ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10

 

குரு நித்யா மறைந்தபோது  ஊட்டி நாராயணகுருகுலத்தில் அவருடைய சமாதியிடம் ஜப்பானிய முறைப்படி அமைக்கப்பட்டது. குருவின் ஜப்பானிய மாணவியான மியாகோ அதை அமைக்க முயற்சி எடுத்துக்கொண்டார். அதைச்சுற்றி குருவின் விருப்பப்படி ஒரு ஜப்பானியத் தோட்டமும் அமைக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்குப்பின் தொடர்ச்சியான பராமரிப்பின்மையால் அது அழிந்தது

அந்த ஜப்பானியத்தோட்டம் உருவாக்கப்படுகையில் நான் உடனிருந்தேன். ஜப்பானியத் தோட்டக்கலை என்றால் என்ன என்பதை அணுகி அறிந்தேன். ஜப்பானியத் தோட்டக்கலையின் நெறிகள் மூன்று.

ஒன்று: மிகக்குறுகலான இடத்திற்குள் அது அமைக்கப்படுகிறது. இருநூறு சதுர அடி நிலத்தில்கூட ஒரு ஜப்பானிய தோட்டத்தை உருவாக்கிவிடமுடியும்.

இரண்டு: தோட்டம் என்றால் செடிகள் மரங்காள் மட்டும் அல்ல. இயற்கையின் எல்லா அழகுகளும் இணைந்ததே ஜப்பானியத் தோட்டம். ஆகவே கற்கள், பாறைகள் ஆகியவையும் அழகுற அமைக்கப்படுகின்றன. ஓடைகள் உருவாக்கப்படுகின்றன. பலசமயம் மிகமிகச் சிறிய ஓடைகள். பாறைகளில் பூசணங்கள் பாசிகள் வளர்க்கப்படுகின்றன. களைகளும்கூட பேணப்படுகின்றன.

மூன்று: தோட்டம் என்பது கட்டின்றி வளர்வது அல்ல. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் பேணி பாதுகாக்கப்படுவது. ஜப்பானியத் தோட்டம் என்பது முழுக்கமுழுக்க மானுடக்கைகளால் ஆளப்படுவது. களைகள் கூட செதுக்கப்பட்டு மானுடனால்  ஓர் ஒத்திசைவு உருவாக்கப்படுகிறது.

ஜப்பானியர் தோட்டங்களை பராமரிப்பதை ஒரு தொல்கலையாகவே பயின்றிருக்கிறார்கள். நமக்கும் அரசரகளின் அரண்மனைளை ஒட்டி அணித்தோட்டம் [சுந்தரவனம்], மகிழ்த்தோட்டம் [நந்தவனம்] இருந்திருக்கிறது. ஆனால் ஒரு கலையாக அது வளரவில்லை. அதைப்பற்றிய பழங்காலக் குறிப்புகள் இல்லை. பூந்த்தோட்டங்கள் வர்ணிக்கப்படுகின்றன, ஆனால் தனிப்பெயர் கொண்ட பூந்தோட்டங்கள் குறிப்பிடப்படவில்லை. ஜப்பானில் தோட்டக்கலை ஜென் பௌத்தத்தால் ஒருவகை ஆன்மிகப்பயிற்சியாகவே வளர்க்கப்பட்டது. பல தோட்டங்கள் நீண்ட வரலாறுகொண்டவை

நான் டோக்கியோ உட்பட எங்கும் சிறிய தோட்டங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அடுக்குமாடிகளின் உப்பரிகைகளிலேயே கூட சிறிய தோட்டங்களைக் காணமுடிந்தது. ஜென் ஆலயங்களை ஒட்டி இருக்கும் அணித்தோட்டங்களில் ஒற்றை நோக்கிலேயே அவற்றைப் பேணுபவரின் உள்ளம் தெரிந்தது. அங்கே தோட்டம் என்பது தோட்டக்காரரின் தொழில் அல்ல. அது ஒரு கலைப்படைப்பு, அதற்குப்பின் ஒரு கலைஞன் இருக்கிறான். இல்லத்தோட்டங்கள் பெரும்பாலும் பெண்களால் பேணப்படுகின்றன. பேணுபவர் தோட்டத்தில் நிகழ்த்துவது தன் அகத்தை. அகம் பூக்கிறது, தளிர்விடுகிறது, ஒளிகொள்கிறது.

