ஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் வாங்க

 

 

நான் கடவுள் திரைப்படம் பார்த்தபோது என்னுடைய மனத்தை உலுக்கியது அதில் வரும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை. தங்களுடைய கஷ்டத்தை நகைச்சுவை மூலம் கரைத்து எப்படி வாழ்கிறார்கள் என்பது ஒரு பெரிய படிப்பினை.

ஆனால் ஏழாம் உலகமோ இன்னும் நுணுக்கமாக ஒவ்வொரு உருப்படியையும் அலசி ஆராய்ந்து புதிய படிப்பினையை தருகிறது. இதில் வரும் பண்டாரம் நான் கடவுள் திரைப்படத்தில் வரும் தாண்டவன் இல்லை. பண்டாரமும் ஒரு மனிதன்தான். ஒரே வித்தியாசம் தாண்டவன் கொடூரமானவன், அவனுக்கு உருப்படிகளித்தில் அன்பு, பரிவு என்பதே கிடையாது. ஆனால், பண்டாரமோ உருப்படிகள் ஆத்மா இல்லாத ஜீவன்கள் என சிறிது பரிவும், அவர்களிடமே ஆலோசனையும் கேட்க்கிறார். அவர்களும் அவர் மகளின் நிலையை கேட்டு வருத்தப்படுகிறார். அவர்களுக்கு பண்டாரத்தின்மேல் கோபமே இருப்பதில்லை. இப்போதுகூட தாண்டவனை “அவன், இவன்” என ஏகவசனத்தில் அழைக்கும் மனது, பண்டாரத்தை அவ்வாறு அழைக்க மறுக்கிறது.

இது உருப்படிகளை மட்டும் கொண்டு உருவாக்கிய கதை இல்லை. தாய், தந்தை, கணவன், மனைவி, நண்பன், என எல்லாவிதமான உறவுகளுக்குள் இருக்கும் நுணுக்கமும், அதற்கு மேலாக வியாபாரிகள், அடியாட்கள், திருடர்கள் என விரிந்து, காவல்துறை, கம்யூனிஸ்ட், பூசாரி என தொழில் செய்பவர்களையும் சேர்த்து பின்னிய கதை.

முத்தம்மையும், ரஜினிகாந்தும், தொரப்பனும் அப்பா, அம்மா மற்றும் மகன் என்னும் உறவுக்கு புதிய அடையாளம் தந்துவிடுகிறார்கள். மகனை தொட எத்தனிக்கும் தொரப்பனும் அவனுடைய மனப்போராட்டங்களும் இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொரு தந்தையையும் கலங்கடிக்கும். இந்த புத்தகத்தை படித்தபிறகு ஒரேமுறை “சிலையெடுத்தான் சின்னப்பெண்ணுக்கு” பாடலை கேட்டேன்.. அடுத்த கணம் ஒரு பெண்ணின் தந்தையாக மனம் பதறுவதை உணர முடிந்தது. அதேபோல் போத்திவேலு பண்டாரம், தன மகளுக்கு வளையல் செய்து தரும்போது, அவருடைய சந்தோஷத்தை மிகவும் அணுக்கமாக உணரமுடிந்தது.

அதேபோல விதம்விதமாக அம்மாக்களும் ஏழாம் உலகத்தில் இருக்கின்றனர். அவற்றில் முதல் இடம் முத்தம்மைக்கே. அவள் ரஜினிகாந்தை கொஞ்சுவதும், அவன் வெயிலில் அவதிப்படும்போது இவள் அழுவதும், எந்த நிலையிலும் தாய்ப்பாசத்திற்கு மேலாக ஒன்று இல்லையென காட்டியது. “வேய் கடிச்சான்னு சொன்னா காக்கிலோ கறிய எடுத்து போடுவா” என்னும்போது அவளுடைய பிள்ளைப்பாசம் மெருகேறி தெரிகின்றது. இவள் ஒருபக்கமென்றால் ஏக்கியம்மை மறுபக்கம். தங்களுடைய சக்தியையும் மீறி “ஒண்ணேகால் லெட்சமுண்ணா அப்பிடி நாங்க குடுக்கம். கலியாணம் தேதி மாறப்பிடாது” என் சொல்லுவதாகட்டும் “சும்மா கெடக்கேளா? நானும் எனக்க பிள்ளையளும் கயிறில தொங்கணுமா?” என கேட்பதாகட்டும், தன்னுடைய மகளின் வாழ்க்கை பாழாகக்கூடாது என்பதில் அவள் கொண்டுள்ள உறுதி எந்த தாய்க்கும் உள்ளது.

