‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11

சாத்யகி தேர் மேல் ஏறி நின்று அதை ஓட்டிய புதிய பாகனிடம் “செல்க!” என்றான். தேர் முன்னெழுந்து சென்றபோது அவன் தன்னைத் தொடரும்படி படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவனுடைய கையசைவு விளக்கொளிச் சுழலாக மாறி காற்றில் வடிவுகொள்ள சவுக்கால் சொடுக்கப்பட்ட யானை என அவனுக்குப் பின் அணி நிரந்திருந்த பாண்டவப் படை ஓசையெழுப்பியபடி தொடர்ந்து வரத்தொடங்கியது. அவன் அதன் ஓசைகளை எப்போதும் தன்னைத் தொடரும் பெரும்படையின் முழக்கமென்றே உணர்ந்தான். உளம் கூர்ந்தபோதுதான் அவ்வோசை மிகத் தணிந்தொலிப்பதை அறிந்தான். ஓரிரு கணங்களுக்குள்ளேயே அகம் மீண்டு சென்றமைந்து அலையலையாக எழுந்து தொடரும் ஒரு பெரும்படையையே உணர்ந்தது.

அந்த உள மயக்கை வெல்லும் பொருட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது இருளுக்குள் இருள் கொப்பளிப்புகளென வந்து கொண்டிருந்த படையை பார்த்தான். அதன் அளவையும் விசையையும் கணிக்க இயலவில்லை. பின்னர் அதன் மெய்யான அளவை நோக்கி தன் உள்ளத்தை தணித்துக்கொள்வதைவிட பெரும்படையொன்று தொடருகிறதென்று எண்ணி களம்சென்று நிற்பதே உகந்தது என்று உணர்ந்தான். அவன் முன் படைகள் என எழுந்து நின்றிருந்தது இருளே. அவனுக்குப் பின் படையென பெருகி வந்ததும் அதே இருள். இருளுக்குள் இருள். இருள் அத்தனை உருப்பெருக்கிக் கொள்கிறது.

இத்தனை கூரிருள் இப்பொழுது எவ்வண்ணம் இயலும்? மெய்யாகவே இன்று அரிதாக ஏதோ நிகழவிருக்கிறது. இன்றுடன் ஏதோ ஒன்று முடிவடையப்போகிறது. நிமித்திகர் கூறுவதுபோல் இது துவாபரயுகத்தின் முடிவு நாளாக இருக்கக்கூடும். கலியுகம் எழும் தருணம் இன்று அந்தியில் நிகழக்கூடும். ஆனால் யுகப்பிறவியின் நாளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணக்கு எனச் சொல்வதே நிமித்திகரின் வழி. குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய முதல்நாளே அது யுகப்பிறவி என்றனர் நிமித்திகர். பின் ஒவ்வொரு நாளையும் அவ்வாறே அறிவித்தனர்.

போரின் ஐந்தாம்நாள் மறுநாள் உறுதியாக கலியுகம் பிறக்கும் என்றனர் நிமித்திகர். அன்று யுதிஷ்டிரன் அவையில் பாஞ்சாலத்து நிமித்திகர் குவலயர் பன்னிரு களத்தில் இருந்து சோழியைக் கலைத்து அள்ளி தன் தோல் பைக்குள் போட்டுக்கொண்டு மென்மரப்பட்டையாலான களத்தை மடித்தபோது பீமன் சீற்றத்துடன் “கலியுகம் பிறக்கவிருக்கிறதென்றால் என்ன பொருள்? வெல்லப்போகிறவன் துரியோதனனா?” என்றான். “இல்லை, அவர் மடிவார், சகுனியும் மடிவார்” என்றார் குவலயர்.

“கலியின் மைந்தன் மடிந்த பின்னரா கலியுகம் பிறக்கும்?” என்று பீமன் கேட்டான். “அரசே, விதைக்கப்படும் ஒன்றின் உடல் மடிகிறது. உடலின் நுண்மை முளைத்து பேருருக்கொண்டு எழவும் செய்கிறது. அவர் மடிவார். ஆனால் அவர் இம்மண்ணில் விதைப்பவை பேருருக்கொண்டெழும்” என்றார் குவலயர். “மண்விழைவு, பொன்விழைவு. விழைவுகளை தன் வேரென்றும் விழுதுகளென்றும் கொண்டு எழுந்து நின்றிருக்கும் ஆணவம். இனி இப்புவியை ஆளப்போகும் விசைகள் அவையே.”

