மீள்வும் எழுகையும்

அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் விஷ்ணுப்பிரியா. எனது அப்பா அம்மாவின் பூர்வீகம் சிவகாசிக்கு அருகில் உள்ள செங்கமலம் நாச்சியார்புரம். அப்பா சீனிவாசகம், அம்மா சீனியம்மாள், அக்கா கீதா. அப்பாவின் வேலைநிமித்தமாக கென்யா, டான்சானியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க தேசத்தின் பெரும்பகுதியிலும், மும்பையில்  சில ஆண்டுகளும் கழிந்தது எனது பால்யகாலம். அப்பா தீவிர இறை நம்பிக்கையாளர். எனது சிறு வயதில் கென்யாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலின் நூலகத்தில் உள்ள புத்தகத்துடனும், கோவிலின் குளத்தில் துள்ளி விளையாடும் வண்ண மீன்களுடனும் எல்லா விடுமுறை நாட்களும் கழிந்தன. நினைத்துப் பார்க்கையில் ஒரு ஓவியத்தின் சட்டகம் போல அந்த நினைவுகள் வந்து செல்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் பயணித்துவிட்டேன். அதுபோன்ற கோவிலில் நூலகத்தை கண்டதில்லை. அப்பா எங்களிடம் அதிகம் பேசியதில்லை. எல்லா தொடர்புகளும் அம்மா வழியாகத்தான். அம்மாவுக்கு எப்போதும் தனது குழந்தைகளின் உடல்நிலை குறித்த தவிப்பு என்றால், அப்பாவுக்கு எப்போதும் எனது கனவு, விருப்பம் குறித்துதான் தவிப்பு, கவலையெல்லாம். பள்ளியின் இறுதிகாலம்  மதுரையில் முடித்துவிட்டு, சென்னை SRM பல்கலைகழகத்தில் கட்டிட கலை வடிவமைப்பு நிறைவுசெய்தேன். அப்போது தமிழகத்தில் மொத்தம் பதிமூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தன. எனது விருப்பத்திற்காக மட்டுமே அப்பா அங்கு சேர்த்துவிட்டார்.

ஐந்துவருடங்கள் வேக வேகமாக கடந்துசென்றது. வெளிநாட்டின் பெரிய கட்டிட கலைக்கான நிறுவனமொன்றை தொடங்கவேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. புகழ்பெற்ற கட்டிட கலைஞர் பென்னி குரிய கோஷ் அவர்களிடம் சில காலம் பணியாற்றினேன். அப்பொழுது கேரளாவின் உள்ள முஜிறி கடற்கரை மண்டலத்தில், அருங்காட்சியக சீரமைப்பில் முழுமையாக இருந்தேன். யூதர்களின் இரண்டு வழிபாட்டுத்தளங்கள், ஒரு அரண்மனை மற்றும் சில வீடுகள்… மனநிறைவான நாட்கள்  அவை.

அந்த பணிகள் எல்லாம் முடிவுற்றவுடன், பெங்களூரில் மூன்று வருடங்கள். தொடர்ந்து நகரம் சார்ந்த மனிதர்களும், வாழ்க்கையும் ஒரு வித அச்சத்தையும் சலிப்பையும் உணர்ந்த சமயத்தில், எந்த வேலையும் செய்யாமல் சில மாதங்கள் வீட்டில் தனிமையில் கிடந்தேன். எனது நண்பரின் மூலம் ஒரு சிறு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தன்னார்வளர்கள் தேவை, கூடவே மண் கட்டிடங்கள் கட்டுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படும் எனும் முகநூல் செய்தியை பார்த்தேன். அதற்கு விண்ணப்பித்தேன். முதல் நாள், அந்த மலையடிவாரத்தில்  முழுவதிலுமிருந்து எழுபதிற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள்.

