நரம்பில் துடித்தோடும்  நதி – சுனில் கிருஷ்ணன்

ஒருதுளி இனிமையின் மீட்பு

(2019 ஆம் ஆண்டு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நிகழ்ந்த சிறுகதை அமர்விற்காக எழுதப்பட்ட கட்டுரை – சுனில் கிருஷ்ணன்)

பச்சை நரம்பு ஈழ எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. வெளியான ஆண்டே இத்தொகுதி குறித்து பதாகை புதிய குரல்கள் பகுதியில் ஒரு விமர்சனக்கட்டுரையும், அவருடைய நேர்காணலும் இடம்பெற்றது. இவை ‘வளரொளி’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவருடைய தொகுப்பை மீள் வாசிப்பு செய்தபோது முந்தைய புரிதலில் இருந்து பெரிய மாற்றம் ஏதுமில்லை என கண்டு கொண்டேன். காமத்தை பேசு பொருளாக கொண்ட கதைகளை குறித்து பெரிதும் எதிர்மறை அபிப்பிராயமே எனக்கிருந்தது. காரணம் அதன் எல்லை  மிகக் குறுகியது. காம- அகங்கார- வன்மச் சுழல். ஆனால் இடைப்பட்ட கால வாசிப்பின் ஊடாக, குறிப்பாக ரமேஷ் ரக்ஷன் போன்றவர்களின் கதைகளை வாசித்ததன் விளைவாக காமம் பாசங்கற்று எழுதப்பட வேண்டிய பேசு பொருள் என்பதையும் எழுத்தாளரின் அடிப்படை வினா காமம் மற்றும் உறவுச் சிக்கல் சார்ந்தது எனும் பட்சத்தில் அதை முழுமையாக தீவிரமாக பின் தொடர்வதே சரி என்பதையும் இந்த இடைக்கால வாசிப்பில் நேர்ந்த பரிணாமம் என கொள்ளலாம்..

இக்கட்டுரை ‘பச்சை நரம்பு’ தொகுப்பை மட்டும் கணக்கில் கொள்ளாமல், முதல் தொகுப்பான ‘சதைகள்’ மற்றும் ‘பச்சை நரம்பு’ தொகுதிக்கு பின்பான ‘யானை’ ‘பேரீச்சை’ போன்ற கதைகளையும் கணக்கில் கொண்டு  அனோஜனின் ஒட்டுமொத்த கதையுலகத்தின் செல்திசை சார்ந்து சில அவதானிப்புகளை கண்டடைய முயல்கிறது. இக்கட்டுரையில் முந்தைய பதாகை கட்டுரையின் சில பகுதிகள் எடுத்தாளப்பட்டுள்ளன.

 

‘சதைகள்’ தொகுப்பு அனோஜன் அவருடைய நேர்காணலில் குறிப்பிடுவது போல் பெரும்பாலும் முதிரா முயற்சிகளின் கலவை. ஆனால் அதுவே ஒரு அசல் தன்மையை அளிக்கிறது. கதைசொல்லி தன் தொழில்நுட்பங்களை கூர் செய்துகொள்ளாமல் அவரை அலைக்கழிக்கும் விஷயங்களை நேரடியாக எதிர்கொள்ளும் ஒருவித வெள்ளந்தித்தனம் நிரம்பிய கதைகள் என இவற்றை சொல்லலாம். ‘வேறையாக்கள்’ ‘சித்தப்பா ஃபேமிலி’, ‘ஆராதனா’ ‘ஃபேஸ்புக் பேமிலி’ ‘இதம்’ ஆகிய கதைகள் மிகச் சாதாரணமானவை. மொழியும் தேய்வழக்கான உவமைகளால் வாசகரை அன்னியமாக்குவது. ‘என் இதய அறையின் ஆழத்தில் மிக மிக ரகசியமாக நீச்சல் அடிப்பவள்.’ ‘கீர்த்தனாவிற்கு நெஞ்சின் ஆழத்தில் இரக்கம் கமுகமரம் போல் சீராக வளர்ந்தது’. ‘சிவப்பு மழை’ உண்மையில் நல்லதொரு அறிவியல் புனை கதைக்கான களம். ஒரு யோசனையாக தோன்றியதை கதையாக சரிவர கொண்டுசெல்ல முடியாமல் தடுமாறுகிறார். ‘அண்ணா’ ஒரு வகையில் முக்கியமாகிறது. பச்சை நரம்பின் சிறந்த கதைகளில் ஒன்று என நான் கருதும் ‘பலி’ கதைக்கான அடித்தள கதை. புலிகளுடைய தவறால் அன்னையை இழந்தபோதும் வெளிநாட்டு அண்ணி, அவர்கள் மீது உனக்கு கோபம் இல்லையா என கேட்கும்போது என்ன செய்ய அவர்களும் எனக்கு அண்ணன்மார்கள் தானே என சொல்கிறாள். புலி எதிர்ப்பாளர் என அடையாளப்படுத்தப்படும் அனோஜன் இங்கே இடர்களை மீறி புலிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்ததை சொல்கிறார். புலி எதிர்ப்பு சட்டகத்தில் அவரை நிறுத்துவது வசதி என்பதால் இந்தக் கதையை அவரை நிராகரிப்பவர்கள் யாரும் கருத்தில் கொள்வதில்லை போலும்.  இத்தொகுதியில் ஓரளவு பொருட்படுத்தத்தக்க கதைகள் என ‘அசங்கா’ ‘சதைகள்’ மற்றும் ‘ஜூட்’ ஆகிய கதைகளைச சொல்லலாம்.

