கதிரவனின் தேர்- 4

புரி ஆலயத்திற்கு முதலில் சென்றது 1982ல். அன்று ஒரு பாண்டா என்னை தடியால் அடித்தார். நான் பதறிவிலக என்னிடம் பணம் கேட்டார். நான் இல்லை என மறுத்ததும் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். நான் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடி கூட்டத்திற்குள் சென்றேன். சில பாண்டாக்கள் சேர்ந்து என்னைத் தேடினர். அவர்கள் என்னருகே சென்றபோதுகூட என்னை அவரக்ளால் கண்டறிய முடியவில்லை. ஆகவே தப்பினேன்

2010ல் நானும், கிருஷ்ணனும், கல்பற்றா நாராயணனும், சென்னை செந்திலும், சிவாவும். வசந்தகுமாரும் மீண்டும் புரி சென்றோம். புரி கடற்கரையில் ஒரு விடுதியில் தங்கினோம். அன்றும் அதேபோல அடி விழுந்தது. செந்தில் நல்ல ஓங்குதாங்காக இருந்தமையால் அவருக்கு அடிவிழவில்லை. கிருஷ்ணனுக்கு ஒன்று விழுந்தது என நினைக்கிறேன்.

புரி, கயா,பண்டரிபுரம்,காசி போன்ற ஊர்களில் பூசகர்களின் ஆதிக்கம் மிக அதிகம். இவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் கைவிடப்பட்ட ஆலயங்களை தாங்கள் கைவிடாமல் காத்தவர்கள். ஆகவே பின்னர் பேஷ்வா பாலாஜி பாஜிராவ் காலத்தில் அவ்வாலயங்கள் மீட்டுக் கட்ட்ப்பட்டபோது அவர்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டு ஆலயம் அவர்களின் பொறுப்பிலேயே விடப்பட்டது.

இன்று அவர்களுக்குப் பரம்பரை உரிமை உள்ளது. அவர்கள் பெருகி நூற்றுக்கணக்கான குடும்பங்களாக ஆகிவிட்டனர். ஆகவே கிட்டத்தட்ட வழிப்பறி போலவே அங்கே பக்தர்களை பிடுங்குவது நடக்கிறது. இந்து ஆலயங்களுக்கு இந்திய அளவில் ஒரு நிர்வாக அமைப்பும் சடங்குகளைக் கண்காணிக்கும் அமைப்பும் உருவாக்கப்படவேண்டும். அல்லது சைவ வைணவ மதங்களுக்குத் தனித்தனியாக அவ்வண்ணம் உருவாக்கலாம். எப்படியானாலும் இந்தப்பூசகர்களின் ஆதிக்கமும் வன்முறையும் கட்டுப்படுத்தப்படவேண்டும்.

ஆகவே இம்முறை புரி கோயிலுக்குச் செல்ல எனக்கு ஆர்வமிருக்கவில்லை. இனி ஒருபோதும் அதற்குள் செல்லப்போவதுமில்லை. ஆனால் புரி தேரோட்டம் மீது ஆர்வமிருந்தது. ஆகவேதான் வந்தோம். புரிக்கு முந்தைய நாளே சென்று தங்கவேண்டும் என நண்பர்கள் சொன்னார்கள். ஆகவே மேஃபெயர் அறையை காலி செய்யாமலேயே ஒற்றை பெட்டியுடன் புரி சென்றோம். அங்கே கடற்கரை ஓரமாக இரு விடுதியில் தங்கினோம்

புரி கடற்கரைப் பகுதியே ஃபானி புயலால் சிதைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விடுதிகளின் கண்ணாடிச் சன்னல்களும் தகரக்கூரைகளும் உடைந்துள்ளன. சிலவற்றைப் பழுதுநோக்கிக் கொண்டிருந்தனர். சிலவற்றில் இடிபாடுகளிலேயே பயணிகள் தங்கியிருந்தனர். நாங்கள் செல்லும்போதும் மழை தூறிக்கொண்டிருந்தது.

