ஜனவரி பதினாறாம் தேதி காலையில்தான் நான் இவ்வருடத்திய டைரியை வாங்கினேன். மலிவானதும் அதேசமயம் அதிக பக்கங்கள் வருவதுமான டைரி. நூறு ரூபாய். வழக்கமாகவே நான் டைரி எழுத தாமதமாகும். நாஞ்சில்நாடன் அவரது ‘பிராடி ஆண்ட் கம்பெனி’ டைரியை ஜனவரி பத்து வாக்கில்தான் தருவார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்– அதாவது ‘நாஞ்சில் ஏஜென்ஸீஸ்’ உரிமையாளராக ஆகிவிட்டார். இவ்வருடம் நான் சென்ற டிசம்பர் பதினெட்டு அன்று ஊரைவிட்டு கிளம்பியபின் பதினாறாம் தேதிதான் வந்துசேர்ந்திருக்கிறேன். அதாவது எனக்கு இப்போதுதான் இவ்வருடம் ஆரம்பிக்கிறது.
நான் பலவருடங்களாக டைரி எழுதுகிறேன். 1986ல் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவர் என்னிடம் ‘எழுத்தாளர்கள் கண்டிப்பா டைரி எழுதணும். அவனோட மனநிலைகளை அவனே அப்ஸெர்வ் பண்றதுக்கு அது அவசியம். ரொம்ப அந்தரங்கமா எழுத ஆரம்பிக்கிறப்பதான் நம்ம மொழி எவ்ளவு போதாமைகளோட இருக்குங்கிறது தெரியும். டைரி எழுதறப்ப யாருமே வாசிக்கப்போறதில்லைங்கிற ஒரு சுதந்திரம் வருது. அதில நாம் இன்னும் கொஞ்சம் சகஜமா இருப்போம். எந்த எழுத்தாளனோட டைரியும் அவனோட கிரியேட்டிவ் லேங்வேஜிலே இருக்காது… அது பாட்டுக்கு இருக்கும்…” என்றார்.
சுந்தர ராமசாமி உண்மையில் தொடர்ச்சியாக டைரி எழுதுபவரல்ல. எழுதுவார், எழுதாமலும் இருப்பார். அவரது டைரியை அவரே தந்த சில பக்கங்களை நான் படித்திருக்கிறேன். அவரது வழக்கமான நடையில்தான் அவை இருக்கும். தன்னால் தான் நினைத்ததுபோல நாட்குறிப்புகள் எழுத முடியவில்லை என்று சுந்தர ராமசாமி வருந்துவது உண்டு.
நான் டைரி எழுத ஆரம்பித்தபின் எனக்கு அது ஒரு இன்றியமையாக ஆகிவிட்டது. என் டைரியில் அந்தரங்கமாக ஏதும் இருக்காது. அந்தரங்கமாக நேரடியாக எழுத முடியாது என்பதே என் எண்ணம். ஏனென்றால் அந்தப் பார்வை நம்மை பலவகையான சங்கடங்களை நோக்கித்தள்ளக்கூடியது. நம்முடைய அந்தரங்கத்தை நாம் நேரடியாகச் சொல்ல முடியாது என்ற கட்டாயமே நம்மை புனைவெழுத்தை நோக்கி கொண்டுசெல்கிறது. நம் அந்தரங்கத்தை நாம் ஒரு புனைவுச்சூழலுக்குக் கொண்டுபோனால் சுதந்திரமாக எழுத முடியும்.
ஆகவே நான் என் நாட்குறிப்புகளை மிகவும் பொத்தாம் பொதுவாக, அவசியமான நினைவுகள் மற்றும் நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் மிகமிக அலட்சியமாகவும் சொல்வதற்காகத்தான் எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் கதைகளை எழுதியது, பிரதி எடுத்தது, அனுப்பியது, வாசித்த நூல்கள், அவற்றின் மீதான கருத்துக்கள், பயணங்கள், நண்பர்களைச் சந்தித்தது இப்படித்தான் இருக்கும். மிக அபூர்வமாகவே உணர்வெழுச்சிகள். படைப்பு சார்ந்த மன எழுச்சிக்கு ஆளாகி தூக்கமிழந்த இரவுகளில் விரிவான குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.