‘அசங்கா’ ‘சதைகள்’ ஆகிய இரண்டு கதைகளுமே காமத்தின் பிறழ் நிலைகளை பேசுகின்றன. அவ்வகையில் பச்சை நரம்பு தொகுப்பை இக்கதைகளின் நீட்சியாக காணலாம். பாலியல் தொழிலாளியின் கொழுத்த முலையில் பாலருந்தும் குழந்தையையும் தட்டை மார்புடைய தன் மனைவியிடம் பாலருந்தும் குழந்தையையும் காண்கிறான். கதைசொல்லியை பருத்த மார்பு கிளர்த்துகிறது. ஊடாக மனைவியின் தட்டையான மார்பு நினைவுக்கு வருகிறது. குழந்தைக்கு அன்னையின் மார்பு ஒரு பொருட்டல்ல. அதில் சுரக்கும் பால் மட்டுமே அமுது. கதைசொல்லி சதைகளை கடந்த ஒன்றை உணர்ந்து கொள்கிறான். அசங்காவும் காமம் மற்றும் அது சார்ந்த குற்ற உணர்ச்சியை பேசும் கதைதான். ‘அண்ணா’ கதையில் ஏன் ஸ்ரீலங்கன் ஆண்கள் எல்லோரும் மாரை பார்க்கிறார்கள் என கனடா பெண் கேட்பார். இதே கேள்வியைத்தான் பச்சை நரம்பில் செல்வமக்காவும் கேட்பாள். ‘ஜூட்’ ஒருவகையில் அவருடைய அண்மைய கதையான பேரீச்சையுடன் தொடர்புடையது.

அனோஜன் சிங்களம் கற்றவர். போரின் போது ராணுவ ஆதிக்கப் பகுதியில் வசித்தவர். புலிகள் ஆதிக்க பகுதியா ராணுவ ஆதிக்க பகுதியா? எங்கு வசித்தார்கள் என்பது படைப்புகள் மீது தாக்கம் செலுத்த ஒரு வாய்ப்புள்ளது என அனோஜன் சொல்கிறார். அனோஜனின் கதைகளில் கணிசமாக சிங்களம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் – சிங்கள ஆண் பெண் நட்புறவு, காதல் போன்றவை காணக் கிடைக்கின்றன. சிங்களர்கள் என்றாலே ஒன்று பிக்குகள் அல்லது ராணுவத்தினர் என்ற அளவிலேயே பெரும்பாலான ஈழத் தமிழ் கதைகள் பதிவு செய்திருக்கும் நிலையில் அனோஜனின் கதை மாந்தர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். சிங்கள சாமானியர்களும் கதை மாந்தர்களாக பங்கு பெறுகிறார்கள். இத்தலைமுறை எழுத்துக்களில் என் வாசிப்பின் எல்லையில் வேறு எவரும் இதை செய்யவில்லை.

