[மே ஃபேயர் முகப்பு/ பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்கவும்]
புவனேஸ்வரில் நாங்கள் தங்கிய மேஃபெயர் லகூன் என்னும் விடுதியே நான் இதுவரை தங்கிய விடுதிகளில் முதன்மையானது. அங்கு செல்வது வரை அப்படி ஒரு விடுதியை எண்ணியிருக்காவில்லை. இரவில் அந்த விடுதியின் கூடம் வழியாகச் செல்லும்போது அந்தக் களைப்பில், அரைமயக்க நிலையில் ஒரு கனவெனத் தோன்றியது.
நான் பொதுவாக தங்கும் விடுதிகளைப்பற்றி எழுதுவதில்லை, அரிதாகவே பெயரைக்கூடக் குறிப்பிடுவேன். திரைஎழுத்தாளராக ஆனபின்னர் உயர்தர விடுதிகளில் தங்குவது ஒருவகை அன்றாடமாக ஆகிவிட்டது. சொல்லப்போனால் ஆண்டில் நூறுநாட்கள் வரை விடுதிகளில்தான் தங்கிக்கொண்டிருக்கிறேன். வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பண்பாட்டுச் சூழல் கொண்ட விடுதிகளில், மிக ஆடம்பரமான விடுதிகளில் தங்கியிருக்கிறேன்.
[அறைவரிசை]
விடுதிகளுக்கு மயங்கிவிடக்கூடாது என எனக்குள் வாழும் இன்னொருவன் ஆணையிட்டிருக்கக்கூடும். அது ஆடம்பரங்களுக்கு அடிமைப்படுவது. ஆனால் ஆடம்பரம், வசதி, அழகு மூன்றையும் அத்தனை எளிதாகப் பிரித்துவிடமுடியாது என இப்போது தோன்றுகிறது. இந்தியச்சூழலில் வசதியே ஓர் ஆடம்பரம்தான். நான் மெல்லமெல்ல வசதிக்கு பழகிப்போய்விட்டிருக்கிறேன். அழகு இல்லாத விடுதி உளச்சோர்வை உருவாக்குகிறது. அது இங்கே ஆடம்பரம்தான். ஆகவே எப்போதுமே சற்று உயர்தர விடுதிகளையே நாடிச்செல்கிறேன்.
உலகமெங்கும் விடுதிகளுக்கென ஒரு பொது இலக்கணம் மெல்லமெல்ல உருவாகி வந்திருக்கிறது. அவற்றின் வரவேற்பறை, விருந்தினர் அறைகள், இடைநாழிகள்,உணவுக்கூடம் எல்லாமே ஏறத்தாழ ஒன்றே. இன்றைய பொதுப்போக்கு என்னவென்றால் பெரும்பாலும் சீனப்பொருட்களைக்கொண்டு தற்காலிகமாக ஆடம்பரமான, நவீனமான தோற்றத்தை உருவாக்குவது. ஐந்தாண்டுகளில் கழற்றி வீசிவிட்டு புதியபொருட்களைக்கொண்டு மீண்டும் புதிதாக நிறுவுவது.
[குளியல்தொட்டிக்கு வெளியே சிலை]
இதனால் விடுதி என்றும் புதியதாக இருக்கும். செலவேறிய பொருட்களைக் கொண்டு கட்டினாலும் விடுதி பழையதாக தெரிந்தால் இன்றைய வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. விடுதி தாங்கள் வருவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கவேண்டும் என்றே எண்ணுகிறார்கள். ஆகவே மாடிப்படியின் கைப்பிடிகள் கூட சில விடுதிகளில் மாற்றப்படுகின்றன அரிதாக சில விடுதிகளே காலப்பழைமையைச் சிறப்பாகக் கொண்டிருக்கின்றன – மும்பை தாஜ் போல.
