எந்த ஒரு இதழும் அது உருவாக்கிய எழுத்தாளர்கள், முன் வைத்த படைப்புகள் வழியாக மட்டுமே காலத்தால் நினைவுகூறப்படுகிது. அவ்வகையில் சரஸ்வதி மிகுந்த முக்கியத்துவம் உள்ள சிற்றிதழ். நடு இதழ் என்றே சொல்ல வேண்டும், ஐம்பதுகளில் அது ஆறாயிரம் பிரதிகள் அச்சாகியது. அதில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஜி.நாகராஜன் போன்றவர்கள் ஒரே வீச்சுடன் அறிமுகமானார்கள் . ஒரு புளியமரத்தின் கதை அதில் பாதிவரைத் தொடராக வெளிவந்தது

அதை கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினராக இருந்த வ.விஜயபாஸ்கரன் நடத்தினார். அதன் வெற்றி ஒரு கட்டத்தில் கட்சியை அச்சுறுத்தியது. தாமரை தொடங்கப்பட்டது. கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டு சரஸ்வதியை வாங்கவேண்டம் என அறிவுறுத்தப்பட்டார்கள். சரஸ்வதி நின்றது. இந்த செயலைச் செய்தவர்கள் ஜீவாவும் தி க சிவசங்கரனும். சுந்தர ராமசாமி , ஜி.நாகராஜன் போன்றவர்களுக்கு கட்சி மேல் இருந்த கடைசி நம்பிக்கை சிதைந்தது இவ்வாறுதான்.

விஜயபாஸ்கரன் மீண்டும் கட்சியில்தான் இருந்தார். சோவியத் அமைப்புகளில் பணியாற்றினார். ஆனால் இதழியலுக்கு வரவில்லை. மனம் வெறுத்து எந்தத் தொடர்பும் இல்லாமல் முப்பது வருடம் ஒதுங்கியே இருந்தார். எண்பதுகளில் சரஸ்வதிக்காலம் என்ற நூலை எழுதினார்

சரஸ்வதி விஜயபாஸ்கரன் நேற்று[ 9-2-2011] இரவு 12 மணி அளவில் மறைந்துவிட்டார்

முன்னோடிக்கு அஞ்சலி