‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12

சாத்யகி ஒருகணத்தில் மூண்டுவிட்ட அப்போருக்கு மிக அப்பால் நின்றான். இருபுறமிருந்தும் கரிய நீர்ப்பெருக்குகளென படைவீரர்கள் எழுந்து சென்று அறைந்து குழம்பி கலந்து கொப்பளித்து கொந்தளிக்கும் உடற்பரப்பென ஆயினர். எப்பொருளும் எண்ணிக்கை பெருகுகையில் நீரென மாறும் விந்தையை அப்போர்க்களத்தில் வந்த நாள் முதல் அவன் கண்டிருந்தான். மானுட உடல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாக்கும் அலையை, சுழிப்பை, திளைப்பை, குமிழ்வை, கொந்தளிப்பை காணும்போதெல்லாம் அகம் திடுக்கிடுவான். தன்னை தனித்துக் காணும் ஒன்று உள்ளிருந்து பதைக்கிறது என்று உணர்வான்.

ஆனால் அக்கணம் அவன் கண்முன் நிகழ்ந்ததுபோல் ஒரு காட்சியை முன்பு எண்ணியிருக்கவும் இல்லை. இருபடையினருமே கரிய உடல் கொண்டிருந்தனர். முட்டிக்கொண்ட கணமே வேறுபாடழிந்து ஒற்றைப் பரப்பென்றாயினர். புழுக்கூட்டமென அந்த உடல்கள் நெளிந்தன. எவர் எவரை கொல்கிறார்கள்? எதன் பொருட்டு? திசையெது, இடமெது, உடல் எது, நிகழ்வது எது என ஒன்றும் அறியாத வெறும் அசைவுகளின் வெளி. அது மண்ணில் புழுக்களுக்கு மட்டுமே இயல்வது. பெருந்திரளென இருக்கையிலும், பெருந்திரளென்றிருக்கையில் மட்டுமே பொருள் கொள்ளும் உடல் கொண்டிருக்கையிலும், திரளிலிருக்கிறோம் என்று அறியாத உயிர்த்துளியே புழு. இயற்றுவதென்ன என்று அறியாது இயற்றும் செயல் மட்டுமேயான உடல் அது.

அவன் அங்கு துள்ளிக்கொண்டிருந்த உடல்களைப் பார்த்து உடல் விதிர்த்து கைநீட்டி தேர்த்தட்டை பற்றினான். வயிறு குமட்டி வாயுமிழ வந்தது. பாகன் திரும்பி அவனைப் பார்த்து “ஆணையென்ன, யாதவரே?” என்றான். “ஒன்றுமில்லை” என்று சாத்யகி தலையசைத்தான். “முன்னெழவா?” என்றான் பாகன். முன்னெழுந்து எவருக்கெதிராக போரிடுவது? இப்பெரும் கொந்தளிப்பில் யார் கௌரவர், யார் பாண்டவர் என்று எங்ஙனமறிவது? இது போரல்ல, இது பாதாளத்தின் புழுக்கொப்பளிப்பு. இதில் இறங்குவது நானும் ஒரு புழுவென்றாவது மட்டுமே.

“பின் திரும்புக! என் உடலுக்கும் குருதிக்கும் மீள்க!” என்று சாத்யகி சொன்னான். அச்சொற்கள் அவனிடமிருந்து ஒலி கொள்ளவில்லை. பாகன் திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். மறுபுறம் திருஷ்டத்யும்னன் திகைத்தவன்போல் அந்த உடற்கொப்பளிப்பைப் பார்த்தபடி வெறுமனே நிற்பதை அவன் கண்டான். போர்க்களம் முழுக்க நிரந்திருந்த சாம்பல்சேற்றில் படைவீரர்கள் கால் வழுக்கி விழுந்தனர். விழுந்தவர்கள் மேல் பிறர் விழ, அவர்களைத் தூக்கி அப்பாலிட்டு விழுந்தவர்கள் எழ மேலும் மேலும் விழுந்து புரண்டெழுந்தனர். சில கணங்களுக்குள் கரிய சேற்றில் வெறும் உடல்கள் நெளிந்துகொண்டிருந்தன.

