‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8


சகுனி “நான் கவசங்கள் அணிந்துகொள்ள வேண்டும்… பொழுதாகிறது” என்றார். அஸ்வத்தாமன் கிளம்ப கிருதவர்மன் அந்தப் பாவையை நோக்கியபடி நின்றான். துரியோதனன் அப்பால் ஒரு கல்மேல் அமர அவனுக்கு கால்குறடுகளை அணிவிக்கத் தொடங்கினர் ஏவலர். கிருதவர்மன் திரும்பி துரியோதனனிடம் “நோக்க நோக்க அது நம்மை நோக்குகிறது” என்றான். துரியோதனன் “ஆம்” என்றான். பித்து எழுந்த கண்களுடன் கிருதவர்மன் “அவன் முகம் தெரிகிறது எனக்கு” என்றான். துரியோதனன் நகைத்து “உமது முகம் தெரியத்தொடங்கும் இனி” என்றான். கிருதவர்மன் “சிலைகளைச் செய்யும் ஒரே உயிரினம் மானுடன்…” என்றபின் திரும்பி துரியோதனனின் அருகே வந்து “அரசே, எப்போது மானுடன் சிலைகளை செய்யத் தொடங்கியிருப்பான்?” என்றான்.

துரியோதனன் மீசையை நீவிக்கொண்டு வெறுமனே கிருதவர்மனை நோக்கிக்கொண்டிருக்க அவன் கொந்தளிப்புடன் சொன்னான் “சிலைகளை செய்யத் தொடங்கும்போதே மானுடன் தெய்வங்களை அறிந்துவிட்டான். அவன் தன்னை நீரில் கண்டு தன் பாவையை வடித்தபோது அக்கலையில் முழுமை அடைந்துவிட்டான்.” திரும்பி அந்த இரும்புப் பாவையை நோக்கியபின் “காலம் முழுக்க நிகழ்வது ஒன்றே. மானுடனுக்கும் அவன் சமைக்கும் சிலைகளுக்குமான ஆடல்” என்றான். அவன் விந்தையான பித்துக்கு ஆளானவன் போலிருந்தான். “அரசே, சொல்க! இதை சமைத்தவர் யார்? இதை அவர்கள் எவ்வாறு அமைத்தனர்?”

துரியோதனன் எழுந்து சென்று அந்தப் பாவை அருகே நின்றான். அவனிடமும் அந்தப் பித்து படர்ந்தது. நண்பனை தொடுவதுபோல் அந்தப் பாவையின் இரும்புத் தோளில் தன் கையை வைத்து நின்றபடி சொன்னான் “இச்சிலையை யவன சிற்பியான சைரசர் என்பவர் என்பொருட்டு படைத்தார். இது எவ்வண்ணம் இருக்கவேண்டும் என அவரிடம் நான் ஏழு இரவுகள் பேசியிருக்கிறேன். அவர் உருவாக்கி அளித்த பதினெட்டு வடிவுகளில் இருந்து இதை தெரிவுசெய்தேன். இதன் தோள்களை மட்டும் எட்டுமுறை மாற்றியமைத்தேன். விழிகளை பதினாறுமுறை. நூற்றுக்கணக்கான தருணங்களை என் நினைவிலிருந்து தெரிவுசெய்து தொகுத்து இதை உருவகித்தேன்.”

இதை ஏன் உருவாக்கினேன் என்ற எண்ணம் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றின்பொருட்டு என எண்ணிக்கொள்வேன். இதனால் என் ஆற்றல் மிகுந்ததா? என் உளவிசை கூர்கொண்டதா? ஏன் என்று எனக்கு இப்போது தெரியவில்லை. இந்தக் களத்தில் இதை நான் பயின்றது எவ்வகையிலேனும் பயன்படுகிறதா என்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் பதினைந்து ஆண்டுகளாக இது எனக்கு உற்ற தோழனாக உள்ளது. அங்கரிடமும் தம்பியரிடமும் பேசாதவற்றைக்கூட இதனிடம் நான் பேசியிருக்கிறேன்.

பெரும்பாலான இரவுகளில் என் மஞ்சத்தறைக்குள் இது உடனிருந்திருக்கிறது. நள்ளிரவில் எப்போதேனும் துயில் விழித்துக்கொண்டால் எழுந்து இதை அணுகி விளையாடிக்கொண்டிருப்பேன். இளையோன் முதலில் இதை ஒரு வேடிக்கைப் பொருளாகவே பார்த்தான். பின்னர் அவனுக்கு இதில் ஒவ்வாமை உருவாயிற்று. அவனுக்கு இணையான ஓர் இடத்தை இதற்கு அளிக்கிறேன் என எண்ணினான் போலும். பிறகெப்போதோ ஒருமுறை நான் இதனுடன் பேசிக்கொண்டிருப்பதை துயிலிலிருந்து விழித்து எழுந்து அமர்ந்து அவன் பார்த்தான். அதன்பின் அவன் இதன் மேலிருந்த உளவிலக்கத்தை தவிர்த்துக்கொண்டான்.

