சாமுராய்களும் நின்ஜாக்களும்

இனிய ஜெயம்

கீற்றோவியம் அளித்த உந்துதலில்,என் வசமிருக்கும் ஜப்பானிய வரலாறு [பாட புத்தக நூல்] நூலை சும்மா புரட்டி வாசித்துப் பார்த்தேன். சமுராய் பற்றி கொஞ்சம் தகவல்களும், நிஞ்சா குறித்து எதுவுமே அற்று இருந்தது. கால்வாசி காகேசிய முக்கால்வாசி மங்கோலிய இனமும் கலந்து உருவான ஐநு இனமே ஜப்பானிய பூர்வ குடி. ஆகவே ஆதி சப்பானியர் சீனர்களே என்பது சப்பான் மீதான சீன பாசத்தின் வேர்,

முன்பு பார்த்த படம் ஒன்று, சமுராய் ஒருவன் அவனது மரபுப்படி  தற்கொலை செய்து கொள்ள, அவனது எதிரிகள் முறிந்த மூங்கில் பிளாச்சு ஒன்றை அளிப்பார்கள்,அதைக் கொண்டு அவன் தனது வயிற்றைக் கிழித்துக் கொண்டு செத்துப் போவான். இதுவே சமுராய் குறித்த என் முதல் நினைவு. பிறகு செவன் சாமுராய். அப்புறம் தி லாஸ்ட் சாமுராய். எனது வரலாற்று ஞானத்தில் சினிமா வழியே  இக்கிணியூண்டு இடத்தைப் பிடித்திருக்கும் சாமுராய்கள் இன்றி ஜப்பானிய வரலாறே இல்லை என்பதைப்போல, ஜப்பானிய வரலாற்றுடன் பின்னிக் கிடக்கிறார்கள் சாமுராய்கள்.

ஐந்தாம் நூற்றாண்டு துவங்கி வளர்ந்த சாமுராய்கள் கலாச்சாரம் எட்டாம் நூற்றாண்டில் ஹியான் வம்ச காலத்தில் ஜப்பானிய வரலாற்றுப் போக்கை நிர்ணயிக்கும் அளவு வளர்ச்சி கண்டிருக்கிறது. மினமோட்டா, தைரா எனும் இரு சாமுராய் குலம் மொத்த ஜப்பானிய தீவுக் கூட்டத்தை சரிபாதியாக பிரித்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்திருக்கிறார்கள்.

பிறகு ஆதிக்கப்போர் மினமோட்டா குலம் வெல்ல, அதன் குலத் தலைவன் ராணுவ தளபதி ஆகி, பின்னர் மன்னனை விலக்கி வைத்து தானே மன்னன் ஆக, பதினான்காம் நூற்றாண்டின் பாதி வரை இவர்களின் ராஜ்ஜியம். பிறகு ராஜ்ஜியம் சிதற, ஒவ்வொரு தீவும் குட்டிக் குட்டி ராஜ்ஜியம் ஆகி, அந்ததந்த ராஜ்யங்களின்  சாமுராய்கள் கொண்டு அரசு ஆங்காங்கே நிகழும் எல்லை சண்டை அதிகார சண்டை இவற்றை சமாளிக்கிறது. இது பதினாறாம்  நூற்றாண்டின் பாதி வரை.

1573 இல் பதவிக்கு வரும் டோயோடோமிஷிடயோஷி மீண்டும் தீவுகளை ஒன்றிணைத்து  ஒற்றை ராஜ்யத்துக்கு வழி கோலுகிறார்.ஒற்றை ராஜ்ஜியம் அமைந்த பின்னர், ஒவ்வொரு தீவுக்குள் இருந்த சாமுராய்கள் அதிகாரத்தை குறைக்கிறார். ஆயுதங்களை பறிமுதல் செய்து பல சமுராய் குலங்களை வேளாண்மைக்கு திருப்புகிறார்.