இன்றைய வாடிக்கையாளர்கள் விடுதிகள் அவர்களுக்குப் பழகிய வடிவில் இருப்பதையே விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால் விடுதிகளில் தங்குபவர்கள் தொடர்ச்சியாக விடுதிகளிலேயே வாழ்பவர்கள். அவர்களுக்கு ஒரே மாதிரியான அமைப்பு பழகிய உணர்வை, இயல்புத்தன்மையை அளிக்கிறது. புதிய இடத்தின் பதற்றம் இருப்பதில்லை. ஹயாத், ஷெரட்டன் போன்ற விடுதிவரிசைகள் எதையுமே மாற்றுவதில்லை. ஓர் இடத்தில் மதுவிடுதி இருக்குமென வாடிக்கையாளர் எண்ணி திரும்பினால் அங்கே அது இருக்கும். [அதன்பின் வேறு எது எங்கே இருந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை]
[இடைநாழி]
மேஃபேயர் விடுதி புவனேஸ்வரின் மையத்திலேயே உள்ளது. அங்கிருந்து சட்டச்சபையும் நவீன்பட்நாயக்கின் இல்லமும் கூட அருகேதான். ஆனால் அந்த இடத்தில் எண்ணிப்ப்பார்க்கவே முடியாத நிலவியல்கொண்டது. அது ஒரு ஏரியின் நடுவே அமைந்துள்ள திட்டில் அமைந்துள்ளது. ஏரியே விடுதிக்குச் சொந்தமானதுதான். எல்லா அறைகளுக்குப் பின்னாலும் ஒரு வெளியமர்வுப் பகுதியும், அதன் நேர்முன் ஏரியும் இருக்கும்படிக் கட்டப்பட்டுள்ளது.
வரவேற்பறையில் இருந்து ஒரு பெரிய வட்டமாகச் செல்லும் இடைநாழியில் இருந்து அறைகளுக்குச் செல்லலாம். இடைநாழியின் வட்டத்திற்கு நடுவே தோட்டமும் நீச்சல்குளமும் அமைந்துள்ளது. நீச்சல்குளத்தைச் சுற்றி நீருக்குள் நீட்டி நின்றிருப்பவை போன்ற சிறுமாடங்கள். அங்கே அமர்ந்து ஏரியை பார்க்கலாம். இடைநாழி முழுக்க வெவ்வேறு வகையான அமர்விடங்கள். சிறிய அணித்தோட்டங்கள் நோக்கி திறக்கும் வாயில்கள்
[அமர்விடம்]
அந்த இடைநாழிதான் நான் ஒரு விடுதியில் பார்த்த மிக அதிகமான கலைப்பொருட்களின் தொகுதி. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவகையான சிற்பங்களால் அணிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த சிற்பங்கள். சீன, ஜப்பானிய, தாய்லாந்துச் சிற்பங்கள். ஐரோப்பியபாணிச் சிற்பங்கள். சுவர்களில் ஓவியங்கள், வெவ்வேறு வகையான கலைப்பொருட்கள். பெரும்பாலும் அனைத்துமே அசல்கள். ஒரு கலை ஆர்வலர் விழிசலிக்காமல் இந்த இடைநாழியை ஆயிரம்முறை சுற்றிவரலாம்.
இன்றைய விடுதிகளில் வெளியே அமர்ந்திருப்பதற்கான இடங்கள் மிகக்குறைவு. ஏனென்றால் பொதுவாக இடமே குறைவு. ஆங்காங்கே மெத்தைநாற்காலிகள் போட்டிருப்பார்கள். ஆனால் அந்த இடம் இடுங்கியதாகவும் பிற அறைகள் திறக்கும் சந்தியாகவும் இருக்கும். மேஃபேயரில் அமர்ந்து பேச ஏராளமான இடங்கள். பசுமைநிறைந்த தோட்டத்தைப் பார்த்தபடி. ஏரியின் அருகே. நீச்சல்குளத்தின் பின்னணியில். இருக்கைகளும் வெவ்வேறு வடிவமைப்புகளுடன், வெவ்வேறு கலைச்சூழலில் அமைந்துள்ளன.
[டாபா]
இத்தகைய விடுதிகளில் இன்று உலகமெங்கும் உள்ள போக்கு என்னவென்றால் குறைவான அலங்காரத்தன்மைதான். ஏனென்றால் அலங்காரம் மிகவிரைவிலேயே விழிகளுக்குச் சலிக்கிறது. இடநெருக்கடியான உணர்வு ஏற்படுகிறது. இடம் நிறைய இருந்தாலும்கூட ஓர் இடைநாழியில் இருக்கும் சிற்பம் நமக்கு தொந்தரவாகத் தெரிகிறது. ஆகவே கூடுமானவரை விளக்கொளி கொண்ட வெற்றிடம் என்பதே இன்றைய பொதுவான உள்ளலங்காரக் கலை.
