‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13

அஸ்வத்தாமனை நோக்கி அம்புகளைத் தொடுத்தபடி போர்க்கூச்சல் எழுப்பிக்கொண்டு தேரில் சென்றபோது திருஷ்டத்யும்னன் துயிலிலோ பித்திலோ என முற்றிலும் நிலையழிந்திருந்தான். வெளியே கேட்டுக்கொண்டிருந்த ஓசைகளும் அறைந்து உதிர்ந்த அம்புகளும் புகையென அவன் உடலைக் கடந்து சென்றுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கிறேனா என்னும் ஐயம் அவனுள் எழுந்துகொண்டே இருந்தது. இல்லை, இடவுணர்வும் காலபோதமும் இருக்கின்றன. இதோ இங்கே இவ்வண்ணம் போரிட்டுக்கொண்டிருக்கிறேன். நேற்று இன்றுடன் பிணைப்புண்டிருக்கிறது. இக்கணம் அனைத்தையும் மையமென நின்று தொகுத்துக்கொண்டிருக்கிறது.

இக்கணம், இக்கணம், இக்கணம்… இக்கணமே அனைத்தையும் மையமென நின்று தூக்கிச் சுழற்றுகிறது. இக்கணத்தில் முழுக்க நிலைகொண்டுவிட்டேன் என்றால் நான் தெளிந்தவன். ஆனால் தெளிவு என்பதுதான் என்ன? ஒவ்வொன்றையும் குறுக்கிச் சிறிதாக்கி, துளியென்று கடலைச் சமைத்து, கையில் வைத்திருக்கும் ஒரு மாயம் அன்றி வேறில்லை அது. தெளிவு என்பது தன்னிலை. தன்னிலை என்பது இக்கணம். இக்கணம் என்பது பிற அனைத்திலிருந்தும் உதிர்த்து எடுப்பது. பிற அனைத்துக்கும் எதிர்நிலை என நின்றிருப்பது. இக்கணம் என்னும் மாயை என்னை ஆள்கிறது. இக்கணம் என்றொன்றில்லை எனில் நான் மைய முடிச்சு அவிழ சிதறி நிறைவேன்.

தெளிவின்மை கூடிய கணங்களில் என்னில் இக்கணம் என ஒன்று துளித்திருக்கவில்லை. உணர்வென்றும் சித்தமென்றும் அது உருமாற்றம் கொண்டிருக்கவில்லை. சித்தமுடிச்சு அவிழ்ந்த கணங்களின் விடுதலைதான் எத்தனை பேருருக்கொள்வது! சிவமூலியை முதலில் இழுத்தபோது அம்முடிச்சு அவிழ்ந்தது. அவன் பலவாறாக சிதறிக் கிடந்தான். கைகால்கள் அறை முழுக்க கிடந்தன. சுவர்கள் நீர்ப்படலங்களென நெளிந்தன. வானம் மிக அருகே இருந்தது. நோக்கியபோது மிக அகலே சென்றது. அண்மையும் சேய்மையும் கலந்த வெளி அவனைச் சூழ்ந்து அலைகொண்டது. அஞ்சி அவன் கூச்சலிட்டான். “சூதரே! சூதரே” என அலறினான்.

அவனருகே இருந்த சூதர் “அஞ்சவேண்டாம், இளவரசே… அச்சமே இதற்கு எதிரி. அச்சத்தை சிவமூலி சென்று தொட்டதென்றால் அது பெருகிப்பரந்துவிடும்” என்றார். “என் உடல் கரைந்து பரவுகிறது. என் உடல் திறந்துகொண்டது!” அவன் குடலும் இரைப்பையும் வெளியே கிடந்தன. குருதி கசிய நெஞ்சக்குலை துடித்துக்கொண்டிருந்ததை அவன் கண்டான். “இது வேறொரு காட்சி… அவ்வளவுதான். வேறொரு வகையில் இதை பார்க்கிறீர்கள்… எளிதாகுக… இது பிறிதொன்றல்ல.” அவன் கைநீட்டி அவர் காலை பிடித்தான். சூதர் அவனருகே சிலும்பியில் இருந்து உறிஞ்சி வாயை வானோக்கித் தூக்கி முகில்கீற்றுகளை ஊதினார். “என் உடலில் இருந்து குருதி வழிகிறது… சிறுநீர் முட்டுகிறது.”

