பயணியின் கண்களும் கனவும்

 

அன்புள்ள ஜெயமோகன்,

ஜப்பான், ஒரு கீற்றோவியம் தொடரை படித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கும்போது தோன்றிய எண்ணம் அன்றைய இரவின் கனவில் ஆழ் மனம் நினைக்க வேண்டுமென்றால் ஒரு நகரத்தை எப்படி மனதுக்குள் பூட்டுவது? நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள்?

மோகன் நடராஜ்

 

அன்புள்ள மோகன்

எந்த ஒரு விஷயமும் கனவாக வரவேண்டும் என்றால் அது நம்முள் புகுந்திருக்கவேண்டும். நமது ஈடுபாடுதான் அவ்வாறு ஒன்றை கனவுக்குள் கொண்டுசெல்கிறது

ஆனால் ஈடுபாடு அப்படி தன்னிச்சையாக எழும் என்று சொல்ல மாட்டேன். அதை உருவாக்கிக் கொள்ளலாம். நம் மனம் சூழலின்மேல் மெல்ல ஒழுகிச்செல்கிறது. அப்படியே விட்டால் அது மூன்று விஷயங்களை மட்டுமே தொட்டு எடுத்து வைத்துக்கொள்ளும். ஒன்று, நமக்கு ஏற்கனவே தெரிந்தவை. இரண்டு, ஏற்கனவே தெரிந்தவற்றுடன் தொடர்புடையவை, மூன்று , முற்றிலும் புதியவையாக கண்ணைக் கவர்பவை.

ஆனால் மூன்றையும் உடனே அது நமக்குள் ஏற்கனவே இருக்கும் அடுக்கில் அடுக்கிவிடும். அப்படியே மேலே சென்றுவிடும். முற்றிலும் புதியவற்றை ஏதேனும் வகையில் அடையாளப்படுத்தியதுமே மறந்துவிடுவோம்

ஆகவே எந்தப்பயணத்திலும் திட்டமிட்டு, பயின்று, ‘கவனமாக’ இருக்கவேண்டும். அதற்குரிய சில வழிகள் உள்ளன

அ. செல்லுமிடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுதல். இன்று எந்த இடத்தைப்பற்றியும் இணையம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். ஓர் இடத்தின் வரலாறு, பண்பாடு, அதன் கலைப்பெறுமதி, நடைமுறை முக்கியத்துவம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டாலே நாம் அதன்மேல் நம் கவனத்தை நிலைநிறுத்த ஆரம்பிக்கிறோம். கொஞ்சம் தெரிந்துகொண்டதுமே அந்த இடம் மாறிவிட்டிருப்பதைக் காணமுடியும்

ஆ. அந்த இடத்தில் போதுமான அளவு நேரம் செலவழித்தல். பார்த்தல் வேறு, உள்வாங்குதல் வேறு. வேகமாகப் பார்க்கும் இடங்கள் நினைவில் நிற்பதில்லை. அங்கே திட்டமிட்டு குறிப்பிட்ட நேரம் செலவழிக்கவேண்டும். அந்த இடத்தின் முக்கியமான இடங்களை கண் ஊன்றி கருத்தூன்றி பார்க்கவேண்டும். புகைப்படம் எடுத்துக்கொண்டு அகன்றுவிடக்கூடாது.

இ. விழிகளால் ஊழ்கம் செய்தல். நாங்கள் செய்யும் ஒரு பயிற்சி உண்டு. ஓர் இடத்தில் அமர்ந்து விழிகளை 180 பாகைக்கு மிகமிக மெல்ல ஓட்டி ஒவ்வொரு பொருளாக கூர்ந்து நோக்கி 20 நிமிடம் அமர்ந்திருப்பது. அது ஊழ்கம்தான். அப்போது எண்ணம் எழுந்து நோக்கும் பொருட்களிலிருந்து அப்பால் கொண்டுசெல்லும். அவற்றை உந்தித்தவிர்க்கவேண்டும். மீண்டும் மீண்டும் காட்சியிலேயே கருத்தை நிறுத்தவேண்டும். இப்படி ஊழ்கத்திலிருந்த எல்லா இடங்களும் மிக ஆழமாக உள்ளே சென்றுள்ளன

ஈ. பயணத்தின் இரவுகள் முக்கியமானவை. செல்லுமிடங்களை எண்ணியபடி படுங்கள். இரவில் அரட்டை, குடி என பொழுதுசெலவிட்டால் நோக்கியவை அகன்றுவிடும். துயில்வதற்கு முன் இறுதியாக கண்களுக்குள்ளும் சிந்தனையிலும் எஞ்சவேண்டியவை நாம் அன்று கண்ட காட்சிகள்.

ஒரு பயிற்சியாகச் செய்துபாருங்கள். ஒரு சிற்பத்தின் முன் இருபது நிமிடம் உற்றுநோக்கியபடி, ஒரு சொல்லும் பேசாமல், தனியாக நில்லுங்கள். உறுதியாக அது கனவில் எழும். கனவில் அது நம் அகத்தால் குழைத்து மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்
அடுத்த கட்டுரைகதிரவனின் தேர்-7