‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10

திருஷ்டத்யும்னன் சென்று சேர்ந்தபோது ஏற்கெனவே யுதிஷ்டிரனின் அவை கூடியிருந்தது. அவனுக்காக பிறர் காத்திருப்பது தெரிந்தது. முகப்பில் நின்றிருந்த சுருதகீர்த்தி தலைவணங்கி கையசைவால் அவையமரும்படி காட்டினான். பாடிவீடுகளென அமைந்திருந்த குடில்களும் கூடாரங்களும் முற்றாக எரிந்தகன்று கரிப்படிவங்களென மாறியிருந்த அந்நிலத்தில் முன்பிருந்த அவைக்கூடத்திற்கு உள்ளேயே கற்களையும் அடுமனைக்கலங்களையும் போட்டு அவை அமைக்கப்பட்டிருந்தது. திருஷ்டத்யும்னன் ஒருகணத்திற்குள் தன்னுடல் அந்த கரிக்கோட்டு வடிவிலிருந்து அங்கிருந்த பழைய அவையை எவ்வண்ணம் பெருக்கி எடுத்துக்கொண்டது என்பதை எண்ணி வியந்தான். இடைநாழியில் நடப்பதையும் வாயிலில் நுழைவதையும்கூட அவன் உடல் இயல்பாகவே நடித்தது.

நுழைந்ததும் தலைவணங்கி தனக்கு காட்டப்பட்ட பீடத்தில் அமர்ந்தான். யுதிஷ்டிரன் தலைகுனிந்து கைகளை மடியில் கோத்து தோள்கள் தளர அமர்ந்திருந்தார். அவனருகே அமர்ந்திருந்த சிகண்டி நிலம் நோக்கி தாடியை நீவிக்கொண்டிருந்தார். அவன் நுழையும்போது சகதேவன் பேசிக்கொண்டிருந்தான். பேச்சை நிறுத்திவிட்டு திருஷ்டத்யும்னனிடம் “பாஞ்சாலரே, படைசூழ்கை குறித்துதான் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் இன்று பெருஞ்சூழ்கை அமைத்திருப்பதாக காவல்மாடத்தில் ஏறிநின்றபோது தெரிந்தது. முதலில் அவர்கள் படைகொண்டு எழுவார்கள் என்றே நான் எண்ணவில்லை. பெருஞ்சூழ்கை அமைப்பது மேலும் விந்தையாக உள்ளது” என்றான்.

திருஷ்டத்யும்னன் “பெருஞ்சூழ்கை அமைப்பது அவர்களின் அச்சத்தை காட்டுகிறது. அன்றி அவர்களின் மிகைநம்பிக்கைக்கான சான்று அது. இன்று நம்மைச் சூழ்ந்து வென்றுவிடலாம் என்று எண்ணுகிறார்கள்” என்றான். “அத்தனை எண்ணிக்கையில் அவர்களிடம் வீரர்கள் இருக்கிறார்களா என்ன?” என்று சகதேவன் கேட்டான். “நம்மிடமும் வீரர்கள் இல்லை. அளவு மிகக் குறைந்திருக்கிறது. ஆனால் இருசாராரிடமும் இருக்கும் வேறுபாடு இப்போது இருக்கும் இதே நிலையில்தான் போர் தொடங்கும் நாளிலும் இருந்தது. அன்றிருந்த நம்பிக்கை அவர்களிடம் இன்றும் இருப்பதற்கு எல்லா அடிப்படையும் உள்ளது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

நகுலன் “அவர்களை நாம் அன்றும் புரிந்துகொள்ளவில்லை. இன்றும் புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்களை மிகையாகவோ குறைத்தோதான் மதிப்பிடுகிறோம்” என்றான். பீமன் உரத்த குரலில் “புரிந்துகொள்வதற்கென ஏதுமில்லை. இன்றும் அவன் குன்றா விசையுடன் போர்க்களத்திற்கு வருவான். இன்றும் வென்று மீள்வேன் என்றே நம்புவான். இன்றுடன் இப்போர் இங்கு முடியும். அவன் உடல் பிளந்து குருதி காண்பேன். அது அத்தனை தெய்வங்களுக்கும் தெரிந்த ஒன்று. இங்கிருக்கும் படைவீரர்கள் அனைவரும் உள்ளுணர்ந்த ஒன்று. ஆனால் அவனுக்கு மட்டும் அது தெரியாது. அவனிடம் எவரும் அதை சொல்லி விளங்க வைக்கவும் இயலாது” என்றான்.

யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் “அது அசுர இயல்பு” என்றார். பின்னர் “தேவர்கள் அனைவரும் அசுரர்களாக இருந்தவர்களே. அவி பெற்று அவர்கள் கனிந்து ஒளிகொள்கிறார்கள். வேர்களில் துவர்ப்பது கனியிலும் தேனிலும் இனிப்பதுபோல்” என்றார். “நாம் என்ன சூழ்கை அமைப்பது, பாஞ்சாலரே? இங்கு பேசிக்கொண்டிருப்பது அதைப்பற்றியே” என்று நகுலன் கேட்டான். “இத்தருணத்திற்குரியது விசையும் விரைவும் கொண்ட சிறிய சூழ்கை. கிரௌஞ்சம் உகந்தது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “முன்பும் நாம் கிரௌஞ்சசூழ்கை அமைத்துள்ளோம்” என்றான் சகதேவன். “ஆம், அன்று நமது கிரௌஞ்சம் பேருருக்கொண்டதாக இருந்தது. இன்று அது சிட்டுக்குருவியாக சுருங்கிவிட்டிருக்கிறது. அதுவும் நன்றே. சிறிதாகும் தோறும் விசை பெருகும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

யுதிஷ்டிரன் “நாம் அச்சூழ்கையையே அமைப்போம். ஆனால் இறுதிக்கணம் வரை அங்கிருந்து நன்னோக்கம் கொண்ட அழைப்பு வருமென்று எதிர்பார்ப்போம். அங்கு அஸ்வத்தாமனும் கிருபரும் இருக்கிறார்கள். சல்யரும்கூட சற்றே உளஞ்சூழும் திறன் கொண்டவரே. இதற்குப் பின்னரும் போரெனில் இருபுறமும் எவரும் எஞ்சமாட்டார்கள் என்று அவர்கள் உணர்ந்து அவனிடம் சொல்லக்கூடும்” என்றார். சலிப்புடன் கைவீசி “வென்றான் எனினும்கூட ஆள்வதற்கு படைகள் தேவை. களத்திலிருந்து மீள்வதென்றால் உடன் செல்வதற்கு காவலர்களாவது தேவை. அதை அவனிடம் ஒருவராவது சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.

பீமன் இகழ்ச்சியுடன் உதடு வளைய “இதுவரை எவரும் அதை சொல்லியிருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா? பலநூறு முறை கூறியிருப்பார்கள். இத்தருணத்தில்கூட அங்கு மத்ரரோ கிருபரோ அஸ்வத்தாமனோ அதை அவனிடம் உரைத்துக்கொண்டிருப்பார்கள். அவன் உள்ளத்திற்கு அது சென்று சேராது. ஐயமே தேவையில்லை” என்றான். பின்னர் “என்னிடம் என் வஞ்சத்தைக் கைவிடும்பொருட்டு அறிவுரை கூறுவது போன்றது அது. பாறையை யானை என எண்ணி ஆணையிடுவதற்கு நிகர்” என்றான்.

“இவ்வளவுக்குப் பின் எதைச் சொல்லி அவர் நம்முடன் ஒத்துப்போக முடியும்?” என்று சகதேவன் கேட்டான். “நாம் அவனுக்கு அஸ்தினபுரியை அளிப்போம். நமக்குரிய பாதி நாட்டையும் இந்திரப்பிரஸ்தத்தையும் மட்டும் நமக்கு அவன் அளித்தால் போதும். போரை இருதரப்பிலும் நிகர்நிலை என்றே முடித்துக்கொள்வோம். அவன் ஆணவம் புண்படாது அனைத்தையும் செய்வோம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். நகுலன் “தன் மைந்தரையும் உடன்பிறந்தாரையும் தோழரையும் இழந்தபின் அவர் எப்படி அதில் அமைய முடியும்?” என்றான்.

