வணங்கான் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

ஒவ்வொரு கதைக்கும் ஒரு வரி சாரமாக இருக்குமோ?

இந்தக் கதையின் சாரம் என்று எனக்குப் படுவது: “எனக்கு என் பிறப்பிலேயே நான் மீறமுடியாத ஆணை ஒன்றை அளித்தார்”

நன்றி
ரத்தன்

அன்புள்ள ஜெ,

வணங்கானைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்:
ஒரு கிளாசிக் நாவலாக வேண்டியதை தலைவர் இப்படி சுருக்கி விட்டாரே!
சரி பரவாயில்லை – அடர்த்தியான கிளாசிக் சிறுகதையாக இருந்துவிட்டுப் போகட்டும்.
திரும்பத் திரும்பப் படித்துக்கொள்ளவும் வசதி :)

நன்றி

ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவசன்

அது எத்தனை நீளம் இருந்தாலும் சிறுகதைதான். ஒரே ஒரு புள்ளிதான் மையம். யானை மேல் எழும் சில கணங்கள். மற்ற எல்லாமே அதை அமைக்கும் பீடம்தான். அதுவே சிறுகதை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்
ஒரு சமுகம் தன் அவல நிலையிலிருந்து மேல் எழுந்த நிகழ்வு. பானையின் ஒரு சோறாக கறுத்தான். படிக்கும் வாசகன் அவனே கறுத்தானாக மாறிவிடுகிறான். அவனை காப்பாற்ற அவன் தந்தை பொன்னேமானிடம் கதறும் போது கேவலப்பட்டு, வெறியோடு தப்பிப்பதும், பின் பல வருடம் கழித்து ஜமீனிடம் முதல் நாள் அதே அவமானம் படும் போது ஏற்படுவது விரக்தியுறுவதும் – இத்தனை நாள் – இத்தனை தூரம்- இத்தனை படிப்பு – அனைத்திற்கும் மீறி அங்கு முன் நிற்பது அவன் சாதி மட்டும்தானா? யானை அடியில் சாக இருந்தவனுக்கு எதிர்த்து நிற்க பயமில்லை- அவன் தன் சமுகத்தின் பிரதிநிதியாக எழுகிறான். அவன் ஆணை மேல் ஏறிய பின் அனைவரும் அவனுக்கு கிழ்தான். சரியான அடி. கறுத்தான் ஆனைக்கறுத்தான்நாடார் ஆகும் போது படிப்பவனும் அந்த எழுச்சி பெறுவது உங்கள் எழுத்தின் சிறப்பு. நேசமணி பற்றி தேவைக்கும் அதிகமாக எழுதியுள்ளாரே என தோன்றியது, பின் கறுத்தானின் வீரத்தில், வாழ்வில் நேசமணியும் கலந்திருப்பது புலனாயிற்று. நேற்றும் இன்றும் சாதி, இனம், மொழி, நிறம், பணம், உடல்வலு என பல விதங்களில் சிலர் பலரை அடிமைப்படுத்தி வைக்கின்றனர், நிறைய பேர் இதை எதிர்த்து முன் சென்றாலும் கறுத்தான் போல அது சமுதாயத்தின் எழுச்சியாக இருப்பதில்லை.

அறம், கேத்தேல் சாயிபு, வணங்கான் – வரிசையாக உள்ளம் நெகிழ வைத்து நேர்மறை எண்ணங்கள் எழ வைக்கும் தரிசனங்கள்.
regards
S.N. Ramesh

பின் குறிப்பு: இதை நாடார் காதையாக எண்ணி சிலர் துதி பாடுவதும், சிலர் எரிச்சல் அடைவதும் நிகழும், ஆனால் கூடிய விரைவில் நீங்களே எதாவது எழுதி அவர்களை குழப்பி விடுவீர்கள்.

அன்புள்ள ரமேஷ்

மானுடத்தை உணர முடியக்கூடிய அனைவருக்கும் இக்கதை எங்கோ நெஞ்சைத் தொடும். சாதி மத கருத்தியல் போக்குகளால் மனம் குறுகியவர்களுக்கு இது அல்ல எந்த கதையுமே பிடிக்காது. அவர்களுக்கு நம்மவர் எதிரிகள் என்ற பிரிவினை மட்டுமே உண்டு

ஜெ

யானையின் கீழ் கிடந்த மனிதன் யானையின் மேல் ஏறிய கதை.
யானை செல்லுமளவுக்கு மக்கள் வழி விடுவது.
யானைமேல் ஏறும் கருப்பு நாடாரின் தனி மனித அனுபவம் சமூகத்தின் அனுபவமாக மிகக் கச்சிதமாக வருவது.
தலைமுறைகள் குறித்த கவலையுடன் கொள்ளும் உறுதி.
மேன்மையை கண்டுபிடித்து படிக்க ஊக்குவிக்கும் டீக்கடை முதலாளி.
நேசமணி.

எத்தனை மேன்மைகள் சாத்தியமானவன் மனிதன்?

இந்தக் கதைதான் கண்கள் பனிக்கச் செய்தது.

சிறில் அலெக்ஸ்

முந்தைய கட்டுரைசரஸ்வதி விஜயபாஸ்கரன்
அடுத்த கட்டுரைசோற்றுக்கணக்கு, மத்துறுதயிர்-கடிதங்கள்