‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17

துரியோதனனின் கால்கள் சேற்றிலிருந்து அடிமரங்கள்போல் எழுந்து நின்றதை பீமன் கண்டான். அவை சேற்றுக்குள் புதையப் புதைய நடந்தன. சேறு உண்ணும் உதடுகள்போல் ஒலியெழுப்பியது. கால்கள் எழுந்து அகன்றபோது புண் என திறந்து கிடந்தது. அதில் ஊறிய கரிய நீரின்மேல் மீண்டும் விழுந்தன வேறு கால்கள். அக்கால்கள் தன்னருகே வந்தபோது பீமன் மெல்ல புரண்டு அகன்றான். அவன் தன் உடலை தொட்டான் என்றால் அறிந்துகொள்வான். வேறெந்த உடலையும் அவனால் அறியமுடியாது. மீண்டும் கால்களை உந்தி பின்னகர்ந்து சேற்றுக்குள் அரையுடல் புதைந்துகொண்டான்.

அவன் கிடந்த சேற்றுநிலம் இழுபடும் தரைவிரிப்பென அசைந்தது. அது ஒரு விழிமயக்கு என அவனுக்கு முதலில் தோன்றியது. ஆனால் மிக மெல்ல தரை இழுபடுபவதை அவன் தெளிவாக உணர்ந்தான். எழுந்து விலகவேண்டுமென முதலில் தோன்றியது. எந்த அசைவும் துரியோதனனின் விழிகளிலேயே முதலில் படும் என்பதனால் அவன் கண்களை மூடி அந்த அசைவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தான். அவன் உடல் வழுக்கிச் சென்றுகொண்டே இருந்தது. விழிகள் மூடியிருந்தபோது அதன் விசையும் விரைவும் மிகையாகத் தெரிந்தது. கங்கைப்பரப்பில் மிதந்துசெல்வதுபோலவே இருந்தது.

பீமன் மெல்ல உடல் தளர்ந்து கண்களை மூடிக்கொண்டான். இப்போது அவன் தன்னை அறியமுடியாது. இக்கரிய சேறு அனைவரையும் ஒன்றென்று ஆக்கிவிடுகிறது. அதற்கு மாண்ட உடல்களில் வேறுபாடில்லை. அது எந்த முகத்தையும் பிரித்தறிவதில்லை. பெருமைசிறுமை அறிவதில்லை. அவன் விழிதிறந்தபோது தான் மிதந்து கிடந்த மண் சரிந்து பிலம் ஒன்றுக்குள் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தான். எழுந்து அகல நினைப்பதற்குள் சரிவின் விசை கூடிவந்தது. நாற்புறமிருந்தும் மானுட உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றென விழுந்து அந்தப் பிலம் நோக்கி அழுந்திச் செலுத்திக்கொண்டன. அவன்மேல் மேலும் மேலும் உடல்கள் வந்து விழுந்தன. அவன் எழுந்துசெல்வதைப்பற்றி எண்ணிக்கொண்டுதான் இருந்தான். எழவில்லை.

அவன் உடல் எழமுடியாதபடி பிற உடல்களுடன் களிச்சேற்றால் இணைக்கப்பட்டிருந்தது. மிக மென்மையான சேறு. ஆனால் பட்டுவடங்கள் என ஆற்றல்கொண்டது. சாம்பல் கலந்த மண்தானே இது? இதற்கு இத்தனை பசை எப்படி வந்தது? இது குருதிப்பசை. பசுங்குருதி. பதினெட்டு நாட்களாக இங்கே விழுந்து மண்ணுக்குள் ஊறிக்கலந்து நொதித்த பழங்குருதி. அச்சேறு நிணம்போலிருந்தது. சில இடங்களில் மெல்லிய தசையென்றே தோன்றியது. திறந்திருப்பது வாய். உள்ளே நாவென அசையும் நாகங்கள். ஆழ்ந்த இருள். பசி தீ என அங்கே எரிந்துகொண்டிருக்கிறது. எழுந்து ஓடு… உயிர் காத்துக்கொள். அதனுள் விழுந்தவர் மீள இயலாது. அங்கே பாதாளதெய்வங்கள் வாய்திறந்து கண்கள் துறித்து காத்திருக்கக் கூடும்.