யுதிஷ்டிரன் “நிமித்திகரே, கலியுகம் பிறக்கிறதென்றால் அறம் அழிகிறதென்று பொருளா? அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா?” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க! அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன! சிறிதாகின்றவை விசை கொள்கின்றன” என்றார்.

“கிருதயுகத்தில் அறம் மட்டுமே திகழ்ந்ததனால் அறமெனில் என்ன என்று எவரும் அறிந்திருக்கவில்லை. திரேதாயுகத்தில் அறத்தை எதிர்க்கும் தரப்பு உருவாகி வந்தமையால் அறமும் உருவாகியது. துவாபரயுகத்தில் அறமும் அறமின்மையும் நிகராற்றல் கொண்டு பெருகின. கலியுகத்தில் அறமின்மையே பொதுநெறியெனத் திகழும். அறம் தனித்து நிற்பதனாலேயே பேராற்றல் கொள்ளும். எதிர்க்கப் படுவதனாலேயே இரக்கமற்றதாகும். இன்றியமையாதது என்பதனாலேயே நஞ்சென்றும் மாறக்கூடும்.”

“அறம் இனி ஒவ்வொரு கணமும் எண்ணிக்காக்கப்பட வேண்டிய ஒன்றென்றாகும். ஒவ்வொரு தருணத்திலும் ஆயிரம் மடங்கு விசையுடன் ஓங்கி உரைக்கப்படவேண்டியதாகும். ஒவ்வொருவரும் தங்கள் மைந்தருக்கு முதன்மை அறிவென அளிக்கவேண்டியதாகும். இனி அறம் குருதியால் நிலைநாட்டப்படும். அரசே, ஊழிக்காலங்களில் அறமே தெய்வமென்றெழுந்து அனைவரையும் காக்கும். கலியுகம் அறமழியும் யுகமென்று எண்ணவேண்டாம். கலியுகமே அறம் தன் முடிவிலா ஆற்றலை தானே கண்டுகொள்ளும் யுகம்” என்றார் குவலயர்.

முந்தையநாள் இரவு முழுக்க அவன் அந்த இருளசைவைத்தான் கண்களுக்குள் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் துயிலை விழைந்தபோது புரவியிலிருந்து இறங்கி அங்கேயே சேறுகுழம்பிய மண்ணில் அமர்ந்து உடலை அட்டைபோல் சுருட்டி இறுக்கிக்கொண்டான். அவன்மேல் மழை பெய்துகொண்டிருந்தது. முதுகுத்தோல் ஆமையோடுபோல ஆகி மழையை வாங்கியது. உடலுக்குள் எரிந்த உயிரனல் வெம்மை கூட்டியது. சில கணங்களிலேயே அவன் துயிலில் ஆழ்ந்தான்.

அவன் ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். இருண்ட காலை. ஆறு கரிய அலைக்கொந்தளிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் ஓசை சீரான மழையோசை போலிருந்தது. அவனைச் சூழ்ந்திருந்த காடும் இருளுக்குள் இருளசைவாக கொப்பளித்துக்கொண்டிருந்தது. அவன் கடும் விடாய் கொண்டிருந்ந்தான். உடலுக்குள் அனல் எரிந்துகொண்டிருந்தது. நா உலர்ந்து வாய்க்குள் பாம்புச்சட்டைபோல் ஒட்டியிருந்தது. அவன் விழியோரம் அசைவை உணர்ந்து திரும்பியபோது இருளுக்குள் இருந்து கரிய ஆடையுடன் ஓர் உருவம் அவனை நோக்கி வருவதை கண்டான். அதை கூர்ந்து நோக்க நோக்க உரு தெளிவடைந்தது. அவன் அன்னை.