ஒவ்வொரு முறையும் இதை அணுகுகையில் அவன் எனக்கிணையான மதிப்பையும் வணக்கத்தையும் இதற்கும் அளிப்பதை நான் பார்த்தேன். “இளையோனே, நீ இதை எவ்வாறு கருதுகிறாய்?” என்று கேட்டேன். “தங்கள் பிறிதொரு உருவம், மூத்தவரே” என்று சொன்னான். எனக்கு திகைப்பாக இருந்தது. “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டேன். “எண்ணி எண்ணி நீங்கள் சென்றடைந்த வடிவம்… இதை நோக்கி நோக்கி இதற்குள் குடியேறிவிட்டிருக்கிறீர்கள்.” நான் சினத்துடன் உறுமி அவனை அகற்றினேன். அதன்பின் இயல்பாகப் பேசுவதுபோல் பிறரிடம் அதைப்பற்றி கேட்டேன். ஒவ்வொருவரும் அதை என்னுடைய மாற்றுரு எனக் கருதுவதை கண்டேன்.

அது எனக்கு உளக்கொந்தளிப்பை அளித்தது. இதை கொண்டுசென்று இருளறைக்குள் போடச்சொன்னேன். ஆனால் இதை எண்ணாமல் இருக்க என்னால் இயலவில்லை. எண்ணி எண்ணி சில நாட்களிலேயே இதை எனக்குள் உருமாற்றிக்கொண்டேன். மீண்டும் இதை கொண்டுவந்தபோது இதன் முகம் நோக்கி உளம் மகிழும்படி மாறிவிட்டிருந்தேன். சில தருணங்களில் என் அறைக்குள் நான் நுழையும்போது நான் ஏற்கெனவே அங்கிருப்பதாக உணர்ந்து திடுக்கிடுவேன். என் அறைவிட்டு நீங்குகையில் என்னை அறைக்குள் விட்டுவிட்டுச் செல்வதாக உணர்ந்து ஆழ்மகிழ்வடைவேன்.

என் இளையோர் இதனுடன் மிக அணுக்கமாக ஆனார்கள். துச்சாதனன் இதனுடன் பேசவும் தொடங்கினான். சில தருணங்களில் நான் இல்லாதபோது அவன் இந்தப் பாவை அருகே படுத்து துயில்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். “தாங்கள் இச்சிலையில் முழுமையாக இருப்பு கொண்டிருக்கிறீர்கள், மூத்தவரே… அதை இதனருகே படுத்து கண்மூடுகையில் உணர்கிறேன்” என்றான். “உங்கள் உணர்வுகள் மாறிக்கொண்டிருக்கின்றன. இது மாறாதது. என்றும் நான் அகத்தே உணரும் என் மூத்தவரின் இயல்புடன் சிலையாகிவிட்டிருக்கிறது.”

“அன்று இரவில் என்ன பார்த்தாய்?” என்று நான் ஒருமுறை அவனிடம் கேட்டேன். “இருளில் விழித்தெழுந்தபோது அறைக்குள் நால்வர் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருப்பதாக தோன்றியது. துயில் மயக்கத்தில் நெடுநேரம் என்ன நிகழ்கிறது என்று என்னால் உணர முடியவில்லை. பின்னர் உங்கள் இருவரின் நிழல்களுடன் நீங்கள் இருப்பதை அறிந்தேன்” என்றான். “அதனால் என்ன?” என்று நான் கேட்டேன். ஆனால் நான் உள்ளூர பதற்றம்கொள்ளத் தொடங்கியிருந்தேன். “மூத்தவரே, அதன் பின்னரும் நெடுநேரம் உங்கள் நிழல் என்று நான் எண்ணியிருந்தது இந்தப் பாவையின் நிழலை” என்றான்.

இது எவ்வண்ணம் எனது உருக்கொண்டது என்பது பெரிய விந்தைதான். உண்மையில் இதை அவன் உருவாகவே செய்ய நான் ஆணையிட்டிருந்தேன். அன்று அந்தக் கொடுங்கனவு எழுந்த இரவில் உடல் நிறையும்படி குடித்து நிலையழிந்து உளம் எரிந்த வெம்மையில் அம்மயக்கை மீட்டுமீட்டு மீண்டும் மீண்டும் அருந்தி இரவெல்லாம் பித்தனைப்போல் இருந்தேன். புலரி எழுந்தபோது அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்திருந்தேன். என் விழிகளை தூக்கவே இயலவில்லை. கைகளும் கால்களும் தனித்தனியாக கழன்று நான் சிதைந்து கிடப்பதைப்போல் உணர்ந்தேன். என் மேல் பெய்துகொண்டிருந்த வெயிலொளியை அமுதென உணர்ந்தேன். கண்களை மூடியபோது உள்ளே குருதிக் கொப்பளிப்பென ஒளி தெரிந்தது.