ஒருவரை ஒருவர் வெட்டினர். குத்திப்புரட்டினர். உருவழிந்துவிட்டிருந்த படைக்கலங்கள் விந்தையான நாவுகள் என குருதி தேடின. குருதி விழுந்து அக்கணமே கருஞ்சேற்றில் கலந்தது. தன் தேரை பின்னெடுக்கச் சொல்லவேண்டும் என்று எண்ணி சாத்யகி வாய் திறப்பதற்குள் உடல் உலுக்கி குமட்டி வாயுமிழ்ந்தான். தலையைப் பற்றியபடி தேர்த்தட்டில் அமர்ந்தான். கண்களில் நீர் வழிய உடல் உலுக்கிக்கொண்டே இருக்க குறுகி அமர்ந்திருந்தான்.

கண்களுக்குள் அவ்வுடல் நெளிவுகள் நிறைந்திருந்தன. இவ்வண்ணம்தான் இருக்கும் போலும் பாதாளம். இளமையில் அவன் கதைகளினூடாக அறிந்திருந்தான். மண்ணிலுள்ள உயிர்களில் பறவைகள் தேவருலகுக்கு அணுக்கமானவை. புழுக்கள் பாதாள உலகுக்கு அணுக்கமானவை. வண்ணங்களும் இன்குரல்களும் எடையில்லா விசைகளுமாக வான் நிறைக்கும் பறவைகள்போல் முன்பு இருந்த படைகள் இவை. விழியில்லாத வெறி மட்டுமேயாக உடல் மட்டுமேயாக இதோ நிறைந்துள்ளன.

அவன் தேரை பின்னிழுக்கும்படி கைகாட்டினான். “அரசே!” என்று பாகன் கூற “பின்னெடு! பின்னெடு! தேரை பின்னெடு!” என்று அவன் கூவினான். “நமது படைகள் பின்னெழுக… படைகள் பின்னெழுக!” என்று ஆணையிட்டான். பாகன் “ஆனால்…” என்றான். அவன் கையசைவால் படைகள் பின்னெழுக என ஆணையிட்டான். அவனை நோக்கி புரவியில் வந்த படைத்தலைவன் “யாதவரே, என்ன ஆணை இது?” என்றான். “நமது படைகள் பின்னடையட்டும்… உடனே பின்னடையட்டும்… என் ஆணை எழுக!” என்றான் சாத்யகி. “அது இயல்வதல்ல” என்றான் படைத்தலைவன்.

“இப்போது நமக்கு வேறு வழியில்லை. நம் ஆணை கேட்டு பின்னடைபவர்களே நம்மவர். நாம் ஏதேனும் அடையாளம் சூடிக்கொள்ளாமல் படைமுகம் செல்வது நம்மை நாமே கொல்வதற்கே வழிகோலும்.” படைத்தலைவன் “ஆனால் இனி அது இயல்வதல்ல… நம் படைகள் எதையும் கேட்கப்போவதில்லை” என்றான். “கேட்பவர் பின்னடையட்டும். போரிடுபவர்கள் மடிந்த பின்னர் அவர்கள் எஞ்சுவார்கள்” என்றான் சாத்யகி. படைத்தலைவன் நம்பிக்கையில்லாமல் நோக்கிவிட்டு கைவீசியபடி அகன்றான்.

சாத்யகியின் ஆணைகள் காற்றில் முழங்கின. ஆனால் அவ்வோசை படைகளை சென்றடையவில்லை. அவை வேறொரு வெளியில் புரண்டு கொப்பளித்துக்கொண்டிருந்தன. சாத்யகி படைத்தலைவனிடம் “நம் படையினர் அனைவரும் உலோகப்பொருள் ஒன்றை கழுத்தில் அணிந்துகொள்ளட்டும். உடைந்த உலோகப்பொருளாயினும்… கழுத்தில் உலோகப்பொருள் கொண்டவர்கள் நம்மவர்” என்றான். படைத்தலைவன் அவன் ஆணையை செவிகொண்டதாக காட்டவில்லை.

மறுமுனையில் சல்யர் தேரில் தோன்றினார். இரு கைகளாலும் தன்னைச் சூழ்ந்து வந்த மத்ரநாட்டு காவலர்படைகளுக்கு ஆணையிட்டபடி அவர் யுதிஷ்டிரனை நோக்கி சென்றார். மறு எல்லையில் மைந்தர் சூழ சகுனி சிகண்டியை எதிர்கொண்டார். அந்த உடற்புழுப் பெருக்குக்கு மேலே எழுந்தவைபோல் வந்தன அவர்களுடைய தேர்கள். அவர்கள் வேறொரு வெளியில் நின்றிருப்பார்கள்போல. ஒருகணத்தில் சாத்யகி சீற்றம் கொண்டு “செல்க! செல்க!” என்று பாகனை நோக்கி கூவினான்.