“எனில் அவன் கோருவதென்ன என்று கேட்போம்” என்றார் யுதிஷ்டிரன். “இப்போதுகூட நான் அவனிடமிருந்து எதையும் வென்று எடுத்துக்கொள்ள விழையவில்லை.” பீமன் “இன்று இக்குரல் எழுவதற்குப் பெயர் தோல்வி. இவ்வுணர்வை அச்சம் என்பார்கள்” என்றான். யுதிஷ்டிரன் “நான் அஞ்சவில்லை என நீ அறிவாய், இளையோனே” என்றார். “ஆம், ஆனால் நாம் எவ்வண்ணம் இருக்கிறோம் என்பதை நாம் மட்டுமே அறிவோம்” என்றான் பீமன். மேலே சொல்வதற்கில்லை என யுதிஷ்டிரன் கைகளை விரித்தார். பீமன் “இந்தப் போர் இப்போது அடைவனவற்றின் பொருட்டு நிகழவில்லை, இழந்தவற்றின் பொருட்டு நிகழ்கிறது” என்றான்.

யுதிஷ்டிரன் “அதை நானும் அறிந்திருக்கிறேன். ஆயினும்கூட எனது நம்பிக்கையை பொத்திக் காத்துக்கொள்ளவே விழைகிறேன். நல்லது நிகழட்டும்” என்றார். திருஷ்டத்யும்னன் “சூழ்கை அமைப்பதற்கான ஆணையை கோருகிறேன். கணக்குகளின்படி இப்பொழுது விடிந்துவிட்டது. ஆனால் இன்னும் இருளே நீடிக்கிறது. இரு நாழிகையில் வெளிச்சம் எழக்கூடும் என்கிறார்கள். எனில் அதுவே போர் தொடங்கும் தருணம்” என்றான். “அதற்குள் சூழ்கையை அமைத்துவிடமுடியுமா? என்றார் யுதிஷ்டிரன். “இந்தச் சூழ்கைக்கு அரைநாழிகைகூட தேவையில்லை. நானே நேரில் சென்று சொல்லி திரட்டுமளவுக்கே நமது படைகள் உள்ளன. நேற்று அந்தியில் ஒரு நாழிகைக்குள் நமது முழுப் படையையும் நோக்கி சுற்றி வந்துவிட்டேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டு “இங்கே போர் மானுடரால் நிகழ்த்தப்படுவதல்ல என்று தோன்றுகிறது” என்றார். “நேற்று அந்தியில் நமது படைவீரர்கள் பச்சைக் குருதி வழியும் ஊனை உண்டிருக்கிறார்கள். பொழியும் மழையில் சேற்றில் துயின்றிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஆடையின்றி இடை மறைக்க அடுகலங்களை உடைத்து எடுத்த உலோகத் துண்டுகளை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாதாளத்திலிருந்து எழுந்து வந்த விந்தையான உருவங்கள்போல தோன்றுகிறார்கள்” என்று திருஷ்டத்யும்னன் கூறினான்.

யுதிஷ்டிரன் மீண்டும் பெருமூச்சுவிட்டு இரு கைகளையும் தூக்கி “போர் தொடங்குகையிலேயே நான் உணர்ந்த ஒன்று இது. இங்கு நிகழ்வன எவ்வகையிலும் நம் கையில் இல்லை. ஒவ்வொரு நாளும் அது உறுதிப்பட்டபடியே வந்தது. இன்று ஏதோ தொன்மையான நூலில் நம்ப முடியாத கதையொன்றை படிப்பது போலத்தான் தோன்றுகிறது. நானே இங்கு வெளிப்பட்டது என் வடிவில் அல்ல. இவற்றுடன் தொடர்பே அற்றவனாகவே என்னை உள்ளே உணர்கிறேன்” என்றார். “இது ஒரு பெருக்கு. நான் இதில் ஒரு துளி” என்றபின் எழுந்து “ஆகுக!” என்று சொல்லி வெளியே சென்றார்.

அங்கு அவையென ஏதுமில்லை என்றபோதும் அவருடைய திரும்புதலும் நடையும் அவை நிகழ்த்தி மீளும் அரசனுக்கு இணையாக இருந்தன. அவர் உடல் வழியாகவே அங்கே அரண்மனையின் அரசுசூழவை உருவாகி வந்தது. தோரணவாயில் இருந்த வழியினூடாகச் செல்லும்போது முன்பு அங்கிருந்த பாடிவீட்டின் உயரம் குறைந்த வாயிலுக்கு குனிந்து செல்பவர் போலவே அவர் உடல் வளைந்ததைக் கண்டு திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான்.

