ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

டோக்கியோ உலகின் மக்கள் தொகை மிகுந்த நகரங்களில் ஒன்று. ஏறத்தாழ ஒருகொடிப்பேர் வாழ்கிறார்கள். நகரின் மையப்பகுதிகள், உச்சிப்பொழுதுகளில் மிகமிக நெரிசலானவை. ஆனால் குடியிருப்புப் பகுதிகளில் பூங்காக்கள், நீண்ட கால்நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் விரிந்த திறந்த வெளி பேணப்படுகிறது. நகரின் 36 சதவீதம் இயற்கைக்காடாக பேணப்படுகிறது என்கிறது ஆவணக்குறிப்பு

நான் இதுவரைக்கும் சென்ற உலக நகரங்கள் அனைத்துமே திறந்த வெளிகளை மிகப்பெரிய செல்வமாக கருதுகின்றன .மக்கள் நெரிசலாக வாழும் நகரங்களில் திறந்த வெளிகள் இல்லையேல் அது மாபெரும் சிறைக்கூடமாக மாறிவிடும். ஒருநகரம் மட்டுமே நாடாக அமைந்த சிங்கப்பூரில் கூட பூங்காக்கள், கடலோரங்கள், மைதானங்கள், சதுக்கங்கள் என்று மிகப்பெரிய அள்வில் திறந்த வெளிகள் பேணப்படுகின்றன.

இந்திய நகரங்கள் பெங்களூர் தவிர எங்குமே திறந்த வெளிகள் பேணப்படுவதில்லை. அதைப்பற்றி அக்கறையும் இங்குள்ள ஆட்சியாளர்களிடம் இல்லை. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இருந்த திறந்தவெளிகள் கூட கட்டிடங்களால் வெவ்வேறு வகையான நினைவங்களால் மூடப்படுவதை இன்று காணலாம் .சென்னையின் ஒரே திறந்தவெளி என்பது கடற்கரை. ஆனால் சென்னையின் மிக நெரிசலான பகுதி அதுவே. கடைகளும் நினைவகங்களும். இன்னும் சில காலங்களில் சென்னை கடற்கரை என்பது சமாதிகள் மட்டுமே இருக்கும் இடமாக மாறிவிடும் என்று தோன்றுகிறது

செந்திலின் இல்லம் அமைந்துள்ள நிசிகசாய் பகுதியில் இருந்து காலையில் அங்குள்ள ரிங்காய் கோஹென் [Rinkai Koen Park ] பகுதிக்கு செந்திலுடன் நதிக்கரையோரமாக ஒரு நீண்ட நடை சென்றேன். ஒரு நகரின் இனிமை என்பதே கட்டுமானங்கள் அல்ல, அதை இனிதாக்கும் பொழுதுகளை அளிக்கும் இத்தகைய இடங்கள்தான். பக்கவாட்டில் சாலையில் வண்டிகள் சென்றுகொண்டிருந்தன. சரிவில் மலர்கள். மறுபக்கம் நீலநீர் நிறைந்த நதியில் படகுகள் சென்றன

நகரக் கட்டமைப்பில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய இன்னொன்று பெரிய அமைப்புகளை வண்ணங்களாலும் வடிவங்களாலும் கண்ணை உறுத்த முடியாதபடி அமைப்பது. நாங்கள் சென்ற பகுதி தொடர்ந்து மேம்பாலங்களும் ரயில் பாலங்களும் அமைந்த இடம். ஆனால் இந்த மேம்பாலங்கள் அனைத்துமே ஜப்பானிய கட்டிடக்கலைச் சாயலில் அடியில் உத்தரங்கள் போன்ற அமைப்புகளுடன் மிதமான வண்ணங்களும் அழகிய வளைவுகளுடனும் அமைந்தவை . சென்ற ஆண்டு துபாய் சென்றபோதும் மேம்பாலம் அழகாக இருக்கமுடியும் என எண்ணிக்கொண்டேன்

என் இல்லத்தின் அருகில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை பொறியியல் அமைப்பில் சிறந்தவையாகக் கூட இருக்கலாம். ஆனால் நோக்கிய கணமே அரக்கர்களை பார்க்கும் ஒவ்வாமையை கண்களுக்கு உருவாக்குகின்றன. சென்னை அரக்கர்கூட்டங்களால் கால்கீழ் இட்டு மிதிக்கப்பட்டுள்ளது. நம் வீட்டருகே இருக்கும் இத்தகைய ஒவ்வாத உருவங்களை காலப்போக்கில் நாம் நோக்காமல் இருக்க உளம் பழகுகுறோம். ஆனால் நம் ஆழ்மனத்தை அவை எவ்வகையிலோ பாதிக்கத்தான் செய்கின்றன .நம் உணர்வுகளையும் கனவுகளையும் அவை சிதைக்கின்றன