சாத்யகி தன் தேரை யுதிஷ்டிரனை நோக்கி கொண்டுசென்றான். அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் போரில் ஒருவரோடொருவர் தொடுத்துக்கொண்டுவிட்டிருந்தனர். அஸ்வத்தாமனுக்கு கிருதவர்மன் துணை நிற்க அர்ஜுனனுக்கு சுருதகீர்த்தியும் சுருதசேனனும் துணை நின்றனர். யுதிஷ்டிரன் நகுலனாலும் சகதேவனாலும் காக்கப்பட்டு படைகளுக்குப் பின்னால் நின்றிருந்தார். சாத்யகியைக் கண்டதும் யுதிஷ்டிரன் இரு கைகளையும் விரித்து “என்ன நிகழ்கிறது, யாதவனே? போர்க்களமா இது?” என்றார்.

யுதிஷ்டிரனின் உடல் பதறிக்கொண்டிருந்தது. தேரிலிருந்து இறங்க முற்படுபவர்போல தேர்த்தட்டைப் பற்றி அமர்ந்திருந்தார். சாத்யகி அருகணைந்து “அரசே, தங்கள் உளம் பதறுவதை உடல் வெளிக்காட்டலாகாது” என்றான். “இனிமேலும் இங்கு நின்று நடிக்க என்னால் இயலாது. இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பதென்ன? எவர் எவரை கொல்கிறார்கள்? எதன் பொருட்டு இந்தப் போர்? இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன?” என்றார்.

“எப்போதும் இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று சாத்யகி சொன்னான். அதைச் சொன்னதுமே அதன் பொருளின்மை அவனை உறுத்தியது. “போரென்பதே மனிதர்கள் மனிதரைக் கொல்வது மட்டும்தான்” என்று மேலும் பொருளற்ற ஒன்றை சொன்னான். இரு சொற்றொடர்களையும் உடனடியாக பொருளால் இணைத்துக்கொண்டான். “அரசே, முன்பு நிகழ்ந்ததும் இதுதான். மறுபுறத்தில் இருந்தவர்களும் பிறரல்ல. அவர்களை நாம் கொல்வதற்கும் நம்மை நாமே கொன்று கொள்வதற்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை” என்றான்.

“இப்போரில் ஒருவரும் எஞ்சப்போவதில்லை. இவ்வண்ணம் போர் நிகழ்ந்தால் இங்கிருந்து எவரும் வெளிச்செல்லப் போவதில்லை” என்று யுதிஷ்டிரன் கூவினார். “ஆம், எப்போதும் அது அவ்வண்ணமே. இத்தகைய பெரும்போர்களில் எவனாயினும் எஞ்சி வெளிப்போந்தால் என்ன ஆவான்? இத்தனை பொருளில்லாப் பேரழிவின் எண்ணங்களையும் நினைவுகளையும் எவ்வண்ணம் அவன் சுமக்க இயலும்? இங்கு களத்தில் மடிபவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். இங்கிருந்து ஒருவன் பித்தனாகவோ மெய்ஞானியாகவோ மட்டுமே வெளியே செல்ல இயலும்” என்று சாத்யகி சொன்னான்.

யுதிஷ்டிரன் அவனை நீர் நிரம்பிய விரிந்த கண்களுடன் நோக்கினார். பின்னர் பதறும் உடலுடன் தேர்த்தூணைப் பற்றியபடி நிமிர்ந்து எழுந்து மீண்டும் படையை நோக்கிவிட்டு வெறிகொண்டவர்போல் தன் தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டார். “அரசே! அரசே!” என்றான் சாத்யகி. அனிச்சையாக அவன் திரும்பிய கணத்தில் அக்கணம் புதிதாக பார்ப்பதுபோல் குருக்ஷேத்ரத்தைக் கண்டு பற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு தலைக்குள் உலோக ஓசை எழ, நரம்புகள் இறுகி துடிக்க தேர்த்தட்டை பற்றிக்கொண்டு கண்களை மூடினான்.