“அதை நோக்கிக்கொண்டிருங்கள்… உங்களை அச்சுறுத்துவது உங்களுக்குப் பின் வாயில்கள் மூடிவிட்டன என்னும் எண்ணம் மட்டுமே. இல்லை, இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே. அதற்குப் பின் இது கனவென மாறிவிடும். பழகிய உலகில் சென்றமைவீர்கள். அங்கே ஒவ்வொன்றும் நீங்கள் அறிந்தவகையில் இருக்கும்… அதன்பின் இதை நினைவுகூர்வீர்கள்.” அவன் நோக்கியபோது அருகே பெருந்தூண் சரிந்து நின்றிருந்தது. அந்த மாளிகையே படகுபோல் சரிந்து நின்றது. அருகில் பீடம் சரிந்திருக்க அதன்மேல் நீர்க்குவளை சரிந்திருந்தது. கைநீட்டி அவன் பீடத்தை பற்றினான். “சரிந்திருக்கிறது! விழப்போகிறது!” என்றான். “பற்றிக்கொள்க… பற்றிக்கொள்க என்னை! நான் அப்பால் விழப்போகிறேன்.”

“இல்லை, விழமாட்டீர்கள். நீங்கள் பழைய புடவியின் நெறிகளை இங்கே போடவேண்டாம். இங்கே சாய்ந்தவை விழாது. எரிபவை சுடாது. பாறைகள் ஒழுகும். நீர்த்துளி வந்து அறையும்… இங்கு அனைத்தும் வேறு… அதை நோக்கிக்கொண்டிருங்கள். அங்குள்ள எண்ணங்களை முற்றாக களைந்துவிடுக! ஆடையென உருவி அப்பாலிடுக! அவை நெடுந்தொலைவுக்கு விலகி இல்லையென்றாகி மறைக! அவை அங்கே மீளும் வழியின் வாயிலில் உங்களுக்காகக் காத்திருக்கும். சென்றதும் வந்து பற்றிக்கொள்ளும். ஏனென்றால் அவற்றுக்கு வடிவம் அளிப்பவர் நீங்கள். அவை வாழும் வீடு. அவை ஊரும் ஊர்தி. நீங்கள் அவற்றை உதறினாலும் அவை உங்களை விடப்போவதில்லை.”

“இங்கே மகிழ்ந்திருந்தால் இது இனிய உலகம். வேறு நெறிகளும் இயல்புகளும்கொண்ட பிறிதொரு புடவி. பித்தர்களும், சித்தர்களும் மட்டுமே அறியும் வெளி… இங்கு வந்துசென்றபின் அங்கு மீண்டால் அங்கே ஒவ்வொன்றையும் புதியவை என மீண்டும் கண்டடையலாம். இப்புடவி என்பது ஒன்றல்ல என்று தெளிவடைய வேறுவழியே இல்லை. நீங்கள் இதுவரை அறிந்த புடவி உங்களால் உருவாக்கப்பட்டது. நீங்கள் என அமைந்த அந்த தத்தளிக்கும் சின்னஞ்சிறு புள்ளியில் குவியும் காட்சிகளால் ஆனது அது. புல்நுனிப் பனித்துளியின் உலகம். வெல்க, அச்சிறையிலிருந்து எழுக! இவ்வெளியில் பரவுக! உங்கள் உடல் அல்ல நீங்கள். உங்கள் புலன்கள் அல்ல நீங்கள். அவற்றை ஆளும் தன்னிலை அல்ல நீங்கள். அதை உருவாக்கும் ஆணவம் அல்ல நீங்கள்.”