தியானம் பழகிய நாட்களில் அந்த அனுபவங்களை மட்டும் தனியாக ஒரு குறிப்பேடாக எழுதிவந்தேன். அவற்றில் தியானத்தைப்பற்றி மட்டுமே இருக்கும். அந்த குறிப்புகள் மிகத்தீவிரமான மொழியில், பலசமயம் உச்சகட்ட கவித்துவத்துடன், ஆனால் கட்டற்ற நடையில் இருக்கின்றன. அவற்றை என்றாவது பிரசுரம்கூட செய்யலாம். இந்த டைரிக்குறிப்புகள் எனக்கு என் நினைவுகளை மீட்டுவதற்கு மட்டுமே உதவக்கூடியவை.
ஆனால் எனக்கு டைரி ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே மிக முக்கியமானது. என் வாழ்நாளை நான் பயனுள்ளமுறையில் செலவிட்டிருக்கிறேனா என்று அதன் வழியாக நான் கண்காணிக்கிறேன். என்னுடைய டைரிக்குறிப்புகள் எல்லாமே ஒரே கேள்வியுடன் தான் ஆரம்பிக்கின்றன. அந்த நாளை நான் எப்படிச்செலவிட்டேன்? எழுதுவது, படிப்பது, பயணம்செய்வது ஆகியவற்றைச் செய்யும் நாளை மட்டுமே நான் என்னுடைய நாளாக எண்ணிக்கொள்கிறேன்.
பிற நாட்கள் எல்லாமே வீண்தான் எனக்கு. வீடுகட்டும் வேலைகள், அலுவலகவேலைகள், உறவுகளைப் பார்க்கப்போவது, கல்யாணங்கள், சடங்குகள் எல்லாமே என் நோக்கில் நாளை வீணடித்தலாகவே பொருள்படுகிறது. அவ்வகையில் நான் நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட நாளைப்பற்றி மகிழ்ச்சியுடன் குறித்திருக்கிறேன். அப்படி அல்லாத நாட்களைப் பற்றி சோர்வுடன் எழுதியிருக்கிறேன்.
இப்போது என் டைரிகளை எடுத்துப்புரட்டும்போது ஆச்சரியமாக இருக்கும் விஷயம் ஒன்று உண்டு. மிகப்பெரும்பாலான நாட்களை ‘இன்று உற்சாகமான நாள். இன்று …. எழுதினேன்.’ என்ற வகையான சொற்றொடருடன்தான் ஆரம்பித்திருக்கிறேன். கடந்த பதினைந்து வருடங்களில் நான் உற்சாகமில்லாமல் இருந்த நாட்கள் மிகமிகக் குறைவு. எழுதாமல் வாசிக்காமல் பயணம்செய்யாமல் அன்றாட வாழ்க்கையில் வீணடித்த நாட்கள் ஒருசதவீதம் கூட இருக்காது. மகிழ்ச்சியின் பரப்பிலேயே இந்நாட்களை முழுக்கக் கழித்திருக்கிறேன் என்பதை எண்ணும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
அதற்கு நான் முக்கியமாக அருண்மொழிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்பதையும் இந்த டைரிகள் காட்டுகின்றன. எனக்கும் அருண்மொழிக்கும் இடையேயான பெரிய மனக்கசப்பு அல்லது பூசலின் நாட்கள் ஒன்றுகூட பதிவுபெறவில்லை. அப்படி ஒரு குறிப்பிடத்தக்க மோதல் எதுவும் இந்த பதினேழு வருடங்களில் எங்களுக்கிடையே நிகழவேயில்லை. பெரும்பாலான தருணங்களில் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்கள் என் வரையில் வந்துசேராமல் அவளே பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்னுடைய உறவினர்கள் அனைவரிடமும் மிக நல்ல உறவை தெளிவாக மேற்கொண்டு அதன் விளைவான மனச்சிக்கல்கள் ஏதும் விளையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இரண்டாவதாக, இந்த வருடங்கள் முழுக்க கீதை எனக்களித்திருக்கும் ஊக்கத்தைச் சுட்டிக்காட்டவேண்டும். 1987 ல் நான் காஸர்கோட்டில் இருக்கும்போது என் யோக சாதனையில் முழுமை கைநழுவிப்போய்க்கொண்டே இருந்ததனால் கடும் மனஉளைச்சலுக்காளாகி ஊரைவிட்டுக் கிளம்பி நெடும் அலைச்சலை அடைந்து சோர்ந்து கர்நாடக மாநிலத்தில் தார்வாட் அருகே ஒரு ஊரில் இருக்கையில் கீதையை மீண்டும் வாசித்தேன். அங்கிருந்து வேறு ஒருமனிதனாக எழுந்த நாள்முதல் இக்கணம் வரை என்னுடன் கீதை இருந்துகொண்டிருக்கிறது.