நெற்றியில் நரம்புகள் இறுகியசைந்தன. கண்களுக்குள் அந்தக் காட்சி தொடர்ந்தது. ஒருவரோடொருவர் விழுந்து புரண்டு குருதியும் சேறுமென நெளிந்துகொண்டிருந்த மனித முகங்கள் அனைத்திலும் விந்தையானதோர் நகைப்பு நிரம்பியிருந்தது. புணரும் விலங்குகளின் இளிப்புபோல. பித்தர்களின் கூட்டுக்களியாட்டுபோல. பற்கள், வலித்த வாய்கள், வெறித்த கண்கள், துறித்த விழியுருளைகள்.

நகுலன் “இவர்கள் நமது படைவீரர்கள்தானா? வேறேதாவது தெய்வங்கள் இவர்கள் உடலை எடுத்துக்கொண்டனவா?” என்றான். சகதேவன் “அவர்கள் மனித உயிருக்குரிய எல்லைகள் அனைத்தையும் கடந்துவிட்டார்கள். பச்சை ஊனுண்டு சேற்றுப் பரப்பில் துயின்று எழுந்திருக்கிறார்கள். ஒருவர்கூட சித்தத்தெளிவுடன் இல்லை” என்றான். “இன்று காலை படைகள் போருக்கெழுந்தபோதே ஒவ்வொரு முகமும் பித்து கொண்டிருப்பதை கண்டேன். பலர் வீண் சொற்கள் எடுத்து பாடினர். ஊளையிட்டு நடனமாடினர். எப்பொருளுமின்றி ஒருவன் வாளெடுத்து தன் சங்கை அறுத்து விழுந்து துடித்து இறப்பதைக்கூட கண்டேன்.”

“என்ன செய்வது?” என்று சாத்யகி கேட்டான். “ஒன்றும் செய்வதற்கில்லை. இனி இவர்களை எந்த ஆணையும் கட்டுப்படுத்தாது. இவர்களை பின்னிழுக்கவும் எவராலும் இயலாது. முழுக்க இறந்து மண் படிவார்கள். அதுவரை வெறுமனே நோக்கி நிற்பதொன்றே நாம் செய்யக்கூடுவது” என்றான் சகதேவன். யுதிஷ்டிரன் “தெய்வங்களே! தெய்வங்களே!” என்று கூவினார்.

மறுபுறம் துரியோதனன் அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த எதையும் அறியாதவன்போல் யானை மீதேறி வந்து பாண்டவப் படைகளை தாக்கினான். பீமன் தன் தேரிலிருந்து கதை சுழற்றி எழுந்து யானையொன்றின் மேலேறி துரியோதனனை அணுகினான். யானைகள் ஒன்றையொன்றூ முட்டி துதிக்கை பிணைத்து சுழன்றபடி களத்தை கலக்க விண்ணில் பறந்தவர்கள்போல் அவர்கள் யானைமேல் நின்றபடி கதைகளால் போர்புரிந்தனர்.

அஸ்வத்தாமன் அர்ஜுனனை அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்தான். திருஷ்டத்யும்னன் நாணொலி எழுப்பியபடி அஸ்வத்தாமனை நோக்கி செல்ல அர்ஜுனனின் தேரை இளைய யாதவர் முன்னெடுத்து வந்தார். சாத்யகியை நோக்கி “கிருதவர்மனை தடுத்து நிறுத்துக!” என்று இளைய யாதவர் ஆணையிட்டார். “என்னால் இங்கு போர் நிகழ்வதாக எண்ண இயலவில்லை, யாதவரே” என்றான் சாத்யகி. “இங்கு உயிருள்ளவர் எவரும் இல்லை என்றே கருதுக… நீ எதிர்கொள்ளவேண்டியது கிருதவர்மனை” என்றார் இளைய யாதவர்.

“படைகள் நடத்திய போர் முடிந்துவிட்டது. இனி இங்கு நிகழ்வது தனிவீரர்கள் நிகழ்த்தும் போர் மட்டுமே. எண்ணுக! மறுதரப்பில் இப்போது பெருவீரர்கள் என ஐவர் எஞ்சியிருக்கிறார்கள். சல்யர் வஞ்சினம் கொண்டு எழுந்திருக்கிறார். அர்ஜுனனின் குருதியுடன் மட்டுமே மீள்வேன் என அறைகூவியிருக்கிறார். அறுதிக் கணத்தின் விசை கொண்டிருக்கிறான் துரியோதனன். அஸ்வத்தாமன் தனது ஆற்றல் மிக்க அம்புகளை இன்னும் எடுக்கவில்லை. கிருதவர்மன் மானுட எல்லைகள் அனைத்தையும் கடந்துவிட்டிருக்கிறான். கிருபர் உளம் சோர்ந்திருக்கிறார். சோர்வடைந்த உள்ளம் ஊசல்போல் மிகைவெறி கொண்டெழும். அவர்களில் ஒருவர் எண்ணினால்கூட நம்மை வென்று இக்களத்தை கைப்பற்றி விடமுடியும்.”