மே 15 ஆம் தேதி செந்திலின் நண்பர் ரகுபதி அவர்களுடன், அசிககா ( Asikaga) என்னும் பூங்காவிற்க்கு சென்றோம். நான் சென்ற நாடுகளிலெல்லாம் பூந்தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அமெரிக்க தோட்டங்களை அணிக்காடுகள் என்றே சொல்லவேண்டும். அசிககா தோட்டம் மானுடக்கைகளால் பேணப்பட்ட மலர்வெளி. வண்ண வண்ண மலர்கள்.

ஜப்பானியர்களுக்கு மலர்கள்மேல் பித்து மிகுதி. கூட்டம்கூட்டமாக மலர்களை வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலர்த்தோட்டம் இது. இதன் மையமான மலர்மரம் விஸ்டீரியா [wisteria] எனப்படுகிறது. இதற்கு ஃப்யூஜி என்றும் பெயர் உண்டு. எரிமலையின் பெயர். எரிமலை ஒரு மாபெரும் மலர்மரமா என்ன? ஆனால் விஸ்டீரியா ஒருவகை எரிஎழுகை போலவே மலர்கொண்டிருந்தது.

இந்த தோட்டத்தில் 350 விஸ்டீரியா மரங்கள் உள்ளன. அவற்றில் மிகப்பெரியது 140 ஆண்டுகள் அகவை கொண்ட மாபெரும் விஸ்டீரியா. அதை ஒரு மலர்குடை எனலாம். அந்த மரமே ஒரு பெரிய மலர். இன்னொரு இடத்திலிருந்து இங்கே பெயர்த்துக் கொண்டுவந்து நடப்பட்டது. ஒரு பாட்டி. ஆனால் இன்னமும் மலர்ந்துகொண்டிருக்கிறார்.

மரங்களில் தொங்கும் தோரணங்கள் போல மலர்கள். மலர்க்கூடாரம். மலர்க்குகை. 87 அடி நீளமான மலர்ப்பாதை மிக விந்தையான அனுபவம். ஒரு கருவறைப் பயணம். ஒரு ஆழுள்ளப் பயணம். மலர்கள் கந்தர்வர்களுக்குரியவை என்பது நம் மரபு. மலர்களால் ஆன இல்லம் அவர்களுடையது. கந்தர்வர்களாக உணரும் ஒரு நடை.

வெவ்வேறு மலர்கள். குருதிச்செம்மை முதல் இளம்பச்சை வரை. நீலம் முதல் செங்கருமை வரை. நித்யா ஓர் உரையில் சொன்னார். ஓவியத்தில் சில வண்ணங்கள் சில வண்ணங்களுடன் இசைவே கொள்ளாது. ஆனால் எல்லா வண்ணங்களும் எல்லா வண்ணங்களுடன் இசைவதை நாம் மலர்களில் காணலாம். மலர்கள் அவ்வாறு வண்ண இசைவுவை அடைவதற்கு ஏதாவது ஒன்றைச் செய்திருக்கும். நடுவே இன்னொரு வண்ணத் தீற்றல் இருக்கும். வடிவ வேறுபாடு இருக்கும்.

உதாரணமாக, செவ்வெண்ணிறமான இதழ்கள் நடுவே ஊதா நிறம் அமைந்தால் கண்ணுக்கு உறுத்தும். ஆனால் ஊமத்தையில் அந்த ஊதாவண்ணம் நடுக்குழியாக அமைந்திருக்கும். ஆகவே அழகாகத் தெரியும். மலர்களில் இருந்தே நாம் வண்ணங்களை ரசிக்கக் கற்றோம். ஆனால் பல மலர்கள் ‘கூச்சலிடும்’ வண்ணங்கள் கொண்டவை. அவை மலர்களில் மட்டுமே அழகானவை

அங்கே பான்ஸாய் மரங்களைப் பார்த்தேன். முந்நூறாண்டுகள் பழைய பான்ஸாய் மரங்களைக்கூட. பான்ஸாய் மரங்கள் முதலில் ஒரு திகைப்பை அளிக்கின்றன. பின்னர் ஒவ்வாமையை. இயற்கையை குறுக்கிவிட்டதான ஒரு கசப்பை. குறிப்பாக ஆலமரம். நாம் திமிறி வேரும் கிளையும் கொண்டு எழும் ஆலமரங்களையே கண்டிருக்கிறோம். அதே திமிறலும் மீறலும் ஒரு சிறுவடிவில் நிகழ்கையில் கடவுளைக் கேலிசெய்வதுபோலப் படுகிறது

ஆனால் எங்கும் எவ்வகையிலும் தன்னை நிகழ்த்தும் இயற்கை என அதைக் கொள்ளலாம். நான் மலைப்பாறை உச்சியின் கைப்பிடி மண்ணில் உடல்குறுக்கி வளர்ந்து சிற்றுருவாக நின்றிருக்கும் மரங்களைக் கண்டிருக்கிறேன். இயற்கையான பான்ஸாய். மரத்திற்குச் சூழல் என்பது ஓர் அறைகூவல், ஒரு வாய்ப்பு மட்டுமே.

அங்கிருந்து அஷிகாகா காக்கோ [Ashikaga Kakko] என்னும் பழைமையான பள்ளிக்குச் சென்றோம். அஷிகாகோ என்பது ஜப்பானின் தொன்மையான சமுராய் குலம். முரமாச்சி ஷோகனேட் என்றும் அது கூறப்படுகிறது. மினமாட்டொ குலத்தின் ஒரு கிளை இது. நெடுங்காலம் இப்பகுதியில் அது ஆட்சி செலுத்தியிருக்கிறது. அக்குலத்திற்கான பயிற்சிநிலையம் இப்பள்ளி.

ஜப்பானின் தொன்மையான கல்விக்கூடம் இது என சொல்லப்படுகிறது. ஜப்பானிய போர்க்கலை என்பது வெறும் படைக்கலப் பயிற்சி அல்ல. அது மிகமிக விரிவான ஆளுமைப்பயிற்சி. கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. கிபி 1432ல் ஷோகன் உசுவேகி நோரிசான் [Uesugi Norizane] இதை புதுப்பித்தார். அவர் ஏராளமான சீன கலைபொருட்களை இங்கே கொண்டுவந்தார். அவை இப்போதும் இப்பள்ளியில் பேணப்படுகின்றன. 1535ம் ஆண்டைச் சேர்ந்த உருவேகி நோரிசானின் சிலை ஒன்று இங்கே உள்ளது. பளிங்குக் கண்கள் கொண்டது

இந்த பள்ளியில் கன்ஃபூஷியஸின் சிலை ஒன்று உள்ளது. சீனாவிலிருந்து உசுவேகி நாரிசான் கன்ஃபூஷிய சிந்தனையை கொண்டுவந்திருக்கலாம். கன்ஃபூஷிய சிந்தனையின் அடித்தளத்தை ‘ஒத்திசைவு’ என்ற ஒற்றைச் சொல்லால் சுட்டலாம். இயற்கையுடன் ஒத்திசைவது, சமூகத்துடன் ஒத்திசைவது, அரசுடன் ஒத்திசைவது, பிற மானுடருடன் ஒத்திசைவது, இறந்த காலத்துடன் ஒத்திசைவது. அதற்கான நெறிமுறைகளே ஒருவகையில் கன்ஃபூஷியஸால் கற்பிக்கப்பட்டன

ஜப்பானிய ஜென் சிந்தனையின் அடியில் கன்ஃபூஷியஸிம் உள்ளது என்று தோன்றுகிறது. இன்றும் ஜப்பானை ஒரு வெற்றிபெற்ற நாடாக நிலைநிறுத்துவது கன்ஃப்யூஷியஸின் அடித்தளமே. ஜப்பானில் அமைப்புக்கள் எல்லாமே வெற்றிகரமானவை. ஊழியர்கள் அந்த அமைப்புக்கு முற்றாக இசைவுகொள்கிறார்கள். ஆகவே அரசும் சமூகமும் எப்போதுமே செயலூக்கம் கொண்டவையாக உள்ளன.

ஜப்பானியத் தொழிற்சூழலை செந்தில் உட்பட நண்பர்கள் சொல்லும்போது அவர்களின் பிசிறில்லாத கூட்டு உழைப்பையே சுட்டிக்காட்டுகிறார்கள். அவர்கள் எளிய ஆணவங்களால் முரண்படுவதில்லை. ஆகவே உழைப்புத்திறன் வீணாவதில்லை. ஜப்பானியர்களை ஒருவகையில் பயின்ற அடிமைகள் என்று சொல்லத் தோன்றும். ஆனால்  அந்த ஒத்திசைவு அவர்களின் அகத்தனிமையை, விடுதலையை  பாதிக்கவில்லை.