பவ்வேறு குணங்களையுடைய கணவன்-மனைவிகளையும் நமக்கு காட்ட ஜெயமோகன் தவறவில்லை. ஒருபக்கம் போத்திவேலு பண்டாரமும் ஏக்கியம்மையும் என்றால் மறுபக்கம் மாதவபெருமாளும் எருக்கும். ஒரு உருப்படியான தன்னை மருத்துவமனையிலிருந்து திருடும் பொருட்டு கட்டிய தாலியை எண்ணி “அவுக சாப்பிட்டாகளோ என்னவோ” என்றும் “அவிகளுக்கு என்னண்ணு தெரியல்ல. நான் செத்துப் போயிருவேன்” என அனைத்தும்போதும் கணவனின்மேல் தனக்குள்ள பாசத்தை பார்க்க முடிகிறது. ஆனால் ஏக்கியம்மையின் உறவு வேறுவகை. கணவன் பல நாட்களுக்கு பிறகு விஸ்கியை குடிக்கும்போது “சரி படுண்டோ. இல்லைண்ணா பாட்டும் கூத்தும் எளகி வரும் ” என உல்லாசமாக கூறுவதிலாகட்டும், “ரெண்டு தோசய கெட்டிக் குடுக்கட்டுமா கையில” என கேட்கும் அக்கறையாகட்டும், லௌகீக வாழ்க்கையின் மனைவியை கண்முன் நிறுத்துக்கறாள்.

நட்பு என்பது நாம் வீழ்ந்து கிடக்கும்போது ஊன்றுகோலாய் இருப்பது. போத்திக்கும் பண்டாரத்துக்கும் உள்ளது அவ்வகை உறவே. பண்டாரத்தின் இரண்டாம் மகள் நகையுடன் ஓடிப்போனபிறகு முதல்மகளின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவதிலும், அந்த பெண்ணின் வருங்கால மாமியாரை வண்டிமலையை வைத்து “தட்டுவதற்கு” ஆலோசனை கூறுவதிலும் ஒரு நண்பனாக தன் கடமையை செவ்வனே ஆற்றுகிறார் போத்தி.

இதற்கு பிறகு, சிறிய கதாபாத்திரங்களான பழனியில் பண்டாரத்தின் பணத்தை திருட அவரை தொடரும் திருடனும், காவல்நிலையத்தில் பசும் ஒவ்வொரு காவலர்களும், அவைகளின் குணாதிசயத்தை நம்முள் நிரப்பிவிடுகிறார்கள். கொச்சன் பொதுவுடைமை பற்றி கூறுவதும், உருப்படிகளை “சகாவு” என விளிப்பதும், பின் தொடரும் நிழலின் குரலை நினைக்கவைத்தன. சில பக்கங்களிலேயே வரும் பண்டாரத்தின் சம்பந்தியம்மாள் பல்வேறு கெட்டவார்த்தைகளை மனதில் உண்டாக்குகிறாள். எப்போதும் வாக்கில் விஷத்தை வைத்திருக்கும் பக்கத்துவீட்டு உண்ணியம்மை ஆச்சி, அடியாட்களாக வரும் மாதவப்பெருமாள், தேவரான வண்டிமலை அனைத்தும் வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் கச்சிதமான பாத்திரங்கள்.