“அன்னையே, நீங்கள் விண்ணேகவில்லையா?” என்று அவன் கூவினான். அன்னை புன்னகையுடன் அருகணைந்தாள். அவள் கையில் வெண்ணிறமான கலம் ஒன்று இருந்தது. “அன்னையே…” என்று அவன் அழைத்தபடி எழப்போனான். அவன் உடலில் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. மண்ணாகவே மாறிவிட்டிருந்தது. அன்னை குனிந்து அந்த வெண்பளிங்குக் கலத்தில் இருந்து வெண்ணிறமான பாலை அவன் வாயில் ஊற்றினாள். அவன் உடலெங்கும் எரிந்த அனல் அணையத் தொடங்கியது. மூச்சுவாங்க அவன் “அன்னையே” என்றான். அன்னை புன்னகையுடன் விலகி மறைந்தாள். அவள் சென்று கரைந்த இருளையே நோக்கிக்கொண்டிருந்தான். இருள் அலைவுகொண்டிருந்தது.

பின்னர் விழித்துக்கொண்டபோது உடல் களைப்பு நீங்கி மீண்டும் பிறந்திருந்தது. உள்ளமும் தெளிவடைந்திருந்தது. எழுந்து கைகளை விரித்து உடலை உதறி நீர்த்துளிகளை சிதறடித்தான். அவன் புரவியும் தலைதாழ்த்தி உடல் சிலிர்த்துக்கொண்டிருக்க துயிலில் ஆழ்ந்திருந்தது. அவன் அணுகியதை உணர்ந்து அது செவியசைத்தது. கால்மாற்றி வால்சுழற்றி பிடரி உதறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன்மேல் ஏறிக்கொண்டபோது தன் நாவில் சுவையை உணர்ந்தான்.

படைமுகப்புக்கு வந்து நின்றபோது சாத்யகி தன் உடலெங்கும் ஈரமென நனைந்து, இடையிலாது நிறைந்து, இரும்பென நிறைகொள்ளவைத்து மண்ணை நோக்கி இழுத்த பெரும்சோர்வை உணர்ந்தான். உள்ளம் அதை சலிப்பென உணர்ந்தது. உள்ளாழம் அதை தனிமையென அறிந்தது. அவன் வில்லை தேர்த்தட்டில் ஊன்றி இடக்கையால் பற்றியபடி வலக்கையை தொடைமேல் படியவைத்து நின்றான். இடதுபக்கம் திருஷ்டத்யும்னன் தேர்த்தட்டில் நிலைகொள்ளாது திரும்பிக்கொண்டிருப்பதை பார்த்தான். காற்று செல்லும் காடென படையெங்கும் அந்த நிலையின்மை நிறைந்திருந்தது. ஒளியின்மையால் அது நிழலசைவென கண்ணுக்குள் குடிகொள்ளும் கருத்துக்கு மட்டுமே தெரிந்தது.

பின்னர் படையெங்கும் மெல்லிய குரல்முழக்கம் எழுந்தது. அது என்னவென்று அவனால் உணரக்கூடவில்லை. சூழ நோக்கியபோது எதுவோ ஒன்று மாறிவிட்டிருந்தது. ஆனால் என்ன என்று அவன் உள்ளம் வாங்கிக்கொள்ளவில்லை. படைகளின் முழக்கம் பெருகிக்கொண்டே வந்தது. என்ன நிகழ்கிறது என அவன் விழியோட்டினான். அவன் முதலில் பார்த்தது இளைய யாதவரைத்தான். அவர் தேர்த்தட்டில் கடிவாளக்கற்றையை இடக்கையால் பற்றி வலக்கையை தொடை மேல் வைத்து ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அர்ஜுனனும் வில்லை ஊன்றி வலக்கையை தொங்கவிட்டு இமைகள் சரிய ஊழ்கநிலைகொண்டு நின்றான்.

விழிதிருப்பியபோதுதான் ஓர் அதிர்வென என்ன நிகழ்கிறதென்பதை சாத்யகி உணர்ந்தான். ஒளிபரவி களம் காட்சி வடிவாகி இருந்தது. கண்களிலிருந்து காட்சிகள் முற்றாக மறைந்து ஒரு முழுநாள் அளவிற்கு பொழுது கடந்திருக்கிறது என்பதை அப்போதுதான் அவன் திகைப்புடன் உணர்ந்தான். படைக்கலங்கள் அனைத்தும் உலோக ஒளி கொண்டிருந்தன. விசை கொண்ட காற்று நீர்த்துளிகளை அறைந்து நீக்கியிருந்தமையால் கழுவப்பட்டதுபோல் தேர்மகுடங்கள் ஒளிகொண்டிருந்தன.