அவன் பிலத்தின் விளிம்பைப் பற்ற முயன்றான். ஆனால் உள்மடிந்த உதடுகள்போல அது வழவழப்பாக இருந்தது. அதற்குள் அவன் விழுந்தபோது மேலே விழுந்த உடல்கள் அவனை அழுத்தி மேலும் செலுத்தின. கீழே உளைச்சேறு உடலை தாங்கியது. ஆனால் அது விலகி விலகி அவனை உள்ளே கொண்டுசென்றது. மென்மையான தசைகளில் அவன் புதைந்து புதைந்து சென்றான். கரிய சேறு மேலும் மேலும் மென்மையாகி இருளென்றே ஆகியது. அவன் விழத்தொடங்கினான். ஆழத்தைச் சென்றறைந்து சிலகணங்கள் அவ்வதிர்வில் உடலுக்குள் திரவங்கள் கொப்பளிக்க கண்களுக்குள் வண்ணங்களை நோக்கியபடி அசைவில்லாது கிடந்தான்.

நினைவு மீண்டபோது அந்த இடத்தின் கெடுமணத்தையே முதலில் உணர்ந்தான். அது அழுகும் குருதியும் மட்கும் செடிகளும் அனலுடன் கலந்தது போன்ற வாடை. எழுந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கினான். குவியல் குவியலாக மானுட உடல்கள் கிடந்தன. அவற்றின் மேல் மேலிருந்து உடல்கள் உதிர்ந்துகொண்டே இருந்தன. உடல்கள் உடல்களை தாங்கியமையால்தான் தான் அத்தனை உயரத்திலிருந்து உயிர்மீளமுடிந்தது. பலர் அப்போதும் இறந்திருக்கவில்லை. சிலர் கையூன்றி எழவும் முயன்றனர். அவன் மேல் ஒருவன் வந்து விழுந்தான். சிரித்தபடி “பன்றிகள்… இனிய பன்றிகள்!” என்றான்.

அந்த உடற்குவியலின் விளிம்பு நோக்கி செல்லவேண்டும் என பீமன் முடிவெடுத்தான். எழுந்து நின்றபோது உடல்களின் குவியலின் அசைவால் நிலையழிந்து விழுந்தான். ஆகவே கைகளை ஊன்றியபடி தவழ்ந்து இருள்சூழ்ந்த விளிம்பு நோக்கி சென்றான். மேலிருந்து உடல்கள் உதிரும் ஓசை அவனுக்குப் பின்னால் கேட்டுக்கொண்டிருந்தது. முனகல்களுக்குள் சிரிப்பொலிகளும் சொற்களும்கூட ஒலித்தன. அவன் இருளுக்குள் சென்று சென்று பின் சரிவில் உருளத் தொடங்கினான். விழுந்து சென்று முட்டி எழுந்து நின்றபோது அது அவ்வுடற்குவையின் ஓரம் என உணர்ந்தான்.

அங்கே சீறலோசைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. அவன் விழிமணிகளின் மின்களை அருகிலெனக் கண்டான். அவை மீன்செதில்கள் எனச் செறிந்திருந்தன. அருகணையுந்தோறும் தெளிந்தபடியே வந்தன. மேலும் மேலும் அருகே சென்றபோது சீறல்காற்றுகளை தன் உடலெங்கும் உணர்ந்தான். அரவுகளின் பெரும்பத்திகளின் அசைவை, உடல்களின் சுழல்நெளிவை, நா பறக்கும் சிதறலை கண்டான். மேலும் அருகே சென்றபோது அவற்றை தெளிவுறக் கண்டான். கீழே விழுந்தவர்களை அவை கவ்வி இழுத்து விழுங்கிக்கொண்டிருந்தன. உடல்கள் விழைவுகொண்டு செல்வன போன்று அவற்றின் வாய்க்குள் தலைபுகுத்தி உந்தி நுழைந்துகொண்டிருந்தன. விழுங்கும் நாகங்களின் கண்கள் களிமயக்கில் என வெறித்திருந்தன.