ஜென் அளித்த கொடை என அதைச் சொல்லலாம். புற ஒத்திசைவையும் அகவிடுதலையையும் ஒரே சமயம் போதிப்பது ஜென். மிகமிகக் கச்சிதமான உலகச்செயல்களை அது கற்பிக்கிறது. ஜென் முறையில் தட்டுகழுவும் பயிற்சியே உண்டு. மாக்ரோபயாட்டிக்ஸ் முறையைக் கற்பிக்க ஊட்டி குருகுலத்திற்கு வரும் ஜப்பானியர்களும் அமெரிக்கர்களும் அதைப்பற்றிப் பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் ஜென் அகத்தே கட்டில்லாத தேடலை , சொல்லப்போனால் ஆன்மிக அராஜகத்துவத்தை கற்பிக்கிறது. கன்ஃப்யூஷிய சிந்தனையில் இருந்து ஜென் முன்சென்றது இவ்வகையில்தான்

முன்பு அங்கிருந்த பள்ளியை மீண்டும் பழுதுபார்த்து அமைத்திருக்கிறார்கள். இங்கே ஆர்வமூட்டும் ஒன்றைக் கண்டேன். தொன்மையான ஜப்பானிய புல்கூரை. இதைப்போன்ற கூரைகளை தமிழகத்தின் வடபகுதியில் காணலாம் நாணல்போன்ற செறிவான உலர்ந்த புல்லைக்கொண்டு அமைக்கும் கூரை தமிழகத்தின் மிதமான மழைச்சூழலில்கூட பத்தாண்டுகள் இருக்கும். ரவீந்திரபாரதி என்னும் நண்பர், மொரப்பூரில் கட்டிய வீட்டில் மாடியில் இப்படி ஒரு கூரையை அமைத்திருந்தார்

 

அதன்பின் நமீபியாவில் இத்தகைய கூரையைக் கண்டேன். அங்கே இருபதுமுப்பதாண்டுகள் இக்கூரை நிற்குமாம். ஏனென்றால் மழையே இல்லை. ஜப்பானின் நிரந்தர மழைச்சூழலில் எப்படி இக்கூரை தாக்குபிடிக்கிறது என தெரியவில்லை. ஆனால் அது ஒரு வகையான வரலாற்று உணர்வை உருவாக்கியது. பின்னாளில் மூங்கில்களாலும் அதையொட்டி மூங்கில்வடிவ உலோக உருளைகளாலும் கூரையிட்டிருக்கிறார்கள்

 

அந்தப் பள்ளியின் பெரிய அறைகளில் சுற்றிநடந்தோம். அதன்பின்பக்கம் அங்கே பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நினைவாக நூற்றுக்கணக்கான சிறு குமிழ்வடிவங்களை நிலைநிறுத்தியிருந்தார்கள். சிவலிங்கங்கள் போல பௌத்த தூபிகளின் சிறுவடிவங்கள் போல தோன்றின. புகைப்படம் எடுத்து ராஜமாணிக்கத்துக்கு அனுப்பி ‘ஜப்பானில் சைவம்’ என சொல்லி தூண்டிவிட்டோம். செவ்வாய்கிரகத்தில் சைவம் என்றாலும் பூர்விக சைவர்கள் நம்பி வெறிகொள்வார்கள். வைணவ வெறியர்கள் ஸ்ரீரங்கம் தவிர எங்கும் வைணவம் இருக்க வாய்ப்பில்லை என நம்புபவர்கள்.

அந்த பள்ளிக்குச் சமானமான பள்ளி இங்கே ஏதும் உள்ளதா? பார்த்திபசேகரபுரம் என்னும் ஊர் குமரிமாவட்டத்தில் உள்ளது. அங்கே ஒரு தொன்மையான வேதபாடசாலை இருந்திருக்கிறது. காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என ராஜராஜ சோழனின் கல்வெட்டில் குறிப்பிடப்படுவது அந்த இடம்தான் என்று ஓர் ஊகம் உண்டு . குமரிமாவட்டத்தின் சிதறால் ஒரு தொன்மையான பல்கலைக் கழகம். இத்தகைய கல்விநிலைகளை மீட்டு ஓர் சுற்றுலா அடையாளமாக ஆக்கினால் நம் பழைய கல்விமுறை குறித்த ஒரு புரிதலை அடையமுடியும்

இத்தகைய இடங்களில் நிற்கையில் உருவாகும் ஒரு கனவு , நாம் அந்தக்காலத்தில் அங்கே வாழ்வதைப் பற்றியது. உண்மையில் அக்கனவு கொஞ்சமேனும் இருப்பவர்களால் மட்டுமே இந்த பயணங்களை மகிழ்வுடன் இயற்றமுடியும்.  ஆனால் இந்த வகையான இடங்கள் பதற்றத்தை அளிக்கின்றன. சமணக்குகைகளுக்கு செல்லும்போது அவற்றில் ஒரு மாணவனாக அமர்ந்திருக்கும் உளக்காட்சி மிகப்பெரிய நெகிழ்வை அளிக்கும். இங்கே அதிகாரம் வீற்றிருக்கிறது