இந்த இருபது வருடங்களாக எனக்கு சோர்வென்பதே இல்லை. நான் ஒரு கணம்கூட சலிப்பையும் விரக்தியையும் உணர்ந்ததில்லை. எந்த விளைவுக்காகவும் நான் மனம் தளர்ந்ததில்லை. இந்த இருபது வருடங்களில் எத்தனையோ எதிரிகள் உருவாகி இருக்கிறார்கள், மறைந்திருக்கிறார்கள், மீண்டும் எதிரிகள் உருவாகியிருக்கிறார்கள். என் மீது வசைகள் கொட்டப்பட்டிருக்கின்றன. அவதூறுகள் பொழியப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் எப்போதும் நகைச்சுவையுடன் மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த டைரிகளில் நான் ஒருமுறைகூட ஒரு தாக்குதலைக்கூட பொருட்படுத்தி ஏதும் எழுதியதில்லை என்பதைக் காண எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னை ஓயாது தாக்கி எழுதிய பலரின் பெயரையே இந்த டைரிகளில் காணமுடியவில்லை.
என்னுடைய கர்மங்களின் தளத்தில் எப்போதும் தீவிரமாக இருந்துகொண்டிருப்பவன் நான். தீவிரம் இன்றி எதையுமே சாதிக்க முடியாதென உணர்ந்தவன். ஆனால் உள்ளூர இந்த ஆட்டம் ஒருவகை விளையாட்டு மட்டுமே என்ற உணர்வுடன்தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஆகவேதான் இதை உள்ளூரப் பொருட்படுத்தாமல் இருக்கிறேன்.
இந்த டைரிகளைப் புரட்டும்போது என் பார்வையில் முக்கியமாகப் பட்டிருப்பதைப் பார்க்கையில் என்னை எனக்கு பார்க்க முடிகிறது. குழந்தைகளைப் பற்றி எழுதித்தள்ளியிருக்கிறேன். நாய்களைப்பற்றி குறிப்பு இல்லாத நாளே இல்லை. இந்த டைரிகளை வைத்தே என் நாய்களுக்கு எப்போதெல்லாம் வயிறு சரியில்லாமல் இருந்தது என்று பட்டியலிட்டுவிடலாம் என்றாள் அருண்மொழி. இந்த டைரிகளில் பல இடங்களில் வெயில், மழை, இனிய காலை நேரங்கள் பற்றிய உணர்ச்சிகரமான சித்திரங்கள் உள்ளன. பயணம்போன ஊர்களைப்பற்றிய அற்புதமான வர்ணனைகள் உள்ளன. தற்கொலைக்குத்தப்பிய் ஒருவருக்கே இந்த பூமி என்பது எத்தனை பெரிய ஆனந்தவெளி என்பது புரியும்.
அத்துடன் அருண்மொழியைப் பற்றிய வர்ணனைகள் நெகிழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கின்றன. என்னை மணம் செய்யும்போது அவள் மிகச்சிறிய பெண். இருபது அப்போதுதான் முடிந்திருந்தது. மன அளவில் பதினெட்டு எனலாம். அவளுடைய வளர்ச்சியின் சித்திரத்தை முழுமையாக இந்த டைரிகளைக் கொண்டு உருவாக்கிவிடலாம்.