அவன் அருகணைந்து “நான் பீமன்… இன்னமும் உயிரிழக்கவில்லை” என்றான். நாகங்களின் ஓசைகளில் இருந்து ஒரு குரல் சொல்கொண்டது. “இங்கே உயிருடன் இருப்பதும் இறந்ததும் வேறல்ல.” அவன் அந்த நாகத்தை நோக்கினான். கரிய பனைமரம் போன்ற உடல் முறுக்குகொண்டு நெளிய அவனருகே தலைநீட்டி அணுகியது. “ஒன்று உணர்க, இது வேறொரு உலகு! அங்குள்ள ஆற்றலும் அறிவும் தவமும் இங்கு பொருள்கொள்வதில்லை.” பீமன் எரிச்சலுடன் “விலகு… நான் இங்குள்ளவன் அல்ல. இங்கு மடியப்போவதுமில்லை” என்றான். இன்னொரு நாகம் அருகே படமெடுத்தது. “நீ அறியாதவன்!” என்று அது சொன்னது. “நீ ஒன்றுமறியாதவன். அறியாமையையே ஆற்றலெனக் கொண்டவன்.”

பீமன் கசப்புடன் நகைத்து “ஆம், மானுடர் அறிவதெல்லாமே அகச்சான்றையும் அறத்தையும் அறிவைக்கொண்டு எவ்வண்ணம் மீற முடியும் என்பதற்காகவே. நான் அறியாமையால் என் அகத்துறையும் தெய்வங்களுக்கு அடிபணிபவன்” என்றான். நாகம் சினம் கொண்டது. “நீ ஏன் அங்கிருக்கவேண்டும்? உன் இடம் அது அல்ல. அங்கே அனைத்தும் முரண்கொள்கின்றன. சொல்லும் செயலும். நேற்றும் இன்றும். நெறிகளும் நடைமுறைகளும். அங்கே அறம் தனக்குத்தானே முரண்கொள்கிறது. தன் வாலை தானே அஞ்சி சீறித் தாக்கி விழுங்க முயல்கிறது.” பீமன் “என் கடன் அங்குதான் உள்ளது… நான் என் வஞ்சத்தை இன்னும் முடிக்கவில்லை” என்றான்.

“இது வேள்வி. அங்கே மேலே நிகழ்ந்துகொண்டிருப்பது அறுதி வேள்வி என்று உணர்க! நேற்று அந்தியில் அவர்கள் தேவர்களுக்கு அவியூட்டினர். இன்று எங்களுக்கு அவியூட்டும் வேள்வியை இயற்றுகிறார்கள்.” இன்னொரு நாகம் அதன்மேல் விழுந்து உடல்பிணைந்து படமெடுத்துச் சீறியது. “அனற்தழல்களால் அவ்வேள்வி. இருட்கொழுந்துகளால் இவ்வேள்வி.” இன்னொரு நாகம் “எங்கள் பசியாறும் நாள் இது. இனி ஆயிரமாண்டுகள் இப்புவியை தாங்குவோம்” என்றது. பிறிதொரு நாகம் “உண்டு உண்டு நிறைகிறோம். இதுவரை இவ்வண்ணம் நிறைந்ததில்லை. அங்கே மண்ணுலகில் மரங்கள் என எழுவோம். கொடிகள் என செறிவோம். விலங்குகள் என பெருகுவோம். பறவைகள் என நிறைவோம்… வளமெழும் காலம் விடியவிருக்கிறது மண்ணில்” என்றது.

