பார்பாரிகன் அமர்ந்திருந்த காவல்மாடம் இளமழையில் நனைந்து நான்கு பக்கமும் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க இருளுக்குள் ஊழ்கத்திலென நின்றிருந்தது. ஓசை எழுப்பாத காலடிகளுடன் நடந்த புரவியின் மீது உடல் சற்றே சரித்து கடிவாளத்தை இடக்கையால் பற்றி வலக்கையால் தாடியை நீவியபடி அமர்ந்திருந்த சகுனி அதனருகே நின்று மேலே பார்த்துக்கொண்டு எண்ணங்கள் உறைந்தவர்போல் சற்று நேரம் இருந்தார். ஓரிரு கணங்களுக்கு வந்தமைந்து அகலும் துயில் அவர் மேல் பரவிச்சென்றது.
பின்னர் நீர் சொட்டும் ஓசையில் விழிப்பு கொண்டவர்போல் தன்னை உணர்ந்து, மழைத்துளிகள் தேங்கி நின்ற தலைமுடியை கைகளால் அள்ளி உதறி பின்னுக்கு நீவிவிட்டு, கால்களைச் சுழற்றி புரவியிலிருந்து மெல்ல இறங்கினார். புரவி அவர் எண்ணத்தை உணர்ந்ததுபோல் காலெடுத்து வைத்து சற்று முன்னே சென்று காவல்மாடத்தின் மூங்கில் தூணில் உடல் சாய்த்து நின்றது. நெடும்பொழுது அது துயில் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். முன் வலக்காலை சற்றே தூக்கி எடை தூணில் அழுத்தி பெரிய தலை மேலும் தழைந்து கீழிறங்க மெல்லிய முனகலுடன் உடனே துயில் கொள்ளத்தொடங்கியது.
பார்பாரிகன் மேலே இருப்பதை வெறும் உணர்வாகவே சகுனி அறிந்தார். மூங்கில் படிகளில் ஏறுவதைப்பற்றி எண்ணியபோதே உடல் முழுக்க எழுந்த வலியால் நடுக்குற்று, கைகள் அதிர, உதடுகளை இறுக அழுத்தியபடி நின்றார். பின்னர் தன் முழு உளவிசையாலும் உந்தி உடலை முன் செலுத்தி ஏணியின் முதல் படியில் காலெடுத்து வைத்தார். உடலெடையை பெரும்பாலும் கைகளிலேயே நிறுத்தி தொங்கி ஏறுவதுபோல் கழைக்கணுக்களில் கால் வைத்து மேலே சென்றார்.
மூங்கில் முனகலுடன் நெரிபட்டு அசைந்தது. காவல்மாடம் அவ்வசைவுக்கு தானும் அசைந்து விரிசலோசை எழுப்பியது. அவர் மேலே சென்றபோது அங்கு பார்பாரிகனன்றி எவருமில்லையென்பதை கண்டார். பேருடலுடன் கைகளை மடியில் வைத்து ஊழ்கத்திலென அவன் அமர்ந்திருந்தான். அவர் ஏறிவருவதை அவன் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. ஆனால் அவன் உணராத ஒன்று அப்பகுதியில் எங்கும் நிகழாதென்றும் தோன்றியது.
காவல்மாடத்தின் மூங்கில் விளிம்பைப் பற்றியபடி தூணில் உடல் சாய்த்து புண்பட்ட காலை சற்றே நீக்கி வைத்து சகுனி நின்றார். இருளுக்குள் கோட்டுவடிவென தெரிந்த பார்பாரிகனின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தார். எவ்வண்ணம் அவனை அழைப்பது என்ற எண்ணம் எழுந்ததுமே ஒன்றும் பேசாமல் திரும்பி இறங்கிவிடவேண்டுமென்றும் தோன்றியது. அந்த உளத்தத்தளிப்பு சிறிய அசைவாக அவர் உடலில் வெளிப்பட அவருடைய புண்பட்ட கால் வலியதிர்வால் எதிர்வினையாற்றியது.