ஆனால் மேஃபேயர் லகூன் விடுதியில் எங்கு விழிதிருப்பினாலும் சிற்பங்கள். சில சிற்பங்கள் மிகப்பெரியவை. மரத்தாலும் ஒரிஸாவுக்குரிய செம்மண்நிறக் கல்லாலும் அமைந்தவை. இருப்பினும் விழிக்கு நெருக்கடி தோன்றவில்லை. ஏனென்றால் கலைநிபுணர்களால் அவை ஒருங்கமைக்கப்பட்டிருக்கின்றன.
[உள்வட்டத் தோட்டம்]
ஒன்றை கவனித்தேன், ஒரு பெரியசிற்பம் வலப்பக்கம் இருந்தால் நம் விழிக்கு இடப்பக்கம் வெற்றிடமோ தோட்டமோ நீர்ப்பரப்போ தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது இந்த இடம். இது விழிச்சோர்வை இல்லாமலாக்கிவிடுகிறது. ஒரு சிற்பம் அதேயளவு இயற்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும் என்றால் அது இயல்பான ஓர் அழகிருப்பாக ஆகிவிடுகிறது. இரண்டும் ஒன்றையொன்று நிரப்பி அர்த்தம் அளிக்கின்றன.
இயற்கைக் காட்டை அங்கிருக்கும் சிற்பங்களுக்கு ஒத்திசையும்படி அமைப்பதென்பது இன்னொரு கலை. அதற்கும் கலைஞர்கள்தான் தேவையாகின்றனர். உதாரணமாக, சீன ஜப்பானிய வெண்களிமண் சிலைகள் மூங்கில்காடுகளுடன் அற்புதமாக இசைவுகொள்கின்றன. கற்சிலைகள் மழையீரம் நிறைந்த இடத்தில் சற்றே பாசிபடிந்து இருக்கவேண்டியிருக்கிறது. சுடுமண் சிலைகள் பழுத்த இலைகளும் கொடிகளும் கொண்ட, மிகையாக ஈரமாகாத இடங்களில் நின்றால் விழிகள் ஏற்றுக்கொள்கின்றன
[நீச்சல்குளம்]
ஒரேபாணியிலான சிற்பங்களையும் கலைப்பொருட்களையும் குவிப்பது, இடைவெளி இல்லாமல் அடுக்குவது போன்றவை இங்கில்லை. பெரும்பாலான சிற்பங்கள் மிகச்சரியான இடங்களில், மிக உகந்த இடவெளிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. சிற்பங்கள் செறிந்திருக்கும் இடம் செயற்கைத் தோட்டத்தின் பசுமைக்குள்தான்
இவ்வாறு கலைப்பொருட்களை அமைப்பதில் அனைத்தையும்விட மேலானதாக நான் நினைப்பது அந்த நிலத்தின் பண்பாடு அங்கே வெளிப்படுவதைத்தான். மேஃபேயர் விடுதியின் ஒவ்வொரு பகுதியும் ஒரிஸா என்று சொல்லிக்கொண்டிருந்தது. ஜப்பானிய, ஐரோப்பியக் கலைப்பொருட்கள்கூட ஒரிய பொருட்கள் சூழத்தான் அமைக்கப்பட்டிருந்தன.
[இடைநாழியில் ஒரு பகுதி]
ஒரியப் பண்பாட்டின் எல்லா கலைவடிவங்களுக்கும் அங்கே இடமிருந்தது. ஒரியாவின் பழங்குடிப் பண்பாட்டின் முதன்மையான கூறுகளில் ஒன்று அவர்களின் சுவர்வரைகலை. அங்குள்ள நீராட்டுப் பகுதியின் சுவர்களில் அந்த ஓவியங்களைக் கண்டேன். கலம்காரி நெசவின் பாணியில் ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்படி ஓரு நிலத்தின் பண்பாட்டை அமைப்பதில் சில சிக்கல்களும் உண்டு. அந்தப் பண்பாடு பற்றிய தேய்வழக்காகிப் போன வடிவங்களை உருவாக்கி வைத்துவிடுவோம். உதாரணம், சென்னை விமானநிலையம். ஏறுதழுவுதல், தமிழகக் கிராமியக் காட்சி என நாம் உருவாக்கி வைப்பவை வெறும் பொம்மைகள். அங்கே தேவையானவை கலைநோக்குடன் அவற்றை மறுஆக்கம் செய்த சிலைகள்.
