‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7

சகுனி இறங்கி வந்தபோது கீழே கிருதவர்மன் நின்றிருப்பதை கண்டார். கிருதவர்மன் புரவியிலிருந்து இறங்கி அவரை நோக்கி வந்து அவர் கையைப் பற்றி இறுதிப் படியிலிருந்து கீழிறங்க உதவினான். மூச்சிரைக்க அவன் தோளைப் பற்றியபடி தலைகுனிந்து நின்று இளைப்பாறிய பின் சகுனி “படைசூழ்கை அமைக்கப்படுகிறதா?” என்று கேட்டார். அவ்வினாவிலிருந்த தயக்கத்தை புரிந்துகொண்டு கிருதவர்மன் அவர் மேலே ஏன் சென்றார் என்று கேட்காமல் “ஆம்” என்றான்.

“படைசூழ்கை இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும், காந்தாரரே. மழையீரத்தால் பந்தங்களை ஏற்ற இயலவில்லை. எங்கும் எரியும் பொருளென எதுவுமில்லை. ஓரிரு சிறு திரிகளை மட்டுமே கொளுத்த முடிந்துள்ளது. அவற்றைக்கொண்டு படையை ஒருங்கமைப்பதென்பது எளிய செயல் அல்ல. ஆனால் அஸ்வத்தாமனால் அதையும் திறம்பட செய்ய முடிகிறது” என்றான். அலையும் விளக்கொளிப் புள்ளிகளை சுட்டிக்காட்டி “அவை அஸ்வத்தாமனின் சொற்கள்” என்றான்.

சகுனி இடையில் கைவைத்து நின்று இருளுக்குள் உலாவிக்கொண்டிருந்த ஒளிப் புள்ளிகளை கோடுகளாக்கி, வடிவங்களாக்கி பார்த்தார். கிருதவர்மன் “அவை இறந்த விலங்குகளின் ஊனை வழித்து ஊற்றி எரிக்கப்படும் விளக்குகள்” என்றான். சகுனி புன்னகைத்து “நன்று, புரவிகளும் யானைகளும் இவ்வண்ணம் கனலுருக்கொண்டு உலாவ இயல்வது அரிய காட்சிதான்” என்றார். கிருதவர்மன் உரக்க நகைத்து “நேற்று அத்தனை மானுட உயிர்களும் இணைந்து ஒற்றைப் பேரழலாக குருக்ஷேத்ரத்தில் எரிந்தன” என்றான்.

சகுனி “இப்படைசூழ்கை என்னால் எவ்வளவு எண்ணம் ஓட்டி நோக்கியும் புரிந்துகொள்ள முடிவதாக இல்லை. பெருஞ்சூழ்கையின் இலக்கணம் என்ன?” என்றார். “பெரும்படைசூழ்கை… உண்மையில் அதற்கு என்ன பொருள்?” கிருதவர்மன் “வழக்கம் போலத்தான். வில்லேந்தியவர்கள் பின் நிரையிலும் வேலும்வாளும் ஏந்தியவர்கள் முன் நிரையிலும் இருப்பார்கள். தேர்ப்படை அவர்களைக் காத்தபடி சூழ்ந்திருக்கும். தேவையானபோது காலாட்படைகள் இடைவெளிவிட்டு பாதை அமைக்க அவற்றினூடாக வில்லவர்கள் முன்னெழுந்து போரிடுவார்கள்” என்றான்.

“அவர்கள் என்ன சூழ்கை அமைக்கப் போகிறார்கள் என்று எண்ணம் ஏதேனும் உண்டா?” என்று சகுனி கேட்டார். “இன்றைய சூழலில் அதை எவரும் சொல்ல இயலாது. முதலில் நாம் படைகொண்டு எழுகிறோமா என்ற ஐயமே அவர்களுக்கு இருக்கும்” என்று கிருதவர்மன் சொன்னான். “இல்லை, அங்கு நோக்குக!” என்று சகுனி சுட்டிக்காட்டினார். மறுபுறம் பாண்டவப் படைகளுக்குள் நெய்யகல்கள் அங்குமிங்கும் அலையத் தொடங்கிவிட்டிருந்தன.

“மின்மினிகள்” என்று கிருதவர்மன் சொன்னான். “இளஅகவையில் என் மூதன்னை கதை சொல்கையில் காட்டில் உயிர்நீத்த விலங்குகளின் ஆத்மாக்கள்தான் மின்மினிகளாக மாறி பறந்தலைகின்றன என்பார்கள். அத்தனை விலங்குகளும் பறத்தலை கனவுகாண்கின்றன. ஆகவேதான் தாவுகின்றன. கைகளையும் வால்களையும் சிறகுகளாக நடிக்கின்றன. இறந்தபின் சில நாட்கள் காட்டில் ஒளிர்ந்து பறந்தலைந்து தங்கள் விழைவை நிறைவுசெய்தபின் அவை விண்ணேகுகின்றன” என்றான்.

