வணக்கம் ஜெ
காலையில் ‘நீர் என்ன செய்தீர்’ கடிதத்தையும், உங்கள் பதிலையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஏற்கெனவே நான் கேள்விப்பட்ட சூடான் பஞ்சத்தில் மரணத் தருவாயில் ஒரு சிறுவன், அவனுக்குப் பின்னே ஒரு கழுகைப் புகைப்படம் எடுத்து பிரபலம் ஆன கெவின் கார்ட்டர் (Kevin Carter ) பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். சாப்பிட்டு விட்டு தினமணி நாளிதழைப் புரட்டியபோது ஆச்சர்யம். அதுவரை மனதில் ஓடிக்கொண்டிருந்த அந்தப் புகைப்படம் குறித்த விஷயங்கள் தினமணியில் சிறு கட்டுரையில் வந்திருந்தது.
அந்தப் புகைப்படம் ஒருபுறம் அதிர்வை ஏற்படுத்தினாலும் , மறுபுறம், மனிதாபிமானமற்ற புகைப்படக்காரர் என்று தூற்றப்பட்டு அவரைத் தற்கொலை கொள்ளச் செய்தது இந்த சமூகம்.
அவர் அதை புகைப்படம் எடுக்காமல் அந்தக் கழுகை விரட்டிவிட்டு, அந்தச் சிறுவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கோ, உணவு கொள்ளச் செய்யவோ கொண்டு சென்றிருந்தால் என்ன பெரிதாக நடந்திருக்கும் ? அவர் அப்படிச் செய்திருந்தால் ஏற்பட்டிருக்கும் விளைவை விட அந்த ஒரு புகைப்படம் சொல்லும் விஷயம் ஏராளம். ஒரு படைப்பாளியோ ஒரு இலக்கியவாதியோ செய்வது அதுதான். ஆனால் இவர்கள் மனிதாபிமானமற்றவர்களாக இந்த ‘நல்லவர்களால்’ குற்றம் சட்டப்படுவது அபத்தம். ஒருவேளை அந்தப் புகைப்படம் எடுத்தபின்னர் அச்சிறுவனைக் காப்பாற்றியிருக்கலாம். அவர் செய்தாரா எனது தெரியவில்லை. அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டதால் குற்றவுணர்வு ஏற்பட்டு தன்னை அழித்துக்கொண்டாரோ ?
எப்படியோ, சில வேளைகளில் அறிவுரை கூறும் ‘நல்ல’ மனிதர்கள் பெரும் சிக்கல்களையே ஏற்படுத்துகிறார்கள்.
நன்றி
விவேக்
மரணம் உணர்த்திய மனிதநேயம் – தினமணி
***
அன்புள்ள விவேக்
ஒவ்வொரு விஷயத்திலும் நம் நடுத்தவர்க்க ‘மனசாட்சி’ இப்படிக் குரலெழுப்புவதை நாம் பார்க்கலாம். அதிலும் சமூக வலைத்தளம் வழியாக அவர்களுக்கு ஒரு வெளிப்பாடு சாத்தியமாகும்போது இந்தக்குரல் ஒரு கூட்டுப் பொய்யாக பேருருவம் எடுத்து நிற்கிறது
நம் நடுத்தரவர்க்கத்தினர் பேசும்போது “நாம ஒரு வம்புக்கும் தும்புக்கும் போறதில்ல. எது நியாயமோ அதை நாம சொல்றது… கடவுளுக்குப் பயந்து வாழுறோம்” என்றெல்லாம் சொல்வதைக் கவனித்திருக்கலாம். அதன் இன்னொரு வெளிப்பாடுதான் இது. அதாவது எல்லா தருணத்திலும் எது அரசியல்சரி என்றும் ஒழுக்கம் என்றும் அறம் என்றும் கருதப்படுகிறதோ அதை ஓங்கிக் கூச்சல் போட்டுச் சொல்வது.
அது ஒருவகையான பசப்பு மட்டுமே. உண்மையில் இத்தனை அரசியல்சரியுணர்வும் ஒழுக்கவுணர்வும் அறவுணர்வும் கொண்டவர்கள் என்றால் சமூகம் இப்படியா இருக்கும்? வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் இவற்றை கடைப்பிடிப்பவர்களா இவர்கள்? இப்படி கூச்சலிடுவதன் வழியாக தனது சமரசங்களை, சிறுமைகளை தங்களிடமிருந்தே ஒளித்துக்கொள்கிறார்கள்
கெவின் மட்டும் அல்ல, ஒர் அறப்பிரச்சினையை பேசுபொருளாக்கி நிறுத்தும் அனைவருமே பெரிய சமூகப்பங்களிப்பை ஆற்றுகிறார்கள். அவர்களே முக்கியமானவர்கள்.
ஜெ