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்தவர். இறுக்கமான சூழலை, போரின் துவக்கங்களை வரலாறாக அறிந்த தலைமுறை. வளரிளம் பருவத்தை போர் காலத்தில் கழித்தவர். போருக்கு பிந்தைய காலங்களில் அங்கு வாழ்ந்தவர். அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் மூவரும் ஓரளவு இதே காலகட்டத்தைச் சேர்ந்த சிறுகதை ஆசிரியர்கள். சயந்தன் இவர்களுக்கு சற்றே மூத்த தலைமுறை.

கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ பத்து கதைகளை உள்ளடக்கியது. இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியை அனோஜன் அடைந்திருக்கிறார். முதல் தொகுப்பின் தடுமாற்றத்திலிருந்து இது பெரும் வளர்ச்சி.

அனோஜனின் மொழி முந்தைய தொகுதியில் இருந்து வெகுவாக மாறியிருப்பதை கவனிக்க முடிகிறது. கற்பனாவாத உருவகங்களை கைவிட்டு முன் நகர்ந்திருக்கிறார் தன்னிலை கதைகளில் அகமொழி கூர்மையாக உணர்வுகளை கடத்துகிறது. அவர் அடைந்த கதை தொழில்நுட்ப தேர்ச்சியைக் கொண்டு அவரால் எதையும் கதையாக்கிவிட முடியும். இது அவருடைய மிக முக்கியமான பலம், எனினும் இதுவேகூட நாளடைவில் பலவீனமாக ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொகுப்பிற்கு பிந்தைய கதைகள் ‘யானை’ ‘பேரீச்சை’ ஆகியவை அவ்வகையில் நம்பிக்கையான செல்திசையை பறைசாற்றுகின்றன. முழுமையான, அறுதியான கதை சொல்லலில் இருந்து சற்றே தடுமாற்றம் கொண்ட பூடகமான இடங்களை நோக்கி நகர்ந்திருக்கிறார். ஆகவே இவை தொழில்நுட்ப ரீதியாக முழுமை அடையாதபோதும் கூட துணிச்சலான முயற்சிகள். ‘யானை’ கதையில் அதன் படிமம் முழுவதுமாக அதன் அத்தனை சாத்தியப்பாடுகளோடும் துலங்கிவரவில்லை. ‘பேரீச்சை’யும் கூட அதன் மையத்திலிருந்து சிதறி விலகி பயணிக்கிறது.

‘பச்சை நரம்பு’ தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகளை காமம், காமப் பிறழ்வுகள் ஒரு சரடாக துளைத்து செல்கின்றன என கூறலாம். விதிவிலக்காக ‘பலி’, ‘400 ரியால்’ மற்றும் ‘மனநிழல்’ ஆகிய கதைகள் அரசியல் மற்றும் சமூக மதிப்பீடுகளின் தளத்தில் நிகழ்கின்றன. பிறழ் காமத்தை, அதன் உறவுச் சுரண்டலை பேசும் கதைகள் என ‘பச்சை நரம்பு’, ‘கிடாய்’, ‘இச்சை’, ‘வெளிதல்’ மற்றும் ‘உறுப்பு’ ஆகிய கதைகளை வகைப்படுத்தலாம். ‘வாசனை’ மற்றும் ‘இணைகோடு’ காமத்தைப் பின்புலமாக கொண்டு உறவுகளின் நுட்பத்தை சொல்கின்றன.