செல்லும் வழியெங்கும் பட்டுப்போன தென்னைமரங்களைப் பார்த்தோம். ஒரிசாவின் தட்பவெப்பத்திற்கு தென்னை எளிதாக வளராது. அத்துடன் அங்கே தென்னை வளர்ப்பும் முறையாக இல்லை. தென்னைக்கு அடியில் நெல்வயல்போல நீர் பெருகி நின்றது. குருத்துவாடல்நோயும் வந்திருக்கும்போலும். பெரும்பாலான தென்னைகள் சூம்பிப்போய் நின்றன

ஒரிசாவில் நாங்கள் பார்த்த அப்பசுமை ஃபானி புயலால் உருவானது என எண்ணும்போது வேடிக்கையாகவும் இருந்தது. ஒரிசாவுக்கு நீரை அள்ளித்தருவது புயல்களே. பல ஆயிரமாண்டுகளாக இயற்கையால் அடிக்கவும் அணைக்கவும் படும் நிலம். ஆகவேதான் அங்கே குரூரமான அன்னை என்னும் படிமம் உருவாகி காளி என்றாகியது என்கிறார் ஏ.எல்.பாஷாம்.

மூன்றாம்தேதி காலையில் புவனேஸ்வரில் இருந்து கிளம்பி பதினொரு மணிக்கு புரி வந்து விடுதியில் அறை எடுத்தபின் அங்கிருந்து ஜீப்பில் சில்கா ஏரிக்குச் சென்றோம். கடந்தமுறை கிருஷ்ணனுடன் சென்றபோது சில்கா ஏரியில் படகோட்டி “டால்ஃபின் டால்ஃபின்” என சுட்டிக்காட்டினான். “ஏரியில் டால்ஃபினா? உளறுகிறான்” என்று சொல்லி கிருஷ்ணன் திரும்பியே பார்க்கவில்லை. எங்களையும் பார்க்க விடவில்லை. படகில் திரும்பும்போது ஒருவர் “ஆ! டால்ஃபின்!” என்று கூவினார். படகோட்டி “லூசாடா நீங்க?” என்பதுபோலப் பார்த்தார்

இம்முறை டால்ஃபின்களைப் பார்ப்பதற்காகவே சென்றோம்.சில்கா ஏரியிலுள்ள நன்னீர் டால்ஃபின்கள் இந்தியாவின் அரிய காட்சிகள். இவை ஊசி மூக்கு கொண்டவை. பொதுவாகவே மனிதர்களை விரும்புபவை. இவற்றை மீனவர்கள் பிடிப்பதில்லை என்பதனால் படகுகளை அஞ்சுவது இல்லை. விளையாட்டு உற்சாகத்தில் சிறிய படகுகளைக் கவிழ்த்துவிடக்கூடும்.

படகு கிளம்பி சற்றுதொலைவு சென்றதுமே டால்ஃபின்களைப் பார்த்துவிட்டோம். மூன்று டால்ஃபின்கள். ஒரு மனிதனின் அளவு இருக்கலாம். வளைந்து வளைந்து பாய்ந்தன. மூழ்கி மிக அப்பால் சென்று மீண்டும் எழுந்தன. மீண்டும் மூழ்கின. முதலில் சிறிய அலைவடிவுகளையே கண்டோம். படகைச் சுழற்றிச் சுழற்றி அதையே நோக்கிக்கொண்டிருந்தோம். இறுதியில் கலைநிகழ்ச்சியின் இறுதியில் உச்சமென அனைத்தும் வெளிப்படுவதுபோல மூன்று டால்ஃபின்கள் எழுந்து எழுந்து குதித்து மூழ்கின

புரியை சூழ்ந்து விரிந்திருக்கும் சில்கா ஏரி [உளூரில் சிலிகா என்கிறார்கள்] இந்தியாவின் காயல்களில் மிகப்பெரியது. இதில் தயா ஆறு வந்து கலக்கிரது. 1100 சதுர கிலோமீட்டர் பரப்புள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பறவை இனப்பெருக்கமையமும் இதுவே. சில்கா காரவேலரின் காலகட்டத்தில் கப்பல்கள் உள்ளே வரும் அளவுக்கு பெரிதாக இருந்திருக்கிறது. இதற்குள் துறைமுகங்கள் இருந்திருக்கின்றன. புரியே ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது என்று பயணியாகிய டாலமியின் குறிப்புகள் சொல்கின்றன.