அதன் பின்னரே நான் துயிலத் தொடங்கினேன். உப்பரிகையில் தூங்கிய என்னைத் தூக்கி மஞ்சத்திற்கு கொண்டுசென்று படுக்க வைத்திருக்கிறார்கள். அன்று பகலும் இரவும் துயின்று விழித்துக்கொண்டபோது என் உள்ளம் தெளிந்திருந்தது. நீராடி புத்தாடை அணிந்து அவை மேடைக்கு வந்தபோது அமைச்சர்களும் குடித்தலைவர்களும் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய நிமிர்வும் புன்னகையும் கொண்ட தோற்றம் அவர்களை குழப்புவதைக் கண்டேன். நான் பலநாட்களாக ஆதுரசாலையில் கிடந்தேன். அங்கிருந்து மீண்ட பின்னரும் நிலைகுலைந்து இருளறைக்குள் கிடந்தேன். அதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

நான் மீளவே மாட்டேன் என அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். அவர்கள் என்னை அவ்வாறே எதிர்பார்த்திருக்கவும் கூடும். அது அவர்களுக்குள் நுழைந்த எதையோ ஒன்றை நிறைவு செய்திருக்கிறது. புன்னகையுடன் அணிகொண்டு வந்த என்னைக் கண்டதும் அவர்கள் கொண்ட தத்தளிப்பு பின்னர் ஏமாற்றம் என மாறியது. அன்று முதல் முறையாக அரியணை ஏறுபவன் போலவும் ஆயிரம் ஆண்டுகள் அரியணை அமர்ந்து பழகியவன் போலவும் அவை நடத்தத் தொடங்கினேன். நெறி உசாவி தீர்ப்பளித்தேன். அவைமுறைமைகளை கடைபிடித்தேன். முழுதமைந்த அரசன் என்று இருந்தேன்.

நான் அவை அமர்வதில் எப்போதுமே மகிழ்பவன். அவ்வாறு இருக்கையில் சிறந்த சொற்களும் சிரிப்பும் எழுபவன். மெல்ல மெல்ல அவை என்னைப் போலவே மலரத் தொடங்குவதை கண்டேன். எனது அந்நிலையே இயல்பானதென்றும் எனக்குரியதென்றும் அவர்கள் எண்ணத்தலைப்பட்டனர். அவை முடிந்து செல்கையில் அவர்கள் என்னிடம் எதிர்பார்த்து வந்ததே அதுதான் என்பதுபோல் ஆயினர். என்னை வாழ்த்தியபடி நகருக்குள் சென்றனர். அன்று நான் அவை நீங்கும்போது முழங்கிய முரசு என் பெயர் சொல்லி வாழ்த்துவதை கேட்டேன்.

அவை முடிந்து தனியறைக்கு நடந்தபோது என் உடன்வந்த அமைச்சர்களிடம் மக்களின் உளநிலையென்ன என்று கேட்டு அறிந்து வரும்படி சொன்னேன். பாண்டவர்கள் நகர்நீங்கியபோது மக்கள் அழுது அரற்றியபடி பெருகி உடன்சென்றனர். அவர்கள் நுழைந்து மறைந்த காட்டின் எல்லையில் நின்று விழிநீர் உகுத்தனர். ஏராளமான முதியவர்களும் சான்றோர்களும் அங்கிருந்து இனிமேல் அஸ்தினபுரிக்கு திரும்பப்போவதில்லை என்று வஞ்சினம் உரைத்திருந்தனர். நாட்கள் கடந்துகொண்டிருந்தன. எனினும் பெரும்பாலானவர்கள் திரும்பவில்லை. அவர்கள் அங்கிருப்பதனால் அஸ்தினபுரி கைவிடப்பட்டதுபோல் களையிழந்திருந்தது.

என்ன நிகழ்கிறது என்பதை ஒவ்வொரு நாழிகைக்கும் எனக்கு அறிவிக்கச் சொல்லிவிட்டு என் அறைக்கு திரும்பினேன். “நாம் நம் நகரத்தின் முழு வெறுப்பையும் ஈட்டிக்கொண்டிருக்கிறோம், மூத்தவரே” என்று சுபாகு சொன்னான். “அவ்வெறுப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியதில்லை. அந்த அம்புகள் நம்மை தேடிவிட்டு வேறெங்கோ சென்றுவிடட்டும்” என்றேன். “நாம் இயற்ற வேண்டியதென்ன?” என்று துர்மதன் கேட்டான். “நாம் இந்நகரத்தின் அரசர்கள். அவ்வாறே பிறந்தோம், அவ்வாறே திகழ்வோம்” என்று நான் சொன்னேன்.

“நாம் அரசர்கள் என நாம் நம்பினால் இந்நகரும் அதை ஏற்றுக்கொள்ளும். யானையூரக் கற்றுக்கொள்ளும்போது முதிய பாகன் உனக்கு கற்றுத்தந்ததை உணர்ந்திருப்பாய். யானையை அணுகுபவன் தன்னை யானையின் தலைவன் என்று எண்ணவேண்டும். சற்றேனும் அஞ்சினான் என்றால், துளியேனும் உளம் குன்றினான் என்றால் யானை அவனை துதிக்கையால் தட்டி அப்பால் தள்ளிவிடும்” என்றேன். நான் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எப்போதும் என் உணர்வுகளை புரிந்துகொள்பவர்கள்.