அனோஜன் கதைகளில் ‘பலி’ கதையை தவிர்த்து வேறு கதைகளில் போர் நேரடியாக நிகழவில்லை. எனினும் போர் அனோஜனின் கதைப்பரப்பின் பின்புலத்தில் பெரும் சாம்பல் நிறத் திரையாக ஒட்டுமொத்த கதைப்பரப்பின் நிறத்தையும் மாற்றுகிறது. போர் ஒரு பின்னணி இசை போல கதைகளில் தொடர்ந்து ஒலிக்கிறது. அனோஜன் போரைத் தவிர்த்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வாழ்வை எழுதுகிறார். பெரும்பாலான கதைகளில் மனிதர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். தனது நேர்காணலில் 1995 துவங்கி தொடர்ந்து பல ஊர்களுக்கு இடம் பெயர்ந்ததாக சொல்கிறார். ஆனால் எங்கும் அது நாடகீயமாக சொல்லப்படவில்லை. இது அனோஜனின் தனித்துவம் என்றே எண்ணுகிறேன். ‘உறுப்பு’ கதையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் கடமை செய்யும்  ரணசிங்கே, ‘இணைகோடு’ கதையில் ராணுவ முகாம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கடந்து செல்கிறான் செழியன், ‘வெளிதல்’ கதையில் வரும் பாலியல் தொழிலாளி புகையிரத நிலையத்தில் வடக்கே கடமையாற்றிவிட்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்கள் வாடிக்கையாளர்களாக கிடைப்பார்கள் என கணக்கு செய்கிறார். ‘வாசனை’ கதையில் சுட்டுக் கொல்லப்படும் தந்தை, சட்டவிரோதமாக வளைகுடா நாட்டில் சிக்கி ஊர் திரும்ப வழிவகையின்றி தவிக்கும் ‘400 ரியாலின்’ கதைசொல்லி, போர்க் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நண்பனின் சடலத்தை காணாமல் தவிர்க்கும் ‘மனநிழல்’, எனப் போர் அன்றாட நிகழ்வைப் போல் கடந்து செல்கிறது

 

.

தந்தை, காதலன், கணவன் என தானறிந்த ஆண்களைப் பற்றிய கதை ‘வாசனை’. பெண் பிள்ளை அறியும் முதல் ஆண் தந்தை. தந்தையின் ‘ஆண் தன்மையான கருணை நிரம்பி வழியும்’ வாசனையை அவள் தேடிச் சலிக்கிறாள். கணவனிடமும் முன்னாள் காதலனிடமும் தந்தையின் வாசனை இல்லை என்பதை அறிகிறாள். இருவரும் ஒரே மாதிரியான வாசனை உடையவர்கள் என்பதை உணர்கிறாள். தந்தையின் இடம் காலியாகவே கிடக்கிறது. ஒரு ஃப்ராய்டிய யோசனையை கதையாக எழுதி பார்த்திருக்கிரார். இந்த கதையின் உணர்வு நிலையின் நேரெதிர் வடிவம் என ‘கிடாய்’ கதையை சொல்லலாம். அப்பாவின் வாசனையை அறிந்து, வெறுத்து, பழிதீர்க்கிறாள். தீரா வஞ்சத்தால் தன்னை மாய்த்துக் கொண்ட அன்னைக்காக தந்தை மீது வஞ்சம் வளர்த்து கொள்கிறாள் தேவி. படிப்படியாக தந்தை எனும் இடத்திலிருந்து அவனை இறக்கி மிருகமாக்கி அந்தக் கிடாயை பலியிட்டு அமைதி கொள்கிறாள். பலியாட்டை ஈர்க்க தேவி கொடுக்கும் கீரைக்கட்டுதான் விமலரூபன். கதை இறுதி பல சாத்தியங்களைத் திறக்கிறது. விமல்ரூபன் அசலா? கற்பனையா? காமாட்சி- தேவி – தேவியின் அம்மா மற்றும் ராசையா உறவு மிகவும் உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது (ஓரிடத்தில் மட்டும் ராசையாவின் பெயர் பரமேஸ்வரன் எனப் பிழையாக வருகிறது. ). வாசனையில் உன்னதப்படுத்தப்பட்ட தந்தை அன்பு இங்கே தலைகீழாகிறது. கென் லியுவின் ஒரு கதையை அண்மையில் வாசித்தேன். ‘சிமுலகிரம்’ (simulcrum) எனும் கருவியைக் கொண்டு கற்பனையாக தனக்குத் தோதான பெண்களின் பிம்பங்களை முப்பரிமாணங்களில் உருவாக்கி நிர்வாணமாக உறவாடும் தந்தையை மகள் கண்டுவிடுகிறாள். இறுதிவரை அவள் அதை மன்னிக்கவே இல்லை. கதை இறுதியில் மரித்துப் போன அவள் அன்னை மகளுக்காக ஒரு கடிதம் எழுதிவிட்டுச் செல்கிறாள். அதில் தந்தை உண்மையில் உன் மீது பிரியம் கொண்டிருக்கிறார். அவரை மன்னித்துவிடு என்று கோருவார். அன்னையின் வஞ்சம்தான் தேவியில் உருக் கொள்கிறது. ஒருவேளை அந்த அன்னை உயிரோடு இருந்தால் சகித்து மன்னித்து வாழ்ந்திருப்பாளா என்று கேட்டுக்கொண்டேன்.