“மின்மினிகளின் போர் நிகழப்போகிறதா என்ன?” என்று சகுனி கேட்டார். கிருதவர்மன் அதை செவிகொள்ளவில்லை. சகுனி இருமிக்கொண்டார். நிமிர்ந்து வானை நோக்கியபின் “இத்தனை கூரிருள் இயல்பானதல்ல. மழைமுகில் செறிந்து இருள் பெறுவதுண்டு. ஆனால் இது கருக்கிருளைவிட அடர்ந்ததாக இருக்கிறது. மழையில் இத்தகைய செறிவு ஒருபோதும் கூடுவதில்லை” என்று கிருதவர்மன் சொன்னான். சகுனி புரவியை நோக்கி சென்று அதன் மேல் ஏறியமர்ந்தபின் “ஒருவேளை அரசர் சொல்வது உண்மையாக இருக்கலாம். தன் மைந்தனின் இறப்பினால் துயருற்று கதிரவன் விண்ணில் ஒளிந்துகொண்டிருக்கலாம்” என்றார்.

“எனில் இன்று போர் நிகழாதா?” என்று கிருதவர்மன் கேட்டான். “நிகழாதிருக்க இயலாது. கதிரவனுக்கும் வஞ்சமிருக்கும்” என்றபின் சகுனி புரவியை செலுத்தினார். இருவர் புரவிகளும் படைகளினூடே செல்ல இருமருங்கும் கௌரவப் படையினர் கவசங்களை அணிந்துகொண்டும் படைக்கலங்களை சூடிக்கொண்டும் இருந்தனர். அவர்களின் அசைவுகளில்கூட விலங்குகள்போன்ற ஒத்திசைவின்மை இருந்தது. எவரிடமும் முறையான கவசங்கள் இருக்கவில்லை. கிடைத்த உலோகங்களை நெஞ்சிலும் முதுகிலும் தலையிலும் அணிந்துகொண்டார்கள். அவை அனலில் உருகி நெளிந்திருந்தன.

அவர்களின் விழிகள் வெறிப்பு கொண்டிருந்தன. உடலில் கரிய சாம்பல்சேறு படிந்திருந்தது. பல இடங்களில் பச்சைஊனையே கிழித்து உண்டுகொண்டிருந்தனர். இருளில் அவர்கள் பேயுருக்கள்போல் அமர்ந்து வாளால் பச்சைஊனை துண்டு போட்டு உண்பதையும், கைகளால் கிழித்து இழுத்து கடித்து மென்று சுவையுடன் உறுமிக்கொள்வதையும் கண்டு சகுனி பாலையின் ஓநாய்களை நினைவுகூர்ந்தார்.

கிருதவர்மன் அவர்களை நோக்கியபடி “இனி கடக்க வேண்டிய எல்லையென ஏதுமில்லை” என்றான். சகுனி “எப்போதும் மேலும் கடக்க வேண்டிய எல்லைகள் சில இருக்கும். எந்த எல்லைக்கப்பாலும்” என்றார். தொலைவில் அஸ்வத்தாமன் விசையில்லாமல் புரவியில் வருவது தெரிந்தது. கிருதவர்மன் “பாஞ்சாலர்” என்றான். சகுனி புரவியை இழுத்து நிறுத்தினார்.

அவர்களை நோக்கி வந்து விசையழிந்த அஸ்வத்தாமன் “சல்யர் பீஷ்ம பிதாமகரின் நல்வாழ்த்தைப் பெற்று களம்புக விரும்புகிறார்” என்றான். “ஆம், அவரை மறந்தேவிட்டோம்” என்று சகுனி சொன்னார். “இன்றைய போரில் அவருடைய சொற்களைப் பெறுவது இன்றிமையாதது.” அவரை திரும்பி நோக்கி “இன்று என்ன நிகழும் என்று எண்ணுகிறீர்கள்?” என்று கிருதவர்மன் கேட்டான். சகுனி நகைத்து படைகளை சுட்டிக்காட்டி “இந்த அளவை பார்த்தால் எவருக்கும் தெளிவிருக்கும், இன்றுடன் போர் முடியும். நாம் வெல்வோம், அன்றி அவர்கள் வெல்வார்கள்” என்றபின் மேலும் உரக்க நகைத்து “பெரும்பாலும் இரு தரப்பினரும் தோல்வியுறுவோம்” என்றார்.

கிருதவர்மனும் உடன் நகைத்து “எனில் இரு தரப்பினருமே வென்றோம் என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?” என்றான். சகுனியும் நகைக்க அஸ்வத்தாமன் ஒவ்வாமையுடன் பற்களைக் கடித்து தலை திருப்பி “அரசர் கவசங்களை அணிந்துவிட்டார். அவர் கிளம்பிக்கொண்டிருக்கிறார். நாம் அவரை அழைத்துக்கொண்டு பீஷ்ம பிதாமகரின் படுகளத்திற்கு செல்லவேண்டும். கணியர்கள் எத்தருணத்திலும் வானில் கதிரவன் ஒளியெழக்கூடும் என்கிறார்கள். கிழக்கு விளிம்பில் முகில்கணங்களில் கருமை வெளிறத் தொடங்கியிருக்கின்றன என்றார்கள்” என்றான்.

சகுனி “ஆம், இன்னும் ஒரு நாழிகைக்குள் போர் தொடங்கிவிடுமென்றே நானும் எண்ணுகிறேன்” என்றார். அச்சொற்கள் அவர்கள் உள்ளத்தில் போரை நிகழ்த்திக்காட்டத் தொடங்க சொல்லிழந்து அமைதிகொண்டனர்.

 

அவர்கள் குளம்பொலிகள் எழ படைகளின் நடுவிலூடாக துரியோதனனின் பாடிவீடு இருந்த இடத்திற்கு சென்றனர். தொலைவில் துரியோதனன் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டு “தனியாக அமர்ந்திருக்கிறார். ஏவலர்கள் எங்கே?” என்றார் சகுனி. இரு ஏவலர்கள் வந்து துரியோதனனுக்கு எதையோ பூட்டத்தொடங்கினர். துரியோதனன் அதை அறியாதவன்போல் அமர்ந்திருந்தான். அவன் உடலில் அசைவே எழவில்லை. “ஏற்கெனவே கவசங்களை அணிந்திருக்கிறார்” என்றார் சகுனி.

அவர்கள் அருகணைந்து புரவியிலிருந்து இறங்கியதும் கிருதவர்மன் மெல்லிய வியப்பொலி எழுப்பினான். சகுனி நோக்கியபோது நேர் மறுபக்கமிருந்து கவசங்கள் அணிந்து இரு வீரர்கள் தொடர தலைக்கவசத்தை கையிலேந்தியபடி துரியோதனன் வந்துகொண்டிருந்தான். திகைப்புடன் திரும்பி மறுபக்கம் பார்த்த சகுனி அதன் பின்னரே அங்கே துரியோதனனாக இருந்தது ஓர் இரும்புப்பாவை என்று கண்டார். “இதை இங்கே கொண்டுவந்திருக்கிறார்களா?” என்றார்.

“அந்தப் பாவையா? இங்கு கொண்டுவரப்பட்டதா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். புரியாமல் “எது?” என்றான் கிருதவர்மன். “பீமனை களத்தில் கொல்லும்பொருட்டு அரசர் நெடுநாட்களாக பயிற்சி எடுக்கிறார் என்று சொன்னார்கள். பீமனின் எடையும் அளவும் கொண்ட இரும்புப்பாவை ஒன்றை வைத்து மற்போர் பயில்கிறார் என்றும் சொன்னார்கள்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருதவர்மன் அந்தப் பாவையை கூர்ந்து நோக்கியபடி அருகே சென்றான். அஸ்வத்தாமன் “நானும் முதலில் அதை கதையென்றுதான் எண்ணினேன்” என்றான். “அரண்மனைக்குள் தனக்கென அறையொன்றை உருவாக்கி அதற்குள் பயிற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார். அதை இங்கும் கொண்டுவந்து பாடிவீட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்.”

கிருதவர்மன் அப்பாவையை கூர்ந்து பார்த்து “ஆனால் இது பீமனைப்போல இல்லை. அரசரைப் போலவே தோன்றுகிறது” என்றான். சகுனி “அவர்களிருவரின் உடல்களும் ஒன்றுக்கொன்று நிகரானவை என்பது சிற்பக்கணக்கு. நிழல்களைப் பார்த்தால் இருவரும் ஒருவரே என்று தோன்றும் என்றும் சொல்வார்கள்” என்றார். “அவர் நிழலுடனா போர்புரிந்து பயிற்சி எடுத்தார்?” என்று கிருதவர்மன் கேட்டான். “எல்லா போரும் நிழல்களுடன்தான்” என்றார் சகுனி. அஸ்வத்தாமன் “நான் எனது ஒளி வடிவுடன் போர்புரிந்து பயின்றவன், காந்தாரரே” என்றான். அவன் சொல்வதென்ன என்று புரியாமல் நோக்கியபின் மேலும் எண்ணம் ஓட்டாமல் சகுனி திரும்பிக்கொண்டார்.

அவர்கள் அந்த இரும்புப்பாவை அருகே சென்று நின்றனர். அஸ்வத்தாமன் அந்தப் பாவையை ஒருகணம் பார்த்துவிட்டு கடந்து துரியோதனனை நோக்கி நடந்தான். சகுனி குனிந்து அந்தப் பாவையின் தோள்களையும் கைகளையும் பார்த்தார். “இது இங்கே எங்கிருந்தது?” என்று கேட்டார். ஏவலன் “அரசரின் தனிக்குடிலுக்குள் இருந்தது. சற்று முன்னர்தான் அவர் இதை தேடிக்கொண்டுவரும்படி சொன்னார். எரிபரந்தெடுத்தலால் பாடிவீடு எரிந்து சரிந்தபோது இது உள்ளே சிக்கிக்கொண்டது. சாம்பலுக்குள் கண்டெடுத்தோம்” என்றான்.

“இதன் உள்ளிருக்கும் தோல்பட்டைகள் எரிந்து விட்டமையால் தனித்தனியாகக் கிடந்தது. எடுத்து பூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார்” என்றான் இன்னொரு காவலன். சகுனி குனிந்து அப்பாவையை பார்த்துக்கொண்டிருந்தார். “இளஅகவையில் இவ்வாறுதான் அவன் உடல் இருந்தது. துரியோதனனும் இளமையில் இவ்வண்ணமே இருந்தார்” என்றார். அவர் உதடுகள் ஏளனம்போல் வளைந்தன. “இளமையை இதில் தேக்கி வைத்திருக்கிறார். அவ்விளமையுடன் போரிடுகிறார்.” கிருதவர்மன் “இதை வடித்தவர் எவராயினும் அச்சிற்பி இருவருடனும் உரையாடியிருக்கிறார்” என்றான்.

சகுனி “இச்சிலையுடன் போரிட்டு துரியோதனனைக் கொல்லும் கலையை பீமனும் கற்றுக்கொண்டிருக்கலாம்” என்று தனக்குத்தானே சொன்னார். கிருதவர்மன் “அவர்கள் இருவரையும் இச்சிலையுடன் தனித்தனியாக போரிட வைத்து எவர் வெல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது” என்றான். சகுனி திரும்பி நோக்கி புன்னகைத்து “இருவருமே வெல்லமாட்டார்கள்” என்று சொன்னார். “ஏன்?” என்று கிருதவர்மன் கேட்க சகுனி “அவ்வாறு வெல்ல இயலுமா என்ன? தனது அச்சத்தை வெல்பவர் எவரேனும் இப்புவியில் உண்டா?” என்றார். கிருதவர்மன் திரும்பி சிலையைப் பார்த்தபின் ஆமென்று தலையசைத்தான்.

அஸ்வத்தாமன் தொடர துரியோதனன் அருகணைந்து அந்தப் பாவை முன் வந்து நின்றான். சகுனி “இதை இங்கே நான் பார்த்ததே இல்லை” என்றார். “இங்குதான் இருக்கிறது” என்ற துரியோதனன் “இதுவும் போர்க்களத்தை எதிர்நோக்கி காத்திருந்தது” என்றான். புன்னகையுடன் குனிந்து அதன் முகத்தை பார்த்து, பின்னர் திரும்பி அருகே நின்றிருந்த ஏவலனிடம் “சுடர்!” என்றான். ஏவலன் சற்று அப்பால் உடைந்த ஊன்கலத்தால் மூடப்பட்டிருந்த சிற்றகலை அக்கலத்துடன் மெதுவாக எடுத்துக்கொண்டு அருகே வந்தான். சிலையின் முகத்தருகே காட்டும்படி துரியோதனன் ஆணையிட அவன் சுடரை சற்று தூக்கினான்.

கிருதவர்மன் வியப்பொலியுடன் “அதே முகம்” என்றான். துரியோதனன் புருவம் சுளிக்க “எவரது முகம்?” என்றான். கிருதவர்மன் நிமிர்ந்து துரியோதனனைப் பார்த்துவிட்டு “எவர் முகத்தை தாங்கள் வடிக்கச் சொன்னீர்கள், அரசே?” என்றான். “என் எதிரியின் முகத்தை” என்றான் துரியோதனன். சகுனி “நீ எண்ணியது எவர் முகத்தை?” என்றார். “பீமனின் முகத்தைத்தான்” என்று துரியோதனன் சொன்னான். “ஆனால் இந்த முகம்…” என்று சொன்ன சகுனி கைவீசி தன் எண்ணம் ஒன்றைக் கலைத்து “சிலைகள் அவை உள்ளெழும் தருணத்திற்கு உரியவை. ஓர் உணர்வு அல்லது ஓர் எண்ணம் தெய்வத்தால் தொடப்படுகையில் அழிவின்மையெனும் பேறு பெற்று பொருளில் சிலையென நிலைகொள்கிறது என்று சொல்வார்கள்” என்றார்.

“ஆம், அந்நாளை நான் நினைவுறுகிறேன்” என்று துரியோதனன் சொன்னான். “மாதுலரே, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பீமன் என்னை கொல்வதாக வஞ்சினம் உரைத்து அஸ்தினபுரியிலிருந்து நீங்கிய பின்னர் ஒருநாள் நானும் அவனைக் கொல்லும் வஞ்சினத்தை எடுத்தேன். அவன் அவ்வஞ்சினத்தை பன்னிருகள அவையில் உரைத்தபோது எனக்கு அது வெறும் சொற்களாகவே தெரிந்தது. நாடிழந்து குடியிழந்து கானேகுபவர்கள் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்றே எண்ணினேன். பலநாட்கள் நான் பெரிதாக எதையும் எண்ணியதுமில்லை… ஆனால் அது என்னுள் வளர்ந்துகொண்டிருந்தது.”

ஒருநாள் நானும் அங்கரும் புராணகங்கைக்குள் வேட்டைக்குச் சென்றபின் தென்வாயில் வழியாக நகர்புகுந்தபோது அஞ்சனைமைந்தருக்குரிய அந்தப் பெருங்கதையை பார்த்தோம். பலநூறுமுறை அதை நோக்கி கடந்திருக்கிறேன். அன்று அருகே சென்று நோக்கவேண்டுமெனத் தோன்றியது. அதைச் சுற்றிவந்து நோக்கியபோது அதன் எடை என்னை வியப்புறச் செய்தது. “இத்தனை பெரிய கதையால் அஞ்சனைமைந்தர் பேருருவர் எவரையும் கொல்லவில்லையே?” என்று நான் கேட்டேன். அங்கர் புன்னகைத்து “காத்திருக்கும் கதை என்றே அவர் கையிலிருப்பதை சொல்கிறார்கள்” என்றார்.

அன்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அஞ்சனைமைந்தரும் நானும் கதைப்போர் புரிந்துகொண்டிருந்தோம். அவர் பேருருவாக எழுந்து கதை சுழற்றினார். என் உடன்பிறந்தாரை ஒவ்வொருவராக அறைந்து தலைசிதைத்து வீழ்த்தினார். இறுதியில் என் நெஞ்சைப் பிளந்து கொன்றார். நான் ஒரு சுனைக்கரையில் உடல் சிதறி விழுந்தேன். கதையை அவர் மீண்டும் சுழற்றியபோது குருதி என் மேல் தெறித்தது. விழித்துக்கொண்டபோது என் உடல்நடுங்கிக்கொண்டிருந்தது. நான் அக்கனவில் கண்டது என்னைக் கொன்ற அனுமனை. விழித்த பின்னர்தான் அனுமனை அல்ல பீமனை உணர்ந்துகொண்டிருந்தேன் என அறிந்தேன். மீண்டும் ஓர் அதிர்வுடன் நான் என்னை துச்சாதனனாக உணர்ந்துகொண்டிருந்தேன் என்றும் கண்டேன்.

அன்று தொடங்கியது என் அச்சம். உயிரச்சம் அல்ல அது, சிறுமை கண்ட அச்சம். அன்று அக்கனவை அங்கரிடம் சொன்னேன். அன்று முழுக்க மது அருந்தினேன். முன்பொருபோதும் அந்த அளவிற்கு நான் மது அருந்தியதில்லை. என்னால் பீடத்தில் அமர இயலவில்லை. எழுந்து நடந்து மீண்டும் அமர்ந்து நிலையழிந்து கொண்டிருந்தேன். உண்மையில் கைகளை என்ன செய்வதென்று அறியாததனால்தான் அவ்வளவு மதுவை ஊற்றிக் குடித்தேன் என்று தோன்றுகிறது. இரண்டு முறை வாயுமிழ்ந்த பின்னர் நிலத்திலேயே கால் நீட்டி அமர்ந்துவிட்டேன். என்னை விட மிகுதியாக மது அருந்தியிருந்தார் அங்கர். ஆனால் அவர் அசையாது அமர்ந்திருந்தார்.

நான் அவரிடம் “அன்று என்ன நிகழ்ந்தது என்பதை என்னால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை, அங்கரே” என்றேன். அங்கர் “தொகுத்துக்கொள்ள முடிபவர் ஒருவரே, காந்தார மாளிகைக்கு சென்று உங்கள் மாதுலரிடம் கேளுங்கள். இவையனைத்தும் அவரால் வகுக்கப்பட்டவை. அவர் அறிந்ததற்கும் மேலாக ஏதேனும் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் என்றேனும் துவாரகையின் இளைய யாதவன் வரவேண்டும். அவனிடம் கேளுங்கள்” என்றார்.

சொற்கள் எதுவும் என் சித்தத்திற்குள் நுழையவில்லை. நான் என் இரு கைகளையும் நிலத்தில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டிருந்தேன், பின்னர் சுவர் பற்றி எழ முயன்றேன். கால் கீழே மரத்தரை கம்பளம்போல் இழுபட்டது என்று தோன்றியது. உடல் ஓசையிட நிலத்தில் அறைந்து விழுந்தேன். அறைக்கதவுக்கு அப்பால் நின்றிருந்த துச்சாதனன் உள்ளே வந்து “மூத்தவரே!” என்றான். “பிடி என்னை! அறிவிலி, பிடி என்னை!” என்றேன். அவன் அருகணைந்து என் இரு கைகளையும் பற்றி தூக்கி நிறுத்தினான். “பிடித்துக்கொள்! பிடித்துக்கொள்!” என்று கூவினேன்.

என் கால்கள் துணியால் ஆனவைபோல் தோன்றின. சுவர்களும் கூரையும் நீர்ப்பாவையென நெளிந்தன. “என்னை பீடத்தில் அமர வை” என்றேன். என்னை பீடம் நோக்கி கொண்டு செல்கையிலேயே தலை தழைய குமட்டி வாயுமிழ்ந்தேன். “மஞ்சத்திற்கு கொண்டு செல்!” என்றேன். என்னை அவன் மஞ்சத்தை நோக்கி கொண்டு சென்று படுக்க வைத்தான். மஞ்சத்தின் கீழ் தரை அகன்று அடியிலாத வெளிக்குள் விழுந்துகொண்டே இருப்பதுபோல் தோன்றியது. கண்களை மூடி உடலை பலமுறை உலுக்கி வாயுமிழ்ந்தேன். படுத்திருக்க இயலாமல் இரு கைகளையும் ஊன்றி எழுந்தமர்ந்து தலையை கைகளால் பற்றிக்கொண்டேன்.

“தாங்கள் புளிநீர் சற்று அருந்தலாம், மூத்தவரே” என்றான் துச்சாதனன். ஓங்கி அவனை அறைந்தேன். அவன் நிலைதடுமாறி ஓசையுடன் நிலத்தில் விழ அங்கர் என்னிடம் “என்ன செய்கிறது உங்களுக்கு?” என்றார். “நீங்கள் நடிக்கிறீர்கள். இத்தனை மதுவும் உங்களுக்குள் எங்கு செல்கிறது என்று எனக்கு தெரியும். அங்கே உள்ளே அனல் ஒன்று எரிகிறது. நான் உணர்ந்ததை நூறு மடங்கு நீங்கள் உணர்கிறீர்கள்” என்று கூவினேன். “ஆம்” என்று அவர் சொன்னார். “அவை நடுவே குலக்கொடியை இழிவு செய்திருக்கிறோம். இதற்கு முன் பாரதவர்ஷத்தில் எவரும் இதை இயற்றியதில்லை. இனி ஒரு போதும் இது நிகழப்போவதில்லை. ஏன் அசுரர்கள் இதற்குத் துணிந்ததில்லை” என்றார் அங்கர்.

நான் “அரக்கர் இயற்றியதில்லையா இதை? நான் அரக்கன்” என்றேன். “அரக்கன் கைதொடாது ஷத்ரியப் பெண்ணை கவர்ந்து சென்றான். தன் நிழல்கூட அவள் மேல் படாது காத்தான்” என்று அங்கர் சொன்னார். “நீங்கள் எழுந்து என்னை நெஞ்சு பிளக்க வந்திருக்க வேண்டும், அங்கரே” என்றேன். “வந்திருப்பேன்” என்று அங்கர் சொன்னார். “நூறுமுறை எழுந்து உங்கள் நெஞ்சை பிளக்கவும் செய்தேன். ஆனால் அதை நிகழ்த்தியிருக்க இயலாது. அவள் கொழுநர் அங்கே கைகட்டி நின்றிருந்தார்கள். அவர்களுக்கு மேலாக எனக்கு என்ன உரிமை என்று அவையில் ஒரு வினா என்றேனும் எழக்கூடும். அது எங்கு சென்று சேரும் என்று நான் அறிவேன். உறவல்லாத பெண்ணின் பொருட்டு ஒருபோதும் ஆண் வஞ்சினம் கொண்டு எழலாகாது” என்றார்.

“எனில் அங்கு அறம் உரைத்திருக்கலாமே?” என்று நான் கேட்டேன். “ஆம் ஆனால் பிதாமகரும் ஆசிரியரும் அமர்ந்த அவையில் அறம் உரைக்கும் தகுதி எனக்குண்டா? நான் எந்த அறத்தை உரைப்பேன்? ஷத்ரிய அறத்தையா சூதரின் நெறியையா?” என்றார். நான் உரக்க நகைத்து “இத்தனை பொழுது எண்ணி இந்த மறுமொழிகளை கண்டு கொண்டீர்களா என்ன? நன்று! இத்தனை நாள் இதை ஒழிய முயன்றோம். இதோ விழியோடு விழி நோக்கிவிட்டோம். இனி இதைப் பற்றியபடி எஞ்சிய வாழ்க்கையை கழிக்கலாம்” என்றேன்.

“இது நான் கண்டடைந்த மறுமொழி அல்ல. இவை வலுவான உண்மைகள். ஆனால் இந்த நடைமுறை உண்மைகளால் நான் இழைத்த பிழை இல்லாமலாவதில்லை. அறத்துக்கு நடைமுறை இடர்கள் மாற்றோ மறுப்போ அல்ல. அந்தப் பழி எப்போதும் என்னுடன்தான் இருக்கும். அதை நன்கு அறிந்திருந்தமையால்தான் நான் மேலும் துயருறுகிறேன். நீங்கள் அடையும் துயரைவிட நூறு மடங்கு துயரை” என்றார்.

என் முன் நீர்க்கறையென விழுந்து கிடந்தது துச்சாதனனின் நிழல். திரும்பி அவனை பார்த்தேன். “அறிவிலி! உன்னைச் சூழ்ந்திருக்கும் காலப் பழி என்னவென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். “நீங்கள் ஆணையிடும்போதே தெரியும்” என்று அவன் சொன்னான். அவன் விழிகள் தெளிந்திருந்தன. நான் விழியை திருப்பிக்கொண்டேன். “அவன் விண்ணுலகு எய்துவான்” என்று அங்கர் சொன்னார். “ஒரு வாழ்நாள் நோன்பின் பொருட்டு பிற அறங்களை கைவிடுபவனுக்கும் தெய்வங்கள் கனிகின்றன. தன் பிறவியின் நெறியென தமையனின் ஆணைக்கு ஏற்ப வாழ்வதைக்கொண்டவன் அவன். பிற அறங்களுக்குரிய அத்தனை தெய்வங்களும் அவனிடம் அன்புடன்தான் இருக்கும்.”

துச்சாதனன் “எந்த தெய்வங்களின் அளியையும் நான் விரும்பவில்லை. நான் சூடிக்கொண்ட பெரும்பழி என்னவென்று நன்கு தெரியும். அதை இப்பிறப்பில் எப்படி ஈடுகட்டுவதென்பதும் அங்கே அரங்கில் உரைக்கப்பட்டது” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று நான் அவனை பற்றப் போனேன். மஞ்சத்திலிருந்து தள்ளி அவன் நின்றிருந்தமையால் என் கை அவனை எட்டவில்லை. “என்ன சொல்கிறாய்?” என்றேன். “என் நெஞ்சு பிளந்து குருதியை அவன் அருந்துவான். அது அறத்தெய்வத்திற்கு நான் அளிக்கும் குருதிபலி. அவ்வெண்ணமே என்னை நிறைவுறச் செய்கிறது” என்றான்.

நான் அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்னர் எழுந்து அவனை ஓங்கி அறைந்தேன். ஓசை அறையை திடுக்கிடச் செய்தது. அறை வாங்கிய விசையில் சற்று பின்சரிந்து நிலைகொண்டு அவன் கைகூப்பினான். “வெளியேறு! இனி என் முன் வராதே! வெளியே போ!” என்று நான் கூவினேன். அவன் தலைவணங்கி வெளியேறினான். என் உடலிலிருந்த கள்மயக்கு முற்றிலும் நீங்கியது. தலைக்குள் அனல் நிறைந்திருப்பது போலிருந்தது.

“அங்கரே, நான் இதை ஏன் செய்தேன்?” என்று கேட்டேன் “அதை நீங்கள் ஒருபோதும் முழுக்க உணர்ந்துவிட முடியாது, அரசே” என்று அங்கர் சொன்னார். கசப்பான புன்னகை உதடுகளில் விரிய “மானுடர் இப்புவியில் இயற்றும் எந்தச் செயலுக்கும் முடிவிலாத பின்புலங்கள் உண்டு. எவராலும் அனைத்தையும் தொட்டெடுக்க இயலாது. தருணத்திற்கேற்ப அவை மாறி மாறி தெரிகின்றன” என்றார். “ஆணவம்! வேறொன்றுமில்லை. நான் ஆணவம் கொண்டவன். அவ்வாணவத்தையும் பல முறை பெருக்கி வெளிக்காட்டுபவன்” என்று நான் சொன்னேன்.

“ஏன் அதை செய்தேன் என்று எனக்கு இப்போது தெரிகிறது” என்று கூவினேன். “என்னைவிட மணிமுடி அவள் தலைக்கே பொருந்துகிறது. அங்கரே, மணிமுடியை அவள் சூடியிருக்கையில் மலைகளின் மேல் இளங்கதிரோன் எழுந்தது போலிருக்கிறது. என் தலையில் அதன் எடை தெரிகிறது. அதுதான், வேறொன்றுமில்லை. அதுமட்டும்தான்.” என்னை நோக்காமல் சாளரம் நோக்கி திரும்பி “ஆனால் அது மட்டும் அல்ல உண்மை” என்று அங்கர் சொன்னார். “வேறென்ன? வேறென்ன?” என்று கேட்டேன்.

“நான் ஒன்றை சொல்ல முடியும். அது நான் கண்ட உண்மை. துச்சாதனனை அழைத்துக்கேட்டால் அவன் பிறிதொரு உண்மையை சொல்லக்கூடும். நூற்றுவர் உடன்பிறந்தோரும் நூறு பின்புலங்களை உரைப்பார்கள். நீங்களே சென்று கண்டுகொள்ள வேண்டியதுதான்” என்று அங்கர் சொன்னார். நான் அவரை நோக்கியபடி அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து மதுக்கலத்தை தூக்கி நேராக வாய்க்குள் விட்டுக்கொண்டேன். “அது பீதர் நாட்டு மது. குடலை எரித்தழிக்கும்” என்று அங்கர் சொன்னார்.

நான் உடலை உலுக்கி இருமுறை குமட்டி வாயுமிழ்ந்த பின் மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டேன். “அங்கரே, இத்தனை சிறுமதியாளர்களாக நாம் ஏன் இருக்கிறோம்? மானுடராகிய நமக்கு இத்தனை இருண்ட வழிகளை ஏன் தெய்வங்கள் காட்டுகின்றன?” என்றேன். அங்கர் “மானுடப்பிறப்பில் ஒருவனுக்கு நிகழ்வதனைத்தும் அவன்முன் காட்டப்படும் ஆடிகளே என்றொரு சொல் உண்டு. நன்று தீது இனிது துயர் அனைத்திலும் நாம் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்களைப் பார்க்கும் பொருட்டு இது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று கொள்வதே முறை” என்றார்.

நான் அவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கர் உரக்க நகைத்து “மிக எளிய விடையை அவன் கண்டடைந்தான். இங்கு செய்ததை அங்கு அளித்து ஈடுகட்டிவிடலாம் என்று. உங்களுக்கு அவ்வாறொரு எளிய விடை கிடைத்தால் போதும். அதற்கு இத்தனை ஆழ நெடுங்கடல் துழாவி உழல வேண்டியதில்லை” என்றார். அச்சிரிப்பும் கசப்பும் என்னை பற்றி எரிய வைத்தது. இரு கைகளையும் ஓங்கி அறைந்தபடி அங்கரிடம் சொன்னேன். “அது நடவாது. அவன் என்னை கொல்வான் எனில் இது ஈடுகட்டப்படாது. நெஞ்செரியும் வஞ்சத்துடன் நான் விண்ணெழுவேன். வெற்றி ஒன்றைத் தவிர வேறொன்றும் என்னை அணையச்செய்யாது.”

“ஒன்றே வழி! நான் அவனை கொல்வேன். எங்கு முதல்முறை அவனை களத்தில் சந்திக்கிறேனோ அன்றே அவனை கொல்வேன்” என்றேன். அங்கர் என்னை நோக்கி புன்னகைத்தார். “சொல்லுங்கள், என்ன புன்னகை அது? அதன் பொருளென்ன?” என்றேன். “ஏதேனும் ஒன்று நன்று, வஞ்சமெனில் அது பற்றிக்கொள்க! எஞ்சிய நாட்கள் கடந்து செல்லட்டும்” என்றபின் எழுந்து கையிலிருந்த கோப்பையை வைத்துவிட்டு “நான் என் அறைக்கு செல்கிறேன்” என்றபடி வெளியே சென்றார்.

நான் அவருக்குப் பின்னால் நடந்து “ஆணை! நான் அவனை கொல்வேன். ஐயம் தேவையில்லை! ஆணை! நான் அவனை கொன்றே தீர்வேன்” என்றேன். அவர் திரும்பிப்பார்த்து புன்னகை செய்து வெளியே சென்றார். இரு கைகளாலும் நெஞ்சில் ஓங்கி அறைந்து “அவனை கொல்வேன்! ஐயமில்லை! அவனை கொல்வேன்!” என்று கூவி வஞ்சினம் உரைத்தேன். அந்த வஞ்சினமே இதோ இப்பாவை என ஆகி அமர்ந்திருக்கிறது.

சகுனி “நான் அறிவேன்” என்றார். கிருதவர்மன் “பெருவஞ்சங்களை மைந்தர்கள் என ஈன்று வளர்ப்பவர்கள் உண்டு” என்றான். அந்தப் பாவையை நோக்கியபடி “இரும்பில் எழுந்திருக்கிறது” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

முந்தைய கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -12
அடுத்த கட்டுரைநட்பெதிரி