அவை அவர் நீங்கியதும் மெல்லிய அசைவினூடாக பிறிதொன்றாகியது. திருஷ்டத்யும்னன் இளைய யாதவரை நோக்கினான். அவர் வழக்கம்போல் புன்னகைக்கிறாரா என ஐயம் தோன்றும் உதடுகளுடன், எதை நோக்குகிறார் என்று தெரியாத கண்களுடன் அவையிலிருந்தார். அர்ஜுனன் எழுந்து அவரிடம் “செல்வோம்” என சொன்னதும் எழுந்து திருஷ்டத்யும்னனிடம் புன்னகைத்து “களம் சூழ்க!” என்றார். திருஷ்டத்யும்னன் “இன்றுடன் இப்போர் நிறைவடையும் அல்லவா?” என்றான். அவர் அதே புன்னகையுடன் “ஆம், இன்றுடன் முழுமை கொள்ளும்” என்றார்.

“இன்று எவர் வெல்லக்கூடும்?’’ என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். வேண்டுமென்றே அதை கேட்கிறோம் என அவன் உணர்ந்திருந்தான். தன்மீதே கடும் வஞ்சம்கொள்ளும் தருணங்கள் மானுட உள்ளத்தில் உண்டு. “இக்களத்தினில் எல்லா போர்களிலும் நாமே வென்றோம். இன்றும் நாமே வெல்வோம்” என்று இளைய யாதவர் கூறினார். திருஷ்டத்யும்னன் அம்முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவரிடம் தான் கேட்க விரும்புவதும் மறுமொழியாக எண்ணுவதும் அச்சொற்கள் அல்ல என்று தோன்றியது.

சுருதகீர்த்தி அருகில் வந்து வணங்கி “தங்கள் தேர் ஒருங்கியுள்ளது, அரசே” என்றான். இளைய யாதவர் புன்னகைத்து “நன்று” என்றபின் அவன் தோளை தட்டிவிட்டு அவையிலிருந்து வெளியே சென்றார். அவையென மண்ணில் படிந்திருந்த கரிவடிவத்தை அவர் கால்களோ உடலோ அறியவில்லை. மிக இயல்பாக சுவர்களையும் தடைகளையும் ஊடுருவிக் கடந்து அப்பால் சென்றார். முன்பு அங்கு பாடிவீட்டின் சுவர்களும் கதவுகளும் இருந்தபோதுகூட அவர் அவ்வண்ணமேதான் தோன்றினார் எனும் வியப்பை திருஷ்டத்யும்னன் அடைந்தான்.

திருஷ்டத்யும்னன் வெளிவந்து நின்றபோது அவன் படைத்துணைவர்கள் அருகே வந்து அணிவகுத்து நின்றனர். அவர்கள் எழுவரையும் நோக்கியபோது முதல்நாள் போரில் அவ்வண்ணம் தன் முன் அணிவகுத்து நின்ற எழுபது படைத்தலைவர்களை அவன் நினைவுகூர்ந்தான். அவர்களில் ஒருவர்கூட எஞ்சவில்லை. ஒவ்வொரு நாளும் அவர்கள் களம்படுந்தோறும் வேறு படைத்தலைவர்கள் அங்கு வந்து அமைந்தனர். இன்றிருப்பவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் அவ்வாறு படைத்தலைவர்களாக அமைந்தவர்கள். ஆனால் அவர்களின் முகமும் உடலசைவுகளும் மாறவில்லை. அவ்வெழுவரே என்றுமிருந்தவர்கள்போல் தோன்றினார்கள். விலகும் நீரை வரும் நீர் நிறைப்பதுபோல்.

அவன் “நாம் கிரௌஞ்சசூழ்கை அமைக்கவிருக்கிறோம்” என்றான். அவர்கள் விழிகளில் எதுவும் தெரியவில்லை. “இன்னும் சற்று நேரத்தில் ஒளி எழுந்துவிடும். அதற்குள் கிரௌஞ்சம் களத்தில் நின்றிருக்கவேண்டும். அதன் அலகென இளைய யாதவரும் அர்ஜுனனும் முன்னால் நிற்கட்டும்” என்றான். “இரு கால்களாக சாத்யகியும் நானும் அமைவோம். உடன் வேல்படையினர் இருக்கட்டும். சிறகுகளாக பீமசேனனும் சிகண்டியும் நிலைகொள்ளட்டும். கிரௌஞ்சத்தின் சிறகுகளில் விசைமிக்க தேர்கள் நிற்கட்டும்.”