அங்கு வரும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. நெடுந்தொலைவு வந்த பின்பே அங்குதான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே தெரியவந்தது. அதன் பின்னரும் அங்கு சென்று என்ன சொல்லப்போகிறோம் என்பதை அவர் முடிவு செய்திருக்கவில்லை. பார்பாரிகனை பார்க்கவேண்டுமென்ற விழைவும் அவனிடமிருந்து எதையோ தெரிந்துகொள்ளவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் மட்டுமே இருந்தது.
பின்னர் உணர்ந்தார், அவனிடம் சொல்ல தன்னிடம் ஏதோ இருப்பதை. பலமுறை அகம் நோக்கி தேடியபோதும் அது என்ன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அதை அப்படியே தவிர்த்து இருபுறமும் இருளுக்குள் படைகள் துயிலெழுந்துகொண்டிருப்பதை பார்த்தபடி புரவியில் சென்றார். அஸ்வத்தாமனின் ஆணை சிறிய ஊதுகுழல் ஒலிகளினூடாக இருளுக்குள் பறந்து அலைந்துகொண்டிருந்தது. குளவிபோல ஒவ்வொரு வீரனையும் அது சென்று கொட்டியது. துயிலில் நழுவி நழுவி விழுந்து கொண்டிருந்தவர்களை அது துடித்து எழச்செய்தது.
பெரும்பாலானவர்கள் தங்கள் இயல்பான உளநிலையில் இல்லை என்பதை அவர்கள் குரல்களிலிருந்து உணர முடிந்தது. சிலர் வெறிகொண்டு சிரித்தனர். சிலர் பொருளின்றி எதையோ கூவி உசாவினர். அவருக்கெதிராக வந்த வீரன் ஒருவன் “உத்தமரே, இங்கு புரவிகள் கிடைக்குமா?” என்றான். அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் “என்ன?” என்று சகுனி கேட்டார். “புரவிகள்!” என்றபின் அவன் இரு கைகளையும் விரித்து “புரவியின் ஊன் பசிக்கு நன்று!” என்றான்.
புரவி அவனைக் கடந்து தன்னை கொண்டுவந்த பின்னர் அவர் அவனை திரும்பிப்பார்த்தார். அவன் அங்கு நின்று கைகளை அசைத்து எதையோ சொல்லிக்கொண்டிருந்தான். இன்று களமிறங்குபவர்கள் அனைவருமே சித்தம் பிறழ்ந்தவர்கள். அரசனும் நானும் கிருபரும் அஸ்வத்தாமனும். மத்ரரும் கிருதவர்மனும் முழுப் பித்தர்கள். இன்று நிகழப்போவது பிறிதொரு போர். இப்போர் தொடங்கியபோது இச்சித்தப்பிறழ்வு சற்று இருந்தது. இன்று அது முழுமை கொண்டுவிட்டது. பிற அனைத்தும் உதிர்ந்து மறைந்துவிட்டன. அறங்கள், நெறிகள், முறைமைகள், விழைவுகள், வஞ்சங்கள்… இன்றிருப்பது இப்போரை செலுத்திய முதற்பெரும் விசை மட்டுமே.
அவர் பார்பாரிகனிடம் கேட்க விழைவது என்ன என்பதை கண்டடைந்தார். மேலிருந்து பார்க்கையில் இப்போரில் அறிவால் விளக்கக்கூடிய ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா? இன்றுவரை நிகழ்ந்தவற்றைக்கொண்டு புரிந்துகொள்ள இயலும் ஒன்று உள்ளதா? இனி வரும் தலைமுறையினரேனும் புரிந்துகொள்ளத்தக்க ஒன்று? சித்தப்பிறழ்வால் அன்றி ஒருவரும் அள்ளிவிட முடியாத பெருநிகழ்வுத்தொடர் இது. சித்தம் பிறழாத ஒருவர் இதை தொகுத்துக் கூறிவிடலாகாது. அரக்கர் மைந்தா, நீ இப்போரில் இருக்கும் எவருடைய தரப்பும் அல்ல. இங்கிருந்து நீ பெறப்போவதும் இழப்பதுவும் எதுவும் இல்லை. அப்பாலிருந்து நோக்கும் உனது விழிகளுக்கு தென்படுவதுதான் என்ன?