டோக்கியோவின் அந்த காலைநேர நடை நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நகரத்தை இனிதாக முழுதுணர்ந்த அனுபவமாக இருந்தது. செந்திலின் மகள் வழியெங்கும் பூக்களை பறித்துக்கொண்டு வந்தாள். அவர் மகன் சறுக்குக்கட்டையில் சறுக்கியபடி வந்தான் .கால் ஒய்ந்த பின் அருண்மொழி ஓர் இடத்தில் அமர்ந்துவிட்டாள். நாங்கள் நதி கடலை சென்று சேரும் இடம் வரைக்கும் சென்று அங்கிருந்த பூங்காவில் சற்று நேரம் அமர்ந்துவிட்டு திரும்பி வந்தோம்

காலைப்பொழுதில் ஆங்காங்கே பீர்கோப்பைகளுடன் அமர்ந்திருந்த சிலரைப்பார்த்தோம் . பெருநகரங்களில் தனிமை என்பது ஒரு தத்துவப் பிரச்சனை .ஐரோப்பிய நகர்களிலும் நீர்க்கரைகளில் பாலங்களின் அடியில் பீர்துணையுடன் அமர்ந்திருப்பவர்களை பார்த்திருக்கிறேன். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வீடிலிகள் மிகுதி. ஜப்பானில் அவர்கள் மிகக்குறைவு. தனிமைக்கு மது துணை இரண்டும் ஒன்றையொன்று பெருக்குகின்றன

ஒளிரும் நீரலைக்ள் நிறைந்த நதியில் காலையில் படகுகள் சென்று கொண்டிருந்தன. வெவ்வேறு நதிகள் நினைவில் எழுந்து எண்ணங்களை ஒளி பெறச்செய்தன. மாண்ட்ரியல் நகரில் நான் நடேசனுடன் இவ்வாறு காலை நடை செல்கையில் நதியில் இளைஞர்கள் மென்படகை ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. தேம்ஸ் சிக்காகோ நதி என வெவ்வேறு நதிகள். நான் நீர்க்கரையில் பிறந்து வளர்ந்தவன், என் நினைவுகளில் பெருகிச்செல்லும் வள்ளியாறும் தென்தாமிரவருணியும் எப்போதும் உள்ளன.

தமிழகத்தில் இன்று நீர் நிறைந்தோடும் நதிகளையே பார்க்க முடியாமல் ஆகிவிட்டது .நதியென்றால் சாக்கடை வழிந்தோடும் தடம். நகரத்தை ஒட்டியிருக்கும் புதர் மண்டி குப்பைகள் செறிந்த பகுதி. சென்று அமர்ந்து மகிழும்படி ஒரு நதிக்கரையேனும் இன்று தமிழகத்தில் இல்லை. ஒரு காலத்தில் நதி நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. பதினெட்டாம் பெருக்கு ஒரு விழாவாகவே கொண்டாடப்பட்டது. நதிக்கரை மணலில் சென்றமர்ந்து சித்திரான்னங்களை உண்பதென்பது தொல் தமிழர் வழக்கம்.

சில ஆண்டுகளுக்கு முன் மணிரத்னத்துடன் காவிரிக்கரையோரமாக ஒரு பயணத்தை மேற்கொண்டபோது தஞ்சையின் மாபெரும் குப்பை மலைகள் அனைத்தும் காவிரியின் கரைகளில் அமைந்திருப்பதைப் பார்த்தோம். காவிரியைப் பார்ப்பதென்பது அக்குப்பை மலைகளினூடாகப் பயணம் செய்வது. தெய்வத்துக்கு நிகரென வணங்கப்பட்ட ஒரு நதி வெறும் ஒரு தலைமுறைக்குள் குப்பைகள் போடும் ஒரு இடமாக எப்படி மாறியது? அதன் மேலிருந்த அனைத்து நல்லுணர்வுகளும் எப்படி வடிந்து இல்லாமல் ஆகின?