பீமன் அதன் வெறித்த கண்களை நோக்கி “விலகு” என்றான். “மண்ணில் வாழும் உயிர்களுக்கு உரிய உயர்ந்த இலக்கு என்பது வேள்வியில் அவியாவது என நீ அறிந்ததில்லையா?” என்றது ஒரு நாகம். “பெருவேள்விகளால் வாழ்கின்றது உயிர்க்குலம். உயிர்களில் உயர்ந்தவர்கள் மானுடர். ஆகவே அவிகளிலும் பெரியது மானுடமே.” பீமனின் விழிகள் நாகவிழிகளால் அசைவிலாது கட்டுண்டன. “விலகு” என அவன் மீண்டும் சொன்னான். “விலகு! விலகு!” என சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் மேல் விழிகள் ஊன்றியிருந்தன. கூரிய ஊசியால் அவன் உடலைத் தைத்து கவ்விப் பற்றி அசையாமல் நிறுத்தியிருந்தன.

“நீ அஞ்சுகிறாய்… நீ அஞ்சவேண்டியதே இல்லை. உண்மையில் மண்ணில் புகுவன விதையாகின்றன. விண்ணேறுபவை மழையாகின்றன. அழிவென்பது தொடர்ச்சியறுதலே. அவியாகின்றவை அழிவின்மையை அடைகின்றன.” பீமன் மிக மெல்ல அவன் செவிகளுக்கும் கேட்காதபடி “விலகு… விலகிச்செல்!” என்றான். “அங்கே வாழும் கோடிகோடி மானுடரை எண்ணிப் பார். அவர்களின் வாழ்க்கை எத்தனை இனியதாக இருந்தாலும், அதை அவர்கள் எவ்வண்ணம் பொருள்கொண்டாலும் எஞ்சுவதென்ன? அவர்களின் சாவு மிகமிக எளிமையானது. நோயுற்று நொந்து மட்கி அழிவது. அறிக, எந்தக் கதையும் அதன் முடிவால்தான் பொருள்கொள்கிறது. பொருளில்லாத முடிவுகொண்ட வாழ்க்கைக்கு மட்டும் என்ன பொருள் இருக்கமுடியும்?”

“உரசி அழியும் சந்தனமும் எரிந்தழியும் அகிலும் அவியாகும் பலாசமும் மட்டுமே பொருள்கொள்கின்றன. விறகுகளாகின்றன சில. காட்டில் மட்கி மண்ணாகின்றன பல” என்றபடி அருகே சுருள் விரித்தது இன்னொரு நாகம். “உன் நிறைவு இங்கே என உணர்க! நீ கொடுக்காமல் எடுக்க எவராலும் இயலாது… இதோ இங்கே வந்துவிழும் ஒவ்வொருவரிடமும் கோருகிறோம். அவர்கள் உவந்து தங்களை அளிக்கிறார்கள். நோக்குக, நாகம் எதையும் பற்றி விழுங்குவதில்லை! இரை அதனுள் செல்லும்போது வாயை அசைப்பதுமில்லை. உணவாவது அந்த இரையின் கொடை.”

அக்கணம் பீமன் மேல் எடையுடன் ஒரு பெரிய நாகம் விழுந்தது. அந்த விசையில் அவன் தள்ளாடி விழ அவனை அது கவ்வி சுருட்டிக்கொண்டது. அவன் அதன் பிடிக்குள் இறுக அதன் அணைப்பு எடைமிகுந்தபடியே வந்தது. அவன் அறிந்த எந்தப் பெருமல்லனைவிடவும் ஆற்றல் கொண்ட பிடி. அவனுள் எலும்புகள் நொறுங்குவதுபோல் நெரிபட்டன. உள்ளே சிக்கிக்கொண்ட மூச்சுக்காற்று இரும்பென ஆகி எடைகொண்டது. அவனுள் ஒரு சிறு உடைவு நிகழ்ந்தது. மறுகணம் தன் கைகள் இரு நாகங்களென ஆவதை அவன் கண்டான். அவை சீறி ஒலியெழுப்பி நெளிந்தெழுந்தன. அந்த நாகத்தை பற்றிச் சுருட்டி அப்பால் வீசின.

