ஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு

கலை வாழ்வுக்காக -ஸ்ரீபதியின் குடும்பத்திற்காக

வணக்கம்

சமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்பநாபாவின் கவிதைகளுக்கு நான் ரசிகை. ஆய்வுமாணவியாக இருந்த 90களின் இறுதியில்தான் விகடனில் வெளிவந்த அவரது ஒரு கவிதையில் முதன் முதலாக அவரை அறிந்துகொண்டேன். 4 வருடங்கள் தினம் பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்ற அக்காலத்தில் வியாழக்கிழமைகளில் விகடனை கடையில் வாங்கியபின்பே பேருந்தில் ஏறும் வழக்கம் இருந்தது. வழியெல்லாம் வாசித்துக்கொண்டே போவேன். விகடனில் அப்படி முழுப்பக்கம் வந்திருந்த அந்த முதல்கவிதை என்னை வெகுவாக பாதித்தது.

’எல்லாம் எல்லாம் மறந்துவிடுவதாக’ சொல்லும் கவிதை அது

கனவுகளில் மேய்ந்த பட்டாம்பூச்சிகளை கண்ணாடிக்கூண்டுக்குள் வைத்து தைத்து விடுகிறேன்
முத்தமிடுகையில் பாதி மூடிய உன் விழிகளை மறந்துவிடுகிறேன்

என்று சொல்லிக்கொண்டே வந்து,

’’எனினும்
நம் வாழ்வுக்காக மன்றாடிய என் வார்த்தைகளை
சிட்டுக்குருவிகளுக்கு அள்ளி வீசிவிட்டு
அவை கொத்தித்தின்னுவதை
கண் கலங்க பார்த்துக்கொண்டிருந்தாயே,
அதை மட்டும்
மறந்து விடுவேன் என்று சொல்வதற்கில்லை’’

என்று முடிந்த அக்கவிதை அச்சமயம் ஏற்படுத்திய உளவெழுச்சியில் அன்று நல்ல கூட்ட நெரிசலில் நின்று கொண்டே பயணித்த நான் கண்ணீர்விட்டு அழுததும் நினைவிலிருக்கிறது. பிறகு அவரது கவிதைகளை தேடி வாசித்திருக்கிறேன். உங்கள் தளத்தில்தான் கலைந்த நீளக்கேசமும் கண்ணாடியுமாய் இருக்கும் அவரது புகைப்படத்தையும் பார்த்தேன். கற்பனையில் அவரைக்குறித்தான என் உளச்சித்திரத்திற்கு மிக அருகில் இருந்தது அவரது தோற்றம். ஆனால் அவர் எங்கேயோ கேரளாவில் இருக்கிறார் என்றே நம்பிக்கொண்டிருந்தேன்.

கடந்த வாரம் பாண்டிச்சேரியிலிருந்து ஒரு நண்பர் அழைத்து ’’ஏன் சொல்லவேயில்ல, ஸ்ரீபதி போனதை ? என்று கேட்ட கேள்வியே எனக்கு முதலில் புரியவில்லை.

பொள்ளாச்சியிலும் கோவையிலுமாக இத்தனை அருகில் எனக்கு மிக பிரியமான ஒரு கவிஞர் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர் மறைந்த பின்பே அறிந்தது இன்னும் துயரளிக்கின்றது

இந்த கவிதையையும் விகடனில் தான் வாசித்தேன்

’’வேப்பர் விளக்குகளின்
மஞ்சள் வெளிச்சத்தில்
நாம் நடந்து கொண்டிருந்தோம்.
.
சட்டென்று கையைப் பற்றிக்கொண்டாய்.
மனம் வெளியே வந்து விழுந்தது.

நீர்த்துக் கொண்டிருந்தது போக்கு வரத்து.
பஸ் நிறுத்தத்தில் கடைசி பஸ்ஸுக்காய்
காத்திருந்த சிலர்

எங்கேயோ பார்ப்பதுபோல் திரும்பி
நொடிப்பொழுது நம் முகத்தைக்
கூர்ந்து பார்க்கிறார்கள்

நிழற்குடை விடுத்து
கைப்பிடிச் சுவரோரம் நின்றோம்.

நீ
வழக்கத்துக்கு மாறாய்
என் தோளில் தலைசாய்த்துக் கொண்டாய்.
இனிமேல்
காதலைப் பற்றிய கவிதைகள்
எழுத வேண்டியதில்லை என்று
தோன்றியது எனக்கு’’

தடம் இதழில் ’சொற்களில் தன்னை மறந்து வைத்து விட்டுபோன கவிஞர்’ அவர் என்று எழுதியிருந்தார்கள் என்னைப்போன்ற வாசகிகளின் நினைவிலும் அப்படித்தான் இருக்கிறார்.

அன்புடன்

லோகமாதேவி

***

ஸ்ரீபதி பத்மநாபா – கடிதம்

ஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு

முந்தைய கட்டுரைஎழுதும் முறை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதிரவனின் தேர்- 1