தமிழகம் முழுக்க நீர்நிலைகளில் குப்பைகளைக் கொண்டு சேர்ப்பதென்பது ஒரு பொதுவழக்கமாக மாறியிருக்கிறது. ஏரிகள், குளங்கள் அனைத்துமே குப்பை நிறைந்து கிடக்கின்றன. ஆசாரக்கோவையில் நீரில் குப்பைகளை போடுவதென்பது நரகத்திற்குரியது என்று சொல்லப்பட்டுள்ளது. ஜானகிராமனின் நாவல்களைப் படித்தால் காவிரியில் மலம் கழுவுவதில்லை என்ற செய்தி தெரியவருகிறது. காவிரியில் நீரள்ளிச் சென்று அருகிலிருக்கும் தோட்டங்களுக்குள் மலம் கழுவுவதற்கான தோண்டிகள் காவிரிக்குள் கிடந்தன என்று அவர் சொல்கிறார்

நான் சாரதா நகரில் குடி வந்த போது எனது வீட்டருகே சென்று கொண்டிருந்த பேச்சிப்பாறை கால்வாய் தெளிந்த நீரோடும் அழகிய ஒழுக்காக இருந்தது. வீடுகள் பெருகப் பெருக அரசாங்கமே மொத்தச்சாக்கடையும் அங்கு கொண்டு கலந்துவிடுகிறது. இன்று விழியோட்டி நோக்கமுடியாத அளவுக்கு கன்னங்கரிய நீரோடும் சாக்கடை அது. அந்த நீரில்தான் பார்வதிபுரத்திலிருந்து அந்த ஓடை சென்று சேரும் வரைக்கும் பல்லாயிரம் பேர் நீராடுகிறார்கள் என்பது பரிதாபத்துக்குரிய உண்மை .நல்ல நீரை அரசே சாக்கடையாக மாற்றும் செயலை வேறெந்த தேசத்திலாவது செய்வார்களா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை இந்தியாவை விட்டு வெளியே வரும்போதும் இந்தியாவின் மாபெரும் சிக்கலே அக்கறையின்மையும் பொறுப்பின்மையும் தான் என்று தோன்றுகிறது

நீண்ட நடை முடிந்து வந்து ஒரு ஜப்பானிய உணவகத்தில் சாப்பிட்டோம். இதற்குள் ஜப்பானிய உணவிற்கு மிகவும் பழகிவிட்டிருந்தேன் உண்மையில் இந்திய உணவை விடவும் கூட ஜப்பானிய உணவு குடலுக்கும் மூச்சுக்கும் உகந்ததாக இருந்தது.

அன்று மாலை செந்தில் அருகிலிருக்கும் சமூகக்கூடத்தில் ஒரு உரைக்கு ஏற்பாடு செய்திருந்தார் எந்த இலக்கிய அமைப்பும் சார்ந்த விழா அல்ல அவரே தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்தது .தனிப்பட்ட அழைப்புகள் மட்டுமே விடுக்கப்பட்டிருந்தது. எனது தளத்திலும் அறிவிப்புகள் வெளியிடவில்லை. இருபது வரைக்கும் வரக்கூடும் இலக்கிய வாசகர்கள் அல்லாதவர் வரவேண்டியதில்லை என்றே கருதுவதாக அவர் சொன்னார். ஆனால் எதிர்பாராமல் சுமார் ஐம்பது பேர் வந்திருந்தார்கள் .ம்ஐம்பது பேருமே எனது ஒரு படைப்பையாவது படித்தவர்களாக இருந்தார்கள் என்பதும் பலர் விஷ்ணுபுரம் உட்பட பல முக்கியமான நூல்களை படித்திருந்தார்கள் என்பது ஜப்பானில் ஒரு வியப்புக்குரிய செய்தியாகவே தோன்றியது

அறிமுக உரைக்குப்பின்னர் நான் உரையாற்றினேன் மௌண்ட் சாஸ்தாவிலிருந்து கைலாசத்தின் வழியாக ஃபியூஜி வரை வரும் ஒரு உரைத்தொடக்கம் ஃபியூஜியமா போன்று எந்த நடைமுறைப்பயனும் இல்லாத ஒன்றை ஒரு பண்பாடு ஏன் தன் தலையில் மணிமுடியாக சூடியிருக்கிறது? பயன்பாட்டுக்கு அப்பால் குறியீடென்று அமையும் சில உண்டு. ஒரு பண்பாட்டுக்குப் பெருமிதத்தை அடையாளத்தை அளிப்பவை, வழிகாட்டியாக திகழ்பவை அவை. ஃபியூஜி அத்தகைய ஒன்று. கைலாச மலைமுடி அத்தகைய ஒன்று.அதேபோல பெரும் காவியக்கள் அந்த மலை முடிகளைப்போல.