“அவர்களின் படைசூழ்கையோடு நமது படைசூழ்கை எவ்வகையிலும் இசையவில்லையே” என்று ஒருவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை பார்த்தான். அவன் பெயர் நினைவில் எழவில்லை. அதை அவன் குழப்பத்திலிருந்து உணர்ந்துகொண்டு அவன் “என் பெயர் ராகு. பாஞ்சாலத்தின் துர்வாச குடியினன்” என்றான். “நீ படைசூழ்கையை எங்கு பயின்றாய்?” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் நூல்களில் பயின்றேன்” என்றான். “நீ ஷத்ரியனா?” என்று திருஷ்டத்யும்னன் மீண்டும் கேட்டான். “அல்ல, நான் சூத்திரன். இங்கு போருக்கு ஏவலனாகவே வந்தேன். சிதைக்காவலனாகவும் எல்லைக்காவலனாகவும் பணியாற்றினேன். ஷத்ரியர்கள் இறந்து எஞ்சிய வெற்றிடத்தை நாங்கள் நிரப்பினோம்.”

அவன் புன்னகைத்து “அவ்வாறாக எங்களுக்கும் வரலாற்றில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றான். திருஷ்டத்யும்னனும் புன்னகைத்து “இறப்பதற்கான வாய்ப்பு” என்றான். “அனைவரும்தான் இறக்கிறார்கள். ஆனால் ஷத்ரியர்கள் மட்டுமே இறந்த இடத்தில் ஒரு சொல்லை எஞ்சவிட்டுச் செல்கிறார்கள். அவ்வாறு விட்டுச்செல்லும் சொற்கள் பெருகி வரவிருக்கும் தலைமுறைக்கு அணிகளும் பீடங்களும் ஊர்திகளும் ஆகின்றன” என்று அவன் சொன்னான். “நாங்கள் பூச்சிகள்போல வீணாக இறந்து தடமின்றி மறைந்துகொண்டிருந்தோம். இதோ ஷத்ரியர்களுக்குரிய சாவை நாங்களும் அடைகிறோம்.”

“நீ படைசூழ்கை எங்கு பயின்றாய்?” என்று திருஷ்டத்யும்னன் மீண்டும் கேட்டான். “காவியங்களில்… காவியங்களையும் நான் நேரடியாக பயின்றதில்லை. அவற்றை கூத்து நிகழ்த்தும் சூதர்கள் நாவிலிருந்து அறிந்திருக்கிறேன். நான் அவற்றை அறிந்திருக்கிறேன் என்பதே இக்களத்திற்கு வந்தபின்னர்தான் புரிந்தது” என்றான். திருஷ்டத்யும்னன் “நன்று. நானும் இக்களத்திற்கு வந்தபின்னர்தான் படைசூழ்கையை கற்றுக்கொண்டேன். ஏன் போரையே கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்” என்றான். ராகு புன்னகைத்தான்.

ராகுவின் இளைய தோற்றத்தை நோக்கியபின் “உனது குடி எங்குள்ளது?” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் வடபாஞ்சாலத்தில் கோமதி நதிக்கரையில் வாழும் சிற்றூரன்” என அவன் சொன்னான். “உனது குடியில் எவர் எஞ்சுகிறாரோ அவர் தங்கள் குடிக்குரிய எல்லையை கடப்பர். இப்போருடன் எல்லாத் தடைகளும் அறுபடும். வீரம் ஒன்றே ஷத்ரிய குலமென்று ஆகும்” என்றான். அவன் புன்னகைத்தான்.

திருஷ்டத்யும்னன் மேலும் அவனை நோக்கியபின் “நீ களம்படமாட்டாய். களம்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன எனினும் களம்படமாட்டாய் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான். “களம்படினும் அது ஒரு பொருட்டல்ல. இங்கு வந்து நின்று போரிட்டு களம்பட்டேன் என்ற செய்தி என் குலத்துக்கு சென்று சேரும். அது போதும்” என்று ராகு சொன்னான்.

