கோவை,சிங்காரம்,சு.வேணுகோபால் -கடிதம்

சு.வேணுகோபால் தமிழ் விக்கி 

ப.சிங்காரம் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

ஞாயிறு காலை ஜப்பான், ஒரு கீற்றோவியம்-6 படித்துவிட்டு நம்முடைய கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் கூடுகைக்குச் சென்றேன். ப. சிங்காரம் அவர்களின் கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி நாவல்கள் குறித்து கலந்துரையாடல். நிகழ்வு நன்றாக சென்றது. திரு. சு. வேணுகோபால் அவர்களும் திரு. கால சுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டது கலந்துரையாடலை மேலும் சிறப்பாக்கியது. நண்பர்கள் வெவ்வேறு கோணங்களில் அந்நாவல்களின் மீதான தங்கள் வாசிப்பை முன்வைத்து பேசினர்.

இரண்டு விஷயங்கள் உங்களிடம் கூற வேண்டும் என்று தோன்றியது. தற்செயல்களாக ஆனால் ஒன்றுக்கொன்று பொருந்துபவையாக. எவ்வகையிலும் நியாப்படுத்தப்பட முடியாதது ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு வீச்சு. அதுபற்றி பேச்சொழிவதும் மேலை மனசாட்சியை அது உலுக்காததும் ஜப்பானின் குற்றங்கள் பெரிதும் நிறுவப்பட்டதும் கட்டுரையில் சுட்டப்பட்டிருந்தது. இக்கட்டுரையினை அன்று வாசிக்காமல் வந்திருந்த நண்பர்களின் கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி நாவல்கள் குறித்த பேச்சு இயல்பாக ஜப்பானின் கொடுமைகளை, சமுராய்களின் ஆணவத்தை (அவை குறித்த சில நூல்களின் பெயர்களுடன்) சென்று தொட்டது. ஆசிரியர் ப. சிங்காரம் அவர்கள் ஜப்பான் மீது கொண்ட கரிசனம், அவர் சயாம் மரணரயில் பாதை பற்றி குறிப்பிடாதது சுட்டிக்காட்டப்பட்டது.

”இன்று ஜெ தளத்தில் ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு வீச்சைக் குறிப்பிட்டு தன் பயணக்கட்டுரையில் எழுதியிருக்கிறார்” என்று நண்பரிடம் சொன்னேன்.

மற்றொன்று திரு. சு. வேணுகோபால் அவர்களின் கூந்தப்பனை தொகுப்பு வாசித்திருந்தேன். மண் சார்ந்த எழுத்து அது என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அவர் கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி நாவல்கள் இரண்டையும் உணர்வுப்பூர்வமாக விரும்பியதை அவர் அவை குறித்து பேசியதில் உணர்தேன். திரு. சுந்தர ராமசாமி அவை பற்றி குறிப்பிடாதது தமக்கு வியப்பளித்தாக கூறிய அவர் அதுபற்றி அவரிடம் கேட்கத் தயங்கி பின் கேட்டபோது அது வெறும் ஆவணம் என்ற கருத்தை அவர் கொண்டிருந்ததை கூறினார். இப்போது தீயின் எடை இரண்டாம் அத்தியாயம் அஸ்வத்தாமன் எண்ணுகிறான்.

”வயல் வரப்பில் ஒரு கைப்பிடி மண்ணுக்காக போரிட்டு உயிர் துறக்கும் வேளாண் குடிகளை அவன் தன் அவையில் அமர்ந்து ஒவ்வொரு நாளும் மீளமீள கண்டுகொண்டிருந்தான். அந்தணர்களுக்கு அந்த உளஎழுச்சி புரிபடுவதில்லை. அவர்கள் அதை விழைவென்றும் ஆணவம் என்றும் எடுத்துக்கொள்வார்கள்.”

எவ்வகையிலோ பொருந்துவது போல தோன்றுகிறது.

வாசித்ததை கலந்துரையாடும் இவ்வகை கூடுகைகளின் நன்மை கருதுகிறேன். நமக்கு எடுக்காத சில அலைவரிசைகள் நமக்கு கிடைக்கின்றன. வாசிப்பு முழுமையடைகிறது. திருமதி. லோகமாதேவி அவர்கள் தான் அந்த நாவல்களில் ரசித்தாகக் கூறிய விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. பெண்கள் இயல்பாக அவதானிக்க கூடியவை அவை என்று எண்ணுகிறேன்.

அடுத்த கூடுகைக்கு குர்அதுல் ஜன் ஹைதரின் அக்னி நதி நாவல் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஜுலை 28 கோவை புத்தக கண்காட்சியில் என குறிக்கப்பட்டிருக்கிறது.

அன்புடன்

விக்ரம்

கோவை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-5
அடுத்த கட்டுரைகாந்திகளின் கதை