 

இவ்விரு கதைகளும் ஒரு திரியின் இரு  முனைகள். அன்பின்மை, அல்லது அன்பிற்கான ஏக்கம் எப்படி திரிந்து போகிறது என்று வாசித்துக் கொள்ளலாம். இதே வரிசையில் ‘பச்சை நரம்பு’ கதையையும் வைக்கலாம். நான்கு வயதில் காய்ச்சலில் மரித்த தனது அன்னையின் ஒற்றை நினைவாக கழுத்திலிருந்து மாருக்கு இறங்கும் பச்சை நரம்பைத்தான் செல்வமக்கா, தீபா என இருவரிடமும் கதைசொல்லி தேடுகிறான். ‘சதைகள்’ கதையில் முளை அருந்திய குழந்தை இப்போது இளைஞனாகிவிட்டான். அவன் அடைவது சதைகளின் அதே தரிசனத்தைத்தான். அம்மாவை மனைவிகளில், காதலிகளில் தேடுவதும், தந்தையை கணவன்களில், காதலர்களில் தேடுவதும் உளவியல் மனக்கூறாக நமக்கு அறிமுகம் ஆகியுள்ளன. மற்றுமொரு ஃபிராய்டிய கதை என சொல்லலாம். இக்கதைகள் வழியாக இவை கண்டடையப்படுகின்றனவா அல்லது ஏற்கனவே அறிந்த ஒன்றைக் கொண்டு அதன் மீது கதைகள் கட்டி எழுப்பப்பட்டனவா? வலுவான தொழில்நுட்பம் கொண்டு அனோஜன் இந்த கேள்வியை சமன் செய்கிறார்.

அனோஜன் புதுயுக கதைசொல்லிக்கான பிரத்தியேக சிக்கல்களை தொட்டுக் காட்டியிருக்கும் கதைகள் என ‘400 ரியால்’ மற்றும் ‘மன நிழல்’ கதைகளைச் சொல்வேன். வீழ்ச்சி அடையும் மதிப்பீடுகளின் ஆவணமாக இவை நிற்கின்றன. எக்காலத்திலும் இவ்வகை மனிதர்கள் வாழவே செய்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் இலக்கிய ரீதியாக அப்பட்டமாக கதையாவது என்ற முறையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. ‘400 ரியால்’ நம் அற மதிப்பீடுகளைக் கவிழ்க்கிறது, மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கிறது. 400 ரியாலுக்காக அவன் ஏங்குவதும், கையறு நிலையில் தவிப்பதும் கதையில் பதட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் எதிர்பாராமல் அவனுக்கு கிடைக்கும் உதவிக்கு அவன் ஆற்றும் எதிர்வினை மனிதர்களின் சுயநலத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் காட்டுகிறது. ‘மன நிழல்’ நெருங்கிய சகாவின் சவ அடக்கத்திற்கு, அம்மாவின் கட்டளையை சாக்காக சொல்லிக்கொண்டாலும், அவன் உள்ளுரையும் அச்சத்தின் காரணமாக, செல்வதை தவிர்க்கிறான். இக்கதைகள் பொறுப்பேற்கத் துணிவின்றி, தப்பித்தலையே தன்னறமாக கொண்ட சந்தர்ப்பவாத வாழ்வைச் சுட்டுகிறது. ஆனால் எந்த நண்பனின் அடக்கத்திற்கு செல்வதை அவன் தவிர்த்தானோ அவனுடைய அனுக்கமே ஐரோப்பாவில் அடைக்கலம் புக அவனுக்கு பயன்படுகிறது. அங்கே இறந்த நண்பனும் சகோதரியும் வசிக்கிறாள். மரணம் பயன்படுத்தப் படுகிறது. நண்பனால் மட்டும் அல்ல மரித்தவனின் சகோதரியும் கூட அதையே செய்கிறாள்.

உறவு, உறவின் சுரண்டலைப் பேசும் கதைகள் என ‘இச்சை’ மற்றும் ‘உறுப்பு’ கதைகளைச் சொல்லலாம். ‘இச்சை’ கதையில் ஏழு வயது சிறுவன் அண்டை வீட்டுப் பெண்ணால் தனது இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறான். தனது சிறு வயது நினைவுகளை நண்பனிடம் பகிரும்போது வரும் உரையாடல் முக்கியமானது

“யார் அந்தப் பெட்ட? உன்னை நல்லா துஷ்பிரயோகம் செய்திருக்கிறாள்’ என்றான்.

“துஷ்பிரயோகமா?.ஹ்ம்ம்… நான் அதை அப்படி நினைக்கவில்லை”’ என்றேன்.

”அப்ப இது என்னவாம்? இதுவே ஒரு பெண்பிள்ளைக்கு ஆண் ஒருவர் செய்திருந்தா என்ன நிலைமை?”

பாரபட்சமாக அணுகப்படும் ஆண்களின் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களப் எழுதும் களமாகவும் அவருடைய கதைகள் உருக்கொள்கின்றன. கிடாய்’ விமலரூபன், ‘பச்சை நரம்பு’ கதைசொல்லி, ‘உறுப்பு’ கதை நாயகன் என இவை நீள்கின்றன. ‘உறுப்பு’ இத்துயரத்தின் மிக தீர்க்கமாக பதிவாகிறது. தோளில் துவக்குடன் நிற்கும் சிங்கள சிப்பாய் தமிழ் மாணவனுடன் வல்லுறவு கொள்கிறான். ஆனால் அதிகாரத்தை எதிர்த்து ஏதும் செய்ய முடியாத இறுகிய மவுனத்தைக் குடும்பம் கடைபிடிக்கிறது. மனரீதியான தொந்திரவுக்கு உள்ளாகிறான். கல்லூரியிலும் ‘பகிடிவதை’ (raggingகிற்கு என்ன அழகான தமிழ்ச் சொல்) அவனை துன்புறுத்துகிறது. அவனது ஆண்மை குறித்தான ஐயங்கள் எழுகின்றன. ஒரு சிறிய முத்தம் வழியாக அதை மீட்கமுடியும் எனப் புரிந்து கொள்கிறான். இங்கும் அன்பின்மை, அன்பிற்கான ஏக்கம் வெளிப்படுகிறது. ‘இச்சை’ பாலியல் சுரண்டலின் நுட்பமான மறு பக்கத்தைச் சொல்கிறது. அஜந்தா அவன் மீது மெய்யாகவே பிரியத்துடன் இருக்கிறாள். பதின்ம வயதில் சிறு பிறழ்வாக அவளுடைய இச்சை வெளிப்படுகிறது. ஆபத்தற்ற (அப்படிச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை! எல்லா பாலியல் சுரண்டல்களுமே ஆபத்தானவை. மனதை பாதிக்கக்கூடும். இக்கதையில் அப்படி ஏதும் நிகழவில்லை என வேண்டுமானால் சொல்லலாம். இது தற்செயல், மற்றும் மனபோக்கு சார்ந்தது) பாலியல் விளையாட்டுக்களை விளையாடிக் கொள்கிறாள். இயல்பாக அதிலிருந்து வளர்ந்து வெளியேறிச் சென்று விடுகிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்திக்கும்போது பழைய நினைவுகளின் உரசல் ஏதுமில்லாமல் இயல்பான வாஞ்சையுடன் அவளால் பழக முடிகிறது. இறுதியில் அஜந்தாவின் குழந்தையின் கண்கள் அவனுக்கு நினைவுக்கு வருவது மிக முக்கியமான தருணம். இந்த பாலியல் சுரண்டல் சுழலில் இருந்து அவன் தன்னை வெளியேற்றிக் கொள்ளும் தருணம். குழந்தையின் இருப்பு வழியாக காமத்தை கடத்தல். காமத்தை தாய்மையாக உன்னதமாக்கவே அனோஜன் பல கதைகளின் வழியாக முயல்கிறார். ‘உறுப்பு’, ‘இச்சை’ கதைகள் ஏறத்தாழ ஒரே கேள்வியை வெவ்வேறு வகையில் எதிர்கொண்டுள்ளன என்று எண்ணுகிறேன்.