திருஷ்டத்யும்னன் அவன் தோளில் கைவைத்து “இளையவனே, சூழ்கையின் தேவை ஒன்றின்பொருட்டே. படைவீரர்கள் தாங்கள் தனியர்கள் அல்ல என்றும் ஒற்றைப் பெருவடிவமாக திரண்டெழுந்து நிற்கிறோம் என்றும் உணரவேண்டும். படைசூழ்கையின் வடிவம் ஒவ்வொருவரின் உள்ளத்திற்கும் செல்கையில் ஒவ்வொருவரும் அப்படைசூழ்கை அளவுக்கே பெரிதாகிறார்கள். இதற்கப்பால் களத்தில் படைசூழ்கையால் ஆவது ஒன்றுமில்லை. இன்று அவர்கள் பெருகி விரிய விரும்புகிறார்கள். நாம் விடுதலைகொண்டு காற்றில் பறந்தெழ உன்னுகிறோம்” என்றான்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ஆணைகளை திருஷ்டத்யும்னன் அளித்தான். அவர்கள் தலைவணங்கி தங்கள் புரவிகளிலேறி பாண்டவப் படைகளுக்குள் பரவினார்கள். தன் புரவியிலமர்ந்தபடி அவன் தனது ஆணை அகல்விளக்குச் சுடர்களாக மாறிப் பரவுவதை கண்டான். எரிவிண்மீன்கள் இருண்ட வானில் செந்நிறக் கோடு கிழித்துச் செல்வதைப்போல் படைகளுக்கு நடுவே அவை உதிர்ந்தன. அவை விழுந்த இடங்களில் பற்றிக்கொண்ட பிற சுடர்கள் எரிந்தன. அச்சுடர்கள் இருண்ட நீரலைகளில் மிதப்பதுபோல இருளில் சுழன்றும் அலைந்தும் தத்தளித்தும் பரவின.

சில கணங்களிலேயே திருஷ்டத்யும்னன் கிரௌஞ்சம் உருக்கொள்வதை கண்டான். அது அவன் உளத்தோற்றமா என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே விளக்குகளாலான பேருருவ கிரௌஞ்சம் ஒன்று எழுந்தது. விண்மீன்களை விழிதொட்டு வடிவங்களாக்கும் பயிற்சி போன்றது அது. விண்மீன்கள் இடம் பெயர்வதுபோல் விளக்குகள் மெல்ல உருமாறி கிரௌஞ்சம் சிறகுகளை விரித்து தலையை நீட்டியது. மெல்ல எழுந்து குருக்ஷேத்ரத்தின் முகப்பு நோக்கி செல்லத்தொடங்கியது.

திருஷ்டத்யும்னன் தன் குடில் இருந்த இடத்திற்கு சென்றான். அங்கு அவனுக்கான கவசங்கள் காத்திருந்தன. அவன் நின்றதும் ஏவலர்கள் அவற்றை அவனுக்கு பூட்டத் தொடங்கினார்கள். அவற்றின் மென்மையான மந்தணமான உலோக ஓசைகளை கேட்டுக்கொண்டிருந்தான். கூரிய ஊதல்களின் ஒலிகள் இணைந்து கிரௌஞ்சம் அமைந்துவிட்டதை அவனுக்கு கூறின. கையசைத்து “களத்தில் அமைக!” என்று அவன் ஆணையிட்டான். அருகே நின்றிருந்த காவலனின் கையில் இருந்த விளக்குச்சுழற்சியாக அவன் ஆணை ஒளிவடிவு கொண்டது.

கவசங்கள் அணிந்து முடித்ததும் புரவியில் ஏறி கிரௌஞ்சத்தின் வலக்காலின் முகப்புக்குச் சென்றான். கிரௌஞ்சத்தின் இடக்காலென நின்றிருந்த சாத்யகி துயிலில் இருப்பதுபோல் தன் தேரில் நின்றிருந்தான். தேர்த்தட்டில் வில்லுடன் நின்றபோது திருஷ்டத்யும்னன் மிகத் தெளிவாக ஒன்றை உணர்ந்தான். இனி ஒருபோதும் அவன் ஒரு புலரியை காணப்போவதில்லை. இன்றுடன் அனைத்தும் முடிந்தன. ஆம் இன்று! இன்று இன்று இன்று என்று அவன் உளம் நுண்சொல் உரைத்துக்கொண்டிருந்தது.