“அரசே, நீங்கள் அஞ்சுவது எவற்றை? நன்கு நோக்குக! நீங்கள் அந்தத் தூணை அஞ்சுகிறீர்கள். இந்தப் பீடத்தை அஞ்சுகிறீர்கள். இந்த வீட்டுக்கூரையை அஞ்சுகிறீர்கள்… அவை வெறும்பொருட்கள் என எண்ணியிருந்தீர்கள். அவற்றால் முடிவெடுக்கவோ, செயல்படவோ இயலாதென்று நம்பினீர்கள். அவை தங்கள் இயல்புகளின்மேல் மாற்றிலாது நிற்பவை என்றும் தங்கள் நெறிகளால் முற்றாகக் கட்டப்பட்டவை என்றும் எண்ணிக்கொண்டீர்கள். பொருள் என்பது பொருளின் நெறிகளின் தொகையே என்று சொல்லும் சிறப்பியல்புக் கொள்கையினரை நம்பாத எவரும் இங்கில்லை. கௌதமர் ஓர் அறிவிலி. மானுடருக்கு நெறிகளை அளித்த பராசரர் எளிய அறிவிலி என்றால் பொருட்களுக்கு நெறிகளை அளித்த கௌதமரை பேதை என்று அன்றி எவ்வண்ணம் கூறுவது?”

“பொருட்கள் அந்நெறிகளால் ஆளப்படவில்லை என்று அறிக! நெறிகளை நீங்களே அவற்றுக்கு அளித்தீர்கள். இதோ அவற்றை அகற்றிவிட்டீர்கள். அனைத்தையும் கட்டவிழ்த்துவிட்டீர்கள். அவை விடுதலை கொண்டுவிட்டன. கட்டற்ற நிலையில் அவை எவ்வாறு உள்ளன என்று நோக்குக! அவற்றை அஞ்சவேண்டியதில்லை. கனவிலெழும் காட்டுயானைகளின் மத்தகங்களில் எடையும் விசையும் இல்லை என எண்ணிக்கொள்க! அவற்றின் போரை குன்றேறி நின்று நோக்கவேண்டியதில்லை. நோக்குக, வெறுமனே நோக்குக! அவை எவையென்று உணர்க! அவை எப்போதும் இங்கு இவ்வண்ணமே இருந்தன. உங்கள் சித்தக்குமிழியில் அவை பிறிதொன்றென தங்களைக் காட்டின. அக்குமிழி இதோ உடைந்துவிட்டிருக்கிறது…”

சூதர் பேசிக்கொண்டே செல்ல அவன் உளம் படிந்து உடல் படிந்து தரையில் வரையப்பட்ட ஓவியமென ஆகி வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். விழிகளால் அல்ல, முழுதிருப்பாலும் நோக்கிக்கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்த உலகம் அனைத்து ஒழுங்குகளுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அவன் அறிந்த பொருட்கள்தான். அவை இயல்பழிந்தபோது முடிவின்மையை கொண்டன. நெறிகளுக்கு மட்டுமே எல்லை. எல்லையற்றது மீறல். அவன் ஒரு கோப்பையை நோக்கிக்கொண்டிருந்தான். நீர்த்துளிபோல் அது விம்மியது. உருகி வழிந்து மீண்டும் இணைந்துகொண்டது. எழுந்து புரண்டு கோடாகி வளைந்து சுருண்டு இணைந்து மீண்டும் துளியாகியது. அவன் சிரிக்கத் தொடங்கினான்.

மறுநாள் காலையில் அவன் விழித்துக்கொண்டபோது அருகே அந்தச் சூதர் இருந்தார். அவன் புரண்டு எழுந்தபோது முதல் எண்ணம் என எழுந்தது தனக்கு கைகால்கள் உள்ளனவா என்பதே. கைகளை தூக்கிப் பார்த்தான். கால்களை அசைத்தபோது உடலை உணர்ந்தான். உடலுக்குள் அமைந்துள்ளோம் என உணர்ந்ததுமே ஆழ்ந்த நிறைவொன்றை அடைந்தான். “சூதரே! சூதரே!” என அவன் அருகே படுத்திருந்த சூதரை உலுக்கினான். அவர் எழுந்துகொண்டு “இளவரசே” என்றார். “நீர் எனக்கு நேற்று அளித்தது என்ன?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “சிவமூலியின் சாற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சாந்து… உடலுக்குள் நேராகவே சென்று சித்தத்தை தாக்குவது.”