சென்ற 2008 ஜனவரி பதினாறு அன்று கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து திரும்பி வந்திருக்கிறேன். நாகர்கோயில் வந்ததே தெரியாமல் தூங்கி யாரோ ஒருவரால் தட்டி எழுப்பப்பட்டு பதறியடித்து இறங்கியிருக்கிறேன். ஆதிமூலம் இறந்த செய்தி இரவில் ரவி சுப்ரமணியத்தின் குறுஞ்செய்தியாக வந்திருக்கிறது. காலைவில் வீடுவந்துசேர்ந்தபோது அதைக் கண்டேன் அவரைப்பற்றிய நினைவுகள் அலைந்தன மனதில்.
ஆதிமூலம் பற்றி ஒரு குறுங்கட்டுரை எழுதி என் இணையதளத்தில் போட்டிருக்கிறேன். நாகார்ஜுனனுக்கு அவரைப்பற்றி நான் நகைச்சுவையாக எழுதியது ஒருவகை எழுத்துமுறையே ஒழிய அவர்மீதான விமரிசனம் அல்ல என்று ஒரு நீள்கடிதம் போட்டிருக்கிறேன். அலுவலகம் சென்று சுரேஷிடமும் பாலாவிடமும் ஷாஜியிடமும் பேசியிருக்கிறேன். ‘தி மாஸ்டர் கிறிஸ்ட்டியன்’ என்ற நாவலையும் ‘சீவசிந்தாமணியை’யும் படித்திருக்கிறேன்.
பழைய டைரிகளை எடுத்து வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். சென்ற நாட்கள் வழியாக உலவுவது ஓர் இனிய அனுபவம். சென்ற காலம் போல கனவுத்தன்மை கொண்ட ஒன்று வேறு இல்லை. நாம் தொடமுடியாத ஓர் உலகம். ஆனால் நாம் இருந்துகொண்டிருக்கும் உலகமும் கூட.
1991ல் டைரி ஆரம்பிக்கும்போதே ஒரு கவிதைவரி. ‘பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலனழிந்தொரு புத்துயிர் எய்துவேன்’ அருண்மொழியின் காதல் வெறியுடன் இருந்த காலகட்டம் அது. ஏராளமான கவிதைகள். ஜனவரி 15 ஆம் தேதி ஒரு கவிதை. தலைப்பில்லாதது
மௌனமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சிறு குருவி போல இயல்பான எச்சரிக்கையுடன்
கவனிக்கப்படாத அழகின் அத்தனை நளின சலனங்களுடன்
கோயில்சிற்பத்தின் சலனமில்லா முழுமையுடன்
அமர்ந்திருக்கிறாள்
ஒரு பெண் மட்டுமல்ல அவள் என்பதுபோல
மௌனமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
முடிவற்ற இந்தக்கணத்தில்
இப்படியே ஸ்தம்பிக்க வேண்டும் இந்த மாலை
என் கண்கள் என் சித்தம் என் தூய இளமை..
மானுடக்கனவின் முடிவிலாத திரையில்
இப்படியே படிந்திருக்கவேண்டும் இவள் வடிவம்
நிரந்தரமாய்
நிலையற்றதென ஒவ்வொருகணமும் கூவியபடி .
*
அனேகமாக இக்கவிதையை இதுவரை அருண்மொழி மட்டுமே படித்திருப்பாள் என நினைக்கிறேன்.
அதற்கு அடுத்தநாள், ஜனவரி 16 அன்று காலிப்பக்கம். முந்தையநாள் அடைந்த மன எழுச்சியின் மறுபக்கம் அது. பொங்கிய கடல் அடங்குகிறது. ஒருவரிகூட எழுத முடியாத வெறுமையின் இன்பம். அவ்வருடம் ஆகஸ்ட் 8 அன்றுதான் அருண்மொழியை மணம்புரிந்துகொண்டேன்.