படைவீரர்களை திரும்பிப்பார்த்த கணம் அவன் தன்னை அறியாமலேயே வியப்பொலி எழுப்பி விழிமூடிக்கொண்டான். பாண்டவப் படைவீரர்கள் அனைவருமே கருகிய தோல்துண்டுகளாலோ உருகி உருநெளிந்த உலோகத் துண்டுகளாலோ ஆடையும் கவசங்களும் அணிந்திருந்தனர். மேலிருந்து பொழிந்த மழையிலும் கரி கலந்திருக்கவேண்டும். இரவெலாம் எரிந்த புகைக்கரியைத்தான் மென்மழைச்சாரல் வீழ்த்திக்கொண்டிருந்தது போலும். அங்கிருந்த அனைவருமே கரியில் மூழ்கி எழுந்தவர்கள்போல் தெரிந்தனர். கங்கையில் சேறாடுபவர்கள்போல கரிக்குழம்பால் உடல் மூடியிருந்தனர்.

கரிய மண்ணில் செய்த பாவைகளின் திரள். மண்ணின் ஆழத்திலிருந்து எழுந்து வந்த பாதாள தெய்வங்கள். கரிய சாணியில் செறிந்த கரிய புழுக்கள். அவன் திரும்பி கௌரவப் படையை பார்த்தான். அவர்களும் கரிவடிவங்களாகவே நிறைந்திருந்தனர். கரிய சேறு குமிழியிட்டுக் கொப்பளிப்பதுபோல. தன் உடலை நோக்கினான். அதுவும் கருகிய மரம்போலத்தான் தெரிந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டான். கீழே விழுந்துகொண்டே இருக்கும் உணர்வு எழுந்தது. தேர்த்தூணைப் பற்றிக்கொண்டு நிலைமீண்டான்.

பின்னர் விழிதிறந்து தனது கண்முன் பரவி மறுபுறம் கௌரவப் படைவிளிம்புவரை விரிந்து கிடந்த குருக்ஷேத்ரப் படைநிலத்தை நோக்கினான். அங்கு வந்த கணம் முதல் அதை அவன் உணர்ந்துகொண்டேதான் இருந்தான். எப்போது படைமுகப்புக்கு வருகையிலும் முதலில் அவன் உள்ளம் உணர்வது இரு படைகளுக்கும் நடுவே விரிந்திருக்கும் அந்நிலத்தைத்தான். அங்கிருந்து எண்ணங்கள் எங்கு சென்று எவ்வண்ணம் சுழன்று பறந்தாலும் அதன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். அவனைச் சூழ்ந்து போரிட்டவர்கள் அதில் வீழ்ந்துகொண்டே இருந்தனர். அவனும் பலநூறுமுறை உள்ளத்துள் வீழ்ந்தான். பலநூறு முறை எழுந்தான்.

அது செம்மண் நிலமென முதல் நாள் தோன்றியது. குருதி அருந்தி நா சிவந்த வேங்கை என பின்னர் தோன்றியது. ஓரிரு நாட்களில் கருமை கொண்டது. ஒவ்வொரு நாளிலும் உழுது விரிக்கப்பட்ட மாபெரும் வயலெனவே தன்னை காட்டியது. விதைப்புக்குக் காத்திருக்கும் விடாய் கொண்ட புவி. அங்கு அதன் பின் நிகழ்பவை அனைத்தும் மாபெரும் விதைப்புச் சடங்குதான். அவர்கள் முளைத்தெழுவார்கள். நூறுமேனி பொலிவார்கள். ஒருமுறை நிலம் வயல் என ஒருங்கிவிட்டால் பின்னர் அது என்றென்றும் வயல்தான். உழுபடையில் இருந்து அதற்கு விடுதலை இல்லை.