“எங்கிருந்து பெற்றீர்?” என்றான் திருஷ்டத்யும்னன். “நாகர்களிடமிருந்து. இளவரசே, இச்செடியை அவர்கள் பசுங்குலங்களில் அரசநாகம் என்கிறார்கள். நஞ்சுகொண்ட செடிகள் என இப்புவியில் பலநூறு இருக்கலாம். சிவமூலியே நிகரற்றது. இதைப்பற்றி ஒரு கதை சொல்கிறார்கள்.” அவர் எழுந்து அமர்ந்து மீண்டும் சிலும்பியை எடுத்தார். “மீண்டுமா?” என்றான். “இது ஒரு மூச்சுக்கு… நேற்று எஞ்சியவற்றை இது அகற்றும்” என்றார் சூதர். “நாகர்களின் கதைகளின்படி மூவிழியனின் கழுத்தில் கிடந்த நாகம் அவர் தலையிலிருந்த நிலவுமேல் பொறாமை கொண்டது. நான் அரவுக்குலத்தின் அரசன். நானே கழுத்தணியாக அமைகையில் நீ சடைமகுடத்தில் அமர்வது உகந்தது அல்ல என்று அது நிலவிடம் சொன்னது.”

பிறைநிலவு “நான் வானின் இரு சுடர்களில் ஒன்றாகிய சந்திரன் அல்ல என்று உணர்க! நான் பருவானில் எழுவதில்லை. யோக இருளில் மட்டுமே எழுபவன். கரிய யானையின் கொம்புகள் என அந்த இரவில் இரு நிலவுகள் துலங்கும். கரித்தோல் பிளந்து எழுபவன் பெரும்பித்தன். வெள்ளேறு மேல் நின்று முப்புரி வேலேந்தி வெறியாட்டுகொள்கையில் ஒரு நிலவை அவன் தன் தலையில் சூடினான். பிறிதொன்றை நுதல்விழியும் அனலாடையும் கொண்டு பாய்கலைப்பாவைமேல் எழுந்து ஆடும் தன் துணைவியின் குழலில் சூட்டினான். நான் பெரும்பித்தின் அடையாளம். கடுவெளியில் நிறைந்துள்ள கோள்கள் அனைத்தும் நெறி வழுவி கூத்தாடும் தாண்டவத்தின் மேல் பொழியும் ஒளி” என்றது.

“என் குருதியே நஞ்சு. நெளிந்து நெளிந்து நான் அதில் கடைந்தெடுப்பது என் பல்லில் ஊறும் அருநஞ்சு. அது தவம்செய்து கனிந்து ஒளிகொள்வது நாகமணி… உன் நிலவொளிக்கு நிகராகவே ஒளிகொண்டது அது” என்றது நாகம். “அதில் ஒரு ஒருதுளியே போதும் பெருங்கடல்கள் பித்துகொள்ளும். மலைமுடிகள் வெறிகொண்டு எழும்… பித்தின் தெய்வம் நான் என்கின்றனர் நாகர்கள்.” நிலவு “நான் என் கீழே விண்நெருப்பு திகழும் நுதல்விழியை கொண்டுள்ளேன். எனக்கு மேலே கடுவெளியை குளிரச்செய்யும் விண்கங்கையை கொண்டிருக்கிறேன். அனலும் புனலுமென ஆடிக்கொண்டிருப்பதே பித்து என்று உணர்க!” என்றது.

“அனலென்றும் புனலென்றும் நெளிவது என் உடல்” என்றது நாகம். நிலவு “யோகியர் என் ஒளியில் ஒவ்வொன்றையும் மூடியுள்ள சித்தமெனும் திரையை விலக்கி மெய்யை நோக்குகின்றனர். மலைகளை நடனமிடச் செய்கின்றனர். கடல்களை எடுத்து ஆடையாக அணிந்துகொள்கின்றனர். விண்ணளாவ எழுந்து நின்று வான்சுடர்களை விழிகள் என சூடி மண்ணவர் வாழ்க்கையை நோக்கி அறிகின்றனர். வியனுருக்கொண்ட சிவனை நோக்கி நீயே நான் என்கின்றனர். பின்னர் மீண்டு சென்று சிவமேயாம் என அமர்கின்றனர். மண்ணில் சிலர் அவ்வண்ணம் மண்ணைக் கடந்து அமைவதனால்தான் மண் அவ்வண்ணம் அமைகிறது என்று உணர்க! உலகுகடந்தோரை அச்சுகளெனக் கொண்டே உலகு சுழல முடியும்” என்றது.