ஜப்பானின் கட்டிடக்கலையில் மரம் மிகப்பெரிய பங்கைவகிக்கிறது. ஒருகாலத்தில் வானளாவிய காடுகளின் நிலமாக இது இருந்திருக்கலாம். ஆனால் கல் குறைவாக இருந்திருக்கலாம். கருங்கல் கட்டுமானங்கள் மிக அரிது. காலம் மரத்தை கருமையாக்கி இறுகச்செய்து கல்போலவே ஆக்கிவிட்டிருக்கிறது. இந்த பள்ளியில் அக்காலத்தில் பயின்ற மாணவர்களை எண்ணிக்கொண்டேன். மரத்தைக் கல்லாக்கும் கலை. மறுத்த மரங்களும் இருந்திருக்கலாம். அவை சிதைந்து அழிந்திருக்கும்.

 

அங்கிருந்து சற்று தூரம் தள்ளியிருந்த பறவைகளின் பேணகத்திற்க்குச் சென்றோம். ஒரு ஜப்பனிய கிராமத்திற்குள் நுழைந்தது அப்போதுதான். ஆனால் ஜப்பானில் கிராமங்கள் இல்லை. எல்லா இல்லங்களுமே புதியவை, வசதியானவை. அமெரிக்கா போல இங்கே வேளாண்மை என்பது அரசின் செல்லக்குழந்தை. ஓர் அம்மணி வயலில் பயறு நட்டுக்கொண்டிருந்தாள். விதையை ஊன்றி பாலிதீன் தாளை சுருள்நீட்டி மூடினாள். அருகே அவளுடைய கார் எந்திரம் ஓடிக்கொண்டிருக்க காத்திருந்தது. அந்த டீசல் செலவில் இங்கே இந்தியாவில் ஓர் அறுவடையே செய்துவிடலாம்.

நான் அந்த இடத்தில் அமர்ந்துகொண்டு இந்தியாவில் ஜென் போல வேலையை தவமெனச் செய்யும்படிப் பழக்கும் ஆன்மிகப் பயிற்சி கொண்ட மதப்பிரிவுகள் எவையேனும் உள்ளனவா என எண்ணம் ஓட்டினேன். கன்ஃபூஷியஸித்திற்கு நிகரானவை. அப்படி எதையும் என்னால் காணமுடியவில்லை. இங்கிலாதது இல்லை , எங்கிருப்பதும் இங்கிருந்து சென்றதே என்றவகையான கூச்சல்கள் இருந்தாலும் இதுதான் உண்மை. நாம் புறத்தை வெளியே நிறுத்தி அகத்தை பழக்கக் கற்றோம். புறத்தே நாம் செய்வது வழிபாடுகளை மட்டுமே

ஜப்பானிய வயல்வெளிமேல் குளிர் பரவத் தொடங்கிவிட்டிருந்தது. அந்தப் பறவைப் பேணகத்தில் வலசைப்பறவைகள் அப்போது இல்லை. உள்ளூர் பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. அந்தி இறங்கிக்கொண்டிருந்தது. சூழ அமைதியில் மூழ்கிய வயல்கள். மிகத்தொலைவில் மேலும் அமைதிகொண்ட இல்லங்கள்.

ஜப்பானிய ஜென் கவிதைகளின் மையக்கருப்பொருள் அமைதி என்று தோன்றியதுண்டு. அமைதியான குளத்தில் தவளை பாய்வதைப் பற்றிய பாஷோவின் அந்தப் புகழ்பெற்ற ஜென்கவிதை அச்சித்திரத்தை உள்ளத்தில் உருவாக்கியிருக்கிறது. ஜப்பானிய நிலம் அலையலையானது. ஸ்காட்லாந்தை நினைவூட்டுமளவுக்கு. பசுமையின் அலைகளாக அப்போது தெரிந்தது. நோக்கி அமர்ந்திருக்கையில் முதல்முறையாக ஜென் ஆசிரியர்கள் எங்கிருந்து தொடங்கினார்கள் என்பது புரிந்தது.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைகோவையில் ப.சிங்காரம்
அடுத்த கட்டுரைவெண்முரசு விவாத அரங்கு, சென்னை