“இத்தருணத்தில் நாம் உளம்தளர்ந்து போரை இழந்தோமெனில் இக்களத்தில் நாம் இறப்புக்கு அனுப்பிய அத்தனை வீரரின் உயிருக்கும் மதிப்பிலாதாகும்” என்றார் இளைய யாதவர். சாத்யகி “வென்றாலும் அவ்வுயிருக்கு எம்மதிப்பும் இல்லை, யாதவரே” என்றான். இளைய யாதவரின் விழிகளில் எந்த உணர்வு மாற்றமும் ஏற்படவில்லை என்பது அவன் அகத்தை திடுக்கிடச் செய்தது. அவன் தேரை திருப்பிக்கொண்டு பாகனிடம் “முன்னெழுக! கிருதவர்மனை எதிர்க்கச் செல்க!” என்று ஆணையிட்டான்.

அவனுடைய தேர் படைமுகப்புக்குச் சென்று கிருதவர்மனை எதிர்கொண்டது. கிருதவர்மன் வெறிகொண்ட நகைப்புடன் தேரில் நின்று அம்புகளால் தன்னைச் சூழ்ந்து போரிட்டுக்கொண்டிருந்த படைவீரர்களை வீழ்த்திக்கொண்டிருந்தான். அவர்கள் எவருக்கும் எந்த அடையாளமும் இருக்கவில்லை. முழுப் படையும் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு பலமுறை சுழன்றுவிட்டமையால் திசைகளும் மயங்கிவிட்டிருந்தன. கிருதவர்மன் வெறுமனே அவர்களை கொன்று வீழ்த்திக்கொண்டிருந்தான்.

அஸ்வத்தாமனும் துரியோதனனும் கிருபரும் சல்யரும் படைவீரர்களை நோக்கி அம்புகளை தொடுப்பதை முற்றாத தவிர்த்து பாண்டவர் தரப்பின் தலைவர்களை மட்டுமே எதிர்கொண்டனர். ஒருவரை ஒருவர் எதிர்கொண்டவர்கள் கண்ணுக்குத் தெரியாத விசையால் களம் திருப்பப்பட்டதுபோல் வேறு எதிரிகளை சந்தித்தனர். கிருபர் சிகண்டியுடன் போர்புரிய சல்யர் அர்ஜுனனை எதிர்கொண்டார். அஸ்வத்தாமனுக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையே போர் நிகழ்ந்துகொண்டிருந்தது.

அம்புகள் வெளிநிறைத்து தெறித்து விழ அவர்களின் தேர்ச்சகடங்களுக்குக் கீழே கரிய சாம்பல் சேற்றுடன் அரைந்து கூழாகி வழுக்கின படைவீரர்களின் உடல்கள். கிருதவர்மன் சாத்யகியை பார்த்துவிட்டிருந்தான். ஒருகணம் கிருதவர்மன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று கண்டு சாத்யகி திகைத்தான். முந்தைய நாள் இரவில் எரியும் பெருஞ்சிதைக்கு அப்பால் நின்று கூத்தாடிய அவனுடைய தோற்றம் நினைவுக்கு வந்தது. அவன் வில் தாழ்ந்தது.

கிருதவர்மன் உரத்த ஓசையுடன் நகைத்து வில்லால் தன் தேர்தூண்களில் மாறி மாறி அறைந்தான். அம்புகளை அவனை நோக்கி செலுத்தியபடி பாகனிடம் “செல்க! முன்செல்க!” என்று ஆணையிட்டான். சாத்யகி கிருதவர்மனை எதிர்கொள்வதற்கு அஞ்சி பாகனிடம் ஆணையேதும் இடாமல் நிற்க பாகனே உணர்வெழுச்சி கொண்டு தேரை முன்னெடுத்துச் சென்றான். அம்புகளால் கிருதவர்மனை எதிர்கொண்டதுமே அத்தருணத்தில் அவனை வெல்ல எவராலும் இயலாது என்பதை சாத்யகி புரிந்துகொண்டான்.