சகுனி மெல்ல கனைத்தபடி மூங்கில் கழியை அசைத்தார். பார்பாரிகனிடம் அசைவு ஏதும் உருவாகவில்லை என்பதைக் கண்டு “இடும்பரே” என்று உரக்க அழைத்தார். இருமுறை அழைத்த பின்னரே பார்பாரிகனை அவர் குரல் சென்றடைந்தது. அவன் திரும்பிப்பார்த்து “யார்?” என்றான். “நான் காந்தாரனாகிய சகுனி” என்று அவர் சொன்னார். “உங்கள் மைந்தர்கள் அனைவரும் அங்கே களம்பட்டுக் கிடக்கிறார்கள்” என்று பார்பாரிகன் சொன்னான். சகுனியின் உடலில் ஓர் உலுக்கல் நிகழ்ந்தது. அவர் மறுமொழி கூறாமல் நின்றார்.
“ஒருவர்கூட எஞ்சவில்லை, ஒருவர்கூட!” என்று பார்பாரிகன் சொன்னான். சகுனி கழையைப் பற்றியபடி மெல்ல அவனருகே தரைப்பலகையில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டார். “கூறுக இடும்பரே, இப்போரில் தாங்கள் காணும் பொருள்தான் என்ன?” என்றார். பார்பாரிகன் திறந்த விழிகளுடன் இருள்வெளியை நோக்கிக்கொண்டிருந்தான். சகுனி அதன் பின்னரே தன் வினா சொல்லென நாவில் எழவில்லை என்பதை உணர்ந்தார். மீண்டும் அதை நாவிலெடுக்கையில் எத்தனை பொருளற்ற வினா அது என்று தோன்றியது.
இதை அறிந்து என்ன செய்யவிருக்கிறோம்? இதற்குப் பொருளென ஏதேனும் இருந்தால் அது இக்களத்தில் எவ்வகையிலும் பயனுறுவதல்ல. அதை அறிந்தவனுக்கும் அறியாதவனுக்கும் நடுவே எந்த வேறுபாடும் இங்கில்லை. அதை இக்களத்தில் நின்று ஒருவர் அறியக்கூடுவதும் இயல்வதல்ல. ஒருவேளை அதை மொழியில் சொல்லக்கூடுமெனில்கூட அதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகவேண்டும். ஒரு கண விழிநோக்கில் முழு மலைத்தொடரையும் பார்க்கும் அளவுக்கு அகன்று அகன்று சென்றிருக்கவேண்டும். ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகள். சகுனி “இடும்பரே, நீங்கள் என் அக்கையை சந்திக்கக்கூடுமா?” என்றார்.
அவ்வினாவை எழுப்பிய பின்னரே சகுனி அதன் முழு விரிவையும் உணர்ந்தார். அவர் எண்ணிய வினா அதுதான். அதை மறைக்கவே பிற வினாக்களை அவர் உள்ளம் உருவாக்கிக்கொண்டது. “நீங்கள் அவரை சந்திப்பீர்கள் இடும்பரே, ஐயமில்லை. அதை தெளிவாகக் காண்கிறேன்” என்றார். “இப்போர் இன்றுடன் முடியும். அல்லது இன்றுடன் நான் இவ்வுலகை நீப்பேன். அதன் பிறகு இப்போர் எவ்வண்ணம் நீடிக்கும் என்பதைப்பற்றி எனக்கு கருத்தில்லை. இவ்வுலகு நீடிக்குமா என்பது கூட எனக்கொரு பொருட்டில்லை. இன்றைய பொழுது இன்னும் சற்று நேரத்தில் விடியும் என்று எண்ணுகிறேன். நான் பார்க்கவிருக்கும் இறுதிக் கதிரெழுகை இது.”
