கதிரவனின் தேர்- 1

 

புரியின் ஜகன்னாதர் தேரைப்பற்றி நான் கேள்விப்படுவது விந்தையான ஒருவரிடமிருந்து. 1970 களில் நான் சிறுவனாக இருந்தபோது அருமனை பள்ளி அருகே நிகழ்ந்த ஒரு மதச்சொற்பொழிவில் ஒரு வெள்ளையர் சொன்னார். “இந்தியாவில் நாகரீகத்தைக் கொண்டுவந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் இங்கே வந்து பார்த்தபோது மக்கள் சொற்கத்திற்குச் செல்வதற்காக பூரி நகரில் நிகழும் ஜகன்னாதர் தேரின் சக்கரங்களை நோக்கி தங்கள் குழந்தைகளை தூக்கி வீசி கொன்றனர். தேரோடும் வீதி முழுக்க உழுதிட்ட வயல்போல குழந்தைகளின் குருதி நிறைந்திருக்கும்.அதன்மேல் தேர்ச்சக்கரங்கள் வழுக்கும்”

அதை ஒருவர் மொழியாக்கம் செய்து சொன்னார். என் வயிறுகுழைந்தது. என்னால் மேற்கொண்டு கேட்கமுடியவில்லை. பலநாட்கள் அதை எண்ண எண்ண குமட்டல் எழுந்தது. பின்னர் இடதுசாரியான என் அண்ணன் சசிதரனிடம் அதைப்பற்றி கேட்டேன். அண்ணன் நிறைய படிப்பவர். அது உண்மைதான் என்றும், இடதுசாரிகளும் அதை எழுதியிருப்பதாகவும் அவர் சொன்னார். “அது நிலப்பிரபுத்துவ காலகட்டம். பிரிட்டிஷ்காரர்கள் முதலாளித்துவர்கள். நிலப்பிரபுத்துவத்தைவிட முற்போக்கானதுதான் முதலாளித்துவம்” நான் அதை அப்படியே நம்பினேன்

மீண்டும் நான்காண்டுகளுக்குப் பின்னரே அதைப்பற்றிய உண்மைகளை அறிந்தேன். பூரி தேரோட்டத்தில் குழந்தைகளை வீசுகிறார்கள் என்பது அன்றைய மிஷனரிகள் சிலர் சொன்ன திட்டமிட்டப் பொய். அதை எடுத்து உலகின் முன் வைத்தவர் காதரீன் மேயோ. அவர் எழுதிய மதர் இந்தியா என்னும் நூலை ‘சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை’ என்று எழுதினார் காந்தி. இந்தியா பற்றிச் சொல்லப்பட்ட எல்லா எதிர்மறைப் அதிவுகளையும் எந்தப் பரிசீலனையும் இல்லாமல் தொகுத்துச் சொன்ன நூல் அது.

இந்தியாவில் இருந்த பிரிட்டிஷாராலும் உலகமெங்குமிருந்த ஏகாதிபத்தியவாதிகளாலும் கொண்டாடப்பட்டது. அவர்களின் குற்றவுணர்ச்சியை இல்லாமலாக்கியது அது. அவர்களின் ஆதிக்கத்தை நியாயப்படுத்தியது. அவர்களின் மதவெறிக்கு அடித்தளம் அமைத்து தந்தது. அந்நூல் குறித்த மிகக்கூரிய மறுப்புகள் வந்துவிட்டிருந்தன. அதன் செய்திகள் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் அந்நூலின் செய்திகள் இன்றுவரை பேசப்படுகின்றன.

 

நம்பவிரும்புவதை ஏற்பது மானுட உள்ளத்தின் குறைபாடு. இன்னொரு உதாரணம்,இந்தியாவுக்கு தாமஸ் வந்தார் என்பது இன்று துளி ஆதாரம்கூட இல்லாமல் மறுக்கப்பட்டுவிட்டபின்னரும் நூற்றுக்கணக்கான நூல்களில் எழுதப்படுகிறது, கருத்தரங்களுகளில் பேசப்படுகிறது. இந்தியா குறித்தும் காந்தி விவேகானந்தர் போன்றவர்களைக் குறித்தும் ஐரோப்பியர் கொண்டுள்ள முன்முடிவுகளைத் தகர்க்கும் ஆற்றல் இந்திய அறிவுத்துறையினருக்கு உண்மையில் இல்லை, ஏனென்றால் நம் கல்விமுறையே ஐரோப்பிய சிந்தனைகளை மட்டும் சார்ந்து இயங்கும் ஒன்று.