[அறையிலிருந்து ஒரு காட்சி]
இந்த விடுதியில் எங்காவது ரசனைக்குறைவான ஒரு பொம்மை உள்ளதா என்று சுற்றிவந்து நோக்கினேன். இல்லை என்று கண்டபோது எஞ்சியிருக்கும் இடங்களின் அழகே அவ்வாறு இருக்காது என்பதற்கான சான்று என்று தோன்றியது. குளியல்தொட்டிக்கு வெளியே ஒரு சாளரம், அதில் ஒரு சிலை உள்ளே பார்த்துக்கொண்டிருக்கிறது.அதுவும் ஐவி செடிகளால் மூடப்பட்டு ஒரு பழங்காலக் காட்டுச்சிற்பம் போலத் தோற்றமளிக்கிறது. ஒரு காட்டுச்சுனைக்குள் நீராடும் உணர்வு.
இந்த விடுதிக்கு இருக்கும் திறந்தவெளித்தன்மைதான் இதன் இன்னொரு சிறப்பு. பெரும்பாலான நட்சத்திரவிடுதிகள் முழுக்கமுழுக்க மூடப்பட்டவை. உள்ளே அவை அளிக்கும் ’திறந்தவெளி’ கூட உண்மையில் மூடப்பட்டது, செயற்கையாக கூரையும் ஒளியும் அளிக்கப்பட்டது. மேஃபேயர் விடுதிக்குள் இடைநாழிகளில் முழுக்க இயற்கையான காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
[அறை, காலையில் எழுந்ததும்…]
இந்த ’ஆடம்பரம்’ வேறு ஊர்களுக்கு இல்லை. சென்னையில் திறந்தவெளிப் பகுதி நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் மட்டுமே அமர்ந்து பேசக்கூடியதாக இருக்கும். மற்ற மாதங்களில் வெப்பமும் புழுதியும் கொசுவும் பிடுங்கி எடுக்கும். மலைப்பகுதிகளில் குளிர் பெரிய இடர். ஒரிஸாவின் தட்பவெப்பம் மிகையே இல்லாதது. கோடைகாலத்தில் சிலநாட்கள் மட்டுமே வெப்பம்.
கேரளம்போலவே இரண்டு மழைக்காலம் கொண்டது ஒரிஸா. நாங்கள் சென்றது ஆண்டின் முதல்மழைப்பருவம். விட்டுவிட்டு மென்மழை பெய்துகொண்டே இருந்தது. செயற்கை நீரூற்றுகள் வழியாக மழைபெய்துகொண்டே இருக்கும் ஓசையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே தொடர்ச்சியாக மழையை உணர்ந்துகொண்டிருந்தோம்
[காபிஷாப் செல்லும் வழி]
மேஃபேயரில்கூட கொசு இல்லாமல் இருக்க தொடர்ந்து முயற்சிகள் எடுப்பதைக் கண்டேன். எல்லா செடிகளும் நாளில் இருமுறை புகைபோடப்படுகின்றன. இத்தகைய விடுதிகளை பேணுவதென்பது மிகப்பெரிய நிர்வாகத்திறனும் பெரிய எண்ணிக்கையில் பணியாளர்களும் தேவையாகும் ஒன்று. மேஃபேயர் விடுதி நிர்வாகம் எதிரில் இன்னொரு திருமணமண்டபத்தையும் நடத்துகிறது. சிலநாட்களில் நான்கு திருமணங்கள்கூட நிகழும், ஒரு சிறு குளறுபடிகூட உருவாகாது என்றார் நண்பர்
இன்று உலகளாவ பேசப்படும் கட்டிடக்கலை – உள்ளலங்காரக் கலை என்பது இயற்கையை முடிந்தவரை உள்ளே கொண்டுவருவதுதான். குறைந்த சூரியவெளிச்சத்தில் வளரும் மூங்கில்களும் செடிகளும் இதற்காகக் கண்டடையப்பட்டுள்ளன.பல செடிகள் வாரம் ஒருமுறை மட்டுமே வெயிலை எதிர்பார்ப்பவை. அடர்ந்த மழைக்காடுகளின் செடிகளுக்கு சூரிய ஒளி குறைவாகப் போதும். ஆனால் நீர் நிறைய வேண்டும். அத்தகைய செடிகளையே உள்ளலங்காரத்திற்குத் தெரிவுசெய்கிறார்கள்
அதற்குக்காரணம் இன்று நாம் வீட்டுக்குள் செலவழிக்கும் நேரம் மிகுந்துவிட்டது என்பதுதான். முன்னர் வீடு என்பது பெரும்பாலும் இரவு தங்குவதற்கான இடம். நாம் திறந்தவெளிகளில் வாழ்ந்தவர்கள். சொல்லப்போனால் மிகுதியாக வீடுகளுக்குள் தங்கவேண்டிய கட்டாயம் இருந்த குளிர்நாடுகளிலேயே மாபெரும் மாளிகைகளும் உள்ளலங்காரக் கலையும் தழைத்து வளர்ந்தது.
