்றால் குப்தர்காலத்தில் நிகழ்ந்திருக்கலாம்.
ஒரிசா ஐந்து நூற்றாண்டுக்காலம் கலைகளில் இலக்கியத்தில் சிறப்புற்றிருக்கிறது. வைணவத்தின் விளைநிலங்களில் ஒன்று இது. இந்தியச்சிற்பக்கலையின் உச்சங்கள் நிகழ்ந்த மண். கலிங்கத்திலிருந்தே தமிழகத்திற்குக் கல்சிற்பிகள் கொண்ட்வரப்பட்டார்கள். கலிங்கத்திலிருந்தே கீழைநாடுகளான ஜாவா சுமாத்ரா கம்போடியா வரை இந்து – பௌத்தப் பண்பாடு பரவியது.
ஜகன்னாதரின் தேர் உருண்டு செல்வதைக் காண்பது உள்ளத்தை ஒரு திடுக்கிடலுக்குக் கொண்டுசெல்கிறது. அத்தனை பெரிய அமைப்பு. ஒர் ஆலயமே உருளத் தொடங்குவதுபோல. நெடுநேரம் அந்த அசைவே கண்களுக்குள் இருந்தது.
சைதன்யர் புரியில்…