தன் தோள்களில் சுழன்று நெளிந்து சீறிப் போரிட்ட இரண்டு கரிய மாநாகங்களை அவனே திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவை ஒன்றோடொன்று உடலறைந்துகொண்டன. ஒன்றை ஒன்று தழுவி முறுக்கிக்கொண்டு உடல்பெருகி எழுந்து அறைந்தன. அங்கிருந்த நாகங்களை தூக்கி முறுக்கி அப்பால் வீசினான். அறைந்து சுருளச்செய்தான். அவை விலகி அலைகொண்டு எழுந்து சூழ்ந்து அவனை மிரண்டு நோக்கின. “நீ யார்? யார் நீ?” என்று ஒரு நாகம் கூவியது. “உன் உடலில் எவ்வண்ணம் எழுந்தன நாகங்கள்? சொல், நீ யார்?”

“நான் பாண்டவனாகிய பீமன்… இந்நாக உலகம் எனக்குப் புதியதல்ல” என்றான் பீமன். “உன்னுள் நஞ்சு உள்ளது. அதிலிருந்தே இந்த நாகங்கள் உன் உடலில் எழுகின்றன. எங்கிருந்து பெற்றாய் அதை? எப்படி அந்நஞ்சு உன் உடலில் வாழ்கிறது?” என்றது ஒரு நாகம். “நான் இங்கு வந்துள்ளேன். கங்கையின் பிலத்தினூடாக நுழைந்தேன். உங்கள் அரசனை பார்த்தேன். அவனை அழையுங்கள். பாண்டவனாகிய பீமன் வந்துள்ளான் என்று சொல்லுங்கள். நான் வெளியேற வேண்டும். அங்கே மேலே நிகழ்ந்துகொண்டிருக்கும் போரில் நான் ஆற்றவேண்டியது எஞ்சியிருக்கிறது” என்றான் பீமன்.

“யார் அது? பாண்டவன் பெயரைச் சொன்னது யார்?” என்று ஒரு குரல் கேட்டது. நாக உடல்களை விலக்கியபடி ஒரு இளநிற நாகம் தலைதூக்கியது. “பீமசேனனா… உன் பெயரை எவரோ சொன்னார்களே என்று பார்த்தேன். இங்கே எவ்வண்ணம் வந்தாய்?” என்றது. பீமன் ஆரியகரை அடையாளம் கண்டுகொண்டான். “மூதாதையே, நான் போர்க்களத்தில் திறந்த பிலத்தினூடாக உள்ளே விழுந்தேன்… நான் உடனே திரும்பியாகவேண்டும்” என்றான். ஆரியகர் “நீ விழுந்தாய் எனில் அதற்கு ஏதேனும் அறியாப் பொருள் இருக்கும்… வருக!” என்று அவன் தோளை தொட்டார். “வருக, மைந்தா. உன் இலக்கென்ன என்பதை பார்ப்போம்.”

அவர் அவனை நாகங்களை விலக்கி உள்ளே அழைத்துச்சென்றார். இருளே ஒளியென்றாக கண்கள் துலங்கி அவன் அந்தப் பிலத்தின் வளைந்து பின்னிய பாதைவிரிவை கண்டான். அவர் ஒரு சிறு அறைக்குள் அவனை அழைத்துச்சென்றார். “மேலே நிகழ்ந்ததை சொல்” என்றார். அவன் சொல்லி முடித்ததும் “நீ அணுவிடையில் உயிர் தப்பினாய். எவருடைய வேண்டுதலாலோ அது நிகழ்ந்தது” என்றார். “என் அன்னையின் வேண்டுதலும் உடன்பிறந்தாரின் வாழ்த்தும் என்னுடன் எப்போதும் உள்ளது” என்றான் பீமன். ஆரியகர் புன்னகைத்து “அதுவல்ல. அவர்களின் வேண்டுதலும் வாழ்த்துக்களும் தன்னலம் கலந்தவை. அவை பயனளிப்பதில்லை. இது தூய வேண்டுதல். எவராலும் மறுக்கப்பட இயலாதது” என்றார்.