இந்தியாவில் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய அரண்மனைகள் எல்லாமே சிறியவை. பிரிட்டிஷார் வழியாகவே பெரிய மாளிகைகளைப் பற்றிய சித்திரம் நமக்கு வந்தது. இந்தியாவில் நான் பார்த்த மாபெரும் அரண்மனை என்றால் குவாலியர் அரசருடையதுதன் – ஜெயவிலாஸ் என்று பெயர். அது பிரிட்டிஷ் பாணி மாளிகை.
இன்று இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் இல்லமுகப்பும், வரவேற்பறையும், படுக்கையறையும்கூட மேலைநாடுகளில் உருவாகி வடிவம்கொண்டு வந்தவை என்பதை நாம் உணர்ந்திருப்பதில்லை. நமது கட்டிடக்கலைக்கு உதாரணமாக நாம் கொள்ளும் செட்டிநாட்டு இல்லங்கள் கூட பிரிட்டிஷ் கட்டிடக்கலையை, உள்ளலங்காரக்கலையை ஒட்டியவையே
முற்றிலும் இந்திய வரவேற்பறை எப்படி இருந்திருக்கும்? எங்களூர் உதாரணம் என்றால் பத்மநாபபுரம் அரண்மனை, சில பழைமையான இல்லங்களைத்தான் சுட்டிக்காட்டவேண்டும். அவை கொட்டியம்பலம், பூமுகம் என்னும் இரு அமைப்புக்கள் கொண்டவை. கொட்டியம்பலம் என்பது இல்லத்தின் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்ட நுழைவாயில்.கூரையிடப்பட்டது. நால்வர் எதிரெதிர் அமரும்படி திண்டுகள் போடலாம். பூமுகம் என்பது வீட்டின் முகப்பிலுள்ள மண்டபம்போன்ற நீட்சி.
நமக்கு அமர்வதற்கான திண்டுகள், திண்ணைகளே முன்பு இருந்தன. அரண்மனைகளில் கூட அரசர்கள் அமர்வதற்கு திண்டுகள்தான் அமைக்கப்பட்டிருந்தன. சாய்மானம் கொண்ட அற்புதமான கல்திண்ணைகளை ஹொய்ச்சால பாணி ஆலயங்களில் காணலாம். நம் தட்பவெப்பம், வாழ்க்கைமுறை ஆகியவற்றுக்கு ஏற்ப இங்கே உருவாகிவந்த கட்டிடக்கலை அது.