அன்றும் தொடர்ந்த ஒரு வார காலமும் ஒவ்வொரு நாளும் முழுதணிக்கோலத்தில் தன்னிறைந்த புன்னகையுடன் அவைக்கு வந்தேன். அவை நாடி வந்தவர்களுக்கு உரிய தீர்ப்புகளை அளித்தேன். அரசநிகழ்வுகளில் ஆணைகளை இட்டேன். ஒவ்வொருநாள் கடக்கையிலும் என் குடிகள் அவையில் இயல்பாக பேசலானார்கள். குடித்தலைவர் ஒருமுறை சொன்னார், ஒருபோதும் அத்தனை பொலிவுடன் அந்த அவை திகழ்ந்ததில்லை என்று. இன்னொருவர் எழுந்து “யயாதியும் குருவும் ஹஸ்தியும் இவ்வண்ணம்தான் அரசுவீற்றிருக்கவேண்டும்” என்றார்.

“இந்திரன் அவையில் அமர்ந்திருப்பதுபோல் தோன்றுகிறார் அரசர்” என்று குடிகள் பேசிச்செல்வதை கேட்டதாக சுபாகு சொன்னான். “ஆனால் இந்திரனும் ஓர் அசுரனே” என்று ஓர் அந்தணர் சொன்னார். “சிறந்த அரசர்கள் அனைவரும் சற்றேனும் அசுரக் குருதி உடையவர்களே” என்று பிறிதொரு முதியவர் அதற்கு மறுமொழி சொன்னார். “அவிகள் அசுரனை இந்திரனாக்குகின்றன. குடிகளின் வாழ்த்துக்களால் அரசன் தெய்வமென்று அமைகிறான்.”

பதினைந்து நாட்களில் அஸ்தினபுரி இயல்பு நிலைக்கு மீண்டது. ஒரு மாதத்திற்குள் அஸ்தினபுரியின் எல்லைக்கு அப்பால் கான்எல்லையில் வாழ்ந்த அனைவரும் திரும்பி வந்தனர். அனைவரும் திரும்பி வந்தனரா என்று உசாவி அறியும்படி ஒற்றர்களை அனுப்பினேன். திரும்பாதவர் ஒரே ஒருவர். அவர் பெயர் சாந்தர். இறுதியாக அவரும் ஆறு முதியவர்களும் காட்டுக்குள் தங்கியிருந்தனர். இறுதிநாள் காலை பிற அறுவரும் நகருக்குத் திரும்ப முடிவெடுத்தனர். அந்த முதியவர் மட்டும் அதற்கு உடன்படவில்லை. ஆனால் திரும்புபவர்களை அவர் தடுக்கவும் இல்லை.

திரும்பி வரவிழைந்தவர்களில் ஒருவர் “மக்கள் ஏற்றுக்கொண்டால் அவன் அரசன். அவனை ஏற்றுக்கொண்டமைக்கான பழியை மக்கள் அடையவேண்டியதில்லை. ஏனெனில் மக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை. நாம் குடிகளே. அரசனை அமரச்செய்பவை தெய்வங்கள்தான்” என்றார். கசப்புடன் புன்னகைத்து “உரிய சொற்களை கண்டடைந்துவிட்டீர். நன்று” என்று மட்டும் சாந்தர் சொன்னார்.

அவர்களில் ஒருவர் “நீங்கள் பிறரைவிட மேலானவர் என எண்ணுகிறீர்கள். உங்களை பிறர் புகழவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். இது வெறும் ஆணவம் மட்டுமே” என்றார். “ஆம், அறத்தில் நிற்றலுக்கும் ஓர் ஆணவம் தேவைதான்” என்று சாந்தர் சொன்னார். “நீங்கள் தனிமைப்படுவீர்கள்” என்றார் ஒருவர். “ஆம், தனிமைப்படாமல் எவரும் தன்னறத்தை நிகழ்த்த இயலாது” என்றார் சாந்தர்.

அவர்களில் ஒருவர் என் ஒற்றர். சாந்தர் என்னும் அந்த அந்தணரை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அனைவரும் நகருக்குள் வந்துவிட்ட பின்னர் ஒருநாள் புலரியில் எவரும் அறியாமல் அவரை தேடிச்சென்றேன். அவர் அங்கிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டதை அறிந்தேன். ஒற்றர்களை அனுப்பி அவரை தேடிக்கண்டடைந்தேன். காட்டுக்குள் கங்கைக்கரையில் நாணல்புதர்கள் நடுவே ஒரு சிறு குடில் அமைத்து அங்கு தங்கியிருந்தார். நான் அங்கு சென்றபோது அவர் வடக்கு நோக்கி அமர்ந்து உயிர்விட ஒருங்கிக்கொண்டிருந்தார்.

நான் அவரை வணங்கி “உத்தமரே, என் செயல்களுக்கான முழுப் பழியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எவ்வகையிலும் அது என் குடிகள் மேல் விழலாகாதென்று தெய்வங்களிடம் வேண்டுகிறேன். தாங்கள் என் நகருக்கு திரும்ப வேண்டும்” என்றேன். “அரசனே, நீ ஆற்றிய பிழை முற்றாக உன் நகரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று ஆகக்கூடாது. ஒருவரேனும் அதற்கு எதிராக உயிர்விட்டாக வேண்டும். அதன் பொருட்டே இங்கு வந்துள்ளேன்” என்றார்.