ஆரியகர் மானுட உடல்கொண்டார். இடைக்குக் கீழே அவர் உடலின் நாகச்சுருள் நெளிந்தது. “உனக்குத் துணையென நின்ற வேண்டுதல் பிறிதொன்று” என்றார் ஆரியகர். “அதை நீ வேண்டுமென்றால் காணலாம்.” பீமன் “வேண்டாம்” என்றான். “நீ கனிந்துவிடுவாய் என அஞ்சுகிறாயா?” என்று ஆரியகர் சிரித்தார். “ஆம், நீ கனிவாய். அதன்பின் உன் கதை எழாது.” பீமன் “நான் கனியவில்லை, கனிய விரும்பவுமில்லை” என்றான். “நீ கலங்கவில்லையா? நூற்றுவர் மைந்தரைக் கொல்லும்போது? நூற்றுவரை ஒவ்வொருவராகக் கொல்லும்போது?” என்றார் ஆரியகர். பீமன் பேசாமல் நின்றான்.

“சொல்க…” என்று ஆரியகர் கேட்டார். “அவர்களை கொல்லும்போதல்ல. என் மைந்தர்களுக்கு முன் நான் உளம்சிறுத்தேன். அவர்களிடமிருந்து தனியனானேன்.” ஆரியகர் நகைத்து “ஆம், அது அவ்வாறே. முறையிலாக் காமம் கொண்டவன் மகள்களிடம் அயன்மைப்படுகிறான். அறமிலாச் செயலாற்றியவன் மைந்தரிடமிருந்து விலக்கம் கொள்கிறான்” என்றார். பீமன் “நான் முறையிலாதன செய்யவில்லை… எந்த முறையின்மையைச் செய்தாலும் என் நோக்கில் அவை முறையே” என்றான். “என் செயல்களுக்காக நான் ஒருகணமும் குற்றவுணர்ச்சி கொள்ளவில்லை…” ஆரியகர் “நீ உன் வஞ்சினத்தில் பெரும்பகுதியை இயற்றிவிட்டாய்” என்றார். “முழுமைகொள்ளாச் செயல் இயற்றப்படாத செயலே” என்றான் பீமன்.

“மைந்தா, முன்பு இந்த ஆழத்திற்கு நீ வந்ததை நினைவுறுவாய் அல்லவா?” என்று ஆரியகர் சொன்னார். “அன்று நீ அருந்திய நஞ்சே இன்றுவரை உன்னில் வஞ்சமென்றும் ஆற்றலென்றும் நின்றது. இன்று அதன் வீச்சை உன்னிலிருந்து இழந்துவிட்டிருக்கிறாய். முதல்முறையாக உன் மைந்தரின் விழிகளை எதிர்கொள்ளத் தயங்கி திரும்பிக்கொண்டபோதே நீ சுருங்கலானாய்.” அவர் அவன் அருகே வந்து “நாகத்தின் பத்தி சுருங்குமென்றால் அதனால் கொத்த இயலாது என்று அறிக!” என்றார். பீமன் “ஆம்” என்றான். “இன்று நீ இருக்கும் நிலையில் அவனை உன்னால் கொல்ல இயலாது” என்றார் ஆரியகர்.

“நான் அவனை கொன்றாகவேண்டும்… எந்நிலையிலும் எவ்வண்ணமும் அவனை கொன்றே ஆகவேண்டும். அது என் வஞ்சம்… அதுவே நான்” என்றான் பீமன். “எனில் நீ முன்பு அருந்தியதைவிட இருமடங்கு வீச்சுகொண்ட நஞ்சை அருந்தவேண்டும்” என்றார் ஆரியகர். பீமன் “அருந்துகிறேன். அதன்பொருட்டே இங்கே வந்தேன் போலும். அருந்துகிறேன்” என்றான். ஆரியகர் “நில், இது ஒருபோதும் அருந்தியவனை விட்டு அகலாதது. உன் எதிரியை வென்ற பின்னரும் அவ்வண்ணமே எஞ்சுவது” என்றார். “எவ்வண்ணமாயினும், எதுவரை செல்வதாயினும்” என்றான் பீமன்.