கிருதவர்மனின் அம்புகள் வந்து அவன் தேரை அறைந்து புரவிகளில் இரண்டு கழுத்தறுந்து விழுந்தன. எஞ்சிய மூன்று புரவிகளும் தேரை ஒருபக்கமாக இழுத்துக்கொண்டு சென்றன. தேர்ப்பாகனின் நெஞ்சு கிருதவர்மனின் அம்புகளால் துளைக்கப்பட்டது. அவன் சரிந்து கரிய கொப்பளிப்பில் விழுந்தான். சாத்யகி தேரிலிருந்து பாய்ந்திறங்கி ஓட முயல அவன் தோளிலும் இடையிலும் அம்புகள் வந்து தைத்தன. கவசங்களின் இடுக்கினூடாக தசையில் பட்ட அம்புகள் தீத்தொடுகைபோல் எரிய சாத்யகி கவிழ்ந்து தேர்த்தட்டில் படுத்தான்.

அவன் தலைக்குமேல் அம்புகள் விம்மி விம்மிப் பாய்ந்தன. எழுந்து அவன் வில்லெடுப்பதற்குள் வில்லை கிருதவர்மனின் அம்புகள் அறைந்து உடைத்தன. அவனை அறைந்து வீழ்த்தியது பேரம்பு. கவசம் உடைந்து அவன் தெறித்து பின்னால் சென்றான். களத்தரையில் பரவியிருந்த கரிய சேற்றில் விழுந்தான். கையூன்றி எழுந்து மீண்டும் வழுக்கி விழுந்தபோது சேறுடன் கலந்திருந்த மனித உடல்களை கண்டான். பேருவகையிலென வெறித்து வெண்பல் தெரிய கிடந்தன அவை. சில உடல்கள் வெட்டி வெட்டி இழுத்துக்கொண்டிருந்தன. அறுபட்ட தலை ஒன்றின் வாய் மூடித்திறந்தது.

அவன் எழுந்தபோது கைகள் வழுக்கின. இருமுறை புரண்டு எழுந்தபோது கரிய சேறால் உடல் முழுக்க மூடி அங்கிருந்த உடற்பரப்புகளில் ஒன்றென தானும் மாறிவிட்டிருந்தான். வாய்க்குள் புகுந்த கரியசேறை அவன் துப்பினான். தலைக்குமேல் கிருதவர்மனின் அம்புகள் சென்றன. கிருதவர்மன் கீழே விழுந்துகிடந்த அவனை தேடவில்லை. விழுந்து கிடந்த உடல்களின் நகைப்புகள்போல ஒன்று தன் முகத்திலும் குடியேறிவிட்டதோ என்று அவன் அஞ்சினான். அவ்வெண்ணம் எழுந்ததும் பாய்ந்து ஓடி தன் தேர் நோக்கி சென்றான்.

அவனுக்குப் பின்னால் “நில், யாதவனே! நில்!” என்று கூவிய கிருதவர்மன் அம்புகளைத் தொடுத்தபடி வந்தான். சாத்யகி வெறிகொண்டு தேரை நோக்கி ஓட அவனைக் காக்கும் பொருட்டு அர்ஜுனன் அம்புகளைத் தொடுத்தபடி வந்தான். கிருதவர்மனின் அம்பு அவனை அறைந்து வீழ்த்தியது. இரு உடல்கள் நடுவே புகுந்து அவன் தன்னை ஒளித்துக்கொண்டான்.

கிருதவர்மனின் வெறியை அர்ஜுனனால் எதிர்கொள்ள இயலவில்லை. கிருதவர்மன் அர்ஜுனனை இடைவிடாத அம்புகளால் அடித்தான். அர்ஜுனன் முழு ஆற்றலையும் இழந்து கைதளர்ந்தவன்போல நிற்க அவன் கவசங்கள் உடைந்து தெறிப்பதை தரையில் மல்லாந்து படுத்து கால்களை உதைத்து உடலை பின்னுக்கு இழுத்துச் சென்றபடியே சாத்யகி பார்த்தான். சகதேவன் தேரிலிருந்து இறங்கிவந்து சாத்யகியை தோள் பற்றி இழுத்துத் தூக்கி தன் தேரில் ஏற்றிக்கொண்டான். நகுலன் அம்புகளைத் தொடுத்தபடி அர்ஜுனனின் துணைக்கு சென்றான்.