மேற்கூறிய அனைத்து உணர்ச்சிகளின் மேல்தான் மனித வாழ்க்கையின் அவலத்தை ஜெயமோகன் “உருப்படிகள்” மூலமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். குருவி மற்றும் ராமப்பன் உறவும், “இங்க லா வேற, புரோசீஜர் வேற” என பேசும்  அகமதுவின் அறிவும், குய்யனின் பசியும், அவர்களிடையே ஓடும் மெல்லிய நகைச்சுவையும், மாங்காண்டிசாமியின் புன்னகையும் நம்மை மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி விடுகின்றன. இந்த கதையில் சற்றேனும் ஆறுதலுடன் இருப்பவர்கள் என்றால் இந்த ‘உருப்படிகள்’தான். இழக்க ஒன்றுமே இல்லை, முகமதுவின் வார்த்தைகளில் “பயப்பிடப்படாது மாமா. நாம இனி ஆரை பயப்பிடனும்?” என்பதில் அவைகள் இனி இழக்க ஒன்றுமே இல்லை என்பது தெள்ளென தெரிகிறது.

இதைவிட நம்முடைய முகத்தில் யாராவது காரி உமிழமுடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் “நாம கோயிலுக்கு வெளில பிச்சையெடுக்கிறோம், அவங்க உள்ளார எடுக்கிறாங்க” என கூறும்போது அசலில் நாமே உருப்படிகள் என்னும் நிதரிசனம் நம்மை அறைகிறது. புத்தகத்திலும் உலகிலும் நடக்கும் குரூரத்திற்கும் நாற்றமடிக்கும் வாழ்க்கைக்கும் காரணம் நம்முடைய பேராசை, மனிதத்தன்மையற்ற குணம் என்னும்போது மனம் வெட்கி கூனி குறுகிக்கொள்கிறது. இந்த புத்தகத்தை படித்துவிட்டு நம் மனதில் மனிதம் ஊறவில்லையென்றால் மல்லாந்து படுத்து மேல்நோக்கி காரிஉமிழ்வது போலத்தான்.

கடைசியாக இந்த கதையில் இருக்கும் குரூரம்.. மனிதர்களை உருப்படிகளாக நடத்தும் தன்மை, பணத்தை காலில் இருக்கும் வெட்டுகாயத்திற்குள் மறைத்து வைப்பது, விலைமாதாகிப்போன பெண்ணை தகப்பன் சென்று தூரத்திலிருந்து பார்ப்பது, முதுகெலும்பு உடைந்த பெண்ணை வன்புணர்ச்சி காவலர்களே செய்வது  என உடலை கூசவைக்கிறது. கல்யாண சாப்பாட்டை எதிர்பார்த்து உருப்படிகள் ஏமாறும் தருணத்தின் குரூரம் எவராலும் தாங்கமுடியாத ஒன்று. உச்சமாக முத்தம்மை “ஒத்தவிரலு”என அலறும்போது மனம் பதைக்கிறது. ஆனால், ஒன்றுமே செய்யமுடியாது, ஒருவேளை பண்டாரத்திற்கே அது முத்தம்மையின் மகன் என தெரிந்திருந்தால் அவர் விட்டிருப்பாரா என்ன?

என்னுடைய தரிசனம்: கலியுகத்தில் ஒவ்வெரு மனிதனுக்குள்ளும் ஒரு நல்லவனும் கெட்டவனும் இருக்கின்றார்கள். சந்தர்ப்பமே அவன் நல்லவனா கெட்டவனா என காட்டுகிறது. கதையில் உள்ள குரூரம் மேலோட்டமானது, புறவயமானது. ஆனால் கதையின் அடியில் முழுக்க முழுக்க ஓடும் ஒரே உணர்ச்சி மனிதம், மனிதத்தன்மை, மனிதனின் வாழ்க்கை குறித்த உணர்ச்சி.

அன்புடன்,

கோ வீரராகவன்

ஏழாம் உலகம் -கடிதங்கள்

ஏழாம் உலகம் -கடிதம்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12
அடுத்த கட்டுரைஜப்பான் – கடிதம்