battle of aizu

https://en.wikipedia.org/wiki/Battle_of_Aizu

1868 இல் நிகழ்ந்த இந்த சண்டையே வரலாற்று ஆதாரப்படி  சாமுராய்கள் பங்குகொண்ட இறுதிப்போர் என்கிறார் விக்கிப்பீடியார். இந்தப் போரில் ஒரு பெண் சாமுராய் நாகானோ என்பவர் வீரப்போர் புரிந்து தோற்றுப் போகிறார் , எதிரிகள் வசம் சிக்காதிருக்கும் பொருட்டு தனது தலையை வெட்டிவிட சொல்லி, இப்போதும் அவரது தலை புதைக்கப்பட்டஇடம் [ பைன் மரத்தடி ]    ஜப்பானில்,ஹக்காய் கோயில் ஐசுபாங்கே எனும் இடத்தில் இருப்பதாக அந்தக் குறிப்பின் தகவல் உதவி சுட்டி தெரிவிக்கிறது.

சாமுராய்கள் கடுமையான மரபு விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆண் சாமுராய்கள் தற்கொலை செய்து கொள்ளும் முறை போல,பெண் சாமுராய்கள் தற்கொலை செய்து கொள்ள தனி முறை இருக்கிறது. கால்களை கயிறு கொண்டு பிணைத்து விட்டு, வஜ்ராசனத்தில் அமர்ந்தபடி, தலையை அண்ணாந்து வாயைத் திறந்து, ஒரே அழுத்தம் வழியே,தனது சாமுராய் கத்தியை வாய் வழியே, அடி வயிறு வரை இறக்கிக் கொள்வதன்வழியே  உயிரை விடுவது.

நானறிந்ததெல்லாம் சமுராய் வாள் எனில் சற்றே வளைந்திருக்கும்,நிஞ்சா வாள் நேராக இருக்கும் என்பது மட்டுமே. இப்போது வாசிக்கையில் இணையம் நிறைய தகவல்களை கொண்டு வந்து கொட்டுகிறது. இதோ ஜப்பானில் பாரம்பரியமாக சமுராய் கத்தி செய்யும் ஒருவரின் கதை.

https://www.bbc.com/tamil/global-40338770

இணையம் சொல்லும் மற்றொரு சுவாரஸ்ய கதைகளில் ஒன்று, நிஞ்சா எனும் கதையே எந்த ஆதாரமும் அற்றது. பெரும்பாலும் சமுராய்கள் மரபு மீறாதவர்கள்.  பல சமயம் நில சுவான்தார்களுக்கு ஆதரவாக,மன்னர்களுக்கு எதிராக அவர்கள் நின்றதால், மன்னர் குலங்கள் தங்களுக்குள் எந்த வரம்புக்கும் கட்டுப்படாத, உளவு உட்பட அனைத்தும் புரிகின்ற, அரச பக்தி மிக்க நிஞ்சா பாதுகாவலர்களை வைத்திருந்திருக்க வாய்ப்பு மிகுதி, ஆனால் ஆதார பூர்வமாக நிஞ்சா கலாச்சாரம் என ஒன்றிருந்ததாக சொல்ல முடியாது. முதல் உலகப்போருக்கு முன்பாக, ஜப்பானுக்கு உள்ளேயே கூட இந்த நிஞ்சா குறித்து பொது மனம் அறிந்த தகவல் ஏதும் இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்,ஜப்பான் தன்னை மீண்டும் கட்டி எழுப்பிக்கொண்ட போது, அது புனர்நிர்மாணம் செய்து மீண்டும் கலாச்சாரத்தில் உலவவிட்ட பல ஜப்பான் பாரம்பரியங்களில் இதுவும் ஒன்று.  என்கிறார் கூகுளார். நிஞ்சா டர்டில்ஸ் மட்டுமல்ல, நின்ஜாவே கதைதான் என்றால் என்ன அநியாயம்.  :)

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபுரூஸ் லீ – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதிரவனின் தேர்- 2