தொடக்க நிகழ்வாக தேசத்தின் பல பகுதிகளில் இருந்து மனிதர்கள் அனுப்பி வைத்திருந்த சின்ன சின்ன கைப்பிடி மண்ணை ஒரு சேர கலந்து, பிரார்த்தனையோடு குக்கூ காட்டுப்பள்ளியின் வேலையை ஆரம்பித்தோம். அங்கிருந்து மண் எடுத்து, செய்யப்பட்ட சுடாத செங்கல்லை கொண்டு முதல் கல் எடுத்து வைத்தபோது எனக்குள் உருவான மனஎழுச்சி இப்போதும் அப்படியே இருக்கிறது.

ஐ.ஐ.டி யில் கட்டிடகலை நிறைவு செய்த வருண் தௌதம் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெர்மி ஆகியோரின் கற்றல் பயிற்சிகளோடு பதினைந்து நாட்கள், கடுமையான வெயிலில் பாடல், நாடகம், உரையாடல் என சென்றது. பொருள்தான் மரியாதையை உருவாக்குகிறது, என்று கல்லூரி கற்றுக்கொடுத்த எண்ணத்தை சுக்குநூறாக்கியது. சக மனிதன் மீதான அன்பு மட்டும்தான் மாறாத புகழை  தரும் என்பதை  நம்பிக்கையாக்கியது. அதன் பிறகு நிறைய வாசிக்க ஆரம்பித்தேன்.

மூன்று மாதங்கள் கழித்து சிட்னி பல்கலைகழகத்தில் கட்டிட கலையின் முதுகலை படிப்பிற்கு தேர்வானேன். தேர்வான கடிதம் கிடைத்தவுடன், குக்கூ காட்டுப்பள்ளிக்கு மீண்டும் சென்றேன். கட்டி முடிக்கப்படாத கழிவறைத்திட்டில் சிவராஜ் அண்ணனுடன் சில மணிநேரங்கள் பேசி முடித்தபின் முடிவெடுத்தேன். நான் படித்த கல்வி என்னை உருவாக்குவதற்கு, எங்கோ இருந்து வேலை செய்துகொண்டிருக்கும் மக்களுக்காக மாற வேண்டும்.

வெளிநாட்டில் பல நூறு அடுக்கு மாளிகை கட்டுவதை விட  இங்கு இந்தியாவில் ஒரு சிறு கிராமத்தில் சிறு கழிவறை கட்டுவது முக்கியமானது என்ற ஒரு வரி வலுவாக என்னை பிடித்துக்கொண்டது. வெளிநாடு செல்வதை தவிர்த்துவிட்டு , காந்தி, வினோபா, குமரப்பா ஆகியோரை படிக்க துவங்கினேன். ஒரு தொலைபேசி உரையாடலில் பெரம்பலூருக்கு அருகில் அரசு பள்ளி மாணவி , கழிவறை இல்லாமையால், அடக்கி அடக்கி வைத்த மலத்தின் கழிவுகள் எலும்புகளில் உள்ளிறங்கி இறந்துபோனாள் என்று அண்ணன் சொல்ல உடைந்தழுதேன். அந்த இரவு முடிந்து விடியற்காலையில் மனதில் தோன்றியதுதான் மீள். (அதனுடைய முன்னோட்டத்தை இணைத்துள்ளேன்.)

ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் உருவாக்குகின்ற கழிவுகளான குப்பை, மலம், சாம்பல் நீர் (Grey Water) போன்றவற்றால் உண்டாகும் சூழல்கேட்டினை உணர்த்தவும், இந்த மூன்றும் கழிவுகள் இல்லை முறையாக கையாண்டால் மிகப்பெரிய பயன்பாட்டுச்சக்தி என்பதையும், அதை செயல்படுத்துவதற்கான சாட்சிகளையும் மனிதர்களையும் ஆவணப்படுத்துவதே இந்த மீள்.