“இப்புவியை நானும் பித்தால் நிறைப்பேன். இதை மந்தரமலை விழுந்த பாலாழியென கொந்தளிக்கச் செய்வேன்” என்று நாகம் வஞ்சினம் உரைத்தது. நிலவு “எனில் ஒன்று செய்வோம். நான் இந்த சடைமுடித் திரளுக்குள் மறைகிறேன். உன் நாகமணியின் ஒளியால் இவ்விரவை நிரப்புக!” என்றது. “உன் ஒளியால் இங்கு நிகழ்வது என்னவென்று பார்ப்போம். உன் எல்லையை நீயும் என் பிழைகளை நானும் புரிந்துகொள்ள அது வாய்ப்பாகும்.” நாகம் “ஆம், அதை செய்வோம்” என ஏற்றுக்கொண்டது. நிலவு காரிருளில் மறைந்தது. நாகம் தன் அருமணியை நிலவென உமிழ்ந்து வானில் நிறுத்தியது.

அன்று ஊழ்கத்தில் அமர்ந்தவர்கள் வெண்ணிற அமுதொளிக்கு மாற்றாக இளநீல நிலவொளி எழுந்ததைக் கண்டார்கள். என்ன நிகழ்கிறதென்று அறியாமல் திகைத்தனர். ஒவ்வொரு மரமும் செடியும் பாறைகளும் விலங்குகளும் அவ்வொளியில் உருமாறின. வாழைத்தண்டுகள் நீலப்பளிங்குகள் என்றாயின. ஆலமர விழுதுகள் படமெடுத்துச் சீறின. கொடிகள் சுற்றிப்பின்னி நெளிந்தன. புடவியிலிருந்த ஒவ்வொன்றும் நஞ்சுகொண்டது. அவை ஒன்றை ஒன்று கொத்திக்கொண்டன. பின்னிப் புளைந்து போரிட்டன. புடவிப்பெருக்கு அனைத்து நெறிகளையும் இழந்து கொந்தளிப்பு கொண்டது. கடல்அலைகள் படமெடுத்து மண்மேல் எழுந்து வந்தன. மலைகள் உறுமியபடி சுருளவிழ்ந்து வானில் முகில்களுக்குமேல் பரவின. ஆழத்து இருளில் இருந்து அனல்தூண்கள் வெடித்தெழுந்தன.

யோகியர் எழுந்து வெறிநடனமிட்டனர். ஆற்றொணாக் காமம் கொண்டு அவர்கள் நிலையழிந்தனர். தங்கள் நிழல்களைப் புணர்ந்தனர். கைசுட்டி விலங்குகளைப் பெண்களாக்கி புணர்ந்தனர். காமம் நொதித்து வஞ்சம் என்றாக வேல்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். காமமும் வஞ்சமும் பெருகியெழ உலகையே வெல்லும் வெறிகொண்டு எழுந்தனர். விண்ணவர்களுக்கு அறைகூவல் விடுத்தனர். முகில்கள்மேல் எழுந்து ஏழு விண்ணுலகுகளையும் வெல்லத் துடித்தனர். விண்சமைத்து ஆளும் மூன்று தெய்வங்களையும் எதிர்க்க விழைந்தனர்.

தேவரும் முனிவரும் அஞ்சி இறைவனை வேண்டினர். யோகத்தில் அமர்ந்திருந்த இறைவனின் அருகமைந்த அன்னை அவரை எழுப்பாமல் சடைமுடித்தொகையில் மறைந்திருந்த நிலவின் மேல் சுட்டுவிரலால் மெல்ல தட்டி ஒரு துளி வெண்ணிற அமுதை உதிரச்செய்தாள். அவ்வெண்ணிற ஒளி குளிர்ப்பெருமழை என புடவிமேல் பரவியதும் அதில் நனைந்து அனைத்தும் நிறம் மாறி பொன்னொளி கொண்டன. ஒவ்வொன்றும் தங்கள் இயல்பு மீண்டன. மூவிழியனின் கழுத்தில் அமைந்த நாகம் “ஆம், நஞ்சல்ல பித்து” என்றது. “நஞ்சில் களியாட்டு இல்லை. நஞ்சென்பது அழிவு. பித்தென்பது அறிதல்” என்றது.