“எதற்கும் நிகர்த்தரப்பு ஒன்றுண்டு. அரியவை அனைத்தையும் இழந்தே நீ இதை அடைவாய்” என்றார் ஆரியகர். “ஆம், அறிவேன். அனைத்தையும் இழக்கிறேன். ஏழு பிறவிக்கும் வீடுபேற்றை இழக்கிறேன்… அந்நஞ்சை எனக்கு அளியுங்கள்” என்றான் பீமன். ஆரியகர் “நீ விரும்பிய வண்ணமே” என்றார். பீமன் அவரை தொழுத கையுடன் நோக்கி நின்றான். அவர் சென்று ஒரு சிறுகலத்தை எடுத்துவந்தார். “இதோ இதை அருந்துக!” என்று நீட்டினார். பீமன் அதை வாங்கினான். அதிலிருந்து எழுந்த எரிமணம் உடலை குமட்டல்கொண்டு அதிரச் செய்தது.

அவன் அதை குடிக்கும் பொருட்டு மேலே தூக்கி வாயை அண்ணாந்தான். அதன் கசப்பு குறித்த நினைவு அவன் உள்ளுறுப்புகளை கொந்தளிக்கச் செய்தது. இருமுறை அதை விளிம்புசொட்டும்படி கவிழ்க்கப் போய் மீண்டான். பின் ஒரே கவிழ்ப்பில் வாய்க்குள் விட்டுக்கொண்டான். முதலில் அது தண்ணென்றிருந்தது. பின்னர் இனிக்கத் தொடங்கியது. நாவும் குடல்களும் இனித்தன. உடலே இனிக்கத் தொடங்கியது. விரல்நுனிகள்கூட நாக்குகளாக இனிப்பில் திளைக்க அவன் விழிமயங்கினான். “உன் உடல் நஞ்சென்றாகிவிட்டது. இனி நீ வெல்லற்கரியவன்” என்றார் ஆரியகர்.

“இது முன்னர் கசந்தது” என்று பீமன் சொன்னான். “இப்போதும் கசப்பதுதான். ஆனால் இக்கசப்பு முன்னரே உன்னுள் இருந்தது. உன் உடல் அதற்கு பழகிவிட்டிருந்தது. அது அகன்றமையால் விடாய் கொண்டிருந்தது. இனிய சுவை என்பது வேண்டியதை பெறுதல்தான்” என்று ஆரியகர் சொன்னார். பீமன் அக்கலத்தில் எஞ்சியதை தன் நாக்கில் விட்டுக்கொண்டான். அதில் சற்றே கசப்பு எஞ்சியிருந்தது. “எச்சுவையும் செறிவானால் கசப்பே” என்றார் ஆரியகர். “செல்க, இது நீ விழைந்து பெற்றது என்பதை மறவாதிரு!” பீமன் அவரை வணங்கினான். அவர் அருகே நின்ற நாகத்திடம் “இவனை மேலே செல்ல விடு” என்றார்.

அந்த நாகம் பீமனை அழைத்துச்சென்றது. சிறிய இடுக்குப்பாதைகளினூடாக. பொந்துகளினூடாக. பின்னர் தன் உடலை நீள்சுருளாக்கி நின்று “என் மேல் ஏறிச்செல்க!” என்றது. அவன் ஏணிப்படிகளில் என அதன் வளைவுகளில் மிதித்து ஏறினான். மேலே போர்க்களத்தின் ஓசைகள் கேட்கத் தொடங்கின. அவன் நாகத்தின் விழிகளை நோக்கியபோது வேறுபட்ட உணர்வை அடைந்தான். மீண்டும் நோக்கிய பின் “என்ன?” என்றான். “என்ன கேட்கிறாய்?” என்றது நாகம். “நீ என்னைப் பற்றி எண்ணுகிறாய்… என்னையே நோக்கிக்கொண்டிருக்கிறாய்.” நாகம் “ஆம்” என்றது. “என்ன நினைக்கிறாய் என்னைப்பற்றி? சொல்” என்றான் பீமன். “அதிலென்ன உள்ளது?” என்றது நாகம். “சொல், என்ன நினைத்தாய்?”

