ஜப்பான் – கடிதம்

 

ஜெமோ,

 

 

தத்துவங்களையும் ஆச்சாரங்களையும் இணைத்துத்தான் மதம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு இணைப்பானாகச் செயல்படும் ரப்பர்தான் புராணம். உங்களை தொடர்ந்து வாசித்தாலும், பெற்றுக் கொள்வதற்கு இப்படி ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் Black box போன்றே முன்வைக்கப்படும் மதத்தின் உள்ளடக்கங்களை X-Ray துணை கொண்டு ஊடுருவிப் பார்ப்பது போல் இருந்தது ஜப்பானியப் பயணக்கட்டுரையில் வரும் இவ்வரிகள். உலகம் முழுவதும், எவ்வித வேறுபாடுமின்றி, மதங்கள் அனைத்தும் இப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றுணரும்போது எழும் புரிதல் உலகத்தை நமக்கு நெருக்கமாக்கி விடுகிறது.

 

இந்தியப் புராணங்கள்தான் பல்வேறு தரப்பட்ட இனக்குழுக்களை ஒன்றிணைக்க உதவின என்கிறார் டி.டி.கோசாம்பி (பண்டைய இந்தியா). இங்கு உங்களுடைய சென்னை கட்டண உரையில் குறிப்பிடப்பட்ட இனக்குழுக்களின் பரிணாம வளர்ச்சியான ‘குருதி மரபு’ மறைந்து ‘பண்பாட்டு மரபு’ எழுந்து வந்ததை நினைவு கூர்கிறேன். இந்த இணக்கமான பண்பாட்டு மரபை  சாத்தியப்படுத்திய முதன்மைக் காரணிகளில் ஒன்று புராணங்கள். ஆனால் அதே புராணங்கள்தான் பிற்காலங்களில் மூடநம்பிக்கை என்ற பெயரில் மனித குலத்தின் வளர்ச்சியை சிதைக்கவும் செய்தன என்பதையும் டி.டி.கோசாம்பி சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஒரு நிலத்தில் எழும் புராணங்களின் எண்ணிக்கைக்கும் அங்குள்ள மக்களின் எண்ணிக்கை அல்லது அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளுக்கும் தொடர்பு இருக்குமென்று எண்ணத்தோன்றுகிறது. தமிழ்நாட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பரப்பி வைத்ததுபோல் இருக்கும் வேறுபாடுகள் குறைந்த ஜப்பானில் ஏன் புராணங்களின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

 

ஒரு இலக்கியவாதிக்கு, நான் எதன் மேல் ஏறி நின்று கொண்டிருக்கிறேன் அல்லது நான் எதனுடைய நிழல் என்று அறிந்து கொள்ள உதவும் தாகம் சராசரிகளுக்கு எழுவதேயில்லை. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஜப்பானில் வாழ்ந்தும் Kyoto நகருக்கு செல்லவேண்டும் என்று தோன்றியதுகூட இல்லை. நீங்கள் என் கண்முன்னால் விரித்தெடுக்கும் ஜப்பான் கிட்டத்தட்ட 60 சதவீதம் புதிதாகவே உள்ளது. சீனர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் உள்ள தொடர்பு; கன்பூசியசுக்கும், ஜென்னுக்கும் உள்ள தொடர்பு; பௌத்தத்திற்கும் ஷிண்டோவிற்கும் உள்ள தொடர்பு என ஆச்சரியங்களை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறது இந்த ஜப்பானியப் பயணக்கட்டுரை.

 

தாங்கள் வேறு, சீனர்கள் வேறு என்று வலிந்து புறவுலகுக்கு காட்டிக் கொள்வதில் என்னைப் போன்றவர்களிடம் மட்டுமே ஜப்பானியர்களால் வெற்றிக் கொள்ள முடிந்திருக்கிறது. தங்களுடைய வேரை மறைத்துக் கொள்வதிலோ அல்லது அதனை வேறொன்றாக உருவகித்துக் கொள்வதிலோ உள்ள மனித உளவியலை நிறைய வாசிக்க ஆரம்பித்தபின் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு இந்தியாவில் மகாயான பௌத்தத்தின் வேரான வேதங்களை, அதை நிறுவியவர்கள் மறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைப் பற்றி தேவிபிரசாத் சட்டோபாத்யா (இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்) கூறியது நினைவுக்கு வருகிறது.

 

இலக்கியவாதியாக இருந்தாலும் சரி, சராசரியாக இருந்தாலும் சரி நம்மை வெகுவாக ஈர்ப்பது சக மனிதர்களிடம் ஜப்பானியர்கள் காட்டும் அக்கறையும் பணிவும், நட்பு பாராட்டுதலும்தான். உங்களுடைய படகுப் பயணத்திற்குப் பிறகு வெகுதொலைவிலிருந்து தன்னுடைய Sayanoraவைச் (விடைபெறுதலை) முகமலர்ச்சியுடன் வெகுவேகமாக கையசைத்துக் காட்டிய அந்த ஜப்பானியப் பெண் மனதை விட்டு அகல மறுக்கிறார். பெரும்பாலான ஜப்பானியர்களைத்தான் இப்பெண் பிரதிபலிக்கிறார். வளர்ந்த நாடுகளில் பயணிக்க அல்லது வாழ நேரிடும் இந்தியர்களிடம் எழும் தாழ்வுணர்ச்சியை ஜப்பானியர்கள் இல்லாமலாக்கி விடுகிறார்கள்.

 

சுனாமி என்றால் என்னவென்றே தெரியாத, அந்த 2004 டிசம்பர் மாத இறுதி நாட்களின் ஒரு மாலைப்பொழுதில், மிசனோகுச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அங்கிருந்த முன்பின் தெரியாத முகம் இறுகி சுருக்கமற்ற முதியவரும், அவருடன் இருந்த ஒரு நடுவயதுக்காரரும் நெருங்கி வந்து “Dai jobu desu ka?” (பிரச்சினை ஏதுமில்லையே?)  என்றார்கள். சுனாமி மற்றும் பூகம்ப அழிவுகளின் மூலம் கடவுளை நெருங்கி அறிந்தவர்கள் ஜப்பானியர்கள் என்று இப்போது உணர்கிறேன். இது போன்ற அக்கறையான விசாரிப்புகளின்போது, இவர்கள் கடவுளும்கூட. இவர்களைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. இதுவரை, இதுமட்டும்தான் சாத்தியமாயிருக்கிறது.

 

https://padhaakai.com/2018/08/11/mazhaimaalaipozhudhu/

 

அன்புடன்

முத்து

 

ஜப்பான் ஒரு கீற்றோவியயம் 16

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -14

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -13

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -8

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -5

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரை’மறுசந்திப்பு’ ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்- தமிழாக்கம் டி.ஏ.பாரி