1992-ல் ஜனவரி 16 ஆம்தேதி அருண்மொழி ஜனவரி 17 அன்று அவள் அம்மாவீட்டுக்குச் செல்லப்போகும் மனநிலையில் உற்சாகமாக இருக்கிறாள். அவள் பிரிவை விசித்திரமாகக் கற்பனை செய்துகொண்டு சற்று சீண்டப்பட்டு நான் எழுதியிருக்கிறேன். என்னைப் பிரிந்துபோவது அத்தனை உற்சாகமா அவளுக்கு என்ற தொனியில். ஆனால் தாயைப் பார்க்கப்போவது யாருக்கும் உற்சாகமானதுதானே என்ற சமாதானமும் எழுதப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரத்தை எடுத்து படித்துப்பார்த்து சில பகுதிகளை திருப்பி எழுதியிருக்கிறேன்.
1993-ல் ஜனவரி 16 அன்று மதுரை பெருங்குடி கிராமத்தில் இருந்தேன். அருண்மொழி தபால்துறையில் வேலை கிடைத்து பயிற்சிக்காக வந்திருந்தாள். அஜிதனைக் கருவுற்றிருந்தாள். எட்டு மாதம். சுரேஷ்குமார இந்திரஜித் பிடித்துக்கொடுத்த வீடு. அருண்மொழியின் அப்பாவும் அம்மாவும் வந்து அவளுடன் அங்கே தங்கியிருந்தார்கள். நான் நேற்று பெருங்குடி வந்து அங்கே தங்கியிருந்தேன். பகலில் அருண்மொழி வகுப்புக்குச்செல்ல நான் பகலெல்லாம் வீட்டில் இருந்து கன்னடநாவல் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ [எஸ்.எல்.பைரப்பா] வாசித்துக் கொண்டிருந்திருக்கிறேன். மாலையில் செம்பிழம்பாக சூரியன் அஸ்தமிக்கும் பெருங்குடி ஏரிக்கரை ஓரமாக நானும் அருண்மொழியும் நடந்து சென்றிருக்கிறோம்.
1994-ல் ஜனவரி 16 ஆம்தேதி மதுரையில் இருந்திருக்கிறேன். வைகை சிவராமன் வீட்டில். சுந்தர ராமசாமியும் கூட இருந்தார். இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு காலையில் எழுந்து மீண்டும் பேசி பின்மதியத்தில் நான் அங்கிருந்து கிளம்பினேன். இரவு பன்னிரண்டு மணியளவில் பட்டுக்கோட்டைக்கு வந்தேன். எடித் வார்ட்டன் என்ற நாவலாசிரியரைப்பற்றி சிவராமன் சொல்லி அவரது ஒரு சிறுகதைத் தொகுதியைத் தந்தார். அந்த நூலை பஸ்ஸில் படித்துக்கொண்டே வந்தேன். சுந்தர ராமசாமியுடனான என் உரையாடல்களை ஒரு தொகுப்பாக எழுதினாலென்ன என்ற எண்ணத்தை எழுதியிருக்கிறேன். அது முழுக்க முழுக்க என் அனுபவம் சார்ந்ததாக இருக்க வேண்டும். என்னுடைய எதிர்கொள்ளல்களும் அதில் இருக்க வேண்டும்.
1995-ல் ஜனவரி 16 ஆம் தேதி காலையில் பட்டுக்கோடையிலிருந்து நானும் அருண்மொழியும் அஜிதனும் என் மாமனாருமாக கிளம்பி புதுக்கோட்டை அருகே அருண்மொழியின் அத்தை விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்றோம். மதியம்தான் சென்றுசேர்ந்தோம். போகும் வழியில் அருண்மொழி அழகாக இருப்பதாக உணர்ந்து பரவசம் கொண்டதைப்பற்றி ஒரு பெரும் வர்ணனை
அஜிதனுக்கு அங்கிருந்த கீபோர்டு பொம்மை மிகவும் பிடித்துப்போக பகல் முழுக்க ஒரே கீய்ஞ் கீய்ஞ் என்ற ஒலி கேட்டபடியே இருந்தது. அஜிதனின் குணத்தில் ஒரு சிறப்பம்சத்தைக் கவனித்தேன். அருண்மொழியின் அத்தையின் மகன் மோகன் போடும் பந்தைப்பிடிக்க அஜிதன் முயல்கிறான். பிடிக்க முடியாதபோது வேணாம் என்று விட்டுவிட்டு திரும்பிக்கொள்கிறான். மோகனே பந்தைக் கொடுப்பான் என எதிர்பார்க்கிறான். பெரியவர்களிடம் மட்டுமே விளையாடியதனால் வந்த குணம் அது என்று எழுதியிருக்கிறேன்.