ஆனால் உலகு நிலைமீண்டபோது அனைத்துயிரும் முழுக்க மீள விழையவில்லை. அந்நச்சிரவில் அடைந்த ஆற்றலை அவை விரும்பின. “நீங்கள் விழையுமளவுக்கு நஞ்சை வைத்துக்கொள்ளலாம்” என்று மாநாகம் சொன்னது. “ஆனால் அறிக, அந்நஞ்சால் உங்கள் குருதியினரையும் சுற்றத்தவரையுமே முதலில் தாக்குவீர்கள்! தன் குடியை தானே உண்ணும் தீயூழ் கொண்டவையே நாகங்கள்.” அதை கேட்டு பெரும்பாலான செடிகளும் பூச்சிகளும் விலங்குகளும் அஞ்சி அகன்றன. ஊமத்தையும், அரளியும், எருக்கும் “நாங்கள் நஞ்சுகொள்க!” என்றன. நூற்றெட்டு செடிகள் “ஆம், நாங்களும்!” என்றன. மண்ணில் வாழ்ந்த பாம்புகளும் அரணைகளும் தேள்களும் “நஞ்சு எங்களுக்கு” என்று சொல்லி ஏற்றுக்கொண்டன. குளவிகளும் வண்டுகளும் “நாங்களும் நஞ்சுகொள்க!” என்று ஏற்றன.

சில செடிகளும் உயிர்களும் தயங்கித் தயங்கி துளிநஞ்சு கொண்டன. எட்டி கசப்பை ஏற்றுக்கொண்டது. கசங்கம் கெடுநாற்றத்தை நஞ்செனப் பெற்றது. அதிமதுரம் இனிப்பையே நஞ்சென்று ஆக்கிக்கொண்டது. தேனீ சிறுகொடுக்கில் ஒரு துளி நஞ்சை பெற்றுக்கொண்டது. மானுடன் நாவில் நஞ்சு கொண்டான். உணவனைத்தும் ஏழு நாள் புளித்தால் நஞ்சுகொள்ளலாயின. அவ்விரவு விடிந்தபோது நிலவின் பெருக்கில் ஒரு துளி மட்டும் ஒரு சுண்டைக்காய்ச் செடியில் வெண்மலர் என எஞ்சியிருந்தது. அது பித்தப்பூ என்று ஆகியது. சிவமூலி என அதை வாழ்த்தினர் முனிவர். சிவநடனத்தின் வெண்ணிற ஒளியை விரிப்பது. சித்தத்தில் அமுதென்றாவது.

சூதர் சொன்னார் “இளவரசே, நீங்கள் உண்ணும் உணவில் மேலும் சற்று சுவைகொண்டது அமுதாகுமா என்ன? நீங்கள் அறிந்தவற்றையே மேலும் சற்று தெளிவுறுத்துவது ஞானமாகுமா? புதிய சுவையே அமுது. அறிந்த அனைத்தையும் அறியாமையென்றாக்கி எஞ்சுவதே ஞானம். இது ஞானத்தை அளிப்பது. இதை கொள்க!” அவன் புன்னகையுடன் “இந்த இரவைக் கடக்க நெடுநாட்களாகும்… நான் இங்கிருக்கும் சுவைகளிலேயே வாழ்கிறேன்” என்றான். “எனில் ஒன்று அறிக! என்றேனும் நீங்கள் இதற்கிணையான கலைவை உங்களுக்குள் உணர்வீர்கள். ஒவ்வொன்றும் பொருள்மாறி உருமாறிப் பரவுவதை காண்பீர்கள். அன்று திரண்டு எழுவதே மெய்மை. பிற அனைத்தையும் அழித்து தானன்றி பிறிதொன்றிலாது தருக்கி நிற்பது அது.”

