பார்ஸிலோனாவில் நடை

ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,

நலமடைந்து வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி ,கூடவே பயணத்திற்கான உற்சாகத்தில் வெறிகொண்டு எழுதுவும் தொடங்கிவிட்டீர்கள் .

இரு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் உங்களுடன் கேரளாவிற்கு நடைபயணம் திட்டமிட்டதாக சொன்னார். நான் ஒருமுறை நாகர்கோவிலிலிருந்து-கொச்சிக்கு ரயிலில் செல்லும்போது என் பக்கத்து  இருக்கையில் அமர்ந்திருந்த இங்கிலாந்தை சார்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்    தாமஸ்(வயது அறுபது) ஆலப்புழாவுக்கு பயணித்தார். திருக்குறள் பற்றி பேசினார்,ஆங்கில திருக்குறள் தன்னிடம் இருப்பதை காண்பித்தார்.இது இறைவேதம் எனவும் சொன்னார் . அவரிடம் உரையாடியபோது கடந்த ஐந்து நாட்களாக கன்னியாகுமரியில் தங்கியிருந்து சுற்றிபார்த்தேன் என்றார்  நடந்துதான் .தினமும் பதினைந்து கிலோமீட்டர் வரை நடந்து வட்டகோட்டை,கோவளம் ,மருந்துவாழ்மலை ,சுசீந்திரம் கோயில் என பார்த்திருக்கிறார் .இரவில் ஒன்பது மணிக்கு நன்றாக தூக்கம்வரும் ,அதிகாலை ஐந்துக்கு துயில் கலைந்ததும் ,கதிரெழுவதை கண்டுவிட்டு நடையை துவக்குவதாக சொன்னார் .நடந்து சென்றால்தான் அந்த ஊர் ,அங்குள்ள மக்கள்,உள்ளூர்,உணவு , அவர்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை மிக தெளிவாக அறியமுடியும் என்றார்.

நானும் முன்பு நாகர்கோயில் –கன்னியாகுமரி ,நாகர்கோவில்-மணவாளக்குறிச்சி என இருமுறை நடை சென்றுள்ளேன்

http://nanjilhameed.blogspot.jp/2018/04/blog-post.html?m=1  .கடந்த மாதம் பார்சிலோனாவில் இருந்தபோது .இங்குள்ள ஒரு நடைபயண (துருக்கி,அமெரிக்கா,ஹாங்காங் போன்ற நாடுகளை சார்ந்த இருபது பேர்) குழுவுடன் பயணம் சென்றேன்.இணையத்தில் அல்லது தொலைபேசியில் முன்பே பதிவு செய்துவிட்டு உரிய நேரத்தில் குழுவுடன் இணைந்தால் போதும்.நான் சென்ற அன்று வழிகாட்டியாக வந்தவர் அமெரிக்காவின் சிகாகோ நகரை சார்ந்தவர்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கல்விகற்க வந்தவர் இங்கு நிரந்தரமாக தங்கி வழிகாட்டியாக மகிழ்ச்சியுடன் இருக்கிறார் .

இரண்டரை மணிநேர பயணத்தில் மிக பழமையான பார்சிலோன நகரில் உள்ள சிறு தெருக்களின் வழியாக சென்று முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க இடங்களான ,கதீட்ரல்கோயில் கொலம்பஸ் இங்கு வந்தபோது அமர்ந்திருந்த படிகட்டுகள்,பிக்காசோ இங்கு வாழ்ந்தபோது உள்ள வீடு,மியூசியம்,பார்சிலோனவின் வரலாறு என சுருக்ககமாக விவரித்து சொன்னார் வழிகாட்டி பாட்ரிக்.பார்சிலோன நகரம் ஒவ்வொரு அடியிலும் ரோமன் கட்டிடகலையின் உச்சத்தை காணலாம்.ஐரோப்பா முழுவதும் இதுபோல் நடை பயணத்தை ஒருங்கிணைக்கும் நிறுவனம் உள்ளது .நண்பர் ஈரோடு கிருஷ்ணனும் நடந்து சென்றால்தான் விரிவாக கண்டு நாம் உள்வாங்கிகொள்ள முடியும்  என சொன்னதை உணர்ந்தேன் .

உங்கள் அடுத்த ஐரோப்பிய பயணத்தில் நிச்சயம் ஸ்பெயின் இடம்பெற வேண்டும்,நீங்களும் உங்கள் பயண தோழர்களும் ஸ்பெயினில் பார்க்கவேண்டிய(தாராகுணா ,வெலன்சியா,சலாவ்) இடங்கள் நிறைய உள்ளது.சர்கடா பிரமிலியாவை பார்ப்பதற்காக திட்டமிட்டிருந்த நாளில் கப்பல் அங்கிருந்து புறப்பட்டுவிட்டதால் ,அதை பார்க்கும் வாய்ப்பு நழுவிபோனது .

இப்போது போர்ச்சுகல் நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம் .சைன்ஸ் துறைமுகநகரிலுள்ள ஒரு வீட்டில்தான் வாஸ்கோ ட காமா (1460 or 1469)  பிறந்தாராம்.அங்குள்ள கடற்கரையில் அவரது சிலை ஒன்றும் உள்ளது என இன்றுதான் அறிந்தேன் .இந்தியாவின் மலபார் கடற்கரையில் பாதம் பதித்த வாஸ்கோ ட காமாவின் நிலத்தில்  பாதம் பதிக்க எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். இப்போது சைன்ஸ் துறைமுகத்துக்கு சென்றுகொண்டிருக்கிறோம் .

ஷாகுல் ஹமீது .

முந்தைய கட்டுரைகாந்திகளின் கதை
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -11