கண்டு நிறைவது

அன்புள்ள ஜெ,

சமீபகாலமாக பயணம் குறித்த ஒரு கேள்வி என்னை அலைக்கழிக்கிறது. இனிமையான அலைக்கழிப்புதான். எந்த அளவுக்கு என்றால் என் கனவில் வந்த உங்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு. கனவுலக ஜீவியான நீங்கள் ஏன் எனக்கு கனவில் பதில் சொல்லவில்லை?

இந்திய மாநிலம் ஒவ்வொன்றும் நிலம், இனம், மதம், வரலாறு முதலிய பல்வண்ணக்கூறுகள் இணைந்த ஒரு வானவில் போல உள்ளது. அந்த நிலத்தில் தொடர்ந்து பயணம் செய்யும்போது அதன் அனைத்து கூறுகளும் மெல்ல மெல்ல துலங்கி வருகின்றன. உதாரணமாக நிலம். கூகுள் ஒரு மெய் நிகர் உலகத்தை கண்முன் கொண்டு வந்து விடுகிறது. இதன் உதவியுடன் பனிச்சிகரங்கள் முதல் பாலைவனம் வரை நில அமைப்பைப் முப்பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. அதாவது மேற்கு இமயத்தின் மலைகள், அதன் சிகரங்கள், ஜீவ நதிகள், சமவெளிகள், மலை சூழ் குறுநிலங்கள், சிந்து-கங்கை சமவெளி, ராஜஸ்தானின் ஆரவல்லி மற்றும் பாலைவன நிலங்கள் என தொட்டுத் தொட்டு பயணம் செய்து கூகுள் வரைபடத்தில் ஒரு பறவை கோணத்தில் முழுமையாக பார்ப்பது ஒரு நல்ல அனுபவம்.

பயணத்தின் போது ஒரு இடத்தின் நிலவியல் கூறுகள், விவசாயம், கிராம நகர அமைப்புகள், வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள், கோயில்கள் முதலியன எளிதாக கண்களுக்குப் புலனாகின்றன. இவைகளை கண்களுக்குப் புலனாகும் பண்பாட்டுக் கூறுகள் என்று சொல்லலாம். இவைகளை குறித்த எண்ணற்ற அவதானிப்புகள் ஒரு சரியான நூலை வாசிக்கும்போதோ சிந்திக்கும் போதோ நல்ல திறப்பை அளிக்கின்றன.

ஆனால் பயணத்தின் போது மிகச் சவாலாக அமைவது கண்களுக்கு எளிதில் புலனாகாத பண்பாட்டுக் கூறுகளைச் சென்றடைவதுதான் என்று நினைக்கிறேன். இரு விஷயங்களைச் சொல்லவேண்டும். ஒன்று தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் குறித்த கடலூர் சீனுவின் அறிமுக கட்டுரையையும் வராகரும் விமலரும் குறித்த உரையாடல்களையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழகத்துக்கு வந்த லகுலீசர் சண்டேஸ்வரர் என்ற நிலைக்கு உயரும் சித்திரம் எளிதில் பயணத்தின் வழி அடைவதல்ல. பல பயணங்கள் தேவைப்படும் ஒரு ஆய்வுச் சார்ந்த தேடல் அது. அதுவும் ஒரு நகரில் இல்லாமல் இந்தியா முழுவதும் பயணம் செய்து அறிய வேண்டியது. ஆய்வின் களம் அது.

இரண்டாவது நான் சமீபத்தில் ஹிமாசல் பிரதேசத்தின் சரஹன் என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். சிம்லாவில் இருந்து சுமார் 150 கி மீ தொலைவில் இந்துஸ்தான் – திபெத் சாலையில் அமைந்த ஊர். அந்த ஊரில் உள்ள பீமா காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கல்லையும் மரத்தையும் ஒன்று விட்டு ஒன்று அடுக்கிக் கட்டப்பட்ட இரண்டு மாடி கொண்ட சக்தி வழிபாட்டுக் கோயில். பின்பு ஹிமாசல பிரதேசத்தில் பெளத்தம் என்று வேறொன்றை தேடியபோதுதான் தெரிந்தது. பீமா காளி கோயில் பெளத்த தாக்கம் உடையது என்றும் உள்ளே ஒரு தளத்தில் பெளத்த சிலை இருக்கிறது என்றும் பின்னர்தான் அறிந்தேன். முதல்தளம் பூட்டப்பட்டு இருந்ததால் அதைப் பார்க்க முடியவில்லை. தவறவிட்டுவிட்டேனே என்று ஏமாற்றமாக இருந்தது. இந்த தகவல்கள் கூட ஆய்வு நூலில் இருந்து வாசித்துதான்.

ஒர் ஆய்வாளர் போல ஆர்வம் கொண்ட ஒருவன் ஒற்றை நோக்கத்துடன் பயணம் செய்ய முடியாது. வாழ்நாள் போதாது. பின்னர் இந்திய நிலத்தின் பன்மைக் கூறிகளில் அர்வம் கொண்ட ஒரு பயணி என்னதான் செய்வது? ’பாரத தரிசன’ பயணங்கள் எப்படி இருக்க வேண்டும்? இந்திய பண்பாட்டில் ஆர்வம் உள்ள தொடர்பயணி எதை கருத்தில் கொள்ள வேண்டும்? ’புள்ளிகளை இணைத்து உருவத்தை காண்’ பது எப்படி? இந்தியாவை கட்டமைக்கும் முக்கிய கூறுகளை பயணத்தில் எப்படி அடையாளம் காண்பது? பயணத்தின் எல்லை என்று ஒன்று உள்ளதா? ஏனெனில் இலக்கியத்தின் வழியே ஒரு புதிய நிலத்தின் வாழ்க்கையையும் அதன் சிடுக்குகளையும் அறிய முடியும். பயணம் எதுவரைச் செல்லும்?

ஒரு கேள்வி மட்டும்தான் நான் கேட்க நினைத்தேன்.

அன்புடன்,
ராஜா

***

அன்புள்ள ராஜா

கல்வி குறித்த நமது தொன்மையான கருத்து ஒன்று உண்டு, கல்விக்கு முடிவில்லை. ‘நாளும் கலைமகள் ஓதுகிறாள்’ என கேட்டு வளர்ந்தவர்கள் நாம். பயணமும் ஒரு கல்வியே. ஆகவே அதற்கும் முடிவில்லை. பயணம் செய்து ‘முடிப்பது’ இயல்வதே அல்ல.

ஆகவே பயணத்தின் எல்லை எது என்ற கேள்விக்கே இடமில்லை. நாம் நூல்வழிக் கற்பதன் இன்னொரு பகுதியாக பயணம் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். நான் இதை எழுதும்போது நான்காம் முறையாக ஒரிசாவின் ஹாத்திகும்பா கல்வெட்டைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். என் எண்ணங்கள் இந்த இருபதாண்டுகளில் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. நான் ஆறுமுறை அஜந்தா எல்லோராவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் பார்த்தது முற்றிலும் புதிய ஒன்றை.

ஏன் பயணம் செய்கிறோம்? நாம் நம்முடைய பிறப்பால் வளர்ப்பால் ஒரு சிறு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அது நம்மை ‘வசதியாக’ உணரச் செய்வதனால் நாம் வெளியே செல்ல விரும்புவதும் இல்லை. நமக்குரிய சூழலில் இருந்து வெளியேறிச்செல்கையில் நாம் அகமும் புறமும் அறைகூவல்களை, சீண்டல்களை சந்திக்கிறோம். நம்முள் இருக்கும், நாமறியாத இயல்புகள் வெளிப்படுகின்றன. நாம் நம்மைக் கண்டடைந்தபடியே இருக்கிறோம். இக்கண்டடைதல் வழியாக நாம் வளர்கிறோம்.

இரண்டாவதாக, நாம் நூல்கள் வழியாக அறிபவற்றுக்கு ஓர் எல்லை இருப்பதை பயணம்செய்யும்போதே உணர்கிறோம். ஒரு சிற்பத்தைப் பற்றி என்னதான் படித்தாலும் அதை பார்ப்பதற்கு நிகர் அல்ல. பார்க்கையில் நம் உள்ளுணர்வு திறந்துகொள்கிறது. நாம் அடைந்தவை என்ன என அப்போது தெரிவதில்லை. பின்னர் அவற்றை எண்ணிப்பார்க்கையில் நாம் பார்த்தவற்றில் இருந்தே தொடங்குகிறோம் என்பதை, நம் கருத்துக்கள் பலவற்றை நாம் பார்த்தமையே முடிவுசெய்திருக்கிறது என்பதை உணர்வோம்.

ஆகவே பாரத தரிசனத்திற்கு முடிவே இல்லை. இப்படிச் சொல்லலாம். குமரிமுதல் இமையம் வரைக்கும் மணிப்பூர் முதல் பஞ்சாப் வரைக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு பயணம் செய்திருந்தால், இருபுறக்கடல்களையும் பார்த்திருந்தால், ராஜஸ்தான் பாலையையும் இமையப் பனிமலைகளையும் பார்த்திருந்தால் பாரத தரிசனத்தின் கோட்டோவியம் உருவாகி விடுகிறது.

அதன்பின் பார்த்தேயாகவேண்டியவை என பட்டியல்கள் இடலாம். இந்தியாவின் கலைச்செல்வங்கள், மலைகள், அருவிகள், முதன்மை நகரங்கள், வரலாற்று இடங்கள். அவையெல்லாம் நம் ரசனைக்கேற்ப நாமே வளர்த்துக்கொள்ளவேண்டியவைதான். நமது வாசிப்பு, கண்டடைதல் ஆகியவற்றுக்கு ஏற்ப அது வளர்ந்தபடியே இருக்கும்.

உதாரணமாக, காசியை ஒருவர் இளமையில் பார்க்கையில் அடையும் அர்த்தம் ஒன்று, ஐம்பது கடந்தபின் அடையும் அர்த்தம் மற்றொன்று. காசியை ஒருமுறை பார்த்தபின் காசியை பார்த்துவிட்டேன் என்று சொல்லமுடியுமா என்ன?

புள்ளிகளை இணைத்து உருவத்தைக் காண்பது எப்படி என்று கேட்டிருக்கிறீர்கள். அதற்குரிய முதல் கேள்வி நீங்கள் யார் என்பதே. உங்கள் ஆர்வம் என்ன, உங்கள் செயல்தளம் என்ன என்பதுதான் நீங்கள் எதைப் பார்க்கவேண்டும் என்பதை முடிவுசெய்கிறது

உதாரணமாக, நீங்கள் ஓவியர் என்றால் கேரளத்தில் திரிச்சூரிலும் வைக்கத்திலும் உள்ள சுவர் ஓவியங்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள், இடைக்கல் பாறைவெட்டு ஓவியங்கள், கீழ்வாலையிலும் கருக்கியூரிலும் உள்ள குகை ஓவியங்கள், பிம்பேட்கா குகைஓவியங்கள், ஒரிசாவின் பழங்குடிச் சுவரோவியங்கள், அஜந்தா குகை ஓவியங்கள் என ஒரு வரைபடம் உருவாகி வரும். அது ஓர் இந்திய தரிசனம்.

நீங்கள் இசை ஆர்வலர் என்றால் அதேபோல இன்னொரு வரைபடம். நீங்கள் சிற்பக்கலை வழியாக உளம்செல்பவர் என்றால் இன்னொரு வரைபடம். நீங்கள் வரலாற்றாய்வாளர் என்றால் இந்தியாவின் பேரரசுகளின் தலைநகர்மையங்கள் வழியாக ஒரு பயணம் செல்லமுடியும். சமண பௌத்த மதமையங்கள் வழியாகச் செல்லமுடியும். நீங்கள் யார், எதை நோக்கி உள்ளம் செல்கிறது, எதை குறியீடாக அகம் விரித்துக்கொள்கிறது என்பதே முக்கியமானது

ஜெ

***

முந்தைய கட்டுரைஅபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40