“அந்தணரே, தன்னலம் எண்ணியும், சலிப்புற்றும், அறத்தில் நம்பிக்கை இழந்தும், நோன்புகளின் கடுமைக்கு அஞ்சியும் திரும்பி வந்த பல்லாயிரம் பேரைவிட மேலானவர் அனைத்தையும் கடந்து இங்கு வந்து அமர்ந்திருக்கும் தனியராகிய தாங்கள். தாங்கள் திரும்பி வரவில்லையெனில் அஸ்தினபுரி என்னை கைவிட்டதென்றே பொருள். தங்களுக்கு எந்தப் பிழையீடு செய்தால் தாங்கள் திரும்பி வருவீர்கள்?” என்று கேட்டேன்.

“எதன் பொருட்டும் அல்ல. மூன்று தெய்வங்களும் வந்து ஆணையிட்டாலும் இனி உன்னை அரசன் என்றும் அஸ்தினபுரியை நாடென்றும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது” என்றார் சாந்தர். “பழிசூழ்ந்த அந்த நகரம் குருதியால் கழுவப்படும். உன்னை ஏற்றுக்கொண்ட அக்குடிகள் தங்கள் மைந்தரையும் தந்தையரையும் கொழுநரையும் களத்தில் இழப்பார்கள். இல்லத்துக்கு ஒருவரேனும் அறத்தெய்வத்திற்கு குருதிபலி கொடுப்பார்கள். நூறாயிரம் முறை நெஞ்சுதொட்டு விழிநீர்விட்டு தங்களின் உறுதி குலைந்த இத்தருணத்திற்காக வருந்துவார்கள். அதை இப்போதே நான் காண்கிறேன்.”

“நான் அவனால் கொல்லப்படுவேன் என்று வஞ்சினம் உரைத்துள்ளான்” என்றேன். அவர் சொல்லப்போவதென்ன என்று அறிந்திருந்தேன். என்றாலும் எதிர்பார்ப்பில் என் நெஞ்சு அதிர்ந்துகொண்டிருந்தது. “ஆம், அதில் ஐயமில்லை. நீ அவனால் கொல்லப்பட்டாக வேண்டும். வீரச்சாவு அல்ல, சிறுமைகொண்டு களம்படுவாய். உன் உடன்பிறந்தார் நூற்றுவரும் அவன் கதையால் சிதைக்கப்படுவார்கள். உன் கொடுவழியில் ஒருவர் கூட எஞ்சமாட்டார்கள். இல்லையேல் இங்கு நிகழ்வன எதற்கும் பொருளிலாது போகும்” என்று அவர் சொன்னார்.

“ஆனால் ஒரு கதைப்போரில் அவனால் என்னை வெல்ல இயலாது” என்று நான் சொன்னேன். “அவன் உன்னை வெல்வான். அதற்குரிய ஆற்றல் அனைத்தையும் அவன் உன்னிடமிருந்தே பெற்றுக்கொள்வான்” என்றார். வேறெங்கோ எதையோ பார்ப்பவர்போல் அவர் விழிகள் வெறித்திருந்தன. “உன்னைத் தின்று தன் தசைகளை வளர்ப்பான். பின் உன் உடல் பிளந்து குருதி காண்பான்” என்றார். நான் அவர்மேல் கடுஞ்சினம் கொண்டேன். ஆனால் என்னை அடக்கி அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். அவர் “அதுவே நிகழும்… நிகழ்ந்தாகவேண்டும்” என்றார்.

அன்று நான் திரும்பி வந்தபோது அவர் சொன்னதென்ன என்பதை என்னுள் உசாவிக்கொண்டே இருந்தேன். எவ்வகையிலும் எனக்கு அதை பொருள்கொள்ள இயலவில்லை. அமைச்சர்களை அழைத்து அவர் சொன்னதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். என்னுடைய பிழைகளிலிருந்து பீமன் ஆற்றல் பெறுவான் என்பது அதன் நேர்பொருள் என்றனர். எனது பழியால் சினம்கொண்ட தெய்வங்களிடமிருந்து அவன் ஆற்றலைப் பெறுவான் என்றனர் சூதர்.

நான் அவ்விளக்கங்களால் நிறைவுறவில்லை. என் ஆசிரியரையே தேடிச்செல்ல முடிவெடுத்தேன். மதுராவுக்குச் சென்று என் ஆசிரியரைக் கண்டேன். எப்பொழுதுமே என்னைப் பார்த்ததும் பெருமகிழ்ச்சி கொள்பவர் இரு கைகளையும் விரித்தபடி ஓடிவந்து என்னை கட்டித்தழுவிக்கொண்டார். என்னைக் காண்பதற்கு முன்பு வரை என்னிடம் எத்தனை சினம் கொண்டிருந்தாலும் எனக்காக எத்தனை கூரிய சொற்களை சேர்த்து வைத்திருந்தாலும் என்னை கண்ட கணமே அதை மறந்துவிடுவாரென்பதை நான் அறிந்திருந்தேன்.

என் தோள்களைத் தழுவியதுமே அவர் முதலில் சொன்னது “உரிய தோள்களுடன் மற்போரிட்டு நெடுங்காலமாகிறது. சென்று ஓய்வெடு. சற்று துயின்ற பின்பு வா. தோள் கோப்போம்” என்றுதான். அன்று அவருடன் தோள் கோத்தேன். ஒரு நாழிகைப்பொழுது அவர் முன் நின்றிருக்கும் ஆற்றல் கொண்டிருப்பவன் நான் மட்டுமே. என்னைத் தூக்கி நிலத்தில் அறைந்து முழங்காலால் நெஞ்சக்குழியை அழுத்திப் பற்றியபின் என் முகம் நோக்கி “தேர்ந்திருக்கிறாய். ஆனால் உன் உள்ளம் வேறெங்கோ இருப்பதை கைகள் காட்டுகின்றன” என்றார்.