 

இத்தொகுப்பின் சிறந்த கதை என ‘பலி’ கதையையே சொல்வேன். பாதிக்கப்பட்டவன், பாதிப்புக்கு உள்ளாக்குபவன் எனும் இருமையிலிருந்து கிழித்து வெளியேறி மனிதர்களாக காணும் தருணத்திலேயே கலைஞன் எழுகிறான். குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ நாவலின் இறுதி பகுதியில் தன் காதலிக்கு இருளின் சிறிய விளக்கு வெளிச்சத்தில் கடிதம் எழுதும் சிங்கள ராணுவ வீரன் மீது குண்டு வீசாமல் செல்வான். பரிசாக மரணத்தைப் பெறுவான். அது ஓர் உன்னத தருணம். ‘பலி’ அத்தகைய குற்ற உணர்விற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்கிறது. படிப்படியாக மனிதன் தன்னை முழுவதுமாக இழக்கும் முறையை பதிவாக்குகிறது. இக்கதை ஆழ்ந்த மனச் சோர்வு அளித்தது. அவன் எதை பலியிடுகிறான்? யாருடைய வருங்காலத்திற்கு போராடுவதாக சொல்கிறானோ அவர்களில் ஒருவனான ஒரு பொடியனின் உயிரை மட்டுமல்ல. இலக்கடைவதற்காக தன நீதி உணர்வையும் பலியிடுகிறான். காந்தியின் சொற்களில் சொல்வதனால் இலக்கு எந்த அளவு முக்கியமோ வழிமுறையும் அதேயளவு முக்கியம். மோசமான வழிமுறை எந்த உன்னதமான இலக்கையும் நியாயப்படுத்திவிட முடியாது. வழிமுறையின் மீறல் நாம் எதை எதிர்க்கிறோமோ நம்மை அதுவாகவே மாற்றிவிடும் வல்லமை கொண்டது. இலக்கையே பொருளற்றதாக ஆக்குவது.

‘இணைகோடுகள்’ இத்தொகுப்பில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. சிங்கள சிப்பாயை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ்ப் பெண். ராணுவத்தை விட்டு நீங்கியதற்காக சிறையில் இருக்கும் சிங்கள சிப்பாய் என்பது மிக நல்ல களம். ஆனால் கதை அவளுடைய இணை வாழ்வை கதைசொல்லி ஊகிப்பதோடு முடிந்து விடுகிறது.

 

இத்தொகுப்பின் பலவீனமான கதை என ‘வெளிதல்’ கதையை சொல்வேன். பாலியல் தொழிலாளி உலகை வழமையான முறையில் சித்தரித்து இருக்கிறார். அன்பின்மை, அன்பிற்கான ஏக்கம் வெளிப்படும் மற்றுமொரு கதை. ‘பச்சை நரம்பும்’ கூட பெரிதாக எனக்கு உவக்கவில்லை. பாலியல் சித்தரிப்புகள் சில தருணங்களில் கதையை மீறி அல்லது கதையின் மையக் கேள்வியை மீறி வாசகர் மனதில் நின்றுவிடுகிறது.  அது பேசுபொருளை பின்னுக்குத் தள்ளி, கிளர்ச்சிக்குள் மனதைப் புதைத்து விடும். ‘இச்சை’, ‘பச்சை நரம்பு’ போன்ற கதைகளில் இச்சிக்கல் வெளிப்படுகிறது.

 

