முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன்
ஆசி கந்தராசா
பயணியின் புன்னகை
அன்புள்ள ஜெயமோகன் ,
ஆசி.கந்தராஜா அவர்களின் ‘கள்ளக் கணக்கு’ சிறுகதை தொகுப்பு பற்றிய அனோஜனின் பார்வையை தங்கள் தளத்தில் கண்டேன்.அருமையான தலைப்புடன் விரிவான கண்ணோட்டத்தினை தந்திருக்கிறார், இந்தத் திறமை மிகுந்த இளம் படைப்பாளி.
நிகழ்காலத்தின் மேன்மை மிக்க எழுத்தாளர் தாங்கள் என்பதில் உணர்வு பூர்வமாக நான் உடன்படுகிறேன். “ஒரு கோப்பை காபி”என்ற தங்கள் சிறுகதைக்கான தெளிவு தரும் விமர்சனத்தை எழுதியதன் பின் தான் அனோஜனை அறிந்தேன். அண்மையில் அவரின் “யானை” சிறுகதையையும் மிகுந்த லயிப்புடன் வாசித்தேன். தரமான எழுத்துக்கள் எதுவாயினும் அது என்னைக் கவரும். ஆயினும் இன்று அதிகமாகப் பேசப்படும் அகவயமான சித்தரிப்பு என்பது பற்றி சிறிதே ஒவ்வாமையும் எனக்குண்டு.அவ்வாறான கதைகளே இலக்கியத் தரம் வாய்ந்தவை என்பதான தோற்றப்பாடு தங்கள் தளத்தில் காணப்படுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அனோஜனும் இந்தக் கருத்தினையே கூற முனைகின்றார்.
எனினும் அகவய எழுத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் பல கதைகள், பெரும்பான்மை வாசகரை சென்றடையாமை அல்லது சாதாரண வாசகரால் ரசிக்கப்படாமை என்னும் நிலையும் படைப்பாளிகளினால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். புரியாத மொழி நடையில் மனதின் சித்தரிப்புகளை எழுதி விட்டு அதை ரசிக்காத வாசகரின் இலக்கிய உணர்வை கொச்சைப் படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அகவய உணர்வுச் சித்தரிப்புகளின் அலைவரிசை அனைவருக்கும் எட்டுவதில்லை. ஆயினும் அவர்களும் எழுத்திலக்கியத்தின் ரசிகர்கள் தான். அவ்வாறான வாசகர் வட்டத்திற்காக தரமான கதைகளைப் படைப்பவர்களும் எழுத்துக்கலை அறிந்தவர்கள்தான். அகவுலகும் புறவுலகும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குவதே உலக வழக்கு. ஆகவே மானிடத்தை எவ்வகையிலேனும் மாண்புறச்செய்யும் எழுத்து மதிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமானது.
எது உண்மையான இலக்கியம் என்பது இங்கு எனது பேசுபொருள் அல்ல.இன்று போற்றப்படுவது நாளை இன்னொரு புள்ளியை நோக்கி நகரக் கூடியது. மாற்றம் ஒன்றே நிலையானது. எழுத்துலகின் எல்லைகளையும், இலக்கணங்களையும் வகுப்பது இயலுமான ஒன்றல்ல.
அனோஜனின் பார்வையில் ஆசி……..
தகவல்களும்,புறவய சித்தரிப்புகளின் யதார்த்தமும் ‘ஆசி’யின் படைப்புகளின் பலம் என இனம் காணப்படுகின்றன. அதே வேளை அவரது கதைகளில் அகவய உணர்வு வெளிப்பாடுகள், பண்பாட்டு மதிப்பீடுகள் அதிகம் காணப்படாமை பிரதான குறைபாடாக சொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அது ஓரளவு உண்மை தான். ஆசியின் எழுத்து இந்த இரண்டிற்கும் இடையே பயணிக்கும் ஜனரஞ்சக பொதுசன அறிவூட்டலுக்கான ஒரு தளமாக அமைவதே அவரது மிகப் பெரிய சாதனையாகும்.
இவரின் கதைகளில் கதைமாந்தரின் உணர்வு நிலைகள் மேலோட்டமாகவே பேசப்படுகின்றன.ஆனாலும் கதை கூறப்படும் பாங்கில் அந்த நுண்ணுணர்வுகளை வாசகனால் நிச்சயமாக சென்றடைய முடியும். இவரது படைப்புகளில் பல ஈற்றில் மனதில் ஈரத்தையும் , உறைநிலையினையும் தோற்றுவிப்பது இதனால் தான்.
இக்கதைத் தொகுதியில் அன்னை, சூக்குமம், பத்தோடு பதினொன்று, புகலிடம், யாவரும் கேளிர் ஆகிய கதைகள் இத்திறன் கொண்டவை. சொல்லாத எண்ணங்களுக்கும் ஓர் அழகு உண்டு. கதையின் போக்கில் உறவாடி வரும் புறவயத் தகவல்கள் விரிவான அறிவுத் தேடலுக்கும் வழியமைப்பதை, ஆசிரியரின் பல படைப்புகளில் கண்டு வியந்திருக்கிறேன். இசைவான கதையோடு அல்லாது வெறும் ஆவணப்படுத்தல்களாக மட்டுமே அவை இருக்கும் போது அது பலரைச் சென்றடைவதில்லை. உணர்வுகளால் மட்டுமே வடிவமைக்கப் படும் கதைகளுக்கு இந்த வல்லமை இருக்குமா…?
மொத்தத்தில் தான் சார்ந்த விவசாய விஞ்ஞானி என்ற வீரியம் மிக்க ஒட்டுக்கட்டையில் ,ஒட்டுத்தண்டான எழுத்தாளர் ‘ஆசி’ யின் பயன்தரு இலக்கியக் கனிகள் பலபல.அவரின் வெற்றியின் மகத்துவம் என்பது அனைவருக்கும் புரியும் எளிய யதார்த்த நடையிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதையும் உணர்கிறேன்.
‘கள்ளக் கணக்கு’ கவிதை சொல்லுமா…? – ரஞ்ஜனி சுப்ரமணியம் –
ஆசியின் படைப்புகள் பற்றி நான் விரும்பி ரசித்த ஒரு பொருத்தமான கருத்து இது.
நன்றி.
//ஒரு எழுத்து எழுதப்பட்டதன்றி பிறிதொரு காலத்தில்,இடத்தில்,ஒரு புதிய வாசகனுக்கு தரமான மகிழ்வூட்டி,வாழ்க்கை பற்றிய ஒரு புதிய புரிதலை ஏற்படுத்துமெனில் அது இலக்கியம் என்பது ஒரு எளிய விளக்கம் //
— ரஞ்ஜனி சுப்ரமணியம்
கொழும்பு