ஓஷோ மயக்கம் -கடிதம்
அன்புள்ள ஜெ
நானும் கல்லூரி முடித்து சில வருடங்கள் ஓஷோ மயக்கத்தில் இருந்தேன்.. அவர் நூல்களை விடாது படிப்பேன், பிடித்த வரிகளைக் கோடிட்டு மீண்டும் படிப்பேன். .. அந்த மயக்கத்தில் இருந்து விடுபட உதவியதும் அவர் தான்.. “நான் சொல்வது வரிகளில் இல்லை, வரிகளுக்கு இடையில் இருக்கிறது” என்று ஒருமுறை கூறி இருந்தார்.. அந்த வரி என்னை மிகவும் பாதித்தது.. மெல்ல நூல் மயக்கத்தில் இருந்து நான் வெளியேறவும் உதவியது..
ஆனால் ஒன்று, இன்றளவும் என் வாழ்க்கையின் ஒளி விளக்காக இருப்பது ஓஷோவின் வார்த்தைகள் தான்.. மனதின், வாழ்க்கையின், கடவுளின் இருண்ட பக்கங்களை அவர் மூலமாகத் தான் விளங்கிக்கொள்கிறேன்.
நன்றி
ரத்தன்
***
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
நெடுநாட்களுக்குப் பின்னர் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
ஓஷோ பற்றிய கடிதத்தையும் பதிலையும் வாசித்தேன். இளமையில் ஓஷோ வாசிப்பதனால் இரண்டு நன்மைகள் உண்டு. ஓஷோ எல்லாவற்றையும் மறுத்தும் எதிர்த்தும் விளக்கியும் யோசிப்பதற்கான வழிகளைக் காட்டுவார். அது நமக்குச் சிந்தனைப்பழக்கத்தை உருவாக்கும். அந்த வயதில் பிறர் சிந்திப்பதை பின் தொடர்ந்து செல்வதுதானே வழக்கம்.
இந்துத்துவம் கம்யூனிசம் திராவிடவாதம் எதிலாவது சென்று விழுந்தால் மீண்டு கரையேற பத்து ஆண்டுகள் ஆகிவிடும். அல்லது கடைசிவரை அதிலேயே கிடக்க வேண்டியிருக்கும். ஓஷோவை வாசித்தவன் தனித்தன்மையுடன் இருப்பான்
இரண்டாவது விஷயம், இளமையில் நமக்குக் கிடைப்பவை முழுக்கமுழுக்க அரசியல்நூல்கள்தான். அந்த அரசியல்நூல்களை வேதம்போல நம்பவும் செய்வோம். மிகப்பெரிய ஆசிரியர்களையும் தத்துவங்களையும் அறிமுகம் செய்யவே வழியில்லை. அரசியல்காரர்கள் செய்யவும் மாட்டார்கள். ஆனால் ஓஷோ கதே, நீட்சே, குர்ஜீஃப், புத்தர், கிருஷ்ணா என்று உலகின் மகத்தான ஞானிகள் எல்லாரையும் அறிமுகம் செய்துவிடுவார்
பிரச்சினைகளும் இரண்டு. முதல்விஷயம் என்னவென்றால் ஓஷோவை மட்டுமே வாசித்து அதிலேயே கிறங்கிக்கிடந்தால் பிற சிந்தனையாளர்களை வாசிக்காமலாகி விடுவோம். எல்லாரைப் பற்றியும் ஓஷோ சொன்னதை மட்டுமே வாசித்து அவர்களைத் தெரியும் என்று நினைத்துக்கொள்வோம்.
இரண்டாவது விஷயம், ஓஷோ வாசிப்பவர்கள் புனைவுலகத்திற்குள் வர மிகவும் தாமதமாகும். அவர்கள் ஓஷோவின் நூல்களில் மயங்கிக்கிடப்பார்கள். கதைகளை வாசிக்க தாமதமாகும். கதைகள் அர்த்தமற்றவை என்றும் தாங்கள் ஆன்மிகத்தேடலில் இருப்பதாகவும் தோன்றும்
என்னுடைய அனுபவத்திலே சொல்கிறேனே. நல்ல வாசகனுக்கு கதைகள், உயர்ந்த இலக்கியங்கள்தான் தேவையானவை. அவை கற்பிப்பதைப்போல மற்ற நூல்கள் கற்பிப்பதில்லை. கற்பனை இல்லாதவர்களுக்குத்தான் மற்ற நூல்கள் உதவியானவை
ராமச்சந்திரன்
***