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாண்ட புராணம் சில்கா ஏரியில் ஜாவா சுமாத்ரா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகங்கள் இருந்தன என்று கூறுகிறது. கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மம் ஒன்று ரக்தபாகு என்னும் அசுரமன்னனின் சாபத்தால் சில்கா உருவானதாகச் சொல்கிறது. ரக்தபாகு புரியை பெரிய படையுடன் வந்து தாக்க எண்ணினான். தன் படைகளை கடலோரமாக ஒளித்து நங்கூரமிட வைத்தான். படகுகளில் துடுப்பிட்டு துழாவி புரியை அடைய முயன்றான். ஆனால் கடல் அலைகள் அவன் படகுகளை தூக்கி உள்ளே கொண்டுசென்றன. புரியின் மக்கள் படகுகளைக் கண்டு தங்கள் உடைமைகளுடன் தப்பி ஓடினர். ரக்தபாகு சினம்கொண்டு சாபம் இட்டமையால் கடல் பிளந்து சில்கா ஏரி உருவானது என்கிறது தொன்மம்.

உள்ளே சில தீவுகள் உள்ளன. அவற்றிலுள்ள ஆலயங்களுக்கு வழிபடுவதற்கு ஏராளமானவர்கள் செல்கிறார்கள். சென்றமுறை வந்தபோது அந்த ஆலயங்களுக்குச் சென்றிருந்தோம். இம்முறை நாங்கள் சென்றது மிகத்தள்ளி ஏரியின் இன்னொரு பகுதிக்கு.

சில்கா ஏரி இன்று ஒரு மாபெரும் இறால் வளர்ப்பு மையம். ஏரிக்குள்ளும், ஏரியை ஒட்டிய சதுப்புகளிலும் நூற்றுக்கணக்கான குளங்கள் பாத்திகள் போல அமைக்கப்பட்டிருந்தன. ஏரிக்குள் ஆழமான பகுதிகளில் குச்சிகளை நட்டு வலைகட்டி உள்ளே இறால்களை வளர்க்கிறார்கள். சுற்றிலாப்பயணிகள் பெரிதாக வருவதில்லை. இறால்வளர்ப்புக்காகத்தான் படகுகள்

இங்கே மீன் சிறப்பு உணவு. மீனைப் பொரித்துப் போட்டு கடுகெண்ணை இட்டு தாளித்து மீன்குழம்பு செய்கிறார்கள். எனக்கு அது பிடிக்கும். கொஞ்சம் கசப்பு கொண்டிருக்கும். தேங்காய் அரைத்த மீன் சாப்பிடும் மல்லுக்களுக்கு பிடிக்காது என நினைக்கிறேன். மேஃபேயரில் அவர்களின் சிறப்பு தயாரிப்பு என இறாலை அரைத்து சமைத்த ஒன்றை கொடுத்தார்கள். மெல்லிய இனிப்புடன் நன்றாக இருந்தது என்று சைதன்யா சொன்னாள். நான் தாடைவலி காரணமாக கரைத்த உணவையே குடித்துக்கொண்டிருந்தேன்.

அன்று மாலை புரி கடற்கரைக்குச் சென்றோம். அங்கே மணலில் ஜகன்னாதர் ஆலயச் சிலைகளை படைத்து வைத்திருந்தனர். பெரிய அளவில் இருந்த சிற்பங்கள் இருளில் சரியாக தெரியவில்லை. அருண்மொழி “சுதர்சன் பட்நாயக்!” என்று கூவினாள் . ஆனால் புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞரான சுதர்சனம் பட்நாயக் குழுவினர் அல்ல அவர்கள். அவருடைய மாணவர்களாக இருக்கலாம். அல்லது அவரே அங்கு வந்துவிட்டுச் சென்றிருக்கலாம்.

அவற்றை சுற்றிவந்து வணங்கிக்கொண்டிருந்தனர் பக்தர்கள். காற்று வெறிகொண்டு வீச கடல் அலைநுரைகளால் வெண்ணிறமாகவே தெரிந்தது. நான் முன்பு வந்தபோது புரி கடற்கரை மிக அழகாக ,சுற்றுலாப்பயணிகளின் இனிய வெளியாகத் தெரிந்தது. புயல் அனைத்தையும் மாற்றிவிட்டது என்று தெரிந்தது.

 

குகைகளின் வழியே – 18- சிலிகா ஏரி

 

முந்தைய கட்டுரைபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17