குருக்ஷேத்ரக் களத்தில் ஒவ்வொருவரும் சற்றேனும் நிலையழிந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொருநாள் மீளும்போதும் என்ன நிகழ்ந்ததென்றே அறியாத ஒரு காலத்தை தாங்கள் கடந்துவந்திருப்பதாக சொன்னார்கள். திருஷ்டத்யும்னன் அச்சூழ்கையை வகுத்து நடத்துபவன் என்பதனால் பொழுதறாது விழிப்புநிலை கொண்டிருந்தான். எங்கு எவருடன் போரிட்டுக்கொண்டிருந்தபோதும் முழுப் படையையும் தன் அகவிழியில் விரித்திருந்தான். சூழ்கை கலையும்போது அவன் மேலும் ஒருங்கமைந்தான். ஆணைகளைக் கூவியபடி செவிகளால் படைகள் ஒருங்கிணைவதை அறிந்தபடி மேலும் விழிப்பு கொண்டான். தன்னிலை அழிந்து களத்திலாடுபவர் எதை காண்கிறார் என்று எப்போதும் அவன் வியந்தான்.

“களத்தில் நாம் அமைக்கும் ஒழுங்கு கலையும்போது நாம் எண்ணிச்சூழ முடியாத ஒழுங்கு ஒன்று உருவாவதை காண்கிறேன்” என்று சிகண்டி சொன்னார். “அதை நோக்குகையில் சித்தம் மலைக்கிறது. பல்லாயிரம் கால்களும் கைகளும் கொண்ட உயிர் ஒன்று போரிடுவதை காண்பதுபோல.” திருஷ்டத்யும்னன் “அந்த ஒப்புமை பலமுறை சொல்லப்பட்டுள்ளது” என்றான். “ஆம், ஆனால் அதை நேரில் காணும்போது ஏற்படும் திகைப்பு மிகப் பெரிது. அவ்விலங்கின் ஒரு மயிரிழையே நாம் என உணரும்போது உருவாகும் தன்னிலை அழிவும் பிறப்புமே போரில் நான் அடைவது.” திருஷ்டத்யும்னன் “போரில் தெய்வங்கள் எழும் என்று அறிந்திருக்கிறேன்” என்றான். சிகண்டி பேசாமலிருந்தார். “சொல்லுங்கள், மூத்தவரே” என்றான். “அது உளமயக்கா என அறியேன். ஒரு தருணத்தில் நான் போரில் அத்தனை படைவீரர்களையும் பீஷ்மர் எனக் கண்டேன்.”

திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப் பின் “உங்கள் அன்னையைக் கண்டதில்லையா?” என்றான். “இல்லை” என்று சிகண்டி சொன்னார். “இக்களத்திலேயே அவர் இல்லை.” திருஷ்டத்யும்னன் “தெய்வங்களை காண்கிறார்கள். மூதாதையர் எழுகிறார்கள்” என்றான். “நான் தெய்வமென்றும் மூதாதையென்றும் ஒருவரையே எண்ணுகிறேன்” என்றார் சிகண்டி. திருஷ்டத்யும்னன் “நான் எவரை காண்பேன்?” என்றான். சிகண்டி ஒன்றும் சொல்லவில்லை. “ஆசிரியர் எழக்கூடுமா? அன்றி தந்தையா?” சிகண்டி “முதலில் இங்கே ஒவ்வொன்றுடனும் நம்மைக் கட்டியிருப்பவை அறுபடவேண்டும். அதன்பின் எழுவதென்ன என்று நாம் முன்னரே சொல்ல முடியாது” என்றார். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றபின் நீள்மூச்செறிந்தான்.