அன்று ஒளியெழுந்தபோது அவன் விழிகள் இயல்பாகச் சென்று அக்கரிய நிலத்தைத் தொட்டு உழிந்து சுழன்று மீண்டன. கரியில் மூழ்கி நின்றிருந்த இரு படைகளைப் பார்த்தபின் திடுக்கிட்டு மீண்டும் அந்நிலத்தை நோக்கியபோதுதான் முந்தைய நாள் இரவு அங்கு விண்முட்ட எழுந்து அலையாடிய தழலை அவன் நினைவுகூர்ந்தான். அங்கு குவிக்கப்பட்ட அனைத்துமே சாம்பலாகி, கரியாகிவிட்டிருக்கின்றன. கரி என்பது இருளின் பருவடிவம். தீ ஒளிகொண்டது. ஆனால் தான் தொட்ட அனைத்தையும் இருளென்றாக்குகிறது. ஒவ்வொரு பருப்பொருளில் இருந்தும் அது நீரையும் ஒளியையும் உறிஞ்சிக்கொள்கிறது.

சாம்பலும் கரியும் மழையில் ஊறி மண்ணில் படிந்து பரவியிருந்தன. அதன் பின் எந்தக் காலடியும் அந்த மண்ணில் பட்டிருக்கவில்லை. மேலும் ஒளி விரிய அவன் அந்நிலத்தின் விரிவை விழிகளால் தொட்டுத் தொட்டு தாவினான். வெள்ளெலும்புகள் கரிய மண்ணில் புதைந்து கிடந்தன. வற்றிய ஏரியின் அடிச்சேற்றில் மீன்கள்போல. விழிவிலக்கிய கணம் அவை முளைத்தெழும் வெண்ணிறக் குருத்துகள் எனத் தோன்றின.

ஒருமுறை காட்டில் ஒரு யானை இறந்து உடல் மட்கிக் கிடப்பதை பார்த்தான். முதலில் அது ஒரு தணிந்து விழுந்த கூடாரம் என்றே தோன்றியது. நீர் வற்றிய சிறு சேற்றுச்சுனை என பின்னர். அருகணைந்தபோதுகூட சாணிக்குவியலென்றே தோன்றியது. மேலும் நெருங்கிய பின்னரே யானையின் உடல் விழிகள்முன் உருக்கொண்டது. கரிய சேறென்றாகிய அந்தப் பரப்பில் வெள்ளெலும்புகள் பாதி புதைந்து பற்கள்போல் எழுந்து தெரிந்தன. விண்ணுருவ யானை ஒன்று விழுந்து மட்கிய தடம் என்று தெரிந்தது குருக்ஷேத்ரம்.

பொழுது முற்றாகவே விடிந்துவிட்டது. ஒளிக்கதிர்கள் வானின் பிளவினூடாக விலகிச் சரிந்து படைகள் மீது பரவின. அதுவரை இருளுக்குப் பழகியிருந்த கண்கள் அத்தனை விரைவாக வந்து சூழ்ந்த உச்சி வெயிலொளியில் கூசி மூடிக்கொண்டன. கண்களிலிருந்து நீர் வழிய சாத்யகி குனிந்து அந்தக் கரிய மண்ணை பார்த்தான். கண்களைக் கொட்டி தலையை உலுக்கி ஒளிக்கு இமைகளை பழக்கினான். விழிகள் நிலையழியும்போது ஏன் உடல் தள்ளாடுகிறது? உடலை சூழ்ந்திருக்கும் வெளியுடன் இணைத்துக் கட்டியிருப்பவை விழிகளா என்ன?

ஏன் இன்னமும் போர்முரசு ஒலிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. முதல் ஒளிக்கதிரைக் கண்டு சரியாக ஒவ்வொரு முறையும் போர் எழுகையை அறிவித்த நிமித்திகர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பதில் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா? வெறும் உளமயக்கா? தெய்வங்கள் விளையாடுகின்றனவா?

எண்ணியிராக் கணத்தில் போர்முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. படைகள் குறுகி நோக்குமாடங்கள் மிகத் தொலைவில் என ஆகிவிட்டிருந்தமையால் அவை காட்டுக்குள் பள்ளத்தாக்கில் நின்றிருக்கும் யானையின் பிளிறல்கள்போல் ஒலித்தன. அவற்றை செவிகூர்ந்தாலும் கேட்க முடியாதென்று தோன்றியது. குருக்ஷேத்ரத்தின் எல்லைகள் மிக அகன்று நின்றிருக்க நடுவே சிறு விழவுக்குழுவென தெரிந்தன இரு படைகளும்.