1996-ல் ஜனவரி 16 ஆம் தேதி காலையில் பட்டுக்கோட்டையில் இருந்து தருமபுரி வந்தேன். அருண்மொழியின் பெரியப்பா ராஜப்பா தற்கொலை செய்துகொண்டமையால் அவர்கள் வீட்டில் அவ்வருடம் பொங்கல் இல்லை. சும்மா ஊருக்குப்போய் இருந்துவிட்டு பேருந்தில் திரும்பிவந்தோம். அருண்மொழி விடுப்பு எடுத்து படுத்துவிட்டாள். நான் தூங்கி எழுந்து கொஞ்சநேரம் வாசித்துவிட்டு மாலை நான்கு மணி நாற்பது நிமிடத்தில் தொடங்கும் வேலைக்கு வந்துவிட்டேன்.
1997-ல் ஜனவரி 16 ஆம் தேதி முழுக்க சிறுகதை ‘தாண்டவ’ த்தை பிரதியெடுப்பதில் செலவாகியிருக்கிறது. கதையில் நிறைய கிளீஷேக்கள் இருப்பதாக அருண்மொழி சொல்லியிருக்கிறாள். ஆகவே சற்றே மனம் சோர்ந்து அதை உடனே தபாலில் சேர்க்க வேண்டாமென முடிவுசெய்து கதையை மறு அமைப்பு செய்தாலென்ன என்று எண்ணியிருக்கிறேன். ஆனால் ஒன்றும் தோன்றவில்லை. ‘கரியபறவையின்குரல்’ என்ற என்னுடைய கதை நன்றாக இருக்கிறதென்று செல்வம் என்ற மொரப்பூர் நண்பர் தொலைபேசியில் சொன்னார்.
1998-ல் ஜனவரி 16 ஆம் தேதி நான் ஆனந்த் என்ற நண்பருடன் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். ஆற்றூர் இருப்பாரெனச் சொல்லபப்ட்ட விடுதியில் ஆற்றூர் ரவிவர்மா வந்து சேர்ந்திருக்கவில்லை. ஆகவே அப்படியே திருவையாறுக்குச் சென்றிருக்கிறோம். ஆற்றூர் திருவையாறிலும் இல்லை. அருண்மொழியிடம் கிளம்பி தஞ்சை வரச்சொல்லி போன்செய்தேன். தனியாக எப்படி வருவது என்று அவள் சொல்ல கோபித்துக்கொண்டு ·போனை வைத்துவிட்டேன். ஆற்றூர் திருவையாற்றுக்கு வந்தார். காலையில் தஞ்சை பெரியகோயிலுக்குச் சென்றாராம்.
அருண்மொழியிடம் கோபித்துக்கொண்டு மதியம் சாப்பிடாமல் இருந்தேன். அருண்மொழியிடம் மீண்டும் ·போனில் பேசினேன். சாப்பிட்டாயா என்றாள். இல்லை என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டேன். மாலை ஆறுமணிக்கு அருண்மொழி தனியாகவே கிளம்பி வந்துவிட்டிருந்தாள். வந்ததுமே என்னை அழைத்துச் சென்று டிபன் சாப்பிட வைத்தாள். அவள் வந்த பிறகுதான் மனம் இசையில் சென்றது. ராஜ்குமார் பாரதி நன்றாக பாடினார். இரவு ஒன்பது மணிக்கு புல்லாங்குழல் ரமணி. இரவு 12 மணிக்குக் கிளம்பி இருவருமாக வீடு திரும்பினோம்.