“நான் அஞ்சுகிறேனா என்று என்னிடம் மீளமீள கேட்டுக்கொண்டேன். அஞ்சவில்லை என்றுதான் தோன்றுகிறது. படைக்கலம் தொட்டு பயிற்சி தொடங்கும் நாள் முதல் அச்சமில்லை அச்சமில்லை என்றே உள்நோக்கி நாம் கூறிக்கொள்கிறோம். பல்லாயிரம் முறை கூறிக் கூறி அச்சொல் நிரம்பிய உள்ளம் படைவீரர்களுடையது. ஆகவே நான் இறப்புக்கு அஞ்சவில்லை என்று சொல்லாத படைவீரன் எவனுமில்லை” என சகுனி சொன்னார். “ஆனால் மிக ஆழத்தில் இறப்புக்கு அஞ்சும் ஒரு சிறுவனை நான் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் நான் இவ்வுலகை விரும்புகிறேன். நான் இங்குள்ளவற்றை மட்டுமே விழைபவன். உளம் முதிர்ந்தோர் கனவுகாணும் பிறவுலகுகள் என் உள்ளே வாழும் சிறுவனை சென்றடையவில்லை.”
“புழுதி நிறைந்த காந்தார நிலப்பரப்பில் விளையாடிய அந்த சிறுவன் என்னிடமிருந்து அகன்றதே இல்லை. எனது அனைத்துச் சொற்களாலும் அனைத்து அசைவுகளாலும் அவனை அனைவரிடமிருந்தும் முற்றாக மறைத்துவிட்டிருக்கிறேன். அதை அறிந்தவர் என் அக்கை மட்டுமே” என்றார் சகுனி. “ஆகவே நீங்கள் மறுமுறை என் அக்கையை சந்திப்பீர்கள் எனில் நான் இப்போது எப்படியிருந்தேன் என்று அவரிடம் சொல்லுங்கள். அச்சிறுவன் அஞ்சினான் என்று சொல்லுங்கள். அஞ்சி அஞ்சி அவரை எண்ணிக்கொண்டான் என்றும் கனவுகளில் மீண்டும் இறப்பில்லா நிலவெளியில் அவருடன் விளையாடிக்கொண்டிருந்தான் என்றும் சொல்லுங்கள்.”
“அச்சிறுவன் மிக எளியவன், ஆற்றலற்றவன். பசுமை முளைக்காத பாலைநிலத்தை மட்டுமே தன் நாடெனக் கொண்டவன். அங்கும் மணிமுடிக்கு உரிமையற்றவன். அவன் பிறிதொருவனாக விழைந்தான். எல்லாச் சிறுவர்களையும்போல பெரிதை நாடினான். இன்னும் இன்னும் என்று நான்கு திசைகளையும் நோக்கி கோரினான். விழைவினூடாகவே அவன் வளர்ந்தான். அவனிடம் வஞ்சம் உள்ளதென்றும் தீமை நிறைந்திருக்கிறதென்றும் பிறர் நம்பலாம். அவனிடம் இருப்பது எளிய விழைவு மட்டுமே என்று அக்கை மட்டும் அறிவார். நீங்கள் மறுபடியும் அக்கையை சந்திக்கும்போது சொல்லுங்கள், அவ்விழைவில் ஒரு துளிகூட குறையாமல் நான் என் இறுதிக்களம் நோக்கி செல்கிறேன் என்று.”