இலக்கியம் என்பதன் நடைமுறை பயன் என்ன என்பது எப்போதும் எழுந்துகொண்டே இருக்கிறது .நடைமுறை பயனுக்கு நேர் எதிரான ஒரு செயல்பாடு என்றே இலக்கியத்தை வரையறுக்கலாம். நடைமுறைக்கு அப்பால் செல்லும் சில வாழ்க்கையில் உண்டு. வாழ்வை அர்த்தப்படுபவை அவை. இலக்கியம் அதில் ஒன்று.

உரைக்குப்பின் கேள்விபதில்களை நான் பொதுவாக ஒத்துக்கொள்வதில்லை. உரையின் ஒட்டு மொத்தக் கருத்தை மிக அப்படியே தள்ளி சென்று விடுவார்கள். ஆனால் அங்கு ஓர் உரையாடலை நிகழ்த்தியாகவேண்டியிருந்தது. பொதுவாக கேட்கப்பட்ட அனைத்துக்கும் முடிந்தவரை விரிவாகவே பதில் சொன்னேன். அதன் பிறகு அருகிருந்த இந்திய உணவகத்துக்கு சென்று உணவருந்தினோம். அங்கிருந்து இரவு எழுந்தபின்னரே வீடுதிரும்பினோம்.

 

அன்று மாலை வெவ்வேறு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஜப்பானியத் தமிழ்ச்சமூகம் பற்றி ஒரு சித்திரம் கிடைத்தது. அது உலகமெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தில் இருந்து எவ்வகையிலும் வேறுபட்டது அல்ல. சென்ற இடத்தில் தொழில் செய்து பணமீட்டுகிறார்கள். தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறார்கள். ஆனால் இரண்டு வகையில் மூடுண்ட சமூகம்.

ஒன்று அவர்களுக்கும் ஜப்பானியப் பண்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜப்பானிய இலக்கியம், கலை, சிந்தனை எதையும் அவர்கள் அறிவதில்லை, தமிழுக்குக் கொண்டுவருவதுமில்லை. இத்தனை பெரிய தமிழ்ச்சமூகம் ஜப்பானில் இருந்தும் அவர்களால் ஜப்பான் பற்றி ஒரு வரிகூட எழுதப்பட்டதில்லை. ஒரு நூல்கூட மொழியாக்கம் செய்யப்பட்டதில்லை.

இரண்டு, அவர்களுக்கும் தமிழ்ப்பண்பாட்டின் உயர்நிலைகளுக்கும் எத்தொடர்பும் இல்லை. அவர்கள் கல்விகற்ற சமூகம் அல்ல, தொழிற்பயிற்சி பெற்ற சமூகம் அவ்வளவே. நவீனத்தமிழிலக்கியம், வரலாற்றாய்வு, பண்பாட்டுச்செயல்பாடுகள் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்ததெல்லாம் தமிழின் வணிகசினிமா, பொழுதுபோக்கு இலக்கியம், மேலோட்டமான பக்திச்சடங்குகள் சார்ந்த மதம்- அவ்வளவுதான்.

பேசிக்கொண்டிருக்கையில் ஒரு நண்பர் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். ஒருமுறை தமிழ்த் தொலைக்காட்சியில் வேடிக்கைநிகழ்ச்சிகள் செய்யும் சிலரை அங்கே அழைத்திருக்கிறார்கள். அவர்கள் மேடைநிகழ்ச்சியில் விருந்தினராக வந்த ஒரு ஜப்பானியப்பெண்ணை மேடைக்கு அழைத்திருக்கிறார்கள். அவர் வணங்கியபடி வரும்போது நகைசுவையாளர் ஓரு ஜப்பானிய மரியாதைச்சொல்லை திரித்து ‘குனிஞ்சுவாம்மா! குனிஞ்சுவாம்மா’ என்று ஆபாசக்குறிப்புடன் சொல்ல மொத்த அரங்கே சிரித்திருக்கிறது. அந்த ஜப்பானியப் பெண்களுக்கு அது புரியவில்லை. ஜப்பானிய மரியாதைச்சொல் திரிபுடன் சொல்லப்படுகின்றது என்றே தோன்றியிருக்கிறது.