“இளையோனே, உங்கள் வாழ்க்கைக்காலம் மிகச் சிறியது. நீங்கள் இழைக்கும் பெரும்பாலான பிழைகள் அதனால் உருவாகின்றவை” என்று நாகம் சொன்னது. “அங்கு பிறந்ததுமே நான் அழிவுகொண்டவன் என உயிர் அறிகிறது. ஆகவே எஞ்சிய வாழ்நாள் முழுக்க அழிவின்மைக்காகவே அது ஏங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்தையும் அதன்பொருட்டே செய்கிறது. ஆணவம் என மண்ணுயிர்கள் எண்ணுவது அழிவின்மைக்கான விழைவையே.” பீமன் “என்னைப்பற்றி என்ன எண்ணினாய்? சொல்” என்றான். “நீங்கள் எதிர்காலம் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். வருந்தலைமுறைகளைப் பற்றி. வரலாற்றைப் பற்றி. வாழும் சொல் பற்றி. இன்றுகளை நாளைக்கென்றே நிகழ்த்திக்கொள்கிறீர்கள்.”

“சொல், நீ என்னைப்பற்றி எண்ணியது என்ன?” என்று பீமன் உரக்கக் கூவினான். “நான் அழிந்தாலும் என் பெயர் வாழவேண்டும் என எண்ணும் பேதைமையால்தான் அனைத்தையும் இழக்கிறீர்கள். என்றுமிருக்கவேண்டும் என எண்ணி இன்றில்லாதாகிறீர்கள்.” பீமன் அதன் கழுத்தைப் பிடித்தான். “சொல்… என்ன நினைக்கிறாய்? சொல்!” என்றான். “நீ எங்கு வாழ விழைகிறாய் என்ற வினாவையே ஒவ்வொரு குழந்தையிடமும் நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் நீங்கள் அதை கேட்கமாட்டீர்கள். நாளைக்கென வாழும்பொருட்டே மைந்தரை வளர்ப்பீர்கள். கொல்லவும் சாகவும் பயிற்றுவிப்பீர்கள்.”

“சொல்! சொல்!” என பீமன் அதை உலுக்கினான். “உன்னை என்னவென்று எண்ணவேண்டும் எதிர்காலத்தவர்? பெண் மானம் காக்க பிறழாது நின்றவன் என்றா? சொல் நின்று வாழ்ந்தவன் என்றா? எண்ணிய முடித்த வீரன் என்றா? அவர்கள் எவ்வண்ணம் எண்ணுவார்கள் என நீ எங்ஙனம் அறிவாய்?” பீமன் “என்னுடலிலும் நஞ்சு உள்ளது. உன்னை கொத்திக் கொல்ல என்னால் இயலும்” என்றான். நாகம் சிரித்துக்கொண்டு “நாகருலகில் வந்து நஞ்சருந்திச் சென்றாலும் நீ நாகம் அல்ல, மூடா” என்றது. “உன்னை எண்ணி இரங்கினேன். உன்னை எண்ணி பின்னர் சிரித்துக்கொண்டேன்.”

பீமன் “ஏன்?” என்றான். அது அவனை மேலே தூக்கியது. “ஏன்? ஏன்?” என்று பீமன் கூவினான். நாகம் அவனை உந்தி மேலே தள்ளியது. கரிய தோற்படலத்தைக் கிழித்தபடி அவன் தலைகீழாகச் சென்று எங்கோ விழுந்தான். உடலெங்கும் பரவியிருந்த பிசினை கைகளை விரித்தும் விரல்களை அகற்றியும் நோக்கி எங்கிருந்தோம் என திகைத்தான். பின்னர் இடமுணர்ந்து கையூன்றி புரண்டு எழுந்து நின்றான். அவனைச் சூழ்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த குருக்ஷேத்ரக் களத்தை வெறித்து நோக்கிக்கொண்டு நின்றான்.

முந்தைய கட்டுரைகதிரவனின் தேர்- 4
அடுத்த கட்டுரைமீள்வும் எழுகையும்