2000 ஜனவரி 16 அன்று கன்யாகுமரி நாவலை மிகுந்த ஊக்கத்துடன் எழுதிக்கொண்டிருந்திருக்கிறேன். பின்தொடரும் நிழலின் குரலுக்கு நல்ல எதிர்வினைகள் வரவில்லை என்ற மனக்குறையை அடுத்த நாவலை எழுதுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறேன். கன்யாகுமரி நன்றாக வந்துகொண்டிருக்கிறது என்ற திருப்தி பதிவாகியிருக்கிறது. வசந்தகுமாரிடம் அந்நாவலைப்பற்றி நிறையப் பேசியிருக்கிறேன்.
2006 ஜனவரி 16 அன்று எர்ணாகுளத்தில் இருந்தேன். ‘ஹோட்டல் பெரியாறு’. லோஹித தாஸ் ஒரு திரைப்படம் குறித்து யோசிப்பதற்காக வரச்சொல்லியிருந்தார். சிறுநீரகச் சிக்கலால் பிற்பாடு மறைந்த பிரமோத் என்ற நண்பர் காலையில் தேடிவந்தார். இசையைப்பற்றியும் மலையாளப்படங்களைப் பற்றியும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். லோகித் தாஸும் அவர் மகன்களும் காரில் வந்தார்கள். அவர்களுடன் ஆலுவா அருகே இருந்த அவரது வீட்டுக்குச் சென்றேன். லோஹித தாஸின் மனைவி சோர்ந்த நிலையில் இருந்தார். கஸ்தூரிமானின் நஷ்டம் அவர்களுக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை அளித்திருக்கிறது. இரவு ஊருக்குக் கிளம்பினேன்.
2007 ஜனவரி 16 அன்று நானும் சண்முகமும் காரில் கொடைக்கானல் சென்றோம். 10 மணிக்கு ஆப்சர்வேட்டரி அருகே வித்ரா தங்கும் விடுதியை அடைந்தோம். அங்கே செந்தில், கிருஷ்ணன், சிவா ஆகியோர் இருந்தார்கள். அழகிய பங்களா அது. அதில் தங்கினோம். மதியம் சாப்பிட்ட பின் கிளம்பி மலையேறுவதற்காகச் சென்றோம். மாலையில் பங்களா முன்பாக கேம்ப் ஃபயர் போட்டுக்கொண்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாலாவும் கும்பலும் அலஹாபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாகத்தகவல் வந்தது.
2008 ஜனவரி 16 அன்று சென்னையில் பிரதாப் பிளாஸா ஓட்டலில் தங்கியிருந்திருக்கிறேன். புத்தகக் கண்காட்சி நடக்கிறது. புத்தகக் கண்காட்சிக்கு எஸ். ராமகிருஷ்ணனும் ஆர்தர் வில்சனும் வந்தார்கள். நண்பர் இளங்கோ கல்லானை, அவரது வட இந்திய மனைவி புதிய குழந்தை ஆகியோரை புத்தகக் கண்காட்சியில் பார்த்தோம். கெ.பி.வினோத் அன்பு ஆகிய நண்பர்களும் இருந்தார்கள். புத்தகக் கண்காட்சிக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.,
பல டைரிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்காவது அருண்மொழி எடுத்து வைத்திருப்பாள். அருண்மொழியை திருமணம் செய்வதற்கு முன்பு எழுதிய எண்பதுகளைச்சேர்ந்த டைரிகள் நிலையான குடியிருப்பு இல்லாமல் அலைந்த காலத்தில் தொலைந்துபோய்விட்டன. ஒரு கத்தை டைரிகள் எலியால் சுரண்டப்பட்டு அழிந்தன. டைரிகள் கைப்பிரதிகள் அச்சுவடிவங்கள் நூல்கள் எவற்றையுமே நான் சேர்த்து வைப்பதில்லை.
டைரி எழுதுவது ஒரு எளிய கணக்கெடுப்பு மட்டுமே. கணக்கிடப்படுவது நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை, நாம் செலவிட்ட காலம்..
[மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 19, 2009 ]