“இக்களத்தில் என்னை கொல்லவிருப்பவர் எவரென்றுகூட என்னால் சற்று தெளிவின்றி ஆயினும் இன்று என்னால் காண முடிகிறது. அது இயல்பானதே. இவ்வாறுதான் அது முடியும். அக்கையிடம் என்னை எண்ணி வருந்தவேண்டாம் என்று கூறுங்கள். அக்கையிடம் அறுதியாக சொல்லிவிட்டுச் செல்வதற்கு சில சொற்களைத் தேடினேன் என்றும் ஒரு சொல்கூட என்னிடம் எஞ்சவில்லை என்றும் சொல்லுங்கள்.” சகுனி உணர்வுக்கொந்தளிப்புடன் அமைதியாக இருந்தார். அவர் உடல் அதிர்வுகொண்டது. கைகள் இருளுக்குள் துழாவிக்கொண்டே இருந்தன.
பின்னர் நீள்மூச்சுடன் மீண்டு “நெடுநாட்களுக்கு முன் அக்கையை முன்நிறுத்தி நான் ஒரு வஞ்சினம் உரைத்தேன். அவரை பாரதவர்ஷத்தின் பேரரசியாக அமர்த்துவேன் என்று. பசுமையும் செம்மையுமாக பொலியும் இந்த பாரதவர்ஷத்தையே அவருடைய கொடிவழிகள் ஆளும்படி செய்வேன் என்று. அதன் பொருட்டே காந்தாரம் விட்டு இங்கு வந்தேன். அவ்விழைவிலாது ஒரு நாள்கூட என் வாழ்நாள் செல்லவில்லை. இங்கிருந்து ஒருமுறைகூட நான் என் நிலம் நோக்கி மீளவில்லை. அவ்விழைவு கசந்து இறுகிய வஞ்சத்தின் உருவென்றே என்னை சமைத்துக்கொண்டேன்” என்றார்.
“ஆனால் எனது அந்த வஞ்சினம் பொய். நான் விழைந்தது பாரதவர்ஷத்தை அல்ல. நான் விழைந்தது என் அக்கை அமரும் அரியணையும் அல்ல. இந்நாள் வரைக்கும் நான் நின்று போரிட்டது என் அக்கைக்கு அளித்த சொல்லுக்காகவும் அல்ல. என்னுள் அச்சிறுவன் விழைந்த ஒன்றை அவனுக்கு அளிப்பதற்காக மட்டுமே” என சகுனி தொடர்ந்தார். “சிறுவர்கள் தங்கள் களிப்பாவைகளை மிகமிகப் பெரிதாக கனவு காண்கிறார்கள். இது நான் கண்ட களிப்பாவை. அதுவன்றி வேறு அனைத்தும் பொய்யே. அதை அக்கை அறிவார். ஆகவேதான் ஒருநாள்கூட நான் கொண்ட வஞ்சினம் பற்றி அவர் என்னிடம் உசாவியதில்லை.”
“ஆனால் அதன்பொருட்டு அவர் என்னை எண்ணி மகிழ்கிறார் என்று நான் நம்பும்படி அவர் நடந்துகொண்டார். அக்கைக்காக பாரதவர்ஷத்தை வெல்லக்காத்திருக்கும் ஒருவன் எனும் நாடகத்தை எழுபதாண்டுகள் நான் நடிக்க அவர் ஒரு சொல்லால், அன்றி ஒரு உடலசைவால்கூட அந்நாடகத்தை கலைக்காமல் என்னுடன் இருந்தார். அதன் பொருட்டு நான் நன்றியுடன் இருக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். எனக்கேகூட ஒருவேளை அக்கையும் நானும் இணைந்து ஆடும் அந்நாடகம் தெரியாமல் இருக்குமென்று அவர் எண்ணக்கூடும் என்பதற்காகவே இதை இப்போது சொல்கிறேன்.”
“எனக்குத் தெரியும், இப்புவியில் பொருளுள்ள விழைவுகளை கொள்வதற்கு ஒரு நல்லூழ் வேண்டும். பொருளுள்ள செயல்களை செய்வதற்கும் பொருளுள்ள முறையில் மடிந்து மண்படுவதற்கும் தெய்வங்கள் அருளவேண்டும். பிற கோடானுகோடி மக்களைப்போல நானும் முற்றிலும் பொருளின்மையில் பிறந்தேன். பொருளின்மையின் சேற்றில் நெளிந்து பொருளின்மையில் மடிந்து பொருளின்மை என்றாகி மறைவேன். புழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை அவ்வளவுதான்.”
“அக்கையிடம் சொல்லுங்கள் அரக்கரே, அவர் ஆடையின் ஒரு முடிச்சு முள்ளில் சிக்கிக்கொண்டதுபோல் இந்நாள் வரை என்னுடனான உறவு இருந்தது என்று. அவருடைய நல்லியல்பால், இந்த எளியோன் மேல் கொண்ட கருணையால் அவர் அந்த ஆடையை கிழித்தெடுக்கவில்லை. அதிலிருந்து அவர் இன்று விடுபட்டார். இன்றுவரை அவரிடம் சொல்லுரைத்தபடி நான் அவருக்கு பாரதவர்ஷத்தை ஈட்டி அளிக்கவில்லை. இனி வாய்ப்பில்லை. அதற்கான தேவையும் இல்லை. ஏனெனில் அவர் ஏற்கெனவே பாரதவர்ஷத்தின் பேரன்னை. அவர் பாரதவர்ஷத்தின் பேரரசி… மும்முடி சூடி அமர்ந்திருப்பவர்.”
“இப்புவி கண்ட மாபெரும் சக்ரவர்த்தி ஒருவனின் அன்னை என்பதனால் மட்டும் அல்ல. நாளை இங்கு ஆளப்போகும் பாண்டவர்களின் கொடிவழியினரும் வந்து தாள்பணியும் பெற்றி கொண்டிருப்பதனாலும் அல்ல. விழைவால், மைந்தர் மேல் கொண்ட பற்றால், கணவனின் சொல் கேட்டமையும் கற்பால் என எதனாலும் ஒருகணம் கூட அறத்திலிருந்து வழுவாது நின்றிருந்தார் என்பதனால். இனி என்றும் அவர் பாரதவர்ஷத்தின் மறுக்கப்படாத சக்ரவர்த்தினி என்றே புகழ் வாழும். அதை ஏற்காத ஒருவரே இப்புவியில் உள்ளார். அதுவும் நிகழும் இப்போருக்குப் பின் என்று சொல்லுங்கள். குந்தி தேவி அவரை பார்க்க வருவார். மூத்தவளே என்மேல் பொறுத்தருளுங்கள் என்று அவர் காலில் விழுந்து அழுவார். அவருக்கும் உளம் கனிந்து அமுதச்சொல்லொன்றை அளிக்க அக்கையால் இயலும்.”
“ஏனெனில் பேரரசியால் பிறிதொன்று இயல்வதில்லை. இப்புவியில் எவரும் எவரையும் பேரரசியாக்க வேண்டியதில்லை. பேரரசியர் அவ்வாறே பிறக்கிறார்கள். அவர்களுக்கு என்றே தெய்வங்கள் அமைக்கும் தனிப்பாதையில் நடந்து அவ்வாறே சென்று அமைகிறார்கள். அக்கையிடம் சொல்லுங்கள், எனது உடைமைகள் அனைத்தும் கங்கையில் வீசப்படவேண்டும் என்று. அவை எந்த மானுடர் கைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை.”
“எனது உடலை குருக்ஷேத்ரத்திலிருந்து எடுத்துக்கொண்டு செல்கையில் சிதை அருகே ஒரு ஓநாய் வந்து நிற்கும் என நான் அறிவேன். அது மிகத் தொன்மையான ஓநாய். சாவற்றது. அது எனக்களித்த நஞ்சின் வலியை இக்கணம் வரை தாங்கிக்கொண்டிருக்கிறேன். இன்று அதிலிருந்து விடுபடுவேன். சிதையில் இருந்து என் நெஞ்சக்குலையை அது கவ்விக்கொண்டு செல்லும். குருதி உண்டு பசியாறும். அதன் பின்னரே அது விண்ணுலகுக்கு செல்ல முடியும்.”