போர் மூப்படையும்தோறும் போர்க்களத்தில் தெய்வங்களும் மூத்தோரும் தோன்றுவது பெருகியது. மருத்துவநிலையில் வெட்டுண்டு உடல்பழுத்து காய்ச்சலில் கிடப்பவர்களில் பலர் தெய்வங்களை நேரில் கண்டுகொண்டிருந்தார்கள். ஒருவன் திருஷ்டத்யும்னனின் கையை பற்றிக்கொண்டு “நான் கண்டேன்… அவளை நான் கண்டேன்” என்றான். “யார்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “அவளை… அவளை நான் முன்னரே கண்டிருக்கிறேன். மிகச் சிறிய அகவையில். இன்று அவளை களமெங்கும் கண்டேன். களம் முழுக்க!” அவன் இறந்துகொண்டிருந்தான். விழிமணிகள் உலைந்தாடின. உடல் காய்ச்சலுடன் நடுங்கிக்கொண்டிருந்தது. “அவள்தான்… எல்லாமே அவள்தான்.” அவன் இறப்பது வரை திருஷ்டத்யும்னன் அங்கே நின்றான். வெறித்த விழிகளில் அந்த அறிதல் உறைந்து எஞ்ச அவன் இறந்து கிடந்தான். பின்னர் களத்தில் பல்லாயிரம் முகங்களில் அவன் அந்த வெறிப்பை கண்டான். இறுதிக்காட்சி கற்சிலையின் கண்களின் நோக்கென நிலைத்த முகங்கள்.

அவனைச் சூழ்ந்து போரிட்ட அத்தனை முகங்களும் அவ்வண்ணமே இருந்தன அப்போது. அவர்கள் அனைவருமே ஒன்றை கண்டுகொண்டிருந்தனர். அதனுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் எதையோ கூவிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். அவர்களை ஒட்டுமொத்தமாகக் கேட்டபோது அது வெற்றோசையின் அலை எனத் தோன்றியது. விழியோட்டியபோது அனைவரும் ஒன்றையே கூவுவதாகப்பட்டது. ஒவ்வொரு உதடாக நோக்கியபோது தனித்தனிச் சொற்கள் திகழ்வது தெரிந்தது. உதடசைவிலிருந்து அச்சொற்களை தொட்டு எடுக்க விழிகள் முயன்றன. அவை மானுடமொழிச் சொற்களே அல்ல என திகைத்தன. அகச்சொற்கள்தான் முதலில் சிதறுகின்றன. புறம் அதன் பின்னரே சிதறுகிறது.

அவன் ஒரு நொறுங்கலை தன்னுள் உணர்ந்தான். மெல்லிய தோற்படலம் வெடித்ததுபோல. அதன்பின் ஒவ்வொன்றும் கட்டிழந்தன. நீர்க்குமிழி ஒன்றுக்குள் இருந்தான். வளைந்த உட்பரப்பில் போர்வீரர்கள் தலைகீழாக போரிட்டுக் கொண்டிருந்தனர். ஊடே கரிய நாகங்கள் நெளிந்தன. சுழன்று சுழன்று அறைந்தன. சிறகுகொண்டு எழுந்து வீழ்ந்தனர். நூறு கைகள் பெருக வானில் நின்று முழக்கமிட்டனர். பேரோசையுடன் பனைவிழுந்ததுபோல் நிலமறைந்து சரிந்தனர். தேர் ஒரு சிலந்திவலைச்சரடில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. அவன் தனக்குக் கீழே அடியிலா வெளியை உணர்ந்தான். கால் பதற தேரின் தூணை இறுகப்பற்றிக்கொண்டான். அவன் தேரிலிருந்து ஒவ்வொன்றாக அந்த ஆழத்திற்குள் விழுந்து மறைந்துகொண்டிருந்தன.

சங்கொலி கேட்டு அவன் திரும்பி நோக்கினான். தன்னை அணுகிவந்த தேரில் அஸ்வத்தாமன் அமர்ந்திருக்கக் கண்டான். அவன் கையில் இருந்த வில் வெறிகொண்டு துள்ளிக்கொண்டிருந்தது. நுதல்விழியும் சடைமகுடமும் புலித்தோல் ஆடையும் கொண்டிருந்தான். “எந்தையே!” திருஷ்டத்யும்னன் கூவினான். “எந்தையே! எந்தையே!” என கைகூப்பினான். கைகூப்ப வேறு இரு கைகள் தன் உடலில் எழுவதைக் கண்டு சிரித்தபடி “ஆம், நான் அறிவேன்” என்றான்.

முந்தைய கட்டுரைதொல்பாறைகளுடன் உரையாடுதல்…
அடுத்த கட்டுரைஎழுதும் முறை – கடிதங்கள்