அனோஜன் பெண்களின் அகத்தை நுண்மையாகச் சித்தரிக்கிறார். பெண் பாத்திரத்தைக் கொண்டு ‘தன்மையில்’ வெற்றிகரமாக கதை எழுதிவிட அவரால் முடிகிறது. இத்தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே பால்ய, இளம்பருவ காலத்து கதைகள்தான். அது இக்கதைகளுக்கு ஒரு இளமையை அளிக்கிறது. தன் அனுபவங்களிலிருந்து இக்கதைகளை உருவாக்குகிறார் எனும் நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறது. அனோஜனுக்கு இருக்கும் சவாலென்பது தனக்கு வசதியான, வாகான தளங்களிலிருந்து புதிய தளங்களில் கதை சொல்வதில் உள்ளது. அவ்வகையில் அவருடைய அண்மைய கதைகளான “யானை” மற்றும் “பேரீச்சை” முக்கியமாகிறது. பவுத்த பேரினவாதத்தை புத்தரிடமிருந்து பிரித்து நோக்க இனப் படுகொலைக்கு பின்பான சூழலில் ஒரு தமிழ் இளைஞனால் முடிகிறது. வெறுப்பிற்கு அப்பால் செல்லும் மானுடத்தை தழுவும் ஒரு பெரும் யத்தனம். “பேரீச்சை” ஒரு வகையில் இனிமையை நாடுவது மட்டுமே உயிர்களின் விழைவு. அனைத்து நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், கோட்பாடுகளுக்கு அப்பால் உயிர்கள் திகட்டத் திகட்ட இனிப்பை நோக்கியே செல்கின்றன. அதுவே அதன் ஆதார இயல்பு. ஆனால் அதற்காக தண்டிக்கப்பட வேண்டுமா? என்றொரு கேள்வியை ஈழ போரின் பின்புலத்திலிருந்து எழுப்புகிறார். ‘பேரீச்சை’ வழியாக அவருடைய படைப்புலகின் ஆதார கேள்வி எழுந்து வருகிறது. பிற கதைகளில் சன்னமாக துலங்கி வந்த அன்பிற்கும் வெறுப்ப்பிற்கும் இடையிலான போராட்டத்தில் அன்பின் தரப்பை தேர்கிறார். அனோஜன் கதைகளில் குற்ற உணர்வு மைய பேசுபொருளாக வெளிப்படுகிறது. காமம் சார்ந்ததை பாவம் என அடையாளம் காட்டும் அளவிற்கு ஆழ்ந்து வெளிப்படுகிறது. ஒருவகையான ரஷ்ய இலக்கிய தாக்கம் என சொல்லலாம். குறிப்பாக அதிலிருந்து பெறப்பட்ட கிறிஸ்துவின் தாக்கம். காமம் அலைக்கழிப்பதால் அதை தாய்மையாக உன்னதம் ஆக்கி அதை கடக்க கதைகளின் ஊடாக முயன்றபடி இருக்கிறார்.

அனோஜன் கதைகள் இலக்கிய ரீதியாக விமர்சிக்கப் பட்டதை காட்டிலும் அரசியல் ரீதியாகவே அதிகம் விமர்சிக்கப்படுகிறது. அவர் வேண்டுமென்றே பொய்யான சித்திரங்களை கதைகளின் ஊடாக அளிக்கிறார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. புலிகள் செய்யாததை எல்லாம் அவர்களின் கணக்கில் ஏற்றுகிறார். ஒரு வாசகனாக, விமர்சகனாக இது எனக்கு எந்த வித ஆர்வத்தையும் அளிக்கவில்லை. ஏனெனில் இது வரலாறு அல்ல. புனைவு. யாராகவும், எந்த அரசியலை பேசுபவராகவும் இருக்கட்டும் கதை எப்படி தொழிற்படுகிறது என்பது மட்டுமே என் முதன்மை கவலை. புனைவிற்கு ஜோடனை இன்றி தன்னை முழுமையாக ஒப்புகொடுக்கிறாரா என்பதே என் கேள்வி. நல்ல அல்லது உகந்த அரசியலை பேசுகின்ற  காரணத்திற்காக ஒரு ஆக்கம் எல்லாவற்றிற்கும் மேலாக முன்வைக்கப்படுவதும், உகக்காத அரசியலை பேசும்போது வரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டு அமுக்கப்படுவதும் தவறு. கதையை மதிப்பிட அழகியலே முதன்மை கருவி அரசியலுக்கு இடமுண்டு ஆனால் அது மேலதிக தளம் மட்டுமே. அவ்வகையில் அனோஜன் சமகாலத்தில் நம்பிக்கைக்குரிய வளரும் படைப்பாளியாக (emerging writer) ஆக உருபெறுகிறார். பச்சை நரம்பும் அதற்கு பின்பான கதைகளும் அதற்குரிய சாத்தியங்களை அறிவிக்கின்றன.

 

 

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்

முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன்

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் குறித்து

 

முந்தைய கட்டுரைமீள்வும் எழுகையும்
அடுத்த கட்டுரைகதிரவனின் தேர்- 5