இதிலுள்ள பண்பாடின்மை அங்கிருந்த தமிழ்க்குடிகளில் ஆண் பெண் உட்பட எவருக்குமே புரியவில்லை, பின்னர் சொன்னபோதுகூட ‘அதிலென்ன வேடிக்கைதானே?’ என்பதே பதிலாக இருந்தது என்றார். அவர்கள் நம் விருந்தினர், இதேபோல அவர்கள் நம்மை நடத்தினால் எப்படி எடுத்துக்கொள்வோம் என்று சொன்னாலும் அதை எவரும் உணரவில்லை என்றார்.

ஜப்பானை பிரிட்டன் என கருதவைக்கும் அம்சம் ஒன்றை அன்றிரவு கண்டுகொண்டேன் இத்தகைய பயணங்களுக்குப் பின்னர் துயில்கையில் வரும் கனவுகள் மிக முக்கியமானவை. அவை அந்நாடு பற்றி நம் ஆழுள்ளம் என்ன நினைக்கிறது என்பதற்கான சான்றுகள். ஜப்பான் நீர்ப்பரப்பாகவே எனக்கு நினைவுக்கு வந்தது. கடல்சூழ்ந்த நிலம். மழைபெருகிப்பொழியும் நிலமும் கூட. எங்கும் கண்கூசச்செய்யும் பசுமை. பசுமையின் இருளை ஜப்பானின் தோட்டங்களெங்கும் காணலாம். மழைக்குமுந்தைய வெளிச்சம்தான் எப்போதும். என்று தோன்றியது.

நீர் மலிந்திருந்தாலும் நீரைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டப்படும் நாடு. மலினமடைந்த நீரை எங்குமே பார்க்க முடியவில்லை. ஐரோப்பாவில்கூட, ஏன் சுவிட்சர்லாந்திலேயே கூட, மலினநீர்நிலைகளைக் கண்டேன். குறிப்பாக பெரிய எண்ணைப்படகுகள் செல்லும் ஆறுகள். ஜப்பானின் எல்லா நீர்நிலைகளும் நீலப்பளிங்கெனத் தெரிகின்றன. ஆற்றங்கரைகள் எல்லாமே தூய்மையாகப் பேணப்படுகின்றன.

ஜப்பானின் அடையாளம் முகில்கள். ஜப்பானிய வானை முகில்களில்லாமல் எங்கும் பார்க்க இயலவில்லை, நாங்கள் சென்றது கோடைகாலத் தொடக்கம்.ஜப்பான் கிழக்குநிலம், இந்திரனின் நிலம். முகில்களின் மண். ஜப்பானிய ஓவியங்களில் முகில்களின் வண்ணத்தோற்றங்கள், வடிவத்தோற்றங்கள் ஏராளமாக உள்ளன. முகில்களை வரைய ஜப்பான் தனக்கென்றே வழிகளைக்கொண்டிருக்கிறது. ஜப்பானிய முகிலோவியங்கள் அவர்களின் தனித்தன்மையான பண்பாட்டு அடையாளங்கள்.

 

கோபயாஷி அவருடைய சினிமா ஒன்றில் வானத்தை முகில் ஓவியங்களால்  ‘செட்’ போட்டு அமைத்திருந்தார். காட்சிகளின் இயல்புக்கு ஏற்ப முகில்கள் மாறிக்கொண்டே இருந்தன. அது ஏன் என்று இங்கே வந்தபின் தெரிந்தது.ஜப்பானிய கவிதைகளில் வரும் முகில்சித்திரங்களை எண்ணிக்கொண்டேன் .

மயசுகி மியாட்டா 1926-1997

ஜப்பானியப் பெருங்கவிஞர் பாஷோ

Clouds –
a chance to dodge
moonviewing.

என ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நிலவை நோக்குவதைத் தவிர்க்க ஒரு நல்ல காரணம், வாய்ப்பு முகில்கள். எளிய ஒற்றை வரி. ஆனால் ஜென் உட்குறிப்பு ஆழமானது. நிலவு என்றால் மெய்ஞானம். ஜென் மரபில் முழுநிலவு எழுவது என்பது சித்தத்தைப் பிறழச்செய்யும் ஒருமையுணர்வை அடைவது. அதைத் தவிர்க்க, இவ்வுலக இன்பங்களிலும் அழகுகளிலும் நீடிக்க, முகில்கள் ஒரு சிறந்த வழி. முகில்களை உலகியலாக உருவகிக்கிறார் போலும்.

ஆனால் அந்த முகில்கள்கூட நிலவொளியால்தான் அந்த அழகை அடைந்திருக்கின்றன.

[மேலும்]

முந்தைய கட்டுரைகவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4