புரி தேரோட்டம் மிகமிகத் தொன்மையானது. மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு உள்ளது. அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு நெருக்கடியைச் சந்தித்தது. திடீரென நவீனப் போக்குவரத்து வசதிகள் உருவாயின. பயணங்க்கள் எளிதாயின. புரி குறித்த செய்திகளும் பெருகின. ஆகவே கூட்டம் பலமடங்கு பெருகியது. அதேசமயம் இன்றுபோல கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சி அன்றைய அரசுக்கோ ராணுவத்திற்கோ இல்லை. ஆகவே தேரோட்டத்தில் நெரிசலும் இறப்பும் பெருகியது. பல அனுபவங்களுக்குப்பின்னரே அரசு நேரடியாக தேரோட்டத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.

 

புரி தேரோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்னும் எண்ணம் நெடுநாட்களாக இருந்தது. சொல்லப்போனால் இந்தியாவிலுள்ள முக்கியமான திருவிழாக்கள் அனைத்திலும் பங்கெடுக்கவேண்டும் என்னும் ஆசை. புரி திருவிழா ஜூலை 4 ஆம் தேதி என தெரிந்ததும் செல்லலாம் என முடிவுசெய்தேன். ரயிலில் செல்வதாக திட்டம். பருவமழை பெய்துகொண்டிருக்கும் நிலம் வழியாகச் செல்லலாம் என்பதனால்.

சென்ற ஜூன் 29 அன்று கிளம்பி சென்னை சென்றோம். அங்கே நண்பர் ஷண்முகம் வீட்டில் பகல் தங்கல். 30 அன்று காலை ராஜகோபாலனும் காளிப்பிரசாத்தும் வந்தனர். சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயம் வரைச் சென்றோம். சென்னைக்குள்ளேயே ஒரு கிராமம். நீர் அறாத ஏரி வற்றிக்கிடந்தது. பல்லவர் காலகட்டத்து ஆலயம். சோழர்காலத்தில் பராந்தக சோழனால் இன்றைய வடிவில் கட்டப்பட்டது.

 

பல்லவநாட்டு ஆலயங்கள் பலவற்றிலும் இங்குள்ளதுபோன்ற கஜபிருஷ்டம் என்னும் நீள்வட்ட வடிவ பின்பக்க அமைப்பு உள்ளது. இங்குள்ள சிற்பங்களும் ஆர்வமூட்டுபவை. குறிப்பாக நரசிம்மரை [இரணியனை கொன்றதனால் உருவான அவருடைய சினத்தை தணிக்கும்பொருட்டு] கால்கீழில் இட்டு நார்நாராகக் கிழிக்கும் சரபேஸ்வரரின் சிற்பம். இன்னொருவரின் கோபத்தை தணிக்க மிக பயனுள்ள வழி அது என்பதை நானும் அறிந்திருக்கிறேன்.

வீணை ஏந்திய வினாயகர், கங்கையும் பார்வதியும் துணையிருக்கும் சிவன் என அழகிய சிற்பங்கள் நிறைந்த தூண்கள் கொண்டது இந்த ஆலயத்தின் முகப்பு மண்டபம். இங்குள்ள உலோகச்சிற்ப அறையில் பல ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய வெண்கலச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரர், பெருமாள் சிலைகள் மிக அழகியவை.

நள்ளிரவு 12 மணிக்கு புவனேஸ்வருக்கு ரயில். மறுநாள் பகல் முழுக்க பயணம். கோதாவரியும் கிருஷ்ணையும் கடந்துசென்றன. சென்னையை ஒட்டி கொஞ்சதூரம் மழையில்லாமல் மண் வரண்டு கிடக்கிறது. அதன்பின் ஈரநிலம். வெயில்சூடிய பசுமை. அன்று இரவு ஒன்பது மணிக்கு புவனேஸ்வர் சென்று சேர்ந்தோம். அங்கே நண்பர்கள் சங்கர்குட்டி, அய்யம்பெருமாள் இருவருமே ரயில்நிலையம் வந்திருந்தார்கள்.

முந்தைய கட்டுரைஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14