“ஆசிரியரே, நான் தாங்களன்றி வேறு எவராலாவது கொல்லப்படக் கூடுமா?” என்றேன். “இன்றைய நிலையில் நானே உன்னைக் கொல்வது கடினம்” என்றார். “வேறு எவர்?” என்றேன். “அங்கன் உன்னை கொல்லக்கூடும். அவன் பரசுராமரிடமிருந்து எதை கற்றுக்கொண்டான் என்று எனக்கு தெரியாது. அதற்கும் அப்பால் என் இளையோன் உன்னைக் கொல்லக் கூடும். ஏனெனில் இப்புவியிலுள்ள எந்த நெறிகளுக்கும் அப்பாற்பட்டவன் அவன். அவனுடைய மெலிந்த தோள்களையோ சிற்றுருவையோ கொண்டு அவன் ஆற்றலை நம்மால் மதிப்பிட இயலாது” என்றார்.

“வேறு யார்?” என்று நான் கேட்டேன். அவர் என்னை கூர்ந்து நோக்கியபின் எழுந்து “உன் உள்ளத்தில் இருப்பது யார்?” என்றார். “ஆசிரியரே, என்னைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்து இளைய பாண்டவன் பீமன் கானேகியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவன் கான்வாழ்விலிருந்து திரும்பி வருவான் என்று நான் எண்ணவில்லை. அப்படி வந்தால் அவன் என்னை கொல்லக்கூடுமா?” என்றேன்.

ஆசிரியர் உரக்க நகைத்து “அவனா? உனது தோள்வலியும் கதை சுழற்றும் திறனும் அவனால் எண்ணிப்பார்க்கக்கூட இயலாதவை. கருதுக, உன் முன் அவன் சிறுவன்போல!” என்றார். நான் எழுந்து “ஆனால் அவன் அச்சொற்களை அவை முன் சொன்னான். தெய்வங்கள் அவனை அப்படி சொல்ல வைத்தன” என்றேன். “அவை தெய்வங்களால் சொல்ல வைக்கப்பட்டன என்று உனக்கு எப்படி தெரியும்?” என்றார். “இல்லையேல் ஏன் அவை என்னை நிலைகுலையச் செய்கின்றன? ஏன் என் கனவில் எழுகின்றன? ஆசிரியரே, ஒவ்வொரு நாளும் நான் அவனை எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றேன்.

ஆசிரியர் என்னை கூர்ந்து நோக்கி “நீ அஞ்சுகிறாய்” என்றார். “ஆம்” என்றேன். “அவனிடம் ஆற்றலென திரளப்போவது உன்னில் எழும் அந்த அச்சம்” என்றார். நான் படபடப்புடன் “அதைத்தான் அவர் சொன்னார்” என்றேன். “யார்?” என்றார். “அவர் காட்டில் தனித்திருக்கையில் நான் சென்று பார்த்தபோது அதை சொன்னார். என் அச்சத்திலிருந்து அவன் எழப்போகிறான். நிழல் பேருருக்கொள்வதுபோல” என்றேன்.

“ஒருவரை நாம் அஞ்சத்தொடங்கினால் நம் ஆற்றல் குறைவது மட்டுமல்லாது நமது அச்சத்தை எதிரிக்கு ஆற்றலென சமைத்து அளிக்கவும் செய்வோம்” என்று ஆசிரியர் சொன்னார். “நான் என்ன செய்வது?” என்று கேட்டேன். “அச்சத்தை விலக்குவதற்கு எதுவும் பயன்படாது. அதற்கும் தோள்களுக்கும் தசைகளுக்கும் தொடர்பில்லை. நீயே அதை விலக்கிக்கொள்ள வேண்டியதுதான்” என்றார்.

“ஆசிரியரே, அச்சத்தை விலக்கும் பயிற்சி என்ன?” என்றேன். “நீ எவருடன் போர்புரிகிறாயோ அவருடன் போர்புரிந்து வென்று பழகவேண்டியதுதான். அச்சத்தையே எதிரி என சமைத்துக்கொள். அதை வென்று நின்று உன்னை அறி. அறிவே அச்சத்தை இல்லாமல் ஆக்குகிறது” என்றார். “ஆனால் அவனுடன் நான் எவ்வாறு போர்புரிய முடியும்?” என்றேன். “எனில் அவனுக்கு நிகரானவர்களிடம் போர்புரிக!” என்றபின் “இதற்கெல்லாம் என்னால் விளக்கம் அளிக்க இயலாது. நான் எவரையும் அஞ்சியதில்லை” என்றார்.