நீண்ட காலுறைகளும் ,இல்லத்திற்குள்ளும் காலணிகளும் அணியும் வழக்கம் கொண்ட ஐரோப்பியருக்கானது நாற்காலி. கீழைநாடுகளில் எங்கும் நாற்காலி என்னும் அமைப்பு இல்லை. ஜப்பான் சீனா எங்குமே தரையில் விரிப்பிட்டு அமரும் வழக்கம்தான். நாற்காலி இங்கே வந்தபின்னரும்கூட அதற்கு தோலாலோ துணியாலோ உறையிடும் வழக்கம் உருவாகவில்லை
இன்று நம் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. நாளில் பெரும்பகுதியை இல்லங்களுக்குள் செலவழிக்கிறோம். ஆகவே தட்டையான அறைகள் சலிப்பூட்டுகின்றன. நம்மையறியாமலேயே அதை அழகுறச்செய்ய விரும்புகிறோம். வீட்டுக்குள் ஓவியங்களை மாட்டுவது, கலைப்பொருட்களை வைப்பது எல்லாம் சென்ற சில ஆண்டுகளாகவே பரவலாக ஆகியிருக்கின்றன. உள்ளலங்காரத்திற்காக தனியாகச் செலவுசெய்வதும் அதற்கான நிபுணர்களை நாடுவதும் இன்று இயல்பானதாக ஆகிவிட்டிருக்கிறது
அதற்கடுத்த நிலைதான் வீட்டுக்குள் இயற்கையை நிறைப்பது. முற்றம் இல்லாத அடுக்ககங்களில் இது இன்னமும் தேவையாகிறது. வாழும் செடிகள், நீரோடைகள். இயற்கையான வண்ணத்துப் பூச்சிகளை வீட்டுக்குள் வரச்செய்வதுகூட இன்றைய உள்ளலங்காரக் கலையின் முக்கியமான கூறு. பெரும்பாலான சர்வதேச விமானநிலையங்கள் இவ்வகையில் அலங்கரிக்கப்படுகின்றன. மிகச்சிறந்த உதாரணம் சிங்கப்பூர் விமானநிலையம். அதற்குள் ஒரு சிறு மழைக்காடே உருவாக்கப்பட்டுள்ளது.
[அறைக்குப் பின்பக்கம், வராந்தா]
மூடுண்ட , மையக்குளிர்வசதி செய்யப்பட்ட விடுதியைக்கூட துடைத்து மெருகேற்றி வைப்பது பெரிய உழைப்பு தேவையாவது. மேஃபேயர் போன்ற இயற்கைசார்ந்த விடுதியின் தோட்டடத்தையும் ஏரியையும் பராமரிப்பது என்பது ஒருநாள்கூட நின்றுவிடமுடியாத பெரும்பணி. அதிலும் சமீபத்தைய ஃபானி புயலால் மேஃபேயர் கடுமையான அழிவைச் சந்தித்தது. அதிலிருந்து ஒரு மாதத்தில் விடுதியை மீட்டுவிட்டார்கள்.
சீன உணவகம், ஐரோப்பிய உணவகம், இந்திய பாணி உணவகம் என வெவ்வேறு பகுதிகள் இங்குள்ளன. ஆச்சரியமூட்டுவது, அங்கே உள்ள ‘தாபா’ பகுதி. கயிற்றுக்கட்டில்கள், அரிக்கேன் விளக்குகள் என தாபா ‘செட்’போடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே ‘ஃபீல்’க்காக ஒரு மெய்யான லாரியே கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபி கானாப்பாட்டுக்கள் ஒலிக்கின்றன.
ஆறுநாட்கள் மேஃபெயரில் தங்கியிருந்தோம். அழகிய சூழல் நம் உள்ளத்தை எப்படி மென்மையாக ஆக்கமுடியும் என்பதற்கான உதாரணம். எந்தவிடுதியும் ஒருநாளில் சலிப்பூட்டுவதே நான் உணர்ந்தது. ஆறுநாட்கள் கடந்தால் எந்தப்பொருளையும் நாம் பார்க்கவே மாட்டோம். மேஃபேயரை திரும்பத்திரும்ப நோக்கிக்கொண்டிருந்தோம். நோக்க நோக்க முடிவில்லாது பெருகியது அதன் கலைப்பொருள் நிரை.
வெர்சேல்ஸ் போன்ற அரண்மனைகளைப் பார்க்கையில் ஓர் கலைக்கூடத்தில் எப்படி வாழமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டதுண்டு. ஆனால் நன்கு அமைக்கப்பட்டது என்றால் நாம் கலைக்கூடத்தில் மகிழ்ந்தும் நிறைந்தும் வாழமுடியும். அக்கலைப்பொருட்கள் நமக்குள் புகுந்து ஓர் அகஇடத்தை சமைக்கின்றன. இயற்கையாலும் மானுடனின் கலைத்திறனாலும் உருவாக்கப்பட்ட ஓர் அழகிய இடம்.
[மே ஃபேயர் ஒட்டுமொத்தக் காட்சி]