படைமுகப்பில் நின்று எதிரே பெருகி நிறைந்திருந்த கௌரவப் படையை அவன் பார்த்தான். இருளில் அகல் விளக்குகளாகத் தெரிந்தன இரு படைகளும். நோக்கியிருக்கவே அனைத்துச் சுடர்களும் நடுங்க காற்று விசையுடன் வீசி நீர்த்துளிகளை அள்ளி அப்பால் கொண்டு சென்றது. சுடர்கள் அணைந்து படை இன்மை என ஆனது. மழை முற்றாக நின்று காற்று துருத்தி முகப்பில் இருந்து என முகத்தில் அறைந்தது. கவசங்களில் இருந்த இரும்புச் சங்கிலிகள்கூட அசைந்து மணியோசை எழுப்ப வைக்கும் விசைகொண்டிருந்தது காற்று.

சற்று நேரத்திலேயே தாடியும் தலை மயிர்களும் உலர்ந்து ஆடைகளிலிருந்த ஈரம் அகன்றது. புரவிகள் மயிர் உலர்ந்து ஈரத்திலிருந்து விடுதலை பெற்று கால்களை மாற்றி வைத்து தலை சிலுப்பி கனைப்போசை எழுப்பின. காற்று மேலும் வலுத்து மழையீரத்தை ஊதி அகற்றியது. அவ்விசையில் படைவீரர் ஒருவரை ஒருவர் தோள்பற்றி நிற்கும்படி உந்தி உலைத்தது. கேடயங்கள் திரும்பிக்கொண்டு பிற கேடயங்களில் முட்ட மணியோசைகள் எழுந்தன. தூக்கிய வாள்களையே காற்று ஒன்றோடொன்று முட்டச்செய்தது. வாள்களின் கூர்களால் கிழிக்கப்பட்டு பட்டுத்துணி கிழிபடும் ஓசை எழுப்பியது. அனைத்து வேல் முனைகளிலும் காற்றின் நாகச்சீறல் எழுந்தது.

மதகு தாழ்த்தி தடுத்ததுபோல் காற்றின் ஒழுக்கு நின்றது. ஒவ்வொரு ஓசையாக அமைந்தது. புரவிகளின் பிடரிமயிர்கள்கூட அசைவிழந்தன. திருஷ்டத்யும்னன் களம் முழுக்க நிறைந்திருந்த அந்த அமைதியை உணர்ந்தபடி அதுவரை காற்று எழுப்பிக்கொண்டிருந்த முழக்கத்தை உள்ளத்தால் கேட்டான். அவன் இயல்பாக திரும்பியபோது தனக்கு முன்னால் நின்றிருந்த படை வீரனின் வேல்முனை நீர்த்துளிபோல் ஒளிகொண்டிருப்பதை கண்டான். விழிதிருப்பி நோக்கியபோது அப்பால் ஒரு தேர்முகடின் வளைவு மாபெரும் நீர்க்குமிழிபோல் மின்னியது.

தொட்டுத் தொட்டு அவன் விழிகள் அலைந்தன. அனைத்து வேல்முனைகளும் ஒளி சூடின. வளைவுகள் எங்கும் மெருகுகள் தோன்றின. புரவியொன்று கனைத்தது. சற்று நேரத்தில் அங்கிருந்த அனைத்து உலோகப்பரப்புகளும் மின்னின. அவர்கள் அனைவருமே திரும்பி கிழக்கு திசையை நோக்கிக்கொண்டிருந்தனர். “புலரி! புலரி!” என்று அவன் உள்ளம் ஊக்கம் கொண்டது. இனிய புலரி! பிறிதொன்றிலாத புலரி! சென்றது பொருளிழக்க எஞ்சியவை அனைத்தும் புதுப்பொருள் கொள்ள எழும் புலரி.

முகில்கள் பிளந்து கோட்டையொன்று வாயில் திறந்துகொண்டது. உள்ளிருந்து ஒளிரும் முழுவட்டமென கதிரவன் தோன்றினான். ஒளி பெருகி செங்குத்தாக தூண்கள்போல மண்மேல் விழுந்தது. அது விழுந்த இடத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பற்றி எரிவதுபோல் வெண்தழல் கொண்டன. ஒளிச்சட்டங்களில் நீர்த்துளிகளும் காற்றின் பிசிர்களும் கனல்பொறிகளென அலைந்தன. வெள்ளிபோல் வெண்ணிற வழிவெனத் தோன்றியது கதிரொளி. திருஷ்டத்யும்னன் “ஆம்! இன்று! இன்று! இன்று!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

முந்தைய கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -15
அடுத்த கட்டுரைநட்பெதிரி – கடிதம்