படைவீரர்கள் அனைவருமே முரசொலியை கேட்டுவிட்டிருந்தனர். ஆயினும் எவருமே அவற்றை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. நீர்த்துளிகள்போல இரு படைகளுமே தங்கள் உடலுக்குள் தாங்களே நின்று ததும்பின. தங்கள் உடலையே எல்லையெனக் கொண்டு அதிர்ந்தன. இரு தரப்பினருக்கும் நடுவே குருக்ஷேத்ரப் போர்க்களம் கரிய சதுப்பென விரிந்துகிடந்தது. நோயுற்று உலர்ந்து வரியோடி வெடித்த கரிய உதடுகளைப்போல.

ஒவ்வொருநாளும் அங்கு வந்து நோக்குகையில் முந்தைய நாள் போரில் புண்பட்டோரையும் இறந்தோரையும் எடுத்துச் சென்ற வண்டிகளின் தடங்களும் பல்லாயிரம் காலடித் தடங்களுமே சாத்யகியின் கண்களுக்குப்படும். பின்னர் முற்புலரியில் வீசிய காற்று படியச்செய்த மென்புழுதி விரிப்புக்குமேல் கருக்கிருளில் வந்தமர்ந்து மேய்ந்து சென்ற சிறுபறவைகளின் காலடிப் பதிவுகள் பரவியிருக்கும். புரியா மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவை. ஆனால் அன்று உறையிலிருந்து உருவி வெளியே எடுக்கப்பட்ட வாளெனக் கிடந்தது குருக்ஷேத்ர நிலம். தெய்வங்களின் காலடிகூட அங்கில்லை.

அங்கு வந்த அனைத்து தெய்வங்களும் அந்தப் பெரும் எரிகொடையால் நிறைவுகொண்டிருக்கக்கூடும். ஒரு கையளவு குருதி நூறு கையளவு நெய்யவிக்கு நிகர். ஓர் உயிர்ப்பலி ஏழு வேதமந்திரங்களுக்கு நிகர். எனில் இவ்வேள்வி பாரதவர்ஷத்தில் இதுவரை நிகழ்ந்த வேள்விகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தாலும் அதைவிடப் பெரிது. வேள்வியால் இறைவர்கள் பெருகுகிறார்கள். அசுரர்கள் தேவராகிறார்கள். இப்பெருவேள்வியால் பெருகிய தேவர்கள் எவர்? இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர்? இத்தனை காலமாக எங்கிருந்தார்கள்? இத்தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள் போலும்.

இது நூறுமேனி பொலியும் நிலம். உழுது புரட்டிவிட்ட வயல். அரிதாக சில வயல்களில் மிகைவிளைச்சல் நிகழ்வதை அவன் கண்டதுண்டு. அவற்றைப் பார்க்க மக்கள் திரண்டு செல்வார்கள். அச்சமும் ஆவலும் பெருக அப்பால் நின்று நோக்குவார்கள். நெல்நாற்றுகள் கரும்புத் தோகையென எழுந்து செறிந்திருக்கும். வாழைக்குலைபோல் கதிர்கள் முற்றி எடை தாளாமல் நிலம் படிந்து கிடக்கும். பசுமையே கருமையென்று விழி மயக்கும்.

அத்தகைய பெருவிளைச்சல் தெய்வங்களின் தீச்சொல்லால் எழுவது என்பார்கள். குலத்திற்கு அதனால் தீங்குதான் விளையுமென்று வேளாண் குடியினர் எண்ணினர். அதிலிருந்து ஒரு மணி நெல்கூட இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. கால்படாது அறுவடை செய்து கழிபடாது நெல் பிரித்தெடுத்து தெய்வங்களுக்கு படைப்பார்கள். முழு அன்னமும் காடுகளுக்குள் பறவைகளுக்கு வீசப்படும். ஒரு மணிகூட மானுடன் உடலுக்குள் செல்லலாகாது. ஒருமுறை மிகைவிளைச்சல் அளித்த நிலம் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தரிசென கிடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அங்கு உழுது விதைக்கப்படும். நேற்றிரவு இக்களத்திலெழுந்த தழல் ஒரு பெருவிளைச்சல்.