சாத்யகி தேர்த்தட்டில் அமர்ந்து தன் முகத்திலிருந்து கரிய சேற்றை வழித்து வீசியபடி அர்ஜுனனை நோக்கினான். சகதேவன் “அங்கரை வீழ்த்திய பின்னர் பார்த்தன் அனைத்து ஆற்றலையும் இழந்தவர் போலிருக்கிறார்” என்றான். சாத்யகி உளம் உடைந்து தலையில் கைவைத்து அழத்தொடங்கினான். “என்ன செய்கிறீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு?” என்று சகதேவன் கேட்டான். “என் உளம் சிதறுகிறது. அறிந்தவையும் உணர்ந்தவையும் அனைத்தும் பயனற்றுப் போகும் பித்துவெளி. இங்கு இறந்துவிழ விரும்புகிறேன். இந்தப் பிணச்சேற்றில் ஒன்றாகக் கலந்துவிடுவதன்றி விடுதலை ஏதுமில்லை” என்று சாத்யகி சொன்னான்.

“கண்மூடுங்கள். குப்புற படுத்துக்கொள்ளுங்கள். தேரை பின்னுக்குக் கொண்டுசெல்கிறேன்” என்று சகதேவன் சொன்னான். அர்ஜுனன் தோளில் கிருதவர்மனின் அம்பு ஒன்று தைக்க ஒருகணத்தில் சோர்வு நிறைந்த அர்ஜுனனின் உடலுக்குள்ளிருந்து பிறிதொருவன் எழுந்தான். உறுமியபடி காண்டீபத்தை தூக்கி நிறுத்தி தொடர்ந்து அம்புகளால் அடித்து கிருதவர்மனின் கவசங்களை உடைத்தான். கிருதவர்மனின் புரவிகள் கழுத்தறுந்து விழ அவன் தேரிலிருந்து பாய்ந்து பின்னால் இறங்கி தப்பியோடினான்.

அர்ஜுனன் அம்புகளைத் தொடுத்தபடி அவனுக்குப் பின்னால் தொடர்ந்து துரத்திச்சென்றான். பாய்ந்து கரிய உடற்திரளில் விழுந்து இருமுறை புரண்டெழுந்தபோது கிருதவர்மன் உடலும் முகமுமில்லாதவனாக மாறி அங்கு நெளிந்துகொண்டிருந்த மாபெரும் புழுவொன்றின் ஒரு செதிலென மாறினான். ஒருகணத்தில் சகதேவன் “தெய்வங்களே!” என்று கூவியபடி தலையில் கைவைத்து அமர்ந்தான்.

சாத்யகி அவனை வெறித்து நோக்கினான். “என்னால் தாள இயலவில்லை! இது நரகம்! இங்கு தெய்வங்களன்றி எவரும் சித்தம் கொண்டிருக்க இயலாது. நரகம்! கெடுநரகம்!” என்றபடி இரு கைகளாலும் தலையைப்பற்றி அசைத்தான். பின் தேர்த்தட்டிலேயே வாயுமிழ்ந்து அதன் மேலேயே குப்புற விழுந்து கண்களை இறுக மூடிக்கொண்டான். அவன் உடலில் வலிப்பு எழுந்தது. வலக்கையும் காலும் இழுத்து துடித்துக்கொண்டது.

சாத்யகி அதைப் பார்த்தபோது மெல்ல தன்னிலை மீண்டான். எழுந்து அமர்ந்து அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் போரை பார்த்தான். அர்ஜுனன் தேரை திருப்பிக்கொண்டு சல்யரை நோக்கி செல்ல கிருதவர்மன் எழுந்து தன் தேரை நோக்கி ஓடினான். சாத்யகி பாய்ந்து தன் தேரை நோக்கி ஓடினான். “யாதவரே” என்றான் சகதேவன். “அவன் வெறி தணிந்திருப்பான்… அவனை வென்றாகவேண்டும்… அது எனக்கு அரசர் இட்ட ஆணை” என்றபடி சாத்யகி தேரிலேறிக்கொண்டு அதில் வந்து அமர்ந்த புதிய பாகனிடம் கிருதவர்மனை துரத்திச்செல்லும்படி ஆணையிட்டான்.

முந்தைய கட்டுரைபழைய முகங்கள்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு