‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-5

அவைக்கூடுகைக்கு வெளியே நிழலசைவென ஏவலன் வந்து விளக்கின் முன் நின்று தலைவணங்கினான். அவன் நிழல் நீண்டு அவைக்கு நடுவே விழ சகுனி தலைதிருப்பி கையசைவால் “என்ன?” என்றார். மத்ரநாட்டின் முத்திரையை அவன் கையால் காட்ட அவ்வசைவு அவர் முன் தரையில் நிகழ்ந்தது. அழைத்துவரும்படி கையசைத்தபின் சகுனி கிருபரிடம் “மத்ரர் திரும்பி வந்துவிட்டார்” என்றார்.

கிருபர் “வரமாட்டார் என்று எண்ணினீர்களா?” என்றார். “ஆம். மறுபடியும் குருக்ஷேத்ரத்திற்குள் அவரால் கால் வைக்க இயலாதென்று தோன்றியது. இரவு முழுக்க சிதைக்காட்டுக்குள் உலவிவிட்டு இருள் விடிவதற்கு முன் இங்கிருந்து கிளம்பிச் சென்றிருப்பார் என்று எண்ணினேன்” என்றார் சகுனி. “அவர் எங்கு செல்ல இயலும்?” என்றார் கிருபர். “உறுதியாக மத்ரநாட்டுக்கு செல்லமாட்டார். வடபுலம் தேடவே அவரால் இயலாது. அவர் எவரென்றே தெரியாதென்ற காடுகளுக்கு சென்றிருக்கலாம். ஒருவேளை தென்திசை நோக்கி செல்லவும் வாய்ப்புள்ளதென்று எண்ணினேன்” என்றார் சகுனி.

“ஏன்?” என்று கிருபர் கேட்டார். “அவர் அங்கனின் தேரிலிருந்து இறங்கி வந்ததை அவரால் பொறுத்துக்கொள்ளவே இயலாது. எண்ணி எண்ணி அகம் எரிந்துகொண்டிருப்பார்” என்று சகுனி சொன்னார். கிருபர் “அவர் அத்தேரை ஓட்டியிருந்தாலும் அங்கன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அவன் போரில் தோற்கவில்லை. உயிர் கொடுக்கவே களம் வந்தான். உயிரிழக்கும் முடிவை எய்திவிட்டான் எனில் யார் தடுக்க இயலும்?” என்றார். “நானும் அவர் இறங்கிச்சென்றார் எனக்கேட்டு சினம் கொண்டேன். பின்னர் உணர்ந்தேன் தன் கண் முன் அங்கன் மறைந்ததை அவர் பார்க்காமல் இருப்பது நன்று என்று. அவரே தேரோட்டியிருந்தால் தான் இயற்றிய ஏதேனும் சிறு பிழையால்தான் கர்ணன் உயிர்நீத்தான் என்று எண்ணியிருப்பார்.”

“இப்போதும் அவ்வாறு எண்ணுவதற்கான எல்லா அடிப்படைகளும் உள்ளன” என்று சகுனி புன்னகையுடன் சொன்னார். “கர்ணனின் தேரில் கட்டப்பட்டவை வழக்கமான புரவிகள் அல்ல. அவை மத்ரநாட்டு குறும்புரவிகள். அவற்றை ஓட்டும் கலை மத்ரருக்கே முழுதாகத் தெரியும். கர்ணனின் தேர் நிலையழிந்ததும் பிலம் புகுந்ததும் அவற்றில் மத்ரநாட்டு புரவிகள் இருந்தமையால்தான் என்று எவரேனும் கூறக்கூடும்.” சகுனி சற்று முன்னகர்ந்து மேலும் நச்சு கலந்து சிரித்து “சல்யர் தேரில் இருந்திருந்தால் அங்கனின் தேர்ச்சகடம் நிலத்தில் புதைந்திருக்காது. புதைந்திருந்தால்கூட அதை மீட்கும் முறையை அவர் அறிந்திருப்பார்” என்றார்.

“குருக்ஷேத்ரத்தில் பிலம் எங்குமுள்ளது. பிலம் இருக்கும் இடத்தை தேடி கர்ணனை இழுத்து சென்றவர் இளைய யாதவர்” என்றார் கிருபர். “ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். சல்யர் இல்லையென்று கண்டே அதை செய்தார். தேரில் சல்யர் இருந்திருந்தால் அச்சூழ்ச்சியை புரிந்துகொண்டிருப்பார். காலடியில் நிலம் பொள்ளையாகுமென்றால் புரவிகள் குளம்படியோசையால் அறிவிப்பு எழுப்பும். நல்ல தேர்ப்பாகன் அவற்றை உணர முடியும். கர்ணனுக்கே அது தெரியும். ஆனால் மத்ரநாட்டுப் புரவிகளின் குளம்படியோசை அவனுக்கு பழகியிருக்காது. அங்கநாட்டுப் புரவிகளென்றால் அவன் சில கணங்களிலேயே உய்த்துணர்ந்திருப்பான்” என்றார் சகுனி.

“மீண்டும் மீண்டும் இதை ஏன் சொல்கிறீர்கள்?” என்று எரிச்சலுடன் கிருபர் கேட்டார். “இவ்வாறு ஒரு வாய்ப்புள்ளது என்பதற்காகத்தான். அதை மத்ரரும் உணர்ந்திருப்பார். உணர்வது நன்று” என்றார் சகுனி. கிருபர் சகுனியை கூர்ந்து நோக்கியபடி தன் தாடியை கையால் கசக்கிக்கொண்டிருந்தார். சகுனி காலை நீட்டி அமர்ந்து வலியுடன் முனகிக்கொண்டார். குளம்படியோசை இருளுக்குள் வௌவால் பறக்கும் ஒலி எனக் கேட்டது. கிருதவர்மன் தரையில் சுட்டுவிரலால் ஏதோ வரைந்தான். கிருபர் பெருமூச்சுவிட்டார்.

ஏவலன் அவைக்குள் நுழைந்து “அஸ்வத்தாமனும் உடன் வருகிறார்” என்றான். “அவர் செல்லும் வழியில் சல்யரை சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டார்கள். அவர் அவருடன் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்.” சகுனி “அது நன்று” என்றார். கிருபர் மெல்ல கனைக்க சகுனி புன்னகைத்து “எவரும் எதையும் விட்டுவிட்டுச் செல்ல இயலாது என்பதைத்தான் குருக்ஷேத்ரம் நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறது” என்றார். கிருபர் மீண்டும் கனைத்தார். “நாம் ஒவ்வொருவரும் நம்மை வேறு ஒருவர் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறோம். மெய்யாகவே நாம் எவர் என்று தெரிந்தாலும்கூட ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது நமக்கு” என்றார் சகுனி.

சல்யர் அவையமைந்த இடத்திற்குள் நுழைந்து கிருபரை வணங்கிவிட்டு சகுனியை வணங்கினார். அவர் உடல் குளிரிலோ நோயிலோ நடுங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. சகுனி “வருக மத்ரரே, அமர்க!” என்றார். சல்யர் அங்கு போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்து இரு கைகளையும் முழங்கால் மேல் ஊன்றியபடி நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தார். கிருபர் அவரை கூர்ந்து நோக்கினார். நோயுற்ற புரவிபோல் உடல் எங்கும் ஓர் அமைதியின்மை அசைவுகொண்டிருந்தது. அஸ்வத்தாமன் ஓசையின்றி வந்து சல்யரின் அருகே நின்றான்.

“இத்தனை பொழுது எங்கிருந்தீர்கள், மத்ரரே?” என்று சகுனி கேட்டார். “காட்டில்” என்று அவர் சொன்னார். “நான் அவ்வாறுதான் எண்ணினேன். உங்களை தேடிக் கண்டுபிடிக்கும்பொருட்டு ஏவலர் சிலரை காட்டுக்குள் அனுப்பினேன்” என்று சகுனி சொன்னார். “அவர்கள் ஒற்றர்கள் அல்ல. எளிய பணியாளர்கள். உங்களை அவர்களால் கண்டுகொள்ள இயலவில்லை. குருக்ஷேத்ரக் காடு மிகப் பெரியது. அவர்கள் முழு காட்டையும் நோக்குவதும் இயல்வதல்ல… நீங்கள் சென்றுவிட்டிருக்கலாம் என்று எனக்கும் பட்டது.”

முகம் மேலும் கூர்கொள்ள சற்றே முன்னகர்ந்து “ஆனால் அங்கன் எரிந்தணைவது வரை நீங்கள் செல்லமாட்டீர்கள் என்று நான் சொன்னேன். அங்கன் சிதையேறும் வரை அவரை கண்டுபிடிக்க முடியாதென்றும் சொன்னேன். சிதை எரிந்து அதிலிருந்து புகையெழத் தொடங்கிய பின்னர் எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று சூழ்ந்தேன். சிதைப்புகை வரும் திசை நோக்கி செல்க, அங்கிருப்பார் மத்ரர் என்று ஆணையிட்டேன்” என்றார் சகுனி. ஒவ்வொரு சொல்லும் சல்யர் மேல் எடையுடன் விழுவதுபோலத் தோன்றியது.

ஒவ்வாமையுடன் “காந்தாரரே” என்று கிருபர் அழைத்தார். “நான் ஒவ்வாதன எதையும் கூறவில்லை. பொதுவாக மானுடரின் இயல்பு இது. உற்றார் இறப்பின் அவர்களால் அந்த எண்ணங்களிலிருந்து விடுபட இயல்வதில்லை. நோயுற்றோர் நோயைப் பெருக்கும் உணவுகளில் ஆர்வம் கொள்வதுபோல், இறப்புத் துயர்கொண்டவர்கள் அத்துயரைப் பெருக்கும் செய்திகளையும் பொருட்களையும் நாடுகிறார்கள். அதையே சொல்லிக்கொண்டிருக்கவும் கேட்டுக்கொண்டிருக்கவும் விழைகிறார்கள். அதையே எண்ணிக்கொண்டிருக்கும் தூண்டுதல்கள் புறவுலகில் இருக்கவேண்டும் என முயல்கிறார்கள். உற்றார் இறந்தபின் அந்த இடம் விட்டு அக்கணமே விலகிவிடுவதுதான் உளம் ஆறுவதற்கான எளிய வழி. அதை செய்பவர்கள் எவரையேனும் இதற்குமுன் கண்டிருக்கிறீர்களா?”

கிருபர் பொறுமையிழந்து “நாம் தேவையானவற்றை மட்டும் பேசுவோம், அதன்பொருட்டே கூடியுள்ளோம்” என்றார். சகுனி “மத்ரரே, இப்போது நமது முதற்படைத்தலைவர் மண்பட்டுவிட்டார். நாம் போரை நிகழ்த்தியாகவேண்டும் என்று அரசர் சொல்கிறார். ஏனெனில் வெற்றி மிக அண்மையில் இருக்கிறது. வெற்றியை இதுவரை நாடிவந்துவிட்டு இறுதிக் கணத்தில் அச்சத்தாலோ ஐயத்தாலோ அதை தவறவிடுவதில் பொருளொன்றுமில்லை. நாம் வென்றாகவேண்டும்” என்றார்.

“ஆம்” என்று சல்யர் சொன்னார். “இன்று படைநடத்துவதற்கு நம்மில் முழுத் தகுதி கொண்டவர் மூவர். கிருபரும் அஸ்வத்தாமனும் தாங்களும் படைநடத்த முடியும். தங்களுக்கு இணை விசையாக கிருதவர்மன் நின்றிருக்கையில் அரசரும் நானும் துணை அளிக்க முடியும். இன்றைய போரில் நாம் வென்றாக வேண்டும்” என்றார் சகுனி. சல்யர் “ஆம்” என்றார். “இன்றைய போரில் நாம் வெல்வோம்” என்று எத்தொடர்பும் இல்லாமல் கிருதவர்மன் நிலத்தை நோக்கியபடி சொன்னான்.

சகுனி கிருபரை நோக்கிய பின் “இயல்பாக இன்று படைநடத்த வேண்டியவர் ஆசிரியராகிய கிருபர். ஆனால் இன்று அவர் பேசியவற்றிலிருந்து இன்றைய போர்வெற்றியைக் குறித்து ஐயம் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. ஐயத்துடன் நடத்தப்பட வேண்டியதல்ல இன்றைய போர். முழு நம்பிக்கையுடன் நடத்தப்படுகையில் மட்டுமே வெல்லக்கூடியது. ஏனென்றால் இன்று நாம் ஏந்தவேண்டிய முதன்மைப் படைக்கலம் நம்பிக்கையே. போரின் இறுதிவெற்றி நம்பிக்கையால் நிகழ்கிறது, நம்பிக்கையுடன் களம் புகுபவருக்கே தெய்வங்களும் மூதாதையரும் துணை நிற்கின்றனர் என்பது போர்நூல் கூற்று” என்றார்.

கிருபர் ஒவ்வாமையுடன் தலையசைத்து பேச முயல்வதற்குள் சகுனி தொடர்ந்தார் “அஸ்வத்தாமன் படைநடத்தலாம் என்று நான் எண்ணினேன். ஏனெனில் ஆற்றல் மிக்க அம்புகளை அவர் வைத்திருக்கிறார். அர்ஜுனனுக்கு நிகரான விற்திறனும் அர்ஜுனனை முந்தும் அம்புகளும் கொண்டவர் அவர் என்பது அனைவரும் அறிந்தது.” கிருதவர்மன் நிமிர்ந்து நோக்கி “ஆம், அவர் நடத்தட்டும் படையை” என்றான். சல்யர் ஆம் என்று தலைசைத்தார்.

“அவருக்கு சிறந்த தேரோட்டி அமையவேண்டும். நல்ல தேர் அங்கநாட்டுப் புரவிகளால் இழுக்கப்பட வேண்டும்” என சகுனி தொடர்ந்தார். அச்சொற்கள் எங்கோ சென்று தைக்க சல்யர் சற்றே நிமிர்ந்து அமர்ந்தார். “மத்ரநாட்டுப் புரவிகளை நான் குறைத்து சொல்லவில்லை. அவை பேராற்றல் மிக்கவை. நேற்றைய போரில் அங்கரின் தேர் மத்ரநாட்டுப் புரவிகளாலும் அவற்றை செலுத்திய தங்கள் சவுக்கின் திறத்தாலும் வண்ணத்துப்பூச்சி காட்டில் பறப்பதுபோல் எண்ணியிரா வகையில் திரும்பியும் எழுந்தமைந்தும் போரிட்டது.”

வாளைத் திருப்பி ஒளிர்பட்டைகளைக் காட்டுவதுபோல சகுனி நுட்பமாக சொல்லெடுத்தார். “ஆனால் அங்கநாட்டுச் சூதர்கள் மட்டுமே நம்மிடம் உள்ளனர். அங்கநாட்டு புரவிகளை செலுத்தும் கலை மட்டுமே அவர்களுக்குத் தெரியும். மத்ரநாட்டு தேர்ப்பாகர்களில் ஆற்றல் மிக்க எவரும் இப்போது இல்லையென்று எண்ணுகிறேன். மத்ரநாட்டு தேர்ப்பாகர்கள் மட்டுமே அவர்களின் புரவிகளை செலுத்த இயல்கிறது. நேற்றுகூட மத்ர நாட்டுப் புரவிகளின் நுண்மையை புரிந்துகொள்ள இயலாததனால்தான் அங்கர் களம்பட்டார் என்று போர் நிகழ்வை ஆய்வு செய்த படைத்தலைவன் ஒருவன் சொன்னான்.”

உடல் அதிர சல்யர் நிமிர்ந்து பார்த்தார். “அங்கரின் வீழ்ச்சி அங்கராலேயே தெரிவு செய்யப்பட்டது என்று நான் அதற்கு மறுமொழி சொன்னேன். எவரும் அவரை வழி நடத்த இயலாது. வழி நடத்துபவர்கள் சொற்களை கேட்பவர் அல்ல அவர். உயிர் கொடுப்பதற்கென்றே களம்புகுந்தவரைப் பற்றி நாம் என்ன பேசுவது? ஆயினும் தேரை அங்கரே செலுத்தியிருக்காவிடில் இத்தனை எளிதாக அவர் களம்பட்டிருக்கமாட்டார் என்பதும் உண்மையே” என்று சகுனி தொடர்ந்தார்.

“புரவிகள் பிலத்தை உணர்ந்து முன்னறிவிப்பு அளித்திருக்கும். மத்ரநாட்டில் பிலங்கள் மிகுதி. ஆகவே அவை பிலங்களை கால்களால் உணர்பவை. அங்குள்ள எருதுகளே பிலங்களை உணர்வதை நானே கண்டிருக்கிறேன். அந்த முன்னறிவிப்பை உணர அங்கரால் இயலவில்லை. அவருடைய பிழைதான் அது. போரிடுவோன் ஐம்புலன்களையும் தீட்டி வைத்திருக்கவேண்டும். ஆனால் அங்கர் நிலையழிந்த நிலையில் இருந்தார். அறுதிப்போர் புரிந்துகொண்டிருக்கும் எவராலும் அத்தனை நுட்பமாக புரவிகளை அறிய இயலாது. மேலும்…”

“போதும்!” என்று உரத்த குரலில் சல்யர் சொன்னார். கைநீட்டி “போதும்” என மூச்சிரைத்தார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தன்னுள் என ஒலித்த குரலில் “எனது பிழைதான். அவனைக் கொன்றது நான்தான். களத்தில் என் நிலையின்மையால் அவன் உள்ளம் சோர்வடையச் செய்தேன். களத்தில் ஒவ்வாத புரவிகளைக் கட்டி அவன் தேரை செயலிழக்க வைத்தேன். அவனை அழித்தேன். ஏனெனில் அவன் என் மகன்” என்றார்.

கையை இருள் நோக்கிச் சுட்டி சொல்லுக்குத் திணறி சல்யர் முனகினார். “ஆனால்!” என்றார். பின்னர் இருமி மூச்சிரைத்து மெல்ல அடங்கி மந்தணம் போன்ற குரலில் “மைந்தனைக் கொல்லும் தருணம் ஒன்று அத்தனை தந்தையருக்கும் வரும். அரிதினும் அரிதாக சிலர் மெய்யாகவே கொன்றுவிடவும்கூடும். நான் அவர்களில் ஒருவன்” என்றார். கிருபர் ஏதோ சொல்ல முயன்றபின் அமைதியடைந்தார். கிருதவர்மன் முனகினான். அஸ்வத்தாமன் பொருளில்லாத ஒரு நடுக்கை உணர்ந்தான். அது ஏன் என தன்னுள் எண்ணிக்கொண்டான்.

சகுனி “தாங்கள் இத்தருணத்தில்…” என்று சொல்லத் தொடங்க சல்யர் “இனி நான் செய்யக்கூடுவது ஒன்றே. இன்றைய போரில் அவனை நான் கொல்கிறேன். அர்ஜுனனின் தலை நிலத்தே உருண்டால் என் மைந்தனுக்கு பிழைநிகர் செய்தவன் ஆவேன். அல்லது இக்களத்தில் அவர்களின் அம்புகளால் நெஞ்சுபிளந்து விழுந்து கிடந்தால் என்னை நானே ஏற்றுக்கொள்வேன். இன்று நான் ஆற்றுவதற்கு பிறிதொன்றுமில்லை” என்றார்.

அஸ்வத்தாமன் அவர் உடலின் விந்தையான நடுக்கத்தை நோக்கிக்கொண்டிருந்தான். “இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்றுதான் காட்டுக்குள் சென்றேன். திரும்பி நோக்காமல் சென்றுவிடவேண்டும் என்று நடந்தேன். ஆனால் சரடுகளால் கட்டி இழுக்கப்படுவதுபோல் குருக்ஷேத்ரக் காட்டுக்குள்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். அவன் சிதையேறும் வரை என்னால் இங்கிருந்து செல்ல இயலாதென்று உணர்ந்தேன். இருளில் ஊன் தேடி வந்து காத்திருக்கும் ஓநாய்போல புதர்களுக்குள் நின்று நின்று அவனுக்கு சிதையொருங்குவதை செவிகளால் அறிந்துகொண்டிருந்தேன்.”

“காந்தாரரே, நீங்கள் சொல்வது உண்மை. அவன் சிதையை உணரும் தொலைவிலேயே நான் எப்போதும் இருந்தேன். சூதர்களின் பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் சிதையேறும்போது அவன் உடலை எரித்த அனலையும் பார்த்தேன். பின்னர் திரும்பி நடந்தபோது அந்த சிதைப்புகையின் மணம் எட்டும் தொலைவு வரை மட்டுமே என்னால் செல்லமுடிந்தது. அதை என்னால் விட இயலவில்லை. அது ஒரு நினைவுபோல. ஒரு பிணைப்பு போல. ஒரு கணத்தில் எண்ணினேன், மூழ்குபவன் பாறையை பற்றிக்கொள்வதுபோல அந்தப் புகையை பற்றிக்கொண்டிருக்கிறேனா என்று. அல்லது பாலையில் எஞ்சிய நீரை அருந்தாது சேமித்து விடாயால் உயிர்விடுபவன்போல.”

சல்யர் மெய்யாகவே நீர்விடாய் கொண்டவன் திணறித்திணறி பேசுவதுபோல் சொல்லெடுத்தார். “பின்னர் முடிவு செய்தேன். அவனை விட்டு என்னால் செல்ல இயலாது. நான் அவனுக்கு இழைத்த பழிக்கு நிகர் செய்த பின்னரே இங்கிருந்து என்னால் செல்ல இயலும். திரும்பி வந்தபோது உங்கள் ஏவலனை பார்த்தேன்” என்றார். சகுனி “நீங்கள் வராதிருந்திருந்தால் நான் நிறைவுற்றிருப்பேன். வந்ததனால் வேறொரு வகையில் நிறைவடைகிறேன்” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்பது சல்யருக்கு புரியவில்லை.

கிருபர் “அரசர் இத்தனை பொழுது இங்கிருந்தார். இந்தப் போரை முன்னெடுக்கவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருக்கிறார்” என்றார். “வேறென்ன முடிவை எடுக்க முடியும்? வேறு எதை நாம் இனி செய்யமுடியும்?” என்று சல்யர் எதிர்பாராதபடி உரக்க குரலெழுப்பினார். “நாம் வேறெதைச் செய்தாலும் வீணரும் கீழ்மக்களும் ஆவோம். இனி நாம் செய்யவேண்டியது ஒன்றே. நீத்தாருக்காக போரிடுவோம். அவர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்.” கிருபர் “ஆனால் இனி போரிட்டால் இரு சாராரும் முற்றழிவோம்” என்றார். “ஆம், அழிவோம்… அழிவது ஒன்றே இனி நாம் செய்யவேண்டியது” என்று சல்யர் கூவினார்.

சகுனி “சல்யரே, நீங்கள் படைகளை நடத்தவேண்டும்” என்றார். “இனி இப்படையை நடத்த எல்லா வகையிலும் தகுதியானவர் நீங்கள் ஒருவரே.” சல்யர் அச்சொற்களை முழுமையாக உள்வாங்காதவராக நிமிர்ந்து நோக்கினார். “பீஷ்மருக்கும் துரோணருக்கும் கர்ணனுக்கும் பின் இப்படை உங்களால் களம்கொண்டுசெல்லப்படட்டும், சல்யரே” என்றார் சகுனி. அதை ஒரே கணத்தில் புரிந்துகொண்ட சல்யர் உடல் அதிர்ந்தார். கைகள் அறியாமல் எழுந்து காற்றில் நின்றன. முறையிடுபவர்போல. பின்னர் ஒரு விம்மலோசை அவரிடமிருந்து எழுந்தது. அவர் விசும்பி அழத்தொடங்கினார்.

அதை அடக்க அவர் முயன்றாலும்கூட அவரை மீறி விம்மல்களும் விசும்பல்களும் வெளிவந்தன. தலை குனிந்து நிலம்தொடுவதுபோல தாழ்ந்தது. பின்னர் மெல்ல அவர் அமைதியடைந்தார். “என் ஆழத்தை நன்கறிந்து வைத்திருக்கிறீர்கள், காந்தாரரே” என்றார். “நம் கீழ்மை அனைத்தையும் அறிந்த ஒருவரை நாம் எத்துணை வெறுக்கவேண்டும். ஆனால் அவர்களை நாம் விரும்புகிறோம். அணுக்கமாக உணர்கிறோம்.” சகுனி புன்னகைத்து “பிறருடைய கீழ்மையை நாம் நமது கீழ்மையால் அல்லவா உணர்கிறோம்” என்றார்.

“ஆம், நாம் மிக அருகே வந்துவிடுகிறோம்” என்று சல்யர் சொன்னார். “நான் கௌரவர்களிடம் விழைந்தது இதைத்தான். என் வாழ்க்கையின் உச்சப் பேறாக கருதியது இதைத்தான். பீஷ்மரையும் துரோணரையும் நோக்கி நோக்கி பொறாமை கொண்டேன். என் ஒவ்வாமைகள், எரிச்சல்கள், சீற்றங்கள் அனைத்தும் இதன்பொருட்டே. எளிய மலைமகன் நான். ஷத்ரியர் அணிநிரக்கும் படை ஒன்றை நடத்துகையில் என் குடி தன் எல்லைகளை விட்டு எழுகிறது. என் மூதாதையர் அனைவரும் விழுந்துகிடந்த இருண்ட பிலத்தில் இருந்து என் வழியாக என் கொடிவழியினர் மேலே வருகிறார்கள்.”

“கர்ணன் படைத்தலைவன் ஆனபோது நான் மகிழ்ந்திருக்கவேண்டும். பிறப்பால் ஷத்ரியன் அல்லாத ஒருவன் அவ்வாறு படைத்தலைமை கொள்வது ஒரு பெருந்திறப்பு. ஆனால் அதுவும் என்னை எரியத்தான் செய்தது. அவன் மேல் நான் கொண்ட உணர்வுகளுக்கு அடியில் அந்தக் கசப்பும் இருந்தது. என்னவென்றே அறியாத உணர்வுகளால் நான் செலுத்தப்பட்டேன். பெரும்பற்றாலும் பெரும்வெறுப்பாலும் மாறிமாறி ஆட்டுவிக்கப்பட்டேன். இதோ என் இலக்கை அடைந்துவிட்டேன். எதன்பொருட்டு என் குருதியினரான பாண்டவர்களை உதறி இப்பக்கம் வந்தேனோ அதை அடைந்துவிட்டேன்…”

“ஆனால் இப்போது ஒரு துளியும் என் உள்ளம் மகிழவில்லை. வெறுமை மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கிறது. இப்போரின் பொருள் என்ன என எனக்குத் தெரியும். இதை இனி இந்நிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் சூதர்கள் பாடுவர். இக்கதை சொல்லப்படாத ஒருநாள் கூட இனி பாரதவர்ஷத்தில் கடந்துசெல்லாது. இங்கு களம்நிற்கும் ஒவ்வொருவரையும் தெய்வங்கள் தொட்டுத்தொட்டு அழிவின்மையை அளிக்கின்றன.” சல்யர் புன்னகை செய்தார். “இந்த வாய்ப்பால் நான் தெய்வமாகிறேன்… என் குடியினரின் ஆலயங்கள் அனைத்திலும் படையலும் பலியும் பெற்று அமர்ந்திருப்பேன்.”

“ஆனால் எதற்கும் பொருளில்லை… தெய்வங்கள் நம்மை கூழாங்கற்களாக அளைந்து விளையாடுகின்றன. இவையனைத்தும் வெறும் கனவுகள்…” என்றார் சல்யர். சகுனி “எய்துகையில் வெறுமையென்றாவது உலகியல் வெற்றிகளின் இயல்பு” என்றார். “ஆனால் அதனால் அவை வெற்றிகள் அல்ல என்றாவதில்லை. எய்தியவருக்குத்தான் அவை பொருளற்றவை, எஞ்சியோருக்கு அல்ல. மத்ரரே, நீங்கள் பால்ஹிகக் குடியினரை பாரதவர்ஷத்தின் முன்னிரையில் நிறுத்துகிறீர்கள். ஷத்ரியர் அனைவருக்கும் ஒரு படி மேலாக. அதை நீங்கள் எண்ணினாலும் மறுக்க இயலாது.”

சல்யர் சலிப்புடன் தலையை அசைத்தார். “அத்துடன் இது நீங்கள் வஞ்சினம் கூறவேண்டிய பொழுது. உங்கள் குருதியில் பிறந்த மைந்தனுக்காக… அவன் நெறிகள் அனைத்தையும் மீறி கொல்லப்பட்டான்” என்று சகுனி சொன்னார். சல்யர் இரு கைகளையும் கூப்பி அதன் மேல் முகத்தை வைத்துக்கொண்டார். “நீங்கள் இனி இக்களத்தில் செய்வதற்கொன்றே உள்ளது. முழு விசையாலும் பொருதுவது, பழிநிகர் செய்வது” என்று சகுனி சொன்னார். “அதனூடாக உங்கள் பிழையையும் நிகர்செய்துவிடமுடியும்.”

சல்யர் “ஆம்” என்றார். அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். அஸ்வத்தாமன் பெரும் சலிப்பை உணர்ந்தான். ஒரு நாடகம் மெல்லமெல்ல அதன் உச்சத்தை அடைந்து நிலைகொண்டதுபோல் இருந்தது. சகுனி “இங்கே சூளுரையுங்கள் மத்ரரே, உங்கள் குருதிமைந்தனுக்கு பழிநிகர் செய்வதாக! அவனை அறம்பிழைத்துக் கொன்றவனின் குருதிநீரால் அவனுக்கு கடன்முடிப்பதாக!” என்றார். அவருடைய குரல் மேலெழுந்தது. “உங்களுக்கு இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அவர்கள் எல்லா நெறிகளையும் மீறிவிட்டார்கள். அது உங்களை விடுதலை செய்கிறது. எதையும் செய்வதற்கான உரிமையை உங்களுக்கு அளிக்கிறது.”

“ஆம்” என்று சல்யர் சொன்னார். “அவனுக்காக நான் அதை செய்தாகவேண்டும்…” கிருபர் ஏதோ சொல்ல முயல்வது போலிருந்தது. அவர் உதடுகள் அசையவில்லை. முகத்தில் மெய்ப்பாடுகள் தோன்றவில்லை. உடலில் எதுவும் நிகழவில்லை. விழிகள்கூட வெறித்தே இருந்தன. ஆனால் அவர் சொல்ல விரும்புவது நன்றாகவே தெரிந்தது. பின் ஒரு கணத்தில் அச்சொல் அணைவதும் தெரிந்தது. அஸ்வத்தாமனின் உடலிலும் தசைகள் தளர்ந்தன.

சல்யர் தன் இடையிலிருந்து குறுவாளை உருவி தன் இடக்கையின் கட்டை விரலைக் கீறி மூன்று சொட்டு குருதியை நிலத்தில் வீழ்த்தினார். “தெய்வங்கள் அறிக! மூதாதையர் அறிக! அறிக என் கொடிவழியினர்! இக்களத்தில் நான் அர்ஜுனனை கொல்வேன். என் மைந்தனின் குருதிக்கு பழி தீர்ப்பேன். எந்நெறியாலும் கட்டுப்படுத்தப்பட மாட்டேன். எவருக்காகவும் தயங்க மாட்டேன். மானுட எல்லைகளை கடப்பேன். அசுரனும் அரக்கனும் ஆவேன். பாதாளதேவனாவேன். ஈரேழு யுகங்கள் நான் கெடுநரகில் உழல்வதாயினும் சரி, என் முன்னோர் நீரில்லாது உழல்வதாயினும் சரி, என் குடியினர் பழியேற்று கீழ்மையடைவதாயினும் சரி, எதையும் செய்வேன்… அவனை கொல்வேன்… இன்று அவனை கொல்வேன்!”

அவர் குரல் நடுங்கியது. கையிலிருந்த குறுவாளும் நடுங்கியது . சகுனி கைகூப்பி “தெய்வங்கள் கேட்கட்டும் இச்சொற்களை… மூச்சுலகில் நின்று அங்கன் இதை செவிகொள்ளட்டும்” என்றார்.

முந்தைய கட்டுரைவெண்முரசு விவாத அரங்கு, சென்னை
அடுத்த கட்டுரைகோவை,சிங்காரம்,சு.வேணுகோபால் -கடிதம்