போர் அறிவிப்புக்குப் பின்னரும் படைகள் எழவில்லை. எங்கும் ஓசைகள் என எதுவும் இல்லை. முழக்கங்களும் இல்லை. சேமக்கலங்களையும் உலோகக் கலங்களையும் முழக்கி முரசுகளின் ஓசையை மீளவும் எழுப்பினர். அதன் பின்னரும் இரு படையினரும் ஒருவரையொருவர் நோக்கியபடி அவ்வெல்லையை கடக்க இயலாதவர்களாக நின்றிருந்தார்கள். சாத்யகி தன் உடலுக்குள் பிறிதொருவன் திமிறுவதைப்போல் உணர்ந்தான். “செல்க! செல்க!” ஆனால் அச்சொற்கள் வெளியே எழவில்லை. “செல்க! செல்க!” அதைச் சொல்வது அவனல்ல.

கரிய நிலப்பரப்பு நீர்மை கொண்டதுபோல் அலைபுரண்டது. அதன் மேல் ஓர் உருவம் நடந்து வருவதை அவன் கண்டான். கரிய ஆடை அணிந்திருந்தது. கையில் ஒரு சிறு மண்கலத்தை ஏந்தியிருந்தது. தொலைவில் வெண்புகைச்சுருள் என தோன்றி அருகணையுந்தோறும் துலங்கியது. அதன் நீண்ட ஆடை காற்றில் மெல்ல அலையடித்தது. அதை அவன் அடையாளம் கண்டான். அவன் அன்னை. “அன்னையே” என அவன் குரலின்றிக் கூவினான். “அன்னையே, நீங்கள் விண்புகவில்லையா இன்னும்?”

அன்னைக்குப் பின்னால் இன்னொரு உருவைக் கண்டான். அது அவன் சிற்றன்னை. அவளுக்குப் பின் மேலும் அன்னையர். அனைவரும் ஒன்றுபோலவே ஆடையணிந்திருந்தார்கள். மிக மெல்ல காற்றில் கொண்டுவரப்படும் முகில்களைப்போல் வந்தனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த கலம் கரிய நிறம் கொண்டிருந்தது. அதில் நிறைந்திருந்தது என்ன? ஒருதுளி ததும்பாமல் கொண்டுசெல்லும்பொருட்டா அவர்கள் அத்தனை மெல்ல செல்கிறார்கள்?

“அன்னையே! அன்னையே!” என்று சாத்யகி கூவினான். அவர்கள் அவன் குரலை கேட்கவில்லை. அவனை பார்க்கவுமில்லை. அவர்கள் அவன்முன் நிரந்து களத்தை முற்றாக மறைத்து கடந்துசென்றனர். அவனருகே சென்ற அன்னைக்கு அவன் மூதன்னையின் முகம் இருந்தது. “அன்னையே, இங்கே எப்படி வந்தீர்கள்? எங்குளீர்கள்?” அன்னையின் கலத்தில் இருப்பது என்ன? அவன் தேரிலிருந்து இறங்கி அன்னையை நோக்கி ஓடமுயன்றபோது காதுக்குள் ஒலிப்பறை வெடித்ததுபோல் கேட்டது. நிலைதடுமாறி அவன் தேர்த்தூணை பற்றிக்கொண்டான்.

அந்த மாபெரும் நீர்க்குமிழி வெடித்தது. பாண்டவப் படை போர்க்கூச்சலுடன் பெருகிச்சென்று கௌரவப் படையை அறைந்தது. அதே கணத்தில் கௌரவப் படையும் எழுந்து வந்து பாண்டவப் படையுடன் மோதியது. சிலகணங்களில் குருக்ஷேத்ரப் போர்நிலம் முற்றாக மறைந்தது. அவனுக்கு நன்கு பழகிய சாவின் அலறல்களும் போர்க்கூச்சல்களும் படைக்கல ஓசைகளும் எழுந்தன.

ஆனால் அவன் உடல் உள்ளத்துடன் தொடர்பில்லாததுபோல் குளிர்ந்து சிலையென்று நின்றிருந்தது. அவன் வேறேங்கோ இருந்து என அதை நோக்கிக்கொண்டிருந்தான்.

முந்தைய கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -16
அடுத்த கட்டுரைவீரமான்: ஒரு சந்திப்பு