அங்கிருந்து திரும்பி வருகையில் அதை எண்ணிக்கொண்டிருந்தேன். நான் அவனுடன் போர்புரியவேண்டும். ஆனால் எவ்வாறு? அன்று மாலை அரண்மனையில் ஒரு கூத்து நிகழ்ந்தது. அதில் எவ்வாறு ராவண மகாபிரபு மல்யுத்தப் பயிற்சி எடுத்தார் என்பதை கூத்தன் நடித்துக்காட்டினான். இருபது பெருந்தோள் கொண்ட அவர் எவரிடம் போரிட்டுப் பயில முடியும்? நிகர் நின்று போரிட எவருமில்லாததால் தனது பயிற்சி குன்றிக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். ஆகவே அரக்கரின் குலகுருவாகிய சுக்ரரிடம் சென்று தனக்கு மற்போரிட இணையென எவருமில்லாததால் போரிடும் உவகையை இழந்திருப்பதாகவும் தோள்கள் பயிற்சி குன்றிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

சுக்ரர் அவரிடம் ஒரு நுண்சொல்லை உரைத்தார். ஆடி முன் நின்று அச்சொல்லை அவர் உரைத்தபோது ஆடிப்பாவை உயிர் கொண்டு முன்னால் வந்தது. ஏழு நாழிகைப்பொழுது அது உடல் கொண்டு விசை கொண்டு நின்றிருக்கும். ராவண மகாபிரபு ஒவ்வொரு நாளும் தனது ஆடிப்பாவையுடன் போர்புரிந்தார். ஒவ்வொரு போரிலும் அவர் வென்றார். வெல்லும்போது அவர் கற்ற அனைத்தையும் அறிந்தபடி ஆடிப்பாவை மறுபடியும் அவர் முன் வந்து நின்றது. எப்போதும் ஒரு கணம் மட்டுமே அவருக்குப் பின்னால் இருந்தது அது.

ஆடிப்பாவையை வெல்வது மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே சென்றது. அவர் சுக்ரரிடம் சென்று “நான் கற்ற அனைத்தையும் ஆடிப்பாவை கற்றுக்கொள்கிறது” என்றார். சுக்ரர் நகைத்து “உன் நிழல் நோக்கிப் போரிட நான் கூறியிருந்தேன் எனில் பிறிதொன்றைக் காண்பாய். நீ கற்ற அனைத்தையும் தான் அறிந்து மேலும் நூறு முறை பெருக்கிக்கொண்டு நிழல் உன் முன் வந்து நின்றிருக்கும். நிழலிடம் எவரும் பொருதி வெல்ல இயலாது” என்றார்.

அன்று முடிவு செய்தேன். பீமனுக்கு நிகரான எடையும் தோள் வல்லமையும் கொண்ட பாவை ஒன்றை செய்து மற்போர் பயில வேண்டும் என்று. அதற்குரிய சிற்பியைத் தேடி ஒற்றர்களை அனுப்பினேன். யவனச் சிற்பி என் முன் வந்து சேர்ந்தபோது அவர் விழையும் பரிசென்னவோ அதை அளிப்பதாக சொல்லளித்தேன். அப்பரிசை முன்னரே அவருக்களித்து என் விழைவை குறிப்பிட்டேன். “அரசே, மற்போரிடும் பாவைகளை நாங்கள் முன்னரே உருவாக்கியதுண்டு. பயிற்சிக்காக மட்டுமல்ல, போருக்காகவேகூட இயற்றப்படும் பாவைகள் உண்டு. அவற்றின் உடலுக்குள் அமைந்திருக்கும் சுருள்விற்களாலும் வளைவிற்களாலும் இழுவிற்களாலும் அவை உங்களுக்கு நிகராக நின்று போரிடும்” என்றார்.

அஸ்தினபுரியிலேயே ஒரு சோலையில் தனியாகத் தங்கி தன் பன்னிரண்டு உதவியாளர்களுடன் அவர் இப்பாவையை வடித்தார். இருபத்திநான்கு தனித் துண்டுகளாக இவை இருந்தன. இவற்றை ஒன்றாக இணைத்து முறுக்கி இப்பாவையை சமைத்து என் முன் கொண்டு வந்து நிறுத்தியபோது இதற்கு முகம் இருக்கவில்லை. கவசம் போன்ற ஒரு மூடியே இருந்தது. “போரிடுங்கள், அரசே” என்றார். நான் அதை நோக்கிக்கொண்டிருந்தேன். அது அவனைப் போன்றும் இருந்தது, எனது ஆடிப்பாவை போன்றும் இருந்தது. என் உடலே அவன் உடல் என்று முன்னரே அறிந்திருந்தமையால் எனக்கு அது வியப்பை அளிக்கவில்லை.

நான் மண்டில நிலைகொண்டபோது அதுவும் நிலைகொண்டது. முதல் அடியை நான் அடித்தபோது திறமையுடன் ஒழிந்து தன் இரும்புக் கையால் அடித்து என்னை வீழ்த்தியது. முதல் அடியைப் பெற்றதுமே அதை நான் புரிந்துகொண்டேன். பின்னர் அதை மிக எண்ணிச் சூழ்ந்து தாக்கினேன். முதல்நாள் மூன்று நாழிகை போரிட்டு அதை வென்றேன். அதை நிலத்தோடு நிலமாக அழுத்திக்கொண்டு கைகளை முறுக்கிப் பற்றிகொண்டபின்னர் அருகே நின்றிருந்த சிற்பியிடம் “நன்று! இது அவனேதான்” என்றேன்.