“சிதை அணைந்து இங்கே கங்கையில் நீர்க்கடன்களும் முடிந்த பின்னர் அக்கை என் பொருட்டு ஒன்று செய்யவேண்டும். நான் காந்தாரத்தில் இருந்து கொண்டுவந்து வைத்திருக்கும் ஒரு கூழாங்கல்லை காந்தார நாட்டுக்கு கொடுத்தனுப்ப வேண்டும். அதை அங்கு ஆறன்னையர் ஆலயத்தில் ஒன்றாக வைக்க வேண்டும். அதனூடாக நான் இங்கிருந்து மீண்டு செல்வேன். புழுதி பறக்கும் எனது பாலைநிலத்திற்கு. அக்கையைப் போலவே நானும் ஒரு கணம்கூட பாரதவர்ஷத்தில் வாழ்ந்ததில்லை என்று அக்கையிடம் சொல்க! ஒருமுறைகூட நான் இந்த நிலத்தை கண்ணால் பார்த்ததில்லை என்று கூறுக! இப்பசுமையும் மழையும் இங்கே ஓடும் வற்றாப் பெருநதிகளும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நான் பாலைநிலத்தில் மட்டுமே வாழ்ந்திருந்தேன். அங்கு மீள்கையில் மட்டுமே முழுதமைவேன்.”
“அக்கையிடம் கூறுக, என் விழைவின் இறுதித் துளியையும் திரட்டிக்கொண்டுதான் இங்கிருந்து செல்கிறேன் என! ஏனெனில் எவ்வகையிலும் நான் உளக்குறை அடையவில்லை. என்னை துவாபரன் என்கிறார்கள். வரவிருக்கும் யுகத்துக்கு வழிகோலுபவன். சென்ற யுகத்தின் உருவம். எவ்வண்ணம் சென்ற யுகம் ஆனேன் என்று எனக்கு தெரியவில்லை. வரவிருக்கும் யுகத்தில் என்னைப்போன்ற ஒருவன் நிகழ இயலாதென்று மட்டும் உணர்கிறேன்.”
சகுனி நீண்ட இடைவெளி விட்டு தாழ்ந்த குரலில் சொன்னார் “ஒன்றை மட்டும் பற்றி வாழ்பவர்கள் வெறுமையை சென்றடைந்தாக வேண்டுமென்பது தெய்வங்களின் நெறி. ஆனால் அந்த வெறுமையைப்போல் மானுடர்க்கு அளிக்கப்படும் பெரும் பரிசொன்று இல்லை என்பது நான் அறிந்த உண்மை. அக்கையை அடிபணிந்தேன் என்று சொல்லுங்கள்.”
பார்பாரிகன் அச்சொற்களை கேட்டதாகத் தெரியவில்லை. சில கணங்களுக்குப் பின்பு அச்சொற்களை சொன்னோமா என்ற ஐயம் சகுனிக்கு ஏற்பட்டது. அவர் பார்பாரிகனின் முகத்தை நோக்கியபடி கைகளை மார்பில் கட்டிக்கொண்டு மூங்கில் கம்பத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தார். பார்பாரிகன் மூச்சுவிடுவதுகூட வெளிப்படவில்லை.
சகுனி நீள்மூச்சுடன் கலைந்து “உண்மையில் இன்று காலை வரை என் மைந்தரில் ஒருவரை அஸ்தினபுரிக்கு திருப்பி அனுப்பலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. என் சொற்கள் அனைத்தையும் அவனிடம் எழுதி அக்கைக்கு அனுப்பலாம் என திட்டமிட்டேன். அவன் அவரிடம் இவற்றை சொன்னபிறகு என் வடிவாக மீண்டும் காந்தாரத்திற்கு செல்லவேண்டும் என்றும் விழைந்தேன். அவன் விழிகள் காந்தாரத்தைப் பார்க்கையில் நான் அங்கு இருப்பேன். அங்கிருந்து அவனுடைய அகவையில்தான் நான் கிளம்பினேன்…” என்றார்.
“ஆனால் இன்று காலையில் எனக்குத் தோன்றியது, அது முறையல்ல என்று. எனக்குப் பின் என் குருதி ஒருதுளிகூட எஞ்சக்கூடாது. ஏனெனில் நான் துவாபரன். இந்த யுகம் என்னுடன் முடியவேண்டும். இத்தனை ஆயிரம் பேரை களத்தில் கொன்றது என் சொல். என்னில் ஒரு துளியும் எஞ்சலாகாது. இந்த யுகத்துடன் நானும் அழிகையிலேயே அனைத்தும் முழுமையடைகின்றன. அதுவே முறை.”
புன்னகைத்து “அறம் அல்ல. அவ்வாறு ஒன்று இப்புவியில் இருப்பதாக நான் எண்ணவும் இல்லை. இங்கு நெறிகளெனத் திகழ்பவை அனைத்தும் ஒன்று பிறிதுடன் கொள்ளும் உறவின் நிகர்நிலைகளும் முழுமைநிலைகளும் மட்டுமே. அன்பென்றும் கருணையென்றும் அளியென்றும் கூட எதுவும் இங்கு உள்ளனவா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கு ஒன்று உள்ளது, அது முழுமை. ஒவ்வொரு துளியிலும் செம்மையென வெளிப்படுவது அம்முழுமையே” என்றார்.
“நான் நாற்களமாடுபவன். இக்களத்தில் தனக்குரிய இடத்திலிருந்து சற்றே தள்ளி அமர்ந்திருக்கும் ஒரு காய்மீது முழுக் களமும் விசைகொண்டு மோதுவதையே நான் பார்க்கிறேன். பிழையென்பது விலகி நிற்றலே. அழகென்பது முழுமை. அது நிகழவேண்டும் என்று மட்டுமே அறுதியாக இப்போது எண்ணுகிறேன். நானும் என் குடியும் எஞ்சாது இங்கு அழிகையில் எழுந்த ஓரலை மீளச்சென்று அமைகிறது.”
சகுனி சிரித்து “வட்டம்போல் அழகிய வடிவு பிறிதில்லை என்று எனக்கு நாற்கள ஆடல் கற்பித்த சூதரான திரயம்பகர் ஒருமுறை சொன்னார். பிற வடிவங்கள் அனைத்தும் மானுடர்கள் உருவாக்கியவை. வட்டம் தெய்வங்களால் உருவாக்கப்பட்டது. இங்கு அழகென்றும் முழுமையென்றும் செம்மையென்றும் நாம் அறிவன அனைத்தும் வட்டங்களின் வெவ்வேறு வடிவங்களே. தொடங்கியது அவ்வண்ணமே சென்று முடிவதற்குப் பெயர்தான் வட்டம். ஒவ்வொன்றும் தனக்கு நிகரான ஒன்றை கண்டடைவதற்குப் பெயர் வட்டம். வட்டம் முழுமையுற்ற பின்னர் தெய்வங்கள் ஆற்றுவதற்கு ஏதுமில்லை” என்றார்.
“இவ்வட்டம் இன்று முழுமையாகுமெனில் நான் கொண்ட அனைத்து மீறல்களும் நிகரமைகின்றன” என்ற சகுனி மேலும் சில கணம் பார்பாரிகனைப் பார்த்தபடி அமர்ந்திருந்துவிட்டு “நன்று, இச்சொற்கள் தங்களுக்குள் எங்கோ இருக்குமென்றும் எவ்வகையிலோ உரியவர் செவிகளுக்கு சென்று சேருமென்றும் எண்ணுகிறேன். அன்றி எனக்கு வேறு வழியும் இல்லை” என்றபின் மூங்கில் கழியைப் பற்றி வலிக்கும் காலை நீட்டி முனகலோசையுடன் மெல்ல எழுந்தார்.