தமிழகத்தில் முசிறியில் உள்ள Eco-san கழிப்பறைகள் தொடங்கி, கடந்த இருநூறு வருடங்கலாக மக்களின் வாழ்வு முறையில் ஒன்றாகிப்போன லடாக் மக்களின் சூழலுக்கு இணக்கமான வாழ்க்கை முறை வரை மூன்று வருடங்கள் தொடர் பயணத்தின் வழியே பதிவு செய்துள்ளேன். ஒரு சிறு எண்ணத்தை எல்லொருக்குமான நம்பிக்கையாக மாற்றுவதற்குள் உயிர் போகிறது. தூக்கம் வராத இரவுகளும், கடக்கவே முடியாத உறவுகளின் ஏளன வார்த்தைகளும் பாடாய் படுத்தின. அப்போதெல்லாம் என்னை சரி செய்ததும்  தீவிரமாக செயலை நோக்கி ஓடச்செய்ததும் எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மாவின் குரலும் குக்கூவில் இருந்து சொல்லும் நம்பிக்கை மனிதர்களும்தான்.

ஒரு சமயம் நீங்கள் எழுதிய எம்.எஸ் அம்மாவை குறித்த அக்னிபிரவேசம் கட்டுரையை அண்ணன் அனுப்பியிருந்தார். முழுமையாக வாசித்து முடிப்பதற்குள் நிறைய முறை அழுதுவிட்டேன். இப்போது வரை அம்மாவின் பாடலை கேட்கும்போதெல்லாம் உங்களது எழுத்தும் ஞாபகத்தில் வந்துவிடுகிறது. அடிக்கடி வந்து சேருகிற உங்களது எழுத்துக்களின் ஒரு சிறு பகுதி என்னை, என் கனவை மேலும் நம்ப வைத்தது.

பெரும் நுகர்வு கலாச்சாரத்தை நம்பும் என் வயது ஒத்த இளம் தலைமுறையின் மனமாற்றத்திற்கு உங்களது எழுத்துக்கள்தான் கைப்பற்றுதழுக்கு அருகில் உள்ளது.

மீள் ஆவணப்படம் இன்னும் இரண்டு ஒரு மாதத்தில் வெளியாகும். அச்சூழலில் அப்படத்தில் பேசிய நம்பிக்கையை செயலாக மாற்றும் முயற்சியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, ராக் ரவீந்திரன் இருவரின் துணையோடு நான் கட்டவிருக்கிற பள்ளி குழந்தைகளுக்கான Eco-san கழிவறையை நீங்கள்தான் வந்து துவங்கி வைக்க வேண்டும். எனது பிரியமான வேண்டுகோள் இது.

கென்யாவில் நின்று அருளும் அந்த நாராயணனை உங்களுக்காக நினைத்துக்கொள்கிறேன்.

விஷ்ணுப்பிரியா ஸ்ரீனிவாசன்

அன்புள்ள விஷ்ணுபிரியா

மிக அரிதாகவே இதைப்போல ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் கடிதங்கள் வருகின்றன. ஆவணப்படங்களின் முன்னோட்டம் சிறப்பாக வந்துள்ளன. இத்தகைய ஆவணப்படங்களை, குறைந்த செலவில், இங்கே எடுப்பதிலிருக்கும் கடுமையான சிக்கல்களை நான் அறிவேன். அதைக் கடந்து நிகழ்த்தியிருக்கிறீர்கள்.

ஒருவர் தன்னுடைய அகம் முழுமையாக வெளிப்படும் செயலைச் செய்வது, அதன் பொருட்டு அர்ப்பணித்துக்கொள்வதுதான் தவத்தில் முதன்மையானது. தவம் செய்யாதவர்கள் வாழாதவர்களே என்று சொல்லப்படுவதுண்டு.

நீங்கள் நான் அளிக்கும் நம்பிக்கை குறித்துப் பேசுகிறீர்கள்.நான் என் வழியாக நம்பிக்கை மனிதர்களைத் தொகுக்கிறேன், அவ்வளவுதான். அவர்களிடமிருந்து நம்பிக்கைகளை பெற்றுக்கொள்கிறேன். இக்கடிதம் அதில் ஒன்று

ஜெ

Meel; a documentary on domestic waste and waste water management

தண்ணீர் தேவைப்படாத டாய்லெட்!

மீள் ஆவணப்படம் பற்றி…

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17
அடுத்த கட்டுரைநரம்பில் துடித்தோடும்  நதி – சுனில் கிருஷ்ணன்