அப்பால் நின்றிருந்த துச்சாதனன் “ஆம், அவருக்கிணையானது அல்லது அவரைவிட சற்றே மேலானது” என்றான். தரையில் சினம் அடங்காத மல்லனைப்போல திமிறிக்கொண்டிருந்த அதை விட்டு எழுந்து நின்று உடலில் படிந்த மண்பொடியைத் தட்டியபடி “எவ்வாறு?” என்றேன். “மூத்தவரே, போர் தொடங்குகையில் அது அவரைப்போல் இருந்தது. தங்களிடம் போரிடப் போரிட தங்கள் கலையையும் விசையையும் கற்றுக்கொண்டு தங்களை அணுகி வந்தது. இப்போது அவரை விட திறமையானது” என்றான். “ஆம், ஆடிப்பாவை அவ்வாறுதான்” என்று சொன்னேன்.

அதற்கொரு முகம் சமைக்க வேண்டுமென்று சிற்பியிடம் கோரினேன். முகமில்லாத சிலையுடன் போரிடுவது உணர்வுகளை காலம் செல்லச் செல்ல இல்லாமல் ஆக்கிவிடும் என்றேன். “எனக்கு அவனுடைய முகம் வேண்டும். அவனுடைய போரிடும் முகத்தை அதில் கொண்டு வர வேண்டும்” என்றேன். “போரிடுகையில் அவர் முகத்தைப் பார்த்த பத்து ஓவியர்களிடம் அதை வரைந்து தரச் சொல்லுங்கள். அதிலிருந்து முகத்தை நான் உருவாக்கிக்கொள்கிறேன்” என்றார் சிற்பி.

ஓவியர்கள் மற்போரிடுகையில் வெறியும் சினமும் ஏளனமும் வெறுப்பும் என உருமாறிக்கொண்டிருக்கும் அவன் முகத்தின் அறுபத்து நான்கு ஓவியங்களை வரைந்து சிற்பிக்கு அளித்தனர். அந்த அறுபத்திநாலில் இருந்தும் திரண்டெழுந்த ஒரு முகத்தை அவர் இரும்பில் வடித்து இச்சிலைக்கு அணிவித்துக் கொண்டுவந்தார். அன்று இது என் முன் எழுந்து நின்றபோது ஒருகணம் நான் துணுக்குற்றேன். அது என் முகமாக இருந்தது. “என் முகம் போலுள்ளது” என்றேன். “தங்கள் முகம் கூடத்தான்” என்று சிற்பி சொன்னார்.

நான் திரும்பி குண்டாசியிடம் “இளையோனே, இது எவருடைய முகம்?” என்று கேட்டேன். “தங்களைக் கொல்லும்போது பீமசேனனின் முகம் இவ்வாறுதான் இருக்கும்” என்றான். “அறிவிலி!” என்று அவனை அடிக்கப்போன துர்மதனை கை நீட்டி தடுத்தேன். சுபாகுவிடம் “சொல் இளையோனே, இது எவருடைய முகம்?” என்றேன். “இது அவருடைய முகம், ஆனால் தாங்கள் என்று எண்ணி நோக்கினால் தங்கள் முகமும் கூட” என்று அவன் சொன்னான்.

“அன்று முதல் இது என்னிடம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதனுடன் போர் பயின்றுகொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இதை வென்று நான் ஆற்றல் கொள்கிறேன். தன்னை வென்று என்னை வெல்லும் திறனை அதற்கு அளிக்கிறேன். இன்று இது பீமனைவிட ஆற்றல் கொண்டது. இதை வென்ற நான் பீமனை வெல்வது மிக எளிது” என்றான் துரியோதனன்.

கிருதவர்மன் “ஆனால்” என்றபின் நிறுத்திக்கொண்டான். “சொல்லுங்கள்” என்று துரியோதனன் சொன்னான். கிருதவர்மன் “அரசே, பீமசேனனிடம் உள்ள ஒன்று இச்சிலையில் இல்லை. ஒவ்வொரு கணமும் எரியும் நிகரற்ற வஞ்சம். அவ்வஞ்சம் பதினான்கு ஆண்டுகள் காட்டில் நூறு நூறு எதிரிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது” என்றான். “அவன் கற்றிருப்பதென்ன என்று நாம் அறியோம். இது கற்றிருப்பதெல்லாம் உங்கள் அச்சத்திலிருந்து கற்றுக்கொண்டது மட்டுமே. அந்தணர் சொன்னதுபோல உங்கள் அச்சம் பருப்பொருளாகி இங்கு நின்றிருக்கிறது. அதை மட்டுமே நீங்கள் வென்றிருக்கிறீர்கள்.”

“இதற்கப்பால் ஒரு ஆற்றலை அவன் அடைவதற்கு எந்த வழியும் இல்லை” என்று துரியோதனன் சொன்னான். கிருதவர்மன் “அரசே, இந்த முகம் அவன் முகமும் உங்கள் முகமும் மட்டும் அல்ல. இது பிறிதொரு முகமும்கூட” என்றான். துரியோதனன் திகைப்புடன் பார்க்க கிருதவர்மன் “நாம் கிளம்புவோம்” என்றான்.

முந்தைய கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -13
அடுத்த கட்டுரையுவன் ,கடிதங்கள்